GG writers
Moderator
"ஹவ் டேர் யு??" அவிரனின் சட்டை காலரை உறுதியாய் பற்றியபடி கேட்டார் ராஜா.
பற்களை கடித்தபடி நின்றிருந்த அவிரனின் சிவந்த விழிகள், தன் சட்டையை இறுக்கமாக பற்றிருந்த ராஜாவின் கரங்கள் மீது அழுத்தமாய் பதிந்திருக்க,
"என் பொண்ணை பார்த்து குரலை உயர்த்தி பேசுற, உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கணும்" அவிரனை அங்கு பார்த்த கோபம் ஒரு பக்கம் என்றால் அவன் தாராவிடம் குரலை உயர்த்தியது வேறு இன்னும் கோபத்தை கூட்டிவிட, ஆத்திரத்தோடு தன் கன்னங்கள் அதிர வினவினர்.
முறைத்தபடி நிமிர்ந்த அவிரன்,
"கையெடுங்க" என்க, அழுத்தி உச்சரித்த அவனின் வார்த்தைகள், அவிரன் தனக்குள் சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த கோபத்தை நன்கு வெளிக்காட்டியது.
அஞ்சலிக்கும் அனிருத்திற்கு முழி பிதுங்க, கடையில் சலசலப்பு அதிகமாகியது. மேனேஜர் தன் பங்கிருக்கும் இருவரையும் சமாதானம் செய்ய முற்பட அவிரனும் ராஜாவும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி நின்றனர்.
"கையெடுக்கணுமா முதல்ல என் பொண்ணுகிட்ட மன்னிப்பு கேளு"
"வாட் நான், நான் மன்னிப்பு கேட்கணுமா" என்று ஏளனமாக சிரித்தவன் அதே சிரிப்புடன்,
தன்னை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த தாராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ராஜாவிடம் கேட்டான்.
தாராவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஏற்கனவே அவிரனை பார்த்த அதிர்ச்சியில் இருந்தே மீள முடியாது தவித்தவள், அடுத்தடுத்து உடனே தன்மேல் விழுந்த திருட்டுப் பழியில் இன்னுமே நிலை குலைந்து போயிருக்க, இப்பொழுது தந்தையும் அவிரனும் ஒருத்தருக்கொருத்தர் முட்டிக்கொண்டு நிற்கவும் செய்வதறியாது திகைப்புடன் நின்றாள்.
இதற்கிடையில் தாராவை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்த அவிரனின் கனல் பார்வை அவளை ஆழ துளைத்தது அவளின் இதயத்தை பொசுக்கி கொண்டிருக்க, பெண்ணவளுக்கு நெஞ்சை அடைத்தது கொண்டுவர, தன் தந்தையின் புஜத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
அவிரனுக்கு தாரா தன் தந்தையின் கையை இறுக்கமாக பிடித்திருந்த விதம் எரிச்சலை கொடுக்க கோபத்தில் தன் விழிகளை அழுந்த மூடி திறந்த அவிரன்,
"திருட்டு வேலை பார்த்தா இப்படி
தான் கேட்பாங்க, அது யாரா இருந்தாலும் சரி, ஏன் அது உங்க பொண்ணாவே இருந்தாலும் அப்படி தான்" என்றான் தனது சட்டையை பற்றியிருந்த அவரது கையை தன் மீதிருந்து அகற்றியபடி.
" 'திருட்டு வேலை' " என்று அவிரன் திமிராய் கூறிய வார்த்தைகள் ராஜாவின் நிதானத்தை சோதனை செய்ய, இமைக்கும் நொடி பொழுதில் அவிரனின் கன்னத்தில் ராஜாவின் ஐவிரலும் தடம் மாறாமல் பதிந்தது.
அனைவரின் விழிகளும் அதிர்ச்சியில் விரிந்திருக்க, இதை சற்றும் எதிர்பார்த்திறாத தாரா, "அப்பா ப்ளீஸ்" என்ற மறுநொடி, சற்றும் யோசிக்காமல் ராஜா மீது அவிரன் தன் கரங்களை ஓங்கினான்.
