வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மதுரமே ஈஷணமே 3

GG writers

Moderator
மதுரமே ஈஷணமே 3

eiLIPJR54107.jpg
காரிகையின் விரல் அசைவில் வீணையும் உயிர் பெற்று இசையெழுப்ப, அவள் பாடிய மெல்லிசையில் கதிரவனும் விழித்திறக்கும் சமயம் முழுமையாய் பாடி முடித்தவள், பயபக்தியோடு வீணையை வணங்கிவிட்டு, தனக்காக புன்னகையோடு காத்திருக்கும் தன் கார்முகில் கண்ணனிடம் வழக்கம் போல தன் கண்ணனுக்க்காக பல வேண்டுதலோடு பூஜை செய்தாள் அவள் தாரா.

இவள் தான் அவிரனின் தாரா, அவிரனை உருக உருக காதலித்து, அவனுக்கு காதலை அள்ளி அள்ளிக்கொடுத்து, இறுதியில் அவனுக்கு தீராத வலியை பரிசளித்துவிட்டு, அதற்காக இன்று இந்த நொடி வரை வேதனையில் தவித்து கொண்டிருக்கிறாள் பெண்ணவள்.

'அவிரன் நல்லா இருக்கணும், எனக்கான மொத்த சந்தோஷத்தையும் அவனுக்கே குடுத்துரு, அவனுக்கு வர்ற அத்தனை கஷ்டத்தையும் எனக்கே தந்திடு' இத்தனை வருடத்தில் நித்தமும் கேட்கும் வேண்டுதல் தான். அதையே இன்றும் கேட்டவள், பூஜை செய்து முடித்ததும் தன் குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் ஆரத்தி தட்டை நீட்டினாள்.

அப்பொழுது குடும்பத்தில் மூத்தவரும் தாரா மற்றும் வைஷ்ணவியின் தாத்தாவுமான வைத்தீஸ்வரன், தன் மூத்த மகன் ராஜாவை அழைத்து,

"ராஜா, டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சுல” என்று வினவினார்.

"ஆமா அப்பா”

“ஃப்லைட் எத்தனை மணிக்கு ??"

“நாளைக்கு காலையில பத்து மணிக்கு”

“ஓ அப்போ எட்டு மணிக்கே கிளம்பணும்ல” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது
அவர்களின் உரையாடலில் குறுகிட்ட அவரது மனைவியும் தாரா மற்றும் வைஷ்ணவியின் பாட்டியுமான விசாலாட்சி,

"கண்டிப்பா இவ அங்க போய் படிச்சே ஆகணுமா டா" இத்தோடு ஒரு பத்து தடவையாவது கேட்டிருப்பார் இருந்தும் மனம் கேளாது மீண்டும் தன் மகனிடம் வினவினார்.

"விசாலாச்சி எப்போ வந்து என்ன பேசிட்டு இருக்க"

"என்னங்க கொஞ்சம் சும்மா இருங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாது”என்று தன் கணவர் வைத்தீஸ்வரனை அதட்டியபடி தாராவின் கரங்களை பற்றிக்கொண்ட விசாலாட்சி,

"உன்னை பார்க்காம நான் எப்படி டி இருக்க போறேன்”என்று வருந்தியவர் மேலும் தொடர்ந்து,

"எல்லாம் உன்னை சொல்லணும் டா ராஜா, இங்க எந்த காலேஜும் இல்லைன்னு அங்க போய் அதுவும்" என்று ஏதோ சொல்ல வந்தவர், "விசாலாட்சி" என்ற தன் கணவரின் அதட்டலான அழைப்பில் அமைதியாகிவிட, விசாலாட்சி எதை குறிப்பிட்டு அவ்வாறு கூறினார் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால், தாராவின் முகம் வாடிவிட, தன் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவிய ராஜா,

"அம்மா அது ரொம்ப பெரிய காலேஜ், அவ்வளவு சுலபமா அங்க யாருக்கும் படிக்க வாய்ப்பு கிடைக்காது. அந்தக் காலேஜ் என்ட்ரன்ஸ்ச பாஸ் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. ஆனா நம்ம தாரா அதுல பாஸும் பண்ணி ஃபஸ்ட் மார்க்கும் எடுத்திருக்கா. ஆனா நீங்க புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்கீங்க, அந்த ஊரும் தாரா வளர்ந்த ஊரு தானே, அதெல்லாம் என் தாரா சமாளிச்சுக்குவா" என்றார் பெருமிதத்துடன்.

