வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! - 4

GG writers

Moderator
மகேஸ்வரனைத் தன் வீட்டில் பார்த்த மறு நிமிடமே "நீ எதுக்கு இங்க வந்து இருக்க? உன்னால நாங்க பட்ட வே தனை போதாதா? இப்பதான் அதுல இருந்து நாங்க கொஞ்சம் கொஞ்சமா மீண்டும் வந்து இருக்கோம். தயவு செஞ்சு எழுந்து வெளியே போ. இன்னும் என்கிட்ட இருந்து எதை கொள்ளையடிக்கணும்னு இங்க வந்து சேர்ந்து இருக்க? மரியாதையா வெளியே போ" என்று ஆவேசமாக கத்தினார் பசுமதி.

அதை சிறிதும் எதிர்பாக்காத மகள் பிரகதிஸ்வரி மிரண்ட விழிகளோடு சற்று பயந்தபடி "அம்மா... என்னாச்சு? ஏன் இப்படி பேசுறீங்க? யார் இவரு?" என்று கேட்டபடி முன்னே வர..

மகளின் முகத்தைப் பார்த்தவர் "ஒண்ணும் இல்ல தங்கம். நீ போ..." என்று கிச்சனை கைக்காட்டினார்.

தாய் உள்ளே செல்ல கூறினாலும் மகள் தயங்கியபடி நின்றாள் மகள்.

அவள் கண்களில் "அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடுமோ?" என்ற பயம் அப்பட்டமாய் தெரிந்தது.

"ஒன்னும் இல்ல. நீ போய் குழம்ப பாரு.. இவங்க எனக்கு தெரிஞ்சவங்கதான்" என்று அழுத்தி கூறவும் உள்ளே வந்தவள் காதுகள் என்னவோ ஹாலில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தன.

மகள் இருப்பதை நினைவில் கொள்ளாமல் தான் கத்தி கூப்பாடு போட்டதை உணர்ந்த பசுமதி அமைதியாக மகேஷ்வரனிடம் வந்து நின்றார்.

சிறு குற்ற உணர்வோடு மகேஸ்வர் நிமிர்ந்து பசுமதியைப் பார்க்க "இப்ப என்னத்துக்கு நீ இங்க வந்து இருக்க? உன் சங்காத்தமே வேண்டான்னுதானே ஊரை விட்டே போனாேம். இப்ப என் போதாத காலம். இங்கே ட்ரான்ஸ்பர் வந்ததாலதான் நான் இங்க வந்தேன். அதுவும் உனக்கு பொறுக்கலையா?" என்றார் கோபமாக.

"தயவு செஞ்சி கோபப்படாதீங்க அக்கா. கொஞ்சம் அமைதியா உக்காருங்க" என்றார் மகேஸ்வரன்.

அவர் கண்ணில் பசுமதியை எவ்வாறாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம்.

"உன்கிட்ட உட்கார்ந்து பேசக்கூடிய அளவுல நீ எங்க குடும்பத்தை வைக்கல. தயவு செஞ்சி வெளிய போயிடு. உன்னோட நிழல் கூட என் வீட்ல விழுறத நான் விரும்பல. பேசாம எழுந்து வெளியே போ. உன்னோட பழைய திமிர திரும்பவும் என்கிட்ட காட்டலாம்னு நினைக்காத. நான் அன்னைக்கு முக்குல உட்காந்து அழுதுகிட்டு இருந்த அதே பசுமதி இல்ல. உன் மரியாதை கெட்டுப் போறதுக்கு முன்னாடி நீயாவே வெளியில போயிடு.." என்று கர்வமாய் பசுமதி நிமிர்ந்து நின்று கூற...

"அக்கா நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. நான் தப்பான எந்த மோட்டிவோடயும் உங்க வீட்டுக்குள்ள வரல. செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா என் மகளுக்கு உங்க பையனைக் கல்யாணம் பண்ணி வைக்கலாமாண்ணு கேக்குறதுக்காகதான் வந்திருக்கேன்" என்று கூற... வாய்விட்டு சிரித்தார் பசுமதி.

