வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! 24

GG writers

Moderator
ஐந்தடி அர்னால்டு போல் வாட்ட சாட்டமாக முறுக்கி விடப்பட்ட கம்பீரமான மீசையுடன் படுத்திருந்தவனை அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஶ்ரீலதா.

தூங்கிக் கிடந்த பிரதீசுக்குத் தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்றியது போலும்.

அவனிடம் சிறு அசைவு ஏற்படுவதைப் பார்த்ததும் பட்டென்று நகர்ந்தவளைக் காலை இடறி விட்டு, பிடித்து இழுத்து கீழே தள்ளி இருந்தான் அவன்.

திருமணமான விஷயம் மறந்து போயிருக்க.. ஏதோ திருடனைப் பிடிப்பது போல் மடக்கி பிடித்தவன் லைட்டை ஆண் செய்தான்.


அதற்குள் "ஐயோ.. அம்மா.. விட்ருங்க நான்தான்" என்று கத்தியவள் மிட்டாய் திருடிக் கொண்டு மாட்டிக் கொண்ட சிறு குழந்தை போல் விழிக்க... ஆழ்ந்து அவள் முகத்தைப் பார்த்தான் அவன்.

விளக்கை ஒளிர செய்த பின்பே அவன் அங்கம் தொட்டிருந்த பெண்மையின் மென்மை உணர்ந்தவன் அவளை உதறிவிட்டு கேள்வியாய் பார்த்தான்.

கேள்வியை மீறி அவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று அவளைக் காந்தம் போல் ஈர்த்தது. அவன் பார்க்கையில் உள்ளூர பூக்கள் வெடித்து சிதறியது போல் சிலிர்ப்பு ஒன்று ஏற்பட்டு அதன் நடுக்கம் உடலெங்கும் பரவி மயிர்க் கூச்செறிந்தது.

"என்ன?" என்ற கேள்வி அவன் கண்களில் தொக்கி நிற்க.. மலங்க மலங்க விழித்தவள் "ஒன்னும் இல்ல" என்பது போல் வெட்கத்தோடு தலையாட்டினாள்.

என்னவென்று கேட்பாள்? "முதல் நாள் அதுவும் முதல் ராத்திரியில் தூங்கி வழிகின்றாயே? என் மேல் உனக்கு விருப்பம் இல்லையா?" என்றா?

ஆயிரம் ஆசைகளையும், ஏக்கங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டிருந்தாலும் அந்நேரம் வார்த்தை வராமல் பெண்ணவள் தடுமாற.. அவளை முறைத்துப் பார்த்து விட்டு லைட்டை அணைத்தவன் இழுத்துப் பாேர்த்தி விட்டு படுத்து விட்டான்.

நெடுமூச்சை இழுத்து விட்டவள் கட்டிலில் படுக்க... தோழிகள், உறவுக்கார பெண்மணிகள் கேலி கிண்டல் செய்து கூறிய கூற்று எல்லாம் பொய்யாய் போனதில் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கம் எட்டா கனியாய் போனது.

"இவ்வளவு அழகான பொண்ணு பக்கத்துல இருந்தும் அதுவும் வைஃபான பிறகு ஒருத்தனுக்கு தூக்கம் வருமா?" என்ற கேள்வி அவளுள் கடல் அலை போல் மீண்டும் மீண்டும் எழுந்தது.

"யாருன்னு ஒருத்தர ஒருத்தர் தெரியாம கல்யாணம் பண்ணவங்க கூட இந்நேரம் பேசி பழகி தங்களோட அந்தரங்க வாழ்க்கையைத் தொடங்கி இருப்பாங்களே? இவர் ஏன் நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட பேசல? இவருக்கு நம் பெயராவது தெரியுமா? ஒருவேளை கம்பல் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சதால கடுப்பாயிட்டாரோ?" என்று மூளையைக் கசக்கி யோசித்துக் கொண்டு நள்ளிரவில் பேய் போல் அமர்ந்திருந்தாள் ஸ்ரீலதா.

அவனுடன் ஒரே அறையில் இருப்பது கூட ஒரு மாதிரியான கிளுகிளுப்பான உணர்வைத் தோற்றுவித்தது அவளுக்கு.