“இதையே சொல்லி எங்க எல்லாரையும் சம்மதிக்க வச்சிட்டீங்க, ஆனா காலம் கெட்டு போய் கிடக்குதுன்னு சொன்னா உங்களுக்கு புரியவா செய்யுது” என்று மீண்டும் விசாலாட்சி அதையே சொல்லவும், அவருடன் இணைந்து கொண்ட அவரது இளைய மருமகளும் ஆனந்தனின் மனைவியுமான செல்வ ஷாந்தி,


"அத்தை சொல்றதும் சரி தானே பெரியத்தான், நம்ம ஊர்ல இல்லாத காலேஜா என்ன, முதல் டிகிரி இங்க தான முடிச்சா, அடுத்த படிப்பும் இங்கேயே படிக்க வேண்டியது தானே, நம்ம வைஷ்னவி இங்க தானே படிக்கிறா, தாராவை மட்டும் ஏன்”என்று தொடர போகவும் அவரை இடைவெட்டிய அவரது கணவர் ஆனந்த்,

"இவ்வளவு மார்க் வாங்கி இருக்கும்போது அதுக்கு ஏத்த காலேஜ்ல படிக்கிறது தானே சரி. இங்க பாருங்க, தாரா அங்க போய் படிக்க தான் போறா இதுல எந்த மாற்றமும் வரப்போறதில்லை, அதனால இந்த தேவையில்லாத பேச்செல்லாம் விட்டுட்டு எல்லாரும் அவ கிளம்புறதுக்கான ஏற்பாடு பண்ணினா நல்லா இருக்கும்" முறைக்கும் தன் துணைவியை ஓரக்கண்ணால் பார்த்தபடி கூறினார்.

அப்பொழுது, "அப்படி சொல்லுடா ஆனந்தா, அவ ஏதோ கல்யாணம் பண்ணிக்கிட்டு மாப்பிளை வீட்டுக்கு போறமாதிரி எல்லாரும் வருத்தப்பட்டுட்டு இருக்காங்க, படிப்பு முடிஞ்சதும் திரும்ப வர போறா, நாளைக்கு ஊருக்கு கிளம்ப போற புள்ளைகிட்ட போயிட்டு ஏன் போற எதுக்கு போறன்னு, போங்க எல்லாரும் அவங்க அவங்க வேலைய பாருங்க” என்ற வைத்தீஸ்வரனிற்கு எதிர்பேச்சு பேசாமல் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

அனைவரும் அங்கிருந்து சென்றதும் ராஜா தன் தந்தையிடம், "அப்பா உங்களுக்கு என்னுடைய முடிவுல வருத்தம் இல்லைல” என்று தயங்கியபடி கேட்க,

தாராவின் தலையை அன்போடு வருடிய வைத்தீஸ்வரன், தன் மகனை பார்த்து புன்னகைத்தவாறே,

"நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு புரியுது, ஒரு அப்பாவா உன் பொண்ணுக்கு என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சிருக்க, மத்தவங்க சொல்றதெல்லாம் பெருசா எடுத்துக்காத, செல்வா சொல்றத மனசுல வச்சுக்காத, வைஷுவையும் தாராயையும் நீ என்னைக்கும் பிரிச்சு பார்த்ததில்லை, அது எனக்கும் ஆனந்துக்கு தெரியும், அப்புறம் என்ன போ பா, எதை பத்தியும் யோசிக்காத”என்று சொல்லவும், அதுவரை ஒருவித குழப்பத்தில் இருந்த ராஜா தெளிவடைந்தவராய் அங்கிருந்து சென்றுவிட,

முக வாட்டதுடன் நின்றிருந்த தன் பேத்தியை பார்த்த வைத்தீஸ்வரன், அவளது முக வாட்டதுக்கான காரணத்தை அறிந்திருந்தும் எதுவும் பேசாது அவளது கரத்தை பற்றி கொண்டவர்,

"வாழ்க்கையில சில விஷயங்களை ரொம்ப யோசிக்க கூடாது, நடக்குறது எல்லாம் நன்மைக்கேனு அதை அதன் போக்கிலே விட்ரனும், எல்லாம் நல்ல படியா நடக்கும், எனக்கென்னவோ உன் வாழ்க்கையில ஒரு புது திருப்பம் வரும்ன்னு தோணுது” என்று நம்பிக்கையோடு எடுத்து கூறிய தன் தாத்தாவின் அனுபவ வார்த்தைகளை தன் மனதில் பதித்துக்கொண்டவள், தனது தாத்தாவிடம் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு, நாளைக்கு சென்னை செல்ல போவதால் தன் தோழிகளை சந்தித்துவர சென்றாள்.

@@@@@@@

அடுப்படியில் பாத்திரங்கள் எல்லாம் செல்வாவின் தளாத்திற்கேற்ப மிக பிரமாதமாக ராகம் போட, செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆனந்தன் நாளிதழை புரட்டுவதிலே மும்முரமாய் இருந்தார்.

அப்பொழுது, “பேப்பர்ல என்ன விஷேஷம்”என்ற குரலில்,

“அண்ணி, கோவிலுக்கு போயிட்டு வந்துட்டீங்களா”என்ற கேட்டபடி நாளிதழை மடக்கி அருகில் வைத்துவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றார் ஆனந்த்.

