வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பிழையில்லா இலக்கணம் நீயடி - கதை திரி

Status
Not open for further replies.

Priyanka Muthukumar

Administrator
பிழையில்லா இலக்கணம் நீயடி :

ei1SVFV91402.jpg

இலக்கணம் 1:

அதுவொரு குளிர்க்காலம்!!

ஊரிலுள்ள ஏனையவர்களின் உள்ளமும் சரீரமும் பனிக்காற்றால் குளிர்ந்திருக்க,இங்கோ ஒரு பெண்ணவளின் மனம் மட்டும் கோடையில் சுட்டெரிக்கும் வெப்பநிலையை போல் அனலாய் தகித்துக்கொண்டிருந்தது.

அந்த அதிகாலை வேளையில் அவளின் நெஞ்சம் எதையோ நினைத்து குமுற,ஆனால் அதற்கு எதிர்விதமாக அவளின் வதனமோ நிர்மூலமாக உணர்ச்சிகளின்றி இருந்தது.

கண்ணாடியின் முன்பு நின்று அணிந்திருந்த சேலை முந்தானையை சரிசெய்து வெளியில் செல்ல ஆயுத்தமாகிக்கொண்டிருந்த மகளை கண்ட தாயின் உள்ளம் பரிதவித்தது.

ஆனால் அவளோ என்றோ தனது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அடியோடு மண்ணில் புதைத்துவிட்டதினால் தாயின் தவிப்பை கண்டும் காணாதவளாய் புடவை மடிப்பெடுத்து பின் குத்தினாள்.

அவள் சமந்தா.இருபது வயதுடைய தோற்றத்தை கொண்டிருந்தாலும் அவள் இருபத்தி ஆறு அகவையுடைய நாகரீக யுவதி!

மணமாகி மூன்று வயது சிறுவனிற்கு அன்னை என்று நம்ப முடியாத வகையில் சதைப்பற்றில்லாத எழில் வளைவுகளையும் தோற்றத்தையும் கொண்டிருந்தாள்.

ஆயினும்,அவளின் இருதயத்திலிருந்த துயரமும் அவள் அணிந்திருந்த விலை உயர்ந்த பருத்தி சேலையும் அவளை சற்றே முதிர்ச்சியுடன் காட்டியது.

பெண்களுக்கே உரிய மிடுக்கும் தீட்சண்யப்பார்வையும் உடையவளாததால்,அவளின் அந்த நிமிர்வு மற்றவர்களை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தியது.

அந்த நிமிர்வு,அது தானாக அவளிற்கு வந்ததில்லை.

அவளது வாழ்வில் சமீபத்தில் நடந்தேறிய சில கசப்பான சம்பவங்களால் அவளிற்கு மகுடமாக கிடைத்திருந்தது.

மனிதனின் வாழ்வில் ஏற்படும் ஏற்றங்களும் இறக்கங்களுமே அவனை சிற்பமாய் செதுக்கி உயர் நிலைக்கு இட்டுச்செல்லும் என்று கூறுவார்கள்.

அதைப்போலவே சமந்தாவும் தன் மேல் பட்ட அடிகளை வெற்றிப்படிகளாக மாற்றும் வித்தை அறிந்தவளாக இன்று தனியொருத்தியாக சமுதாயத்தினர் முன்பு போராடிக்கொண்டிருக்கிறாள்.

ஆனால் மற்றவரின் முன்பு போலியான முகமூடியை அணிந்து வேடமிட்டாலும்,அவளிற்குள் புதைந்திருக்கும் மனசாட்சியை ஏமாற்றிட முடியுமா?

ஆகையால்,சமந்தாவின் கரங்கள் தன் போல் ஒப்பனை செய்துக்கொண்டிருந்தாலும்,அவளின் ஒவ்வொரு அணுவிலும் உள்ள வலியை இதயம் மட்டுமே ரகசியமாய் அறிந்திருந்தன.

ஊசியாய் குத்தி குத்தி ரணமாக்கும் அந்தவொரு சம்பவத்தின் நினைவுகள் அவள் கண்முன் நிழலாடியது.

‘அந்த நாள் என் வாழ்வில் ஏன் வந்தது?’ என நினைத்து வருந்தும் அதேவேளையில் ‘அந்த நிகழ்வு மட்டும் ஏற்படவில்லை என்றால் ஒரு பச்சோந்தியின் உண்மை சுயரூபம் அறியாமலே நீ வாழ்ந்துக்கொண்டிருப்பாய்?’ என மனசாட்சி இடித்துரைக்க,சட்டென்று அவளின் முகம் பாறையை போல் கடினமாக இறுகியது.

‘தாய் அறியாத சூள் உண்டோ’ சாதாரணமாக இருக்கும் மகள் உள்ளுக்குள் படும்பாட்டை அறிந்த அவள் அன்னை “சமி நீ அங்க போய் தான் ஆகணுமாடி?” என தவிப்புடன் கேட்டு கைகளை பிசைந்தார்.

ஒரு கணம் கண்ணாடியின் வழியே தெரிந்த தாய் ராஜியின் முகத்தை ஏறிட்ட சமந்தா “கண்டிப்பாம்மா” என்றாள் அழுத்தம்திருத்தமாக.

இத்தோடு ஆயிரமாவது முறையாக இந்த வினாவை அவர் தொடுக்க,அவளோ அதே பிடிவாதத்தோடு தனது முடிவில் நிலையாக நின்றிருப்பதில் மனக்கிலோசமடைந்தார் ராஜி.

‘அங்கு செல்ல வேண்டாம்’ என்றவரின் கெஞ்சல்,அழுகை,அதட்டல்,கோபம் எதற்குமே அவளிடமிருந்து ‘கண்டிப்பாக நான் அங்கு செல்வேன்’ என்ற ஒற்றை வசனம் மட்டுமே பதிலாக கிடைத்தது.

அவளின் இந்த உறுதியும் இறுக்கமும் அந்த தாயின் அடிவயிற்றை கலங்க வைத்தது.

பெற்ற மனம் அல்லவா?

அதனால் உடனடியாக துவண்டுவிடாமல் கஜினி முகமது போல் மகளின் மீது கோப அஸ்திரம் செலுத்த விளைந்தார் ராஜி.

“சமி உன் அம்மா நான் சொல்லறேன்…நீ அங்க போகக்கூடாது” என ஒற்றை விரல் நீட்டி மிரட்டலாக உரைக்க,

ஆனால் அதற்கெல்லாம் அசரக்கூடிய சாதாரண பெண் அவள் இல்லையே!

அழுத்தத்தின் மொத்த விம்பமாய் மாறி நிற்கும் பாறையல்லவா அவள்!

அதனால் தாயை இதழை வளைத்து ஒரு விரக்தியான புன்னகையினூடே நோக்கியவளோ அவருக்கான பதில் கூற விளையவில்லை.

அதைக்கண்டு வெதும்பியவருக்கு இப்போது உண்மை கோபம் உருவாக “நான் தான் அங்க போக வேணாம்னு சொல்லறேன் இல்ல…அப்புறமும் அங்க போயே ஆவேன்னு ஏன்டி அடம் பிடிக்கிற?அகம்புடிச்ச கழுத” என பல்லை கடித்து சீறியவர்,

அவளின் அருகே வந்து கையிலிருந்த சீப்பை வெடுக்கென்று பிடுங்கியெறிந்து “நான் உன்னை அங்க போகவிடமாட்டேன்” என்றவரின் முகத்தில் அவளிற்கு இணையான அழுத்தம் குடியேறியிருந்தது.

அவளோ தாயின் புறமாக திரும்பி மார்ப்பிற்கு குறுக்காக கைகள் கட்டி நின்று ‘என்ன பிரச்சனைமா உனக்கு?’ என்பது போல் ஒற்றை புருவம் உயர்த்தினாள்.

அத்தோடு அவர் தூக்கியெறிந்த சீப்பை ஒரு கணம் பார்த்துவிட்டு மீண்டும் தாயின் முகத்தை கூர்ந்து நோக்கி “அம்மா…சீப்ப ஒளிச்சு வைச்சிட்டால் கல்யாணம் நடக்குதுன்னு உனக்கு யார் சொன்னது?” என நிதானமான குரலில் வினவ,அவளின் ‘கல்யாணம்’ என்ற அந்த வார்த்தை அவரின் இதயத்தை சுருக்கென்று தைத்தது.

அதில் நெஞ்சம் பதைபதைக்க அடிப்பட்ட விழிகளோடு அவளை ஏறிட்டவர் “சமிம்மா…செல்லம்…அந்த கல்யாணத்துக்கு நீ போக வேணாம்டா…ஏற்கனவே காயம்பட்டிருக்க உன் மனசை அங்கப்போய் ரணமா மாத்தணுமா?” என மகளின் கைப்பிடித்து உருக,

ஆனால் அவளோ அவரின் கைப்பிடியிலிருந்த தனது கரத்தை உருவி மௌனமாக கண்ணாடியின் புறம் திரும்பிக்கொண்டாள்.

‘என்ன சொன்னாலும் கேட்கமாட்டிக்கிறாளே?’ என கடுப்பானவர்,கண்ணாடியின் வழியாக மகளை மேலிருந்து கீழாக நோக்கி “இந்த கூத்தெல்லாம் எங்கியாவது நடக்குமாடி?கட்டின புருஷன் கல்யாணத்துக்கு யாராவது இப்படி அலங்கரிச்சிட்டு போவாங்களா?” என ஆதங்கத்துடன் சீற,

தாயின் வார்த்தை அவளை காயப்படுத்தினாலும்,வெளியே அதை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது அழகிய கயல் விழிகளை மைதீட்டி செழுமைப்படுத்திக்கொண்டிருந்தாள்.

ஆம்,அவளின் கணவனான கவினிற்கு இன்று வேறொரு பெண்ணோடு திருமணம்!!

காதலித்து முறையாக பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது திருமணம் நடைப்பெற்றிருந்தாலும்,இப்போது எதற்காக இந்த திடீர் உறவு முறிவு மற்றும் வேறொரு திருமணம் என்று சமந்தாவிற்கு இன்று வரை புரியாத ஒன்று!

அதற்கான நியாயமான விளக்கமும் அவ்விடயத்தை கிரகிக்கப்பதற்கான சந்தர்ப்பமும் அவளிற்கு அவள் கணவன் கொடுக்கவில்லை.

திடீரென்று ஒரு நாள் அவள் முன்பு வந்து நின்றவன் ‘நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம் சமி…எனக்கு உன்னை பிடிக்கலை…வேறொரு பெண்ணை தான் பிடிச்சிருக்கு’ என்றான் அதிரடியாக.

அவனது அந்த கூற்றில் அவளிற்கு உலகமே தட்டாமாலை சுற்ற மொத்தமாய் இடிந்துப்போனாள்.

இத்தனைக்கும் இருவரது வாழ்வும் மற்ற ஆதர்ஷ தம்பதியினரை போல் ஒரு மனநிறைவுடனே இருந்தது.

அப்படியென்று அவளாக கற்பனை செய்திருந்தால் போலும்!

ஏனெனில்,சமந்தா அவனுடனான தாம்பத்திய உறவிலும் சரி,காதலிலும் சரி அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரமாய் உடலும் உள்ளமும் சுணங்காமல் என்றும் அவனிடம் தன்னை ஒப்புவித்து அடிமையாய் இருந்து வந்திருக்கிறாள்.

தனக்கு பிடித்த விஷயங்களை கூட கணவனிற்காக தியாகம் செய்த தர்மபத்தினி அவள்!

சில மாதங்கள் முன்பு வரை நேசத்தை வாரிவழங்கிக்கொண்டிருந்த பாரி வள்ளல் தான் அவனும்!!

ஆனால் அந்த தெகிட்டாத காதலும் அன்புமே இப்போது அவளிற்கு வினையமாக மாறியிருந்தது.

நேர்க்கோட்டில் செலுத்திக்கொண்டிருந்த இந்த தம்பதியினரின் வாகனத்தை சரக்குந்து மோதி விபத்துக்குள்ளாக்கியது போல் இவர்களது அழகான வாழ்வு சிதைந்துப்போயிருந்ததது.

ஒரே நாளில் அழகான கோலம் அலங்கோலமாகியிருக்க,

‘ஏன்?எதற்கு?’ என்று சுதாரித்து எதிர்கேள்வி கேட்பதற்கு கூட யாவருக்கும் அவகாசம் கொடுக்காமல் அதற்கு முன்பே திருமண விலக்கு பெற்றிருந்தான் கவின்.

ஆம்,மனமொடிந்து போயிருந்தவளின் சூழ்நிலையைப் பயன்படுத்தி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்தை நயமாக வாங்கியிருந்தான் வஞ்சகன்.
 
‘என்ன நடக்கிறது?’ என்று அவள் முழுமையாக தன்னிலை உணர்ந்து சிக்கியிருந்த வலையிலிருந்து வெளிவருவதற்குள் இதோ இன்று வேறொரு பெண்ணோடு அவனிற்கு திருமணம் என்ற நிலை வந்திருந்தது.

அடிப்படை மனிதனுக்குரிய மனசாட்சி கூட இல்லாதவனாய் ஒரு வாரம் முன்பு வந்து “எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்…எக்காரணத்தை கொண்டும் நீ அந்த கல்யாணத்துக்கு வந்திடாத சமி” என எச்சரிக்கை போல் அவளிடம் உரைத்துவிட்டு சென்றிருந்தான் அவன்.

அதுவரை தன்னுடைய இழிநிலையை எண்ணி ஒடுங்கியிருந்த பெண்ணவள் முதன்முறையாய் வீறுக்கொண்டு கொதித்தெழுந்தாள்.

‘இவனையா உருகி உருகி காதலித்தேன்…இவனிற்காகவா தனது பரிசுத்தமான பெண்மையை இழந்தேன்…இவனை நம்பியா காலம் முழுவதும் இவன் காலடியில் விழுந்துகிடக்க நினைத்தேன்…இந்த துரோகிக்காகவா காதலுக்கு சாட்சியாக பிள்ளை பெற்றுக்கொண்டேன்’ என்றெல்லாம் எண்ணும் போதே அவளிற்கு அருவருப்பான ஒரு உணர்வு தோன்றியது.

கோபம்,அழுகை,துரோகம்,ஏமாற்றம்,வலி பல கலவையான உணர்வுகள் அவளை ஆக்கிரமித்தாலும் ‘இத்தனை வருட வாழ்க்கையை பொய்யாக்கி அவளது நேசத்தை மண்ணுக்குள் புதைத்த மகாப்பாதகனுக்காக தான் எதற்காக குறுக வேண்டும்?’ என அவளுள் சிறுப்பொறி ஒன்று கிளர்ந்து விஸ்வரூபமடைந்து வேள்வியானது.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்” என மகாகவி பாரதியின் கொள்கையை பின்பற்றும் புதுமை பெண்ணாகியவளும் அவரது கூற்றை நெஞ்சிலிருத்தி எரிதழலாய் தலை நிமிர்ந்தாள்.

அன்றே அவனின் மீதிருந்த நேசத்தை ஒட்டுமொத்தமாய் தீயிலிட்டு பொசுக்கியவளாய் அவனது திருமணத்திற்கு வராதே என எள்ளலாய் உரைத்தவனின் ஆணவத்தை வேரோடு அழித்தாக வேண்டிய வெறி அவளுள் கொளுந்துவிட்டு எரிந்தது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் அவனிற்கு அடிமையாய் இருந்தவளை அவனிற்கு பகையாளியாக்கியிருந்தது‌ அவனது துரோகம்!

‘நீ சொல்லி நான் கேட்கணுமாடா?’ என்ற வீம்பும் திமிரும் சீறி எழ,தாயின் சொல்லை மீறி அவனின் திருமணத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தாள் சமந்தா.

‘அவன் என்ன என்னை வேணாம்னு சொல்லறது எனக்கு அவன் வேண்டாம்’ என நெஞ்சில் துணிச்சலை வரவழைத்து திடமான முடிவெடுத்தாள் அந்த வீரமங்கை.

அத்தோடு ‘நீ விட்டுப்போனதால் நான் ஒண்ணும் கெட்டுப்போகவில்லை’ என அவனின் முன்பு தலைநிமிர்ந்து நின்று அவனை அவமானத்தில் கூனிகுறுக வைப்பதற்காகவே அதீத ஒப்பனையுடன் திருமணத்திற்கு தயாராகியிருந்தாள்.

முகம் இறுக கைப்பையை எடுத்து தோளில் மாட்டி புறப்பட ஆயுத்தமானவளின் முன்பு ஒற்றை கரம் நீட்டி “சமி நான் சொல்லி தான் கேட்க மாட்ட…ஆனால் உன் பையனுக்காக இந்த கல்யாணத்துக்கு போகணுமானு ஒரு முறை யோசிச்சு பாருடி” என அவளது மகனை வைத்து தனது கடைசி அஸ்திரத்தை வீசிப்பார்த்தார் ராஜி.

அவள் தூண்டில் சிக்காத மீனின் நிலைக்கு எப்போதோ மாறியிருக்க அலட்சியமாக அவரின் கரத்தை பிடித்து விலக்கிவிட்டு அவரை இகழ்ச்சியாக ஏறிட்டு “அம்மா நீ போடற எமோஷனல் டிராமாவுக்கெல்லாம் உருகற பழைய சமி நானில்லை” என்றாள் மரத்தக்குரலில்.

இறுதியில் அவளை அங்கு போக வேண்டாம் என வலியுறுத்தி தோற்ற ராஜியோ கடுப்பில் “என்னைக்கு நீ என் பேச்சை கேட்டிருக்க?அவனை கல்யாணம் செய்யவேணாம்னு சொன்னேன்…அன்னைக்கும் நீ நான் சொன்னதை கேட்கலை…இன்னைக்கும் நீ நான் சொல்லறதை கேட்கலை…என்னமோ பண்ணு போடி” என மனம் தாளாமல் அரற்றி அவரது அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாற்றினார்.

தாயின் சொற்கள் காரிகையின் இதயத்தை சுருக்கென்று தைத்தப்போதிலும்,செவியில் விழாதது போல் இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தாள் சமந்தா.

சமந்தா ஒரு புரியாத புதிர்.

அவளின் மனம் அந்த சமுத்திரத்தின் ஆழியை விட ஆழமானது.

அவள் ‘என்ன நினைக்கிறாள்?’ என்பது அவளை தவிர ஒருவரும் அறியார்.

இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால்,முன்பு தனது காதலுக்காக பிடிவாதமாய் நின்றிருந்தவள்,இப்போது அவனை பழிவாங்குவது ஒன்றே தன் இலக்கு என்பதில் பிடிவாதமாய் இருக்கிறாள்.

தனக்கு துரோகம் இழைத்தவனை சில நிமிடங்களாவது தலைக்குனிய வைத்துவிட வேண்டும் என்ற வெஞ்சினத்தோடு வீறுக்கொண்ட பெண் சிங்கமாய் ஒரு டாக்ஸி பிடித்து திருமண மண்டபம் வரை சென்றுவிட்டாள்.

ஆனால் மண்டபத்தின் வாசலில் இறங்கி நிற்கும் வரை அவளிடமிருந்த அந்த வஞ்சமும் திடமும்,அங்கிருந்த திருமண பெயர்பலகையை கண்டவுடன் உடைந்து தூள் தூளாய் நொறுங்கிப்போனது.

இதேப்போன்றதொரு பலகையில் அவனது பெயரோடு இணைந்திருந்த அவள் பெயரின் நினைவுகளும்,அதனை தொடர்ந்து வந்த அவர்களது திருமண வாழ்க்கையும் கண்முன் நிழலாடி அவளை உடைந்துப்போக வைத்தது.

சில நிமிடங்கள் அதையே வெறித்து பார்த்திருந்த சமந்தாவின் இதயத்தை துடிக்க துடிக்க வேரோடு பிடிங்கி எறிவது போன்று ரணத்தை அனுபவித்து வந்த நிலையில் “ஏய்…நீ இங்க எங்கடி?” என்ற நாராசமான குரல் கேட்டு தேகம் விறைத்தாள் அவள்.

அந்த குரலில் இருந்த எரிச்சலில் அதுவரை அவளோடு ஒட்டியிருந்த வேதனை விலகி தூர ஓடிவிட்டது.

இறுகிய முகத்தோடு ஒரு அலட்சிய பார்வையுடனே திரும்பியவளின் முன்பு நின்றிருந்த அந்த மனிதரை உறுத்து விழித்தவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவர் “என்னடி அலங்காரமெல்லாம் பலமா இருக்கு…என்ன பிரச்சனை பண்ணவே இங்க வந்திருக்கியா?” என சிடுசிடுத்தவாரே அவளருகே வந்தார் முன்னாள் கணவனின் அன்னை சுலோச்சனா.

இப்போது தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவள் “பின்ன நீங்க செய்த துரோகத்தை நினைச்சு ஒரு ஓரமா அழுதிட்டு இருப்பேன்னு நினைச்சிங்களா மிசஸ் ம..ல்..லி..கா” என தெனாவட்டாக பதில் உரைத்ததோடு மட்டுமின்றி நேற்று வரை ‘அத்தை’ என மரியாதை பன்மையுடன் அழைத்தவள் இன்று வேண்டுமென்றே அவரின் பெயரை அழுத்தி உச்சரித்தாள்.

அதில் வெகுண்டவர் “ஏய்…மரியாதையா பேசுடி” என பல்லை கடிக்க,

“ஓ…மரியாத” என இதழை பிதுக்கி ஒற்றை புருவத்தை எள்ளலாய் உயர்த்தியவள்,

கனல் கக்கும் விழிகளோடு அவரின் முகத்தருகே குனிந்து “நான் மரியாதை கொடுக்கணும்னா அதுக்கு ஒரு தகுதி வேணும்…ஆனால் அந்த தகுதி உனக்கோ உன் பிள்ளைக்கோ சுத்தமா இல்ல” என முகத்தை அருவருப்புடன் சுழித்தவாறு கூறியவள் “இதுக்கு மேல என்கிட்ட வந்து பேசிற வேல வைச்சுக்கிட்டிங்க…என்னை குடும்பமா டார்ச்சர் பண்ணறீங்கன்னு போலீஸ் கம்பளையண்ட் கொடுத்து உள்ள தள்ளிடுவேன்…ஜாக்கிரதை” என பல்லை கடித்து சீறினாள்.

அக்னி பிழம்பாய் உக்கிரத்துடன் தன்னை வேட்டையாடும் வெறியோடு நின்றிருந்த காரிகையை பார்த்து அவரின் நெஞ்சில் குளிர்ப்பரவியது.

அதனால் மிரட்சியோடு ஓரடி பின்னே வைத்தவரை ‘அது’ என்பது போல் இகழ்ச்சியாக நோக்கிவிட்டு மண்டபத்தினுள் நுழைந்தாள் சமந்தா.

போகும் அவளின் முதுகை அச்சத்தோடு பார்த்திருந்தவருக்கு ‘தனது மகனது திருமணத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ?’ என்ற பயம் இருந்ததே ஒழிய,அநியாயமாய் ஒரு பெண்ணின் வாழ்வை அழித்துவிட்ட குற்றவுணர்வு சிறிதும் ஏற்படவில்லை.

இப்போதும் ‘திருமணத்தை நிறுத்திவிடுவாளோ?’ என்ற பதைபதைப்புடன் அவசரமாக அவளின் பின்னால் ஓடினார் சுயநலத்தின் மறுவுருவான சுலோச்சனா.

அவள் மண்டபத்தினுள் நுழைந்த அடுத்த வினாடியே அவ்விடத்தில் சிறு சலசலப்பு உண்டாக தொடங்கியது.

ஆனால் அதை யாவும் செவியில் வாங்காமல் நேர்க்கொண்ட பார்வையோடு நடையில் மிடுக்குடன் ஒரு மகாராணியின் தோரணையில் நடந்து சென்று முன்னிருக்கையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தாள்.

மண்டபத்தின் பாதையில் நடந்து வரும் போதே அவளது கூரிய விழிகள் இரண்டும் மணமேடையில் அமர்ந்திருந்த கவினை பல துண்டுகளாக கூறுப்போட்டது.

அவளை அவ்விடத்தில் சற்றும் எதிர்ப்பாராத கவினோ அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.

ஆனால் சடுதியில் தலையை உலுக்கி வெளியே வந்த கவினிற்குள் சிறு மிரட்சி தோன்றினாலும்,அவளின் முகத்தை எகத்தாளமாக நோக்கினான்.

அதையும் மீறி அவளது கண்களின் தீட்சண்யம் அவனிற்குள் ஒரு பூகம்பத்தை விளைவித்தது.

கண்ணாலே ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் ஒரு சேர அவனை தாக்கிய உணர்வு எழ,சட்டென்று விழிகளை ஓமக்குண்டத்தின் மீது திருப்பியவனிற்கு நெஞ்சம் அசுரவேகத்தில் படபடத்தது.

புரோகிதர் கொடுத்த பொருளை அக்னிக்குண்டத்தில் போட்ட கவினின் கைகளிலோ பெரும் தடுமாற்றம்!

தன்னை ஊடுருவி துளைத்த விழிகளின் கணைகளினால் இயல்பாக இருக்க முடியாமல் படபடப்பு உண்டாக,நெற்றியில் வியர்வை அரும்புகள் முளைக்க தொடங்கின.

அதேநேரம் மணப்பெண் கவிதா மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு அவனருகே அமர வைக்கப்பட்டாள்.

நாணத்தில் தலைக்குனிந்து அமர்ந்திருந்த அந்த பெண்ணின் மீது இப்போது பார்வையை திருப்பிய சமந்தாவிற்கு அவளை அப்படியே தூக்கி நிறுத்தி ‘இன்னொருத்தி புருஷன் தான் உனக்கு வேணுமாடி?’ என கன்னம் கன்னமாய் அறைந்து தள்ளும் ஆவேசம் எழுந்தது.

ஆனால் கைமுஷ்டியை மடக்கி எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் மௌனமாக இருந்தவளின் அருகே ஒரு வித தவிப்புடன் சுலோச்சனா கைகளை பிசைந்தவாறு நின்றிருப்பது அவளின் ஓரக்கண்ணில் விழுந்து உள்ளுக்குள் ஒரு குரூர சந்தோஷத்தை கொடுத்தது.