"உன் மகளுக்கு என் பிள்ளை கூட கல்யாணமா? நடக்குற காரியத்தைப் பேசு. தேவையில்லாத வீண் கற்பனை எல்லாம் வளர்த்துக்காத. வீணா தர்மசங்கடத்துக்குதான் ஆள் ஆவ. நானா இருக்க போய் இன்னும் உன்னை உட்கார வச்சி பேசிகிட்டு இருக்கேன். இதுவே என் புள்ள வந்திருந்தான்னா இந்நேரம் உன்னைச் சட்டையைப் பிடிச்சு அடிச்சு வெளியே தள்ளி இருப்பான்" என்றார் பசுமதி.

தன் மகனைப் பற்றி பேசுகையில் அந்த தாயின் முகத்தில் வந்த கம்பீரமும் கௌரவமும் மகேஸ்வரை ஒரு நொடி ஆட்டித்தான் பார்த்தது.

"உங்களுக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும். தேவையில்லாம இந்த ரிஸ்க் எடுக்குறீங்க" என்றார் மகேஸ்வர் உறுத்துப் பார்த்த பார்வையுடன்.

"இந்த மிரட்டுற பார்வை எல்லாம் என்கிட்ட வச்சிக்காத. இதையெல்லாம் பல நூறு முறை தாண்டி வந்தவ நான். நீ என்ன தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்வேன்னு எல்லாம் தெரிஞ்சுதான் சொல்றேன். நீயா வெளியில போறியா? இல்ல என் மகன் வந்து உன் சட்டையப் பிடிச்சி வெளிய தள்ளுன பிறகு போறியா?" என்று பசுமதி அவனை வீட்டை விட்டு வெளியேற்றும் நோக்கோடேயே கேள்வி கேட்க...

"உங்க மகன் உங்க பேச்சை தட்ட மாட்டான்னு எனக்கு தெரியும்க்கா. அதனாலதான் துணிஞ்சி வந்து மாப்பிள்ளை கேக்குறேன். என் பொண்ணுக்கு உங்க பையனப் பிடிச்சிருக்கு. அதனால எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்ல. என் பொண்ணு ஆசைப்பட்டபடி கல்யாணத்தை நடத்தி வைக்கிறதுக்கு நான் தயாரா இருக்கேன். என்ன ஆனாலும் சரி; என் பொண்ணு ஆசைப்பட்டது நடக்கணும். நடந்தே தீரும். இல்ல நடக்க வைப்பேன்" என்று மகேஸ்வரன் உறுதியாகவும் ஆங்காரமாகவும் கூற கலகலவென்று சிரித்தார் பசுமதி.

"நீ என்ன என் புள்ளைய உன் வீட்டு வேலைக்காரன்னு நெனச்சியா? என் பிள்ளைக்கும் அவன் மனசுல ஒருத்தி இருக்கா. அவள மட்டும்தான் என்னைக்கா இருந்தாலும் அவன் கட்டிக்குவான். உன் பொண்ணு எப்பேர்ப்பட்ட பேரழகியா இருந்தாலும் அவன் கால் தூசிக்கு கூட அவன் அவளை மதிக்க போறது இல்ல" என்று கண்ணில் திமிரோடு பசுமதி வீராப்பாய் கூற...

"அதையும் பாக்குறேன். பணம்ண்ணா பொணமும் வாயைப் பிளக்கும். உன் மகன் மட்டும் என்ன? அதுக்கு விதி விலக்கா? அப்படியே இருந்தாலும்... இந்த உலகத்துல பிறந்த ஒவ்வொருத்தருக்கும் ஒரு வெல இருக்கு. இந்த வீட்டுக்கு என் மகள்தான் மருமக. அது எப்படியும் மாறப்போறதில்ல. நான் நடத்திக் காட்றேன் பாரு" என்று விட்டு கோபமாய் வெளியேறினார் மகேஸ்வர் .

வெளியில் சென்ற அவரது அழுத்தமான காலடிகளே அவரது கோபத்தின் அளவைக் கிச்சனுக்குள் இருந்த பிரகதீஸ்வரிக்கு உரைத்தது.

