வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மனங்கழிய நின்ற மறையோனே!! - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 01


கன்னத்தினை யாரோ இறுக்கிப் பிடித்த அந்த உணர்வில் அவளது இதழ்கள் வலியில் சுருங்கியது. "ஷ்ஷ்! நந்தி வலிக்குது" என்று அந்த வலியிலும் அவள் முணங்க,

"நந்தி தான் டி. உன் நந்தியே தான். அப்படியிருந்தும் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்குற? நான் உன்னை தொடவே கூடாதா? நீ என்னை ஏன் ஏத்துக்க மாட்டுற? நான் உனக்காகத்தானே இப்படி எல்லாம் பண்ணுறேன். அதுவும் உனக்குப் புரியலையா? என்னோட காதலை உன்னால ஏன் புரிஞ்சுக்கவே முடியல. இல்லை, இந்த நந்தி உனக்கு வேண்டாமா?" என முகத்தினை இறுக்கமாக வைத்துக் கொண்டு கத்தத் தொடங்கினான் அவன்.

அவர்கள் இருவரைத் தவிர அந்த இடத்தில் வேறு யாருமே இல்லை. அவளது தலையில் இருந்து இப்போது இரத்தம் வேறு கசிந்துக் கொண்டிருந்தது. அதைத் துடைத்துவிடுவதற்காக அவன் முயல வலியில் சுருங்கி "வேண்டாம் நந்தி" என்று கையைத் தட்டியவள் இன்னமும் இமையை திறக்கவில்லை. அவளது முணங்கலும் நிற்கவில்லை. "நந்தி நந்தி. வேண்டாம்" என்ற முணங்கல் அவனை இன்னும் வெறிபிடித்தவனாய் மாற்றியது என்பது மட்டும் உண்மை.


'நந்தி' என்ற வார்த்தை இதமாய் தாக்கினாலும் 'வேண்டாம்' என்ற பதம் அவனை செயலிழக்க வைத்தது.


"ஆல்ரைட். நான் உனக்கு வேண்டாம். வேண்டாம்.. நீ சொன்ன பிறகு நான் அதைக் கேட்டுக்க வேண்டியதுதான்" என்றவன் அவளுக்கான சீட் பெல்டை மட்டும் போட்டுவிட்டு அவனோடதை ரிலீஸ் செய்துவிட்டான்.


அவனது கோபத்தின் காரணமாக இப்போது வண்டியின் வேகம் அதிகரித்தது. மயக்கத்தில் உழன்று கிடந்தாலும் "நந்தி" என்ற பெயர் அவளுக்கு ஒருபோதும் மறக்காது. அவள் சதா சர்வ காலமும் உச்சரிப்பது அந்த பெயர்தான். ஆனால் அது இவன்தானா? என்பது பெருத்த சந்தேகம்.

இந்த வேகம் அவளை என்ன செய்ய காத்திருக்கிறதோ என்ற கவலை எல்லாம் இல்லாமல் அவன் சென்று கொண்டிருக்க நந்தி யென்று அவள் மீண்டும் விளித்தாள்.

அவள் அருகே அவன் கை செல்ல அவளது உடல் அனிச்சை செயலாய் விலகியது.

"இந்த அம்மணியை நான் தொடக்கூடாதுல.. இதுவும் வழமைதானே" என்பதை அறிந்தவனின் கோபம் கண்ணை மட்டும் அல்ல அந்த சாலையையும் மறைத்தது. இப்போது வண்டியை வேண்டுமென்றே சாலையிலிருந்து தடம்மாற்றி வேகமாக செலுத்த அங்கிருந்த பெரிய மரத்தின் மீது மோதி நொறுங்கிப் போய் நின்றது.


நந்தியெனும் அவளது முணங்கல் நின்று போயிருந்தது. அவனது நெற்றி முன்னே சென்று மோதியிருக்க தலையிலிருந்து இரத்தம் கொட்டி அவன் முகம் முழுவதையும் நனைத்தது.

அப்போதும் அவன் கைகள் அவளைத் தான் தேடின. துழாவி அவளது கரத்தினை அவன் பிடித்திருக்க அவள் கரம் அவன் கரத்தில் இருந்து நழுவ ஆன மட்டும் முயற்சி செய்து பார்த்தது.

இறுக்கமாக அழுத்திப் பிடித்தவன் கண்களைத் திறவாமலே.. "இவனுக்கு சிவா மட்டும் போதும். வேற எதுவும் தேவையில்லை. இதை பலதடவை சொல்லிப் பார்த்துட்டேன். நீ கேக்குற மாதிரி தெரியல. இப்போக் கூட உன் கையை பிடிக்க விடாமல் நீ சதி பண்ணுற. இதை என்னால தாங்க முடியல. இதுக்கு எதுக்கு நான் வாழணும். உன்னோட சேர முடியலைன்னு நினைச்சு நினைச்சு வாழுறதுக்கு பதிலா உன் கையைப் பிடிச்சுட்டே நான் முதல்ல செத்துப் போறேன்.. லவ் யூ சிவா..." என்று சொன்னவனுக்கு நிதானம் தப்பியது. அப்படியே மெல்ல மெல்ல விழிகளை மூடிக் கொண்டவனின் இதழ்கள் மட்டும் சிவா என்ற ரசனையுடன் சொல்லிக் கொண்டது.


"சிவா" என்ற குரல் ஒலித்ததில் பதறிப் போய் எழுந்து அமர்ந்தாள் சிவன்யா.

முழுதாய் சில நிமிடங்களுக்கு பிறகு நடந்தது என்ன என்று புரிந்தது.

ச்சே கனவு..

ஆசுவாசம் அடைந்தாலும் கூட அந்த பெயர் அவள் சிந்தனையை விட்டு அகலவே இல்லை. கனவில் வந்தவன் முகம் தெளிவாகவும் தெரியவில்லை. இரத்தம் எல்லாம் வழிந்து முகமே கோரமாகத்தான் தெரிந்தது.

அவனிடம் இருந்த மூர்க்கத்தனம் அவளை வியக்க வைத்தது. கொஞ்சமாய் பயமுறுத்தியது.

யாரவன் என்ற ஆராய்ச்சியையும் செய்ய வைத்திருந்தது. என்ன இருந்தாலும் அந்த பெயர் அவளுக்குள் கற்கண்டாய் தித்தித்தது என்பது மட்டும் உண்மை. அந்த பெயரை அவள் இப்போதும் தெளிவாகத்தான் உச்சரித்திருந்தாள். அதை கனவிலுங் கூட அவள் மறக்கவில்லை என்பதில் அவளுக்கு பெரிதான ஆச்சர்யம் இல்லை. அது தான் நிதர்சனமும் கூட.


இப்போது கூட பக்கத்தில் நந்தியின் சிலைதான் இருந்தது. எடுத்து அதைத் தடவியவள் "நந்தி! இதென்ன கனவு. அதென்ன நந்தியை ஏத்துக்க மாட்டயான்னு அவன் கேக்குறான். கொஞ்சங் குழப்பம் தான். சிவாவுக்காக செத்துப் போறேன்னு சொல்லுறான். லவ் யூன்னு வேற சொல்லுறான். இப்படியெல்லாமா கனவு வரும். எனக்குலாம் இப்படி கனவு வந்ததே இல்லையே. நந்தின்னு அவன் சொன்ன பின்னாலும் நான் ஏன் அவனை தொட விட மாட்டுறேன். அவன் உண்மையிலே யார்? அவனுக்கு ஏதோ ஆபத்துங்கிற மாதிரி ஓர் உணர்வு எனக்குத் தட்டுப்படுது? இதை கனவுன்னு கடந்து போறதா? இல்லை எப்படி எடுத்துக்கிறது. நீதான் ஏதாவது செய்யணும்" தன் புலம்பல்களை எல்லாம் நந்தியிடம் புலம்பிவிட்டு அவனை பக்கத்திலே வைத்துக் கொண்டு உறங்கிப் போனாள்.


இவள் உறங்கிவிட்டாள். ஆனால் இன்னொருவன் உறங்காமல் வியர்த்துப் போன முகத்தோடு நின்றிருந்தான். அவன் நந்திதேவன். புதிதாய் புராதான பொருட்கள் விற்கும் கடையை ஆரம்பிக்க இருப்பதால் அதற்கான வேலையில் தான் அவன் அர்த்த ராத்திரியிலும் ஈடுபட்டிருந்தான்.


வேலைக்கு வந்திருந்த ஆட்களோடு ஆட்களாய் இவனும் இறங்கி அந்த பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டு சுத்தம் செய்து விட்டுப் பார்க்க மணி இரண்டுக்கு மேலாகியிருந்தது.‌


வெளியே வந்தவன் தன் கடையின் பெயர்ப்பலகையை சரியாக பொருத்தியிருக்கிறார்களா என்பதை உற்றுக் கவனித்தான். 'சிவா' என்னும் எழுத்துக்கள் பொன்னிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்ததை மட்டும் அவன் கண்கள் சிறை பிடித்துக் கொண்டது. அவன் மனம் அதன் பிரகாசத்தில் குதூகலித்தது. சரியாக இருக்கிறது என்று அறிந்தவன் வேலை செய்தவர்களை அனுப்பி வைத்துவிட்டு தனது வீட்டினை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அன்று,

பிரதோஷ தினம். பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெறும். ஒலிபெருக்கியின் வாயிலாக பிரதோஷ காலத்தில் போடப்படும் பாட்டுக்கள் வேறு ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.