அவ்வப்போது தாயும் மகனும் பார்வையை பரிமாறிக்கொண்டிருந்த வேளையில் மணப்பெண் கவிதா தலையை நிமிர்த்தி வருங்கால கணவனை குழப்பமாய் ஏறிட்டாள்.

ஏனெனில்,நேற்றெல்லாம் அவளருகே வந்து விட்டாலே மாலையின் மறைவில் சில்மிஷம் செய்து கலாட்டா செய்தவனின் இந்த அமைதி அவளிற்கு சந்தேகத்தை விளைவித்தது.

தற்போது அவன் முகம் பார்த்தவளிற்கு அதிலிருந்த பதட்டம் எதையோ உணர்த்த அவளிற்கு பகீரென்றது.

படீரென்று அவன் கண்கள் சென்ற திசைநோக்கி தலையை திருப்பியவள்,பல ஆயிரம் ஒரு சேர தாக்கிய உணர்வில் அதிர்ந்து சிலையானாள்‌.

ஆனால் அவையெல்லாம் ஒரு நொடி மட்டுமே!

சடுதியில் தன்னுணர்விற்கு மீண்ட அந்த பெண்ணோ இகழ்ச்சியாக அவளை பார்த்து ‘நீயா?’ என்பது போல் பக்கவாட்டாக அமர்ந்திருந்த கவினிடம் “கவின் அவளாம் ஒரு ஆளுன்னு நீ எதுக்கு பயப்படற?அவ என்ன சொன்னாலும் என்ன செஞ்சாலும் இந்த ஜென்மத்தில் நீ தான் என் புருஷன்…ரிலேக்ஸ்” என ஆறுதலாக கூறி அவனின் கைகளை அழுந்தப்பற்றி விடுவித்தாள்.

அதில் தன் கவனம் களைந்த கவினோ தனது வருங்கால மணவாட்டியை நோக்கி மென்மையாக புன்னகைக்க,அவளோ மென்புன்னகையுடன் ‘அமைதி’ என இமைமூடி திறந்து ஆறுதல் உரைக்க,

அதன்பிறகே ஆசுவாசமடைந்த கவினோ ‘நீ என்ன வேணா பண்ணுடி’ என்பது போல் ஆணவத்தோடு சமந்தாவை ஒரு பார்வை பார்த்தவாறே நிமிர்ந்து அமர்ந்தான்.

ஆனால் சமந்தாவோ இதழை பிதுக்கி அலட்சியமாய் தோளை குலுக்கி ‘ஆடு ராஜா ஆடு…இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம்னு பார்க்கறேன்’ என்றெண்ணி பரிகாச புன்னகை ஒன்றை சிந்திய வேளையில் புரோகிதர் “கெட்டிமேளம்…கெட்டிமேளம்” என குரல் கொடுத்தார்.

உடனே சமந்தா வெடுக்கென்று தன் இருக்கையிலிருந்து எழுவதை கண்ட மூவருக்கும் நெஞ்சில் நீர் வற்றிப்போனது.

அதேசமயம் மண்டபத்திலிருந்த மற்றவர்கள் சுவாரசியமாய் அதனை நோக்கினார்கள்.

சமந்தா அவர்களை நோக்கி ஓரடி முன் வைக்கவும்,

‘ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ?’என பதறி தனது கரத்திலிருந்து மங்கல நாணை அவசர அவசரமாக கவிதாவின் கழுத்தில் புகட்டினான் அவன்.

அவனின் செயலை வெறித்தவாறே மணமேடையில் ஏறிய சமந்தா குனிந்து அட்சதையை கையிலெடுத்து ஒரு கணம் அதனை பார்த்துவிட்டு மணமக்கள் இருவரின் மீதும் தூவி அழுத்தமான பார்வையுடன் “நல்லாயிருங்க” என்று கூறிவிட்டு விறுவிறுவென கீழே இறங்கி வந்துவிட்டாள்.

அவளின் அந்தவொரு செயல் அங்கிருந்த அனைவருக்கும் செருப்பால் அடித்தது போலிருக்க,

‘நல்லாயிருங்க’ என அவள் சாதாரணமாக உரைத்த அந்தவொரு வார்த்தையில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்!!

இறுகிய பாறையென இருந்த அவள் வதனத்திற்கு எதிராக உள்ளம் குமுற,வேகமாக மேடையிலிருந்து கீழிறங்கி வந்தவள் ஒரு நொடி தன் நடையை நிறுத்தி சுலோச்சனாவை ஆழ்ந்து நோக்கிவிட்டு உணவு கூடத்தின் புறம் நடந்தாள்.

அவளின் மனதிலிருந்த காயத்தினால் அவள் மேற்கொண்ட ஒவ்வொரு விஷயமும் மண்டபத்திலிருந்த அனைவருக்கும் ஆணவமாக தெரிய ‘இந்த திமிரால் தான் கவின் இவளை விட்டுட்டு இந்த பொண்ணை கட்டிக்கிட்டான் போல’ என அவதூறாக அவளின் மீது வீண் பழியை சுமத்தி வஞ்சித்தார்கள்.

அதையெல்லாம் கேட்டவுடன் அவளின் எதிராளிகளுக்கு குளுகுளுவென இருக்க ‘ஹப்பாடா’ என நிம்மதியாக குறுகுறுப்பு சிறிதுமின்றி மகிழ்ச்சி வானில் பறக்க தொடங்கினார்கள்.

சமந்தாவோ நேரே உணவு கூடத்திற்கு சென்று இலையில் வைத்த உணவுகள் அனைத்தையும் காலி செய்ய,அவளருகே உட்கார்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்.

மணமக்கள் உறவுகள் சமந்தாவின் செயலை இழிவுப்படுத்தியதோடு மட்டுமின்றி அவளின் அலங்காரங்களையும் அழகிய தோற்றத்தையும் தவறாக சித்தரித்து ‘பழைய புருஷனுக்கு கல்யாணம்…இங்கப்போய் மினுக்கிட்டு வந்திருக்கிறதை பாருங்களேன்…இவன் போனால் என்ன அடுத்த ஆளையாவது பிடிக்கலாம்னு நினைச்சிட்டாளாயிருக்கும்’ என அநியாய குற்றச்சாட்டை முன் வைக்கவும் தவறவில்லை அந்த நரிக்கூட்டதினர்!!

அவளது செவியில் அவையனைத்தும் விழுந்தப்போதும் சிறிதும் பொருட்படுத்தாமல் உணவருந்திவிட்டு கைகழுவ எழுந்து சென்றாள்.

‘தவறு செய்த ஒரு ஆணை கூட இந்த சமுதாயம் மன்னித்துவிடும்…ஆனால் நிமிர்வுடன் இருக்கும் ஒரு பெண்ணை இழிவுப்படுத்தி பெருமைக்கொள்ளும்’ என விரக்தியாக சமுதாயத்தின் நிலைப்பாடுகளை விமர்சித்து அந்த மண்டபத்திலிருந்து வெளியே வந்தாள்.

டாக்ஸி எண்ணிற்கு அழைத்து இவ்விடத்திற்கு வரும் படி கட்டளையிட்டு மௌனமாக சாலையில் போகும் வாகனத்தை வெறித்தப்படி நின்றிருந்தாள் அவள்.

மண்டபத்திலுள்ள எல்லோரின் முன்பும் துணிச்சலாக அகம்பாவம் கொண்ட பெண்ணாக நிமிர்வுடன் இருந்தவள் இப்போது முழுமையாய் உடைந்துப்போனாள்.

‘அவ்வளவு தான் இல்ல…இனி அவனுக்கும் எனக்கும் இடையை இருக்கும் உறவு எல்லாமே முடிஞ்சிடுச்சு’ என்று எண்ணும் போதே ஆயிரம் ஊசிகள் நெஞ்சில் குத்தியது போல் பெரும் வலி ஒன்று உருவாக கடகடவென கன்னங்களின் வழியே நீர் வழிய தொடங்கின.

அது அதிகாலை என்பதால் அந்த பேருந்து நிலையத்தில் ஆட்கள் யாவருமின்றி வெறிச்சோடி இருந்தது.

அவ்விடத்திலே வெடித்து அழ தூண்டிய உணர்வை கட்டுப்படுத்தியவளால் என்ன முயன்றும் அடைத்த தொண்டையை சரிச்செய்ய முடியவில்லை.

அடிவயிற்றிலிருந்து பெரும் துக்கம் வந்து தொண்டையை கிழித்துக்கொண்டு வெளியே வர துடித்த நிலையில் அதனை தடைச்செய்வது போல் அவளிற்கு முன்பாக ஒரு மகிழுந்து வந்து நின்றது.

இதழ்கடித்து தனது அழுகையை அடக்க போராடியவள் அந்த வாகனத்தின் சத்தத்தில் சட்டென்று தனது துக்கம் மறைத்து அதனுள் ஏறி அமர்ந்தாள்.

வாகன ஓட்டியின் முகத்தை கூட ஏறிடாமல் தனது கைப்பையை மடியில் வைத்து வெளியே வெறித்திருந்தவளின் கண்ணீர் மட்டும் மடைத்திறந்த வெள்ளமென வழிந்துக்கொண்டே இருந்தது.

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இருபத்தி ஏழு வயது ஆண்மகனோ கண்ணாடியின் வழியாக முகம் சிவக்க அவள் அழும் காட்சியை பார்த்தப்போதும் எதுவும் கூறாமல் விறைப்புடனே வண்டியை செலுத்தினான்.

இன்று கவின் சமந்தாவின் காதல் சமாதியானாலும்,வேறொரு புத்தம் புதிய காதல் அத்தியாயம் விதியால் தொடங்கிப்பட்டிருந்தது.


‘Unconditional Love After Divorce’

https://pmtamilnovels.com/index.php?threads/பிழையில்லா-இலக்கணம்-நீயடி-கருத்து-திரி.290/
 
இலக்கணம் 2:

‘உயிரில்லா சரீரம் சதிராட..
பெதும்பைவளின் காதல் துரோகியால் நிந்திக்கப்பட..
மீண்டுமொரு நேயத்தின் ஜனனம் உருப்பெற்றது’

வெளியில் தெரியும் அந்த அழகான காட்சிகள் யாவும் அவள் பார்வைக்கு பிழையாகிப்போக,உள்ளமோ சம்மட்டியால் அடித்தது போல் வலியால் துடித்துக்கொண்டிருந்தது.

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் விழிகள் அவ்வப்போது காரிகையை தொட்டு மீள்வதை அவள் சிறிதும் உணரவே இல்லை.

ஒரு கட்டத்தில் அவள் வந்து சேர வேண்டிய இடம் வந்த நொடியில் கண்ணீரை அழுந்தத் துடைத்து வண்டியிலிருந்து இறங்கினாள் சமந்தா.

மடமடவென நடந்து சென்று தன் இல்லத்தை தஞ்சமடைய துடித்த பாதங்களை கட்டுப்படுத்தி சில கணம் தயங்கினாள்.

ஏனெனில்,அவளது பயணத்திற்கான பணத்தை செலுத்தி வேண்டிய அவசியம் உணர்ந்து கண்மூடி அடிவயிற்றிலிருந்து ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு அவன் புறமாக திரும்பினாள்.

குனிந்து திறந்திருந்த சன்னல் திரையின் வழியாக பணத்தை அவனிடம் நீட்டினாள்.

அவனோ அவள் கொடுத்த பணத்தை வாங்காமல் அழுகையால் சிவந்திருந்த அவள் முகத்தையே அழுத்தமாக பார்த்திருக்கவும்,

குழம்பிய காரிகையோ ‘ஏன்?’ என்பது போல் அவனை புருவம் சுருக்க ஏறிட,

அவள் கையிலிருந்த பணத்தை ஒரு கணம் நோக்கிவிட்டு மீண்டும் அவளின் முகத்தை கூர்ந்த அந்த அநாமதேயன் “இது டாக்ஸியும் இல்ல…நான் உங்களுக்கு டிரைவருமில்லை” என நிறுத்தி நிதானமாக உரைத்தான்.

அதில் திடுக்கிட்ட சமந்தாவோ அவசரமாக விழிகளை சுழற்றி வாகனத்தை ஆராய்ந்தவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.

ஏனெனில்,அவன் கூறியது போல் ‘இது டாக்ஸி இல்லை’ என்ற விபரம் புரிய நெற்றியை நீவி தயக்கத்துடன் “சாரி…ஏதோ யோசனையில் இதில் ஏறிட்டேன்” என மன்னிப்பு வேண்டியவள்,

உடனே பெண்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வு தலைத்தூக்க முகம் கடினமுற “திஸ் இஸ் யுவர் மிஸ்டேக் ஆல்சோ மேன்…நீங்க முன்னாடியே இத சொல்லியிருக்கணும்” என்ற வாக்கியத்தை அவள் முடிப்பதற்கு முன்பே குறிக்கிட்டான் அவன்.

குறுஞ்சிரிப்புடன் அவளின் விழியோடு விழி கலந்து “இன்னைக்கு காரோட்டியா இருக்க விருப்பமில்லைனு சொன்னனே தவிர காலம் பூராவும் உங்களுக்கு மட்டுமே காரோட்டியா இருக்க விருப்பமில்லைனு நான் சொல்லலையே மேடம்” என்றான் பூடகமாக.

அவளோ அவன் கூறிய சொற்களின் அர்த்தம் உணர்ந்தும் உணராத நிலையில் “வாட்” என அதிர்ந்து விழி விரிக்கவும்,

அவனோ பின்னந்தலையை அழுந்த கோதி “நத்திங் மேம்…இப்போ நான் கிளம்பறேன்…மீண்டும் சந்திப்போம்” என கண்ணோரம் ரகசிய சிரிப்பில் சுருங்க இயம்பியவன்,

அவள் திகைத்து நின்ற இடைவெளியில் மகிழுந்தை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்துவிட்டான்.

அவன் அங்கிருந்து சென்றதற்கு பிறகு சுய நினைவிற்கு வந்த காரிகையோ அவன் சென்ற பாதையின் சுவடை வெறித்து ‘யாரிவன்’ என்ற சிந்தனையோடு கையிலிருந்த பணத்தை ஒரு முறை நோக்கி ‘சரியான லூசு’ என திட்டிக்கொண்டாலும்,

அவனது சொற்கள் அவளின் இதயத்தில் அப்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

‘இடியட்’ என பல்லைக்கடித்து வசைப்பாடிக்கொண்டே தனது இல்லத்திற்குள் நுழைந்தவளின் மனநிலை முற்றிலுமாய் மாறிப்போனது.

துயரம் இருந்த இடத்தில் அவனை பற்றிய சிந்தனைகள் கவ்விக்கொண்டது.

அந்த அந்நிய ஆடவனுமே இதனை எதிர்ப்பார்த்தே அச்செயல்களை செய்தானோ?

அவன் அவ்வாறு எண்ணி இதை செய்திருந்தால் அவனின் எண்ணங்கள் பாவையவளின் விடயத்தில் வெற்றிகரமாக ஈடேறியிருந்தது.

அவன் நினைத்தது போல் கவினை பற்றிய ஞாபகங்கள் பஞ்சாய் பறந்து ஓடியிருக்க ‘நான் அட்ரஸ் சொல்லாமலே எப்படி சரியா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான்?திடீர்னு ஏன் என்கிட்ட அப்படி பேசினான்?அவன் சிரிப்பே வித்தியாசமா இருக்கே?இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’ என அந்த புதியவனை பற்றிய ஆராய்ச்சியோடு கைப்பையை நீள்விரிக்கையில் வீசினாள்.

அதன் அருகில் தொப்பென்று அவள் அமர்ந்த அடுத்த நொடியே “மம்மி” என்ற மழலை குரல் ஒன்று துள்ளி கொண்டு வந்தது.

அந்த குரல் கேட்ட அடுத்த வினாடியே அவளின் சிந்தையெங்கும் ஆக்கிரமித்திருந்த அனைத்தும் மறைந்துப்போக தாய்மையின் பூரிப்பு கிளர்ந்தெழுந்தது.

முகம் முழுக்க பரவசம் பொங்க “லக்ஷா” என ஆதுரத்துடன் அழைத்து எழுந்து நின்றவளின் காலை வெண்பனி ஒன்று ஓடி வந்து இறுக கட்டிக்கொண்டது.

அவள் மனதளவில் உயிர்மரித்து போன போது,அவளை மீண்டும் உயிர்ப்பித்து நிமிர்வுடன் நிற்க வைத்த ஒரு மந்திர உச்சாடனம்!

கவினிற்கும் அவளிற்குமான நான்கு வருட திருமண வாழ்வில் கிடைத்த ஒரே வரம்,அவள் மகன் லக்ஷன்!

அவளின் ஒரே உயிர் மூச்சு…

அவளின் உலகம் அனைத்தும் அவன் மட்டுமே!

அதனால் ஓடி வந்து அவளது காலை கட்டிக்கொண்ட மகனை அள்ளி வாரியணைத்து முத்தமிட்டவளின் பெண்மை விம்மி தணிய “என்ன கண்ணா எழுந்திட்டிங்களா?” என இடுப்பில் சுமந்தவாறு கேட்க,

அவனோ அவளின் தோளில் தலை சாய்த்து தூக்க கலக்கத்திலே “மம்மி எனக்கு ஒரே தூக்கமா வருது” என சோர்வுடன் கொட்டாவி விட்டப்படியே கூற,

அவன் கன்னத்தைப் பிடித்து “என் லக்ஷ் குட்டிக்கு இன்னும் தூக்கம் தெளியலையா?யாரு அவங்களை எழுப்பினது?” என கொஞ்சலாய் வினவினாள்.

வெடுக்கென்று தாயின் தோளிலிருந்து தலையை தூக்கி கண்ணில் மிரட்சியுடன் “ஆரும் என்ன வேக் பண்ணல மம்மி…நான் திதிர்னு கண்முச்சு பாத்தனா நீங்க காணோம்…சுத்தி பாத்தா இதுத்து(இருட்டு)…பாத்தியும் காணோம்…கண்ணாவுக்கு பயந்து வந்திடுச்சு” அழுக்குரலில் இதழை பிதுக்கி உடைந்த மொழியில் பேசிய மகனின் பாவனையில் உருகியவள்,

“அச்சோ என் செல்ல கண்ணா” என அவனின் தலையை தன் மார்ப்போடு கட்டியணைத்து சிறாரின் அச்சத்தை துரத்த முனைந்தாள் அந்த இளம் தாய்.

அவனும் தாயின் கழுத்தை கட்டிக்கொண்டு அவளின் நெஞ்சில் மேலும் புதைய,தன்னை காணாமல் மகன் ஐயம் கொண்டிருப்பதை அறிந்து ‘இந்த அம்மா எங்க போனாங்க?’ என இமைகள் இடுங்க யோசிக்கும் போதே,

அவர் கழிவறையிலிருந்து வெளிவருவதை வைத்தே,விபரம் அறிந்தாள் அவள்.

வெளியே வந்தவரோ மகளை நன்றாக முறைத்தார்.

தன்னுடைய பேச்சை மீறி அவள் அங்கு சென்று வந்ததினால் உண்டான கோபம் அது!

அதனால் அவளை உறுத்துவிழித்தவாறே பேரனை நெருங்கியவர் “லச்சு குட்டி அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்களா?வாங்க பாட்டி பூஸ்ட் ஆத்தி தரேன்” என செல்லமாய் கொஞ்சியவாறே அவனை தூங்க முற்பட,

அவனோ உள்ளுக்குள் ஒட்டியிருந்த அச்சத்தின் மிச்சத்தால் உடல் நடுங்க “நோ…நோ மம்மி வேணும்” என சிணுங்கி தாயின் கழுத்தை இறுக்கி கட்டிக்கொள்ள,

மகனின் நிலையை உணர்ந்த சமந்தா அவனின் தலையை வருடி “அம்மா அவன் கொஞ்சம் பயந்திருக்கான்…அதனால் அவன் என்கிட்டயே இருக்கட்டும்…நீ போய் பூஸ்ட் எடுத்திட்டு வா” என்று பணித்தாள்.

அவளை இமைகள் இடுங்க முறைத்தவாறே “இதோ பாட்டி வந்திடறேன் கண்ணா” என சமையலறை நோக்கி செல்லும் தாயை பார்த்து ‘குழந்தையை கூட சமாளிச்சிடலாம் போல…என்னை பெத்தவள சமாளிக்க முடியலடா சாமி’ என இருபுறமும் தலையசைத்து பெருமூச்சு விட்டவாறே மகனோடு குளியலறைக்குள் நுழைந்தாள்.

மகனின் காலை கடன்களை முடிக்க உதவிக்கரம் நீட்டி அவனை முழுமையாய் சுத்தம் செய்து அழைத்து வந்தவள்,உணவு மேசையின் மீது அமர வைத்தாள்.

அவனிற்கு எதிராக உள்ள இருக்கையில் தானும் அமர்ந்து “கண்ணா!நீங்க இப்போ பிக் பாய் ஆகிட்டிங்க…சோ எதுக்கெடுத்தாலும் பயப்படக்கூடாது…சோட்டா பீம் மாதிரி தைரியமா இருக்கணும்னு மம்மி உங்ககிட்ட சொல்லிக்கொடுத்திருக்கனே…தென் நீங்க ஏன் பயப்பட்டீங்க?” என ஒரு தாயாக மிகப்பொறுமையாக அவனிற்கு புரியும் விதமாக எடுத்துரைத்தவள்,

அவனின் கன்னத்தை கிள்ளி “சூப்பர் ஹீரோ நீங்களே இவ்வளவு பயந்தா மம்மியையும் பாட்டியையும் யார் மான்ஸ்டர்கிட்டயிருந்து காப்பாத்துவா?” என கண்கள் சுருக்கி நயமாக பேசினாள்.

சில நொடிகள் கன்னத்தில் கைவைத்து யோசித்த மகனின் அழகில் கவரப்பட்டாலும் மௌனமாய் அவன் சிந்திக்க நேரம் கொடுத்த வேளையில் “எஸ் மம்மி…யூ ஆர் ரைத்…சுப்பர் ஹீரோலாம் பயப்பத மாட்டாங்க…கண்ணா ஒரு சுப்பர் ஹீரோ…நான் பயப்பத மாத்தேன்…லச்சன் இஸ் பிக் பாய்” என கைகளை உயர்த்தி கண்களை விரித்து தலையை ஆட்டி பேசிய லக்ஷனின் கன்னத்தில் முத்தமிட்டு “ஐ நோ… கண்ணா இஸ் வெர்ரி வெர்ரி பிரேவ்” என அவனின் புஜங்களை மடக்கி காட்டினாள்.

அவனோ குதூகலத்துடன் “மம்மி கண்ணா வெர்ரி வெர்ரி பேவா?” என விழி விரிக்க,

அவள் மென்புன்னகையுடன் “ஆம்” என்பது போல் ஆமோதிப்பாக தலையசைக்க,

“ஐய் கண்ணா இஸ் பேவ்…பேவ்” என அமர்ந்த நிலையிலே அவன் துள்ளிக்குதிக்க,

எங்கு அவன் கீழே விழுந்துவிடுவானோ என அஞ்சி “லக்ஷ் கண்ணா பார்த்து பார்த்து” என பதறிப்போய் அவனை தன்னோடு இறுக்க,அவனும் மகிழ்ச்சியில் அவளை கட்டியணைத்து தாயின் கன்னத்தில் முத்தமழை பொழிந்தான்.

இவ்வாறு அன்னையும் தனயனுமாக கொஞ்சுக்கொண்டிருப்பதை கனத்த மனதுடன் பார்த்துக்கொண்டே குவளையுடன் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார் ராஜீ.

தங்கள் உலகத்தில் பயணித்திருந்தவர்களை திசைத்திருப்பும் விதமாக விறைப்புடன் “சமி இந்தா பூஸ்ட்” என உரக்க குரல்கொடுத்து குவளையை நீட்டினார்.

உடனே தாயை ஒரு கணம் ஏறிட்ட சமந்தாவின் விழிகள் அவரின் முகத்திலிருந்த வருத்தத்தை சரியாக படம்பிடித்தது‌.

ஆயினும்,எதுவும் கூறாமல் மகனை நோக்கி திரும்பி நாக்கு சொட்டி “ஐய் நம்ப கண்ணாவுக்கு பூஸ்ட் வந்தாச்சு” என உற்சாகத்துடன் மொழிந்து குவளையை வாங்கி மகனின் வயிற்றை நிரப்ப ஆரம்பித்தாள்.

அவனும் பசியோடு இருந்ததால் ஒரு சொட்டு மீதமின்றி நாக்கு சொட்டி அனைத்தையும் குடித்து முடித்து குட்டி ஏப்பம் விட்டான்.

அதைக்கேட்டு அன்னையும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து வாய்விட்டு சிரிக்க,அதை பார்த்த சின்னவனும் எதற்கு சிரிக்கிறார்கள் என்று தெரியாமலே வெள்ளை உள்ளத்தோடு பற்கள் பளீரிட சிரித்தான்‌.

அவனது புன்னகையில் இருந்த வசீகரத்தில் மனம் கொள்ளைப்போக “என் செல்லக்குட்டி” என தனது பேரனின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார் ராஜீ.

சமந்தாவும் இதழ்கள் விரிந்து நன்றாக முறுவலித்தாள்.

முன்பிருந்த அந்த மனநிலைக்கு முற்றிலும் எதிர்விதமாக சின்னஞ்சிறிய பட்டாம்பூச்சியால் அவர்களின் கனத்த மனம் இலேசானது.

அன்றைய நாள் குட்டிப்பையனின் கலாட்டாவோடு கலகலப்பாக கடந்து செல்ல,அவர்களின் துக்கமும் இருந்த இடம் தெரியாமல் மாயமாகியிருந்தது.

தாய் மகளிற்கு இடையே இருந்த மனத்தாங்கலும் விடைப்பெற்றிருந்தன.

ஆனால் இதமான சூழ்நிலை அனைத்தும் உறங்கும் வேளையில் லக்ஷன் அன்னையின் கன்னம் பற்றி “மம்மி தாடி எப்போ வருவாரு?” என்று கேட்கும் வரையிலும் மட்டுமே நிலைத்திருந்தது.

