வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! - 8

GG writers

Moderator
பிரகதீஸ்வரியின் செயலில் அவனுக்கு எரிச்சல் பொங்கியது.

நெற்றியை அழுந்த தேய்த்து.. கண்களை மூடி ஆழ மூச்சை விடுத்தவன் "சரி போங்க" என்று வழியை விட்டு நீங்கி நிற்க.. முடிந்தால்தானே? உயரமான அந்த கட்டிலில் இருந்து இறக்கி கீழே விடவாவது ஆள் வேண்டுமே? அவன் கூர்பார்வைத் தன்னைக் குத்திக் கிழிப்பதைப் பார்த்தவளுக்கு அவமானமாய் இருந்தது.

"போ... இன்னும் ஏன் போகாம இருக்க?" என்பது போல் அவன் பார்த்தப் பார்வையில் கூனி குறுகியவள் கண்களில் இருந்து மடமடவென்று கண்ணீர் வழிந்தது தன் இயலாமையை நினைத்து.

"என்னோட வீல் சேர்" என்று கேட்டபடி அவனைக் கேள்வியாய் நோக்கினாள் பிரகதி.

"ஏங்க.. உங்களதான் ஹாஸ்பிடலுக்குத் தூக்கிட்டு வந்தேன். அதுக்காக உங்க செயரையுமா நான் தூக்கிட்டு வர முடியும்? உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?" என்று அவன் பாவமாய் கேட்க... அவன் கேட்ட விதத்தில் சிரிப்பே வந்து விட்டது அவளுக்கு.

அழுத விழிகளுடன் சிரித்தவளைக் கண்களை உருட்டி பார்த்தவன்...
"நீங்க விழுந்த இடத்திலேயேதான் உங்க வீல் சேர் இருக்கும். வாங்க... நான் கூட்டிட்டு போறேன்" என்றான்.

மீண்டும் அவளைத் தூக்கினான். அவன் கரம் பட்டதும் ஏதோ புல்லின் மேல் பனித்துளி பட்ட உணர்வில் உடலில் இருந்த செல்களெல்லாம் புத்துணர்ச்சி கொண்டது போல் சிலிர்த்தது.

மென்னுடல் முழுதும் மயிர்கூச்செறிய "என்னை இறக்கி விடுங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு" என்றாள் நெளிந்து கொண்டே.

"ஏங்க.. நெளியாதீங்க. முன்ன பின்ன இப்படி யாரையும் தூக்கி எனக்கு பழக்கம் இல்ல. கீழ போட்டுட போறேன். அப்புறம் அதுக்கும் என்னத்தான் குறை சொல்லுவீங்க" என்று எங்கே விழுந்து விட பேகிறாளோ? என்ற எண்ணத்தில் பிடியை இறுக்கிய வண்ணம் அவன் கூற..
"ஏங்க.. நானே நடந்து வாரேன்" என்றாள் அவள்.

"ஏங்க.. இறக்கி விட்டா உங்களாலதான் நடக்க முடியாதுல்ல? பேசாம இருங்க. நான் ஒண்ணும் உங்கள தப்பா நினைச்சுக்க மாட்டேன். வரும்போது நான்தானே உங்களத் தூக்கிட்டு வந்தேன்? அப்ப மட்டும் சும்மா இருந்தீங்க" என்றான் அவன்.

"ஐயோ... நான் சொல்றதைக் கேளுங்க. என்னால நடக்க முடியும். நான் ட்ரை பண்றேன்" என்று அவள் கூற... "சரி வாங்க.." என்றவன் அவளைக் கீழே விட்டு விட்டு அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டுக் கொள்ள அவஸ்தையாய் உணர்ந்தாள் அவள்.

"ப்ளீஸ் என்ன விடுங்க" என்றவள் கால்களை ஊன்றி நடக்க முயல ஒன்றரை வயது குழந்தையின் கால்கள் போல் கால்கள் தள்ளாடின.

பேலன்ஸ் இன்றி நடந்தவளைப் பார்த்தவன் "ஏங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல. நானே தூக்கிட்டு வரேன்" என்றபடி அவள் பேச்சைக் கேட்காமல் தூக்கி விட்டான்.

அவன் கையில் இருக்கையில் அவஸ்தையாய் உணர்ந்தாள் அவள். அசௌகர்யமாய் உணர்ந்தவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

"வெளிய வரைக்கும்தான். இப்ப முடிஞ்சிடும் ... இப்ப முடிஞ்சிடும்.." என்று தன்னைத் தேற்றும் வகையில் கண்களை மூடிக் கொண்டளைக் கீழே போடுவது போல் சைகை செய்தான் அவன்.