“இன்னைக்கு தரிசனம் ரொம்ப நல்லா இருந்துச்சு தம்பி”என்ற ஜானகி , அடுப்படியில் பாத்திரங்கள் புரளும் தத்தம் கேட்டு,

“என்ன கிச்சன்ல இருந்து சத்தமா வருது”என்று கேட்டுக் கொண்டே கிச்சனுக்குள் நுழைய போக, அவரை தடுத்த ஆனந்த்,

“அது ஒன்னும் இல்ல அண்ணி உள்ள என் அன்பு மனைவி மிருதங்கம் கத்துக்கிட்டு இருக்காங்க” சிரிப்புடன் கூறினார்.

“என்ன தம்பி நீங்க, உங்களுக்குள்ள ஏதும் சண்டையா”என்று ஜானகி அக்கறையோடு கேட்க, ஆனந்தன் பதில் கூறுவதற்குள்,

"இந்தாங்க காஃபி” என்றபடி அடுப்படியில் இருந்து வந்த செல்வசாந்தி, மலர்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த ஜானகியை பார்த்து,

“என்ன அக்கா கோவில்ல பூஜை எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சா, உங்க பொண்ணு வெளியூர்ல பெரிய காலேஜுக்கு போறான்னு எல்லா ஏற்பாடும் ரொம்ப பிரமாதமா பண்ணிருப்பீங்களே. எல்லாம் சரி தான் ஆனாலும் பார்த்து இருக்க சொல்லி அனுப்புங்க, நம்மள கேட்க யாரும் இல்லைன்னு, முன்ன மாதிரி அவ இஷ்டத்துக்கு இருந்திடப் போறா”என்று ஒருவித ஏளன குரலில் கூறியவள், தன் கணவன் கோபத்துடன் ஏதோ பேச வரவும்,

"என்ன அக்கா பண்றது, நம்ம பொண்ணு நல்ல பொண்ணு தான் ஆனா காலம் சரி இல்லையே அதான் சொன்னேன். உங்களுக்கும் காஃபி எடுத்துட்டு வரட்டுமா" என்று பேசுவதை பேசிவிட்டு அக்கறையாக இருப்பது போல காட்டிக் கொள்ள, எல்லாம் தெரிந்தும் எதையும் காட்டிக் கொள்ளாத ஜானகியோ,

"இல்லமா எனக்கு வேணாம்" என்று மறுத்துவிட்டார்.

"சரி அக்கா" என்ற செல்வ சாந்தி,

"என்ன காஃபியையே பார்த்துட்டு இருக்கீங்க சீக்கிரம் குடிச்சிட்டு வாங்க கொஞ்சம் வேலை இருக்கு”என்று தன் கணவரை அதட்டியபடி தன் அறைக்குள் சென்றுவிட, ஆனந்துக்கு தான் முகவாட்டத்துடன் காணப்பட்ட தன் அண்ணியை பார்த்து வருத்தமாக இருந்தது.

"அண்ணி அவ சொல்றதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க” தயக்கத்துடன் ஜானகியிடம் கூற, தன் கொழுந்தனின் தர்ம சங்கடத்தை உணர்ந்து கொண்ட ஜானகி,

"அட அதெல்லாம் நான் ஏதும் நினைக்கலை தம்பி, நம்ம செல்வா தானே, நீங்க எதுவும் நினைச்சிக்காதீங்க, எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு நான் வரேன்”என்று புன்னகைத்தபடி அங்கிருந்து சென்றுவிட, மனைவி மீது கோபம் கொண்ட அனந்த், அதே கோபத்துடன் மனைவிடம் வந்து தனிமையில்,

"அண்ணிகிட்ட ஏன் இப்படி பேசுன”என்று அதட்டினார்.

“இப்போ நான் என்ன உங்க அண்ணி கஷ்டப்படுற மாதிரி பேசிட்டேன், எல்லாம் நடந்ததை தானே சொன்னேன் புதுசா ஒன்னும் சொல்லிடலையே. பதினெட்டு வயசுலயே காதல்னு வந்து நின்னவ அவ, இப்போ அந்த பையன் இருக்கிற ஊருக்கே அனுப்புனா சும்மா இருப்பாளா, தாலியோட வந்து நின்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை பார்த்துக்கோங்க”

"என்ன பேசிட்டு இருக்க நீ, வாய மூடு, முடிஞ்சு போனதை ஏன் இப்போ பேசிட்டு இருக்க"

"முடிஞ்சது மறுபடியும் தொடங்கிட கூடாதே அதுக்காக தான் சொல்றேன்"

"எல்லாம் பொறாமையில பேசிட்டு இப்ப வந்து என்கிட்ட ரொம்ப நல்ல எண்ணத்தோட பேசுற மாதிரி நடிக்க வேண்டாம்"

“தெரியும்ல அப்புறம் ஏன் என்கிட்ட கேக்குறீங்க”

“உனக்கென்ன பைத்தியமா டி புடிச்சிருக்கு”

“ஆமா பைத்தியம் தான், எல்லாம் உங்களை சொல்லணும் உங்க குடும்பத்தாளுங்க முன்னாடி என்னையும் என் பொண்ணையும் விட்டு குடுக்குறதுன்னா உங்களுக்கு ரொம்ப புடிக்குமே”