யோசனையுடன் வீட்டிற்குள் வந்த தாயிடம் "அம்மா ஏதாவது பிரச்சனை வந்துர போவுது. எனக்கு பயமா இருக்கும்மா" என்று தாயின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அழ..

"ஒண்ணும் இல்ல தங்கம். நீ பயப்படாத . அம்மா இருக்கேன். உனக்கு அண்ணன் இருக்கான். நமக்கு எதுவும் ஆகவிட மாட்டான்" என்று கூற...
"இல்லம்மா. இந்த ஆளு ரொம்ப மிரட்டுறாப்புல பேசுறாரு. பேசாம அவர் சொல்றதுக்கு நம்ம சரின்னு சொல்லிடலாமா?" என்று அவள் விழிப்பிதுங்கியபடி கேட்க...

"ஒருத்தர் மிரட்டுறாங்களேன்னு பயந்து நம்ம வாழ்க்கையை மாத்தி வாழ தொடங்கினா கடைசி வரை நம்ம அவங்களுக்காக ஓடிக்கிட்டேதான் இருக்கணும்மா. நம்மளால கடைசி வரை நிம்மதியாவே இருக்க முடியாது. இது நான் அனுபவத்துல தெரிஞ்சுகிட்ட பாடம். இவன் எவ்வளவு தூரம் போறான்னு நம்மளும் பாத்துடலாம்" என்று கூறியவர்...


அப்பொழுதும் அவள் பயத்தோடு மிரண்டு விழிக்கவே...
"சரி... அப்ப நீ சொல்ற மாதிரி உங்க அண்ணனுக்கு பிடிக்காத கல்யாணத்தைப் பண்ணி வைப்போமா?" என்று கண்ணில் குறும்புடன் மகளிடம் விசாரிக்க...

"ஐயைய்யோ... வேண்டாம்மா. அண்ணன் பாவம். அவரு இத்தனை காலம்தான் ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்கல. அவர் லைப் பார்ட்னராவது அவருக்கு விருப்பப்படி அமையட்டும்" என்றாள் பிரகதீஸ்வரி.

மகளின் முன்தலை முடியை செல்லமாய் குலைத்து ஆட்டிவிட்டவர்... அவள் கண்களையும் துடைத்து விட தவறவில்லை.

அந்நேரம் பார்த்து பைக் வரும் சத்தம் கேட்டது.
வேகமாக.. அழுத விழிகளைத் துடைத்துக் கொண்டு சிரித்த முகத்தோடு வாசலுக்கு வந்தாள் பிரகதீஸ்வரி.

"அண்ணே..." என்று அவள் அழைப்பிலேயே உற்சாகம் தெற்றிக் கொள்ள "கண்ணு குட்டி... என்ன சீக்கிரமே முழிச்சிட்டிங்க?" என்ற கேள்வியோடு உள்ளே வந்தான் பிரதீஷ் குமார்.

தங்கையின் முகத்தைப் பார்த்ததும் "என்ன என் கண்ணு குட்டியோட முகம் சோர்ந்து போய் இருக்கு?" என்று கேட்டபடி அவள் உச்சியில் முத்தம் வைத்தான் அவன்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல. நேரம் ஆயிடுச்சு இன்னும் உன்ன காணோம்னு தேடிட்டு இருந்தா" என்று கூறியபடி கிச்சனிலிருந்து டீ கப்புடன் வந்தார் பசுமதி.

டீயை கையில் வாங்கியபடியே "தங்கச்சிக்கு குடுத்தியாம்மா?" என்று கேட்க...

"அவ ஏற்கனவே ரெண்டு கப் டீ குடிச்சிகிட்டுதான் சுத்திக்கிட்டு வரா. சரி டீயைக் குடிச்சிட்டு நீ சீக்கிரம் போய் ரெடி ஆயிட்டு வா. உங்கிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும். எனக்கும் இன்னைக்கு சீக்கிரமா போகணும். தாலுகா ஆபீஸ்ல மீட்டிங் சொல்லி இருக்காங்க" என்று கூற..