பிரதோஷ காலத்தில்
பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கும்
வழங்கும் நந்தி
வரலாறு படைத்துவரும்
வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும்
அகற்றும் நந்தி


"அம்மா அம்மா நந்திக்கு அபிஷேகம் செய்யுறாங்க போல. நீங்க பொறுமையாய் கிளம்பி வாங்க நான் கோவிலுக்குப் போறேன்" சிவன்யா பேசிவிட்டு வாசலுக்கு விரைய, "நில்லு சிவா.. இதோ அம்மாவும் வந்துட்டேன்" என்னு தயிரை ஒரு தூக்கு வாளியில் ஊற்றியபடி குரல் கொடுத்தாள் அவளின் அம்மா தங்கம்.

அதற்குள் அவள் கிளம்பிச் சென்றே விட்டாள். இது வழக்கமாக நடக்குறதுதானே என நினைத்தபடி தங்கம் தயிரை அபிஷேகத்திற்காக எடுத்துக் கொண்டு அப்படியே பூசைக்கு தேவையானவற்றையும் எடுத்தபடி வீட்டினை பூட்டிவிட்டு வாசலுக்கு வந்தார்.


இந்நேரம் மகள் கோவிலில் சென்று நந்தியின் தரிசனத்தினை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருப்பாள் என்ற நினைவோடே இவளும் கோவிலை நோக்கி நடந்தாள்.


சிவா! சிவன்யா.. அவள் அப்படித்தான். அவளுக்கு சிவன்யா பெயர் வைத்ததற்கு பதியாய் நந்தியின் காதலி என்று வைத்திருக்கலாம். அந்தளவுக்கு நந்தியின் மீது அவளுக்கு ஈடுபாடு.


நந்தி சிவனின் வாகனம். அந்த சிவ வாகனத்தின் மீது அவளின் ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் சென்றதே தவிர குறையவே இல்லை.

ஈசனுக்கு முன்னதாய் அமர்ந்திருந்த அந்த நந்தி அளவில் கொஞ்சம் பெரியதாய் இருந்தது. அந்த நந்தியின் மீது நீர், இளநீர், பால், தயிர், வாசனைத் திரவியங்கள், மஞ்சள்நீர், தேன் முதலியன கொண்டு அபிசேகம் செய்யப் படும்.


இவள் சென்று நந்தியினை சரியாக பார்க்கும் வண்ணம் அமர்ந்துக் கொண்டாள். இனி அவளுக்கு மற்றவை எல்லாம் மறைந்து போகும்.

வந்திருந்த பெண்கள் பாடலை பாடிக் கொண்டே இருந்தார்கள்.

வழிவிடு நந்தி வழிவிடுவே
வாழ்வில் நாங்கள் வளர்ந்துயர
வழிவிடு நந்தி ! வழிவிடுவே வையகம் வளர வழிவிடுவே

என்று பாடல் ஆரம்பிக்க இவளும் உடன் இணைந்து பாடத் தொடங்கினாள். அபிசேகங்கள் முடிந்து நீரின் பளபளப்பில் நந்திதேவன் இன்னும் அழகாய் கம்பீரமாய் தென்பட்டான். ரசித்தாள். நந்தி என்று சொல்லிக் கொண்டாள். அவளுக்குள்ளயே சிலிர்த்தாள். பக்கத்தில் வந்து அமர்ந்த அன்னையினையும் மறந்து போய் அவள் நந்திக்குள்ளயே ஐக்கியமாகிப் போனாள்.


இப்போது நந்திக்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். நந்தியின் கழுத்தினில் ஒரு பெரிய மணி இருந்தது. சந்தனத்தினால் நந்தியின் சிலை முழுவதும் அழகு படுத்த தொடங்கினார்கள். பக்தர்களிடம் வாங்கியிருந்த காணிக்கைகள் அந்த சந்தனத்தில் ஆழப்புதைத்ததில் அதுவும் அழகாய் மின்னிக் கொண்டிருந்தது.


கருவறையில் சிவனுக்கான அபிசேகம் நடந்துக் கொண்டிருக்க இங்கு நந்தியின் அலங்காரம் முழுமையாகியிருந்தது.

"சிவா நாம கொஞ்சம் தள்ளிப் போய் உக்காரலாம். இங்க இருந்தா சிவ தரிசனம் கிடைக்காது"

"அம்மா! நீங்க வேணும்னா அங்க போய் உக்காருங்க. நான் இங்கேயே இருக்கேன்" பதில் சொன்னாலும் பார்வை அவனிடத்தில் தான் நிலைத்திருந்தது.

"நந்தி பையித்தியம்" என அவள் தலையினை தட்டிவிட்டு தங்கம் எழுந்து முன்னால் சென்று அமர்ந்தாள்.

தங்கம் சென்றதும் அந்த இடத்தில் வேறு ஒரு ஆள் அமர்ந்து அவள் இடுப்பில் இடிக்க ப்ச் என்ற சலிப்போடு திரும்பினாள்.

"என்ன? சைட்டடிச்சா ப்ரண்ட் இருக்குறது கூட கண்ணுக்குத் தெரியாதா?"

"தெரியாது"

"பிரதோஷம் மாசத்துக்கு இரண்டு வருது. இது போதாதுன்னு அடிக்கடி கோவிலுக்கு வந்து நந்தியை பார்க்குற. வீட்டுலயும் நந்தி சிலையாய் வாங்கி குமிச்சு வச்சுருக்க. அப்படியிருந்தும் எப்படி சிவா இப்படி மெய்மறந்து பார்த்துட்டு இருக்க"

இதுக்கெல்லாம் பதில் சொன்னால் நந்தியை சைட் அடிப்பது பாழாகிவிடும் என்பதால் அவள் பேசாமல் இருந்துவிட்டாள். அடிப்போடி என்று இவள் எழுந்து சென்றுவிட்டாள்.

பக்தர்கள் எல்லாம் கற்பூர ஆரத்தி முடிந்த பிறகு பிரசாதத்தினை வாங்கிக் கொண்டு கலையத் தொடங்கினார்கள். அப்போதுதான் அந்த இடத்தினை விட்டு எழுந்தாள் சிவன்யா.

நேராக நந்தியின் அருகே வந்தவள் காதின் அருகே கரத்தினைக் கொண்டு சென்றாள். இதுவரை ரசித்த பரவசத்தோடு "நந்தி! நந்தி! எப்பவுமே நான் சொல்லுறதுதான். எனக்கு உன்னைப் பார்த்துட்டே இருக்கணும். எப்பவும் நீ என்கூடவே இருக்கணும். ஏதோவொரு வடிவத்துல உன்னை நான் உணரனும். அவ்வளவுதான் நந்தி! ஆனால் நேத்து வந்த கனவு.." என்று அவள் கண்மூடி பேசிக் கொண்டிருக்க "சிவா" என்று அழுத்தமான குரல் அவளது காதினுள் விழுந்து அவளை சிலிர்க்க வைத்தது.


கரத்தினை எடுத்தவள் நந்தியினைப் பார்க்க நந்தியின் கண்கள் அவளை பார்த்து சிமிட்டியது போல் தெரிந்தது. "நந்தி" என அவள் மீண்டும் கிறங்கி அழைக்க,

"ஏய் சிவா சிவா.. உன்னைத்தான்டி. வெளிய வா. பிரசாதம் தர்றாங்க" பவித்ராவின் குரல் மயக்கத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது.

இதற்கு மேல் கோவிலில் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் மீண்டும் நந்தியின் அழகினை மனதிற்குள் நிறைத்துக் கொண்டு சிவனை திரும்பியும் பாராமல் செல்லத் தொடங்கியவள் சிறிது தூரம் சென்றதும் சட்டென்று நின்று விட்டாள்.

அங்கே, அவள் கண்ட காட்சி அவளை இமையை கூட விடாமல் சதி செய்தது. பக்கத்தில் பவி வழவழவென்று பேசியது அம்மா அதற்கு பதில் பேசியது எதுவும் அவள் காதில் விழவில்லை... சுற்றுப் புறம் மறந்து போகுமளவிற்கு அவள் நிற்கிறாள் என்றால் நிச்சயம் அதுவும் அவளது மனங்கவர்ந்தவனின் ஏதாவது ஒரு பரிணாமமாகத்தான் இருக்கும். அதென்ன?


தொடரும்...


கருத்துக்களை தெரிவிக்க
 
அத்தியாயம் 02

அந்த இரவு நேரத்தில் அங்கிருந்த பெயர்ப்பலகை அவளுக்குள் பலவித மாற்றங்களை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. இன்னும் அந்தக் கடை திறக்கவில்லை என்றாலுங் கூட அந்த பெயர்ப்பலகை இரவின் இருளை விரட்டியபடி பிரகாசித்துக் கொண்டிருந்தது.


அதிலுங் கூட உரிமை என்னும் இடத்தில் இருந்த 'நந்தி'யின் உருவம் மட்டும் தான் அவள் விழிகளுக்குத் தெரிந்தது. மேலே இருந்த சிவா என்னும் பெயர் எல்லாம் அவளுக்குத் தெரியவே இல்லை.


பட்டென்று முதுகில் அடிவிழுந்த பின்னரே அவள் இமைதட்டி விழித்தாள்.

"என்ன வேடிக்கை?"

"நந்தி" எனக் கைகாட்டினாள் சிவன்யா.

