வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! - 6

GG writers

Moderator
ஸ்ரீ லதாவை மணம் முடித்துக் கொள்ள பலர் போட்டியிடுவதாய் பரசுராமன் பெருமையாய் கூற...
"அப்படியா மாமா? அப்போ அதுலயே ஒரு நல்ல வரணா பார்த்துக் கட்டி கொடுக்க சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு அத வந்து இங்க சொல்றீங்க? ஓ... உங்க மகனுக்குப் பாத்த பொண்ணா அவங்க?" என்றான் பிரதீஷ்.

இப்பொழுது "இவன் அவன் அம்மாவுக்கு மேல இருப்பான் போலையே" என்றும் மனதில் நொந்து கொண்டார் மகேஸ்வரன்.

"ச்சே.. ச்சே... அதெல்லாம் இல்லப்பா. நான் நேரா விஷயத்துக்கு வாரேன். அந்த புள்ள உன்னை எங்கேயோ வச்சி பாத்துருக்கா. அவளுக்கு உன்னை ரொம்ப புடிச்சு போச்சாம். பல கோடீஸ்வரர்கள் கேட்டுமே ஒத்துக்கிடாத புள்ள உன்னைக் கண்ட உடனே கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கா. நீ என்ன சொல்லுற?" என்றார் பதமாக.

அவர் கண்களில் அளவுக்கு மீறிய ஆவல் இருந்தது. எப்படியாவது இந்த கோடீஸ்வரனின் மகளை அவன் கட்டி விட்டால் எப்படியும் அவன் நல்ல பணக்காரனாகி விடுவான்.
அதன்பின்பு தன் மகனுக்கு இந்த கால் ஊனத்தைக் கட்டி வைத்தால் தானும் செட்டில் ஆகிவிடலாம். "ஊதாரியாய் திரியும் மகனுக்கு பெண் கிடைப்பதே பெருசு" என்று எண்ணிக் கொண்டிருந்தார் அவர்.

"நான் என்ன மாமா சொல்றது? அம்மா சொல்றதுதான் என் முடிவு. அதுல எந்த மாற்றமும் இல்லை. ஆனா அம்மாவே ஒத்துக்கிட்டாலும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறதா இருந்தா மட்டும்தான் நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்று அவன் பிசிறு இல்லாமல் தெளிவாய் எடுத்து கூற...
"என்ன சொல்றீங்க?" என்று அதிர்வாேடு கேட்டார் மகேஸ்வர்.

"ஆமா சார். எங்க அம்மாட்ட அப்படித்தான் பேச சொன்னேன். எதாவது ஒரு வீட்டுல எங்கள மாதிரியே அண்ணன் தங்கையோ? அல்லது அக்கா தம்பியோ இருக்காங்கன்னா அந்த வீட்ல பொண்ணு குடுத்து அதே வீட்ல பொண்ணு எடுக்குறதுதான் என் முடிவு. செத்துப் பத்தெல்லாம் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல. என் தங்கச்சிக்கு இல்லாட்டி கூட நான் கொடுத்து அவளை நல்லா வாழ வைப்பேன்"
"என் தங்கச்சி நல்லா இருக்கணும். அவ நல்லா வாழ்ந்தா அது எனக்கு போதும். அவ நல்லா இருந்தா இங்க வர்ற பொண்ணும் நல்லா இருப்பா" என்றான் அவன்.

மகேஸ்வரன் ஏதோ கூற வர இடைப் புகுந்த மாமனார் "இல்லப்பா. உனக்கு மட்டும் கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரிதான் பேச்சுப்பா. உன் தங்கச்சிக்குதான் என் மகன் இருக்கானே?" என்று இடையில் தன் சார்பாக சரியாய் கொக்கி போட...
"சாரி மாமா. உங்க பையனுக்கு நான் கேக்காததுக்கு காரணம் நீங்க ஒத்த மகன பெத்து வச்சிருக்கீங்கங்குறதுதான். இல்லாட்டி மொறப்பையன் இருக்க நான் எதுக்கு வெளியே தேடணும்? நல்லவனாே? கெட்டவனாே அவனை நாலு தட்டுத் தட்டி திருத்த எனக்கு தெரியும்" என்று "உன் மகனைப் பற்றி எனக்கு எற்கனவே நன்றாக தெரியும்" என்று மறைமுகமாய் கூறி விட... பதில் கூற முடியாமல் விழித்தார் பரசுராமன்.

