வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்.! - 26

GG writers

Moderator
திருமணம் ஆகி நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் கணவனுடன் இதுவரை ஒரு செல்பி கூட எடுக்க முடியவில்லை ஸ்ரீலதாவால்.

அவ்வளவு ஏன்? அவன் விழித்திருக்கும் வேளையில் இதுவரை அவனை நெருங்கி நின்றது கூட இல்லை.

தோழிகள் விதவிதமான போஸில் அன்னோன்யமாய் நின்று புகைப்படங்கள் அனுப்புகையில் உள்ளுக்குள் எரிமலை லார்வாவே உருகி வெடிக்கும்.

ஆனால் எங்கு சென்று முட்டுவது என்று தெரியாமல் தனது தாபத்தையும் கோபத்தையும் தனக்குள்ளையே அடக்கி வைத்தவள் காரணம் தெரியாமல் எரிச்சலுடன் சுற்றி வந்தாள்.

காரணம் கூற வேண்டியவனோ? அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் புறக்கணித்தான்.

வீட்டு வேலைகள் செய்து நல்ல பெண்ணாக நடந்து கொண்டால் தன்னை ஏற்றுக் கொண்டு விடுவான் என நினைத்து வீட்டு வேலைகளைக் கூட சிறிது சிறிதாக செய்ய கற்றுக் கொண்டாள்.

ஆனால் அவனோ? "நீ என்ன செய்தாலும் எனக்கு தேவை இல்லை" என்பது போல் விலகி சென்று விடுவான்.

ஆனால் தப்பித்தவறி ஏதேனும் ஒரு சில வேலைகளில் நேருக்கு நேராக காணுகையில் அவன் கண்களில் ஏற்படும் ஈர்ப்பு இதுவரை யாரிடமும் கண்டதில்லை அவள்.

அவன் பார்வை கூறுகிறது... "என் நேசம் நீ.. என் காதல் நீ" என்று. ஆனால் ஏன் விலகி நிற்கிறான்? என்ற உண்மை மட்டும் புலப்படாமல் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

இதில் தோழிகள் வேறு ஆளாளுக்கு "நல்ல செய்தி சொல்கிறோம்.. நான்கு இடங்களுக்கு செல்கிறோம்" என்று படம் வைக்க... தன்னை அருகில் இருக்கும் கோவிலுக்கு கூட அழைத்துச் செல்லாத கணவனை எண்ணி கண்ணீர் தன்னால் வந்தது ஸ்ரீலதாவிற்கு.

அவனை அடக்கி விடலாம் என்று எண்ணி திருமணம் செய்து தான் அடங்கியதுதான் மிச்சம். எத்தனை அடக்கமுள்ள குடும்பப் பெண்ணாக மாறியும் அவன் கடைக்கண் பார்வை மட்டும் அவள் மீது விழவில்லை.

இன்று எப்படியானாலும் சரி; அவனிடம் கேட்டு தெளிவு பெறுவது என்று முடிவு செய்தவள் தனது அறைக்குள் சென்று அவன் வருகைக்காய் காத்திருக்க.. எதேச்சையாய் அவள் கண்ணில் பட்டது அவன் அனுதினமும் பார்க்கில் அமர்ந்து படிக்கும் அந்த புத்தகம்.

ஆனால் திருமணத்திற்கு பின் அவன் அந்த புத்தகத்தை எடுத்தது போலவே தெரியவில்லை. ஏன்? என்ற கேள்வி உள்ளே வெடிக்க புத்தகத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்தாள் ஸ்ரீ லதா.

தினமும் அவன் மெய்மறந்து படிக்கும் அளவுக்கு இதில் என்ன உள்ளது? என்று அதை எடுத்து பார்த்தவள் என்ன உணர்வு இது என்று சொல்ல தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

ஏனெனில் அந்த புத்தகத்தின் நடுவே அவளது சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இருக்க... அதில் அவள் தம்பியுடன் இன்னும் இருவரும் சேர்ந்து நின்றிருந்தனர்.
அதிலிருந்தது பிரகதீஸ்வரி மற்றும் பிரதீஷ்தான்.

புகைப்படத்தைப் பார்த்தவளுக்கு தலை தன்னால் சுற்றியது.
உடல் வேர்த்து ஊற்ற... கைகள் நடுங்க புத்தகம் நழுவி கீழே விழுந்தது. கை கால்கள் உதறல் எடுக்க கண்கள் தன்னால் மேலே சொருகியது.