“நான் எப்போ விட்டு குடுத்தேன்”

“இன்னைக்கு வைஷு நல்லா படிக்கலைன்னு சொல்லல்ல”

“நான் தாரா நல்ல மார்க் எடுத்திருக்கா அதனால நல்ல காலேஜ்ல படிக்க போறான்னு சொன்னேன்”

“அப்போ என் பொண்ணு நல்லா படிக்கலை அதனால அவ பெரிய காலேஜ்ல படிக்கலனு தானே அர்த்தம்”

“நம்ம பொண்ணு”

“ஓ உங்களுக்கு நியாபகம் இருக்கா, நான் கூட மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன்"

“செல்வா”

“இப்போ ஏன் முறைக்கிறீங்க நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன். நீங்க தொடங்கி, ஏன் நம்ம சொந்தகாரங்க அத்தனை பேரும் தாரா புராணத்தையே தானே படிக்கிறீங்க, இந்த வீட்ல யாரு என் பொண்ணு வைஷ்ணவிய கண்டுக்குறாங்க”

“ஏய் ஒருவீட்ல ஒரு குழந்தை ஏதாவது நல்லா பண்ணினா பாராட்ட மாட்டாங்களா, அதுக்கு போய் என்னலாமோ பேசுற, இங்க பாரு செல்வா உன் எண்ணம் ரொம்ப தப்பா இருக்கு ஒரே வீட்ல இருந்துட்டு இப்படி பொறாமையோடு இருக்காத அது நல்லா இல்லை, அண்ணனும் அண்ணியும் என்னைக்காவது வைஷுவையும் தாராயையும் பிரிச்சி பார்த்திருப்பாங்களா நீ மட்டும் ஏன் இப்படி இருக்க”

“ஓ உங்க அண்ணனும் அண்ணியும் பிரிச்சே பார்க்கல, அப்போ இப்போ பண்றதுக்கு பேரு என்னது”

“அவங்க பொண்ணை அவங்க படிக்க வைக்கிறாங்க இதெல்லாம் ஒரு விஷயமா”

“ஒரு வீட்ல ரெண்டு புள்ளைங்க இருக்கும் பொழுது அதென்ன அவங்க பொண்ணுக்கு மட்டும் ஒசத்தியா, அப்போ என் பொண்ணு இளிச்சவாயா, இதுல மாமாவும் நீங்களும் சப்போர்ட் வேற. ஏற்கனவே அவள வச்சு பிரச்சனை வந்திருக்கு மறுபடியும் அவளையே தலையில தூக்கி வச்சி கொண்டாடுங்க”

“தாரா நல்ல மார்க் வாங்கிருக்கா அண்ணன் பெரிய காலேஜ்ல சேர்த்திருக்காரு. அதுக்கும் முடிஞ்சு போன விஷயத்துக்கும் ஏன் முடிச்சு போடுற. சின்ன பொண்ணு அந்த நேரம் ஏதோ வயசு கோளாறுல தப்பு பண்ணிட்டா, அதையே சொல்லிட்டு இருக்க"

“சரி முடிஞ்சு போன விஷயத்தை இப்ப பேசல. ஆனா இவ்வளவு செலவு பண்ணனுமா என்ன? இன்னைக்கு பெரிய காலேஜ்ல படிக்க வைக்காங்க, அப்புறம் மேலும் படிக்க வைப்பாங்க அப்புறம் அதுக்கேத்த மாதிரி நல்ல வசதியான மாப்பிள்ளையா பார்த்து கெட்டி குடுப்பாங்க, நான் பெத்ததுக்கு படிப்பும் வரலை ஒரு அறிவும் இல்லை” என்று தொடர போன தன் மனைவியை இடைவெட்டிய ஆனந்த்,

“நம்ம வைஷுவை ஏன் நீயே குறைச்சு மதிப்பிடுற, நல்ல மார்க் வாங்கினா தான் அறிவாளியா என்ன, டைலரிங் படிக்கிறது ஒன்னும் தப்பான விஷயம் இல்லை, நம்ம வைஷுவ நினைச்சா எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா, எவ்வளவு அழகா எம்ப்ராய்ட்ரி போடுறா, படிக்கும் பொழுதே சம்பாதிக்கிறா, அவளுடைய மனசுக்கு புடிச்சதை செய்யுறா சந்தோஷமா இருக்கா, இதே அவளுக்கு விருப்பம் இல்லாத ஏதோ ஒரு கோர்ஸ்ல சேர்த்து விட்ருந்தா, இப்போ இருக்குற மாதிரி சந்தோஷமா இருப்பாளா”

“அவளை இன்ஜினீயர் ஆக்கணும்ன்னு நினைச்சேன்”

“அவளும் நினைக்கனும்ல, கவுரவத்துக்காக படிக்க கூடாது, நாம படிக்கிற படிப்பு தன்னம்பிக்கைய குடுக்கணும் அதுவே நமக்கு பாரமா இருக்க கூடாது”