அவ்வளவு தான் அத்தனை நேரமாக அவளுள் குடிக்கொண்டிருந்த இன்பம் முற்றிலும் தொலைந்துப்போக,ஒரு இனம் புரியாத வலியும் இறுக்கமும் ஆட்கொள்ள தொடங்கியது.

கவின் அவர்கள் இருவரையும் ‘வேண்டாம்’ என்று வெறுத்து ஒதுக்கி சென்றதை இந்நிமிடம் வரை மகனிடம் கூறவில்லை.

நிதர்சனம் புரிந்தாலும் அவனிடம் சொல்லும் துணிச்சல் அவளிற்கில்லை.

‘தகப்பன் ஒரு துரோகி’ என்று தெரிந்தால் இந்த சின்னஞ்சிறிய இதயம் என்ன பாடுப்படுமோ என அஞ்சியே இவ்விடயத்தை மறைத்திருந்தாள்.

ஆனால் ஒவ்வொரு நாளும் கண்ணில் ஏக்கத்துடன் “மம்மி தாடி எப்போ வதுவாரு?” என்ற மகனின் கேள்விக்கு நேரடியாக பதில் கூற இயலாமல் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் மரித்துக்கொண்டிருப்பதை அவள் மட்டுமே அறிவாள்.

உயிரோடு இருக்கும் போதே கத்தியால் இதயத்தை குத்துவது போன்ற ஒரு வலி எழ,அடைத்த தொண்டையிலிருந்து ஒரு சொல் மேல் எழாமல் அவளிற்கு எதிராக தாய்மை சதிச்செய்தது.

உயிரணு கொண்டு உருவாகுவதற்கு மட்டும் காரணமாக இருந்தவனிற்குள் வேண்டுமானால் பிள்ளையின் மீது அக்கறை இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் தன் உதிரத்தையே மொத்தமாய் தியாகம் செய்து கூட்டுக்குள் அடைக்காத்து பெற்றெடுத்த அன்னையானவளிற்கு பிள்ளையின் நலன் மட்டுமே முதன்மை.

ஆகையால்,அவனிடம் தகப்பனின் நிஜ சுயரூபத்தை மறைந்திருக்க,தற்போது அவனின் கேள்விக்கு பதிலுரைக்க முடியாமல் நெஞ்சம் அடைக்க மௌனமாய் இருந்தாள்.

அதற்குள் லக்ஷன் அழுக்குரலில் “மம்மி பிளீச்…தாடிய நா பாத்து லாங் தேஸ் ஆச்சு…அவ(ர்) எப்போ குட்டி கண்ணாவ பாக்க வதுவாரு…கண்ணாக்கு அவத பக்கணும்…தாடி கூத ப்ளே பண்ணனும்…ஐ மிஸ் தாடி மம்மி” என இதழை பிதுக்கி பாவமாக கூறிய மகனை பார்த்தவளிற்கு கண்கள் கரித்தது.

‘ஐய்யோ என் கண்ணே!’ என அவனை வாரியணைத்து கதறியழ அவள் சரீரத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் துடிக்க,முகத்தை வேறுப்புறம் திருப்பிக்கொண்டாள்.

ராஜிக்கோ பேரனின் பேச்சை கேட்க கேட்க நெஞ்சம் வெடித்து சிதற வைக்க தன்னையும் மீறி ஒரு விம்மலை உற்பத்தி செய்தது.

அந்த சப்தம் கேட்டு தன்னை சுதாரித்த சமந்தாவோ திரும்பி தாயை கண்டிக்கும் பார்வை பார்க்க,அவரோ மகளின் எச்சரிக்கையால் பேரனின் முன்பு அழவேண்டாம் என்று முடிவெடுத்து புடவை முந்தானையால் வாயை பொத்தியவாறு அறையிலிருந்து வெளியேறினார்.

அதன்பிறகு இப்பொழுதோ அப்பொழுதோ வந்துவிடுவேன் என்பது போல் முகம் சிவக்க இதழ் பிதுக்கி அழுகைக்கு தயாராக இருந்த மகனின் புறம் திரும்பியவளிற்கு உள்ளம் ரணமாகியது.

தொண்டைக்குள் சிக்கிய முள் போல் வார்த்தை வெளி வராமல் அவளிற்கு எதிராய் சூழ்ச்சி புரிந்தாலும்,அதனை மகனின் மீதான அவளின் பாசம் வென்றது.

அதனால் ஒரு வழியாய் தன்னை சமாளித்து “கண்ணா நீங்க பிக் பாய் அழக்கூடாது…பயக்கூடாதுன்னு மார்னிங் தான மம்மி சொன்னேன்…மறுபடியும் இப்படி அழுதீங்கன்னா ஸ்கூல்ல எல்லாரும் உங்களை பேட் பாய் சொல்லிருவாங்க…கண்ணா குட் பாயா?பேட் பாயா?” என தலைசரித்து வினவி அவனின் கண்களில் வழிந்த நீரை துடைக்க,

அவளின் பேச்சு அந்த குழந்தையிடம் சரியாக வேலை செய்ய அழுகையை நிறுத்தி பரபரப்புடன் “நோ…நோ…கண்ணா குத் பாய் மம்மி” என கத்தி கூச்சலிட,

அதில் மென்மையாய் புன்னகைத்து “ஐ நோ கண்ணா இஸ் குட் பாய்” என கன்னம் தட்ட,குழந்தையும் வாய்விட்டு சிரித்தது‌.

உடனே அதன் முகம் தந்தையை நினைத்து மாறுவதை பார்த்து விஷயத்தை யூகித்த சமந்தா மனதை கல்லாக்கி கொண்டு “கண்ணா… டாடியோட அம்மா…சுலோ பாட்டிக்கு ரொம்ப உடம்பு சரியில்லையாம்…அன்னைக்கு கண்ணாவை ஒரு மான்ஸ்டர் பிடிச்சு காய்ச்சல் வந்திச்சு இல்லை..‌அது மாதிரி சுலோ பாட்டியையும் ஒரு மான்ஸ்டர் பிடிச்சிடுச்சு…அப்போ உன்னைய பாத்துக்க மம்மி,ராஜீ பாட்டியெல்லாம் இருந்தோமில்லை…ஆனா சுலோ பாட்டிய பாத்துக்க யாருமில்லை…அதனால் தான் டாடி பாட்டி கூடவே இருந்து அந்த மான்ஸ்டரை விரட்ட ஃபைட் பண்ணிட்டு இருக்காரு…டாடி இங்க வந்திட்டா அந்த மான்ஸ்டர் பாட்டிய தூக்கிட்டு போயிடும்” என கவினை விட்டுக்கொடுக்காமல் வாயிற்கு வந்தது போல் ஒரு கதை புனைந்து கூற,

குழந்தையோ வாயில் கைவைத்து “அச்சோ மம்மி…ஸ்லோ பாட்டி வெரி பித்தியில்ல(பிட்டி)” என அந்த பாதகர்களுக்காக வருத்தம் கொள்ளும் மகனை செயலில் இவளிற்கு ஆத்திரமாக வந்தது.

‘ச்சை…இந்த பிஞ்சு மனசை கஷ்டப்படுத்தி தூக்கியெறிந்திட்டு போக எப்படி அவங்களுக்கு மனசு வந்தது?’ என வெஞ்சினத்துடன் அவர்களை கெட்ட வார்த்தைகளால் மனதிற்குள்ளே அர்ச்சித்தவளை கலைக்கும் விதமாக,

“தாடி மான்ஸ்தர்கிட்ட ஃபைட் பண்ணி ஸ்லோ பாத்திய சேவ் பண்ணத்தும்…நான் மம்மி அன்த் பாத்தி டூ பேரையும் மான்ஸ்தர்கிட்டயிருந்து காப்பாத்துதேன்” என மழலை குரல் என்றாலும் மாவீரன் போல் வீர வசனம் பேசிய மகனின் வார்த்தையில் அவளின் நெஞ்சம் அப்படியே உருகிவிட்டது.

அவனின் கன்னம் பற்றி நெற்றியில் இதழ்பதித்து கண்கள் கலங்க “என் கண்ணா நீ இருக்கும் போது எனக்கு பயமேது செல்லம்” என நெக்குருகி அவனை அணைத்துக்கொண்டாள் அந்த இளம் தாய்.

தனக்கென்று ஒரு ஜீவன்…அதிலும் மகனின் வார்த்தை அவளிற்கு ஆயிரம் களிறுகளின் பலத்தை கொடுக்க மீதமுள்ள காலங்களை சமுதாயத்தை துணிந்து எதிர்க்கொள்ளும் உத்வேகம் கொண்டாள் சமந்தா.

அதற்கு பிறகு வந்த நாட்கள் யாவும் அந்த சிறிய ஜீவனின் சந்தோஷம் மட்டுமே அவளின் வாழ்க்கை என்றாகிப்போனது.

அவள் அகராதியில் அன்பு என்ற சொல்லுக்கு தாய் பாசம் மட்டுமே இலக்கணமாகியிருக்க,நேசம் என்ற பொருளை அடியோடு அழித்துவிட்டாள்.

‘காதல்’ என்ற பாகமே அவள் வாழ்வின் பக்கங்களில் இல்லை.

அதிலும் ‘காதல்’ என்ற சொல்லை யாரேனும் பயன்படுத்தினால் அவர்களையும் வெறுக்கும் நிலைக்கு மாறியிருந்தா
ள்.

மொத்தத்தில் பூவாய் இருந்தவளை புயலாய் மாற்றியிருந்தது அவளது காதல் அத்தியாயங்கள்!!

ஆனால் சருகாகியிருந்த நேசப்பூவை மீண்டும் துளிர்க்க வைக்கவும் ஒருவன் வந்தான்.

அவன்??!

 
இலக்கணம் 3:

சென்னையில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர விடுதி ஒன்றில் மது அருந்திக்கொண்டிருந்த ஒருவன் தனது தந்தையுடன் அலைப்பேசியில் உரையாடினான்.

“டாட் இன்னைக்கு நான் ஒரு பெண்ணை பார்த்தேன்…இன்ஃபேக்ட் நான் அவளை பார்க்கும் போது அவ அழுதிட்டு இருந்தா…பட் அழுகையில் கூட அவள் என் கண்ணுக்கு ஏஞ்சலா தான் தெரிந்தா…அழகுன்னா அழகு அப்படியொரு அழகு…அவ கண்ணுலயிருந்து பாதம் வரை எல்லாமே அவ்ளோ அழகு…” என அவனின் தந்தையிடம் அந்த பெயர் அறியாத மங்கையின் தோற்றத்தை வர்ணித்தவன்,

திடீரென்று கண்ணில் ஒரு தீவிரத்துடன் “எனக்கு அந்த பொண்ணு வேணும் டாட்” என்றான் அழுத்தமான குரலில்.

அந்தப்புறம் இருந்தவரோ மகன் இதுவரை எந்த பெண்ணின் மீதும் இத்தனை ஆர்வம் காட்டியிராததால் மெல்லியதாக புன்னகைத்து “யார் அந்த பொண்ணு வர்மா?” என மகனிடம் விசாரிக்க,

இவனோ இதழை பிதுக்கி “ஐ டோன்ட் நோ டாட்…ஆனால் அவளோடு வீட்டு அட்ரஸ் எனக்கு தெரியும்” என்றவாறே மது குவளையை வாயில் சரித்தவனின் கண்ணில் அவளை அடையும் வெறி தாண்டவமாடியது.

பிள்ளைகள் கேட்டது கேட்டவுடன் மறுக்காமல் கிடைக்கும் பணக்கார வர்க்கத்தை சேர்ந்த தந்தையே இவரும் என்பதால்,அவனிடமிருந்து அவளது வீட்டின் முகவரியை அறிந்த கணமே அந்த பெண்ணை பற்றிய தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தார் அந்த மாமனிதர்.

அவரின் தேடுதலுக்கான விடையாக அடுத்த சில நிமிடங்களில் சமந்தா தொடர்பான அனைத்து தகவல்களும் அவரின் மேஜையை அலங்கரித்திருந்தது.

******
இரண்டு வருடங்களுக்கு பிறகு,

“உன்னாலே முடியாதென்று…
ஊரே சொல்லும் நம்பாதே…
பொய்யாக காட்டும்…
எந்த வர்க்கத்தோடும் இணையாதே…

பிரசவத்தின் வலியைத் தாண்ட
பிறந்த அக்கினி சிறகே…ஏ..” என கண்மூடி உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்த வேளையில் திடீரென்று “ஆஆஆ” என வலியில் தலையை பிடித்து அலறினான் ஜீவா.

அவனை அவ்வாறு அடித்தது வேறுயாருமல்ல,சாட்சாத் அவனது ஒரே ஆருயிர் தோழன் சதீஷ் தான்.

அதில் கடுப்பாகி அவனை நோக்கி திரும்பியவன் “ஏன்டா என்னை அடிச்ச பரதேசி?” என எகிறியவன்,அத்தோடு நிறுத்தாமல் எட்டி அவனின் தலையில் தட்ட,

அவனோ “அம்மாஆஆ” என முனகி பாவமாக முகத்தை வைத்து ‘நானில்லைடா’ என்பது போல் தலையசைக்க,

நாக்கை கடித்து “நீ அடிக்கலைனா உங்க அப்பனா அடிச்சான் பீடை?” என்னும் போதே சதீஷ் அவனை பலமாக முறைக்கவும்,

“என்னடா முறைப்பு?நாம இருக்கிறது ஆபிஸாச்சேன்னு பார்க்கறேன்…இல்லை என் வாயிலிருந்து ப்ளு ப்ளுவா வரும்…ஒழுங்கா எதுக்கு என்னை அடிச்சன்னு சொல்லுடா எச்சக்கல…இல்லை” என பல்லை கடித்து நண்பன் கழுத்தை நெறிக்க செல்லும் போதே,

“உங்களை அடிக்க சொன்னது நான் தான் மிஸ்டர் சதீஷ்” என்ற மிடுக்கான குரல் கேட்டவனிற்கோ தேகம் தூக்கிவாரிப்போட்டது.

சற்று முன்பு தன்னை அடித்தற்கு தோழனிடம் சண்டைக்கு சென்றவன்,இப்போது ‘ஐய்யோ இவளா?’ என உள்ளுக்குள் பெரிதாக அதிர்ந்து வாய் பிளந்து நின்றான்.

சதீஷோ ‘ஓவரா பந்தா காட்டி இப்படி ஹிட்லர் முன்னாடி ப்யூஸ் போயிட்டியே மச்சி…இன்னைக்கு செத்தான்டா சேகரு’ என பரிதாபமாக இருக்கையிலிருந்து எழுந்து நின்றான்.

‘லேடி ஹிட்லர்’ என அன்போடு அவர்களால் அழைக்கப்படும் பெண்ணவளோ ஒரு கணம் சதிஷை அழுத்தமாக பார்த்துவிட்டு மீண்டும் கண் மூடி அச்சத்தில் தனக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்த ஜீவாவை நோக்கி வந்தாள் சமந்தா.

அவள் தற்போது ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் ஒன்றான ‘ஸ்வஸ்தி மாம் அன்ட் பேபி ஷாப்’ என்ற பிரபலமான நிறுவனத்தில் பணிப்புரிகிறாள்.

அதுவொரு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் தயாரிக்கும் ஒரு நிறுவனம்.

இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் அவர்களது நிறுவனத்தின் கிளைகள் பரவி விரிந்திருக்கிறது‌.

சென்னையில் உள்ள ஸ்வஸ்தியின் மைய கிளையில் விற்பனை சார்ந்த பிரிவில் முக்கிய மேலாளராக பணிப்புரிகிறாள் அவள்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அவர்களது கடைகளின் விற்பனை சார்ந்த அனைத்து விடயங்களும் இவளின் தலைமையின் கீழே நடக்கும்.

அதாவது,அந்த வருடத்தின் விற்பனை சதவீதம் குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அதற்கான் முழுப்பொறுப்பும் சமந்தாவுடையது!

மேலும்,சமந்தாவிற்கு கீழே மூன்று முக்கிய குழுக்கள் செயல்படுக்கின்றன.

அந்த மூன்று குழுக்களில் ஒன்றில் வேலை பார்ப்பவர்களே சதீஷும் ஜீவாவும்!!

இவர்களது குழுவை மட்டும் சமந்தா எப்போதும் தனது நேரடி கண்காணிப்பின் கீழ் வைத்து கவனிப்பதினால் தற்போது எதேச்சையாக இந்த பக்கம் சுற்றுப்பார்வைக்காக வரும் போதே ஜீவாவின் இசைக்கச்சேரியை கண்டு கடுப்பாகி இங்கனம் வந்திருந்தாள்.

அவளை கண்டவுடன் அந்த பகுதியில் பணிப்புரியும் வேலையாட்கள் அவசரமாக எழுந்து நிற்கவும்,அவளோ ‘உஷ்’ என வாயில் விரல் வைத்து அமைதிப்படுத்தி,அனைவரையும் அமரும்படி சைகை செய்தாள்.

அவர்கள் உட்கார்ந்தவுடன் ‘வேலை நேரத்தில் பாட்டு ஒரு கேடு’ என திட்டிக்கொண்டே ஜீவாவை முறைத்தவள்,சதீஷை வைத்து அவன் மண்டையில் ஓங்கி ஒரு அடி வைக்கும் படி சைகை செய்தாள்.

அவனோ நண்பனிற்காக தயங்க பாவையவளின் முகத்தில் சீற்றம் அதிகரிப்பதை கண்டு ‘சதீஷூ சொன்னதை செய்யுடா…இல்ல ஹிட்லர்கிட்ட பேச்சு வாங்கியே செத்திடுவ’ என அச்சத்தோடு அவளின் ஆணையை மீற முடியாமல் அதை செய்திருந்தான்.

இப்போது ஒன்று அறியாதவன் போல் அமர்ந்திருந்த ஜீவாவை நெருங்கி அவன் காதருகே விரல் சொடக்கிட்டாள்.

அதில் பதறியடித்து எழுந்தவனோ தன் முன்னே கைகள் கட்டி விறைப்புடன் நின்றிருந்தவளை பார்த்து பீதியுடன் பின்னந்தடைந்தான்.

நெருப்பில்லாமலே விழிகளாலே கனல் கக்கியவளை பார்த்து ‘என்ன பார்வைடா இது’ என மிரண்டு “ஐய்யோ நா…னில்லை மேம்…இவ..இவன்‌ தான் உ..ங்களை பத்தி மோட்டிவேஷனல் ஷாங் பாட சொன்னான்” என திக்கி திணறி உளறிக்கொட்டி நண்பனையும் இதில் மாட்டிவிட்டான்.

சதீஷோ ‘அடப்பாவி’ என திகைத்து “மேம் நானில்…” என அவன் பதில் வாக்குமூலம் கொடுப்பதற்கு முன்பே இருவரையும் ஒற்றை விரலால் சுட்டிக்காட்டி “போத் ஆஃப் யூ கெட் அவுட் ஆஃப் திஸ் பிளேஸ் ஜஸ்ட் நவ்” என சீறலான குரலில் உறுமியவளை பார்த்து அச்சமடைந்தார்கள் அவர்கள்.

அத்தோடு அவளின் சப்தம் கேட்டு திரும்பிய ஏனையவர்களை கண்களால் உறுத்து விழித்து “ஏன் உங்களுக்கும் அவங்களோடு போகணுமா?யார் யாருக்கு போகணுமோ எழுந்து வெளிய போங்க” என சப்தமிட,

அவர்களோ ‘ஹிட்லர் என்னைக்கு தான் மாறுமோ?’ என மனதிற்குள் திட்டிக்கொண்டு தங்களது வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதனை திமிராக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் இவர்களின் புறமாக திரும்பியவள் “இன்னும் நீங்க வெளிய போகலையா?” என இருவரையும் ஆழ்ந்துப்பார்க்கவும்,

அதில் பயந்து “சாரி மேம்” என அவர்கள் ஒரு சேர கூற,

அவளோ அவர்களின் முன்பு ஒற்றை விரல் நீட்டி ‘வேண்டாம்’ என்பது போல் ஆட்டி,தயவுதாட்சண்யம் சிறிதுமின்றி ‘வெளிய போங்க’ என்பது போல் வாசல் புறமாக கையை காட்டினாள்.

அவர்களோ “மேம்” என தயங்க,

அவளோ மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி இருவரையும் அழுத்தமாக நோக்கி “ஜஸ்ட் இப்போ வெளிய மட்டும் தான் போக சொல்லியிருக்கேன்…இன்னும் ஒரு நிமிஷம் எக்ஸ்ட்ரா நீங்க இங்கே நின்னாலும் உங்களை டெர்மினேட் பண்ணி அனுப்பிடுவேன்…எது வசதி?” என இரக்கமின்றி எள்ளலாய் பேசி புருவம் உயர்த்தினாள்.

இருவரும் ‘எங்கு வேலை போய்விடுமோ’ என்ற அச்சத்தில் தலையை தொங்கப்போட்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.

அவர்கள் வெளியேறுவதை மற்றவர்கள் பாவமாக பார்ப்பதை அறிந்து “கைஸ் போக்கஸ்” என கைதட்டி உரைத்து அவர்களின் கவனத்தை பணியின் மீது திசைத்திருப்பிவிட்டாள்.

அனைவரும் கணிணியின் புறமாக திரும்பியவுடன்,வெளியே செல்லும் சதீஷ் மற்றும் ஜீவாவின் முதுகை சில நொடிகள் வெறித்தவள்,பின்பு தலையை உலுக்கி தனக்கென்று உள்ள கேபினுக்குள் நுழைந்தாள்.

அவர்களுக்கு அவ்வாறு கடுமையான தண்டனை வழங்கியது ஒரு புறம் வருத்தமாக இருந்தது.

ஆனால் அவள் மேலாளராக பதவியேற்றம் பெற்ற இந்த ஒரு வருடத்தில் இவை அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால்,சமந்தா இதனை எளிதாக கடந்துவிட பழகிவிட்டாள்.

அவளது இளகிய முகத்தை பார்க்கக்கூடிய ஒரு நபர் என்றால் அவளது மகன் லக்ஷன் மட்டுமே!!

மற்றவர்களிடம் அதே பாறை முகம்!!

ஒரு முறை ஏற்பட்ட நம்பிக்கை துரோகத்தினால் அவளால் யாரையும் நம்ப முடியாத ஒரு பிடிவாதம் அவளுள் உருவாகியிருந்தது.

அதனால் அனைவரிடமும் அவள் பழகும் விதத்தில் ஒரு முரண்பாடு இருக்கும்.

இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகியான ராஜேந்திர வர்மனை கவர்ந்த ஒரு பணியாளில் ஒருவள் என்பதே அவளின் இந்த அதிரடி பணி உயர்விற்கு ஒரு காரணியாக அமைந்தது.

வெறும் ஏழே வருடங்களில் இதனை சாத்தியப்படுத்தி காட்டியது,அவளது விசுவாசமும் திறமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜேந்திர வர்மனை அவள் புறம் ஈர்த்ததும் பணியின் மீது அவளிற்கு இருந்த ஈடுப்பாடும் திறனும் மட்டுமே!

ஆனால் ஒரு பெண்,அதிலும் கணவனை பிரிந்து வாழும் இளமையான அழகான தோற்றம் கொண்ட நங்கை,மிக சில வருடங்களிலே இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தால் சமுதாயத்தினரின் பார்வை நேராக இருந்தால் ஆச்சரியமே!

ஆணாதிக்க சமூகத்தில் பெண்களை போற்றுவதை காட்டிலும் தூற்றுவதே அதிகம் என்பதால்,அவள் திறமைக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து பொறாமை கொண்ட சிலர் ராஜேந்திர வர்மனோடு ஏற்பட்ட நெருக்கமான உறவினாலே அவளிற்கு இது கிடைத்தது என்பது போல் கதைப்புனைந்து அதனை பரப்பினார்கள்.

அவளை தவறாக எண்ணாதவர்களின் சிந்தனையிலும் நஞ்சை கலந்து பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக இவள் விவாகரத்தான பெண் என்ற விபரத்தை ஒன்று இரண்டாக திரித்துக்கூறி ‘இவள் தவறான பெண்’ என்றே முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தார்கள்.

தன்னை பற்றிய இழிவான பேச்சில் அவள் இளிவடைந்தாலும்,அவளிற்குள் புதைந்திருந்த மனோப்பலம் சீறி எழ ‘யார் என்ன சொன்னால் என்ன?நீ நல்லவள் என்பது உன் மனசாட்சிக்கு தெரியும்?யாரிடமும் உன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ என தனக்கு தானே ஊக்கப்படுத்தி தேற்றிக்கொண்டாள்.

ஆண் துணையின்றி தனிமையில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் அவலங்கள் தான் இவை!

ஆனால் அதனை அப்பெண் எவ்வாறு கடந்துவருகிறாள் என்பதில் தான் அவளின் சாதனைகளும் தன்மதிப்பும் அடங்கியிருக்கிறது.

சமந்தாவோ தன்னை பற்றிய விமர்சனங்களை கண்டு ஓடி ஒளியாமல் வெகு நேர்த்தியாக அந்த பிரச்சனைகளை கையாண்டு துணிச்சல் நிறைந்த வீரமங்கையாய் வலம் வந்து கொண்டிருக்கிறாள்.

‘துணிவு’ என்னும் கவசம் அவளை சுற்றியிருக்கும் வரை எவ்வித தீங்கும் அவளை அண்டமுடியாது‌.

மற்றவருக்கு அவளின் அந்த தைரியம் திமிர்த்தனமாய் தெரிய,அவளிற்கோ அதை பற்றிய கவலை துளியுமில்லை.

இன்றும் அவர்கள் இருவரையும் வெளியே அனுப்பியதில் சிறிதும் குழப்பமடையாமல் ‘வேலை நேரத்தில் விளையாடியது அவர்கள் தவறு…அதற்கான தண்டனையை நான் கொடுத்தேன்’ என்று தன்நிலையில் உறுதியாய் இருந்தாள்.

அன்றைய நாள் வேலை நேரம் முடியும் வரையிலும் தான் வகிக்கும் பதவிக்கு பொறுப்பாய் சிறப்பாக பணியாற்றி முடித்து ஒரு திருப்தியான மனநிலையோடு வீட்டிற்கு புறப்பட ஆயுத்தமானாள்.