மயக்கமடைந்து நிலை தடுமாறி பொத்தென்று கீழே விழுந்தாள் ஸ்ரீலதா.

வெகு நேரத்திற்கு பின்பு வேலைகளை முடித்துவிட்டு தனது அறைக்கு வந்த பிரதீஸ் அவள் மயங்கி கிடப்பதைப் பார்த்ததும் அரண்டு விழித்தான்.

கீழே விழுந்து கிடந்த புத்தகம் நடந்ததை அவனுக்கு விளக்கியிருக்க... "தான் யார்?" என்பதை அறிந்து விட்டாளோ? என்று நினைத்து கொண்டவன் அவள் முகத்தில் சிறிது தண்ணீரைத் தெளித்து எழுப்பி பார்த்தான்.

எனினும் அவளிடம் எந்த அசைவும் இல்லை.

பெண் அவளைத் தூக்கிக் கொண்டு ஓடினான் மருத்துவமனையை நோக்கி.

அரை மணி நேர தீவிர சிகிச்சைக்கு பிறகு கண் விழித்தாள் ஸ்ரீலதா.

அவள் கண் விழித்த செய்தியறிந்து உயிரைக் கையில் பிடித்தது போல் ஓடி வந்து நின்றான் பிரதீஷ்.

அவன் கண்களில் தெரிந்தது அவன் வாழ்வில் அவளுக்கான இடம் எதுவென்று. அத்தனை பதைபதைப்பும் உயிர் வலியும் காண முடிந்தது அவன் கண்களில்.

ஆனால் எதுவும் பேசாமல் அவளை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் படுத்த ஏங்கிய மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றவன் செயலில் செத்து போவதைப் போல் உணர்ந்தாள் லதா.

அவன் கண்களில் இருந்து பொல பொலவென்று கண்ணீர் வெளியேற... அவனை உலக அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்தாள் ஸ்ரீலதா.

அவனைக் கண்ட நொடி முதல் அவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். இது நாள் வரை தான் அவனை கம்பல் செய்து திருமணம் செய்தோம் என்று அவள் எண்ணி இருக்க... தன் மீது இத்தனை ஆழமான காதல் அல்லது கோபம் கொண்டவன் அவன் என்று எள்ளளவும் எண்ணி இருக்கவில்லை அவள்.

உண்மையில் தன் மீது கொண்ட கோபத்தால்தான் திருமணம் புரிந்து கொண்டானா? என்ற கேள்வி அவள் மனதில் எழாமல் இல்லை.

"இல்லையே நம்மதானே அவனைக் கட்டாயப்படுத்தி காதல் செய்தோம்? அவனா கோபத்தில் திருமணம் செய்து கொண்டான்? என்று மறுமனம் கேள்வி கேட்க.. அன்று காதலை உரைக்க வந்த புகைப்படத்தில் இந்த அவனிடம் அவள் கூறிய வார்த்தைகள் இன்றும் பசுமரத்தாணி போல் நினைவில் நின்றன.

"நான் கட்டிக்க போற பையன் என் பின்னாடி அலையிறவனா இருக்க கூடாது. என்னை அவன் பின்னாடி அலைய வைக்கிறவனா இருக்கணும்" என்று..
அவள் விளையாட்டாய் கூறிய ஒரு சொல்லை உண்மையாக்கி இன்று ஒவ்வொரு நொடியும் ஏங்க வைத்திருந்தான் அவனுக்காக.

அவள் நன்றாக இருக்கிறாள் என்பதை கண்களாலேயே ஸ்கேன் செய்து அறிந்து கொண்டவன் அங்கிருந்த நர்சிடம் "ஒன்னும் பிரச்சனை இல்லல்ல சிஸ்டர்?" என்று கேட்க
"நோ ப்ராப்ளம் சார்.. பிபி லோ ஆகி இருக்கு. அதனாலதான் ஹிட்னஸ் வந்திருக்கு. ஐ வி முடிஞ்சதும் அழைச்சிட்டு போயிடலாம்" என்றார் அவரும்.

"சரி" என்று தலையாட்டியவன் அவள் அருகில் போடப்பட்டிருந்த செயரில் அமர்ந்தான்.

அவன் உள்ளே வந்தது முதலே அவன் மேல் பதிந்த கண்களை இங்குமங்கும் திருப்பவில்லை ஶ்ரீலதா.

தன்னை இடைவெளி விடாது பார்த்தவள் பார்வையில் கூசியது அவனுக்கு.

