வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! - 9

GG writers

Moderator
திடீரென்று நடந்த நிகழ்வில் தட்டிலிருந்த உணவு சிறிது கீழே சிதறியிருக்க... தட்டைக் கீழே வைத்து விட்டு... கீழே விழச் சென்றவளை ஒற்றைக் கையால் தாங்கி பிடித்தவன் மாது அவளை மீண்டும் தூக்கினான்.

இம்முறை அவளைத் தூக்குகையில் அவனை இனம் புரியாத ஏதோ ஒன்று ஆட்கொண்டது.

பட்டுரோஜா இதழ்களின் மேல் கைவைத்த உணர்வு. அருகில் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்தவன் கண்கள் இமைக்க மறந்தன. கால்கள் காலடி வைக்க மறந்த நிலையில்..
பூங்கொத்து போல் பூவை அவளைத் தூக்கி வைத்திருந்தவன் மூன்று அடிகளை வைப்பதற்குள் மூன்று யுகங்கள் கடந்தது போல் உணர்ந்தான்.

அவனில் ஏற்பட்ட மாற்றங்களை அவள் விழி வழியே அவளுக்கும் கடத்திக் கொண்டிருந்தான் அவன்.

படபடத்த விழிகளில் தன்னைத் தொலைத்தவன்... பாந்தமாய் அணைத்திருத்த அணங்கவள் அண்மையில் வெம்மை உணர்ந்தான்.

வெட்கம் பூசிய வெட்சியவள் கன்னக் கதுப்புகள் கொண்ட காதல் மயக்கத்தால் மாறிய ஆப்பிள் வண்ண கன்னங்கள் மன்னனவன் கிறக்கத்தைக் கூட்டிற்று.

காளை அவன் கண்கள் தன் எல்லை மீறி கன்னியவள் கயல்கள் தாண்டி பயணிக்க... இம்முறை முதலில் சகஜ நிலைக்குத் திரும்பிய பிரகதி அவன் முகத்தருகே தன் கைகளை ஆட்ட சித்தம் தெளிந்து அவளைச் சோபாவில் அமர வைத்தான் சோபாவில் முட்டிக்கொண்டு நின்ற ஶ்ரீலக்ஷ்மன்.

"அதுக்குள்ள இந்த சோபா வேற வந்திருச்சா" என்று எரிச்சல் வேறு மண்டியது அவன் மனதில்.

இதுவரை தயங்கிக் கொண்டிருந்தவன் தரையில் வைத்த தட்டைக் கையில் எடுத்து வந்து எந்த தயக்கமும் இன்றி அவள் எதிரே அமர்ந்தான்.

ஒரு வாய் உணவை வாயில் வைக்க இப்பொழுது பசியே இல்லை அவனுக்கு.

உணவின் பசி மாயமாய் எங்கோ காணாமல் போயிருக்க விழிகளில் இருந்தது அவன் பசி.

குவளை மலரென குனிந்து அமர்ந்திந்தவள் "என்ன இது வித்தியாசமான உணர்வு? வெட்கமே இல்லாம ஒரு ஆம்பளைய பாக்குறியே? என்ன நினைப்பாரு அவரு? நீ இருக்குற நிலைமைக்கு இதெல்லாம் தேவையா உனக்கு? பாவம்ண்ணு இரக்கப்பட்டு உதவி செய்ய வந்தா... நீ அவரையே இப்படி பாக்குறன்னு தப்பா நினைக்க மாட்டாரா? கண்ண மூடுடி. பாக்காத பிரகதி... பாக்காத.." என்று பலமுறை தடை விதித்தாலும் கயல்கள் அவள் பேச்சை மீறி அவன் வதனம் கண்டன.