"சரிம்மா" என்றவன் டீ குடித்து விட்டு தனது அறைக்குள் சென்றான்.
.....
என்றும் காலையிலேயே ஊர் சுற்ற கிளம்பி விடும் மகள் இன்று "அப்பா என்ன முடிவு அறிந்து வருவாரோ?" என்று ஆவலோடு வீட்டை அளந்த படி வீட்டு வாசலுக்கு அவள் அறைக்குமாய் மாறி மாறி நடந்து கொண்டிருந்தாள்.

நேரம் சென்று கொண்டிருக்க தந்தை வராததை உணர்ந்தவளுக்கு "அப்பா நம்ம விஷயத்தைக் கெடப்புல போட்டுட்டு ஆபீஸ் போயிட்டாரோ?" என்ற எண்ணம் உருவெடுக்க.. எதிர் பட்டவர்களிடம் எல்லாம் கோபத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.

அலுவலகத்திற்கு செல்ல கிளம்பி வந்த ஸ்ரீ லக்ஷ்மன் அவளைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு டைனிங் ஹாலுக்கு செல்ல... டைனிங் டேபிளில் வேண்டும் என்றே சென்று அமர்ந்தாள் ஸ்ரீலதா.

"இவயெல்லாம் எந்த ஜென்மத்துலதான் திருந்த போறாளோ?" என்று மனதில் எண்ணியவனாக...

"அம்மா எனக்கு டிபன் வேண்டாம்" என்று கூறிவிட்டு கிளம்பி விட்டான் அவன்.

ஏனெனில் என்னதான் முதலில் சென்று அமர்ந்தது ஸ்ரீ லஷ்மனாவே இருந்தாலும் ஸ்ரீலதாவிற்கு முதலில் உணவு பரிமாறி அவள் சாப்பிடும் வரை ஸ்ரீ லஷ்மன் காத்திருக்க வேண்டும். தவறி அவனுக்கு முதலில் உணவு கொடுத்தால் அவனுக்கு கொடுத்த சாப்பாடுதான் வேண்டும் என்று கேட்டு அடம் பிடிப்பாள் இவள். அப்படி இல்லையென்றால் அவனது சாப்பாட்டையும் சேர்த்து தூக்கி எறிந்து அந்த இடத்தையே ரணகளப்படுத்தி விடுவாள்.

ஒன்றிரண்டு முறை அக்காவின் மீது கோபத்தில் கையை நீட்டி விட்டவன்... அதற்கு பதிலாய் தந்தையிடம் வட்டியும் முதலுமாய் பெற்றுக் கொண்டான்.

அதைப்பார்த்து ஸ்ரீ லதா கை கொட்டி சிரித்து சந்தோஷப்பட பல முறை இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நடந்தேற... அதிலிருந்து அவளிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து முடிவில் பேசுவது என்ன? அவள் முகத்தைப் பார்ப்பதையேக் கூட நிறுத்திவிட்டான் ஸ்ரீ லக்ஷ்மன்.

என்னதான் ஸ்ரீ லக்ஷ்மன் ஆசைப்பட்டு சில பொருட்களை வாங்கி வந்தாலும் அதை உரிமை பாராட்டும் உரிமை என்னவோ அந்த வீட்டில் ஸ்ரீலதாவிற்குதான்கொடுக்கப்பட்டு இருந்தது.

"தான் கஷ்டப்பட்டு உழைத்த காசில் வாங்கி வரும் பொருள்களில் கூட தனக்கு உரிமை இல்லையா?" என்று கொதித்து எழுந்தவன்... தந்தையிடம் நேருக்கு நேராய் மல்லுக்கு நின்றான்.

அதனாலேயே தந்தை மகனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு சண்டை துவங்கி இருக்க... தந்தையின் அலுவலகத்தில் அவருடன் பணி புரியாமல், தான் படித்த பி பி ஏ படிப்பிற்கு ஏற்றார் போல் மற்றொருவரின் அலுவலகத்தில் ஊழியராய் பணிபுரிந்து கொண்டிருந்தான் அவன்.