"உள்ளுக்குள் எதிர்பார்த்த எதுவும் ஈடேறவில்லை" என்றாலும் அவன் பார்வை படும் தூரத்தில் இருப்பதே பெண்ணவள் நரம்பு செல்களை மீட்ட செய்ய போதுமானதாக இருந்தது

"மாப்பிள்ள பாத்ததுமே பிளாட் ஆயிட போறாரு"

"உம் புருஷன கண்ட பிறகு எங்களையெல்லாம் உனக்கு கண்ணுல விழுமாம்மா?"

"ராத்திரி பூரா தூங்க விடாம உன்னைத் தொல்ல பண்ண போறான் பாரு"

"என்ன டியர் இவ்ளோ பெரிய மீசை வச்சிருக்கான்?"

"ஏய்.. செம ஜிம் பாடிடி. நீ குடுத்து வச்சவதான்"

"பர்ஸ்ட் நைட்டுக்கு நல்லா சாப்ட்டு பூஸ்ட்டப் பண்ணிட்டு போ. இல்ல மறுநாள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுர போறார்" என்று பலவிதமாக பலரிடமிருந்து சில நாட்களாய் கேலியாகவும், கிண்டலாகவும் காதில் விழுந்த வார்த்தைகள் எதிர்ப்பார்ப்பைக் கூட்டியிருந்தது.

எதிர்பார்ப்பு பொய்யாய் போனதில் வருத்தம் வந்து வாட்டியது.

"விடி விளக்கின் வெளிச்சத்தில் கணவனைப் பார்த்துக் கொண்டிருக்க... அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்.

சற்றுமுன் கட்டிப் பிடித்து உருண்ட போது ஏற்பட்ட கிளுகிளுப்பான உணர்வு நினைவில் வந்து தாபமூட்டியது.

இன்று காலையில் புகைப்படம் எடுத்த போது ஒட்டி உரசி நின்றபடி பல்வேறு விதங்களில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த போது ஏற்பட்ட உணர்வுகள் உள்ளுக்குள் மீண்டும் கிளர்ச்சியைத் தூண்டின.

அவனிடமிருந்து சீரான மூச்சு வெளிப்பட்டுக் கொண்டிருக்க தூங்கிவிட்டான்... என்பதை உணர்ந்தவளுக்கு தூக்கம் கண்ணை எட்டாமல் போயிருக்க.. தயங்கி தயங்கி நெருங்கியவள் மெதுவாய் அவன் அருகில் சென்று படுத்துக் கொண்டாள்.


ஏனோ அவன் அருகாமைக்கு ஏங்கியது பெண்ணவள் மனம். அதற்காகவே காத்திருந்தவன் போல் அவனும் அருகில் படுத்தவளை அணைத்துக் கொள்ள.. இதுவரை இல்லாத ஒரு உணர்வு பெண்ணவளைத் தாக்க தூங்கிக் கொண்டிருந்தவன் நெஞ்சில் மெதுவாய் முத்தமிட்டாள்.



அந்த உணர்வு அவனுக்கு புரிந்தது போல் முனங்கினான் அவன். எப்பொழுது தூங்கினாள் என்று தெரியாத அளவிற்கு அவன் வாசத்தை ஆழ்ந்த சுவாசித்தபடி... அவனைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தவள் விடியற்காலையில் எழும்பும் போது அவள் அருகில் இல்லை அவன்.



என்றும் எழுகையில் தயாராய் இருக்கும் டீயைப் பார்க்க இடமும் புதிதாய் இருப்பதை உணர்ந்து நினைவு திரும்ப சற்று நேரம் பிடித்தது.



நேரத்தைப் பார்க்க ஒன்பது மணி என்றது. தாய் கூறிய வாக்கியங்கள் சுப்ரபாதம் போல் காதில் ஒலித்தது.



"நம்ம வீட்ட மாதிரியே நெனச்சிகிட்டு பத்து மணி வரை போய் தூங்கி மானத்தை வாங்காதே."



" நாலு மணி ஆனா எந்திரிச்சு வாசல் தெளிச்சு கோலம் போடணும்."



"அஞ்சு மணி ஆனா டீ எடுத்துட்டு போய் மாப்பிள்ளைய எழுப்பி கொடுக்கணும்."



"ஆறு மணிக்குள்ள குளிச்சு முடிச்சு சுத்த பத்தமா எட்டு மணிக்குள்ள டிபன் ரெடி பண்ணி வச்சுட்டு அவருக்கும் கொடுத்து நீயும் சாப்பிடணும்" என்ற வார்த்தைகள் நினைவில் வர தலையில் அடித்துக் கொண்டவள் அவசரமாய் எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.