“அதெல்லாம் இல்லை இந்த வீட்ல தாராக்கு ஒண்ணு வைஷுக்கு ஒண்ணு, ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க நீங்க எல்லாரும் அந்த தாராவை தலையில தூக்கிவச்சு கொண்டாடுறீங்க, ஆனா ஒருநாள் இல்லை ஒருநாள் அவ நம்ம குடும்பத்து மானத்தை வாங்க தான் போறா”மூச்சு வாங்க சிடுசிடுத்த தன் மனைவியை முறைத்தபடியே,

“பொண்டாட்டிய அடிக்க கூடாதுன்னு ஒரு கொள்கையோட இருக்கேன்”என்று தன் விரலை உயர்த்தி எச்சரிதப்படி அங்கிருந்து சென்றார் ஆனந்த்.

@@@@@

"ராஜா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”தயங்கியபடி நின்றுகொண்டிருந்த தன் மனைவியை பார்த்து ராஜா,

“பேசலாம் முதல்ல, திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணு, நான் என்னுடையதை பண்ணிட்டேன், நீயும் சீக்கிரம் பண்ணிரு”அவசர அவசரமாக கூறிய கணவரின் கரங்களை பற்றிய ஜானகி,

“ராஜா பேக் பண்ணறதெல்லாம் இருக்கட்டும் அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசணும்”என்று பிடிவாதமாக கூறிய தன் மனைவியின் முகவாட்டத்தை கவனித்த ராஜா, ஜானகியை தன் அருகில் அமரவைத்து அவரது கரங்களை தன் கரங்களுக்குள் வைத்து, “சொல்லு என்ன விஷயம்”

“தாரா கண்டிப்பா அந்த ஊர்ல தான் போய் படிக்கணுமா என்ன”

“யாரும் ஏதும் சொன்னாங்களா”

“நான் சொல்றேன்”

“இதுக்கான பதிலை எத்தனை தடவை தான் சொல்றது”

“ராஜா”


"நம்ம பொண்ணோட ஆசையை நிறைவேத்துறது நம்ம கடமை ஜானு. அவ ப்ளஸ் டூல ரொம்ப கம்மியான மார்க் எடுத்து டிப்ளோமா படிக்கும் போது ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனா இப்போ பெரிய காலேஜ்ல அவளுக்கு சீட் கிடைச்சிருக்கு, அந்த காலேஜ்ல படிச்சா தாராக்கு ப்ரைட் பியூச்சர் இருக்கு, எண்ட்ரன்ஸ்ல பாஸ் பண்ணவே கஷ்ட படுறவங்க மத்தியில நம்ம பொண்ணு நைன்டி டு ( 92 ) மார்க் வாங்கி டாப்பரா வந்திருக்கா.

அந்த காலேஜ் சரித்திரத்துலேயே ஒரு கேண்டிடேட் நைன்டி அபோவ் வாங்குறது இது தான் முதல் தடவையாம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி யாரோ பையனா பொண்ணான்னு சரியா தெரியல, அங்களுடைய மார்க் தான் அந்தக் காலேஜ் சரித்திரத்துலையே ஹையஸட் மார்க்கா இருந்துச்சாம், ரெண்டு வருஷம் கழிச்சு என் பொண்ணு அவங்களுடைய ரெக்கார்டையே உடைச்சிட்டா, உடைச்சது மட்டும் இல்லை புது ரெகார்டே உருவாக்கிருக்கா, இது எவ்வளவு பெரிய பெருமை அது புரியாம நீ ஏதேதோ பேசிட்டு இருக்க”

“எல்லாம் சரிதாங்க ஆனா அவ கொஞ்சம் வெகுளி பக்குவம் இல்லை, யாரையும் உடனே நம்பிருவா, வீட்லயும் யாருக்கும் பிடிக்கல எதுக்கு அங்க போய் படிக்க வச்சிட்டு, நம்ம கண்ணு முன்னாடியே இருக்கட்டுமே.

அட்மிஷன் அப்போ பார்த்திங்கள்ல, காலேஜ் போலவா இருந்துச்சு அங்க பசங்க பொண்ணுங்க எல்லாம் ஒன்னா சுத்திட்டு இருந்தாங்க, ஏதும் தப்பா நடந்துட்டா” கலக்கத்துடன் வினவினார்.