"என்ன?" என்பது போல் நிமிர்ந்து பார்த்தான் அவன். ஆனால் எப்பொழுதும் ஏதாவது லோடலோட என்று பேசும் அவள் இப்பொழுது மறுவார்த்தை பேசவில்லை. அவள் கண்கள் பேசின அவள் காதலை.

அவள் பார்வைத் தன்னை உறிஞ்சுவதை உணர்ந்தவனுக்கு பதட்டம் கூடியிருந்தது.

அவள் என்ன உணர்கிறாள் என்று வாய் வார்த்தையாய் சொல்லாததால் அவனாகவே ஏதேதோ மனதுக்குள் கற்பனை செய்து கொள்ள மூச்சு முட்டியது.

சங்கடமாக நெளிந்தவன் இதற்கு மேல் முடியாது என்ற நிலையில் ஏதோ சாக்கு கூறிவிட்டு எழுந்து வெளியில் ஓடினான்.

வீட்டிற்கு வந்த ஸ்ரீலதா தாத்தாவின் முன் சென்று நின்றாள்.

"நீ எதுக்கு என் பக்கத்துல வந்த?" என்பது போல் முகத்தை திருப்பிக் கொண்டு அவர் செல்ல பார்க்க பட்டென்று காலில் விழுந்தாள் அவள்.
இதை எதிர்பாராத தாத்தா அவளைப் பதறி தூக்கினார்.

"என்ன தாயி இப்படி பண்ற?" என்று கண்ணில் துளிர்த்த சிறுதுளி நீருடன் கேட்க....
"என்னை மன்னிச்சிடுங்க தாத்தா. நான் பண்ணதெல்லாம் தப்புதான். நான் உங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்க கூடாது. சின்ன வயசலயே நான் கேட்டதெல்லாம் கிடைக்குது. சொன்னதெல்லாம் நடக்குதுங்கிற அகம்பாவத்துல பண்ணிட்டேன். என்னை தயவு செஞ்சு மன்னிச்சுக்கோங்க தாத்தா" என்று கேட்க...
"போதும்மா. நீ மனம் திருந்தினதே எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றார் தாத்தா அவள் தலையைக் கோதிய படி.

விழி விரித்து பார்த்தான் அவன். "என்ன திடீர் மாற்றம்?" என்பது போல.

"தாத்தா... எனக்கு தம்பி வீட்டுக்கு போகணும் போல இருக்கு. அழைச்சிட்டு போறீங்களா?" என்று கேட்க...
"அதுக்கு என்ன தாயி பேர பிள்ளையோட போயிட்டு வா" என்று கூறினார் அவர்.

அவள் கேட்டது அவன் காதிலும் விழுந்திருக்க வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தான் அவன்.

காரைக் கேள்வியாக பார்த்தாள் அவள். இதுவரை அவன் பைக்கில் எங்கேயும் அழைத்துக் கொண்டு சென்றதில்லை அவளை.
அவன் பைக்கை ஸ்டார்ட் செய்து அக்சிலேட்டரை முறுக்கி கொண்டு நிற்க.. தன்னால் சென்று வண்டியில் ஏறினாள் ஸ்ரீலதா.

காரில் அமர்கையிலேயே அவன் மீது சாக்கு வைத்து இடித்துக் கொள்பவள் பைக்கில் நெருங்கி அமர்ந்திருந்த பின்பும் சிலை போல் அவன் மேல் ஒட்டாமல் உரசாமல் அமர்ந்திருந்தாள்.

பத்து நிமிட பயணத்தில் பிரகதீஸ்வியின் வீட்டு வாசலில் சென்று நின்றது பைக்.
சத்தம் கேட்டு சற்று தடுமாறியபடி நடந்து வெளியில் வந்த பிரகதீஸ்வரி "வா அண்ணே... வாங்க அண்ணி.." என்று வாய் நிறைய அழைக்க.. அவள் பின்னாலேயே ராஜேஸ்வரியும் வந்து எட்டி பார்த்தார்.

உள்ளே சென்றவள் பிரகதீஸ்வரியின் காலடியில் அமர்ந்து விட.. பதறி விலகிய படி "அண்ணி மேல உக்காருங்க" என்று கூறினாள் அவள்.

வயிறு புடைத்திருக்க இதுவரை பொறாமையுடன் பார்த்த ஸ்ரீலதா அவளை முதல் முறையாக தோழி போல் பார்த்தாள்.

முதலில் எப்பொழுதும் வீல்சேரிலேயே அமர்பவள் இப்பொழுது சற்று நடக்க ஆரம்பித்திருந்தாள் கணவனின் முயற்சியால்.