"தனியா இருக்க பொண்ண என்ன பார்வைடா பாக்குறடா? அசிங்கம் புடிச்சவனே.. எழுந்து வெளியே போடா... ஹெல்ப் பண்ற மாதிரி உள்ள வந்துட்டு அத்துமீற பாக்குறோம்னு அந்த பொண்ணு தப்பா நினைச்சுக்க போகுது. கண்ண திருப்பு. வேற எங்கேயாவது பாரு" என்று பெண் அவளைக் கொள்ளை இடச் சென்ற கண்களுக்கு மனதால் பலமுறை கடிவாளம் இட்டும் கடிவாளம் தாண்டி கட்டு மீறி பாய்ந்தது காளை அவன் விழிகளின் வீச்சு.

இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க... இருவருக்கும் ஒரு மாதிரி ஆகியது.

பேச்சு வரவில்லை அவளுக்கு. உணவு இறங்க மறுத்தது இவனுக்கு.

கண்களை மூடி தன்னை இயல்பாக்க முயற்சித்தவனுக்கு தான் செய்யும் செயல் தவறு என்று மனம் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறினாலும் தாயைக் கண்ட சிறு கன்றை போல் துள்ளி ஓடும் கண்களைக் கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் திணறினான் இளங்காளை அவன்.

"இங்க இருந்தா சரியில்ல. வெக்கமே இல்லாம பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பாக்குற மாதிரி பாக்குறோம். நம்ம பார்வையைப் பார்த்து அவ நம்மள தப்பா நினைச்சுக்க போறா" என்று தன்னைத்தானே பின் மண்டையில் தட்டிக் கொண்டவன்..
பேச்சை மாற்ற எண்ணி கண்களை மீண்டும் மூடி ஆழ மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

"அவள் முகத்தைப் பார்ப்பதால்தான் நாம் தேனில் விழுந்த வண்டு போல தத்தளிக்கிறோம்" என்பதை உணர்ந்தவன் அவள் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து...
சுற்றிலும் இருந்த செடி கொடிகளில் கண்களைப் படரவிட்டான்.

அவை பராமரிக்கப்பட்டு வரும் அழகை சிலாகித்தபடி "ஏங்க... இதெல்லாம் யார் பண்றது? ரொம்ப நல்லா இருக்கு" என்றவன் கண்கள் மீண்டும் அவள் முகத்தில் இனிப்பில் ஒட்டிக் கொண்ட ஈயாய் ஒட்டிக்கொள்ள... இம்முறை தன் அதிசிறந்த கேள்விக்கு பதில் தேடும் ஞானி போல் முகத்தை ஆராய்ச்சியோடு வைத்துக் கொண்டு அவளை ரசனை பார்வை பார்த்தான்.

கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளோ? "ஆங்.. என்னங்க?" என்றாள்.

"எங்க வீட்டுலயும் இப்படி பண்ணா நல்லா இருக்கும்" என்ற எக்ஸ்ட்ரா தகவலோடு அவன் கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்க..

"இது எங்க அண்ணனோட ஹாபீங்க. எனக்கும் மரம் செடி கொடிகள்ண்ணா ரொம்ப பிடிக்கும். அதனால எங்க அண்ணன் செய்றான்" என்று தட்டு தடுமாறி கண்களை உருட்டி மூச்சை இழுத்து பிடித்து ஒரு வழியாய் அவள் கூறி விட..

"ஓ... ரொம்ப நல்லா இருக்குங்க. உங்க அண்ணன் என்ன வேலை பாக்குறாங்க?" என்று கேட்டான் அவன்.

"அவரு ஹோட்டல்ல கேஷியரா வேலை பாக்குறாரு. நைட் மட்டும்தான் டியூட்டி. அதனால மார்னிங் டைம்ல இதெல்லாம் பண்ணுவாங்க" என்று பதிலளிக்க...

"அப்போ நைட்டு உங்களுக்கு யாரும் துணையா இருக்க மாட்டாங்களா? நீங்க தனியாதான் இருப்பீங்களா?" என்றான் அவன்.