“சில வருஷத்துக்கு முன்னாடி நாம அந்த ஊர்ல தானே இருந்தோம், பொண்ணுங்களும் பசங்களும் சேர்ந்து சுத்துறத நாம பார்த்ததே இல்லையா. ஏன் அங்க மட்டும் தான் சுத்துறாங்களா நம்ம ஊர்ல சுத்தலையா. என்ன பேசுற ஜானு, அவ நம்ம பொண்ணு, நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக அந்த பையன வேண்டாம்ன்னு தூக்கி போட்டவ என் பொண்ணு, என் பேச்சை மீறி எதுவும் பண்ண மாட்டா”

"அப்போ சின்ன பொண்ணு இப்போ வளர்ந்துட்டா, மறுபடியும் காதல்னு வந்து நின்னா என்ன பண்றது”

"அதை பத்தி நீ பயப்படாத, இனிமே என்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்னு அது போல பண்ணமாட்டேன்னு சொல்லி இருக்கா, அதனால தேவையில்லாத பயத்தை எல்லாம் விட்டுடு ஜானு"

"------"

"ஏய் இப்போ ஏன் அழற”

"ஒன்னும் இல்ல பழச நினைச்சு பார்த்தேன், அன்னைக்கு மட்டும் நம்ம பொண்ணு அப்படி ஒரு விஷயம் பண்ணலன்னா இன்னைக்கு யாரும் நம்ம பொண்ண குத்தி காட்ட மாட்டாங்கள்ல.” என்று கூறும் பொழுதே ஜானகியின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய,

"பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க ஜானு, அதெல்லாம் பெருசா எடுத்துக்காத. தாரா நம்ம பொண்ணு ஜானு, அறியாத வயசுல ஏதோ தப்பு பண்ணிட்டா, அதுக்காக அதையே நாம சொல்லிட்டு இருக்க முடியாது. விடு பார்த்துக்கலாம்"
ராஜா ஜானகியை ஆறுதல் படுத்தியவாறே அவரது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டிருந்தார்.

இதை அனைத்தையும் வாசலில் நின்று கவனித்து கொண்டிருந்த தாராவுக்கு மனதில் இன்னும் பாரம் கூடி போனது. அன்று தந்தைக்காக, தான் உயிருக்கு உயிராக காதலித்தவனை வேண்டாம் என்று சொன்னவளால், முழுதாக தன்னவனை தன் மனதில் இருந்து தூக்கி எறிய முடியவில்லையே.

இதோ நித்தமும் அவனுக்காகவே உருகிக் கொண்டிருக்கிறாளே, அது மட்டுமா அவனுக்காக இப்பொழுது என்னவெல்லாம் செய்திருக்கிறாள். ஆக தன்னை உயிருக்கு உயிராக காதலித்தவனுக்கு வலியை கொடுத்த குற்ற உணர்வு ஒரு பக்கம், மற்றும் தன்னை அளவுக்கு அதிகமாக நம்பும் தன் தந்தைக்கு உண்மையாக இருக்க முடியவில்லையே என்கிற குற்ற உணர்வு மறுபக்கம் என பாரம் கொண்ட பெண்ணின் மனதில் மேலும் பாரம் கூடி போக, கலங்கிய கண்களை துடைத்து கொண்ட பெண்ணவளோ அங்கிருந்து செல்ல போக, அவள் செல்வதை கண்ட ராஜா,

“ஏய் குட்டி மா எங்க போற இங்க வா, வா டா அப்பாவ பார்க்க வந்துட்டு, எதுவும் பேசாம போற, வா இப்படி வந்து உக்காரு” தன் மகளின் சிகையை ஆசையாய் வருடியவாறு கூறினார்.

“அப்புறம் என் செல்ல குட்டி இப்போ வளந்துட்டாங்க பெரிய காலேஜ்ல படிக்க போறாங்க”

“----------” பதில் ஏதும் பேசாது லேசாக புன்னகைத்தாள்.

“அது ரொம்ப பெரிய காலேஜ், நீ அங்க போய் நல்லா படிக்கணும், புது புது நண்பர்கள் கிடைப்பாங்க நீ சந்தோஷமா இருக்கணும் டா, ஆனா அதே சமயம் உன்னுடைய சுகந்திரம் மத்தவங்களுக்கு கஷ்டத்தை குடுத்திட கூடாது, தயிரியமா இருக்கணும், எந்த பிரச்சனை வந்தாலும் நேர்மையா இருக்கணும், போல்டா ஃபேஸ் பண்ணனும் எப்போதும் சந்தோஷமா இருக்கணும்”என்றவரை தொடர்ந்து ஜானகி,

“மத்தவங்க கிட்ட பழகும் பொழுது கவனமா இருக்கணும், யாரையும் உடனே நம்ப கூடாது, அம்மாகிட்ட எதுவும் மறைக்க கூடாது, வாரத்துக்கு ஒருதடவையாவது கோவிலுக்கு போகணும், சினிமா பார்க் பீச்ன்னு சுத்த கூடாது”என்று அடுக்கிக்கொண்டே போக, வாய்விட்டு சிரித்த ராஜா,

"ஏய் போதும் போதும், பீச் பார்க் எல்லாம் போக கூடாதா ?? இப்போ போகாம எப்போ போவா, தாரா மா உன் அம்மா அப்படி தான் எதையாவது சொல்லிட்டு இருப்பா, நீ உனக்கு புடிச்சதை பண்ணு டா. அதே நேரம் அப்பாக்கு பண்ணி கொடுத்த சத்தியத்தை என்னைக்கும் மறந்திடாத”
என்று சொல்ல, பதில் ஏதும் சொல்லாத பெண்ணவளோ சரி என்பதாய் தன் தலையை மட்டும் அசைத்தாள்.