"இப்போத்தான் தரிசனம் பண்ணிட்டு வந்த. இந்த நேம் போர்டையுமா இப்படி வெறிச்சு பார்த்துட்டு இருப்ப? அம்மா தாயே. உங்க அப்பா வீட்டுக்கு வந்துருப்பார்னு உங்க அம்மா என்னை காவலுக்கு நிப்பாட்டிட்டு கிளம்பிட்டாங்க. ஒவ்வொரு தடவையும் உன்னை பத்திரமா வீட்டுல விடுற வரைக்கும் எனக்கு பிரசாதம் செரிச்சுடுது. ஒழுங்கா உன் கூடையில வச்சுருக்க பிரசாத்தையும் எனக்கே குடுத்துடு... வா சிவா" என்று அவளை பவி இழுக்க அந்த நேம் போர்டில் இருந்த சிவப்பு நிறம் அவளுக்கு எதையோ உணர்த்தியது.

'இரத்தம்! இரத்தம்!' என மனம் அடித்துக் கொண்டது. அவளுக்குள் ஏற்படும் போராட்டங்களை அறியாமலே பவி இன்னும் வேகமாய் இழுக்க சட்டென்று யார் மீதோ மோதி நின்றாள் சிவன்யா. எதிரே தன் அம்மா வயதுடைய பெண்மனி நின்றிருக்க, அவரது கையில் இருந்த பிரசாதக் கூடை இவள் மோதியதில் கீழே விழுந்திருந்தது.

"அய்யோ சாரிம்மா.." சிவன்யா பதறிப் போனாள்.

தன் மகனுக்காக சிவனிடம் வேண்டி அபிசேகம் செய்துவிட்டு அவனுக்காகவே இறைவனின் பிரசாதம் வாங்கிவிட்டு வரும் வழியில் அது இப்படி மண்ணில் விழுந்து வீணாகிவிடும் என்று அந்த பெண்மனி எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.

கோவிலுக்கு கிளம்பும் முன்னர் நடந்தது எல்லாம் தற்போது அந்த பெண்மனியின் நினைவில் வந்து போனது..

"அம்மா! அம்மா! என்ன கனவு கண்டுட்டு இருக்கீங்களா? எத்தனை தடவை கூப்பிட்டுட்டு இருக்கேன்"

"தேவா! நீ எப்போ டா வந்த"

"சரியாப் போச்சு" என அவன் அம்மாவின் அருகே அமர்ந்து "என்னாச்சு உங்களுக்கு? ரொம்ப டல்லா தெரியுறீங்க. நாளைக்கு பங்ஷன் இருக்கு. அதுக்கான சந்தோஷம் உங்க முகத்துல இல்லவே இல்லையே. ஏன் நான் அடுத்தக்கட்டத்துக்கு போறது உங்களுக்கு பிடிக்கலையா?" என்றான் அவன்.

"என்னடா பேசுற?"

"நானும் இந்த கடை ஆரம்பிக்கிறதைப் பத்தி பேசுனதுல இருந்து பார்க்கிறேன். நீங்க நீங்களாவே இல்லை. ஏதாவது பிரச்சனையா அம்மா. அப்படி இருந்தால் என்கிட்ட சொல்லுங்க"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை டா"

"பொய் சொல்லுறீங்க? என்னமோ பண்ணுங்க. நாளைக்கு சீக்கிரமா கிளம்பணும். ஞாபகம் இருக்கா?"

"இருக்குடா தேவா. நான் உன்னைப் பெத்தவ"

"பரவாயில்லை. மறக்காமல் இருக்கீங்க"

"தேவா! அதுக்கு முன்னாடி கோவிலுக்கு போகணும். என்னை கூட்டிட்டு போறயா? இன்னைக்கு பிரதோஷம்"

"சரிம்மா. நீங்க ரெடியாகி வாங்க. கூட்டிட்டு போறேன்" என்று அவன் உள்ளே செல்ல ராசம்மாள் சோர்வாக எழுந்து அங்கிருந்து அகன்றாள்.

அறைக்குள் நுழைந்ததும் ஒருவித பயம் தன்னைக் கவ்விக் கொண்டது. அதை முயன்ற அளவு விரட்டிவிட்டு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நாளை கடையின் திறப்பு விழா மட்டும் இல்லை. தேவாவின் பிறந்தநாளும் தான். இருபத்து ஏழாவது வயது நாளை ஆரம்பிக்கப் போகிறது.

அந்த நாளுக்கு உரிய சந்தோஷம் ராசம்மாளிடத்தில் இல்லை. அதை விட வேறொன்றே அவள் சிந்தையை போட்டு குடைந்துக் கொண்டிருந்தது. இந்த நாள் வர வேண்டாம் என்று அவள் ஆன மட்டும் நினைத்துக் கொண்டாள். ஆனால் காலம் யாருக்காகவும் நிற்காதே. நகர்வது அதன் வேலை. அதைக் கடப்பது நம் வேலை..

இப்போதும் அந்த குரல் அவள் காதில் கணீரென்று ஒலித்தது.

அவன் கடை ஆரம்பிப்பது தொடர்பாக அலைந்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் ராசம்மாள் அவனது ஜாதகத்தினை எடுத்துக் கொண்டு சோதிடரைப் பார்க்கச் சென்றிருந்தாள்.

அங்கே,

"இது பையனோட ஜாதகம். அவன் இப்போ புதுசா தொழில் வேற தொடங்கப் போறான். அது விஷயமா நிறைய அலைச்சல் அவனுக்கு. எல்லாம் சரியா நடக்குமா என்னென்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க" என்று அவனின் ஜாதகத்தினை குடுக்கவும் அதை வாங்கி சோதிடர் ஆராயத் தொடங்கிவிட்டார்.

"ஒரே பையனா?" சில நிமிடங்கள் கழித்து அவர் வாய் திறக்க "ஆமாம் ஒரே பையன் தான்" என்றாள் இவள்.

வேறு எதுவும் கேட்காமல் கட்டத்தினை ஆராய்ந்தவர் "பிறந்தநாள் வரப் போகுதில்லையா. அன்னைக்கு உங்க பையனுக்கு கண்டம் இருக்கு. உயிர் கூட போகலாம்" உண்மையை உடைத்தது போல் அவர் சொல்ல சட்டென்று அதிர்ந்து போனாள் அவள்.

இப்படிச் சொல்லுவார் என்று எதிர்பார்த்து அவள் அங்கு வரவில்லை. தொழில் விருத்தியைப் பற்றி கேட்டுவிட்டு அதன்பின் கல்யாண யோகத்தினையும் விசாரிக்கலாம் என்று வந்தவளுக்கு தன் மகனுக்கு இவ்வளவு பெரிய கண்டம் இருப்பதை அறிந்து எப்படி எதிர்வினையாற்றுவது என்று கூட தெரியவில்லை.

"அம்மா! அம்மா! இங்க பாருங்க" சோதிடர் விளித்தபின்னர் தான் தன் உணர்வுக்கு வந்தாள். நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய "அம்மா! இதுல இருக்குறதை தான் நான் சொல்லுறேன். ஒரு கரு உருவாகும் போதே அனுபவிக்க வேண்டிய விதி எழுதப்பட்டுவிடும். அந்த விதியை மாத்தி எழுதுவது எல்லாம் நம்ம கையில இல்லைம்மா" என்றார் அந்த சோதிடர்.

"ஒரே பையன். அவனுக்கு இப்படியொரு கண்டம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்ட பின்னாடி.. என்னால. எப்படி? முடியல.. " என்று விம்மி அழ, சோதிடரால் ஆறுதலே சொல்ல முடியவில்லை.

சற்று நேரங் கழித்து,

"இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?" என்று அவளே கேட்க, "உங்க பையனோட உயிரை காப்பாத்த ஒருத்தன் இருக்கான். ஒருத்தன் மட்டும்தான் இருக்கான். அவன்தான் சிவன். அவனைத் தவிர வேற யாராலும் அது முடியாது. அந்த உயிரை போக விடாமல் இழுத்துப் பிடிக்க அவன் மனசு வைக்கணும். நீங்க அவன்கிட்டதான் சரணடையனும்" ஜாதகத்தினை மூடிவிட்டு அவளிடம் கொடுத்துவிட அன்றிலிருந்து இன்றுவரை ராசம்மாளுக்கு மனநிம்மதி என்பது அற்றுப் போனது.

இதை மகனிடம் சொல்ல முடியாமல் தினமும் சிவனிடம் சென்று முறையிட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

பிரதோஷ தினமான இன்றும் தன் மகனது நலனை மட்டும் எண்ணி வந்த தாய்க்கு இப்படியொரு சங்கடம் நேர்ந்துவிட்டது.
மண்ணில் விழுந்து கிடந்த பிரசாதத்தினையே கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டிருந்த ராசம்மாளிடம், "நிஜமாவே சாரிம்மா. இவ கையைப் பிடிச்சு இழுத்த வேகத்துல நான் தெரியாமல் மோதிட்டேன். அம்மா நீங்க பீல் பண்ணாதீங்க" சிவன்யா வருத்தத்தோடு சொல்ல

"இல்லை பரவாயில்லைம்மா. நீ என்ன பண்ணுவ பாவம். எது நடக்கணும்னு இருக்கோ அதுதானே நடக்கும்" ராசம்மாளுக்கு மனம் விட்டுவிட்டது. நாளைய தினம் பூதம் போலெழுந்து அவளை தின்றத் தொடங்கியது.