"இல்ல... இல்ல... நைட்ல அம்மா பக்கத்துல இருப்பாங்க. அம்மா விஏஓ-வா இருக்காங்க. அதனால அவங்களால பகல்ல என் பக்கத்துல இருக்க முடியாது. சோ நைட்டு அம்மா பக்கத்துல இருப்பாங்க. பகல்ல அண்ணன் என் பக்கத்துல இருப்பான்" என்று கூறியதும்

"ஓ... சரி சரி... ரொம்ப சந்தோஷம்ங்க. நானும் கவர்மெண்ட் வேலைக்குதான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். எக்ஸாம் எழுதி பாசாகிட்டேன். இன்டர்வியூ எல்லாம் முடிஞ்சிருச்சிங்க. ரிசல்ட் வந்தாதான் தெரியும். சரிங்க... அப்ப நான் கிளம்பட்டுமா" என்று பாதி உணவைக் கீழே வைத்தபடி அவன் கேட்க...

"சாப்பிட்டு போங்க. நான் ஆம்லெட் வேணும்னா செஞ்சு தரட்டுமா?" என்று கேட்டாள் அவள்.

"இல்லங்க வேணாம். உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? டைம் ஆனதுனால எனக்கு பசி இல்ல. சாப்பாடு போதும்" என்று அவன் கூற... சரிங்க அங்கேயே வைங்க அங்க டேப் இருக்கு கை கழுவிக்கோங்க" என்று அவள் கூற.. அவனும் எழுந்து சென்று கையைக் கழுவி விட்டு அருகில் இருந்த டவலில் கையைத் துடைத்து விட்டு வந்தான்.

"ஏங்க உங்க வீடு யூனிக்கா இருக்குங்க" என்று வீட்டின் அமைப்பையும் சிலாகிக்கத் தவறவில்லை அவன்.

"இது எல்லாமே எங்க அண்ணனோட ஏற்பாடுதாங்க. அவன்தான் எனக்காக ஒவ்வொண்ணையும் பாத்து பாத்து பண்ணுனான்" என்று அவள் பெருமையாய் கூற.. முகமே தெரியாத அண்ணனின் மீது சிறிது பொறாமை எட்டிப் பார்த்தது அவனுக்கு.

எனினும் அதை பின் தள்ளியவன் "சரிங்க... அப்ப நான் கிளம்பட்டுமா?" என்றான்.

"சரிங்க.." என்று அவள் வாய் கூறினாலும் கண்களோ? "போகணுமா?" என்று கேட்டது.

அவனது வாயும் "போகிறேன்" என்று கூறினாலும் போக விருப்பம் இன்றி கண்கள் நர்த்தனம் ஆடத்தான் செய்தது.

"ஏங்க.. ஒரு வார்த்தைக்குக் கூட தனியா இருக்கேன். எங்க அண்ணன் வர்றது வரைக்கும் துணையா இருங்கன்னு சொல்ல மாட்டீங்களா?" என்றான் அவன். குற்ற பத்திரிக்கை வாசிக்கும் தொனி அவன் குரலில்.

"இல்லங்க. ஆல்ரெடி உங்களுக்கு பசிக்குதுன்னு சொன்னீங்க. ஆனா சரியா சாப்பிடல. உங்களுக்குக் கூட்டு குழம்பு எல்லாம் புடிக்கலையா இருக்கும்னு தோணுச்சி. அதான்... உங்க வீட்ல போய் சாப்பிடுவீங்கன்னு நினைச்சேன்" என்று அவள் விழிகளைச் சுருக்கியும் நிமிர்த்தும் என்னை தவறாக எண்ணி விடாதே என்பது போல் பதில் கூற... அங்கும் இங்கும் ஆடிய கருவிழிகளில் வேண்டி விரும்பி தொலைந்து கொண்டிருந்தான் அவன்.

"போகிறேன்... போகிறேன்..." என்றவன் சென்ற பாடுதான் இல்லை. பேச்சு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

புதிதாய் ஓர் உலகில் தாங்கள் மட்டும் சஞ்சரிப்பது போல் தோன்றியது அவர்களுக்கு.

"உங்க அண்ணன் எங்கேயாவது உங்களைத் தேடிட்டு அலைய போறாரு. கால் பண்ணி வர சொல்லுங்க" என்ற அவனது வற்புறுத்ததால் பிரதிஷ்குமாருக்கு கால் செய்தாள் பிரகதீஸ்வரி.

