வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! - 7

GG writers

Moderator
மதியம் ஏற்கனவே தாயார் செய்து வைத்திருந்த உணவைத் தானும் உண்டு தங்கைக்கும் கொடுத்த பிரதீஷ் அவளிடம் ஆறுதலாய் சில வார்த்தைகளைப் பேச..
அவளோ? "அண்ணே இன்னைக்கு மாமா கூட்டிட்டு வந்த வரணைப் பேசி முடிச்சு கட்டிக்கோங்க. எனக்காக பிளீஸ்... மாமா சொல்ற மாதிரி அதுக்கப்புறம் எனக்கு நல்ல லைஃப் அணைச்சு தரலாம் அண்ணே" என்றாள்.

"உனக்கு தெரியாது கண்ணுக்குட்டி. நீ இப்படி இருக்கறதுனால கட்டிட்டு போய் என்ன குறை எல்லாம் சொல்லுவாங்களோ தெரியாது? அதுவே அவங்க வீட்டு பொண்ணு நம்ம வீட்ல வாழும் போது அந்த மாதிரி பிரச்சனை வராது. அப்படி உன்னை ஏதாவது சொன்னா... அவங்க பொண்ணுக்கும் பிரச்சனை வரும்ங்கறதனாலையே அடக்கி வாசிப்பாங்க" என்றான் அவன்.

அவன் பேச்சில் தன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்பதில் அத்தனை உறுதி.

"அப்படி இல்லண்ணா... என்னைப் பிடிக்காதவருக்கு நீ என்னைக் கட்டி குடுத்தாலும் என் வாழ்க்கை நரகம்தானே? என்னை விரும்பாதவரு எப்படி அவங்க சொந்த பந்தத்துக்காக என்னை நல்லா பாத்துக்குவாரு? எல்லாரும் உன்ன போல இருக்கணும்னு அவசியம் இல்லையே அண்ணா?" என்றாள் அவள்.

"கண்ணுக்குட்டி... அண்ணனை நம்பு. உன்ன பிடிச்ச , உனக்கு பிடிச்ச மாப்பிள்ளைய பார்த்து நான் கண்டிப்பா கட்டி வைப்பேன் என்று அவன் வாக்களித்தானே தவிர அவள் கூறியதை ஏற்றுக்கொள்வது போல் இல்லை.

"அண்ணே நான் இருக்க போய்தானே நீ உன் வாழ்க்கையைக் கெடுத்துக்குற?" என்றாள் பிரகதீஸ்வரி முடிவாய்.

இதை சொல்வதற்குள் அவள் விழிகளில் குபுக்கென்று கண்ணீர் கட்டியது.

"இல்லம்மா அப்படி இல்லடா.. நீதான் என் உயிரே"
"இப்படியாவது நீ எங்களோட இருக்க போய்தான் நாங்க நிம்மதியா வாழ்றோம்"
"உன் சந்தோஷம்தான் எங்க சந்தோசம்" என்று அவன் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை தங்கை.

ஏனெனில் அவளுக்கே தெரியும். அவன் அழகுக்கும் திறமைக்கும் பலர் போட்டிப் போட்டுக் கொண்டு மாப்பிள்ளைக் கேட்டு வரத்தான் செய்கின்றனர்.
ஒவ்வொன்றையும் தன் பெயரைச் சொல்லியே தட்டிக் கழித்து வருகிறான் தமையன்.

இத்தனை நாள் பொறுத்து இருந்தவளுக்கு இன்று தன் மாமனே வந்து வக்காலத்து வாங்கிய கோடீஸ்வரனைப் பார்க்கையில் அவர் மகளைத் தன் அண்ணன் திருமணம் புரிந்து கொண்டால் அவன் மணவாழ்வு நன்றாக இருக்கும் என்றே தோன்றியது.

அதற்காகவே அவள் பலமுறை அவனிடம் எடுத்துக் கூறியும் அதைக் கேட்கும் நிலையில் இல்லை பிரதீஷ்குமார்.