"இல்ல... அவங்க மகன உங்களுக்கு பிடிக்காட்டி பரவாயில்ல. அவளுக்கு வேற ஏதாவது ஒரு நல்ல வரணா பார்த்து பேசி முடிச்சிடலாம். என் தயவு இருந்தால் நடக்காத விஷயம் எதுவுமே இல்லை" என்றார் மகேஸ்வரன் தன் பெருமையைப் பறைசாற்றும் வகையில்.

அவர் பேச்சில் தன் மகளுக்கு அவனைப் பேசி முடிக்கும் முனைப்பு மிகுதியாக இருந்தது.

"உங்களுக்கு எதுக்குங்க அந்த வீண் சிரமம்? என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க எனக்கு தெரியும். நாங்க யார் தயவுலயும் வாழ வேண்டிய அவசியத்துலயும் இல்ல. உங்க தயவும் தேவையில்லை. நீங்க கிளம்புங்க" என்றான் பிரதீஷ்.

அவன் பதிலைக் கேட்டவருக்கு அவமானமாக இருந்தது. எனினும் "தற்போதைக்கு வேறு வழி இல்லை பேசி தான் ஆக வேண்டும். எத்தனை அவமானங்கள் வந்தாலும் தன் மகளுக்காக தாண்டித்தான் ஆக வேண்டும்" என்று எண்ணியவர் "சரி என் வீட்ல பேசிட்டு சொல்றேன்" என்க...
"நீங்க வீட்ல பேசுறதெல்லாம் சரிதான். ஆனா என் தங்கச்சிக்கு பிடிச்சிருந்தாதான் கல்யாணம். இல்லாட்டி பண்ண முடியாது" என்று தீர்க்கமாக உரைத்தான் அவன்.

இதை எள்ளளவு எதிர்பார்த்து இருக்கவில்லை மகேஸ்வரன்.

"இவன் என்ன தங்கச்சிக்காக உயிரையே கொடுப்பான் போல இருக்கு" என்று யோசனையோடு அவர் பார்க்க...
"உங்க மகனோட போட்டோ இருந்தா தந்துட்டு போங்க. நான் என் தங்கச்சிக்கிட்ட காமிச்சிட்டு; அவளுக்கு பிடிச்சிருந்தா அதுக்கு மேல உள்ளது பத்தி பேசுவோம்" என்று கூற...
"என் மகன்" என்றவரது வார்த்தை அதற்கு மேல் வரவில்லை.


"இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்" என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் மகனுக்கு உரிய அந்தஸ்தை முதலிலேயே கொடுத்திருப்பாரோ என்னவோ?

"நம்ம எப்படி லக்ஷ்மனைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது? அதுவும் ஒரு நொண்டிய போய் கட்டிக்கண்ணு சொன்ன அவன் ஒத்துக்குவானா? ஏற்கனவே அக்காவுக்கும் தம்பிக்கும் ஏழாம் பொருத்தம், எட்டாம் பொருத்தமா போயிட்டு இருக்கு. இதுக்கு மேல அவளுக்குன்னு சொன்னா வேணாம்ண்ணு ஒத்துக்கவே மாட்டானே?! இந்த இலட்சணத்துல என் தங்கச்சிக்கு பிடித்தால்தான் எனக்கும் திருமணம் என்கிறானே" என்று அவர் மனம் யோசனையில் அலைபாய்ந்து கொண்டு இருக்க..
அதே வேளை உள்ளிருந்து வீல்செயரைத் தள்ளிக்கொண்டு அவர்கள் அருகில் வந்தாள் பிரகதீஸ்வரி.

அவள் கண்களில் அளவுக்கு மீறிய பரிதவிப்பு அப்பட்டமாய் தெரிந்தது.
ஆனால் அது எதுவும் மகேஸ்வரனின் கண்ணில் பட்டதாகவே தெரியவில்லை.