"பிரசாதம் எல்லாம் கொட்டிடுச்சே ம்மா. என்னால தான். ச்சே.. என்னை மன்னிச்சிடுங்கம்மா" சிவன்யாவின் குரலில்,

"விடும்மா. எல்லாம் என் நேரம். பையனுக்காக அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன். இப்போ இப்படி ஆகிடுச்சு" என சொன்னாலும் அவரது மனம் என்ன பாடுபடும் என்பதை அறிந்த சிவன்யா..

"அப்படிச் சொல்லாதீங்க.. இருங்க.. இப்போ என்ன பிரசாதம் தானே வேண்டும். இதுவும் நந்தி... ஆங் சிவன் கோவில் பிரசாதம் தான்... வாங்கிக்கோங்க. உங்க பையனுக்கு கொடுங்க" என்றாள்.

"வேண்டாம்ம்மா"

"சிவா கொடுக்குறதை வேண்டாம்னு சொல்லாதீங்கம்மா. என்னம்மா பார்க்குறீங்க. என் பேர் சிவன்யா. அதான், அப்படி சொன்னேன். உங்க பையன் நல்லா இருப்பாரு. நான் சொல்லுறேன்ல" என்று சொன்ன உடனே அந்த பெண்மனியின் கண்ணீர் நின்றுவிட்டது.

"அம்மாடி சிவன்யா. ரொம்ப சந்தோஷம்மா. நீ சொன்னது எனக்கு அந்த சிவனே நேர்ல வந்து சொன்ன மாதிரி இருக்கு. கொடும்மா" என்று மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

கீழே விழுந்து கிடந்த பிரசாதம் மனதை முதலில் சுக்கு நூறாக உடைத்திருந்த போதும் சிவன்யாவின் வாக்கில் அது தன்னை சமன் செய்து கொண்டது.

"நான் வர்றேன் ம்மா" என்று அவள் சொல்லிவிட்டு மீண்டும் அந்த நேம் போர்டை பார்த்துக் கொண்டு அவள் சென்றுவிட ராசம்மாளும் தன் மகனின் கடையை வெளியே இருந்து பார்த்த வண்ணம் பாரம் அகன்றவளாய் கிளம்பிவிட்டாள்.

"பாவம் டி அந்த அம்மா. ச்சே ஏதோ கஷ்டத்துல இருக்காங்கன்னு தோணுது. பையன் நல்லா இருக்கணும்னு வேண்டியிருக்காங்க போல. நாமதான் தெரியாத்தனமா அதை கீழ தள்ளிவிட்டோம். அந்த பையன் நல்லபடியா இருக்கணும். இருப்பான்" என சொல்லிக் கொண்டே வந்தவளை பவி வீட்டில் விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.

தன் அறைக்குள்ளும் அதே நினைவுடன் புகுந்த சிவன்யாவிற்கு அந்த அறையே இரத்தக் கலரில் இருப்பது போலொரு பிரம்மை. கண்களை தேய்த்து தேய்த்து பார்க்க அப்போதும் கலர் மாறவே இல்லை. பிரதோஷ தரிசன திருப்தி அவளை விட்டு விலகி எங்கேயோ போயிருந்தது.

சட்டென்று அவளது அறைக்குள் இருந்த நந்தியின் சிலையினை பார்க்க அவனும் அப்படித்தான் அவளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டிருந்தான்.


"நந்திதான் டி. உன் நந்தியே தான். என்னை நீ தொட விட மாட்டியா. உன்னை விட்டு ரொம்ப தூரம் போகப் போறேன்" என்றவனின் குரல் அவள் செவிப்பறையில் முட்டி மோதியது.


"நந்தி! வேண்டாம்" இவள் அலற "நந்தியைத்தான் வேண்டாம்னு விலக்கி வச்சுட்டயே.. நான் போறேன்" என்றவனின் குரலில் அவள் நிதானமிழந்தாலும் நொடியில் தன்னைத் தேற்றிக் கொண்டு...


"அது கனவு.. அந்த கனவை பத்தி நாம இவ்வளவு ஆழமாக யோசிக்கத் தேவையே இல்லை. மறந்து போ போயிடு சிவா" என்று சொல்லி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள். ஓரளவுக்கு அவள் இயல்பாகியும் போனாள். ஆனாலும் அந்த கடையின் பெயர்ப்பலகை அவ்வப்போது அவளது கண்ணுக்குள் நின்று சதிராடத் தொடங்கிவிட்டது.

-------------------------------

"நான்தான் வர்றேன்னு சொல்லியிருந்தேன்ல அதுக்குள்ள வந்துட்டீங்க" வீட்டிற்குள் நுழைந்த உடனே அன்னையை கடிந்துக் கொண்டான் அவன்.

"அப்படியே காலார நடந்து வந்துட்டேன் தேவா" குரலில் கொஞ்சம் உற்சாகம் வேறு தென்பட்டது அவனுக்கு.

"கோவிலுக்கு போய்ட்டு வந்ததும் ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க. இப்படி இருந்தால் பார்க்க எவ்வளவு நல்லா இருக்கு. அதை விட்டுட்டு சோகமாய் இருந்தீங்களே"

"அதை விடுடா. இந்தா பிரசாதம் எடுத்துக்கோ"

"சிவன் கோவில்ல கொடுத்ததா?"

"சிவா கொடுத்தது"

"என்ன?" அவன் புரியாமல் பார்க்க "கோவில்ல இருந்து வரும் போது ஒரு பொண்ணைப் பார்த்தேன் தேவா. அப்படியே சிவனே பெண் உரு கொண்டு வந்துருக்கதா ஒரு நிமிஷம் தோண வச்சுட்டா. அந்தளவுக்கு கடாட்சம் அவகிட்ட இருந்தது. அவ பேர் என்ன தெரியுமா? சிவன்யா.. உனக்காக நான் வாங்கிட்டு வந்த பிரசாதம் கீழ விழுந்துடுச்சுடா. இது அவகிட்ட இருந்தது. அவ இதை என்கிட்ட தந்து, சிவா தர்றதை வேண்டாம்னு சொல்லாதீங்க.. கொண்டு போய் உங்க பையனுக்கு கொடுங்க. உங்க பையன் நல்லா இருப்பான்னு சொன்னா. கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது. எடுத்துக்கோ டா" அம்மா சொன்னதில், அவன் காதில் விழுந்து இதயத்தினை தொட்டது 'சிவா!' என்னும் பெயர் மட்டுமே.

திருநீறு பூசிவிட்டு அம்மா அவன் கையில் சிவன்யா தந்த பிரசாத்தினை தர அதை எடுத்து வாயில் போடும் போது அவன் உள்மனம் 'சிவா' என சொல்லிக் கொள்ள பிரசாதம் என்றுமில்லாத அளவிற்கு தித்திப்பாய் அவனுள் இறங்கியது...அது அவனுக்குள் இனிப்பை மட்டுமல்ல வேறொன்றையும் சேர்த்தே கடத்தியது.

அவன் சாப்பிடுவதையே மெய்மறந்து பார்த்த ராசம்மாள், மறுநாள் என்ன நேர்ந்தாலும் தன் மகன் நன்றாயிருப்பான் என்ற சிவாவின் வாக்கினை முழுமையாய் நம்ப தொடங்கயிருந்தாள்.

சிவவாக்கு பலிக்குமா????


விமர்சனங்களை தெரிவிக்க

👇👇👇

https://pmtamilnovels.com/index.php?threads/மனங்கழிய-நின்ற-மறையோனே-கருத்து-திரி.298/
 
அத்தியாயம் 03

நந்தி என்ற பெயர் எப்படி அவளை உருக வைக்கிறதோ, அதைப் போலவே சிவா என்னும் பெயர் அவனை உருக வைத்திருந்தது. சிவா என்னும் பெயரே தன்னைக் கட்டிப் போட்டு வைத்திருப்பதாய் அவன் எப்போதும் நினைத்தான். அதனாலே தான் அவன் தனது கடைக்கும் கூட சிவா என்னும் பெயரையே வைத்திருந்தான். நந்திக்கு சிவனை விட ப்ரியமான பெயர் வேறு ஏது? இப்போது அப்பெயர் கொண்ட ஒரு மங்கை இருப்பதை அன்னையின் வாயிலாக அறிந்துக் கொண்டவனுக்கு ஒருவித பரவசம் தொற்றிக் கொண்டது. சுருக்கமாய் சொல்வதென்றால் அவள் நந்தி பையித்தியம். இவனோ சிவ பையித்தியம்..


முழு பிரசாதத்தினையும் காலி செய்தவன் இன்னும் கொஞ்சம் வேலை இருப்பதாக அன்னையிடம் சொல்லிவிட்டு கடைக்குச் சென்றான். மறுநாள் காலையில் கடையின் திறப்புவிழா. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அவன் ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.


இரவெல்லாம் சரியாக உறங்காததால் சிவன்யா தலைவலியோடு தான் எழுந்தமர்ந்தாள். இரவு நேர்ந்தது எல்லாம் மீண்டுமொரு முறை கண்ணுக்குள் வந்து போனது. உடனே போனை எடுத்தவள் பவியினை அழைத்தாள்.

"சொல்லு சிவா"

"பவி கோவிலுக்குப் போகணும். நீயும் வர்றயா"

"நேத்துத்தானே போயிட்டு வந்தோம்"

"வர்றயா? வரலையா?"