அவளது அலைபேசியை அண்ணன் அவன் எடுத்துச் சென்றிருக்க... லக்ஷ்மனின் போனில் இருந்து அழைத்தாள் அவள்.

"அண்ணே" என்ற பெண் அவள் குரல் கேட்ட மறுநொடி
"கண்ணுகுட்டி எங்க இருக்க?
எங்க போன?
உன்னோட வீல் சேர் எப்படி ரோட்ல விழுந்துச்சி?" என்று அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்ப
"அண்ணே... நான் வீட்டுக்கு வந்துட்டேன். நீ வீட்டுக்கு வா. நான் சொல்றேன்" என்றாள் அவள்.

"உனக்கு ஒன்னும் ஆகலியேம்மா? நல்லாதானே இருக்க?" என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் அவன்.

"நான் நல்லாதான் இருக்கேண்ணா. நீ வீட்டுக்கு வா" என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

என்ன பேசினார்கள் என்றே தெரியாமல் இவர்கள் பேச்சை வளர்த்துக் கொண்டிருக்க "கண்ணு குட்டி"என்ற அழைப்போடு அரக்கப் பறக்க ஓடி வந்தான் பிரதீஷ் குமார்.

வழியில் கிடந்த வீல்செயரோடு சேர்த்து அந்த பிச்சைக்காரரையும் தன் வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அவன்.

பைக் நிறுத்திய இடத்திலேயே பிச்சைக்காரர் வீட்டைச் சுற்றிலும் பார்த்தபடி அமர்ந்துவிட... உள்ளே வந்தவன் தங்கையைத் தொட்டு தடவி கைகால் முகம் என அனைத்தையும் பார்த்தான்.

தலையில் இருந்த கட்டை பார்த்தவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

தங்கையவளைத் தன் நெஞ்சோடு சேர்த்தபடி "நீ ஏன்டா கண்ணு குட்டி வெளியே போன? உனக்கு ஏதாவது வேணும்னா அண்ணன்கிட்ட சொல்லி இருக்கலாம்ல? இவ்வளவு நாளா என்கிட்டதானே சொல்லுவ. இன்னைக்கு என்ன புதுசா வெளியில இறங்கி போய் இருக்க?" என்று கேட்க..

"நீ தூங்கிட்டு இருந்தண்ணே. அதனாலதான் சும்மா போய் சுத்தி பாத்துட்டு வரலாம்னு போனேன்" என்று கூற... "இனிமே நீ தனியா எல்லாம் எங்கேயும் போகாத. எங்க போகணும்னாலும் அண்ணன் இருக்கேன். நான் உன்னைக் கூட்டிட்டு போவேன்" என்று அவன் வார்த்தைக்கு வார்த்தை "அவள் வெளியே தனியே செல்லக்கூடாது" என்பதையே எடுத்துக் கூற...

"அண்ணே.. இன்னைக்குதான் தைரியம் வந்து நானா முதல் முறை வெளிய போனேன். பாத்தா அங்கேயும் கீழ விழுந்துட்டேன். என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல. இவர்தான் என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் காப்பாத்துனாரு " என்று எதிரில் இருந்தவனைக் கைக்காண்பிக்க அப்பொழுதுதான் தங்களுக்கு எதிரே ஒருவன் அமர்ந்து தங்களை அதிசயமாய் பார்த்துக் கொண்டிதிருப்பதையே பார்த்தான் பிரதீஷ் குமார்.

ஆனால் அந்த சில நிமிடங்களிலேயே அண்ணன் அவன் தங்கையின் மீது வைத்துள்ள பேரன்பைப் புரிந்து கொண்டான் லக்ஷ்மன்.

அதை பார்க்கையில் ஏனோ மனது லேசாய் வலித்தது.

தனக்கு "இப்படி ஒரு சகோதர உறவு கிடைக்கவில்லையே?!" என்று மனசு ஏங்கவே செய்தது.