"அண்ணா..." என்று பயத்தில் அவறியவள் அனிச்சையாய் அவன் சட்டைக் காலரை இறுக்கமாய் பற்றிப் பிடித்துக் கொள்ள.... மந்தகாச புன்னகையைச் சிந்தினான் அவன்.

அவனது வாசம் வேறு குப்பென்று நாசியில் ஏறியது. ஆழ்ந்து சுவாசித்தவள் அங்கங்களில் ஏதோ மாற்றம்.

அவன் புன்னகையில் வீழ்ந்தவள் மனமோ? மீண்டும் மீண்டும் அந்த சிரிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கெஞ்சியது.

ஒரு மாதிரியாக சந்தோஷமாகவும் குறுகுறுப்பாகவும் இருந்த.. என்னவென்று சொல்லத் தெரியாத அந்த உணர்வைப் புறந்தள்ளியவள் "ஏங்க... உங்க பேரு என்ன?" என்றாள்.

"சரிதான். இவ்வளவு நேரத்துக்கு பிறகு என் பெயரை கேட்டுட்டீங்களே? அதிசயம்தான்" என்று மீண்டும் அந்த மந்தகாச புன்னகை சிந்தியவன் "என் பேரு ஸ்ரீ லக்ஷ்மன்" என்றான்.

"ஓ... ரொம்ப நல்ல பேருங்க. உங்களுக்கு பொருத்தமா இருக்கு" என்றாள் அவள்.

"கேட்கலாமா? கேட்கக்கூடாதான்னு தெரியல. ஆனாலும் கேக்கணும்னு தோணுது. கேட்டுட்டேன்னு கோச்சுக்காதீங்க. உங்க பேர் என்ன?" என்றான் அவன் தயங்கியபடியே. இதற்கும் கோபித்துக் கொள்வாளோ? என்ற பாவம் அவன் கண்களில்.

அவள் அமைதியாக இருக்கவும் "சாரிங்க" என்றபடி கார்டோரை திறக்கக் கூறியவன் அவளைச் சீட்டில் அமர வைத்து சீட் பெல்ட்டைப் போட்டு விட்டான்.

சுற்றி வந்து அவன் டிரைவர் சீட்டில் அமர்கையில் "சாரிங்க.. உங்கள ரொம்ப சிரம படுத்திட்டேன். என் பேரு பிரகதீஸ்வரி" என்று கூற...

"ஓ.. சரிங்க. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. பசிக்குதுங்க. நீங்க கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணீங்கண்ணா சீக்கிரமே விட்டுக்கு போய் சாப்பிடுவேன்" என்றான் அவன் வயிற்றைத் தடவிக் கொண்டே.

"ஏங்க.. இவ்வளவு நேரம் ஆகியும் நீங்க சாப்பிடலையா?" என்றாள் அவள் ஆச்சரியமாக.

"ஏங்க... வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு சாப்பிட வந்தேன். இன்னைக்கு ஆஃப் டே. பட் வேலை முடிச்சிட்டுதான் போகணும்னு ஹச்ஆர் உக்கார வச்சுட்டாரு. சோ... ஒரு மணிக்கான லஞ்ச் டைம் ஆல்ரெடி லேட்டாயிடிச்சி. வழியில உங்களை வேற பார்த்தேன்னா? அந்த பிச்சைக்காரர் ஹெல்ப் கேட்கவும் இறங்கி வந்தேன். உங்கள அந்த நிலைமையில் பார்த்த பிறகு எனக்கு விட்டுட்டு போகவும் மனசு வரல. சரி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு போலாம்னு பார்த்தா.. நீங்க கத்தி ரகளையே பண்ணிட்டீங்களே" என்று சிரித்தான் அவன்.

அதே மந்தகாச புன்னகை அவனை விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவனே அவள் பார்வையை உணர்ந்து "என்னங்க? என்ன ட்ரீமுக்கு போய்ட்டீங்க" என்று அவள் முகத்தருகே கையை அசைத்து கேட்கவும்தான் சித்தம் தெளிந்தவள் "சாரிங்க" என்றாள்.

"சாரிங்க" என்பதைத் தவிர வேறு எதுவும் கூற முடியவில்லை அவளால்.

தன்னை மறந்து அவனை ரசித்ததை எண்ணி அவள் தனக்குள் யுத்தம் செய்து கொண்டிருக்க வெளியில் அமைதி நிலவியது.

அவள் அமைதியாக இருக்க... மீண்டும் அவள் விழுந்திருந்த இடத்திற்கே வண்டியை ஓட்டி சென்றான் அவன்.

வருகையில் அங்கு கிடந்த வீல்சேர் இப்பொழுது காணாமல் போயிருக்க... "என்னங்க சாரிங்க உங்க வீல்சேரை நான் அப்பவே எடுத்துட்டு வந்து இருக்கணும். அவசரத்துல போட்டுட்டு வந்துட்டேன் அதை யாரோ தூக்கிட்டு போயிட்டாங்க போல இருக்கு" என்று அவன் கூற விழித்தாள் அவள்.

இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை இருவருக்கும்.

இவர நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்தான் ஆகணுமோ?" என்றது அவள் மனம்.

அவன் எதையோ தேடுவதைக் கண்ட அந்த பிச்சைக்காரர் எழுந்து வேகமாக வந்து அவளைப் பார்த்தார்.

பிச்சைக்காரரைப் பார்த்தவன் "ஐயா... இங்க அவங்களோட வீல்சேல் கடந்துதே. அத காணோம்" என்று கேட்க...
" கொஞ்சம் முன்னாடிதான் ஒரு பையன் வந்து எடுத்துட்டு போனாருங்க. கேட்டதுக்கு அந்த புள்ளையோட அண்ணன்னு சொன்னாரு. ஒரே அழுகை... ஆஸ்பத்திரிக்குதான் வந்தாரு" என்று கூறினார் அவர்.

கையில் இருநூறு ரூபாயைத் திணிக்க... "ரொம்ப நன்றிங்க. ஆனா.. இது வேண்டாமுங்க" என்ற பிச்சைக்காரர் பணத்தைத் திருப்பிக் கொடுக்க... அவன் அதிர்வோடு பார்த்தான்.

"ஒருவேளை காசு கம்மியா இருக்குனு வாங்கலையோ?" என்று எண்ணியவன் பாக்கெட்டில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுக்க அப்பொழுதும் அவர் வாங்கவில்லை.

"ஏன் என்கிட்ட காசு வாங்க மாட்டேங்கிறீங்க? நீங்களே கைல காசு இல்லாமதானே பிச்சை எடுத்துகிட்டு இருக்கீங்க?" என்று நேராகவே கேட்டு விட்டான் அவன்.

"தம்பி... நீ பிச்சையா கொடுக்கறதுன்னா எவ்வளவு வேணாலும் எனக்கு குடு. ஒத்த ரூபா கொடுத்தாலும் ஏத்துக்கிறேன் நான். ஆனா நீ நான் செஞ்ச உதவிக்கு காசு கொடுக்குற" என்று கூற... அப்பொழுதுதான் தன் தவறு புரிந்தது அவனுக்கு.

"சாரிங்க. ரொம்ப நன்றி" என்று கூறி விட்டு காரில் சென்று ஏறினான்.

ஏனோ அந்த முதியவர் மிகவும் பெரியவராய் தெரிந்தார் அவன் கண்களுக்கு. பிச்சைக்காரராக இருந்தாலும் அவர் மீது மரியாதை ஏற்பட்டிருந்தது அவனுக்கு.

"யாரோ.. உங்க அண்ணன்னு சொல்லி வந்து எடுத்துட்டு போனாங்களாம்" என்று கூற..

"என் அண்ணன்தான் வந்திருப்பான். ஏங்க.. சிரமம் பாக்காம... தயவு செஞ்சு எங்க அண்ணன்கிட்ட கொண்டு விட்டுடுறீங்களா?" என்று அவள் கேட்க...

"உங்க அண்ணன் ஹாஸ்பிடல்தான் போயிருக்காராம். வழியில் வரும்போது எதிர்ல அப்படி யாரையும் நான் பாக்கல. சோ அவருக்கும் விஷயம் தெரிஞ்சு இப்போ உங்க வீட்டுக்குதான் வந்துட்டு இருப்பாரு. முதல்ல உங்க வீட்டுக்கு வழி சொல்லுங்க. அப்பதான் நான் உங்கள கொண்டு விட முடியும்" என்றான் அவன்.

வழியைக் கூற விரைந்து சென்றது கார்.

வீடு திறந்தே கிடக்க... அண்ணனது வண்டியைக் காணவில்லை என்றதை உணர்ந்தவள் "அண்ணன் நம்மள தேடி தான் எங்கேயோ போயிட்டார் போல" என்று எண்ணிக் கொண்டு...

"சார் தப்பா எடுத்துக்காதீங்க. என்னை வீட்டுக்குள்ள மட்டும் உக்கார வச்சிடுறீங்களா?" என்றாள்.

"சரி" என்றவன் பெண்ணவளை உள்ளே தூக்கிச் செல்ல அந்த ரம்யமான சூழலை மனதிற்குள் பொக்கிஷமாய் சேமித்துக் கொண்டாள் அவள்.

அவனுக்கு அந்த வீட்டின் அமைப்பும், வீட்டின் முன் இருந்த இயற்கையின் எழில் கோலமும் மிகவும் பிடித்திருந்தது.