குளித்துவிட்டு வெளியில் வந்து தன்னை அலங்கரித்துக் கொண்டவள் கீழே இறங்கி வர.. உறவு பட்டாளங்கள் உண்டு கொண்டிருந்தன.



தன்னவனைத் தேட அவனைக் காணவில்லை. அவளை கண்டவர்கள் "வாம்மா... வந்து சாப்பிடு" என்று அழைக்க "சரி" என்றவளுக்கு அவர்களது உடையோ நாகரிகமோ எள்ளளவும் பிடிக்கவில்லை.



அவர்கள் அருகில் சென்று அமர மனமே இன்றி அமர்ந்தாள். ஆளாளுக்கு கைகளால் உணவைப் பரிமாற உண்ணும் எண்ணமே போய்விட்டது.



இரண்டு இட்லிகளைக் கடமைக்கு உண்டவள் எழும் வேளை வீட்டிற்குள் வந்தான் பிரதீஷ்.



"அம்மா கிளம்பலாமா?" என்று கேட்டபடி வந்தவனிடம் "போய் சாப்பிடுடா முதல்ல" என்று கூறினார் பசுமதி.



"சரிம்மா" என்றவன் டைனிங் டேபிளில் அவளுக்கு எதிரில் இருந்த சீட்டில் வந்து அமர... தானும் இரு இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டாள்.



இருவரும் உண்டு முடித்து எழுந்த வேளை லக்ஷ்மன் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு விஜயம் புரிந்திருந்தான்.


பொங்கலிட்டு வழிபாடு நடத்தியவர்கள் வீட்டிற்கு திரும்பி செல்ல... அதுவரை கேட்ட "கண்ணுகுட்டி... ரதி.. தங்கம் " என்ற செல்ல வார்த்தைகள் கடுப்பைக் கிளப்பி இருந்தன ஸ்ரீலதாவிற்கு.


ஏனெனில் அவை அனைத்தும் அவளது கணவனும் தம்பியும் மாமியாருமாய் பிரகதீஸ்வியை அழைத்த வார்த்தைகள் ஆயிற்றே?


"கல்யாண வீட்டில் மண பெண்ணாக இருக்க வேண்டும், இறந்த வீட்டில் பிணமாய் இருக்க வேண்டும்" என்று நினைக்கும் எண்ணமுடைய ஸ்ரீலதாவிற்கு எள்ளளவும் முக்கியத்துவம் வழங்கப்படாதது மிகுந்த வயித்தெரிச்சலைக் கிளப்பி இருந்தது பிரகதீஸ்வரியின் மீது.

ராஜேஸ்வரி வேறு மருமகளே மருமகளே என்று அவ்வப்போது கொஞ்சிக் கூத்தடிக்க... இல்லாத புகைச்சல் ஏற்பட்டிருந்தது.

பற்றாக் குறைக்கு தன்னைக் கண்டால் சிரிப்பதற்கு கூட காசு கேட்டது போல் ஒதுங்கி செல்லும் தன் மணாளன்... முகம் நிறைய பல்லாக தங்கையிடமும் அவள் கணவனிடம் பேசுவதும், அவர்களுக்கு சேவை செய்ய வேண்டி நிற்பதும் மண்டையில் கரியை அள்ளி கொட்டியது போல் வலித்தது. வேண்டும் என்றே தன்னிடம் வந்து பேசிய பிரகதீஸ்வரியிடம் மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை பேசவில்லை ஸ்ரீலதா.
ஆனால் அதைப் பார்த்த லக்ஷ்மனோ? "செல்ல குட்டி நமக்கு சொந்தம் இல்லாதவங்ககிட்ட எல்லாம் நீ எதுக்கு போய் பேசுற? வா..." என்று அழைத்துச் செல்ல தகப்பனின் அருகில் இருந்த ஸ்ரீலதாவிற்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"அப்பா" என்று அவள் துவங்க "சரிம்மா விடு" என்றார் தந்தை.


இதுவரை தனக்காக பிறரிடம் அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறும் தந்தை இன்று தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ள கூற இத்தந்தை புதிதாய் தெரிந்தார் அவள் கண்களுக்கு.

இங்கு பொங்கலிட்டு முடிந்தபின் அனைவரும் சேர்ந்து மகேஸ்வரனின் வீட்டில் பொங்கல் வைத்து குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வருகையில் இரவு ஆகியிருந்தத

அடுத்தடுத்து வந்த நாட்கள் விருந்து, மறு வீடு என்று மற்றவர்கள் அனைவரும் பிசியாகவும் சந்தோஷமாகவும் இருக்க... எதையோ பறிகொடுத்தது போல் இருந்தாள் ஸ்ரீலதா.