தன்னை அன்போடு வரவேற்க காத்திருக்கும் மகனின் நினைவில் அவளது இதழின் இறுக்கத்தை கிழித்துக்கொண்டு ஒரு புன்னகை ஒளிரிட்டது.

அதிலும்,தந்தையின் விபரம் யாரின் மூலமாக அறிந்ததினாலோ அல்லது தந்தையை பற்றிய கேள்வி தாயை ஏதோ ஒரு விதத்தில் காயப்படுத்துக்கிறது என்பது தெரிந்து வைத்திருந்ததாலோ இப்போதெல்லாம் பொறுப்புள்ள பிள்ளையாய் கவின் தொடர்பான எந்த கேள்வியையும் அவளிடம் கேட்பதில்லை.

அவளிற்கு அவனே உலகம்,அவனிற்கு அவளே உலகம் என்றாகியிருந்தது.

மகனின் புரிதலில் ஒரு தாயாய் கர்வமடைந்தவள் ‘என் செல்ல கண்ணா மம்மி இதோ கிளம்பிட்டேன்டா’ என மானசீகமாக அவனோடு பேசிக்கொண்டே கைப்பையோடு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாள்.

தலைக்கவசத்தை அணிந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டவள் வீடு வந்து சேர்வதற்குள் இரண்டு மணி நேரங்கள் கடந்திருந்தது.

சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருவதற்குள் அவளது மெல்லிய மேனி மிகுந்த களைப்புற்றிருந்தன.

‘ஹப்பாடா’ என அவள் நீள்விரிக்கையில் தொய்ந்து விழ,எப்போதும் போல் மகனின் பேச்சும் சிரிப்பும் அவளை புத்துணர்ச்சியாக்கியது.

அன்றைய நாள் இரவு அவ்வாறே கழிய அடுத்த நாள் காலை மகனோடு நேரம் செலவளித்து அவனிற்கு தேவையான உணவை ஊட்டி பள்ளி வேனில் ஏற்றி அனுப்பியவள்,தானும் உண்டுவிட்டு வேலைக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்த நேரத்தில் ராஜேந்திர வர்மனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

‘இவர் எதுக்கு கால் பண்ணறார்?ஏதாவது முக்கியமான விஷயமா?’ என்ற சிந்தனையோடே அலைப்பேசியை எடுத்து பேசினாள்.

வேலை தொடர்பாக சில விடயங்கள் பேசியவர்,அதன்பிறகே அழைப்பின் சாராம்சத்தை வெளியிட்டார்.

“சமந்தா நான் இப்போ உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…அது பெங்களூரில் இருக்கிற நம்ப ஸ்வஸ்திக்கில் சக்சஸ் ரேட் நாளுக்கு நாள் குறைஞ்சிட்டே வருது…ஏன்னு அங்கிருந்த மேனேஜர்கிட்ட கேட்டதுக்கு சரியான பதில் வரலை…அதனால் நீங்க அங்கப்போய் ஒரு பத்து நாள் தங்கி என்ன பிரச்சனைனு அலசி ஆராய்ந்து ஒரு டீடையல் ரிப்போர்ட் தயார் பண்ணி கொடுக்கணும்” தலைமைக்கே உரிய மிடுக்குடன் எவ்வித மழுப்பலும் இல்லாமல் அவர் பேசி முடித்தவுடன் இவளிடத்தில் மௌனமே ஆட்சிப் புரிந்தது.

அவளின் அமைதியில் புருவம் சுருக்கிய அந்த மனிதர் “சமந்தா ஆர் யூ தேர்?” என குழப்பமாக வினவ,

அவளோ தன்னுடைய தலைமை அதிகாரியை அவமதிக்க விரும்பாமல் “எஸ் சார்” என்றாள் தணிந்த குரலில்.

தன்னுடைய மகனை விட்டு பத்து நாட்கள் வெளியூர் செல்வதில் அவளிற்கு துளியும் விருப்பமில்லை.

அதன்பொருட்டே,இந்த மௌனம்!

மகள் பேசியதிலிருந்தே விஷயம் அறிந்த ராஜியின் முகமோ சுருங்கியது.

வயதில் மூத்தவரான ராஜேந்திர வர்மாவும் அவளது குரல் வேறுப்பாட்டை வைத்தே வித்தியாசம் உணர்ந்தவராய் “சமந்தா எல்லாம் ஓகே தானம்மா?” என,

சமந்தாவோ நீண்டதொரு பெருமூச்சை இழுத்து வெளியிட்டவள் “எஸ் சார்…ஐயம் ஓகே” என பதிலளித்தாள்.

எதையும் நேரடியாக பேசிய பழக்கப்பட்டவளின் இந்த தயக்கம் அவருக்கு விசித்திரமாய் தெரிய,சில நிமிடங்களுக்கு பிறகே விஷயத்தை யூகித்தார்.

அதில் மென்மையாய் முறுவலித்தவர் “சமந்தா நீங்க எதுக்கு தயங்கறீங்கன்னு இப்போ தான் எனக்கு புரியுது…உங்களோட கிட்டை தனியா விட்டுட்டு போறதை நினைச்சு நீங்க ஃபீல் பண்ண தேவையில்லை…உங்களுக்கு விருப்பமிருந்தால் அவங்களையும் கையோடு கூட்டிட்டு போகலாம்” என்னும் போதே,

“நோ சார்…அவனை இப்போ தான் வேற ஸ்கூலில் சேர்த்தேன்…இப்படி பிள்ளைகளை அடிக்கடி லீவு போட்டு வெளியிடத்துக்கு கூட்டிட்டு போறது அவங்களுக்கு தவறான உதாரணத்தை கொடுக்கும்…அதனால் அது வேணாம் சார்” என்றாள் தீர்க்கமான குரலில்.

அவரோ “பட் உங்களை தவிர வேற யாரையும் என்னால் நம்ப முடியாதும்மா…யூ ஆர் வெர்ரி சின்சியர் அன்ட் டெடிகேட்டெட்…நீங்கள் போனால் தான் எல்லாம் சரியா நடக்கும்னு எனக்கு தோணுது” ஒரு நிறுவனத்தின் முதலாளி என்றப்போதிலும் தன்னிடம் கட்டளையாக உரைக்காமல் பணிந்து பேசியவரின் மீது மரியாதை அதிகரித்தது‌.

அதனால் நெற்றியை நீவி “இட்ஸ் ஓகே சார்…ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட்…நீங்க இவ்வளவு தூரம் சொல்ல வேண்டிய அவசியமில்லை…லக்ஷனை அம்மா பார்த்துப்பாங்க” என்றவாறே தாயை அர்த்தமாய் நோக்கிவிட்டு,

சட்டென்று விறைப்புடன் “நான் எப்போ அங்க போகணும் சார்” என்று சுத்தி வளைக்காமல் நேரடியாக வினவினாள்.

பணியின் மீது அவளிற்கு இருக்கும் இந்த அர்ப்பணிப்பே அவளிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுக்கும் படி அவரை தூண்டியது.

கடமை தவறாத பெண்ணவளை எண்ணி பெருமிதமடைந்தார்.

ஆனால் அதனை அவளிடம் வெளிப்படுத்தாமல் “நாளைக்கே நீங்க கிளம்பணும் சமந்தா…அங்க உங்களுக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் செய்ய ஒரு பையன்கிட்ட சொல்லியிருக்கேன்…உங்களுக்கு எந்த தேவையா இருந்தாலும் அவன்கிட்ட நீங்க கேட்கலாம்…அவனை பத்தின டீடையல்ஸ் எல்லாம் என் பி.ஏ உங்களுக்கு அனுப்புவான்…கெட் ரெடிம்மா…ஆல் தி பெஸ்ட்” என அவளுக்கு தேவையான தகவல்களை எடுத்துரைத்துவிட்டு அலைப்பேசியை துண்டித்தார்.

தன் மகளின் முகத்தையே ராஜீ முறைப்புடன் பார்த்திருக்கவும்,அவளோ ‘இந்த அம்மாவுக்கு முறைக்கிறதை தவிர வேறு எதுவும் தெரியாது போல’ என கடுப்புடன் எண்ணி கைக்கடிகாரத்தை கையில் அணிந்து கொண்டிருந்தாள்.

அவளின் முன்பு வந்து நின்று இடுப்பில் கைவைத்து புசுபுசுவென மூச்சுவிட்டு முறைத்தவர் “ஏன்டி?உன் மனசுல என்ன தான்டி நினைச்சிட்டு இருக்க?” என்றார் காட்டத்துடன்.

அவளோ தாயை ஏறிட்டு “சத்தியமா உன்னைய நினைக்கலமா” என்றாள் பளீச்சென்று.

அவரோ தலையில் அடித்து “யம்மா தாயே என்னைய நீ நினைக்கலைனு இங்க யாரும் அழலை…உனக்கெல்லாம் வாய் மட்டுமில்லைனா என்னைக்கோ காக்கா தூக்கிட்டு போயிருக்கும்…எனக்குன்னு வந்து பிறந்திருக்கா பாரு பைத்தியக்காரி” என அவளை சரமாரியாக திட்ட,

அவளோ உணர்ச்சிகளற்ற முகத்துடன் தனது புடவையின் மடிப்பை ஒரு முறை நீவி சரிச்செய்து தலைக்கவசத்துடன் வெளியே செல்ல ஆயுத்தமானாள்.

அவளின் இந்த செய்கை ஏற்கனவே சினத்தில் இருந்தவருக்கு மேலும் தூபம் போட வெடுக்கென்று மகளின் கைப்பற்றி தன் புறம் திருப்பியவர் “அடியே!என்னை பாத்தா உனக்கு பைத்தியக்காரி மாதிரி தெரியுதா?” என சீற,

அவளோ தாய் பிடித்திருந்த கரத்தின் மீது ஒரு கணம் பார்வையை செலுத்திவிட்டு ராஜீயை ஏறிட்டவள் “பைத்தியக்காரி மாதிரி தெரியுதுனு நான் சொல்லலையே…நீ தான சொன்ன” என அலட்சியமாய் தோளைத் குலுக்கி அவருக்கு தக்கப்பதில் கொடுத்ததோடு புருவம் சுருக்கி “அம்மா இப்போ உனக்கு என்ன பிரச்சனை?வேலைக்கு கிளம்பியவளை பிடிச்சு வைச்சு எதுக்கு தொல்லை பண்ணிட்டு இருக்க?” என்றவளின் முகத்தில் சிறிது சிறிதாக எரிச்சல் கோடுகள் படர ஆரம்பித்தது.

அவரோ மீண்டும் ஒரு முறை தன் வசைப்படலத்தை தொடங்கி ஒரு மூச்சு அவளை தீட்டித்தீர்க்க,அவளோ பொறுமை இழந்து “அம்மா உனக்கு பேசணும்னா இதோ இந்த சுவத்த பார்த்து பேசிட்டு இரு…நான் வரேன்” என அவரின்‌ கைப்பிடியிலிருந்த கரத்தை உறுவிக்கொண்டு திரும்பி நடந்துவிட்டாள்.

அவரோ ‘ச்சை எதையோ பேசப்போய் ஏதேதோ பேசிட்டு இருக்கேன்…நான் ஒரு பைத்தியம்’ என தன்னையே நொந்துக்கொண்டு அவளருகே ஓடிவந்தவர் “ஏய் சமி…ஒரு நிமிஷம் இருடி…நான் சொன்னதை பத்தி என்ன யோசிச்சிருக்க?” என அவசரமாக வினவ,

காலணியை மாட்டிக்கொண்டு இருந்தவளின் கால்கள் ஒரு நொடி வேலைநிறுத்தம் செய்தது.

ஆனால் சடுதியில் தன்னை சமாளித்து பக்கவாட்டில் நின்றிருந்த தாயை அழுத்தமாக ஏறிட்டவள் “இந்த ஜென்மத்தில் மட்டுமில்லை…இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த சமந்தாவின் வாழ்க்கையில் காதல்,கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என இரும்பு குரலில் பதிலளித்தவள்,

முகம் இறுக “இதுக்கு மேல் இந்த வீட்டில் கல்யாணம் பத்திய பேச்சு வந்தால் நானும் என் பையனும் யாருமே தேடி வரமுடியாத இடத்துக்கு போயிடுவோம்…உனக்கு உன் மகள் வேணுமா வேணாமான்னு நீயே யோசிச்சுக்கோ” என கடுமையான எச்சரிக்கை விடுத்த மகளின் வார்த்தையிலிருந்து பொருளை உணர்ந்து ஸ்தம்பித்துப்போனார் ராஜீ.

தாயின் பேரதிர்ச்சியை விரக்தியாக நோக்கியவளிற்கு காதல்,திருமணம் என்ற பேச்சை கேட்டாலே மனம் அருவருத்தது.

அதனால் அவரை சிறிதும் பொருட்படுத்தாமல் “நான் வரேன்மா” என அதே சினக்குரலில் கூறிவிட்டு விடைப்பெற்றாள்.

போகும் மகளின் முதுகை வெறித்த பெற்றவருக்கு அவளின் எதிர்க்காலத்தை எண்ணி நெஞ்சம் அடைக்க,கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிய ஆரம்பித்தது.

பாவையளோ இந்த விடயத்தில் கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் தாயிடம் மகனை பார்த்துக்கொள்ளுமாறு உரைத்து அடுத்த நாளே பெங்களூர் செல்லும் விமானத்தில் ஏறியிருந்தாள்.

அதேநேரம் கண்ணாடியின் முன்பு நின்று தனது அடர்ந்த சி
கையை கைகளால் கலைத்து கலைத்து சீப்புக்கொண்டு நேர்த்தியாக வாரிக்கொண்டிருந்தான் அவன்!!

அவளின் அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்றும் அருமருந்து அவன் என்பதை அறியாமலே அவளை காணப்போகும் ஆவலோடு தயாராகிக்கொண்டிருந்தான்.

 
இலக்கணம் 4:

பெங்களூர் சர்வதேச விமானநிலையத்திற்கு வந்திறங்கினாள் சமந்தா.

தனது உடைமைகள் அடங்கிய பெட்டியை தள்ளிக்கொண்டு கம்பீரமான நடையுடன் விழிகளை நாற்புறமும் சுழற்றியவாறு வெளியே வந்தாள்.

அவள் வயது இளம்பெண்கள் பலரும் இறுக்கிப்பிடித்த கொசவுசட்டையும் தொடையோடு ஒட்டி உறவாடிய ஜீன்ஸூமாக வலம் வந்துக்கொண்டிருக்க,பாவையவளோ அதற்கு எதிர் விதமாக இளஞ்சிவப்பு நிற பருத்தி புடவையை நேர்த்தியாக அணிந்து விரிந்திருந்த கூந்தலை தூக்கி கொண்டையிட்டிருந்தாள்.

நெற்றியில் கண்ணிற்கு புலப்படாத வகையில் ஒட்டியிருந்த கருப்பு நிற பொட்டு,காதில் நட்சத்திர வடிவிலான சிறு தோடு,கழுத்தில் மெல்லிதான கண் வடிவிலான டாலர் வைத்த சங்கிலி,வலது கையில் கருப்பு நிற டைட்டன் கடிகாரம் இவ்வளவு தான் அவளின் அலங்காரம்.

அவளது இந்த எளிமையான தோற்றமே ஏனைய பெண்களிடமிருந்து சமந்தாவை தனித்து காட்டியது.

அத்தோடு அவளிற்கே உரிய நிமிர்வும் நேர்க்கொண்ட பார்வையும் அவளிற்கு தனி அழகையே கொடுத்திருந்தது.

சில ஆண்மகனின் பார்வை தன் மீது ஆர்வமாக விழுவதை அறிந்தப்போதிலும் காரிகையின் விழிகளோ தன்னை அழைத்து செல்லவிருக்கும் நபரை தேடியே அலைப்பாய்ந்தது.

இவள் விமான நிலையத்தில் வந்திறங்கியதை அறியாத அந்த நபரோ சாவகாசமாக அப்பொழுது தான் தனது மகிழுந்தை தரிப்பிடத்தில் நிறுத்திக்கொண்டிருந்தான்.

அவன்,விஜய்!

இருபத்தியொன்பது அகவையடைந்த ஒரு ஆண்மகன்.கோதுமை நிறத்தில் ஆறடிக்கும் குறைவான உயரம் கொண்டவன்.

காற்றில் அலைப்பாயும் அடர்ந்த சிகையும்,இரண்டு நாள் சவரம் செய்யப்படாத தாடி மீசையும் அவனிற்கு கவர்ச்சியை கொடுத்தது என்றால்,எப்போதும் அவனது இதழில் ஒட்டியிருக்கும் புன்னகையும் அவ்வப்போது பளீரிடும் முத்துப்பற்களும் இளம் பெண்களை அப்படியே வசிகரித்து மயக்கிவிடும்.

கண்ணில் தாண்டவமாடும் அந்த குறும்பில் மாய கண்ணனே தோற்கடிக்கக்கூடிய ஆணழகன்!

கருப்பு நிற சட்டை மற்றும் சந்தன நிறத்தில் கால் சட்டை,கையில் ஒரு பழைய கைகடிகாரம் இவை மட்டுமே அவனின் அலங்காரங்கள்.

எளிமையான தோற்றம் என்றாலும் அது அவனிற்கு ஒரு கம்பீரத்தையே கொடுத்தது.

வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு அலைப்பேசியில் நேரத்தை அவதானித்தவன் ‘அச்சச்சோ இந்நேரம் பிளைட் லேண்டாகியிருக்குமே…முதல் சந்திப்பே லேட்டா…விளங்கிடும்’ என தலையிலடித்து அவசரமாக வண்டியிலிருந்து அவன் இறங்கி நிற்பதற்கும் சமந்தா விமான நிலையத்தை விட்டு வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

தூரத்திலிருந்தே அவளை பார்த்துவிட்ட விஜயோ ‘போச்சு போ’ என தன்னையே நொந்துக்கொண்டு வேகமாக ஓரடி எடுத்து வைக்க,

அதேசமயம் பெண்ணவளும் அவனது அடையாளத்தை அறிந்துக்கொண்டு கோபத்தில் புருவம் சுருக்கினாள்.

முதல் நாளே அவன் தாமதமாக வந்திருப்பது அவனை பற்றி ஒரு எதிர்மறையான எண்ணத்தையே தோற்றுவிக்க முகத்தில் கடுமையேறியது.

அதனால் அவன் ஓரடி எடுத்து வைக்கும் போதே நடந்து வந்துக்கொண்டே ‘அங்கயே இரு’ என்பது போல் ஒற்றை கைநீட்டி அவனை தடுத்து நிறுத்தினாள்.

பட்டென்று அதே இடத்தில் நின்றாலும் ‘இல்ல மேடம்…நானு’ என இவனும் சைகையால் பதிலுக்கு அவளருகே வருவது போல் சமிக்கை செய்யவும்,

பாவையவளோ இமைகள் இடுங்க கோபத்தில் ‘அங்கியே இரு’ என்பது போல் பார்வையால் கனல் வீசி கட்டளையிட,

விஜய்யிற்கோ ‘என்ன கண்ணுடா சாமி…பார்வையாலே ஃபயர் வீசறாங்க’ என வியந்துப்போய் அவ்விடத்திலே மகிழுந்தின் மீது சாய்ந்து தோரணையாக நின்றுக்கொண்டான்.

அவனது அந்த யதார்த்தமான செயல் அவளிற்கு திமிராக தெரிய முகத்தில் ஓர் இறுக்கம் குடியேறியது.

அதனால் தூரத்தில் இருந்தே அவனது தோற்றம் கொண்டு அவனது குணநலனை கணக்கிட்டவாறே அவன் அருகே அவள் வந்த வேளையில் பளிச்சென்று புன்னகைத்த விஜய்யோ “ஹாய் மேடம்” என துள்ளலாய் கையசைத்தான்.

அவளோ அவனை நன்றாக முறைத்து ‘இது தான் நீ வரும் நேரமா?’ என்பது போல் அவளின் கைக்கடிகாரத்தை குறிப்பாய் பார்க்கவும்,

அவனோ அதனை பொருட்படுத்தாமல் தனது கால்சட்டையில் கையை பரபரவென்று தேய்த்து அவளின் புறமாக கையை நீட்டியவன் “ஹலோ மேடம்…ஐயம் விஜய்…நீங்க சமந்தா…ரைட்…ராஜேந்திரன் சார் உங்களை பத்தி நிறைய சொன்னார்…என்னை பத்தியும் உங்ககிட்ட நிறைய சொல்லியிருப்பார்…பை த வே நீங்க இங்க இருக்கிற வரைக்கும் உங்களுக்கு ஒரு காரோட்டியா நான் தான் இருக்கப்போறேன்” என தன்னௌ பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை படபடவென பொரிந்து தள்ளிவிட்டு “ஹும்” என்பது அவனிடம் தன் கரத்தை காட்டினான்.

அவளோ அவனையும் அவன் நீட்டிய கரத்தை மாறி மாறி பார்த்துவிட்டு “தெரியாதவங்க யாருக்கும் நான் கைக்கொடுக்கறதில்லை” என முகத்திலடித்தாற் போன்று கூற,

அவனோ ஒரு நொடி முகம் மாறியவர் சட்டென்று வலுக்கட்டாயமாக சிரித்து “இட்ஸ் ஓகே மேடம்” என கரத்தை தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.

பாவையவளோ அவனை எரிச்சலோடு ஒரு கணம் பார்த்துவிட்டு தனது பெட்டியை தூக்கி வண்டியினுள் வைக்கப்போனாள்.

“இருங்க மேடம்…நான் தூக்கி வைக்கிறேன்” என அவன் உதவ முன்வரவும்,

அவளோ சட்டென திரும்பி “நோ தேங்க்ஸ்…என் வேலையை நான் தான் செய்யணும்” என அழுத்தமாக கூறவும்,அவன் ஓரடி பின்னால் நகர்ந்துவிட்டான்.

‘யப்பா சரியான காரமிளகாயா இருக்காங்க…என்னா காரம்?என்னா உறைப்பு?’ என தலையை உலுக்கி இதழை குவித்து ‘உப்’ என பெருமூச்சை வெளியிட்டு அவளையே விழி அகலாமல் பார்த்திருந்தான்.

அவளது நடை,உடை,பாவனை அனைத்திலும் நளினத்தை மீறி வெளிப்பட்ட கம்பீரத்தில் வியந்தவனின் மனதிற்குள் ‘என்னா பொண்ணுடா சாமி’ என்ற எண்ணமே மிகுந்திருந்தது.

பெட்டியை சரியாக இருக்கையில் வைத்துவிட்டு கசங்கிய புடவையை சரிச்செய்தவாறே இவன் புறம் திரும்பியவளிடம் “நீங்க எப்பவுமே இப்படி தானா மேடம்?” என தன் மனதிலிருந்த கேள்வியை பட்டென்று கேட்டுவிட்டான்.

அவளோ ‘என்ன?’ என கோபமாக விழி விரிக்கவும்,

அவனோ பதறிப்போய் “ஐய்யோ மேடம்…நான் தப்பான எந்த அர்த்தத்திலும் சொல்லலை” என்றவன்,

சிகையை அழுந்தக்கோதி “வந்ததிலிருந்தே உங்களை பார்க்கறேன்…எட்டி நில் எச்சரிக்கிறேன் என்ற மாதிரி பார்வையால் ஃபயர் விடறீங்களே?இதெல்லாம் எப்படி மேடம் சாத்தியம்?உங்களை மாதிரி இதுவரை எந்த பெண்ணையும் நான் பார்த்ததில்லை…யூ ஆர் சம்திங் யூனிக்” என அவளை வெளிப்படையாகவே பாராட்டி புகழ்ந்து தள்ளினான்.

ஆனால் அவளோ அவனை வெளிப்படையாகவே முறைத்தாள்.

அத்தோடு அவளின் கடுஞ்சொல்லை கூட பொருட்படுத்தாமல்,முதன் முறையாக ஒருவன் அவளிடமிருந்து பயந்து விலகி ஓடாமல் வெகு சாதாரணமாக அவளிடம் அவன் பேசிய விதம் அவளிற்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.

வார்த்தையிலும் பார்க்கும் பார்வையில் எந்த வித தவறான நோக்கமும் இல்லாமல் கண்ணியமாக அவன் நடந்துக்கொள்ளும் விதம் அவனின் மீது ஒரு நல் அபிப்பிராயத்தை விதைத்தது.

ஆனால் அதனை முகத்தில் காட்டாமல் “ஷட் அப் மிஸ்டர் விஜய்…போதும் உங்க பேச்சு வண்டிய எடுங்க” என காட்டமாக மொழிய,

அதில் அவனது முகம் சுருங்கினாலும் உடனே சாதாரணமாக மாற “ஓ…சாரி மேடம் நீங்க ஃப்ரஷாகிட்டு ஆஃபிஸ் போகணும் இல்லை…நான் வேற தொண தொணனு பேசிட்டே இருக்கேன்…ஏறுங்க…ஏறுங்க” என ஒன்று நடவாதது போல் அவள் வண்டியில் ஏறியவுடன்,அவளின் மறுப்பையும் மீறி கதவை சாற்றிவிட்டு தானும் தனது இருக்கையில் அமர்ந்து வண்டியை எடுத்தான்.

அவனது ஒவ்வொரு செய்கையில் வெளிப்பட்ட ஏதோ ஒன்று அவளின் மனதில் சலனத்தை ஏற்படுத்த,தன்னையும் மீறி இரண்டு நொடிகள் அவனையே விழி அகற்றாமல் நோக்கியவள் ‘சமந்தா திஸ் இஸ் ராங்’ என உள்மனம் எச்சரித்தவுடன் தலையை உலுக்கி வெளிப்புறமாக திரும்பிக்கொண்டாள்.

அவனோ வண்டியில் ஏறிய நொடியிலிருந்து அவளிடம் பேச்சுக்கொடுத்தவாறே வர,இவளோ சிறிதும் கண்டுக்கொள்ளாமல் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் அமர்ந்திருந்தாள்.

வாயிலிருந்து வார்த்தை உதிர்க்கவே பலமுறை சிந்திக்கும் அழுத்தமான ரகம் அவள்,வாயை திறந்தால் மூடமாட்டேன் என்று கூறும் சகஜமான ரகம் அவன்!!

இருவரும் ஒரே வாகனத்தில் பயணத்தால் எவ்வாறு இருக்கும்?