அவர் கண்கள் அவள் செயல்படாத கால்களிலேயே பதிந்திருக்க
"நமக்கு இருக்கிற ஆஸ்தி அந்தஸ்துக்கு எத்தனை பேர் போட்டி போட்டு நம்ம பையனுக்கு பொண்ணு தர வருவாங்க? இந்த மொடத்தையா கட்டி வைக்ணும்?
இந்தப் பையனும் என்னமோ உலகத்துல இல்லாத பேரழகி மாதிரி தங்கச்சியை அப்படி தாங்குறான். இப்படி இருந்தா இவன் எப்படி நம்ம பொண்ண பார்த்துப்பான்?" என்ற எண்ணமும் தோன்ற..
"எதுக்கும் நம்ம பொண்ணுகிட்ட பேசி பார்ப்போம். அதுக்கப்புறம் வச்சுக்கலாம் இவன. அவ மட்டும் இவனை வேண்டாம்னு சொல்லட்டும்! இவன உசுரோட வச்சே பொதைச்சிடனும்" என்று வன்மமாய் நினைத்துக் கொண்டு எரிச்சலோடு எழுந்து வெளியில் சென்றார் மகேஸ்வரன்.

அவர் பின்னாலேயே எழுந்து "சார்... சார்.." என்று அழைத்தபடி ஓட போன மாமனாரை ஒரு நிமிடம் நிறுத்தி
"யோவ் மாமா... யாரையாவது வீட்டுக்குள்ள கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடி அவங்க யாரு, என்னன்னு ஒழுங்கா விசாரிச்சிட்டு கூட்டிட்டு வாங்க. பணம் இருக்குன்னு கண்டவனையும் இங்க கூட்டிட்டு வராதீங்க. அப்புறம் மரியாதைக் கெட்டுப் போயிடும்" என்று பிரதீஷ் கூற... அவன் கூறிய வார்த்தைகள் வாயிலைத் தாண்டி சென்று கொண்டிருந்த மகேஸ்வரனின் செவியிலும் தெள்ளத் தெளிவாய் விழுந்தது.

"என்னப்பா இப்படி சொல்லுற ? அவரு எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா? அவரு நெனச்சா நம்ம இருக்கிற இடத்தையே இல்லாம ஆக்கிருவாரு" என்று கூற
"எவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அது அவனுக்க மட்டுக்கு வச்சுக்கட்டும். எங்க வீட்டுக்கோ? என்கிட்டையோ கொண்டு வரக்கூடாது. இப்படி செஞ்சவன எல்லாம் ஏற்கனவே நான் பார்த்துட்டேன். அன்னைக்கு வேணா நான் சின்ன பையனா இருக்கலாம். இன்னைக்கு வந்து மோத சொல்லுங்க. பாத்துக்கலாம்" என்று மூஞ்சில் அடித்தது போல் கூறினான் குமார்.

அவன் பார்வை முழுக்க வெளியில் நின்று இருந்த மகேஸ்வரனின் மீதுதான் இருந்தது.

"மெதுவா பேசுப்பா. அவங்களே வலிய வந்து உன்னை மாப்பிள்ளை கேக்குறாங்க. வலிய வந்த சீதேவிய காலால உதைக்காத. அவியளுக்கு இருக்குற வசதிக்கு உன் தங்கச்சிய எவ்வளவு நல்ல ஹாஸ்பிடல்ல காட்டி காலையே குணப்படுத்தி நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுக்க முடியும் தெரியுமா?" என்று கண்ணில் மிதந்த தங்க நாணயங்களின் கனவுடன் மாமனார் பேச...
"அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கு தெரியும். என் கையில காசு இல்லாததுனால ஒண்ணும் என் தங்கச்சி இப்படி இல்ல. அவளுக்கு எப்ப என்ன செய்யணும்னு எங்களுக்கு தெரியும். மூடிட்டு போங்க. இனிமே இந்த மாதிரி பேச்சு பேசுறதா இருந்தா நீங்களும் இந்த வீட்டுக்குள்ள வராதீங்க" என்றவன் கண்கள் ஸ்ட்ராபெரி பழங்கள் போல் சிவக்க மறு பேச்சின்றி வெளியில் சென்றார் பரசுராமன்.

"பாத்தியளா சார்... ஒரு மாமனார்னு ஒரு மட்டு மரியாதை இல்ல. இவனுக்கெல்லாம் உங்க பொண்ண குடுக்கணும்னு ஏன் நினைக்கிறீங்க. எனக்கு தங்கமான ஒரு பையன் இருக்கான். வேணா பாக்குறீங்களா?" என்று அவன் மகேஸ்வரனிடம் பேச்சுவாக்கில் தூண்டிலைப் போட... அதைக் கண்டு கொள்ளாமல்...
"உங்க தங்கச்சி எங்க இருப்பாங்க இப்போ?" என்றார் மகேஸ்வரன்.