முதல் நாள் முதல் இரவு நடக்கவில்லை என்றால் கூட "ஏதோ சோர்வில் தூங்கி விட்டான்" என்று தன்னைத் தேற்றிக் கொண்டவளால் அடுத்தடுத்த நாட்கள் தன்னை வேண்டும் என்றே தள்ளி வைத்தவனின் செயலைப் பொறுக்க இயலவில்லை.

அதற்காக வாய்விட்டு யாரிடமும் கேட்கவும் மனம் வரவில்லை.

அனைவரிடமும் அவன் உம்மென்று இருந்திருந்தால் கூட பெரிதாக பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. ஆனால் தங்கையிடமும் பெற்றவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும், தனது தோழிகளிடம் கூட மரியாதையுடனும், சந்தோஷமாக பேசி சிரித்து கேலியுடன் நடந்து கொள்ளும் அவன் தன்னிடம் மட்டும் நான்கு நாட்கள் ஆன பின்பும் இதுவரையில் ஒரு வார்த்தை கூட பேசாதது நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் குத்தியது.

அவனிடம் பேச முயல்கையில் எல்லாம் மற்றொரு திசையில் தடம் மாறி சென்று தன்னை தவிர்ப்பதை உணர்ந்தவளுக்கு தாங்க முடியாத வலி ஆரம்பம் ஆயிற்று.

நேற்று வரை இருந்த உறவு பட்டாளங்கள் அனைத்தும் ஒன்றாய் விடுமுறை எடுத்து சென்றது போல் வீட்டிற்கு சென்றிருக்க... காலையில் எழுந்து கீழே வருகையில் ஒரு ஈ காக்கையை கூட வீட்டில் காணவில்லை.

வீட்டிற்கு வெளியே தாத்தா தோட்டத்தில் எதோ சீரமைப்பு பணி செய்து கொண்டிருக்க... வயிறு வேறு குய்யோ முய்யா என்று கத்தியது.

முதலில் வயிற்றுக்கான பாட்டைப் பார்ப்போம் என்று எண்ணியவள் கிச்சனில் சென்று பார்க்க.. எதுவும் தயார் செய்து வைக்கவில்லை. அனைத்து பாத்திரங்களும் கழுவி கமத்தப்பட்டிருக்க.. தந்தைக்கு அழைத்தாள் ஸ்ரீலதா.

ஆனால் தந்தை அழைப்பை ஏற்காமல் போக.. கணவனின் அலைபேசி எண்கூட தன்னிடம் இல்லையே என்று அப்பொழுதுதான் யோசனை வந்தது.

"வேறு வழி இல்லை. இந்த கிழவனிடமாவது கேட்போம்" என்று எண்ணியவள்

"தாத்தா எனக்கு பசிக்குது. சாப்பாடு வாங்கி தரீங்களா?" என்று கேட்க.. அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவர்

"என்னை தாத்தாண்ணு கூப்பிட்ட..? அடிச்சி பல் அம்புடையும் உருத்துடுவேன். போடி அங்கிட்டு" என்று கூற அதிர்ந்து விழித்தாள் அவள்.
வீட்டு வேலை செய்யும் கிழவனுக்கு இவ்வளவு அவங்காரமா? என்று கோபம் கொண்டவள் "யோவ்.. என்னை யாருன்னு தெரியாம பேசிகிட்டு இருக்க. நான் யாரு தெரியுமா?" என்று கேட்க..

"ஏன் பஜாரி நீயும் உன் அப்பனுமா சேர்ந்து போட்ட ஆட்டம் தெரியாதுன்னு நெனச்சியோ? இங்க ஆட்டம் போடுறதுக்கு இது ஒன்னும் அப்பா வீடு இல்ல? என் பேரன் வீடு. இங்க அவன் வச்சதுதான் சட்டம். உனக்கு ஆட்டமும் உன் அப்பனுக்கு பணமோ இங்க செல்லுபடி ஆகாது" என்று கூற "யார் இந்த கிழவன்? வேலைக்காரனா ஆயிருந்தா இவ்வளவு பேசுவானா?. அதுவும் இவ்வளவு தைரியமா?" என்று யோசனை ஆழ்ந்தாள் ஸ்ரீலதா.
 
Top