உணவை வாங்கி உண்டவள் அவனைத் தன் கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏன்டா... அப்படி பாக்குற" என்று அவள் பார்வையின் மாற்றம் உணர்ந்து குமார் வினவ...
"ஒன்னும் இல்ல அண்ணே. இதே மாதிரி எத்தனை பேருக்கு அண்ணன் தம்பி கிடைச்சிருப்பாங்கன்னு யோசிச்சு பார்த்தேன். நான் இந்த ஜென்மத்துல நிஜமாகவே ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவதான். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு அண்ணனா வேணும். ஆனா அதுக்காக எண்ணைக்குமே நான் உனக்கு தடையாவோ? சுமையாவோ இருக்க விரும்பல" என்று கூறியவள் அவனைக் கட்டிப்பிடித்து கண்ணீர் வடிக்க...

"ஏய் கண்ணுக்குட்டி... நீ இப்படி அழக் கூடாதுங்குறதுக்காகத்தான் அண்ணே இந்த முடிவையே எடுத்து இருக்கேன். ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற? கண்ணத் தொட" என்றவன் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு எழுந்து சென்று கையைக் கழுவி பாத்திரங்களைத் துலக்கி வைத்து விட்டு வந்தான்.

"சரி... ஏந்தங்கச்சி நல்ல புள்ளல்ல? தேவையில்லாத எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம சமத்தா போய் தூங்குவியாம். ஓகே? நான் டீ போட்டுட்டு என் கண்ணுக்குட்டிய வந்து எழுப்புவேனாம்" என்று கூற... "சரிண்ணா" என்றவள் அறைக்குள் நுழைந்தாள்.

அவள் அறைக்குள் சென்றதும் எப்பொழுதும் போல் வாயில் கதவைத் தாழிட்டு விட்டு சென்று படுத்தான் குமார்.

இரவு முழுவதும் விழித்த அசதியில் சிறிது நேரத்திலேயே அவன் தூங்கி விட கதவைத் திறந்து கொண்டு கிளம்பினாள் பிரகதீஸ்வரி.

பல வருடங்களுக்கு முன்பு தந்தையுடன் வெளியில் சென்ற போது அவர் பேச்சை மதிக்காமல் தனியாய் நடந்தது.
அதன் பின்பு இன்று வரை வீட்டுக்குள்ளேயேதான் அடைந்து கிடக்கிறாள்.

இன்று வரை எங்கு செல்ல வேண்டும் என்றாலும் தாயோ? தமையனோ? கூடவே வருவர்.
யாரும் இன்றி வெளியில் செல்லும் முதல் பயணம் இது அவளுக்கு.

எனினும் வேறு வழி இல்லை. "என்னை எண்ணி அண்ணன் தன் வாழ்வை கெடுத்துக் கொண்டிருக்கிறான். நான் இல்லையென்றால் அவன் சந்தோஷமாக வாழ்வான். என்னதான் பெண் என்று பிறந்து விட்டாலும் எனக்கு அதற்கு உரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்கப் போவதில்லை. கால் முடமான பெண்ணை யார்தான் கட்டிக் கொள்ள விரும்புவர்? நம்மை யாருக்குமே பிடிக்காது" என்ற எண்ணமே தாழ்வு மனப்பான்மையாய் அவள் ஆள் மனதில் பதிந்திருக்க... மனதில் ஆதியில் விழுந்த விதை... இந்த மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பித்த பின்.. விருட்சமாய் வளரத் தொடங்கியது.

ஆனால் அண்ணனுக்கு வரும் வரண்கள் அனைத்தும் தன்னால் தட்டிச் செல்வதையும் பார்த்தவள் மனதெங்கும் தாழ்வும் மனப்பான்மை என்னும் விருட்சம் தன் வேர்களைப் பரப்பி கிளை படர்ந்து ஜெய்ஜான்டிக்காய் நின்று மிரட்டியது.

மீண்டும் மீண்டும் அவள் நெஞ்சில் "தன்னை பெண்களே கேவலமாய் பார்ககையில் எந்த ஆண் மகனுக்குதான் பிடிக்கும்" என்ற எண்ணமே ஊற்றெடுத்திருக்க வீல்செயரைத் தள்ளிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவள் எண்ணம் போனதென்னவோ "தந்தை விழுந்து இறந்த மலைச்சரிவிலிருந்து தானும் விழுந்து விட வேண்டும்" என்றுதான்.

மதிய வேளை ஆகையால் தெருவில் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை.