விஜய் மட்டுமே பேசிக்கொண்டே வர,அவளோ அவன் பேசுவதை செவியில் உள்வாங்கியப்போதும் பதில் சொல்ல விளையவில்லை.

ஒரு கட்டத்தில் அவன் கண்ணாடியின் வழியாக அவளை ஒரு கணம் பார்த்து விட்டு ‘இவங்க செலக்ட்டிவ் ஊமை போல’ என தனக்குள்ளே அவளை கேலி செய்து சிரித்துக்கொண்டான்.

ஒரு வழியாக அவர்களது நிறுவனத்தின் விருந்தினர் மாளிகைக்கு இருவரும் வந்து சேர,இம்முறை உஷாராக அவளிற்கு முன்பே கதவை திறந்து பெட்டியை தன் கையில் எடுத்துக்கொண்டான்.

சமந்தாவோ அவனை முறைத்து “என் பெட்டிய நீங்க எதுக்கு எடுத்தீங்க?” என சீறி பெட்டியை வாங்கி முற்பட,

அவனோ பெட்டியை மற்றைய கைக்கு மாற்றி “ஏங்க மேடம்…எதுக்கு இப்போ டென்ஷன்?அதோ அங்க பாருங்க” என ஒரு இடத்தை அவன் சுட்டிக்காட்டியவுடன்,

அவள் ‘அங்க என்ன’ அலட்சியமாக திரும்பியவளோ அங்கிருந்த ராட்சத படிக்கட்டுகளை பார்த்து மலைத்துப்போனாள்.

‘ஐய்யோ இத்தனை படிக்கட்டில் எப்படி நான் பெட்டியை தூக்கிட்டு ஏறுவது?’ என எச்சில் கூட்டி விழுங்கி அச்சத்தோடு அவள் பார்க்கும் போதே “கவலைப்படாதீங்க மேடம்…யாம் இருக்க பயமேன்…இந்த விஜய் இருக்க பயமேன்” என கண் மூடி திறந்து அவளிற்கு அபயம் அளிப்பவன் கையை மடக்கி செய்கை செய்தவன் விறுவிறுவென பெட்டியுடன் படிக்கட்டில் ஏறினான்.

பார்ப்பதற்கு ஒல்லியாக இருப்பவன்,பெரிய படிக்கட்டில் ஒற்றை கையில் கனத்த பெட்டியோடு அசாதாரணமாக ஏறிய விதம் அவளை வியப்போடு புருவம் தூக்க வைத்தது.

‘பார்க்க தான் நோஞ்சான் போல இருக்கான்…போன் வெயிட்டர் இருக்கும் போல’ என சிந்தித்தவாறே படிக்கட்டில் அவன் பின்னோடு ஏறினாள்.

அதற்குள்ளே முத்து என்பவன் அவளிடம் வந்து தான் இந்த வீட்டில் காவலக்காரனாக இருப்பதாக தன்னை அவளிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள,அவரிடம் எவ்வித பதிலும் கூறாமல் “உம்” கொட்டி தலையை மட்டும் அசைத்தாள்.

சமந்தா முன்னே நடக்க அவளை தொடர்ந்து நாற்பதைந்து வயது மதிக்கத்தக்க முத்துவும் பவ்யமாக அவளின் பின்னே நடந்து வந்தார்.

விஜய்யோ அதற்குள்ளே தன்னிடமிருந்து சாவியை கொண்டு வீட்டை திறந்து “வாங்க மேடம்” என அவளை அழகான புன்னகையோடு வரவேற்றான்.

அவனது அந்த பளிர் புன்னகை அவளின் மனதை கல்விப் பிடிப்பது போலிருக்க,தடுமாற்றத்துடன் அவசரமாக விழிகளை திருப்பியவளிற்கு தன் மீதோ கோபம் வந்தது.

அந்த நேரத்தில் இல்லத்தினுள் நுழைந்திருந்த விஜய் ஆர்வமாக “மேடம் இது தான் நீங்க தங்கப்போற இடம்…சுத்திப்பாருங்க” என கைகளை விரித்து இல்லத்தை சுற்றி காட்டியவுடன்,

சில கணம் மௌனமாக அவ்விடத்தை சுற்றிப்பார்த்தவள் “இந்த இடத்துக்கு மொத்தம் எத்தனை சாவி இருக்கு” என அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத ஒரு கேள்வியை கேட்க,

அவளின் புறம் திரும்பிய விஜயோ ‘ஏன் இந்த மேடம் இடத்தை எதுவும் சேல் பண்ணப்போகுதோ?’ என நினைத்து “எதுக்கு மேடம்?” என்றான் குழப்பமாக.

அவள் சட்டென இவன் புறமாக திரும்பி முகம் சிவக்க “மிஸ்டர் விஜய்…விஜய்னு பேர் வைச்சா மட்டும் பத்தாது…ஆக்டர் விஜய் மாதிரி கொஞ்சம் டெடிகேஷனோடு இருங்க” என்றாள் எரிச்சலோடு.

அவள் அவ்வாறு கூறிய நொடிதனில் விஜய்யின் தோரணையே முற்றிலும் மாறிவிட்டது.

தோள் பட்டையின் சட்டையை இழுத்து விட்டு விரல் சொடக்கிட்டவாறே “இந்த ஏரியா அந்த ஏரியா அந்த இடம் இந்த இடம் ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி தான்” என கில்லி படத்தின் வசனத்தை நடிகர் விஜய் போலவே பேசியவன்,

அடுத்ததாக இடுப்பில் ஒற்றை கையை வைத்து “வாழ்க்கைன்றது ஒரு வட்டம்…அதில் ஜெயிக்கிறவன் ஜெயிப்பான்…தோக்கறவன் தோப்பான்” என சினிமா வசனத்தை தப்பாமல் திருப்பி படித்தவனை சமந்தா நாசி விடைக்க முறைத்தாள்.

அவன் அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் சுண்டு விரலை வாயில் வைத்து “பிளடி ஸ்வீட்” என இப்போது சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த ஒரு பிரபலமான வசனத்தை அள்ளி வீசியவன் “லியோ…லியோ…லியோ ஓரோ” என படத்தின் பின்னணி இசையையும் விட்டு வைக்காமல் வாயாலே சத்தம் செய்தவனின் பாவனை இப்போது முற்றிலும் மாறியது‌.

அதுவரை தெனாவெட்டாக இருந்தவன் பட்டென்று மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி அவளிடம் “மேடம் விஜய் சாரோட இந்த டெடிகேஷன் போதுமா?இல்ல..இன்னும் கொஞ்சம் வேணுமா மேடம்?” என அப்பாவியாக இமைக்கொட்ட விழி விரிக்கவும்,

முத்துவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வர அதனை அடக்கினார் என்றால்,

அவளிற்கோ ஆத்திரம் கரையை உடைத்துக்கொண்டு வெளியே வர அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட கைகள் இரண்டும் பரபரத்தது.

ஆனால் கைமுஷ்டியை மடக்கி அவனின் மீது மேலிருந்து கீழாக ஒரு இகழ்ச்சியான பார்வையை செலுத்திவிட்டு அருகிலிருந்த முத்துவிடம் “இந்த இடத்துக்கு எத்தனை சாவி இருக்கு” என அழுத்தமாக வினவ,

விஜய்யோ அவரை முந்திக்கொண்டு “இரண்டு சா…” என்னும் போதே வெடுக்கென்று அவன் புறம் திரும்பி கண்ணாலே எரித்து சாம்பாலாக்கியவள் ‘நீ பேசாதே’ என்பது போல் வாயில் விரல் வைத்து சைகை செய்துவிட்டு “நீங்க சொல்லுங்க முத்து” என முத்துவிடம் திரும்பினாள்.

விஜய்யோ அவளின் அதிகாரத்தோரணையில் திகைத்து பின்னந்தலையை அழுந்தக்கோதி ‘என்ன கண்ணுடா சாமி…பார்வையாலே எரிக்கிறது இது தான் போல’ என இதழை பிதுக்கி மெச்சிக்கொண்டு அவளை சுவாரசியமாக ஏறிட்டான்.

அந்த முத்துவோ அவளிற்கு தேவையான விபரங்கள் உரைத்தவுடன் மடமடவென விதிமுறைகள் விதிக்க ஆரம்பித்தாள்.

தொண்டையை செருமி “இந்த வீட்டோட சாவி இரண்டையும் என்கிட்ட கொடுத்திடுங்க…அன்ட் தென் எனக்கு சமைக்கறதுக்கு யாரும் வேணாம்…நானே சமைச்சு சாப்பிட்டுப்பேன்…இந்த வீட்டை சுத்தப்படுத்தறதுக்கு மட்டும் ஒரு பெண்ணை ஏற்பாடு பண்ணுங்க…அவங்களும் காலையில் எட்டு மணிக்குள்ள வந்திட்டு நான் ஆபிஸ் கிளம்பறதுக்குள்ள கிளம்பிடணும்” என கோர்வையாக பேசிக்கொண்டே வந்தவள்,ஒரு நொடி தனது பேச்சை நிறுத்தி தலைக்குனிந்தாள்‌.

கடந்து இரண்டு வருடங்களாக அவள் சந்தித்த சூழ்நிலைகளின் விளைவே,இந்த எச்சரிக்கை செயல்!!

அந்த கசப்பான நினைவுகள் நெஞ்சில் ரணத்தை உண்டாகியது‌.

அதனால் சில கணம் அமைதியாக இருந்தவள்,சடுதியில் தன்னை சமாளித்து விறைப்பை மீட்டெடுத்தாள்.

ஓரக்கண்ணால் விஜயை நோட்டமிட்டவாறே முத்துவிடம் “முத்து ஒன் மோர் திங்க்…என்னுடைய அனுமதியில்லாமல் இந்த வீட்டுக்குள்ள யாரும் வரக்கூடாது…நீங்க உட்பட…அதையும் மீறி யாராவது வந்தால் ராஜேந்திரன் சார்கிட்ட கம்பளையண்ட் பண்ணி வேலைய விட்டு தூக்கிடுவேன்” என அலுங்காமல் குலுங்காமல் ஒரு குண்டை தூக்கியெறிந்துவிட்டு விடுவிடுவென அவளிற்கென ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி நடந்தாள்.

இப்போது விஜய் பதறிப்போய் “ஏங்க…ஏங்க…மேடம்…உம்மாணாமூஞ்சி மேடம்” என கத்திக்கொண்டே அவளிடம் ஓடி வந்து “மேடம் நீங்க பாட்டுக்கு சாவிய எடுத்திட்டு போயிட்டால் நான் எங்கங்க தங்கறது?” என படபடப்புடன் கேட்க,

இவளோ பக்கவாட்டாக திரும்பி முகம் சிவக்க அவனை விழிகளாலே உறுத்துவிழித்தவள் “ஜஸ்ட் கெட் அவுட் இடியட்” என கழுத்து நரம்புகள் புடைக்க கத்தியவள்,

முத்துவிடம் திரும்பி “முத்து சென்ட் ஹிம் அவுட்?நான் திரும்பி வரும் போது இவன் இங்க இருக்கக்கூடாது” என ஆணைப்பிறப்பித்து அவனை மீண்டும் ஒரு முறை கண்ணாலே பொசுக்கிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவை பட்டென்று அடித்து சாற்றினாள்.

விஜயிற்கோ இப்போது சிறிது கோபம் தோன்றிட முகம் கறுக்க “முத்தண்ணா நான் இப்போ என்ன பண்ணிட்டேன்னு இவங்களுக்கு இவ்வளவு கோபம் வருது?” என கடுப்புடன் கேட்க,

அவரோ ‘அடேய்…உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடா’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தவர் “ஆனாலும் உங்களுக்கு தில்லு கொஞ்சம் ஜாஸ்தி தான் தம்பி…மேடம் முன்னாடியே அவங்களை உம்மணாமூஞ்சினு சொன்னதுக்கு அவங்க அறையாமல் விட்டதே பெருசு” என்றதற்கு பிறகே தன் தவறை உணர்ந்து “ஷிட்…அப்படியா சொன்னேன்” என நெற்றியை இரண்டு விரலால் தேய்த்துவிட்டான் விஜய்.

“தவளை தன் வாயாலே கெடும்ன்ற மாதிரி நானே என் இமேஜை டேமேஜ் பண்ணிக்கிட்டேன்…போச்சு போ…” என முகத்தை சோகமாக வைத்து முத்துவை பார்க்க,அவருக்கோ மனம் உருகிவிட்டது.

“சரி வாங்க தம்பி…வெளிய வந்து அவங்க உங்களை பார்த்து கத்தப்போறாங்க” என அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவர்,

அவன் முகம் சுருங்கியிருப்பதை கண்டுவிட்டு “மேடமை எப்படியும் நீங்க தானே ஆபிஸ் கூட்டிட்டு போகணும் தம்பி…அந்த சமயம் பார்த்து மேடம்கிட்ட நயமா பேசி சமாதானம் பண்ணிடுங்க” என அவனிற்கு இலவச அறிவுரை வழங்க,

அவனோ “ம்” என எங்கோ பார்த்தவாறு முனகி மகிழுந்தின் மீது சாய்ந்து நின்றுக்கொள்ள,

முத்துவோ அவனது முகத்தையே விடாமல் பார்த்தவர் “ஏன் தம்பி?நான் ஒண்ணு கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க” என பிடீகை போட்டவுடன் அவன் தலையை திருப்பி அவரை பார்க்கவும்,

அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு ”பொதுவா நீங்க யார்கிட்டயும் இப்படி விளையாட மாட்டிங்களே…பொறவு ஏன் தம்பி இந்த மேடம்கிட்ட மட்டும் இப்படி நடந்துக்கிட்டிங்க?” என அவனது ஆழ்மனதிற்குள் நுழைந்து பார்த்தது போல் சரியான கேள்வியை கேட்டார்.

அவரின் கேள்விக்கு எப்படி பதிலில்லையோ அதேப்போல் அவனது மனசாட்சி எழுப்பிய அந்த கேள்விக்கும் அவனிடம் பதிலில்லை.

ஆயினும்,அவனிற்கே உரிய குறும்புக்குணத்தால் தன்னை மீட்டெடுத்து,நாற்புறமும் விழிகளை அலசினான்.

முத்து புரியாமல் அவனை பார்க்க இவனோ கண்ணோரம் சிரிப்பில் சுருங்க அவரின் செவியருகே குனிந்து “நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டன்னா…மேடம் வந்ததிலிருந்தே இரண்டு டம்ளர் கஞ்சியை குடிச்ச மாதிரி விறைப்பாவே சுத்திட்டு இருந்தாங்களா?நமக்கு தான் அப்படி இருந்தால் புடிக்காதே‌‌…அதான் அந்த விறைப்பை குறைக்க கொஞ்சம் மசாலாவை தூவி உறைப்பை ஏத்திவிட்டேன்…இப்போ மேடம் கோபப்படறதுக்காகவாது நமக்கிட்ட பேசி தானே ஆகணும்…எப்படி என் ராஜதந்திரம்?” என சிரியாமல் கொத்தாக மொழிந்து சட்டையை இழுத்துவிட்டவனை பார்த்தவருக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது‌.

அவனின் தோளில் தட்டி “உங்களோட ஒரு சோக்கா போச்சு தம்பி…ஹாஹாஹா தம்பி” என வாய்விட்டு சிரித்தவாறே நுழைவாயிலின் அருகே சென்றார்.

“அண்ணே!என் ஐடியா எப்படின்னு சொல்லவே இல்லையே” என அவன் அங்கிருந்தே கூச்சலிட,

அவன் புறம் திரும்பியவர் அதே சிரிப்புடனே “விஜய்னா சும்மாவா?” என கேலியாக கேட்டு “ஐடியா பிரம்மாதம் தம்பி” என்பது போல் மூன்று விரலை காட்டிவிட்டு செல்ல,

இவனும் “ஹாஹாஹா தேங்க்ஸ்னா” என வாய்விட்டு சிரித்தவாறே திரும்பியவனின் இதழ்களோ கப்பென்று மூடிக்கொண்டது.

ஏனெனில் மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி வீட்டின் வாசற்படியில் அவனை அழுத்தமாக பார்த்தவாறு நின்றிருந்த சமந்தாவை நோக்கியவனின் அதரங்கள் சிரிப்பை தொலைத்து பூட்டிக்கொண்டது.

வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை தன் கைப்பையில் போட்டவள்,அவனையே ஆழ்ந்து நோக்கியவாறே அவனை நெருங்கி வர,அவனோ எவ்வித அசடும் வழியால் குறுகிய நேரத்தில் நேர்த்தியாக புடவை அணிந்து தயாராகி வந்தவளை வியப்பாக பார்த்து ‘பர்ப்பெக்ட்’ என மனதில் மெச்சிக்கொண்டு “நெக்ஸ்ட் எங்க மேடம்…ஆபிஸுக்கா?” என சாதாரண குரலில் கேட்டான்.

சற்று முன்பு அவனை அவமதித்து இருக்கிறாள்.இருந்தும் எந்த வித கோபமும் இல்லாமல் சகஜமாக பேசிய அவனின் நடவடிக்கை அவளின் மனதை கவர்ந்தது‌.

புருவம் உயர்த்தி அவனை வியப்பாய் பார்த்தவள்,சட்டென்று தன்னை சுதாரித்து “இல்லை…ஆபிஸுக்கு போக வேண்டாம்…நேரடியா நம்ப ஸ்வஸ்திக் ஷாப்புக்கு வண்டிய விடுங்க” என கூறியவுடன்,

அவளை ஒரு கணம் குழப்பமாய் ஏறிட்டாலும் எந்த வித பதிலும் சொல்லாமல் கதவை திறந்து விட குனிந்தவனின் முன்பு கைநீட்டி தடுத்து “நீங்க எனக்காக எந்த வேலையும் செய்யவேண்டாம் மிஸ்டர் விஜய்…எனக்கு கை இருக்கு” என்றாள் பட்டென்று முகத்திலடித்தாற் போன்று.

உடனே முகம் மாறினாலும் சில மணி நேரங்களிலே அவளின் குணத்தை அறிந்து வைத்திருந்ததினாலே படீரென்று கதவின் மீதிருந்த கையை விலக்கி தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்து வண்டியை எடுக்க ஆயுத்தமானான்.

அவனையே விழி அகற்றாமல் பார்த்தவாறே வண்டியில் ஏறி அமர்ந்தவுடன்,விஜய் கண்ணாடியின் வழியாக அவளின் முகத்தை ஒரு கணம் நோக்கிவிட்டு அமைதியாய் வண்டியை செலுத்தத்தொடங்கினான்.

அவனின் மனதில் ஒரு புது குழப்பம் சூழ ஆரம்பித்தது.

சிறு விடயத்திற்கெல்லாம் தன்மானம் பார்ப்பவன்,அவள் இன்று ஒரு சில மணி நேரங்களிலே பலமுறை அவனை அவமதித்திருந்தப்போதும் அதனை தூசிப்போல் தட்டிவிட்டு அவளிடம் பேசிய விதமே அவனின் மூளையை வண்டாய் குடையத்தொடங்கியது.

அவனை போலவே பெண்ணவளும் அவளின் முன்னால் கணவன் கவினிற்கு பிறகு எந்தவொரு ஆண்மகனையும் பார்வையாலே விலக்கி நிறுத்துபவள்,இன்றோ முதல் முறை பார்த்த ஒரு ஆண்மகனிற்காக அவள் மனம் இரக்கம் கொள்வதை எண்ணி விசித்திரமாக இருந்தது.

ஆம்,அவனை கடுமையாக விமர்சித்து வெளியேற்றிவிட்டு அறைக்குள் நுழைந்தவளிற்குள் ஏனோ மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது.

குளிக்கும் போதும் சரி,அறையினுள் நுழைந்து உடைமாற்றிய போதும் சரி, எளிதாக ஒப்பனைகள் செய்தப்போதும் சரி ஒவ்வொரு நிமிடமும் அவள் கதவை அடித்து சாற்றும் போது அவன் முகம் கறுத்து சுருங்கிய விதமே கண் முன் தோன்றி இம்சித்தது.

மேலும் ‘எவ்வளவு அழகா ஸ்மைல் பண்ணிட்டு இருந்தான்…இப்படி ஒரேயடியா அவனை வார்த்தையாலே அடிச்சிட்டியே’ அவளின் மனசாட்சியே அவளிற்கு எதிராக குற்றச்சாட்டை வைத்தது.

அவளே ஒரு கட்டத்தில் ‘ஏய் நீ என்ன என் மனசாட்சியா இல்ல அவன் மனசாட்சியா?’ என வசைப்பாட தொடங்
கிய நிலைக்கு சென்றுவிட்டாள்.

நேசம் மற்றும் திருமணத்தை அடியோடு வெறுப்பவளின் இதயத்தில்,பார்த்த முதல் நாளே தன்னையும் அறியாமல் கல்லெறிந்துவிட்டிருந்தான் விஜய்.

அவளுள் ஏற்பட்ட இந்த சலனத்தின் விளைவு காதலா??வெறுப்பா??

கருத்து திரி,

 
இலக்கணம் 5(1):

அவனின் புன்னகையை துடைத்தெறிந்ததற்காக வருந்திய பெண்ணவள் சட்டென பழைய நிகழ்வுகளின் தாக்கத்தில் தலையை உலுக்கி கொண்டாள்.

அவள் சூடு கண்ட பூனையல்லவா?

அதனால் மீண்டுமொருமுறை தனது வாழ்வில் வேறொரு ஆண்மகனில் பரிதாபம் கொண்டு தடுமாற்றம் கொள்வது தன் பெண்மைக்கே உரிய இழுக்காக கருதியவளின் நெஞ்சம் சுரீரென்றது.

பார்த்த சில மணித்துளிகளில் அவன் பால் சாயத்துடித்த தன்னையே குற்றம் சாட்டியவளிற்கு அவமானம் பிடிங்கி தின்றது.

அதனால் அவனில் இரக்கம் கொண்டதினால் முகம் கறுக்க தலையை வெளியே திருப்பியவளின் தேகம் எஃகிரும்பாய் விறைத்தது.

அவளின் அழகிய மதிவதனமும் கடும்பாறைக்கு நிகராக இறுகிவிட்டது.

ஆடவனோ தன் மனம் பற்றிய சுயபரிசோதனையில் ஈடுப்பட்டுருந்ததால்,காரிகையின் பார்வை மற்றும் இறுக்கத்தை அறியவில்லை.

ஒரு கட்டத்தில் சமந்தா செய்த தவறிற்காக தன் மீதே பெருஞ்சினமடைந்தவள் அதனை இறக்கி வைக்கும் வடிகலாய் அவளிடம் சிக்கிய அப்பாவி ஜீவன்கள் வேறுயாருமல்ல,ஜீவா தான்!!

மேனியெங்கும் அனலாய் தகிக்க உக்கிரத்துடன் அமர்ந்திருந்தவளின் கைப்பேசி சிணுங்கியது.

அந்த சப்தத்தில் கவனம் களைந்த விஜய் கண்ணாடியின் வழியே அவளை ஒரு முறை பார்த்துவிட்டு வண்டியை செலுத்தினான்.

அலைப்பேசியில் ஒளிர்ந்த ஜீவா என்ற பெயரை ஒரு கணம் பார்த்துவிட்டு விஜய்யை கண்ணாடியின் வழியே முறைத்தவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் வசைமாரி பொழிய ஆரம்பித்தாள்.

“ஜீவா நீங்களாம் எதுக்கு ஆபிஸ் வரீங்க?வேலை செய்ய பிடிக்கலைனா வேலைய விட்டு நின்னுட்டு கல்யாணம் பண்ணி பொண்டாட்டிக்கு சேவை பண்ண வேண்டியது தான?சரியா வேலையும் பண்ணாம பொண்ணுங்க கூட கடலை போட்டு சும்மா ஓபி அடிச்சிட்டு மாசமாசம் சம்பளமா மட்டும் வாங்கறீங்களே?உங்களுக்கெல்லாம் மனசாட்சி கொஞ்சம் கூட உறுத்தலை‌‌யா?நீங்களாம் வேலைக்கு வரதே என் உசுர வாங்க தான்…ச்சை” என கழுத்து நரம்புகள் புடைக்க உச்சஸ்தாயில் கடகடவென திட்டியவளை கண்ணாடியினூடே நோக்கிய விஜய் ‘ஆத்தாடி…பெரிய ரங்காடிச்சியா இருப்பா போலவே…அடேய் விஜய் ஒரு நிமிஷம் நல்லா யோசிடா’ என எச்சில் கூட்டி விழுங்கி அவளை மிரட்சியுடன் பார்த்திருந்தான்.

அதேசமயம் எதிர்ப்புறம் அவள் எதற்காக தன்னை வறுத்தெடுக்கிறாள் என்பதை அறியாத அந்த அப்பாவி ஜீவனோ திருதிருவென விழித்துக்கொண்டிருந்தான்.

விஜய்யின் முகப்பாவனையை வைத்தே தன் சொற்கள் அவனை சரியாக தாக்கியதை அறிந்து இகழ்ச்சியாக இதழை வளைத்து அழைப்பில் இருப்பவனின் மனநிலையை சிறிதும் பொருட்படுத்தாமல் “ஜீவா போனை வைச்சு தொலைங்க” என காட்டமாக மொழிந்து அலைப்பேசியை தூண்டித்தாள்.

‘ச்சை’ என முகத்தை சுழித்து அலைப்பேசியை தூக்கி பக்கத்து இருக்கையில் வீசியவள் ‘பொண்ணுங்கன்னா வாய பிளந்திட்டு வந்திடறது…ஆனா வேலைனா வந்தால் மட்டும் ஒரு மண்ணும் கிழிக்கிறதில்லை…பொண்ணுங்கள் னா அவ்வளவு இளக்காரம்…இவங்க பல்லை இளிச்சா உடனே நாங்க பல்லை இளிக்கணும்…ஆம்பள திமிரு’ என வேண்டுமென்று அவனிற்கு கேட்கும் விதமாக சப்தமாக முணுமுணுத்தவளின் வார்த்தைகள் அவனது இதயத்தை சென்று தாக்கியது.