"வரலை.."

"சரி" என்று சொன்னவள் உடனே போனை வைத்துவிட்டு குளிக்கச் சென்றுவிட்டாள். குளித்து முடித்து தயாராகி வந்தவளைக் கண்ட தங்கம் கேள்வி கேட்கும் முன் "அம்மா கோவிலுக்குப் போயிட்டு வந்துடுறேன்" என்று சொல்லி அவள் வாசலுக்குச் சென்றிருந்தாள்.

அவள் போவதையே பார்த்தவள் கணவனிடம் திரும்பி "ஏங்க அவ நடந்துக்கிறதைப் பார்த்துட்டுத்தான இருக்கீங்க. அவளுக்கு நீங்களாவது எடுத்துச் சொல்லக் கூடாதா?" என்றாள் சங்கடமாக.

"தங்கம்! என் பொண்ணு என்ன தப்பா பண்ணுறா. எடுத்துச் சொல்லி திருத்த"

"இல்லைங்க. கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய வயசு வந்துடுச்சு. அவளோட நந்தி பையித்தியத்தை நாம சாதாரணமா எடுத்துக்கிட்டோம். ஆனால் போற இடத்துலயும் அப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது இல்லையா?"

"ஏன் தங்கம். பக்தியாய் இருக்குறது அவ்வளவு பெரிய குற்றமா என்ன?"

"அது குற்றம் இல்லை. அளவுக்கு மீறின அந்த பக்தி..." தங்கம் முடிக்கும் முன்னே இடையிட்டவன் "அதையும் புரிஞ்சுக்குறதுக்கு ஆட்கள் இருக்காங்க. அப்படியொரு வீட்டுல என் பொண்ணை குடுத்துட்டா போச்சு" என்றான்.

"நந்தியை பார்த்தா சகலமும் மறந்து போயிடுறா. எனக்கென்னவோ அவ இப்படியே இருந்துடுவாளோன்னு பயம் வந்துடுச்சுங்க"

"அவ அப்படி இருக்க மாட்டா. நீ கவலைப்படுறதுக்கு இதுல எதுவும் இல்லை. அவளுக்கு பக்தியோட சிவன்யான்னு பேர் வச்சவளே நீதான். இப்போ நீயே அவளைப் பத்தி இப்படிச் சொல்லுற? எல்லாத்தையும் விட்டுடு அவளுக்கே தெரியும் என்ன செய்யுறதுன்னு" எனச் சொல்லிக் கொண்டிருக்க சிவன்யாவோ கோவிலுக்குள் நுழைந்திருந்தாள்.

ஆங்காங்கே பக்தர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்க இவள் சென்று நந்தியின் பக்கத்தில் அமர்ந்துவிட்டாள்.

"என்ன சொல்ல டிரை பண்ணுற நந்தி! எனக்கு சத்தியமா புரியல. அந்த கனவு வந்ததுல இருந்து நான் ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கேன். என்னால அதை சகஜமா கடந்து போக முடியல. இராத்திரி முழுக்க இதே யோசனைதான். சரியா தூங்கவும் முடியல. எனக்கு என்ன ஆச்சு! எதுவா இருந்தாலும் எனக்கு தெளிவா சொல்லேன் நந்தி. அவன் யார்? அவனுக்கு ஆபத்துன்னு நான் ஏன் அடிச்சுட்டு உக்காந்துருக்கணும். ஏதாவது பேசேன் நந்தி... இதுக்குத்தான்னு ஒரு சின்ன க்ளூவாவது குடு நந்தி"
"சிவா!" அவளது பேச்சினைத் தடைசெய்ய ஒலித்த குரலில் திரும்பியவள் "அம்மா" என்று அழைத்துவிட்டு தடுமாறி நின்றாள்.

"சிவா! காலையிலேயே உன்னைப் பார்ப்பேன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. சந்தோஷமா இருக்கு" உண்மையான சந்தோஷத்துடன் அவள் சொல்ல சிவன்யா சிரித்து மட்டும் வைத்தாள்.

"என்னம்மா ரொம்ப டல்லா தெரியுற?"

"ஒன்னுமில்லை அம்மா. கொஞ்சம் தலைவலி"

"அச்சச்சோ அதோட கோவிலுக்கு வருவானேன். வீட்டுல ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே. ஓ சிவனைப் பார்க்காமல் இருக்க முடியலையா?"

"இவனைப் பார்க்காமல் இருக்க முடியலைம்மா" என்று அவள் கைகாட்டிய திசையில் அமர்ந்திருந்தான் நந்தி.

"நந்தியா?"

"ஆமாம் ம்மா. எனக்கு நந்திதான் பிடிக்கும்" என்று சொல்லும் போதே தனக்கு அருகில் நிழலாட நிமிர்ந்து பார்த்தவள் அவன் முகத்தினைப் பார்த்து குழம்பிப் போனாள். அந்த முகம் அவளிடம் எதோ சொல்ல வருவதைப் போலிருந்தது. 'அப்போ என்னைப் பிடிக்குமா சிவன்யா?' அவன் கண்கள் கேள்வி கேட்க, அவளோ குழப்பத்தோடு அந்த அம்மாவினைப் பார்த்தாள்.

"சிவன்யா! இவன் என் பையன் தேவா" என்று ராசம்மாள் சொல்ல, "நந்தி.. நந்தி தேவன்" என்று அவன் முழுப்பெயரையும் சொன்னான். நந்தி என்ற பெயரில் அவள் கண்கள் விரிய அவனை இன்னும் நன்றாகப் பார்த்தாள்.

"நந்தி!" இதழ்கள் முணுமுணுக்க அந்த சத்தம் கூட அவனது செவியில் தப்பாது விழுந்தது.

"இன்னைக்கு இவனோட பிறந்தநாள் ம்மா. அதான் காலையிலேயே கோவிலுக்கு வந்துட்டோம். வந்ததும் நல்லது தான். உன்னை மறுபடியும் பார்க்குற சந்தர்ப்பம் கிடைச்சுடுச்சே. இவன் உனக்கு அப்படியே ஆப்போசிட்.. நீ நந்தின்னு சொன்னா இவன் சிவன் சிவன்னு சொல்லுவான். இவனுக்கு எது ஆரம்பிச்சாலும் அதுல சிவன்தான் இருக்கணும். சின்ன வயசுல இருந்து சிவ பக்தி ஜாஸ்தி" என்று சொல்ல இருவரும் ஏதோவொரு நினைவில் கட்டுண்டவாறு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனது முகம் கொஞ்சங் கொஞ்சமாய் இரத்தம் வழிந்து அகோரமாய் இருப்பது போன்ற காட்சி விரிய அவளால் அதை எல்லாம் தாங்க முடியவில்லை. தலையை அழுந்தப் பிடித்துக் கொண்டவள்... என்ன நினைத்தாலோ "ஒரு நிமிஷம் என்கூட வாங்க" என்று அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்று சிவன் சன்னதி முன் நிறுத்தினாள்.

அங்கே தட்டில் இருந்த விபூதியை எடுத்து அவன் நெற்றியில் பூசிவிட்டு "நந்தி! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க!" என்று வாழ்த்த, பின்னோடு வந்து நின்ற ராசம்மாளுக்கு மனம் நிறைந்து போனது.

அவளது விரலின் ஸ்பரிசம் நெற்றியில் பட்ட மாத்திரம் அவனது தேகம் சில்லென்று ஆகிப் போனது. "தாங்க்ஸ் சிவா.." என்று அவன் சொல்ல அவள் லேசாய் தலையசைத்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்தாள். பிரகாரத்தில் இருந்த ஒரு தூணின் அருகே அமர்ந்து எதை எதையோ யோசித்துக் குழப்பிக் கொண்டிருந்தாள் அவளையே.

"அம்மா சிவாவை நம்ம கடைக்கு கூப்பிடுங்க ம்மா" என்று சொல்ல ராசம்மாளுக்கும் அதே நினைவுதான்.

வெளியே வந்து அவளைத் தேடிப் பார்த்தவள் அவளின் அருகே வந்து "சிவாம்மா இன்னைக்கு இவனோட பிறந்த நாள் மட்டும் இல்லை. கடையோட திறப்பு விழாவும் தான். நீ வந்தால் எங்க இரண்டு பேருக்கும் சந்தோஷமா இருக்கும். வாம்மா" என்று சொல்ல "சரிம்மா வர்றேன்" என்றாள் அவள்.

அவளை அழைத்துக் கொண்டு கடைக்குக் கூட்டிச் செல்ல அந்த பெயர்ப்பலகையைப் பார்த்துவிட்டு ஒரு நொடி நின்றுவிட்டாள்.

"என்ன சிவா?"

"ஒன்னுமில்லை நந்தி" அவள் தலையை ஆட்டிவிட்டு அவனின் அம்மாவோடு உள்ளே சென்றுவிட அவள் காலடி பட்ட தன் கடையை அவ்வளவு ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

நந்திதான் பிடிக்கும் என்ற வார்த்தைகள் நேற்றைய பிரசாதம் போல் அவனுக்குள் தித்திப்பாய் இறங்கித் தொலைத்திருக்க அதில் தன்னையே தொலைத்திருந்தான் அவன்.