எனினும் யாராவது அவளைத் தாண்டி சென்றாலே படபடப்பாய் இருந்தது.


அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் அவளை வழியில் கண்ட ஒருசிலர் பார்த்த பார்வை கூட அருவருப்பாகவும், பாவமாகவும் பார்த்தது போல் தோன்றியது அவளுக்கு.

அனைவரது பலவிதமான ஏளன பார்வைகளையும் தன்னுள் அசை போட்ட வண்ணம் மலைச்சாரிவை நோக்கி ரோட்டில் பெயர்ந்து கிடந்த கற்களைத் தாண்டி கஷ்டப்பட்டு வண்டியைத் தள்ளிச் சென்று கொண்டிருந்தாள் அவள்.

ஆனால் அவள் நேரமோ என்பது போல் சென்று கொண்டிருக்கும் வழியில் பெயர்ந்து கிடந்த கற்களில் இடறி அவள் வீல்செயர் கவிழ அதைப் பற்றி பிடித்தபடி அமர்ந்திருந்தவளும் "அண்ணாஆ.." என்ற அழைப்போடு கவிழ்ந்து விழுந்தாள்.

அக்கம் பக்கம் யாரும் இல்லாமல் போக... அதைப் பார்த்துக் கொண்டு ஓரத்தில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர் ஒருவர்தான் எழுந்து உதவ முன் வந்தார்.

ஆனால் அதற்குள் கீழே விழுந்தவள் அதிர்ச்சியில் மயங்கியிருந்தாள்.

அவள் தலைக் குப்புற விழுந்திருக்க... வீல் செயர் அவள் மீது கவிழ்ந்திருந்தது.

அது மூன்று சாலைகள் இணையும் இடம்.
வீல் செயரைத் தூக்கித் தூரமாய் தள்ளி விட்டவர் பெண்ணவளை நிமிர்த்து சாலை ஓர சரிவில் பூத்திருந்த ஊட்டி மலர்களின் மீது சாய்த்து அமர வைக்க முயல்கையில்தான் கீழே கிடந்த கல்லில் மோதி அவள் நெற்றியில் இரத்தம் வழிந்து கொண்டிருந்ததைப் பார்த்தார் அவர்.

"தன்னிடம் தண்ணீர் கூட இல்லையே" என்று எண்ணிய அவர் தன் அழுக்கு முட்டையிலிருந்த ஒரு துணியைக் கிழித்து அவள் நெற்றியில் கட்டு போட்டதோடு, அவள் கன்னத்தில் மெதுவாய் தட்டி பார்த்தார்.

தான் தொட்டதற்காக எதுவும் இல்லாதது பொல்லாததைக் கூறி தன்னை பார்ப்பவர்கள் யாரேனும் திட்டி அடித்து விரட்டிவிடக் கூடாதே என்ற பயம் வேறு இருந்தது அவருக்கு.

ஆனால் அவளிடம் எந்த சலனமும் இல்லை.

ரோட்டில் அங்கும் இங்குமாய் யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று இருபுறமும் தேடிப் பார்த்தார்.

நண்பகல் வேளையாதலால் ஒரு ஈ காக்கை கூட இல்லை அவ்விடத்தில். பெரிய பேருந்துகள் சில தாண்டி செல்ல அதை நிறுத்தும் வழிய தெரியாதவர் சாலையைப் பார்ப்பதும், அவள் அருகில் வருவதும் மீண்டும் நடுவழியில் சென்று நிற்பதுமாக இருந்தார்.

அப்போது தொலைவிலிருந்து வந்த காரைக் கண்டவர் நடுவழியில் நின்று நிறுத்துமாறு கையசைக்க.. கடுங்கோபத்தோடு இறங்கி வந்தான் அந்த காரை ஓட்டிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன்.

பிச்சைக்காரரின் சட்டையைப் பிடித்து அடிக்கும் உத்வேகம் அவனிடம்.

ஆனால் பிச்சைக்காரர் அவள் ஓரமாய் விழுந்து கிடப்பதைக் காண்பித்துக் கொடுக்கவும் இமைகள் முடிச்சிட வேகமாய் நடந்து வந்தான்.