எப்பொழுதும் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கும் அவிரன் இன்று தன் அணைத்து கோட்ப்பாடுகளையும் களைந்தெறிந்து, கட்டுப்பாடின்றி வந்த கோபத்தில் ராஜா மீது தன் கைகளை ஒங்கயிருக்க, உடனே ராஜாவோ, "ஒ அடிச்சிருவியா நீ எங்க அடி பார்க்கலாம்" என்று சீறிக்கொண்டு நிற்க, நிலைமை மோசமாவதை உணர்ந்து இருவருக்கும் இடையே வந்த தாராவின் மென் விரல்கள் அவிரனின் மார்பில் மென்மை பதிந்தது.
"ப்ளீஸ்" தாராவின் அஞ்சன விழிகள் கனல் விழிகளிடம் கெஞ்ச, உள்ளத்தில் கனன்று வந்த கோபத்தீ முழுவதும் அணையவில்லை என்றாலும், ஓங்கிய தன் கரத்தை கீழே இறக்கிருந்த அவிரன் தன் பற்களை கடித்தபடி நின்றிருந்தான்.
அப்பொழுது, "தாரா தள்ளு, அடிச்சிருவானா இவன்" என்ற தன் தந்தையை சமாதானம் செய்த தாரா,
"நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க, உங்க மொபைலை நான் ட்ரையல் ரூம்ல பார்த்தேன், பார்த்த உடனே பில் கவுண்டர்ல உள்ள ஒரு அண்ணாக்கிட்ட குடுத்துட்டேன். நான் திருடலை, இதை சொல்ல தான் நான் முயற்சி பண்ணினேன் ஆனா நீங்க யாரும் புரிஞ்சிக்கல" அவிரனை தவிர்த்து அஞ்சலி, வந்தனா மற்றும் அனிருத்தை பார்த்து தன் தரப்பை எடுத்து சொல்ல, அவிரனின் மொத்த பார்வையும் தனக்கு மிக அருகே நின்று கொண்டு, தன் மார்பில் கரம் பத்தித்தபடி தன்னை தவிர அனைவரையும் பார்த்து பேசி கொண்டிருந்த தாராவின் மீதே பதிந்திருந்தது.
அவள் மறந்தும் அவன் விழிகளை சந்திக்கவில்லை தான், ஆனால் அவனோ அவளைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை, கலவரம் சூழ்ந்திருந்த அவளது விழியழகில் மூழ்கியவனின் செவியில் அவள் மொழிந்த எந்த வார்த்தைகளும் விழுந்தபாடில்லை அசையாமல் சிலை போல நின்றிருந்தான்.
அடங்காத சினம் உள்ளுக்குள் இருப்பினும் அவளது ஒரு வார்த்தைக்கு அடங்கி நிற்கும் தன்னை எண்ணி இன்னுமே கோபம் கொண்டவன், அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் அவ்விடம் விட்டு செல்ல முனைந்த நேரம்,
தன் கரம் நீட்டி தடுத்த ராஜா, 'வேண்டாம் பிரச்சனைய இதோட விடுங்க' என்ற தன் மனைவியை முறைத்தபடி அவிரனிடம்,
"தப்ப உன் மேல வச்சிட்டு என் பொண்ணுக்கு திருட்டு பட்டம் கட்டுறியா? இதுல உனக்கு கோபம் மட்டும் தான் ஒரு கேடு. உன்னை சொல்லி எதுக்கு வளர்ப்பு சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும். பொறுக்கி மாதிரி வளர்த்து விட்ருக்காங்க. உங்கள எல்லாம் படிக்க வச்சி என்ன யூஸ் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லை, பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்க தெரியல அன் சிவிலைஸ்ட் பிஹேவியர், அப்படியே அப்பனை போலாம்" இறுதி வாக்கியத்தை மட்டும் முகத்தை சுளித்தபடி அவர் மூணுமுணுக்க, அவர் வாயசைப்பை வைத்தே அவர் முணுமுணுத்த அந்த வார்த்தைகளையும் தெரிந்து கொண்டவனோ இன்னுமே இறுகி போய் நின்றிருந்தான்.
ராஜா கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவிரனின் இதயத்தில் நெருஞ்சி முள்ளாய் குத்த, இந்த முறை அவனது விழிகள் கோபத்தில் இல்லை வேதனையில் சிவந்தது.