வீட்டில் இருந்த சோபாவில் அவளை அமர வைத்தவன்.. "கிளம்புறேன்" என்று கூற "சரி" என்று தலை அசைத்தாள் அவள்.

"ஏங்க.. உங்களுக்கு ஹெல்ப் எல்லாம் பண்ணி இருக்கேன். என்னை உக்கார கூட சொல்ல மாட்டீங்களா?" என்றான் அவன்.

"சாரிங்க. சொல்ல மறந்துட்டேன். உட்காருங்க. நான் போய் டீ எடுத்துட்டு வரேன்" என்றவள் நகர பார்க்க... ஏங்க உட்காருங்க.. உட்காருங்க... நான் சும்மா டீஸ் பண்ணேன்" என்றவன் வெளியில் செல்ல...

"ஏங்க ஒரு நிமிஷம்" என்றவள் வீட்டுக்குள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பொருட்களையும், சுவரையும் பிடித்த படி நடக்கத் துவங்கினாள்.

அவள் கைகளின் பலத்தால் சுவரில் பிடித்தபடி நடந்து சென்றதைப் பார்த்தவனுக்கு மனது ஒரு மாதிரியாய் இருந்தது.

ஆனால் ஏனோ மனதிற்குள் அவள் பிறவி ஊனமல்ல. ஏதோ நரம்பு பிரச்சனை என்றே தோன்றியது அவனுக்கு அவள் நடையைப் பார்த்தபோது.

சற்று நேரத்தில் உணவு தட்டோடு வந்து "உங்களுக்குதான் பசிக்குதுன்னு சொன்னிங்களே. எங்க வீட்ல சாப்பிடுறீங்களா" என்றாள் தட்டை நீட்டியபடி.

கதவில் சாய்ந்து நின்றவள் கேள்வியே தயக்கத்தோடு வர..
வெளியில் நின்றவனோ? "பரவால்லங்க நான் வீட்ல போயே சாப்பிட்டுக்கிறேன்" என்று கூறினான்.

அவன் பதிலில் அவள்முகம் சோர்ந்து விட... தன்னை அறியாமலே அவள் அருகில் வந்து தட்டை கையில் வாங்கிக் கொண்டான் அவன்.

அவள் முகம் வெளியில் பூத்திருந்த மலர்களுக்கு நிகராய் நொடியில் மலர... அந்த ஒரு நொடி அவள் முகத்தைப் பார்த்தவன் அதிர்ந்து நின்றான்.

அவள் முகத்திலிருந்து கண்களை மீடக இயலாமல் விழி மூடாது நின்றான் அவன்.

அவன் இதயத்தில் ஏதோ ஒரு தடுமாற்றம். "தனக்காக ஏன் அவள் இத்தனை சிரமப்படுகிறாள்?" என்று மனம் கேள்வி கேட்டாலும்.. அந்த அக்கறையை எண்ணி மனம் சந்தோஷமும் அடைந்தது.

தட்டை வாங்கி விட்டவனுக்கோ புதிதாய் ஒருவர் வீட்டில் சாப்பிடவும் ஒரு மாதிரியாக இருந்தது. வேண்டாம் என்று மறுத்தால் அவள் முகம் வாடுவதைப் பார்க்கவும் கஷ்டமாய் இருந்தது.

"பசிக்குது" என்று தான் கூறியதால் வந்த வினைதான் இது என்பதையும் புரிந்து கொண்டான்.

"தான் அவளுக்கு உதவி செய்ததற்காகதான் அவள் இத்தனை சிரமப்படுகிறாள் போல " என்று மனம் எண்ணிக் கொண்டாலும்... நொடியில் வந்த அந்த முகப்பொலிவை விட்டு கண்களை அகற்ற முடியாமல் எதிர் முனையால் ஈர்க்கப்பட்ட காந்த விசை போல் அவன் பார்வை அவள் முகத்தில்தான் நின்றாடியது.

ஆண் அவன் பார்வை அணங்கவள் உயிர் வரைத் தொட்டு மீட்டியது.

காய்ந்திருந்த புல்வெளியில் மழைத் துளிகள் கொட்டியது போல்... அடிவயிற்றில் இருந்து சிறகடித்து பறந்த பட்டாம்பூச்சிகளின் குறுகுறுபூட்டும் உணர்வில் கால்கள் தள்ளாட... கண்களோ? தொட்டால் சுருங்கியாய் முடி கொள்ள.. அவன் பார்வையோ மீண்டும் மீண்டும் முத்தமிட்டு சென்றதில் கள்ள விழிகள் சிறகுகளாய் படபடத்து மீண்டும் திறக்க... செங்காந்தள் மலரென மலர்ந்த மலர் அவள் துவண்டு கீழே விழ போன வேளை.. கடைசி நொடியில் தாங்கிப் பிடித்தான் அவன்.
 
Top