"கழுத கெட்டா குட்டிச்செவரு. அவ எங்க இருப்பா? விஏஓ ஆபீஸ்லதான் ஈச்சி ஓட்டிட்டு இருப்பா" என்று கூற
"அவங்களையும் போய் பாத்துட்டு ஒரு வார்த்தை பேசிடலாம்" என்று கூறினார் மகேஷ்வர்.

"எதுக்கு நீங்க தேவையில்லாம அவங்க பின்னாடி அலையுறீங்க? நான்தான் சொல்றேனே... என் பையன் தங்கமான பையன்" என்று பேச்சை ஆரம்பிக்க..
"ப்ளீஸ் ... கொஞ்சம் ஸ்டாப் பண்றீங்களா? என் பொண்ணு ஆசைப்பட்டது எதையுமே நான் கொடுக்காமல் இருந்தது இல்ல. இந்த முறை அது தவறிப் போயிடுமோன்னு எனக்கே ஒரு மாதிரி பயமா இருக்கு. கொஞ்சம் அமைதியா இருங்க" என்ற மகேஸ்வரனின் கார் பசுமதியைப் பார்க்க கிளம்பிற்று.

"அண்ணா... ஏன் எனக்காக உனக்கு வாற நல்ல வாழ்க்கையை எல்லாம் தட்டிக் கழிக்கிற? எனக்கு இப்படி நீ செய்றது பிடிக்கவே இல்ல" என்று வருத்தத்தோடு பிரகதீஸ்வரி கூற..
"எனக்கு தெரியும் கண்ணு குட்டி. நமக்கு நல்லது செய்ய வாரவங்க எப்படி இருப்பாங்கன்னு. இது நமக்கு நல்லதுக்கு வந்தது இல்ல. அவங்க நல்லதுக்கு வந்தது. நம்ம இன்னொரு குடும்பத்துல போய் வாழலாம். அதுக்காக அடிமையா இருக்க கூடாது" என்று அவள் தலை முடியைக் கலைத்தபடியே கூறியவன்
"வா.. போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்போம். நம்ம டைம்ம வேஸ்ட் பண்றதுக்காகவே வந்திருக்காங்க. நீ எதையும் மனசுல வச்சுக்காத கண்ணுக்குட்டி. போய் தூங்கு" என்று தங்கையைப் படுக்க வைத்து விட்டு வாயிலைப் பூட்டிவிட்டு வந்து படுத்தான்.

அவன் அறியவில்லை வந்து சென்ற தந்தை.. தன் மகளுக்காக தன் தலையையே பணயம் வைக்க வேண்டும் என்றாலும் அதற்கும் துணிபவர் என்று.

குமார் படுத்த உடனே தூக்கத்தைத் தழுவ பிரகதீஸ்வரிதான் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

"அண்ணன் இப்படி நம்மள கம்பல் பண்ணி கட்டி வச்சா சப்போஸ் நம்மள யாராவது கட்டிக்கிட்டா கூட.. நம்ம மேல அன்போட இருப்பாங்களா? அவங்க ஏதோ தலையெழுத்தேன்னுதானே கட்டிக்கிட்டு வாழுவாங்க? இத சொன்னா ஏன் அண்ணனுக்கு புரிய மாட்டேங்குது? நம்மள விரும்புறவங்க யாராவது இருந்தால்தானே நம்ம லைஃப் நல்லா இருக்கும். அதுவும் இப்படி கால் ஊனமான நம்மள யாரு ஏத்துக்குவாங்க? யாரா இருந்தாலும் கஷ்டமாதானே இருக்கும்? சுமைய யாரு ஏத்துக்குவா? நாம இல்லாட்டி கூட அண்ணே நிம்மதியா இருப்பாங்க" என்று தன்னைத்தானே குற்றம் சுமத்தியபடி அழுது கொண்டிருந்தவள் ஏதோ முடிவு செய்து கொண்டு படுத்தாள்.

மதியம் எழுந்த குமார் தானும் உண்டு விட்டு; தங்கைக்கும் கொடுத்துவிட்டு; விட்ட தூக்கத்தைத் தொடர... லெட்டர் ஒன்றை எழுதி வைத்த பிரகதீஸ்வரி பல வருடங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு கிளம்பினாள் தன் முடிவை நோக்கி.
 
Last edited:
Top