அந்த இடத்தில் தன் தந்தையை மீறி எதுவும் பேச முடியாமல் நின்றிருந்த தாராவுக்கோ அவிரனை அப்படி பார்க்கவே முடியவில்லை. அவனது வேதனை நிறைந்த விழிகளை பார்த்த மறுகணமே தாராவின் விழிகள் நிறைந்துவிட, அப்பொழுது தாராவை ஒரு பார்வை பார்த்த அவிரன் அடுத்த நொடி அங்கிருந்து வேகமாக சென்றிருந்தான்.
------
ஹாஸ்டலில்,
"நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல அவன் சரி கிடையாதுன்னு, நான் சொன்னது சரியா இருந்திருக்கு" என்ற ராஜாவிடம் ஜானகி,
"ஏங்க இப்படி தான் ஒரு பொது இடத்துல சண்டை போடுவீங்களா? வயசு பையன் கிட்ட போய் சரிக்கு சமமா மல்லுக்கு நிக்குறீங்க இதெல்லாம் நல்லாவா இருக்கு"
"அவன் என் பொண்ணை பார்த்து திருடின்னு சொல்றான். பழச மனசுல வச்சுட்டு தான் இப்படி எல்லாம் அவன் பண்ணினான், திமிரு புடிச்சவன் என்னை அடிக்க வரான், அவனை சும்மா விட சொல்றியா, நான் குடுத்த அடில இனிமே என்கிட்டையும் என் பொண்ணுகிட்டையும் ஒழுங்கா இருப்பான்."
"திட்டிட்டு விட்ருக்கலாம்ல, ஏன் அடிசீங்க?? தேவையில்லாம அந்த பையனை ஏன் சீண்டிவிட்டுட்டு. கோபத்தை குறைங்கன்னா கேக்குறதே இல்லை"
"என் பொண்ணுக்கு ஒண்ணுன்னா நான் இப்படி தான் கோபப்படுவேன் அது யாரா இருந்தாலும் சரி. அவன் அம்மா முகத்துக்காகத்தான் அவனை ஒரு அடியோடு விட்டுட்டு வந்தேன் " என்றவர் தாராவை பார்த்து,
"தாராமா நீ எதுக்கும் கவலைப்பட்டுக்காத உனக்கு அப்பா இருக்கேன், இனிமே உன்கிட்ட அவன் எங்கையாவது பிரச்சனை பண்ணினாலும் நீ அப்பாட்ட சொல்லு நான் பாத்துக்குறேன்" என்றார்.
ஆனால் தாராவுக்கோ பேச்சே வரவில்லை, ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் தன் தந்தை தன்னவனை அடித்ததையும், இறுதியாக அவன் காயம்படு படி பேசியதையும் அவளால் நியாயப்படுத்த முடியவில்லை. இருந்தும் ஏதும் பேசி தந்தையை வருத்தப்படுத்த விரும்பாத தாரா, பதில் ஏதும் பேசாது பேருக்காக புன்னகைத்து சரி என்பதாய் தலையசைத்தாள்.
--------
கன்றி சிவந்திருந்த முகத்திற்கு பின்னால் ஆயிரம் வேதனைகள், இடைவிடாது அவனை கொத்தித்தின்றது.
கோபம் பாதி வேதனை பாதி என்று தன்னை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் உணர்வு கலவையில் சிக்கி தவித்தான் அவிரன்.
நெஞ்சை பிழிந்தெடுத்த துக்கமும், உள்ளுக்குள் கிளர்ந்தெழுந்த சினமும், அழுது அழுது அலுத்து போன விழிகளும் கண்ணீருக்கு பதிலாய் ஆத்திரத்தையே அள்ளி அள்ளி கொடுக்க, அசுர வேகத்தில் தன் காரை ஓட்டிய அவிரன் நிதானம் இன்றி, மூடிருந்த இரும்பு கதவை இடித்து திறந்தபடி வேகமாக நுழைந்து, மியூசிக்கல் ரூம் என்று பெயர் பலகை மாட்டப்பட்டிருந்த அந்த அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டான்.
--------------------------
மீண்டும் மீண்டும் தன் மகளுக்கு ஆயிரம் பத்திரங்களைக் கூறிய ஜானகி, அவளுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொடுத்துவிட்டு, தன் கணவருடன் தனது இல்லம் திரும்பினார்.
Last edited:
