GG writers
Moderator
மதுரமே ஈஷணமே 7
நடந்தேறிய பிரச்சனையால் அதிர்ச்சியில் இருந்த அனிருத்தோ, அஞ்சலி மற்றும் வந்தனாவிடம் பிறகு பேசுவதாக கூறிவிட்டு, வேகமாக காரை நோக்கி செல்லும் அவிரனின் பின்னால் ஓடினான்.
அவிரன் காரில் ஏறி அமருவதற்குள், மூச்சு வாங்க ஓடி வந்த அனிருத் காரில் ஏரி டிரைவர் சீட்டில் அமர்ந்துவிட, "வெளிய வா அனி, நான் தனியா இருக்கணும் , லீவ் மீ அலோன்" அவ்வளவு கோபமாக கூறினாலும் அனிருத் அதை ஏற்கவில்லை.
"நீ ரொம்ப கோபமா இருக்க இந்த நேரத்துல உன்னை தனியா விட முடியாது, நானும் வருவேன். வந்து வண்டியில ஏறு" என்று அனிருத் மறுத்ததை காதில் வாங்காத அவிரன்,
"நான் தனியா இருக்கணும்னு சொன்னேன் உனக்கு புரியல, கெட் அவுட்" பல்லைக் கடிதப்படி அவன் கூறிய விதத்தில் அவனுக்குள் இருக்கும் எல்லையற்ற கோபம் தெளிவாய் தெரிய, அந்தக் கோபத்தில் என்ன செய்வான் என்று அனிருத்துக்கே தெரியவில்லை.
கோபம் வந்தால் தன் தமையன் எதுவும் செய்யக் கூடியவன் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் அனிருத்தோ,
"இவ்ளோ கோபத்தோட நீ எங்கேயும் தனியா போகாத அவி, எங்க போகணும்னு சொல்லு நானே டிரைவ் பண்றேன் உன் கூட நானும் வரேன்" கலக்கத்துடன் கூறினான்.
"என்னை நேசிக்கிற யாரையும் காயப்படுத்த கூடாது நினைக்கிறேன் அனி, ப்ளீஸ் கார விட்டுக்கீழ இறங்கு. எனக்கு தனியா இருக்கனும்" உடைந்து போன குரலில் அவிரன் அவ்வாறு கூறியதும் அனிருத்துக்கு ஒரு மாதிரி ஆகிவிட, காரை விட்டு கீழே இறங்கினான்.
அனிருத் இறங்கியதும் வேகமாக வந்து காரில் ஏறி அமர்ந்து, காரை ஸ்டார்ட் செய்து, அதே வேகத்தில் ரிவர்ஸ் எடுத்தவன் கையில் கார் சீறி பாந்தது.
அதனை பீதியோடு பார்த்த அனிருத்தோ சற்றும் தாமதிக்காமல் அருகில் இருந்த ஆட்டோவில் ஏறி அவிரனை பின் தொடர்ந்தான். ட்ராபிக் நெரிசலை கடந்து சில பல நிமிடங்கள் கழித்து அவிரனின் கார் தங்களது அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த பின்பே ஆசுவாசமடைந்தவனுக்கும், சிறிது நேரம் அவிரன் அலுவலக வேலையில் ஈடுபட்டால் இயல்பாகிவிடுவான் என்று தோன்ற, அங்கு சென்று தொந்தரவு செய்ய விரும்பாமல் தன் இல்லம் திரும்பினான்.
துவங்க வேண்டியது, பின்பு துவங்கி கொள்ளலாம் என்று வைத்தது என்று நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும், இதோ இங்கு வந்த நொடி முதல் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறான் அவிரன். ஆனாலும் அவனது மொத்த கவனமும் நடந்து முடிந்த மற்றும் இன்று மாலில் நடந்த நிகழ்வில் தான் இருந்தது.
இருளடைந்த அவனது மனதிற்குள்
புதைக்கப்பட்ட பழைய நினைவுகள் அனைத்தும் இன்றைய நினைவுகளுடன் சேர்ந்து அவனை கொஞ்சம் கொஞ்சமாய் வதைத்தது! அவனுக்கும் வலித்ததும்!
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்து விட, இன்று தான் அவளை பார்த்தான். பார்த்ததும் கோபம், துக்கம், வலி என்று மாறி மாறி மாயாஜாலம் காட்டிய உணர்வுக்குழியில் இருந்து மீள இயலாது தவித்துக்கொண்டிருந்தவனை, ராஜாவின் வார்த்தைகள் இன்னுமே ரணப்படுத்தியது.
விழிகளை அழுந்த மூடி பார்த்தான் முடியவில்லை, போராட்டமாக இருந்தது. இந்த மூன்று வருடத்திற்குள் தான் அவன் எத்தனை போராட்டங்களையும் எத்தனை
வெற்றிகளையும் பார்த்துவிட்டான். ஏன் தன் தாயின் இழப்பை கூட கடந்து வந்தவனுக்கு, பழைய காதலையும் அது கொடுத்த ரணத்தையும் மட்டும் இன்றுவரை கடக்க முடியவில்லை.
"அப்பனை மாதிரி சரியான பொறுக்கி" இன்றில்லை தன் சிறுவயதில் இருந்தே இந்த வார்த்தைகளை
கேட்டுக்கொண்டு தான் இருக்கிறான்.
இந்த வார்த்தைகளுக்கு பயந்தே தன் தாயை தவிர பிற பெண்களிடம் பேச கூட செய்யாது உறுதியாக இருந்த அவிரனின் உறுதி தளர்ந்தது என்னவோ தாராவிடம்.
தான் எவ்வளவோ ஒதுக்கியும் தான் எவ்வளவோ கடினமாக நடந்து கொண்ட பின்பும், தன்னையே சுற்றி சுற்றி வந்த தாராவின் காதலில் தன்னை இழந்தவன், தன் தாயை விட ஒரு சதவீதம் அதிகமாகவே தாரா மீது அன்பு வைத்திருந்தான். இளம் வயதிலேயே காதல் வயப்பட்டிருந்தாலும், அத்தனை சூழ்நிலையிலும் கண்ணியமான காதலனாகத்தான் இருந்தான் அவிரன்.
எதிர்கால திட்டங்களுடனும் கனவுகளுடனும் மகிழ்ச்சியாக சுற்றி வந்த அவிரனின் வாழ்க்கையை, திடீரென்று நடந்த அவனது தாய் சீதாவின் மரணம் புரட்டிப்போட, அதிலிருந்து அவன் மீண்டு வருவதற்குள், அவர்களது காதல் விடயம் தாராவின் வீட்டிற்கு தெரிந்து விட, அந்த கணமே அவனது காதலும் முறிந்துவிட, ஆணவன் உடைந்துவிட்டான்.
"அங்கிள் எனக்கு கேம்பஸ்ல வேலை கிடைச்சிருக்கு, டிகிரி முடிச்சதும் வேலைக்கு போய்டுவேன். நான் நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சதும் தாராவை எனக்கு கொடுங்க நான் சந்தோஷமா பாத்துக்குவேன்." கொட்டும் மழையில் நனைந்தபடி ராஜாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டு, அழும் தாராவை பார்த்தபடி கூறினான் அவிரன்.
"உன் உடம்புல உன் அப்பாவோட ஒரு சொட்டு ரத்தம் ஓடினா கூட, உனக்கு என் பொண்ண தர மாட்டேன். நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரனா மாறினாலும் என் மனசு மாறாது. தயவுசெஞ்சு வெளியே போ, உன் அம்மா முகத்துக்காக தான் உன்கிட்ட நின்னு பேசிட்டு இருக்கேன்" என்றார் ராஜா உறுதியாக.
"அதையே ஏன் சொல்றீங்க நான் அந்த மாதிரி கிடையாது அங்கிள். அது தாராக்கும் தெரியும் சொல்லு தாரா"
"அவளுக்கு என்ன தெரியும் அவ சின்ன பொண்ணு. உன் அப்பாவும் ஆரம்பத்துல நல்லா தான் இருந்தாரு. பணம் காசு வர வர அவர் புத்தியே மாறிடுச்சு. உன் அப்பாவ காதலிச்சிட்டு உன் அம்மா பட்ட கஷ்டத்தை நான் பார்த்திருக்கேன். என் பொண்ணு கஷ்டப்படறதையும் என்னால பார்க்க முடியாது. அதனால என் பொண்ணோட வாழ்க்கையை விட்டே போயிடு"
"அத நீங்க சொல்லாதீங்க" என்றவன் தாராவை பார்த்து, "நீ சொல்லு தாரா உன் அவிரன் அந்த மாதிரி கிடையாதுன்னு நீ சொல்லு தாரா. ஏதாவது பேசு, ஏன் அமைதியா இருக்க நீ என்னை நம்புற தானே என்னை நம்புறேன்னு ஒரு வார்த்தை சொல்லு" கெஞ்சினான்.
ஆனால் தாரா அழுது கொண்டே இருந்தாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.
"பேசு என்னை நம்புறேன்னு மட்டும் சொல்லு ப்ளீஸ். நீ சொல்லாம இங்க இருந்து போக மாட்டேன் தாரா சொல்லு எனக்கு தெரியும் சொல்லு" பிடிவாதமாக கெஞ்சினான்.
ஆனால் சில நொடிகளுக்கு எதுவும் பேசாது தன் நெஞ்சம் அடைக்க சிலை போல நின்றியிருந்த பெண்ணவளோ, நிமிர்ந்து அவிரனின் முகம் பார்த்து ,
"என் அப்பா சொல்ற மாதிரி நீயும் ஒருவேளை உன் அப்பா மாதிரி இருந்துட்டா நான் என்ன பண்றது" என்று அவள் கேட்ட நொடி ஆணவன் உடைந்துவிட்டான்.
சிறுவயதிலிருந்தே கேட்ட வார்த்தைகள் தான், கேட்கும் சமயங்களில் வருத்தமாக இருக்கும், ஆனால் பெரிதாக கவலை கொண்டது கிடையாது,
"என் தாரா என்னை நம்புவா" என்று நம்பிக்கையாக இருந்தவன் பெண்ணவளின் வார்த்தைகளில் மொத்தமாக நொறுங்கி விட, வலி நிறைந்த விழிகளுடன் அவளை ஒரு கணம் பார்த்தவன், அதன் பிறகு ஒரு வார்த்தை கூட பேசாத அங்கிருந்து வெளியேறினான்.
மூன்று வருடத்திற்கு முன்னால் அவள் கொடுத்த ரணம் இன்று வரை மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு அவனுக்கு இன்னுமே வலியை கொடுத்துக் கொண்டிருக்க, ஏற்கனவே அதிலிருந்து மீள முடியாது தவித்துக் கொண்டிருந்தவனின் காயத்தில் உப்பு தூவுவது போல, இன்று நடந்த சம்பவம் அவனது ரணத்தை இன்னும் அதிகப்படுத்தி இருந்தது. இன்று ராஜா பேசியது கூட அவிரனுக்கு பிரச்சினை கிடையாது, ஆனால் அன்று போலவே இன்றும் அவள் நடந்து கொண்ட விதம் ஆணவனின் உணர்வுகளை தாக்கி அவனுக்கு வேதனையைக்கொடுக்க,
முன்பு அவளது வார்த்தைகள் அவனைக் கொன்றது என்றால் இன்று அவளது மௌனம் அவனை கொன்றது.
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாது, தான் பார்த்துக் கொண்டிருந்த பைலை அடித்து மூடியவன், கோபத்தில் டேபிள் மீது இருந்த பொருட்களை எல்லாம் தள்ளிவிட அத்தனை பொருட்களும் சிதறி கீழே விழவும்,
தன் தலையை இரு கரங்களாலும் பிடித்துக் கொண்டு, வான் பிளக்க முடிந்த வரை கத்திய அவிரனின் கண் முன்னே அனைத்து காட்சிகளும் வந்து போக, ஆத்திரம் தீரும் வரை தன் கரங்களை சுவற்றில் குத்தி தன்னைத்தானே காயப்படுத்தினான்.