அம்மா சிவன்யா என்று அழைத்துப் பேசத் தொடங்கியிருக்கும் போதே அவன் அவளையே பார்த்த வண்ணம் தள்ளியே தான் நின்றிருந்தான். நீறு பூசியபடி நின்றிருந்தவளின் தோற்றம் அவனுக்குள் சிவ தரிசனத்தையே தந்திருந்தது. அவனிடம் இருக்கும் அத்தனையும் அவனை விட்டு எங்கோ தூரமாய் போய்விட்டதொரு உணர்வில் அவன் நின்றிருந்தான்.
ஆனால், நந்தி பிடிக்கும் என்று சொன்னபிறகு அவனால் அப்படி நிற்க முடியவில்லை. அவளருகே நெருங்கி வந்து நின்றுவிட்டான். இப்போதுவரை அந்த நெருக்கம் தொடர்கிறது. அவனது நெற்றி இன்னமும் அவளது ஸ்பரிசத்தினை பத்திரப்படுத்தி அவனுக்கு கடத்திக் கொண்டே இருந்தது.

உள்ளே வந்தவள் கடையின் வடிவமைப்பையும் உள்ளிருந்த பொருட்களையும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க ராசம்மாள் "இங்க வா சிவன்யா" என்று அழைத்திருந்தாள்.

"என்னங்கம்மா"

"இதை உன் கையால அடுப்புல வைம்மா"

"நானா.. நீங்க பெரியவங்க"

"எனக்கு இப்போ நீதான் தெய்வம் மாதிரி இருக்க. இதைப் பத்தி நான் சொன்னாலும் உனக்குப் புரியாது. ஆனால் என் மனசுல இன்னைக்கு இருக்குற சந்தோஷத்துக்கு முழுக் காரணமே நீதான். இதை நீதான் பண்ணனும்"

அவளும் பால் சட்டியினை அந்த ஸ்டவில் வைத்துவிட்டு தள்ளி நிற்க நடப்பதை எல்லாம் நந்தியும் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏதொவொரு இடறல் அவள் இதயத்தினை அவ்வப்போது வலிக்க வைத்துக் கொண்டே இருந்தது. அப்படியிருந்தும் அவள் முகம் மாறாமல் நடித்துக் கொண்டிருந்தாள். நேற்றைய அழுகைக்கு பின் அந்த அம்மாவின் முகத்தில் தென்படும் புன்னகை அவளுக்கு சின்ன திருப்தியை அளித்திருந்தது.

"பால் நல்லபடியா பொங்கிடுச்சு. இந்தாங்க சிவன்யா.. குடிங்க" முதல் டம்பளைரை அவளுக்கு கொண்டு வந்து நீட்டினான் நந்தி.
வாங்கிக் கொண்டவளுக்குத் தெரியவில்லை அவன் முன்னிருந்த சிவனுக்கு கூட படைக்காமல் அவளுக்குத் தான் முதலில் கொண்டு வந்திருக்கிறான் என்பது.

குடித்துக் கொண்டிருந்தவள், பார்வையை சுழற்றியபடி பார்க்க அங்கே இருந்த நந்தியின் சிலை வெகுவாக கவர்ந்திழுக்க வேகமாக அங்கே சென்றுவிட்டாள். நந்தியினை கையில் எடுக்கையிலே அவளது இதழ்கள் நந்தி எனச் சொல்லிக் கொண்டது..

"கூப்பிட்டீங்களா?" என்று அவன் முன்னே வந்து நிற்க "அது நந்தி" என்று அவளிடம் இருந்த சிலையை கைகாட்டினாள். "ஓ!" என்று சொன்னவனிடத்தில் ஏமாற்றமும் சேர்ந்தே வெளிப்பட்டது.

"எனக்கு நந்தி வேண்டும்" ரசனையுடன் அவள் சொல்ல "வச்சுக்கோங்க சிவா" என அவனும் அதே ரசனையுடன் சொன்னான்.

"எவ்வளவு?" என்று அவள் கேட்டதுதான் தாமதம் அவனுக்குள் இருந்த மாயவலை அறுந்துப் போனது. ஏதோ கேட்கக் கூடாததை கேட்டு விட்டவனாய் முகத்தை வைத்துக் கொண்டு "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்" எரிச்சலாக சொன்னவனை உறுத்துப் பார்த்தவள் "எவ்வளவுன்னு சொல்லுங்க. Gpay பண்ணுறேன் உங்க போன் நம்பர் சொல்லுங்க" என்றதும் இவனும் தன் நம்பரைச் சொல்லிவிட்டான்.

முழுப்பணத்தினையும் அனுப்பாமல் நூறு ரூபாய் கம்மியாக அனுப்பிவிட்டு தன் பர்ஸில் இருந்து அந்த பணத்தினை எடுத்து இதை "வாங்கிக்கோங்க நந்தி..." என்றாள்.

நந்தி என்னும் அழைப்பிற்காக உடனே வாங்கிக் கொண்டவனைப் பார்த்தவள் "நான் கிளம்புறேன்" என்றதும்
"சரி சிவா" என்று அவன் அவளே வாசல் வரைக்கும் வழியனுப்ப வந்தான்.

"என்னென்னு தெரியல. எங்க அம்மா கொஞ்ச நாளா ரொம்பவே மனசொடிஞ்சு போய் இருந்தாங்க. என்ன கேட்டாலும் அதுக்கான சரியான காரணம் இல்லை. நேத்து உங்களைப் பார்த்துட்டு வந்ததுல இருந்து அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. சோ தாங்க்ஸ். அதுக்கும்.. பிரசாதம் கொடுத்ததுக்கும்.." என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் முகம் பேயறைந்தது போல் மாறத் தொடங்க "என்னாச்சு சிவா" என அவன் கேட்க, தலையை உதறியவள் "நந்தி" என்றவாறு அவனை பிடித்திழுத்திருந்தாள்...

அடுத்த கணம் அந்த பெயர்ப்பலகை கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்து தெரித்ததில் அந்த கண்ணாடி துண்டொன்று அவன் நெற்றியை பதம் பார்த்து இரத்தம் வழியத் தொடங்கியிருந்தது...தொடரும்..விமர்சனங்களை தெரிவிக்க
👇👇👇
https://pmtamilnovels.com/index.php?threads/மனங்கழிய-நின்ற-மறையோனே-கருத்து-திரி.298/
 
அத்தியாயம் - 04


ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னமும் அவன் கரம் அவள் கரத்தோடு இறுக்கமாக புதைந்திருக்க அது அவனுக்குள் நெருக்கத்தினை அதிகரித்திருந்தது.

ஏன் இந்த பதட்டம்?
ஏன் இந்த தொடுகை?
எண்ணற்ற கேள்வி உள்ளுள் இருந்த போதும் அவன் எதையும் கேட்கவில்லை. காரணம், அவள் இன்னமும் விழி திறக்காமல் அப்படியே சிலையென நின்றிருந்தாள்.


அவள் கரம் கொஞ்சங் கொஞ்சமாய் நடுங்கத் தொடங்கியதை அறிந்த பின்னரே "சிவா! என்னாச்சு உங்களுக்கு. என்னை நிமிர்ந்து பாருங்க" என்றான் நந்தி.


மெல்ல விழியுயர்த்தி அவள் பார்க்க நந்தி அவனுக்கெதிரே அவள் பூசிவிட்ட விபூதி கூட கலையாமல் நின்றிருக்க இவளுக்குள் ஏக குழப்பம்.


"என்ன அப்படி பார்க்குறீங்க?"

"ஆர் யூ ஓகே நந்தி"

"எனக்கொன்னும் இல்லை. நீங்கதான் ஓகே இல்லைன்னு தோணுது சிவா. ஏன் திடீர்னு நந்தின்னு கூப்பிட்டு என்னை இழுத்தீங்க. எனி ப்ராப்ளம்?"

"ஆங்.. அது நேம் போர்டு.. இரத்தம்" என்று அவள் திக்கித் திணறி அந்த பெயர்ப்பலகையைப் பார்க்க அதுவும் நன்றாகத்தானிருந்தது.


"ஒன்னும் பிரச்சனையில்லையே" இதமான குரலில் அவன் வினவ, "நத்திங்" என்றாள்.

"ஏதோ நினைச்சுப் பயப்படுற மாதிரி தெரியுது. கொஞ்ச நேரம் கடைக்குள்ளயே உக்காந்துருக்கீங்களா?"


"இல்லை வேண்டாம். அம்மா திட்டுவாங்க. நான் கிளம்புறேன்" என்றவள் அவனது கையை அழுத்தி "ஜாக்கிரதை நந்தி" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.


அவள் கண்ணில் இருந்து மறையும் வரை அவன் நகரவே இல்லை. அவளைப் பார்த்த உடனே, அவள் பெயரை கேட்ட உடனே, இத்தனை நாள் சிவன் மீது வைத்திருந்த அத்தனை உணர்வுகளும் அவளை நோக்கி வெளிவர முதலில் திடுக்கிட்டுத்தான் போனான். இவ்வுணர்வுகளை என்னவென்று வரையறுப்பது என்றெண்ணி எண்ணி அவனே மாய்ந்து போனான்.


அவளருகிலே எப்போதும் இருக்க வேண்டும் அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க வேண்டும் என்று அவன் மனம் உண்மையிலே நந்தியாகவே யோசிக்கத் தொடங்கியது.
'வேண்டாம் டா நந்தி.. இப்போத்தான் பார்த்துருக்கோம். உடனே இப்படி யோசிக்கக் கூடாது. எதுவா இருந்தாலும் சிவன்(சிவா) மனசு வைக்கட்டும்' என்று நினைத்தபடி அவன் உள்ளே நுழைந்தான்.வீட்டுக்கு வந்தபின்னும் அவளால் தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தங்கம் கேட்ட எந்த கேள்விக்கும் அவளால் சரியாக பதிலும் சொல்ல முடியவில்லை. இப்படியெல்லாம் அவள் இருந்ததே இல்லையே என்று மாணிக்கம் அவளிடம் பேசத் தொடங்கினான்.