தன் மேல் அவனிற்கு ஏற்பட்டிருக்கும் சிறு விருப்பதையும் தன்னுள் ஏற்பட்ட சலனத்தையும் இந்நொடியே துடைத்தெறிய வேண்டிய வெறியில் சொற்களை சற்றே கடுமையுடன் பயன்படுத்தினாள்.

நினைத்தது போலவே அவளின் பேச்சுக்கள் அவனை அடியோடு வீழ்த்தியதின் விளைவால் முகம் சட்டென உணர்ச்சிகளை துடைத்தெறிந்தது.

அதை கண்ணாடியின் வழியே அவதானித்து ‘நான் இது தான்…என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு…ஏனால் காயப்படப்போறது நீ தான்’ என்று மானசீகமாக அவனிடம் இயம்பி திருப்தியுற்றவளின் இதயத்தின் ஒரு மூலையில் அவளையும் அறியாமல் ஒரு வலி எழுந்தது.

பாவையவளோ கடிவாளமிட்ட குதிரைப்போல் எப்பொழுதோ தன் வாழ்வை மாற்றிக்கொண்டதினால் மனதை ஆழ்ந்து அறிய எத்தனிக்கவில்லை.

வாகனத்தினுள் அடுத்த சில கணங்கள் ஒரு பேரமைதி!!

அப்போது அந்த அமைதியை கிழிப்பது போல் மீண்டும் அலைப்பேசி ஒலித்தது.

ஆனால் தற்போது விஜய்யின் அலைப்பேசி ஒலிக்க,அவனோ வாகனத்தை ஒரு ஆள் அரவமில்லாத இடத்தில் ஓரமாக நிறுத்தினான்‌.

சமந்தா ‘யார்’ என்பது போல் அவனை அழுத்தமாக பார்த்திட,

அவளை ஒரு கணம் பார்த்து “மை பர்சனல் மேடம்…பேசிட்டு வந்திறேன்” என வாகனத்தை விட்டு கீழிறங்கி அலைப்பேசியின் வழியாக பேசினான்.

சமந்தாவிற்கோ ‘யாரது பர்சனல்?’ என நெஞ்சம் குறுகுறுக்க குனிந்து வெளியே நின்று தலைக்கோதியவாறு சிரித்து பேசியவனை வெறித்து பார்த்தவள் ‘கேர்ள் ஃப்ரெண்டா இருக்குமோ?’ என நினைக்கும் போதே இதயம் படபடத்தது.

உடனே அவள் மனசாட்சி ‘அது யாரா இருந்தா உனக்கு என்ன?மூடிட்டு நீ வந்த வேலைய பாரு’ என எச்சரிக்க,

அவளது வீம்புப்பிடித்த மனமோ ‘ஆமா…அவன் யாருக்கிட்ட பேசினா எனக்கென்ன?ஆனால் வேலை நேரத்தில் இந்த மாதிரி நடுரோட்டில் வண்டிய நிறுத்தி இவன் கேர்ள் ஃப்ரெண்டுகிட்ட கொஞ்சிட்டு இருக்கிறதுக்கு நானா கிடைச்சேன்…வரட்டும்…வந்தவுடனே நாக்கை பிடிங்கற மாதிரி நாலு கேள்வி கேட்கறேன்’ என கையை முறுக்கிக்கொண்டு சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஆனால் அவளின் அந்த சினமெல்லாம் சில நிமிடங்களில் அவன் உள்ளே வந்து “சாரிங்க மேடம்…என்னோட அம்மா தான் பேசிட்டு இருந்தாங்க…என் மேல ரொம்ப பாசம்…நான் பேசலைனா கோவிச்சுப்பாங்க..அதான் மேடம் பேசிட்டு வந்தேன்…சாரி ” என கண்கள் சுருக்கி கெஞ்சலாய் பேசியதற்கு பிறகும் அவளால் கோபத்தை இழுத்து பிடித்திருக்க முடியவில்லை.

அதனால் சற்றே தளர்ந்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவள் “சரி…சரி…சீக்கிரம் வண்டிய எடுங்க…நேரமாச்சு” என்றாள் தனது விறைப்பை விட்டுக்கொடுக்காமல்.

விஜய்யோ இருபக்கமும் தலையசைத்து ‘சரியான ஃபயர் எஞ்சின்ப்பா’ என பின்னந்தலையை அழுந்தக்கோதி புன்னகைத்தவாறே வண்டியை கிளப்பினான்.

இப்போது இருவரின் மனநிலையும் இலேசாகிட,விஜயோ “மேடம் ஒரு சாக்லேட் விளம்பரம் பார்த்திருக்கீங்களா?” என திடீரென்று வினவ,

அவளோ இமைகள் இடுங்க ‘என்ன?’ என்பது போல் அவனை ஏறிடவும்,

கண்ணாடியில் அவள் முகம் நோக்கி “பசி வந்தால் நீ நீயா இருக்கமாட்ட” என ஒரு விளம்பரத்தில் வரும் நடிகனின் பாணியிலே நடித்துக்காட்டி,மீண்டும் பழைய விஜயாக மாறி சிரியாமல்,

“ஐ திங்க் அந்த விளம்பரத்தில் வர ஹீரோயின் மாதிரி உங்களுக்கும் பசிக்குதுன்னு நினைக்கிறேன் மேடம்” என்றான் குறும்பாக.

சில நிமிடங்களுக்கு முன்பு மலையிறங்கியவளின் கோபம் இப்போது மீண்டும் கூரையை பிய்ச்சு கொண்டு உயர ஆரம்பிக்க,அவனை நாசி விடைக்க புசுபுசுவென்று முறைத்தவளை பார்த்து ‘அச்சச்சோ ஆத்தா மலையேறிடுச்சு செத்தோம்’ என நினைக்கும் போதே,

அவள் முகம் சிவக்க பல்லைக்கடித்து “யோவ் நீயெல்லாம் மனுசனாய்யா?உன்னையெல்லாம் பெத்தங்களா செஞ்சாங்களாடா…” என சரமாரியாக திட்ட ஆரம்பிக்க,

அவனோ “மேடம் திஸ் இஸ் டூ மச்…நான் ‘டா’ வா?” என பாவமாக தன்னை சுட்டிக்காட்டி கேட்கவும்,

அவளோ பெருஞ்சினத்தோடு “ஆமாடா…உனக்கெல்லாம் என்னடா மரியாதை…” என பொரிந்து தள்ளியவளிடம் “மேடம் நோ பேட் வோர்ட்ஸ்…இட்ஸ் ஹேர்ட்டிங் மீ” என குழந்தை குரலில் கெஞ்ச,

“அப்படி தான்டா பேசுவேன்” என அவள் சீறவும்,

ஒரு கட்டத்தில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு “மேடம் உங்களை என் பெத்த அம்மாவா நினைச்சு கையெடுத்து கும்பிடறேன்…போதும் என்னை விட்டுருவாங்க” என இருகரம் குவித்து காலில் விழாத குறையாக கெஞ்சியதற்கு பிறகே “சரி பிழைச்சுப்போங்க…இனிமேல் என்கிட்ட இதுமாதிரி பேசனீங்க?இதை விட அதிகமா பேசுவேன்…ஜாக்கிரதை” என மிடுக்கான குரலில் ஒற்றை விரல் நீட்டி மிரட்டியதற்கு பிறகே சாந்தமடைந்தாள்.

அவனோ ‘ஹப்பாடி’ என நெற்றியில் வராத வியர்வையை துடைத்து சுண்டிவிட்டு ‘முடியலடா சாமி’ என முனகிக்கொண்டே வண்டியை எடுக்க,

சமந்தாவோ “அங்க என்ன சத்தம்” என குரலுயர்த்த,

மிரண்டு ‘ஏதே மறுபடியும் முதல்ல இருந்தா’ என சோர்வாகி அவள் புறம் திரும்பி “மேடம் பிளீஸ்…மீ பாவம்” என கெஞ்சியதை பார்த்தவளின் இதழோரம் சிரிப்பில் துடித்தது.

வெகு நாட்கள் கழித்து அவளையும் பழைய சமந்தாவிற்கே உரிய குறும்பு தலைதூக்கியது.

அதனால் சிரியாமல் “சரி…சரி ரொம்ப பசிக்குதுன்னு நீங்க இவ்வளவு கெஞ்சறதால் வண்டிய எங்கியாவது ஒரு நல்ல ஹோட்டல் பார்த்து நிறுத்துங்க சாப்பிட்டு போகலாம்” என்றாள் ஆணைப்போல்.

அவனோ திகைத்து ‘நான் எப்போடா கெஞ்சினேன்’ என அவளை ஏறிட,

அவளோ தெனாவெட்டாக “என்ன சாப்பாடு வேணாமா?” என்றவள்,

கையை வேறுப்புறம் காட்டி “ஓகே அப்போ வண்டிய…” என்னும் போதே,

அவசரமாக இடைமறித்து “ஐய்யோ மேடம்…எனக்கு தான் பசிக்குது…ரொம்ப பசிக்குது…பசியில் மயக்கமே வருது…” என படபடவென பேசியவனை கண்டவளிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

ஆயினும்,தன் விறைப்பை விட்டுக்கொடுக்காமல் “ம்” என்று முனகி அலைப்பேசியை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள்.

இதுநாள் வரை மனதில் கனத்த பாறாங்கலை கட்டியிருந்தது போல் பாரமாய் இருந்த இடம்,இவனின் அருகாமையில் சிறிது சிறிதாக குறைந்தது.

விஜய்யின் முகமோ அஷ்டக்கோணலாக ‘எப்படி சிக்கியிருக்கேன் பாத்தியா’ என தனக்குள்ளே புலம்பினாலும்,அவளின் பேச்சை வைத்தே பெண்ணவளின் பசியை உணர்ந்தவனின் இருதயத்தில் தாயுமானவன் எட்டிப்பார்க்க மெல்லியதாக முறுவலித்து வண்டியை ஒரு விடுதியின் முன்பு நிறுத்தினான்.

அடுத்த சில நிமிடங்களில் தங்களது காலை உணவை முடித்துக்கொண்டு வண்டியில் ஏறிய சமந்தாவின் முகம் தீவிரத்தை தத்தெடுக்க எதையோ கணக்கிட்டவாய் “விஜய் உங்களுக்கு கன்னடம் தெரியுமா?” என்று வினவ,

அவனோ அவள் கேட்பதின் சாராம்சம் அறியாமலே “அட ஏன் மேடம் நீங்க வேற…எனக்கு தமிழே ஒழுங்கா வராது இதில் கன்னடமா?” என கேலியாக கேட்க,

அதில் கடுப்பான சமந்தா “விஜய் பீ சீரியஸ்” என்றதற்கு பிறகும்,

அவனோ சிரியாமல் “சீரியஸா இருந்தால் ஹாஸ்பெட்டல்ல தான் மேடம் அட்மிட் பண்ணனும்” என பதில் கொடுத்த அதே நேரத்தில் அவர்களின் வாகனம் ஸ்வஸ்திக் கடை முன்பு வந்து நின்றது.

அந்த நிமிடத்தில் அவளால் அவனது கேலியை ரசிக்க முடியாமல் அவனை ஆழ்ந்து பார்த்தவள் “விஜய் நான் உங்களோடு உயர் அதிகாரி…என்கிட்ட ஒழுங்கா பேசற மாதிரி இருந்தால் பேசுங்க…இல்லை எம்.டி சார்கிட்ட சொல்லி வேற ஆளை நான் ஹெல்ப்புக்கு கூப்பிட்டுக்கிறேன்” என அழுத்தமான குரலில் கூறிவிட்டு அவள் கீழே இறங்கவும்,

அவள் முகத்திலிருந்த தீட்சண்யமும் குரலின் கடினமும் சூழ்நிலையை அவனிற்கு உணர்த்தியது.

அதனால் “ப்ச்” என உச்சிக்கொட்டி அவளுடனே கீழிறங்கியவன் “மேடம் எதுக்கு இப்போ இவ்வளவு கோபம்?இந்த வயசுல இவ்வளவு கோபம் வந்தால் உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாளில் உலகத்தில் இருக்கிற எல்லா நோயும் வந்திடும்…கொஞ்சமா சிரிச்சுப்பாருங்க…லாஃபிங் இஸ் பெஸ்ட் மிடிசன்னு ஞானியே சொல்லியிருக்காங்க” என அவளின் மீதுள்ள அக்கறையோடு கூறியவனை இமைகள் இடுங்க ஏறிட்ட சமந்தாவோ,

“மிஸ்டர் விஜய்…அதே ஞானி தான் இப் யூ ஆர் லாஃப் பார் நோ ரீசன் யூ மே நீட் மிடிசன்னு சொல்லியிருக்காங்க…அந்த மெடிசன் உங்களுக்கு தான் இப்போ தேவைன்னு நினைக்கிறேன்” என குறிப்பாய் அவனை பார்த்துவிட்டு கடையை நோக்கி நடக்க தொடங்கினாள்.

இவனோ தலையை இருபுறமும் ஆட்டி ‘ஒரு சாதாரண ஜோக்கை கூட இவங்களால் ரசிக்க முடியலை…இவங்களுக்கு என்ன தான் பிரச்சனை?’ என்று சலித்தவாறே,அவனும் வாகனத்தை பூட்டிவிட்டு அவளுடனே பக்கவாட்டில் வந்து சேர்ந்துக்கொண்டான்.

அவளின் அருகே வந்தவுடன் “எனக்கு கன்னடம் தெரியும்…எதுக்கு இதை கேட்டிங்க மேடம்?” என இறுதியாக அவன் தான் அவளிடம் பணிய வேண்டியதாய் இருந்தது.

சட்டென்று திரும்பி ‘இதை முன்னாடியே சொல்லறதுக்கு என்ன?’ என கோபமாய் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “இங்க வேலை செய்யற ஆட்கள் அன்ட் கஸ்டமர்கிட்ட கொஞ்சம் பேசணும்…பட் எனக்கு இங்கிலீஷ் அன்ட் இந்தி மட்டும் தான் தெரியும்…அதுக்கு தான்” என மேம்போக்கான காரணத்தை கூறிவிட்டு அவள் பாட்டிற்கு ஸ்வஸ்திக் கடையின் கண்ணாடி கதவை திறந்து உள்ளே நுழைய ஆயுத்தமானாள்.

இவனும் அவளின் பின்னோடு நடந்து வர,சரசரவென்று முன்னேறியவள் ‘என்ன நினைத்தாளோ?’ ஒரு கணம் நின்று இவன் புறமாக திரும்பியவள் “உங்களை இங்க இருக்கிறவங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என கண்ணில் கவனத்துடன் கேட்க,

‘ஆமா இது ரொம்ப முக்கியம்’ என நொடித்துக்கொண்டு அவளை ஒரு பெருமூச்சோடு நோக்கி ‘தெரியாது’ என்னும் விதமாக தலையசைக்க,

அவனை சில கணம் ஆழ்ந்து பார்த்தவள் “ஓகே…என் கூட வாங்க” என ஒரு நொடி தாமதித்து அவனோடு இணைந்து கடையினுள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்தவுடன் அந்த கடையின் குளிர்க்காற்று அவளின் முகத்திலறைய கடை முழுவதையும் ஒரு முறை பார்வையால் நோட்டமிட தொடங்கினாள்.

அது காலை பதினொரு மணி என்பதால் பெரிதாக கூட்டம் ஏதுமின்றி வெறிச்சோடி இருந்தது.

ஆங்காங்கே ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டும் கடை சிப்பந்திகளிடம் பேசி வாங்கும் பொருட்களை பற்றிய விசாரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

கடையின் சுவர் முழுவதும் அவர்களது ஸ்வஸ்திக்கே உரிய வெண்மை நிறத்தில் பளிச்சிட்டு அவளுள் ஒரு அமைதியை விதைத்தது.

வரிசையாக அடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே வெண்ணிற பலகையில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

பிறந்த மதலையிலிருந்து பதினைந்து அகவை வரையிலுமான குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் தொடங்கி,விளையாட்டு சமான்கள் வரை அனைத்தும் அங்கு கிடைத்தது.

அதேப்போல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் அவர்களுக்கான ஆடைகள் தொடங்கி எல்லாமே ஸ்வஸ்த்க்கில் பிரசித்திபெற்றிருந்தன.

சமந்தாவோ முதலில் பொருட்கள் அனைத்தையும் கண்ணாலே ஊடுருவியவள்,ஒரு காலி கூடையை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் போல் கடையை சுற்றி வலம் வர தொடங்கினாள்.

அவள் ‘என்ன செய்கிறாள்?’ என ஒன்றும் புரியாமல் குழம்பினாலும் அவளின் பின்னோடு வால் பிடித்து சென்றான் விஜய்.

அவள் ‘யார்’ என்பதை வெளிப்படுத்தாமல் அடுக்கியிருந்த அனைத்து பொருட்களையும் அதன் தரத்தையும் தோண்டி துருவியவள்,இடையிடையே கடையில் பணிப்புரியும் கடைச்சிப்பந்திகளிடம் பேசி அந்த கடையின் வியாபாரத்தை பற்றியும் தெரிந்துக்கொண்டாள்.

பெண்ணவளின் இந்த செயல்களை வைத்தே அவளின் யுக்தியை கண்டுக்கொண்ட விஜய்யோ மனதிற்குள்ளே அவளை மெச்சிக்கொண்டான்.

அவளின் அந்த அறிவுக்கூர்மையை தனக்குள்ளே சிலாகித்து வியந்த நேரத்தில்,மொழி அறியாத சில வேலையாட்களிடம் விஜய்யிடம் சொல்லிக்கொடுத்து சில கேள்விகளை கேட்கும் படி எடுத்துக்கூற,அவனும் அவளிற்கு தன்னால் முடிந்த உதவியை செய்தான்.

இது கிட்டத்தட்ட பழங்கால அரசர்கள் கையாளும் யுக்தி முறை தான்.

நாட்டிலுள்ள தங்களது மக்களின் துயர் அறிய வேண்டி அரசர் மாறுவேடமிட்டு வீதி உலா செல்லும் அதே முறையை இவளும் பின்பற்றினாள்.

இவளின் இந்த இராஜதந்திர முறையில் அவளை எண்ணி கர்வம் கொண்ட ஆடவனின் மனதிற்குள் அவள் உயர்ந்துக்கொண்டே போனாள்.

அந்த கடையின் மூன்று மாடி கட்டிடத்திலுள்ள அனைத்து பொருட்களின் விபரங்களும் இப்போது அவளின் விரல் நுனியில்!!

ஓரளவு அந்த கடையில் இருக்கும் குளறுபடிகள் எல்லாவற்றிற்கும் முழுமுதற்காரணம் அந்த கடையின் மேனேஜர் சிவப்பிரகாசம் என்பதை அறிந்தவளோ வீறு கொண்ட வேங்கையாக அலுவலகத்தை நோக்கி வண்டியில் பயணித்தாள்.

விஜய்யோ அவளின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை கொண்டே விபரீதம் உணர்ந்தவனாய் வண்டியை விரைவாக செலுத்தி அடுத்த பத்து நிமிடங்களில் அலுவலகத்தின் வாசலில் கொண்டு வந்து விட்டான்.

உடனே கதவை திறந்து விறுவிறுவென அவள் அலுவலகத்திற்குள் நுழைய வேகம் கண்டு பதறியவன் “ஏங்க மேடம்…இருங்க…நானும் வரேன்” என கத்தியவனை பொருட்படுத்தாமல் அவளோ அந்த மேலாளரை வாயிற்குள்ளே அர்ச்சித்தவாறு உள்ளே நுழைந்துக்கொண்டாள்.

தான் அழைத்தது செவியில் விழாதது போல் அவள் நடந்த வேகம் கண்டு “ஐய்யோ இவங்க போற வேகத்தை பார்த்தால் அந்த மேனேஜரை இரண்டு அறை விட்டாலும் விடுவாங்க போல…அந்த ஆள் வேற ஒரு மாதிரின்னு கேள்விப்பட்டனே” என வெளிப்படையாக தலையலடித்து புலம்பியவன்,

அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு பதட்டத்துடன் தன்னுடைய அடையாள அட்டையை வரவேற்பில் உள்ள பெண்ணிடம் காட்டிவிட்டு மின்தூக்கியில் இரண்டாம் தளத்திற்கு விரைந்தான்.

அந்த குறிப்பிட்ட மேலாளரின் அறைக்குள் அவன் கதவை திறந்து நுழைவதற்கும் சமந்தா அவரை கன்னத்தில் அறைவதற்கும் சரியாக இருந்தது.

 
இலக்கணம் 5(2):

சற்று நேரத்திற்கு முன்பு,

ஸ்வஸ்த்க்கின் பெங்களூர் கிளையின் மேலாளரின் அறையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளின் முகமோ கடும்பாறையென இறுகியிருந்தது.

ஏனெனில்,தொழிலாளர்களிடம் விசாரித்து அறிந்த வகையில் நிறுவனம் தொடர்பான விளம்பரங்களுக்கு நிர்வாகம் வழங்கும் காசுகள் அனைத்தையும் அவர் ஒருவரே சுருட்டியுள்ளதை கேள்வியுற்று கொதித்தெழுந்தாள்.

அதுமட்டுமின்றி,கடையில் பணிப்புரியும் பெண்களிடம் அவ்வப்போது தவறாக நடந்துக்கொள்வதாக இருபெண்கள் ஆவேசத்தோடு பேசிக்கொண்டிருந்ததை ஏதேச்சையாக கேட்டுவிட்டாள் சமந்தா.

கிணறு வெட்ட பூதம் கிளம்பும் கதையாக அவர்கள் கடையின் விற்பனை சதவீதம் குறைவு தொடர்பாக விசாரணை செய்ய வந்தவளிற்கு மேலாளரின் உண்மை சுயரூபம் சிறிது சிறிதாக தெரிய வந்ததில் தலை கிறுகிறுத்துப்போனது.

ராஜேந்திர வர்மாவை போன்ற நேர்மையான மனிதரின் கீழ் பணிப்புரியும் ஒரு மேலாளரின் இழிவான செயல்களை அவளால் கிரகிக்கவே முடியவில்லை.

அவள் நினைத்திருந்தால்,அப்போதே தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டு அந்த பெண்களிடம் முழுவிபரத்தையும் விசாரித்து அறிந்திருக்கலாம்.

ஆனால் அவள் வகிக்கும் பதவியும்,நிறுவனத்தின் மீது அவளிற்கு இருக்கும் பற்றும் அதனை செய்யவிடாமல் அவளை நிதானிக்க வைத்தது.

தன்னுடைய அவசரம் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தாள்.

ஆயினும்,உள்ளுக்குள் கோபம் மட்டும் நெருப்பாய் கனன்றன.

‘பெண்கள் என்றாலே இவனை போல் ஆட்களுக்கு எல்லாம் கிள்ளுக்கீரையா? எங்களையெல்லாம் பார்த்தால் இவனுக்கு எப்படி தெரியுது?’ என ஆவேசமாக பொங்கியவளின் மேனியெங்கும் தீப்பற்றி எரிய,அவர் மட்டும் இந்நொடி அவளின் கண்முன் நின்றிருந்தால் கழுத்தை நெறித்து கொன்றிருப்பாள்.

வெறி என்றால் அப்படியொரு வெறி…

அந்த அயோக்கியனின் சட்டையைப்பிடித்து கத்தியால் குத்தி குடலை உருவி வெளி எடுக்கும் அளவு வெறி!

அவன் மீதான குற்றப்பத்திரிகைகள் அத்தோடு முடிவுற இல்லை என்பது தான் இங்கு கொடுமையே!

ஏனெனில்,ஸ்வஸ்த்க்கிற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு தாங்கள் தயாரிக்கும் பொருட்களை குறைந்த விலைக்கு விற்று,அதிலும் இலாபம் பார்த்துக்கொண்டிருக்கிறான், அந்த கயவன்.

தன் பணிக்கு உண்மையாய் இருக்கும் பெண்ணவளிற்கு இதைக்கேட்டு ரௌத்திரம் தோன்றாமல் இருந்தால் அதிசயமே!

விஜய்யிற்கும் அவரின் செயல்கள் கடுஞ்சினத்தையே கொடுத்தது.

ஆனாலும்,அவளது உக்கிரத்தை காட்டிலும் சிறிது மட்டு தான்!!

காரிகையவளோ முகம் இறுக அதே ஆத்திரத்தோடு சிவப்பிரகாசத்தின் அறைக்குள் நுழைந்தாள்.

அவரோ சாவகாசமாக இருக்கையில் அமர்ந்து அப்போது தான் வயிறு முட்ட தேநீரையும் போண்டாவையும் உண்டு ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார்.

கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளின் அரவம் கேட்டு நிமிர்ந்தவரின் பார்வையோ முதலிலே பாவையவளின் அங்கங்களையே கூறுப்போட தொடங்கியது.

அடுத்ததாக,துச்சாதனனாய் மாறிய கயமை கண்கள் அவளின் ஆடைகளை துகிலுரித்தன.

அவரின் பார்வையை நொடியில் அறிந்தவளிற்கு உள்ளுக்குள் சுறுசுறுவென ஆத்திரம் பொங்கினாலும் ‘சமி…ராஜேந்திரன் சாருக்காக அமைதியா இரு’ என அறிவுறுத்தி பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டு சாதாரண முகப்பாவனையுடன் “வணக்கம் சார்…நான் சமந்தா…ஸ்வஸ்திக்கின் மெயின் பிரான்ச்சில் சேல்ஸ் மேனேஜரா இருக்கேன்” என தன்னை பற்றி சிறு அறிமுகப்படலத்தை நிகழ்த்தியவுடன் அவரின் முகமோ காமம் கலந்த இகழ்ச்சியாக மாற ஆரம்பித்தது.

சற்றே ஆர்வத்துடன் அவளின் அங்கவளைவுகளை அளந்துக்கொண்டிருந்தவரோ இப்போது இன்னும் தெனாவெட்டாக சாய்ந்து அமர்ந்து அவளை முழுமையாய் கண்ணில் பருக ஆரம்பித்தார்.

அவரின் அந்த செயல் ‘நீயெல்லாம் ஒரு ஆளா?’ என்பது போல் எகத்தாளமாக இருந்தது.