அவள் இருந்த நிலைமையைப் பார்த்ததுமே புரிந்தது அவள் ரோட்டில் குட்டிக்கரணம் அடித்து விழுந்திருப்பாள் என்று.

அவசரமாக தன் வண்டியில் தூக்கி அவளை அமர்த்தி சீட்பெல்ட் இட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் அவன்.

பிச்சைக்காரர் கார் செல்வதை அவ்விடத்திலேயே நின்று தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட மயக்கம் தெளிந்தது.

சுற்றிலும் இருந்த சூழலைப் பார்த்தவளுக்குப் பயத்தில் உடல் வேர்த்து, உதறல் எடுத்தது.

பெண்ணவள் கத்தி அழத்துவங்க "சார் நீங்கதானே அவங்க கூட வந்தீங்க? பாருங்க பேஷண்ட் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்காங்க. வந்து என்னன்னு கேளுங்க" என்று அவள் அறையில் இருந்த நர்ஸ் கூறிவிட்டுச் செல்ல ... உள்ளே வந்தான் அவன்.

அவளது மிரட்சியான பார்வையே அவளுக்கு இவை அனைத்தும் புதிது என்பதை உணர்த்தியது அவனுக்கு.

அதிக உயரம் என்று குறிப்பிட முடியாது அண்ணனை விட சற்று உயரம் குறைவுதான். ஆனால் நல்ல சிவந்த நிறம். எடுப்பான மீசை. பாக்ஸ் கட்டிங் வெட்டிய தலையில் கத்தையாய் முடி வளர்ந்து இருக்க கண்களில் வசீகரத்தோடு டக்கின் செய்த சட்டையோடு ஹென்ட்சம்மாய் தன்னருகில் வந்து நின்றவனைப் பார்த்து
"நான் எப்படி இங்க வந்தேன்? நீங்கல்லாம் யாரு?" என்றாள் படபடத்த விழிகளோடு.

அவள் கண்களில் இருந்த பயமும் வழிந்த கண்ணீரும் அவளைச் சிறு குழந்தையாய் காட்ட.. அவன் நடந்ததைக் கூறினான்.

"ஏங்க... நான் உங்ககிட்ட எனக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்டனா? அப்படியே விட்டுருந்தா கூட அஞ்சு நிமிஷத்துல நானா முழிச்சி போயிருப்பேனே?! எதுக்கு சிரமபட்டு தூக்கிட்டு வந்து என்னை இங்க அடச்சி வச்சிருக்கீங்க. எனக்கு பயமா இருக்கு. என்னை நான் இருந்த இடத்துலயே கொண்டு விட்டுடுங்க. இல்ல... எங்க அண்ணன் உங்கள என்ன செய்வாண்ணே தெரியாது" என்று மிரட்டியவள் விழிகள் அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீர் விட... அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவன் தன் தலைமுடியைக் கோதி தன்னைச் சமன் செய்தான்.

"ஹலோ... மேம் கூல். இது ஹாஸ்பிட்டல்தான். நீங்க எதுக்கு இந்த நிலமையில தனியா ரோட்ல வந்தீங்க? உங்கள ஒழுங்கா பாத்துக்க கூட முடியாம தனியா வெளில விடுறாங்களே? உங்கள் வீட்டில் உள்ளவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா?" என்று அவன் பாட்டுக்கு கத்தத் துவங்க..
"சார் ப்ளீஸ் ஸ்டாப். நானாதான் வந்தேன். நீங்க பாட்டுக்கு எங்க வீட்ல உள்ளவங்கள திட்டிட்டு இருக்காதீங்க..." என்று பொரிந்தாள் அவள்.

அவள் அழுகை எங்கோ காணாமல் போயிருந்தது.

அழுது கொண்டிருந்தவள் அவர்கள் வீட்டில் உள்ளவர்களை கூறியதும் கண்களை உருட்டி மிரட்டி கோவப்பட்டு கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

இதழ் கடையில் மிளிர்ந்த மெல்லிய புன்னகையுடன் "சரி... இப்ப அடிபட்டுருச்சே. இப்ப என்ன பண்ண போறீங்க?" என்று கேட்க..
"எனக்கு என்ன ஆனாலும் எங்க அண்ணன் பாத்துக்குவான். என்னை எங்க இருந்து கூட்டிட்டு வந்திங்களோ அங்கேயே கொண்டு விடுங்க" என்று மூக்கு விடைக்க பதில் அளித்தாள் பிரகதி.