பிரதீஷ்குமார் அவன் அருகில் வந்து "ரொம்ப தேங்க்ஸ்ங்க. நீங்க செஞ்ச உதவிய நான் என்னைக்குமே மறக்க மாட்டேன். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க. என் தங்கச்சிதான் எங்களுக்கு உயிரே. அவளுக்காகதான் நாங்க வாழ்கிறோம்" என்று கூற.. சிரித்தான் அவன்.

"சரிங்க.. உங்களப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். அப்ப நான் கிளம்புறேன். வந்து கொஞ்சம் டைம் ஆயிருச்சு" என்று கூற..

"என்னங்க வந்ததும் போறீங்க. சாப்பிட்டு போங்க" என்று கூற... "நான் சாப்பிட்டேங்க" என்றான் அவன்.

"இல்லண்ணே... அவரு ஒழுங்கா சாப்பிடவே இல்லை" என்றாள் அவள் முந்திக்கொண்டு.

இமைகளை உயர்த்தி கண் சாடையில் "எப்படி போட்டு கொடுத்தேன் பாத்தீங்களா?" என்பது போல் கேட்க சிரித்தான் அவன்.


"ஜஸ்ட்.. ஃபீவ் மினிட்ஸ். உட்காருங்க. இதோ வந்துடுறேன்" என்ற குமார் உள்ளே செல்ல..
கண்களாலேயே "என்ன செய்யப் போறாரு?" என்பது போல் அவளிடம் கேட்டான் அவன்.

"டீ போட போயிருக்கார்" என்று அவளும் சைகையால் கூற.. "சரி" என்று தலையாட்டியவன்
"நான் போகட்டுமா?" என்றான் மௌன பாஷையில்.

"ஏன். மெதுவா போலாம். இருங்க இருங்க" என்றாள் அவளும் கண்களால் கெஞ்சியப்படி.

மடமளவென்று டீயைப் போட்டு எடுத்து வந்தவன் அவனுக்கும் தங்கைக்கும் கொடுத்துவிட்டு வெளியில் செல்ல ...
"வெளியில யாருண்ணா இருக்கா?" என்றாள் அவள்.

"அந்த தாத்தா நமக்கு உதவி செஞ்சிருக்காருல்லம்மா? அதான் அவர அப்படியே விட மனசில்லாம கையோட கூட்டிட்டு வந்துட்டேன். நான் வந்த அவசரத்துல உள்ள வந்துட்டேன் அவர் வெளியவே நின்னுட்டாரு போல" என்று கூற லக்ஷ்மனுக்கு புரிந்தது அவன் பிச்சைக்காரரைதான் கூறுகிறான் என்று.

வெளியில் சென்றவன் பிச்சைக்காரரை உள்ளே அழைத்து வந்து அமரக் கூற சங்கோஜமாய் விழித்தார் அவர்.

"டீயைக் குடிச்சிட்டு குளிச்சிட்டு வாங்க தாத்தா" என்று அவன் கூற.. அவர் கண்களில் இருந்து கண்ணீரை வந்துவிட்டது.

குமாரின் செயல் ஒவ்வொன்றிலும் தங்கையின் மீது இருந்த அன்பு அப்பட்டமாய் வெளிப்பட்டது.

அவன் எவ்வளவு கூறியும் அமராமல் நின்று கொண்டிருந்த பிச்சைக்காரர் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தபடி மன நிறைவோடு டீயைக் குடித்தார்.

"டீயைக் குடித்தவன் டீ ரெம்ப நல்லா இருந்துதுங்க. ரொம்ப தேங்க்ஸ். அப்ப நான் கிளம்புறேன்" என்று கூற... பிரதீஷ் குமார் அவன் முன் கையை நீட்டினான்.

அவனுடன் கைகுலுக்கி விட்டு.. பெண்ணவளிடம் கண்களால் விடைபெற்றவன் "தேங்க்ஸ் தாத்தா. பாய்" என்று விட்டு சென்றான்.

செல்லும் அவனைக் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
 
Top