அவள் அணிந்திருந்த பருத்தி புடவையையும் சிறு வயது அழகான தோற்றதையும் இளக்காரமாக நோக்கி ஆணாதிக்க தோரணையில் “ஓ…நீ தானா அது?” என கேட்டவர்,

வாயிற்குள் கைவிட்டு பல்லில் சிக்கியிருந்த கறிவேப்பிலையை நோண்டி எடுத்து “நான் கூட வயசான ஆள் யாரோ ஒருவன் வருவான்னு நினைச்சேன்…கடைசியா பொண்ணா போயிட்டே நீ” என்றார் நக்கல் பொதிந்த குரலில்.

சமந்தாவிற்கோ அவரின் செயல் ஒவ்வாமையை தோற்றுவித்து முகத்தை சுழிக்க வைத்தது.

முகத்தை வேறுப்புறம் திருப்பி ‘ச்சை…இன்டீசென்ட் ஃபேலோ’ என மனதிற்குள்ளே அவனை வறுத்தெடுத்தாலும் அவர் வகிக்கும் பதவிக்கு உரிய மரியாதை கொடுக்கும் விதமாக தன்னை சாந்தப்படுத்திக்கொண்டு அவரை நோக்கி திரும்பினாள்.

இத்தனை நடந்தப்போதும் அவளை அவர் அமரும் படி பணிக்கவேயில்லை என்பதையும் அவள் மனம் குறித்து வெதும்பிப்போனது.

அவரை நேருக்கு நேராக பார்த்து “சார்…இப்போ நாம ஷாப் சம்பந்தமா கொஞ்சம் பேசலாமா?” என அழுத்தமான குரலில் நின்றுக்கொண்டே வினவ,

அவரோ சட்டையின் முதல் இரு பொத்தான்களை அவிழ்த்துவிட்டு “ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசிட்டு மட்டும் இருக்கிறது?” என சபலமாக கேட்டு கேவலமான இளிப்பை சிந்த,

அவரின் நோக்கம் ஓரளவு உணர்ந்தவளின் பொறுமை சிறிது சிறிதாக அவளில் இருந்து பறந்துக்கொண்டிருக்க முகம் இரத்த நிறத்தில் சிவந்தது.

ஆத்திரமும் ஆதங்கமும் அடங்கிய உணர்வில் “பொண்ணா இருந்தால் உங்களுக்கெல்லாம் இளக்காரமா?” என சூடான குரலில் கேள்வி எழுப்ப,

அவரோ அவளின் கோபத்தில் விருது வாங்கியது போல் கரைப்படிந்த பற்களை காட்டி சிரித்து “சேச்சே மெயின் பிரான்ச்சிலிருந்து ஒரு மேனேஜர் வரப்போறாங்கன்னு சொன்னவுடனே நான் ஏதோ சொட்டை தலையோ அல்லது வழுக்கை தலையுள்ள ஒரு நாற்பது ஐம்பது வயசு ஆள் வருவான்னு நினைச்சேன்…ஆனால் இப்படி தளதள தக்காளி மாதிரி ஒரு பெண் வருவான்னு நான் நினைக்கவே இல்லை…முன்னாடியே தெரிஞ்சிருந்தால் நம்ப மீட்டிங்கை என் பெட் ரூமிற்கு மாத்தியிருப்பேன்” என அகசியமாய் பேசியதோடு மட்டுமின்றி பெரிய ஹஸ்யத்தை கூறியது போல் கடகடவென சிரித்து அவளை பார்த்து கண்ணை சிமிட்டி வைத்தார் அந்த பெரிய மனிதர்.

அவரது இந்த இழிவான செயலால் அவளின் பெண் மனம் சீறி எழ ஆக்ரோஷத்தோடு “ஏய்…மைண்ட் யுவர் டங்” என பல்லை கடித்து சீறியவளின் கன்னத்து தசைகள் துடிக்க “இன்னொரு வார்த்தை என்கிட்ட நீ தப்பா பேசினே அடுத்த தடவை என் வாய் பேசாது கை தான்டா பேசும் பிளடி பாஸ்**ர்ட்” என விரல் நீட்டி எச்சரித்தவளின் தேகமோ கோபத்தில் வெடவெடத்தது.

அவரோ இதுப்போல் பல வகையான சந்தர்ப்பங்களை முன்பே சந்தித்திருப்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் “ஏய் இரு…இரு…நீ அந்த விவகாரத்தான சமந்தா தான…நம்ப எம்.டி.யவே வளைச்சுப்போட்ட அந்த ப்**” என சொட்டை தலையை தடவி சந்தேகம் கேட்ட அவளின் முகத்தையே சில நொடிகள் உற்றுநோக்கியவர்,

திடீரென்று கையை தட்டி “அட ஆமா…அவளா தான் நீ இருப்பா…இப்போ தான் எனக்கு எல்லா விஷயமும் புரியுது…கழுத்தில தாலிய காணும்…கழட்டி அவன் முகத்தில வீசியெறிஞ்சிட்டியா?” என எகத்தாளமாக கேட்டதோடு இருக்கையிலிருந்து எழுந்து நின்றவர் “அது சரி…அதுவும் ஒரு விதத்தில் நல்லதுக்கு தான்…அப்புறம் எப்படி எம்.டியோடு குடும்பம் நடத்த முடியும்…நீ என்ன பணம் தந்தால் ராஜேந்திரன் கூட மட்டும் தான் குடும்பம் நடத்துவியா?இல்லை…யாரு காசுக்கொடுத்தாலும் போவியா?அப்படி போவேன்னா அந்த ராஜேந்திரனை விட ஒரு படி அதிகமா நான் தரேன்…இன்னைக்கு நைட் ஹோட்டல் மெரிடியனில் ஒரு பார்ட்டி நடக்குது வரீயா?அந்த கிழவனை விட நான் அதிகமாவே பர்மான்ஸ் பண்ணுவேன்…என்ன வரீயா?” என தனது நாற்றம் பிடித்த வாயால் அவளின் பெண்மையை இழிவுப்படுத்தி வக்கிரத்தோடு பேசியவாறே அவளோடு இழைய வந்த அடுத்த நொடியே சட்டையை கொத்தாக பற்றிய சமந்தா “என்னடா பேசினே?” என காளி அவதாரத்தின் உக்கிரத்தோடு அவரின் கன்னத்தில் பளார் பளார் என்று அவளின் ஒட்டுமொத்த ஆக்ரோஷமும் தீரும் வகையில் ஆவேசமாக அறைந்து தள்ளியிருந்தாள்.

அதனை சற்றும் எதிர்ப்பாராத அந்த ஆளோ பின்னால் தலையை சாய்த்து “ஏ…என்ன..என்ன பண்ணறடி நீ?” என அவளை தடுக்க முனைந்தும் முடியாமல் தடுமாறி கீழே விழுந்து விட,

பூவாக இருந்தவளை சூறாவளியாக அந்த அயோக்கியனின் பேச்சுக்கள் மாற்றியிருக்க,முற்றிலுமாக தன்னிலை இழந்து வேள்வியாய் மாறி அவனை சூட்டெரிக்க காத்திருந்தவளோ “தெய்வத்திற்கு நிகரா பூஜை செய்ய வேண்டிய பூக்கள் உங்களுக்கு வெறும் சதைப்பிண்டமா தெரிஞ்சா தப்பு உன் மேல இல்லைடா…உன்னை இத்தனை வருஷமா பெத்து வளர்த்தாலே உன் அம்மா…அவளை சொல்லணும் முதல்ல…உன்னையெல்லாம் பொறந்தப்பவே கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருந்தால் நீயெல்லாம் இப்படி பேசுவியாடா நாயே…பரதேசி” என ஓங்கி அவனது உயிர்நாடியிலே ஒரு உதைவிட்டாள்.

அவனோ “அம்மா” என வலியில் அலறி துடித்து உடலை குறுக்க,

அதனை கண்டும் சிறிதும் வருந்தாமல் மேனியெங்கும் மிளகாயை அரைத்து பூசியது போல் செக்கசெவ்வேலென சிவந்து இறுகியிருக்க “உங்களை மாதிரி ஆணாதிக்க ஆட்களுக்கு பொண்ணுங்களை பார்த்தால் எப்படிடா தெரியுது…கொட்ட கொட்ட குனிஞ்சிட்டே இருக்கிறதால் அவங்கயெல்லாம் உங்களை விட பலகீனமான உயிர்னு நினைச்சிட்டிங்களாடா?அவங்க மட்டும் மனசு வைச்சா ஒன்றை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்…ஆண்கள்ன்ற ஒரு சமுதாயமே இல்லாமல் செய்யக்கூடிய ஆற்றல் அவங்ககிட்ட மட்டும் தான் இருக்கு…குனிஞ்சிட்டு இருக்கிற அத்தனை பெண்களும் நிமிர்ந்தால் உங்க நிலைமையெல்லாம் என்னவாகும்னு யோசிக்கமாட்டிங்களாடா நீங்கயெல்லாம்…” வார்த்தையில் உஷ்ணம் தெறிக்க சரமாரியாக அந்த அரக்கனை திட்டித்தீர்த்தவள்,தனது ஒவ்வொரு பேச்சிற்கும் அவருக்கான தண்டனையை கொடுக்கவும் மறக்கவில்லை அவள்.

அவள் அந்த மேலாளரின் கன்னத்தில் அறையும் போதே உள்ளே நுழைந்த விஜயோ சில நிமிடங்கள் அவளின் இந்த அக்னி அவதாரத்திலும் பேச்சிலும் வாயடைத்து போய் நின்றுவிட்டான்.

ஆனால் அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் சினத்தையும் மீறி ஏதோ ஒரு வலி வெளிப்பட்டதை ஆடவனின் நெஞ்சம் உணர்ந்துக்கொண்டது.

அவை கடந்த இரண்டு வருடங்களாக சமுதாயத்திலுள்ள ஆண்கள் பலரின் வக்கிரச் செயல்களால் அவள் மனமடைந்த காயத்தின் விளைவு!

அவளின் அந்த ஆக்ரோஷத்திலும் சொற்களிலும் ‘அங்கு என்ன நடந்திருக்கும்?’ என்பதை யூகித்தவனிற்கு சிவப்பிரகாசத்தை அடித்து கொல்லும் வெறி தோன்றியது.

இருப்பினும்,தான் வழங்கும் தண்டனையை விட பாதிக்கப்பட்ட பெண்ணவளின் கையால் கொடுக்கப்படும் தண்டனையே சரியானதாக இருக்கும் என்று மௌனமாக அந்த சிவப்பிரகாசம் அடி வாங்குவதை ஓரமாக நின்று பார்த்திருந்தான்.

அவனின் கண்ணில் கொலைவெறி தாண்டவமாட ஒரு குரூரப்புன்னகையுடன் அவனின் வலியையும் வேதனையையும் கண்டுகளித்திருந்த நேரத்தில் சமந்தா ஒரு வித வன்மத்தோடு அவனின் நெஞ்சில் ஓங்கி மிதித்ததை பார்த்து சட்டென்று சுதாரித்தான் விஜய்.

‘ஐய்யோ…இருக்கிற வெறியில் அவனை கொன்னாலும் கொன்னுடுவாங்க போலவே’ என அவசரமாக அவளின் கரம் பற்றி இழுத்து “ஏங்க?என்னங்க பண்ணறீங்க?அவன் செத்தறப்போறான்?” என பதட்டமாக மொழிய,

பாவையவளோ ஒரு கணம் அவனை திரும்பி முறைத்துவிட்டு மீண்டும் கீழே விழுந்து கிடந்தவனின் மீது பார்வையைச் செலுத்தியவளிற்கு ஆத்திரம் கரையை உடைத்துக்கொண்டு பெருகியது.

நெஞ்சில் துவேசம் பொங்க “செத்தா சாகட்டும் பரதேசி நாயு…இவனெல்லாம் உயிரோடு இருந்து என்ன கழட்டப்போறான்” என கர்ஜித்தவாறே காலால் எட்டி ஓங்கி அவரின் தொடையிலே ஒரு எத்துவிட்டாள்.

அவரோ துடித்துப்போய் “ஆஆ…” என அவ்விடமே அதிர கத்தியதில் “என்னாச்சு…என்ன சப்தம்?” என்று கேட்டுக்கொண்டே அவ்வறையினுள் ஆட்கள் ஒன்று கூட தொடங்கியதை பார்த்த விஜய்யிற்கோ சங்கடமாகியது‌.

அத்தோடு இதற்கு மேல் இங்கிருந்தால் சமந்தாவிற்கு அவப்பெயர் கிடைத்துவிடுமோ என்றெண்ணி “மேடம் என்ன செய்யறீங்க?எல்லாரும் பார்க்கறாங்க…வாங்க முதல்ல போகலாம்” என அவளின் கரத்தை இறுக்கமாக பிடித்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே இழுத்து சென்றான்.

அங்கிருந்த பணியாட்களோ சமந்தாவின் இந்த முரட்டுத்தனமான அதிரடியில் மிரண்டார்கள் என்றால்,தங்களை வாட்டிவதைக்கும் சிவப்பிரகாசம் அடிவாங்கி தரையில் சுருண்டுயிருப்பதை கண்டு பேரின்பமடைந்தார்கள்.

மற்றவரின் வலியில் சந்தோஷிக்கக்கூடாது தான்!!

ஆனால் இராவணனை கொன்ற ராமன் மற்றும் நரகாசுரனை கொன்ற கிருஷ்ணன் போல் தங்களை கொடுமைப்படுத்தி வந்த கொடும் அரக்கனை அழித்த காளியாய் சமந்தா அவர்களுக்கு தெரிந்தாள் என்றால், அசுரனின் அழிவு நாள் நமக்கு பண்டிகை நாள் அல்லவா?

அதனால் அடிப்பட்டு வீழ்ந்துக்கிடந்த சிவப்பிரகாசத்தின் நிலையை பார்த்து உள்ளுக்குள் குதூகலித்துப்போனார்கள்.

அதேநேரம் அந்த அலுவலகத்தின் வாசலிற்கு வந்திருந்த சமந்தாவோ தன்னுள் ஆட்கொண்டிருந்த சீற்றம் சிறிதும் குறையாமல் “விடுங்க” என அவனின் கரத்திலிருந்த தன் கரத்தை உதறியெடுத்தவள்,

“என்கிட்ட அப்படி பேச அவனுக்கு என்ன தைரியம் இருக்கணும்” என அரற்றி அடிப்பட்ட புலியின் சீற்றத்துடன் இங்குமங்கும் நடந்தவாறே ஆங்கில கெட்ட வார்த்தைகளால் அந்த கொடியோனை ஆயிரம் முறை கொன்று குவித்துவிட்டாள்.

விடாமல் திட்டிக்கொண்டே இருந்தவளின் பேச்சுக்கள் ஆடவனான விஜய்யின் காதுகளையே கூச வைக்கும் அளவு தடித்து இருந்தது.

‘ஆத்தாடி…என்னா பேச்சு பேசறாங்க?அடேய் விஜய்…நாளைக்கு நீ யார்னு மட்டும் தெரிஞ்சது செத்தடா மவனே’ என பீதியுடன் தனது அடர்ந்த சிகையை அழுந்த கோதி திருதிருவென விழித்துக்கொண்டிருந்த விஜய்யிற்கோ நெஞ்சில் நீர் வற்றிப்போனது.




 
இலக்கணம் 6:


ஒரு கட்டத்திற்கு மேல் அவளிற்கே நடந்ததினால் கால்கள் பலமாக வலித்ததோ அல்லது விஜய்யின் பார்வையிலிருந்த இறைஞ்சதினாலோ சட்டென்று நடையை நிறுத்தி “விஜய் எனக்கு மூட் அப்செட்…வண்டிய கெஸ்ட் அவுஸ் விடுங்க” என நெற்றியை நீவியவளின் சினம் சிறிது மட்டுப்பட்டிருந்தது.

அவனோ அதற்காகவே காத்திருந்தாற் போன்று ‘ஹப்பாடா…தப்பிச்சோம்டா சாமி’ என சிகையை அழுந்தக்கோதி சட்டென்று வண்டியை கிளப்பினான்.

அவளும் வாகனத்தின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்துக்கொண்டாலும் அவளின் முகமோ உணர்ச்சிகளை துடைத்தெடுத்த பாறை போல் இறுகியிருந்தது.

இப்போதும் அவள் செய்து வந்த விஷயத்தில் அவளிற்கு தவறேதும் இருப்பதாக தோன்றவில்லை.

ஆயினும்,இதன்மூலம் தன்னை ராஜேந்திரன் தவறாக எடுத்துக்கொள்வாரோ அல்லது தன்னுடைய நிறுவனத்திற்கு ஏதேனும் அவப்பெயர் வந்துவிடுமோ என ஆற்றாமையுடன் இருக்கையில் சாய்ந்து கண் மூடிக்கொண்டாள்.

விஜய்யோ கண்ணாடியின் வழியே அவள் முகத்தை ஆராய்ந்தவனிற்கு வருத்தமாக இருந்தது.

அவள் அவரை அடித்துவிட்டு வந்ததற்கு வருந்துகிறாள் போல் என்று தவறாக கணித்து “மேடம் நீங்க எதுக்கு இப்போ வருத்தப்படறீங்க?நீங்க சரியா தான் செய்திருக்கீங்க…அந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் இப்படி தான் பதிலடி கொடுக்கணும்…” என அவளை தேற்றும் விதமாக ஏதேதோ பேசிக்கொண்டிருக்க,படீரென்று இமைத்திறந்தவளின் விழிகளோ இரத்த நிறத்தில் சிவந்திருந்தது.

அவனை கண்ணாடியின் வழியே உறுத்து விழித்து “நீங்க எதுக்கு இப்போ தேவையில்லாமல் எல்லா விஷயத்திலும் ஆஜராகறீங்க மிஸ்டர்…முதல்ல எனக்கு ஆறுதல் சொல்ல நீங்க யாரு?” என காட்டத்துடன் வினவ,

விஜய்யின் முகமோ அவளின் கேள்வியில் சுருங்கிவிட்டது.

ஆனாலும் தன்னை சமாளித்து ”அதில் லை மேடம்…நீங்க வருத்தப்படறீங்கன்னு…” என அவன் அவள் புறம் திரும்பி பதிலுரைக்கும் போதே,

“ஷட் அப் விஜய்” என அந்த வாகனமே அதிர கத்தியவளின் குரலில் அவனிற்கோ தேகம் தூக்கிவாரிப்போட்டது.

அவனோ அதிர்ச்சியில் வாகனத்தை நிறுத்தி திகைப்போடு அவளை காண,

அவளோ முகத்தை சுழித்து எரிச்சல் மிகுந்த குரலில் “ஆர் யூ மேட்?உங்களுக்கெல்லாம் ஒரு தடவை சொன்னால் புரியாதாடா?பொம்பளைங்க எங்களை பார்த்துக்க எங்களுக்கு நல்லாவே தெரியும்…எந்தவொரு சோ கால்ட் ஆண்மகனும் அவனோட சட்டைய கழட்டி எங்க கண்ணீரை துடைக்கவும் வேணாம்…டைம் ஸ்பென்ட் பண்ணி கேர் பண்ணவும் வேணாம்…வி ஆர் ஆல் ஹேவ் ஓன் ஹேண்ட் அன்ட் க்ரிட்…சோ டோன்ட் போக் யுவர் நோஸ் இன் டூ மி” என அழுத்தமான குரலில் மிக நீளமாக இயம்பியவளின் வார்த்தைகள் அவனை மிகவும் காயப்படுத்தியது.

எதிர்ப்பாலினத்தவரின் மீதான வெஞ்சினத்தோடு இவனிடம் இரைந்தவளின் வெண்ணிற வதனமோ கோபத்தில் சிவந்திருந்தாலும் கண்களிலோ மனதிற்குள் உண்டான வெறுப்பினால் கண்ணீர் துறுத்திக்கொண்டு நின்றது.

இத்தனை மாதங்களும் அவள் நெஞ்சிற்குள் அடைத்து வந்த மனக்குமுறல் எல்லாம் இந்தவொரு சந்தர்ப்பத்தில் எரிமலையாய் வெடித்து சிதறியிருந்தது.

ஆனால் அடிப்பட்ட பார்வையோடு அவளை ஏறிட்ட விஜய்யை பார்த்ததற்கு பிறகே அவளின் பிழைப்புரிந்தது.

இதை தான் ‘பழி ஓரிடம்..பாவம் ஓரிடம்’ என்று கூறுவார்களோ?

மற்ற ஆண்களின் மீதுள்ள கோபம் அனைத்திற்கும் வடிகாலாய் எந்த வித தவறும் செய்யாத ஆடவனை வதைத்திருக்கிறோம் என்பதை புரிந்து ‘ஓ காட்’ என தன்னையே நொந்துக்கொண்டு கைகள் கட்டி நெற்றியை அழுந்த தேய்த்தாள்.

‘ரௌத்திரம் பழகு’ என பாரதி கற்று கொடுத்த முழக்கத்தை உபயோகிக்கும் சூழ்நிலையில் இடறினாலும்,அவள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் ஆழ்மன ரணங்களின் உச்சத்தின் விளைவு!!

அதனால் அவள் செய்த அந்த பிழைக்காக அவனிடம் மன்னிப்பை யாசிக்க முற்படாமல் ஒரு பிடிவாதத்துடன் சுருண்டுக்கொண்டாள்.

அதனால் அவன் முகம் பார்த்து இளகத்துடித்த மனதை இறுக்கி அடக்கினாள்.

வெளிவர துடித்த கண்ணீரையும் தொண்டைக்குள் குறுகுறுத்த குமைச்சலையும் மானசீகமாக அழுந்த துடைத்தாள்.

அந்நேரம் சாலையில் அவர்களருகே வந்த ஒரு வாகனத்தின் ஹாரன் ஒலியை கேட்டே பெண்ணவள் தங்களுடைய வாகனம் நெரிசலில் சிக்கியிருப்பதை அறிந்து பட்டென்று சுதாரித்தாள்.

தலையை திருப்பி வெளிப்புறமாக சுற்றிலும் பார்வையால் அலசியவள் மீண்டும் அவன் புறம் திரும்பி அவனை அழுத்தமாக ஏறிட்டவள் “வண்டிய எடுங்க மிஸ்டர் விஜய்” என்றாள் அதிகார தொனியில்.

அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனின் இருதயத்தை ஊசியால் குத்த,இறுகிய முகத்துடன் அவளை ஒரு கணம் வெறித்து விட்டு வண்டியை எடுத்தவனால் அவளை முழுதாய் கணிக்கவே முடியவில்லை.

‘ஒரு நேரம் நெருப்பாய் தகிப்பவள்,மறுநேரம் குளிர்பனியாய் உருகுகிறாள்…இரண்டில் எது இவளது உண்மை குணம்?’ என்ற குழப்பத்துடனே வாகனத்தை அந்த விருந்தினர் இல்லம் நோக்கி செலுத்த துவங்கினான் விஜய்.

அவ்வப்போது அவனின் விழிகள் அவளை தொட்டு மீண்டாலும் காரிகையிடமோ சிறிதும் இளக்கமில்லை.

சில நிமிட பயணங்களுக்கு பிறகு,வண்டியை வாசலில் நிறுத்திய நொடிதனில் சமந்தாவோ துளியும் அவனை பொருட்படுத்தாமல் வண்டியிலிருந்து இறங்கி நடக்க தொடங்கிவிட்டாள்.

விஜய்யோ அன்றைய நாளில் மூன்றாவது முறையாக ‘என்ன பொண்ணுடா இவ?’ என அவளின் முதுகை உறுத்துவிழித்தவனிற்கு தலை கிறுகிறுப்பது போலிருந்தது.

அலுவலகத்தில் அவள் செய்து வைத்திருந்த விபரீதத்தை எவ்வாறு சரி செய்யப்போகிறோம் என்று சிந்திக்கும் போதே மலைப்பாக இருக்க ‘ஓ காட்’ என இருட்டிக்கொண்டு வந்த கண்களை இரு கைகளாலும் அழுந்த தேய்த்தான்.

இவளின் புறம் நியாயம் இருந்தாலும் இதன்மூலமாக அவளிற்கு ஏதேனும் ஆபாயம் ஏற்படுமோ என எண்ணி மூளையை கசக்கியவனிற்கு யோசனை ஒன்று உதயமானது.

சட்டென்று இருந்த இடத்திலிருந்தே அலைப்பேசியின் வழியாக யாருக்கோ தொடர்புக் கொண்டு பேசியவன்,அடுத்த சில நிமிடங்களிலே சமயோஜிதமாய் செயல்பட்டு அவளின் விஷயத்தை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டான்.

அதன்பிறகே ‘ஊப்’ என நிம்மதி பெருமூச்சுடன் பின்னந்தலையில் இரண்டு கையையும் கோர்த்து நெட்டி முறித்தவனிற்கு பாவையவளின் விசித்திர நடவடிக்கைகள் தோன்றி மறைந்தது.

சரேலென்று திரும்பி பூட்டியிருந்த இல்லத்தின் கதவை ஒரு முறை எட்டி பார்த்த விஜய்யோ ‘இன்னைக்கு ஒரு நாளே தலையால தண்ணீ குடிக்க வைக்கறாங்களே…மீதியுள்ள நாட்களை அவங்களோட கடக்கணும்னு நினைச்சா…ஊப்…’ என நீண்டதொரு பெருமூச்சை வெளிவிட்டு களைந்த சிகையை அழுந்தக்கோதி சக்கரதிருப்பியிலே தலை வைத்து படுத்துவிட்டான்.

எப்படியும் தன்னை அவள் உள்ளே அனுமதிக்கப்போவதில்லை என்பதை முன்பே அறிந்து வைத்தவன்,சோர்வில் கண்மூடி அங்கே உறங்கிப்போனான்.

அவளோடு கழித்த இந்த ஒரு சில கணங்களே அவனிற்கு ஏழு யுகமாய் காட்சியளித்திருந்தது.

அவன் எண்ணியது சரியே என்னும் விதமாக இல்லத்தினுள் நுழைந்த தாரகையோ கவனமாக இல்லத்தின் கதவை பூட்டியப்பிறகே தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்தாள்.

முன்பு துரோகத்தினால் ஏற்பட்ட காயங்களே இப்போதும் ரணமாய் வலித்துக்கொண்டிருக்க,இன்னொரு முறை ஒரு ஆண்மகனை நம்பி ஏமாற அவள் தயாராக இல்லை.