"ஓ" என்றவன் இரண்டு எட்டு வெளியில் வைக்கப் போக தாவி அவன் கையைப் பிடித்தவள்
"ஏங்க.. என்னை இங்கேயே விட்டுட்டு எங்க போறீங்க? என்னையும் கூட்டிட்டு போங்க" என்றாள்.
எங்கே தன்னை இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடுவானோ என்ற பயத்தில்.

"ஏங்க... ஹாஸ்பிடல்ல பில் பே பண்ணனும். பண்ணிட்டு வரேங்க. இல்லாட்டி உங்கள வெளிய விட மாட்டாங்க" என்றான் அவன்.

அவனை நம்பாத பார்வை பார்த்தாள் அவள்.

அவள் பிடித்த பிடி இன்னும் அப்படியே இருக்க.. "நிஜமாதாங்க சொல்றேன்" என்றவன் மெலிதாய் சிரிப்பினூடே பதில் அளிக்க... இப்பொழுதும் நம்பவில்லை அவள்.

"சரி... என் மொபைல தந்துட்டு போறேன். அத விட்டுட்டு என்னால எங்கேயும் போக முடியாது. அது என் பொண்டாட்டி மாதிரி. சோ.. வச்சிகிட்டு தைரியமா இருங்க" என்று அவன் கூற ஒரு மாதிரியாய் போய் விட்டது அவளுக்கு.

"ரொம்ப சீப்பா பிஹேவ் பண்றியோ பிரகதி?" என்று தனக்குள்ளே நினைத்தவள்.. அதன் பின்பே அவன் கையை விட்டாள்.

"உங்க அண்ணன் இப்ப எங்க போனாராம்? கால் பண்ணி வர சொல்லுங்க" என்று கூறியவன் தனது அலைபேசியைக் கொடுத்துச் சென்றான்.

பெற்றுக் கொண்டவளுக்கு கால் செய்யும் எண்ணம்தான் வரவில்லை.

அவன் சென்ற வாயிலையேதான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் சில டேப்லெட்டுகளை அவள் கையில் கொடுத்து எந்தெந்த வேளைகளில் உட்கொள்ள வேண்டும் என்று கூறினான்.

மருந்துகளைப் பெற்றுக் கொண்டவள் "சாவ வந்தவள இவன் என்னடாண்ணா பிழைக்க வைக்கிற வேலைய பார்க்கிறான். இவன்கிட்ட நான் கேட்டனா இதெல்லாம்?" என்று எண்ணியபடி கண்களை இடுக்கி அவனைப் பார்த்துக் கொண்டிருக்க...
"போலாமாங்க?" என்று கேட்டபடி அவளைத் தூக்கினான் அவன்.

அவள் முழுதாய் தூக்கும் முன் பட்டென்று அவனைத் தள்ளி விட்டவள் "என்னை எதுக்கு தூக்குறீங்க? என்ன கீழே விடுங்க. நான் போயிடுறேன்" என்றாள்.

அவள் கைகள் "என்னைத் தொடாதே" என்பது போல் தடுத்து நிற்க... அவள் தள்ளியதில் ஓரடி பின்னால் சென்றிருந்தான் அவன்.

அவள் செயலில் அவனுக்குள் எரிச்சல் பொங்கியது.

நெற்றியை அழுந்த தேய்த்து.. கண்களை மூடி ஆழ மூச்சை விடுத்தவன் "சரி போங்க" என்று வழியை விட்டு நீங்கி நின்றபடி கூர்ப்பார்வை பார்த்தான் அவளை.

முடிந்தால்தானே? கட்டிலில் இருந்து இறக்கி கீழே விடவாவது ஆள் வேண்டுமே?

அவள் பார்வை தன்னைக் கூர் ஈட்டி போல் துளைப்பதைப் பார்த்தவளுக்கு அவமானமாய் இருந்தது.

"நாமெல்லாம் எதற்கு பிறந்தோம்" என்று தோன்ற அதுவும் கண்ணீராகவே வெளியேறியது.
 
Top