"எனக்கு உன்கிட்ட தனியா பேசணும். அதுக்காக தான் வந்தேன்" என்று அவள் கூற "பேசலாம் அண்ணி டீ குடிங்க" என்று டீயை ஊற்றிக் கொடுக்க... கையில் டீயை வாங்கி குடித்தவள் கணவனைத் திரும்பிப் பார்க்க எழுந்து வெளியே சென்றான் அவன்.

ராஜேஸ்வரியும் உள்ளே சென்றுவிட... "நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன் எனக்கு உண்மைய சொல்லுவியா?" என்றாள் பூடகமாக.

"என்ன அண்ணி? சொல்லுங்க" என்று கேட்க... உங்க அண்ணனோட ஒரு புக்ல நாலு பேரு சேர்ந்து எடுத்த போட்டோ இருந்தது. அதுல இருக்கிறவங்க யாரு? என்று கேட்க "எந்த போட்டோ?" என்று சிறிது நேரம் யோசித்தவள்... "தெரியலையே... போட்டோவ பாத்தா ஒரு வேளை தெரியும்" என்று உதடு பிதுக்கினாள்.

சரி என்று வீட்டிற்கு வந்தவள் கணவனிடம் அதைப் பற்றி கேட்க அவனோ? வாயே திறக்கவில்லை.

மறுநாள் புகைப்படத்தைக் கையில் எடுத்துக் கொண்டவள் மீண்டும் பயணம் ஆனால் பிரகதீஸ்வரியைப் பார்ப்பதற்கு.

புகைப்படத்தைக் கண்ட பிரகதீஸ்வரி அதை கிழித்து துர ஏறிய சென்றாள்.

"இது உங்க அண்ணன் பத்திரமா எடுத்து வச்சிருந்தது. நீ கிழிச்சிட்டேனா நான் அவருக்கு பதில் சொல்ல முடியாது" என்று கூற அவள் கைகள் தன்னால் நின்றன.

"அது நானும் எங்க அண்ணனும் பக்கத்து வீட்டு ஆன்ட்டியோட பசங்களோட எடுத்துகிட்ட போட்டோ. அப்போ... அண்ணே அந்த பொண்ண விரும்புனாரு. ப்ரொபோஸ் கூட பண்ணாரு. அண்ணனோட ஃபர்ஸ்ட் லவ். ஆனா அந்த பொண்ணு ரொம்ப அகம்பாவம் பிடிச்சவ. திமிர்ல எங்க அண்ணன மதிக்காம பேசிட்டா. அத்தோட விட்டிருந்தா கூட பரவாயில்ல. அப்பா கூட வாக்கிங் போயிட்டு இருந்த என்னை காரால இடிச்சி மலையில் இருந்து தள்ளி விட்டுட்டா. அந்த ஆக்சிடென்ட்ல மலையில இருந்து தவறி கீழ விழ போன என்னைக் காப்பாத்த போய் என் கூட வந்த எங்க அப்பா கீழ விழுந்து பாறையில் அடிபட்டு இறந்துட்டாங்க. நான் இப்படி முடமாயிட்டேன்" என்றாள் பிரகதீஸ்வரி கண்ணீருடன்.
"என்னை தயவு செஞ்சு மன்னிச்சிடு பிரகதீஸ்வரி. உன்னோட இந்த நிலைமைக்கு நான்தான் காரணம். நான் அன்னைக்கு விளையாட்டுக்கு பண்ணது இவ்வளவு வினையாகி போயிருக்கும்னு எதிர்பார்க்கல. எங்க அப்பாவும் எனக்கு தெரிய கூடாதுன்னு விஷயத்தை மறைச்சிட்டாரு" என்று கூற "என்ன பேசுகிறாள்?" என்று புரியாமல் விழித்தாள் பிரகதீஸ்வரி.

"என்ன சொல்றீங்க அண்ணி?" என்று அவள் கேட்க.. அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த பிரதீஷ் ஓடிவந்து "இதுவரைக்கும் உன்கிட்ட ஒழுங்கா பேசலயாம். அதுக்காக கில்டியா பீல் பண்றா" என்ற பிரகதீஷ் மனைவியின் கையைப் பிடித்து அழுத்தினான் கூறாதே என்பது போல் கண்களால் கட்டளையிட்டபடி.

அவளும் "சரி" என்பது போல் தலையசைத்து விட.. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

"ஏன் தன்னை சொல்ல விடாமல் தடுத்தான்?" என்பது இன்னும் அவளுக்குள் கேள்விக்குறியாகவே இருந்தது.
 
Top