அதேநேரம், “ஏங்க நான் ஒண்ணு சொல்லிட்டு இருக்கேன் நீங்க என்னன்னா”என்று ஜானகி தன் கணவனை பார்த்து முறைக்கவும், ராஜாவோ பதிலுக்கு தன் மனைவியை கேலி செய்ய, தன் தாய் தந்தை இருவரையும் பார்த்து சிரித்த தாரா,

“ஆரம்பிச்சிட்டீங்களா நீங்க கண்டின்யு பண்ணுங்க, நான் போய் பேக்கிங் வேலையெல்லாம் பார்க்குறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.


@@@@@@@

இரவு வேளையில் தாரா நட்சத்திரங்களை பார்த்தபடி பால்கனியில் அமர்ந்திருக்க அப்பொழுது அங்கே வந்த வைஷ்ணவி அவள் அருகே அமர்ந்தபடி ,

“ஒருவேளை அவனை நேருக்கு நேரா பார்க்குற மாதிரி ஆச்சுன்னா என்ன பண்ணுவ தாரா"என்று வினவினாள்.

"அது மட்டும் நடக்கவே கூடாது வைஷு" மனதிற்குள் ஆயிரம் ஆசை இருந்தும் வலியோடு அவ்வாறு கூறினாள் தாரா.


"உனக்கு அவனை பாக்க ஆசை இல்லனு மட்டும் சொல்லிடாத. உன் அப்பா வேணும்னா நம்பலாம் நான் நம்ப மாட்டேன். அவனை நீ எவ்வளவு லவ் பண்ணின, இன்னும் எவ்வளவு லவ் பண்ணிட்டு இருக்கன்னு எனக்கு நல்லா தெரியும்." என்றவளின் வாயை சட்டென்று மூடிய தாரா,

"சத்தம் போடாத டி ப்ளீஸ்" என்று கெஞ்சுதலாக கேட்க, "சரி சரி, சொல்லு" பெண்ணவள் ஆர்வமாய் கேட்டாள்.

"அவன பாக்க ஆசை இல்லன்னு யாருடி சொன்னா, ஆசையெல்லாம் இருக்கத்தான் செய்யுது. ஆனா பாக்காம இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது"

"இவ்வளவு லவ் வச்சிட்டு ஏன் டி அப்படி சொல்ற"


"கடைசியா இந்த இடத்துல நின்னு" என்று பால்கனியில் நின்றபடி தன் வீட்டின் வாசலை காட்டியவள், "அவன் என்னை பார்த்த பார்வை இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு, என்னால அவன ஃபேஸ் பண்ண முடியாது. அவனுக்கு நான் பண்ணது பெரிய துரோகம் வைஷு, அவன் நல்லா வாழனும்னா என்னை மாதிரி ஒரு துரோகிய அவன் தன்னுடைய வாழ்க்கையில மறுபடி பாக்கவே கூடாது, எனக்கு என் அவிரன் நல்லா இருக்கணும் அதை தள்ளி இருந்து நான் பார்க்கணும் அவ்வளவு தான். மத்தபடி வேற எந்த ஆசையும் இல்லை. போதாக்குறைக்கு அவன் அங்கதான் இருப்பான்னு என்ன நிச்சயம், அவனுக்கு அப்பவே கேம்பஸ்ல வேலை கிடைச்சது. யாருக்கு தெரியும் வெளிநாடு கூட போயிருக்கலாம். எனக்கு இப்போதைக்கு அப்பா ஆசைப்பட்ட மாதிரி நான் நல்லா படிக்கணும் அவ்வளவு தான்." என்று கூறியவளை தன் தோளோடு அணைத்துக் கொண்ட வைஷ்ணவி,
"நடந்தது எல்லாமே தப்புதான் ஆனா அதையே நினைக்காத தாரா, எதிர்காலம் எப்படி வேணும்னாலும் மாறலாம். நம்பிக்கையோடு இரு கடவுள் இருக்காரு" என்றாள் ஆதரவாக.

@@@@

டைனிங் டேபிளை சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலியின் நடுவில் அமர்ந்திருந்த ராஜேஸ்வரி,

உணவு பரிமாறப்பட்டும் கவனம்கொள்ளாமல் ஸ்பூனால் உணவை கிளறி கொண்டிருந்த தன் மருமகள் பவித்ராவை பார்த்து,

“எங்க எல்லாரையும், யாரும் சாப்பிட வரல" என்று வினவினார்.

"---------------------"

"பவித்ரா உன்கிட்ட தான்” மருமகளிடமிருந்து பதில் வராததால், இந்த முறை குரலில் சற்று அழுத்தம் கொடுத்து வினவினார்.