"என்னம்மா! ஏதாவது பிரச்சனையா?"

"எனக்கு இதை எப்படிச் சொல்லுறதுன்னு தெரியலைப்பா? சொன்னால் இதுலாம் நம்புவாங்களான்னு தெரியல?"

"நந்திகிட்ட பேசிட வேண்டியதுதானே" அவள் மனம் புரிந்தவனாய் மாணிக்கம் சொல்ல, "அவன்கிட்டயும் பேசிட்டேனே. ஆனாலும் மனசு சமாதானம் ஆக மாட்டேங்குதே" என்றாள் சோகமாய்.

"ஓகே ரிலாக்ஸ். என்ன பிரச்சனை? அப்பாகிட்ட சொல்லு"

"அப்பா! கனவு எதுக்காக வருது?"


"நம்மளோட சிந்தனைகள், உணர்வுகள் இதோட தாக்கம் ப்ளஸ் நாம ஏற்கனவே பார்த்திருந்த காட்சி இதெல்லாம் சேர்ந்து நம்மளோட அனுமதியே இல்லாமல் தூக்கத்துல கனவா வருது. ஏன் உனக்கு கனவு வந்ததா?"

"ஆமாப்பா! நந்தின்னு ஒரு பையன் அவன் என்னை ஏத்துக்க மாட்டயா அப்படின்னு கேட்டுட்டே காரை ரொம்ப ஸ்பீடா ஓட்டி மரத்துல மோத வச்சுட்டான். அவன் முகத்துல இருந்து இரத்தமா கொட்டுது... கடைசியா சிவான்னு என் பேரைச் சொல்லி வேற கூப்பிடுறான்"

"நல்லா இருக்கே.. அடுத்தென்ன நடந்தது"

"அவ்வளவுதான் அப்பா. நான் முழிச்சுட்டேன்"

"டேய் சிவா! நீயே நந்திதேவன் காதலி டா.. இப்படி இருக்கும் போது உனக்கு நந்தின்னு பேர் வச்ச ஒருத்தன் கனவுல வர்றது ரொம்பவே சாதாரணம் டா"

"அப்பா! இப்போ, என்ன சொன்னீங்க?"

"நந்தி தேவன் காதலின்னு சொன்னேன்"

"ஆங், நந்தி தேவன்.. அவனை இன்னைக்கு நான் மீட் பண்ணேன்"

"என்ன சொல்லுற?" இந்த டுவிஸ்ட்டை மாணிக்கம் எதிர்பார்க்கவே இல்லை.

"ஆமாப்பா சிவன் கோவில் பக்கத்துல தான் கடை ஓபன் பண்ணியிருக்கான்"

"அந்த நந்தி தான் தான் கனவுல வந்த நந்தியா டா"

"அது தெரியலப்பா. கனவுல எனக்கு அவனோட முகம் கிளியரா தெரியல. இரத்தம் மட்டும் தான் அவன் முகம் முழுக்க ஒழுகிட்டு இருந்தது"

"சரிடாம்மா.. சும்மா கனவு வந்துருக்கும். இதுக்காக அலட்டிக்க கூடாது டா"

"நானும் அப்படித்தான் அப்பா நினைச்சு என்னை நானே சமாதானப்படுத்தினேன். ஆனால் முடியலைப்பா" என்று சொன்னவள் ராசம்மாளை மீட் பண்ணியது இன்று கடைக்குச் சென்று வந்தது என அனைத்தையும் சொல்லி தனக்குத் தோன்றிய காட்சியையும் சேர்த்து சொன்னாள்.


"இதனால தான் அப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அந்த பையனுக்கு ஏதோ ஆபத்துன்னு தோணுது அப்பா. அதைத்தான் என் நந்தியும் எனக்கு கன்வே பண்ணுறானோ? எனக்கென்னமோ அந்த நேம் போர்டு ரொம்ப நேரத்துக்கு இருக்காதோன்னு தோணுது"


"அப்படிலாம் இருக்காதுடா"

"இல்லைப்பா, கனவு வந்ததுல இருந்து இது மட்டும்தான் எனக்கு தோணிட்டே இருக்கு. நான் இப்படி இருந்தே இல்லைலப்பா"

"சிவன்யா ஒன்னும் இல்லை. எனக்கு என்ன தோணுதுன்னா அவனுக்கு வந்த ஆபத்துக்கூட உன்னால சரியாகிடுச்சுன்னு"

"எப்படிப்பா"

"காரணமே இல்லாமல் உன் பிரசாதம் இடமாற சான்சே இல்லைடா. நீ பிறந்ததுல இருந்து சிவன் கோவிலுக்கு போய்ட்டுத்தான் இருக்க. இந்த மாதிரி நிகழ்வு இதுவரைக்கும் உனக்கு நடந்ததே இல்லை. நேத்து அந்த பிரசாதம் அந்த பையனுக்குப் போயிருக்குன்னா கண்டிப்பா சிவனோட அனுக்கிரஹம் அந்த பையனுக்கு கிடைச்சுடுச்சுன்னு தானே அர்த்தம்.. மறுபடியும் கோவில்ல பார்த்து நீயே விபூதி பூசியிருக்க. நல்லா இருப்பீங்கன்னும் விஷ் பண்ணியிருக்க. இனி எந்தவித அனர்த்தமும் அந்த பையனுக்கு நேராது டா"

"ஷ்யூரா அப்பா"

"நிச்சயமா டா. நீ யோசிக்காத அதைப் பத்தி. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. உன் அம்மா வேற புலம்பிட்டு இருக்கா. அவகிட்ட இதைப் பத்தி எல்லாம் சொல்லிட்டு இருக்காத" எனச் சொல்லவும் அவளும் சரியென்று தலை அசைத்துவிட்டு வாங்கி வந்திருந்த அந்த நந்தி சிலையை எடுத்து தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு படுத்துவிட்டாள்.

--------------------------------

"நேத்து இருந்து நீங்க நார்மலாகிட்டீங்க. ஆனால் உங்களை மீட் பண்ணிட்டு போன சிவா ரொம்ப டல்லா தெரியுறாங்க. ஏதோ ஒரு விஷயம் உள்ள இருக்கும்மா. சொல்லுங்க"

"அப்படியெல்லாம் எதுவும் இல்லைடா தேவா. அவ தலைவலிக்குதுன்னு சொன்னா"

"தலைவலியா இருந்தால் அந்த நடுக்கம் பதட்டம் வர்றதுக்கு வாய்ப்பே இல்லை. அதுவும் இல்லாமல் அவங்க ஏதோவொன்னு நடக்குற மாதிரி நினைச்சுப் பார்த்துருக்காங்க. அவங்க என் கையைப் பிடிச்சு நின்றிருந்த விதமே அதை தெளிவா சொல்லுது. ஏதோ இரத்தம்னு வேற சம்பந்தம் இல்லாமல் பேசுனாங்க. அம்மா ப்ளீஸ் என்னாச்சுன்னு சொல்லுங்கம்மா"

"உன் ஜாதகத்தை சோசியர் கிட்ட காட்டுனப்போ உனக்கு பெரிய கண்டம் இருக்குறதா சொன்னாங்க டா. அதுவும் உன் பிறந்தநாள் அப்போ உனக்கு ஏதாவது ஆகிடு.." பாதியை முழுங்கியவள் "இதுல இருந்து உன்னை காப்பாத்த சிவனால மட்டும்தான் முடியும்‌. அவன் மனசு வைக்கணும்னு சொன்னாங்க. அதுக்கேத்த மாதிரி சிவாவும் சொன்னா.. அப்போ இருந்து எனக்கு மனசுல அசாத்திய நம்பிக்கை. மறுபடியும் அவளை மீட் பண்ணும் போது இன்னும் அந்த நம்பிக்கைக்கு பலம் ஏறிடுச்சு" என்று சொல்லவும் அவனுக்கு ஏதோ புரிவதைப் போல் இருந்தது.


"சரி நீங்க வீட்டுக்குப் போங்க"

"டேய்! எனக்கொரு எண்ணம் இருக்கு"

"என்னென்னு புரியுது. ஆனால் உடனே அதை செயல்படுத்த முடியாது. எனக்கென்னமோ சிவா என்னை நினைச்சு குழம்பிட்டு இருப்பாங்கன்னு தோணுது. அவங்களுக்கு ஏதோ விஷ்வல்ஸ் தெரிஞ்சுருக்கு ம்மா. எனக்கு எதுவும் ஆகக் கூடாதுங்கிற பரிதவிப்பு இப்போ உங்களை விட அவங்களுக்கு அதிகமா இருக்கு. அதை நினைச்சு என் மனசு சந்தோஷப்படுது அதே சமயம் எனக்காக ஏன் இவங்க இவ்வளவு கஷ்டப்படணும்னு வருத்தமாகவும் இருக்கு.."