அதனால் தலைவலி அவளின் உயிரை குடிக்க,நெற்றியை அழுந்தப்பிடித்துக்கொண்டு கட்டிலில் சரிந்தவளின் மீது நித்திராதேவி இரக்கம் காட்ட மறுத்து சதி செய்தாள்.

இமை மூடினாலே அவளின் விழிதிரையில் விஜய்யின் அடிப்பட்ட பார்வை வந்து இம்சிக்க ‘ஷிட்’ என மெத்தையை ஒருமுறை குத்தி குப்புற படுத்துக் கொண்டாள்.

அத்தோடு தன்னில் நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பை வழங்கி இங்கு அனுப்பிய ராஜேந்திர வர்மனுக்கு என்ன பதில் கூறப்போகிறோம் என்பது ஒரு புறம் அவளின் சிந்தையை தின்றுக்கொண்டிருந்தது.

சஞ்சலம்,தவிப்பு,ஆதங்கம்,சினம்,அருவருப்பு என அனைத்து வகையான கலவையான உணர்ச்சிகளின் ஆக்கிரமிப்பு அவளுள்!

தலையணையில் முகம் புதைத்து கொண்டவளின் மனக்கிலோசத்தை துடைத்தெறியும் விதமாக அவளின் அலைப்பேசியிற்கு ஒரு அழைப்பு வந்தது.

ஆனால் அவளுள் நிரம்பியிருந்த குழப்பங்களின் விளைவால் யாரென்று பார்க்காமலே அழைப்பை நிராகரித்திருந்தாள்.

அலைப்பேசி தொல்லைபேசியாய் மாறி மீண்டும் பலமுறை கூக்குரலிடவும் ‘ச்சை…இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு யார் இந்த நேரத்தில்?’ என எரிச்சலுடனே அழைப்பை எடுத்தவளின் செவிப்பறையில் வந்து மோதிய “மம்மி” என்ற தேனமுத கானத்தில் அவளை ஆட்கொண்டிருந்த அனைத்து உணர்வுகளும் பொடி பொடியாய் நொறுங்கிப்போனது.


அவளுள் புதைந்திருக்கும் அனைத்து உணர்ச்சிகளுக்கும் மகனிடம் ஆறுதல் தேடி அவள் உள்ளம் துடித்தது.

அதனால் இதழ்கள் நடுங்க “க…ண்ணா” என நாதழுதழுக்க அழைத்தவளின் குரல் முற்றிலும் உடைந்திருந்தது.

தாயை நாடும் கன்று என்ற நெறிமுறையை முற்றிலும் மாற்றும் விதமாக,இங்கு ஒரு பேதை தாயவளோ தனது கன்றிடம் ஆறுதல் தேடி சரணடைந்தது.

அவன் ஐந்தரை வயது சிறுவன்…அவள் அவனிற்கு அன்னை என்பதெல்லாம் நினைவடுக்கிலே இல்லை.

அவளிற்கே அவளிற்கு என்று துடிக்கும் ஒற்றை ஆத்ம ஜீவன் அவன் என்பதே அவளிற்கான தீரம்!

அவனின் ஒரு அழைப்பில் இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த விசனக்கழிவுகள் அனைத்தும் குமுறிக்கொண்டு வெளிவர காத்திருந்தது.

“கண்ணா” என்பதை மீறி அவளின் வாயிலிருந்து வார்த்தை வராமல் தடுமாறிய நிலையில்,

“மம்மி என்னாச்சு?ஏன் உங்க வாய்ஸ் க்ரை பண்ணற மாதிரி இருக்கு?யாராவது உங்களை ஹேர்ட் பண்ணிட்டாங்களா மம்மி?” என மகனிடமிருந்து சரமாரியான கேள்விகள் தவிப்புடன் வந்ததற்கு பிறகே பெண்ணவள் சுதாரித்தாள்.

விசுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவளோ ‘நீ வருந்தறது பத்தாதுன்னு எதுக்கு அவனையும் வருத்தறே சமி?’ என மனசாட்சியின் வினாவிலே தன் தவறை உணர்ந்துக்கொண்டாள்.

அதனால் தொண்டையை செருமி “ஐயம் ஆல்ரைட் கண்ணா…படுத்திட்டு இருந்ததால் வாய்ஸ் அப்படி இருந்திருக்கும்” என்றவள்,

களைந்திருந்த புடவையை சரிசெய்து “நீ ஸ்கூல் முடிச்சிட்டு வந்திட்டியா கண்ணா?” என சகஜமாக பேச்சுக்கொடுக்க தொடங்க,

அவனும் “எஸ் மம்மி…நான் பாட்டி கூட ஜஸ்ட் நவ் தான் ஹோம் வந்தேன்…வந்தவுடனே உங்ககிட்ட டாக் பண்ணும் போல இருந்துச்சு…அதான் பாட்டி போன் எடுத்து உங்குக்கு கால் பண்ணேன்…நீங்க ஃப்ரீயா மம்மி?” என அன்னையை புரிந்தாற் போன்று அவளிற்கு இணையாக பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான்.

மகன் தன்னை மறக்காமல் நினைவில் வைத்து பேசிய விதம் அவளின் மனதை ஆகர்ஷிக்க,ஐந்தரை வயது சிறுவனின் அந்த புரிதலில் அன்னையானவள் மெய்சிலிர்த்துப் போனாள்.

‘என்ன தவம் செய்தனை உன்னை சேயாய் அடைவதற்கு என் மகனே’ என நெக்குருகியவள்,அனைத்தையும் மறந்து “கண்ணா இப்போ மம்மி ஃப்ரீ தான்…நீ பேசு” என மகனோடு ஆர்வமாய் உரையாடத்தொடங்கினாள்.

சில நிமிடங்கள் பள்ளியில் அன்று நடந்த நிகழ்வு ஒன்று விடாமல் தோழியாகிய அன்னையிடம் ஒப்புவித்தவன் “மம்மி டூ யு ஹேவ் எனி இன்ட்ரஸ்டிங் திங்க்?” என அவளையும் தன்னுடைய பேச்சில் இழுத்தான்.

அவனின் அந்த கேள்வியில் அவளின் மனக்கண்ணில் முதலில் வந்தவன் ‘விஜய்’ மட்டுமே!

உடனே தலையை உலுக்கி அதிலிருந்து வெளிவந்து “மம்மி லைஃப்பில் ஒரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம்னா அது நீ மட்டும் தான் கண்ணா” என ஆதுரத்துடன் கூறியவள் “ஆமா…பாட்டி எங்க கண்ணா?” என அவளின் தாயை பற்றி விசாரித்தவாறே அறையிலிருந்து வெளியே வந்தாள்.

“மம்மி பாட்டி உன் கூட டூ வாம்…உன் கூட பேசமாட்டேன்னு சொன்னாங்க” என நமுட்டு சிரிப்புடன் அவன் உரைக்க,

சமந்தாவிற்கும் தாயின் அந்த சிறுப்பிள்ளை செயலில் இதழோரம் முறுவல் தோன்ற “பாட்டிக்கு என்னவாம்?” என புருவம் உயர்த்தி கேட்டாள்.

“நீங்க பாட்டி பேச்சை கேட்கவே மாட்டிக்கிறங்களாம்…உங்க இஷ்டத்துக்கு எல்லாமே செய்யறீங்களாம்…என்னை மதிக்காத இந்த வீட்டில் நான் எதுக்கு இருக்கணும்னு கேட்டாங்க” என ராஜி பேசிய ஒவ்வொரு வசனத்தையும் மறக்காமல் அப்படியே திருப்பி படித்தவன்,

“அப்புறம்…” என கன்னத்தில் கைவைத்து இவன் யோசிக்க,

மகனின் அந்த பாவனையை கற்பனை செய்தவளின் இதழ்கள் நன்றாகவே விரிந்தது.

“அப்புறம்..” என இவள் எடுத்துக்கொடுக்க,

“ஹான்…ஞாபகம் வந்துச்சு மம்மி” என துள்ளிக்குதித்து “நான் கசி,இமாஸ்வரம்னு எங்கேயாவது போறேன்னு சொன்னாங்க” என்னும் போதே,

“அடேய்…எல்லாத்தையும் உன் அம்மாகிட்ட அப்படியே ஒப்பிப்பியாடா?” என ராஜி மகனை அதட்டும் குரல் அவளிற்கு கேட்டது.

தாயும் மகனும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் “பாட்டி அப்படி சொன்னதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?” என கவனமாக வினவினாள் சமந்தா.

அவனோ கண்கள் இரண்டும் விரிய “மம்மி யூ டோன்ட் வொர்ரி…கண்ணா பாட்டிக்கிட்ட உங்களுக்காக ஃபைட் பண்ணிட்டேன்” என,

“பாட்டிக்கிட்ட என்ன சண்டைப்போட்டிங்க கண்ணா?” என இவள் ஆச்சரியத்துடன் வினவ,

“மம்மி நான் கையால பாட்டிய ஹேர்ட் பண்ணலை..அவங்களுக்கு வலிக்குமில்லை…அதனால்
ஜஸ்ட் உங்களுக்கு சப்போர்ட் மட்டும் பண்ணேன்…கண்ணா பாட்டிக்கிட்ட ‘பாட்டி நீங்க பிக் கேர்ள் மம்மியும் பிக் கேர்ள்…நீங்க மட்டும் மம்மி சொல்லறதை கேட்காம அவங்களை ஹேர்ட் பண்ணிட்டே இருக்கீங்க…அவங்க மட்டும் நீங்க சொன்னத கேட்கணுமா?’னு கேட்டேன்…அப்புறம்…உங்களுக்கு புடிச்சத நீங்க டு பண்ணற மாதிரி மம்மியும் அவங்களுக்கு புடிச்சத டு பண்ணறாங்க…சோ மம்மிய திட்டாதீங்க பாட்டி’னு பாட்டிக்கிட்ட ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டேன்” என குரலில் ஏற்ற இறக்கத்துடன் விறைப்புடன் பேசிய மகனை அப்படியே வாரியணைத்துக்கொள்ள அவளின் ஆவித்துடித்தது.

“ஐயோ என் தங்கம் எனக்காக பாட்டிக்கிட்ட சண்டைப்போட்டிங்களா?பார்றா…அவ்வளவு பெரிய மனுசன் ஆகிட்டாங்களா என் லக்ஸ் குட்டி” என கேலியாக பேசினாலும் அவனின் பேச்சில் ஒரு தாயாக சிலாகித்துப்போயிருந்தாள்.

“யூ ஆர் குட் சோல் மம்மி…யூ ஆர் பெஸ்ட் மதர் இன் திஸ் வோர்ல்ட்…உங்களை யாராவது ஸ்கோல்ட் பண்ணா நான் அவங்களை பயங்கதமா ஸ்கோல்ட் பண்ணிடுவேன்” என வீர ஆவேசத்தோடு பேசிய சின்னஞ்சிறிய ஜீவனை எண்ணி ஒரு தாயாய் அவளின் உள்ளம் புளங்காகிதம் அடைந்தது.

“ஐ லவ் யூ சோ மச் லக்ஷ் கண்ணா” என உணர்ச்சிப்பெருக்குடன் கூறி அலைப்பேசியின் வழியே முத்தத்தை பரிசளிக்க,

அவனோ வாய் கொள்ள புன்னகையுடன் “நானும் லவ் யூ டூ மம்மி” என அவனும் மழலை குரலில் அவளிற்கு பதில் முத்தம் வழங்கினான்.

மேலும்,சில நிமிடங்கள் அவனிடமும் கூடவே தனது தாயிடமும் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு வைத்தவளின் நெஞ்சிலிருந்த பாரமெல்லாம் சூரியனை கண்ட பனித்துளியாய் விலகி ஓடிவிட்டது.

இதழில் புன்னகை பளீரிட,மகனை பற்றிய எண்ணங்களுடன் அவனுடன் பேசிய நிகழ்வுகளை அசைப்போட்டவாறே முகத்தில் நீர் அடித்து கழுவி,சமையலறையில் நுழைந்து கொட்டை வடிநீரை தயாரித்தாள்.

அந்த இடைவெளியில் ராஜேந்திரனுக்கு அழைத்து யான் செய்த குற்றத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு,அதற்கான மன்னிப்பையும் வேண்டியிருந்தாள்.

அத்தோடு தணிந்த குரலில் “நீங்க இதுக்காக எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன் சார்” என்றவளின் தோரணை மாற,

“ஆனால் அவனை அப்படி அடிச்சதுக்கு எனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லை” என்பதையும் துணிச்சலோடு சேர்த்து கூறினாள்.

அவளிடம் அவருக்கு பிடித்ததே இந்த நேர்மை தான்!!

அதனால் பெரிய மனிதராக “இட்ஸ் ஓகே லிவ் இட் சமந்தா…சொல்லப்போனால்,இவனை மாதிரி கேவலமான ஆட்களின் உண்மை ரூபத்தை வெளியில் கொண்டு வந்ததற்கு நான் தான் உனக்கு நன்றி சொல்லணும்மா…ரொம்ப தேங்க்ஸ்” என மனமாற அவளிற்கு நன்றிக்கூறியவர்,

“அதேசமயம் அவனால் உனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்…ரியலி சாரிம்மா” ஒரு நிறுவனத்தின் முதலாளி என்ற எந்த வித பகட்டுமின்றி தரம் தாழ்ந்து மன்னிப்பு வேண்டினார் இராஜேந்திர வர்மன்.

சமந்தாவோ அவரின் மன்னிப்பில் சங்கடமுற்று “சார் அவன் பண்ணதுக்கு நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கறீங்க?அதெல்லாம் வேணாம் சார்” என மறுப்பாக உரைத்தாள்.

“இல்லம்மா…என்னுடைய வேலைக்காக தான் நீ அங்கப்போயிருக்க…அங்க உனக்கு ஏற்படற எல்லா பாதிப்புக்கும் நான் தான் பொறுப்பு…அதனால் என்னுடைய மன்னிப்பையும் நன்றியையும் நீ ஏத்துக்கணும்” என அவரின் வயதை பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாக தன் செயலுக்குரிய நியாயத்தை விளக்கினார் அந்த மாமனிதர்.

வெகு மாதங்களுக்கு பிறகு,இரண்டாம் முறையாக ஒரு ஆண்மகரின் செயலில் நெஞ்சம் நெகிழ்ந்திட “சார்” என கரகரத்த குரலில் அழைத்தவள்,

பின்பு முயன்று தன்னை சமாளித்து “சார் அந்த விஷயத்தை பாஸ் பண்ணிடுவோம்…இப்போ வேலை விஷயத்திற்கு வருவோம்…நீங்க எனக்கு பத்து நாள் டைம் கொடுத்தீங்க…ஆனால் நான் வந்த வேலை இன்னைக்கு முடிஞ்சிடுச்சு…இதுக்கு மேல் என்ன செய்யணும்னு நீங்க தான் சார் சொல்லணும்” என்றாள் அவளிற்கு உரிய மிடுக்குடன்.

சில கணங்கள் எதிர்முனையில் கனத்த மௌனம்.

அவரிடமிருந்து பதில் வரவில்லை என்றவுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டதோ என சந்தேகித்தவள் அலைப்பேசியை புருவம் சுருக்கி பார்த்துவிட்டு “சார்” என சப்தமாக காதில் வைத்து அழைக்க,

அதில் கவனம் களைந்தவர் “சமந்தா நான் சொன்ன வேலை முடிஞ்சிடுச்சு…பட் எனக்கு இன்னொரு பேவர் பண்ணனும் நீங்க” என்றவுடன்,

அவளோ தனக்கு முன்பிருந்த அடுப்பை அணைத்துவிட்டு “ஷ்யூர் சார்…சொல்லுங்க” என்றாள் மிடுக்கான குரலில்‌.

அவரோ சிறுப்புன்னகையுடன் “இப்போதைக்கு பெங்களூர் பிரான்ச்சில் மேனேஜர் யாருமில்லை…அதனால் புதுசா ஒரு மேனேஜரை போர்ட் மெம்பர்ஸ் அப்பாய்மெண்ட் பண்ணற வரை நீங்க தான் அந்த நிர்வாகத்தை பார்த்துக்கணும்” என்றவுடன் படீரென்று இவளின் முகம் மாறியது.

“அதிக நாள் தேவையில்லைம்மா…ஜஸ்ட் ஒரு த்ரீ டேஸ்…அதுக்கு பிறகு நீங்க இங்க வந்திடலாம்” என்று சேர்த்து கூறியதற்கு பிறகே அவள் தளர்ந்து முகம் மலர்ந்தாள்.

மகனை நிறைய நாட்கள் பிரிய வேண்டியதில்லை என்பதால் மீண்டும் அவள் சகஜமானாள்.

அதனால் அவரிடம் எந்த வித மறுப்பும் கூறாமல் ஒத்துக்கொள்ள,நிறுவனத்தை பற்றி மேலும் சில விடயங்கள் பேசிவிட்டு வைத்தார்.

அவளின் நெஞ்சை உறுத்திய இந்த விடயங்களும் விலகிவிட,மனம் இறகை விட இலேசானது போல் உணர்ந்தாள்.

அதனால் கையில் வடிநீர் கோப்பையுடன் அதனை உறிஞ்சியவாறே வரவேற்பறையிலுள்ள சன்னலின் வழியே தோட்டத்தை ரசித்து பார்க்க தொடங்கினாள்.

இந்த இதமான சூழ்நிலையால் முணுமுணுத்த தலை நோவு கூட இருந்த இடம் தெரியாமல் மாயமாகியிருந்தது,பெரும் விந்தையே!

அவள் இங்கு வந்ததிலிருந்து அவளின் பணிச்சுமையே முழுமையாக அவளை விழுங்கியிருந்ததால்,இந்நிமிடமே சாவகாசமாக தோட்டத்தின் அழகை கண்ணால் பருகுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

அதிலும்,அவளிற்கு மிகவும் பிடித்த சிவப்பு ரோஜா செடியை பார்த்தவளின் உள்ளம் துள்ளிக்குதித்தது.

‘வாவ்…ரெட் ரோஸ்’ என மனம் குதூகலிக்க,அதை காணும் வேட்கையுடன் சரீரம் பரபரத்தது.

அதனால் சடுதியில் முடிவெடுத்து கோப்பையை சுத்தம் செய்து வைத்தவள்,கைகளின் ஈரத்தை துடைத்து ஒரு இனிய பரபரப்புடன் வாசற்கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள்.

அவளின் ஒரே இலக்காக ரோஜா செடி மட்டுமே இருந்ததால் மிகுந்த சோர்வோடு வாகனத்தில் கண்மூடி உறங்கியிருந்த விஜய்யின் நினைவு அவளிற்கு சிறிதுமில்லை.

சிறுப்பிள்ளையென செடியின் முன்பு அமர்ந்து அதனை தன் விரலால் வருடி தீண்டியவளிற்கோ அதன் மென் ஸ்பரிசம் ஒரு இதமான உணர்வை கொடுத்தது.

அவளும் அதுவுமாய் உலகத்தை மறந்து கண்மூடி ஆழ்ந்து அந்த உணர்வை அனுபவித்தவளின் இதயத்தில் மழைச்சாரல் வீசியது.

இதயத்தில் பனித்த நீரின் குளுமை நிஜத்தில் மெய் முழுவதும் பரவ,சட்டென்று கண்விழித்தவளின் முகத்தில் மழை துளிகள் விழ தொடங்கின.

மழையென்றால் அவளிற்கு கொள்ளை பிரியம்.ஆனால் சில மாதங்களாக அவளின் சொந்த விருப்பத்தை கூட வெறுப்பாக மாற்றிக்கொண்டாள்.

இன்று ஏனோ மழையில் நனைய துடித்த மனதை இறுக்கியவளின் பழைய வாழ்வின் தாக்கங்கள் கிளர்ந்தெழ ஆரம்பிக்கவும் ‘வேண்டாம் மனமே…அது முடிந்துவிட்ட அத்தியாயங்கள்’ என தன்னை தானே எச்சரித்து வெடுக்கென்று எழுந்தவளின் பார்வை வட்டத்தில் விஜய்யின் மகிழுந்து விழுந்தது.

முதலில் சாதாரணமாக அதனை ஊடுருவியவளிற்கு அதன்பிறகே அதனுள் தலைசாய்த்து படுத்திருந்த விஜய்யின் விம்பம் தோன்றின.

‘விஜய்’ என அவளின் இதழ்கள் தன்போக்கில் முணுமுணுக்க ‘இவர் ஏன் காருக்குள்ளயே படுத்திருக்கார்?’ என நிச்சலனத்துடன் அவனையே பார்த்திருந்தவளின் கண்களை சிறிது சிறிதாக மழையின் துளிகள் மறைக்க தொடங்கியது.

அத்தனை நேரமும் அவளின் ஞாபக இடுக்கிலிருந்து தொலை சென்றிருந்த விஜய்யின் நினைவுகள் மேலேழ,தன்னால் தான் அவன் இப்படி படுத்திருக்கிறனோ என்ற குற்றவுணர்வு குமிழட்டது.

உடனே பெண்களுக்கே உரிய கருணை சுபாவம் தலைதூக்க வதனத்தில் வழிந்த நீர் திவலைகளை துடைத்தெறிந்துவிட்டு அவனை நெருங்கினாள்.

திண்மையான பருத்தி புடவையை அணிந்ததிருந்தால் அவளின் புடவை நீரில் நனைந்தப்போதிலும்,அவளின் வரி வடிவத்தை எடுத்துக்காட்ட முனையவில்லை.

அதனால் தன் தோற்றத்தை பற்றிய அச்சமின்றி மகிழுந்தை நெருங்கி கண்ணாடி கதவை ஒற்றை விரலால் தட்டினாள்.

மழை அடித்து பெய்யும் சப்தத்தில் அவளின் தட்டும் ஒலி அதனுள் அமிழ்ந்துப்போயிருந்தன.

இருளின் அடையாளங்கள் வானில் எட்டிப்பார்க்க தொடங்கியிருக்க,அதனை அவதானித்த சமந்தா இப்போது சிறிது உரக்கவே தட்டி “விஜய்” என கத்தியழைத்தாள்.

நல்ல நேரமாக அவளின் குரலும் தட்டலிலும் நித்திரை களைந்து வெடுக்கென்று எழுந்தவனிற்கு சில நிமிடங்கள் ஒன்றுமே விளங்கவில்லை.

அதனால் சுற்றிலும் அவசரமாக விழிகளை சுழற்றியவனின் பார்வையில் வெளிப்புறம் நின்றிருந்த காரிகையவள் தோன்றினாள்.

அத்தோடு வருணப்பகவனின் கொடையும் அவனது இயந்திர ரதமும் ஓரளவு சூழ்நிலையை உணர்த்த ‘காரிலே தூங்கிட்டனா?’ என தன்னையே கேட்டுக்கொண்டு வண்டியிலிருந்து கீழிறங்கினான்.

அவன் இறங்குவதை அறிந்து கதவை திறக்க வழிவிட்டு தள்ளி நின்றவளின் கண்களோ அவனையே மேலிருந்து கீழாக நோட்டமிட ஆயுத்தமாகியது.

அவனோ கண்களை அழுந்தத்தேய்த்து “எப்படி காரிலே தூங்கினனேனு தெரியலை மேடம்” என கொட்டாவி விட்டவாறு பின்னங்கழுத்தில் கைவைத்து நெட்டி முறித்தான்.

எதையும் எளிதாக கடந்துவிடும் குணமுள்ளவன் விஜய் என்பதால் அவனை அவள் அவமதித்து பேசியதை மறந்துவிட்டிருந்தான் போலும்!

பாவையவளோ மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி சில நிமிடங்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளிற்கு சடுதியில் ‘என்ன தோன்றியதோ?’ “உங்களுக்கு தூங்கணும்னா நல்லா காலை நீட்டி தூங்க வேண்டியது தான?எதுக்கு இப்படி காரிலே உட்கார்ந்து தூங்கி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கிறீங்க?” என மென்மையாய் கடிந்துக்கொள்ள,

இவனோ அதிர்ச்சியில் விழி விரித்து ‘திட்டறதெல்லாம் திட்டிட்டு இப்போ என் மேல் அக்கறை காட்டறது நம்ப மேடம் தானா?’ என அவளை உற்றுப்பார்க்க,

அவளோ அதனை கவனிக்காதவள் போல் “முதல்ல உள்ளே போய் படுங்க…மழை வேற பெய்யுது” என கரிசனத்துடன் உரைத்தது தான் தாமதம் துள்ளி குதித்து “ஐய்யோ தேங்க்ஸ் மேடம்…தேங்க்ஸ் மேடம்…நானே உங்ககிட்ட எப்படி கேட்கறதுன்னு தயங்கினேன்…இப்போ நீங்களே சொல்லிட்டீங்க…உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியல…ஐயம் சோ ஹேப்பி” என பெரும் உவகையுடன் அவளின் கரத்தை பிடித்து குலுக்கியவன் “நீங்க ரொம்ப நல்லவங்க மேடம்” என அவளை சிலாகித்து பாராட்டவும் செய்தான்.

சமந்தாவோ அவனின் இந்த தொடுகையை சற்றும் எதிர்ப்பாராமல் பேயறைந்தது போல் அவ்விடத்திலே நின்றிருக்க,அதனை ஒரு குறுஞ்சிரிப்புடன் நோக்கிய விஜய்யோ தனக்கு பிடித்த பாடல் ஒன்றை சீட்டியடித்தவாறே இல்லத்திற்குள் துள்ளல் நடையுடன் நுழைந்துக்கொண்டான்.

இடி முழங்கிய ஆகாயத்தின் இரைச்சலில் உடலை சிலுப்பி நிகழ்விற்கு வந்தவளோ ‘இங்கு என்ன நடந்தன்பது போல் அந்தரத்தில் இருந்த கரங்களையே இமைக்காமல் வெறித்து பார்த்திருந்தாள்.

‘முதல் பார்வையில் வசீகரித்து சென்ற மன்னவனே!
உன் ஒற்றை தீண்டலில் மெய் சிலிர்க்க செய்தாய்…
உயிரில்லா இலக்கணம் அவள் என்று அறியும் வேளை நிஜம் விட்டு செல்வாயோ?’
சமந்தா

 
Status
Not open for further replies.
Top