“என்கிட்ட ஏன் கேக்குறீங்க எல்லாரும் என்கிட்ட சொல்லிட்டா எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க”என ஏளன சிரிப்புடன் புருவம் உயர்த்தினார்.

“யாரு என்ன பண்ணினாங்க”

“இது தான் உங்க பிரச்சனை நீங்க எதையுமே தெரிஞ்சிக்க மாட்டீங்க” கிட்டத்தட்ட எரிந்து விழுந்தார் பவித்ரா.

“டெல்லில இருந்து இன்னைக்கு காலையில தான் வந்திருக்கேன், நீ சொன்னா தானே என்ன பிரச்சனைன்னு தெரியும்”தன்மையாக கூறினார் ராஜேஸ்வரி.

“ரீமாவையும் விஷ்வாவையும் அவிரன் வேலைய விட்டு தூக்கிட்டான், அவங்க ரெண்டு பேரும் என்னுடைய ரெக்கமெண்டேஷன்ல வந்தவங்க, என்கிட்ட ஒருவார்த்தை கேட்ருக்கலாம்ல”ஆவேசப்பட்டாள் பவித்ரா.

“காரணம் இல்லாம அவன் அப்படி பண்ண மாட்டானே”

“இதுக்கு தான் உங்க கிட்ட எதுவும் சொல்ல கூடாது” என்று இருக்கையில் இருந்து எழுந்து கொண்டு பவித்ராவை பார்த்து,

"பவி சிட் ,அவன்கிட்ட நான் பேசுறேன் , எங்க இருக்கான் அவன்” என்றார் ராஜேஸ்வரி.

“இங்க இல்லை”என்று பவித்ரா கூறிய மறுநொடி,

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, அதெல்லாம் எனக்கு தெரியாது இன்னும் ஒரு மணிநேரத்துல எல்லாத்தையும் எனக்கு சரி பண்ணிருக்கணும்” கோபத்தோடு கூடிய அதிகார தோரணையில் யாருக்கோ அலைபேசியில் கட்டளையிட்டு கொண்டே,

“மோகன் அண்ணா ஒன் ப்ளாக் காஃபி”என்றபடி ராஜேஸ்வரிக்கு எதிரே வந்து அமர்ந்த அவிரன் தன் மடிக்கணினியிலே மூழ்கினான்.

கடுகடுவென சிவந்திருக்கும் பவித்ராவின் முகத்தை ஏறிட்ட ராஜேஸ்வரி தன் விழிகளினாலே பவித்ராவை சமாதானம் செய்துவிட்டு,

“அவிரன் சாப்பிட்டதுக்கு அப்புறம் வேலை பார்க்கலாம்ல” மெலிந்த குரலில் கூறினார்.

“பசிக்கல பாட்டி, நீங்க சாப்பிடுங்க”என்றான் பரிமாறப்பட்ட பிளாக் காஃபி சுவைத்தபடி.

“வேலை இருக்கா”

“ரொம்பவே அதிகமா இருக்கு”

"கொஞ்சம் பேசணும் டா”

“ம்ம்ம் கேட்டுகிட்டு தான் இருக்கேன்”கணினியில் இருந்து தன் விழிகளை அகற்றாமல் கூறிய தன் பேரனின் முகத்தை ஆராய்ந்த படி அவனுக்கு அருகில் இருக்கும் நாற்காலியில் வந்து அமர்ந்தவர்,

“வேலை எல்லாம் எப்படி போகுது”

“எதோ பேசணும்ன்னு சொன்னீங்க”

“ரீமாவையும் விஷ்வாவையும் வேலையில இருந்து ஏன் நிப்பாட்டுனா”

“சரியில்ல”

“அவங்க உன் சித்தியோட ரெக்கமெண்டேஷன்ல வந்தவங்க”

“ஸோ”

"பவித்ரா கிட்ட ஒருதடவை கேட்ருக்கலாமே”

“ஏன் கேட்கணும்” கணினியின் பொத்தானை தட்டியபடி கேட்க, தன் பார்வையாலே அவிரனை எரித்துக்கொண்டிருந்தாள் பவித்ரா.
 
Last edited:
அவிரன்” பவித்ரா அழுத்தத்துடன் அழைக்க.

“யஸ்”நிதானமாய் கேட்டான்.

“ஏன் கேட்கணுமா ?? நான் கம்பெனியோட தர்ட்டி ப்ரெசென்ட் ஷேர் ஹோல்டர், மேனேஜிங் டைரக்டர், என்கிட்ட கேக்கணும்”

“யஸ் ஆனா கம்பெனி என்னுடையது” விழிகளை கணினியில் பதித்த படி கர்வத்தோடு நிதானமாய் கூறினான் அவிரன்.



அறிவுப்பு

முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பில் ஏற்கனவே வேறு ஒரு எழுத்தாளரின் கதை இருப்பதால்.

முத்தங்கள் பேசுதே என்னும் தலைப்பு
"மதுரமே ஈஷணமே" என்று விரைவில் மாற்றபடும்.


Sorry for the in convenience
 
Last edited:
Top