ஆனால் அதைப் பற்றி எதுவும் அவன் தந்தை வருத்தப்பட்டதாக தெரியவில்லை.

"கொழுப்பெடுத்து போறான்ணா போகட்டும். கஞ்சிக்கு வழி இல்லாம கஷ்டப்பட்டாதான் அப்பனோட அருமை தெரியும்" என்று வீட்டில் கூறும் மகேஸ்வரன்
வெளியிலோ? "அவனுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்ல? நம்ம சொந்த ஆபீஸ்ல இருந்தா அவனுக்கான எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்காது.

எல்லாரும் அவனை முதலாளி பையனாவே பார்த்துருவாங்க. அவனுக்கும் தொழிலாளிகளோட கஷ்டம் தெரியணும்ல" என்று நட்பு வட்டாரங்களில் சுமுகமாய் மற்ற விஷயத்தைப் பேசி தீர்த்துவிட... அவனும் "எனக்கும் தன்மானம் இருக்கு. இவங்க சொத்துல உட்கார்ந்து தின்றதுக்கு ஒன்னும் நான் பிறக்கல" என்றவன் தனது வருமானத்திலேயே தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டான்.

அப்பொழுதும் அவள் இடையூறு செய்கையில்தான் ராக்கெட் வேகத்தில் முந்திக் கொண்டு வரும் கோபம்.


ஆனால் "தெருவில் போற எவளோ ஒரு பிச்சைக்காரி. அதனாலதான் நம்ம பொருட்களைக் கேக்காம எடுக்கிறா. அவத் தொட்ட எதுவும் நமக்கு வேண்டாம்" என்பது போல் அக்காவைப் பார்த்து கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வந்தவன் அக்காவை எதிரியாகவே பாவிக்க துவங்கியிருந்தான்.

அவளது நடை உடை பாவனை முதல் அவளது ஆர்ப்பாட்டமான அழகும், திமிரும், பிடிவாதமும் சுத்தமாய் அவனுக்கு பிடிப்பதில்லை.

"எனக்கும் நேரம் வரும். அப்போ உன்ன வச்சிக்கிறேன்டி" என்று மனதில் வன்மத்தை நிறைத்துக் கொண்டிருந்தான் அந்த சகோதரன்.

"இவன் முகத்தை எல்லாம் பார்த்துட்டு சாப்பிட்டா மனுஷனுக்கு சாப்பாடே ஜீரணமாகாதுப்பா" என்று புலம்பிய அவளும் சாப்பிடாமல் எழுந்து வாசலைப் பார்க்க சொல்ல...

பெற்ற பிள்ளைகள் இரண்டும் எதிர் எதிர் துருவமாய் ஒத்துக் கொள்வதை எண்ணியே துயரடைந்து கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.

சிறிது நேரத்தில் மகேஸ்வரன் வீட்டுக்கு வர...
"அப்பா நான் நேத்தைக்கு சொன்னேனே? அதை பத்தி யோசிச்சீங்களா" என்றாள் மகள்.

"என்னதைம்மா சொல்ற?" என்று அவர் புரியாதது போல் கேட்க... "அப்பா என்னோட கல்யாண விஷயம்" என்று மகள் எடுத்து கொடுக்க...
"ஓ... அதுவா பையன பத்தி நாலு இடத்துல விசாரிக்க சொல்லி இருக்கேன். தகவல் வந்ததும் அதுக்கப்புறம் பேசி முடிக்கலாம்மா. ஏன் ரொம்ப அர்ஜெண்டா?" என்றார் மகளின் மனதை அறியும் ஆவலோடு.

"சும்மாதான் கேட்டேன்ப்பா" என்ற மகள் குடுகுடுவென்று குதித்து ஓடி காரை உயிர்ப்பித்த படி "பாய் டேடி" என்க...


சந்தோஷமாய் மகளுக்கு கையாட்டி விடை கொடுத்தார் மகேஸ்வரன்.

"அவ எங்க போறாண்ணாவது கேளுங்கங்க" என்ற ராஜேஸ்வரியின் குரல் காற்றில் கரைந்து போனது.
 
Last edited:
Top