"இதுதான் அவன் எழுதி வச்ச விதி போல டா"

"தெரியலை அம்மா. இப்போதைக்கு இதைப் பத்தி பேச வேண்டாம். நீங்க கிளம்புங்க..." என்றாலுங் கூட அவனுக்கும் உடனே பேசி சிவாவை திருமணம் செய்தால்தான் என்ன என்று தோன்றாமல் எல்லாம் இல்லை. ஆனாலும் அவசரப்படக் கூடாது என்பதால் பொறுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டான்.

---------------------------

நேரம் பதினொன்றை கடந்திருந்தது. ஊரே அடங்கிப் போயிருக்க சிவன்யாவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவனுக்கு நேரவிருக்கும் ஆபத்து உன்னால் நீங்கிவிட்டது என்ற தந்தையின் நம்பிக்கையாலோ என்னவோ அவளுள் காலையில் இருந்த பதட்டமும் பயமும் இல்லை. அதனாலேயே அவள் வதனத்தில் இப்போது நிம்மதி நிறைந்திருந்தது. ஆனால் அதற்கு ஆயுள் குறைவு போல.


சட்டென்று முகமெல்லாம் வியர்த்து வழிய தொடங்கியது. மூடிய இமைகளுக்குள் அவளது கருவிழிகள் இரண்டும் உருண்டோடிக் கொண்டிருந்தது. அவள் ஏதோ பயங்கர காட்சியினை பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அந்த கருவிழிகள் உணர்த்தியது.


கொஞ்சம் தெளிவாக இருந்தவள் இப்போது முற்றும் குழம்பிப் போய் படுக்கையில் இருந்து "நந்தி" என்றவாறு எழுந்தமர்ந்தாள். அறையில் சுழன்றாடிக் கொண்டிருந்த மின்விசிறியைத் தவிர வேறு சப்தம் இல்லை.


வேகமாக எழுந்தவள் தனது போனை எடுத்து நந்திக்கு அழைத்தாள். காலையில் பணம் போடுவதற்காக நம்பர் வாங்கியதும் அவளுக்கு வசதியாகப் போய்விட்டது.. ஆனால் ஸ்விட்ச் ஆஃப் என்று பதில் வர போனை எடுத்துக் கொண்டு அறைக்கதவினைத் திறந்து வெளியே வந்தாள்.

மையவெளியில் இருட்டாக இருந்தது. அந்த இருட்டு எல்லாம் அவளை பயமுறுத்தி நிறுத்தவில்லை. அப்படியே விரைந்து வாசற்கதவையும் திறந்து அங்கிருந்து வெளியேறியிருந்தாள் சிவன்யா.


நேராக அவளது கால்கள் சிவன் கோவில் இருக்கும் தெருவினை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. தெருவுக்குத் தெரு நாய்கள் கூட்டமாக கூடி நின்று ஊளையிட்டுக் கொண்டிருக்க, அவை அனைத்தும் இவளைப் பார்த்த மறுகணம் ஊளையிடுவதை விட்டுவிட்டு அவள் பின்னால் அமைதியாய் நடக்கத் தொடங்கின.


சிவன் கோவில் இருக்கும் அவ்விடத்திற்கு வந்த உடனே அவளது கண்கள் அந்த கடையினைத்தான் பார்த்தது. நேற்று சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருந்த அந்த பெயர்ப்பலகை இப்போது அவ்விடத்தில் இல்லை. மனதினை அச்சம் இறுக கவ்விக் கொண்டது.

அதே பயத்தோடு அவளது கண்கள் மீண்டும் சுழன்று கீழே பார்த்து திகைத்தது..


"நந்தி" என்று உள்ளுக்குள் அலறிக் கொண்டே அவள் வேகமாய் அங்கே ஓடினாள். நேற்று பிரசாதம் கொட்டியிருந்த அதே இடத்தில் இன்று செந்நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.


அதைக் காணச் சகிக்காதவள் குப்புற படுத்திருந்த உருவத்தினை புரட்டிப் போட அந்த உருவத்தின் முகமோ இரத்தம் உறைந்து மண்துகள்கள் எல்லாம் படிந்து கோரமாக இருந்தது.


"நந்தி! நந்தி" என்று அவள் போட்டு அவனை உலுக்க விழிகள் திறக்கவே இல்லை.

"நந்தி கண்ணைத் தொறந்து பாரு.. என்னைப் பாரு... சிவா வந்துருக்கேன். சிவாவை விட்டுட்டு போகாத. கண்ணைத் தொற.. " அவள் போட்டு அவன் கன்னத்தில் மாறி மாறி தட்டத் தொடங்கியிருந்தாள்.
வெகுநேரமும் இது மட்டுமே தொடர்ந்தது.


"நந்தி! என்னை விட்டுப் போயிடாத டா. நீயில்லாமல் நான் இல்லை. ப்ளீஸ் எந்திரிச்சுடு. நந்தி இல்லாமல் சிவா இல்லவே இல்லை" என அவனை அணைத்துக் கொண்டு அவள் அழத் துவங்க, அவன் இதயமும் அவளதும் மிகவும் நெருக்கமாக தங்களது துடிப்பினை பலவீனமாக பரிமாற்றிக் கொண்டிருந்தது.


அந்த ஓசையா? இல்லை, அவளது கண்ணீரா, இடைவிடாது உச்சரித்த நந்தியெனும் விளிப்பா? ஏதோவொன்றில் அவனது விழிதிறந்தது..


யாரின் அணைப்பிலோ கட்டுண்டு இருக்கிறோம் என்பது மூளைக்குப் புரிந்து யாரென்று அனுமானிக்கும் முன் அவன் இதழ்கள் சிவா என்று உச்சரித்து அவளது வேதனையையும் புலம்பலையும் ஒருசேர நிறுத்தியிருந்தது.தொடரும்....


விமர்சனங்களை தெரிவிக்க
👇👇👇

 
Last edited:
அத்தியாயம் - 05


"இப்படி இடிஞ்சு போய் இருந்தால் என்ன அர்த்தம் டா. எவ்வளவு நேரம் தான் இப்படியே இருக்கப் போற. அந்த பையனுக்குத்தான் ஒன்னும் இல்லைன்னு டாக்டரே சொல்லிட்டாங்களே. அவங்க வீட்டுக்கும் அப்பா இன்பார்ம் பண்ணிட்டேன். பிறகென்ன?" மாணிக்கம் கேட்டதற்கு அவள் எதுவும் பதில் பேசவில்லை. வந்ததில் இருந்து இப்படியேதான் அமர்ந்திருக்கிறாள். மாணிக்கமும் முடிந்த அளவிற்கு பேசிப் பார்த்துவிட்டான். மகள் தன் நிலையில் இருந்து மாறவே இல்லை.

அவனை இரத்த வெள்ளத்தில் பார்த்ததே அவளை இப்படியொரு நிலையில் வைத்திருக்கிறது என்பதை அறிந்த மாணிக்கம் கையோடு கொண்டு வந்திருந்த பாலை மட்டும் வற்புறுத்திக் குடிக்க வைத்து அவளை படுத்துக் கொள்ளச் சொல்லி அறையை பூட்டிவிட்டு வெளியே வந்துவிட்டான்.


தங்கம் கலக்கமாக பார்க்க "பயப்படாத. அவளுக்கு ஒன்னும் இல்லை. அவ்வளவு இரத்தத்தை பார்த்திருக்கா இல்லையா? அதான் ஒருமாதிரி இருக்கா?" என்று சமாதனப்படுத்த, "நிஜமாவே ஒன்னும் இல்லையேங்க" என்றாள் அவளும் பரிதவிப்புடன்.


"இல்லைம்மா. நீ அமைதியாய் இரு. அங்கேயே இருந்தால் இன்னும் அமைதியில்லாமல் மன அழுத்ததோட சுத்திட்டு இருப்பான்னு டாக்டர் சொன்னாங்க. அதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்"


"இவ ஏங்க காரணமே இல்லாமல் அந்தளவுக்கு எமோஷனல் ஆகணும். அந்த பையனுக்கும் இவளுக்கு என்னங்க சம்பந்தம்"


"எதுக்குன்னு எனக்கும் புரியல. சிவன் சித்தம் என்னவாக இருக்கும்னு போகப் போக தான் தெரிய வரும். எதுவா இருந்தாலும் நல்ல விஷயமா இருந்தால் நமக்கும் சந்தோஷம் தானே தங்கம். இப்போதைக்கு அவளுக்குத் தேவை ஓய்வு. நல்லா தூங்கட்டும். டாக்டரே அதுக்குத்தான் மாத்திரை கொடுத்துருக்காங்க. எப்படியோ பாலைக் குடிச்சு முடிச்சுட்டா. நல்லா தூங்குவா.. தூங்கட்டும்" என்றுவிட உள்ளே அவளோ நந்தியினை இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் விடத் தொடங்கியிருந்தாள்.


இத்தனை நாட்களும் அவளது காதல், நேசம், அன்பு அனைத்துக்கும் உரியவன் அவன் கைக்குள் அடங்கியிருந்த அந்நந்தி ஒருவன் மட்டுமே. ஆனால், இப்போது.. நேற்று அணைத்தபடி இருந்தவனும் பங்குக்கு வந்துவிட்டதை அவள் உள்மனம் தாமதமாகத்தான் உணர்ந்திருக்கிறது.


இரத்தம் வழிய வழிய தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவனின் வாய்மொழியாய் அவள் பெயர் கேட்ட மாத்திரத்தில் அவளுக்குள் அடைபட்டிருந்த அத்தனை உணர்வுகளையும் அவனிடத்தில் கொட்டி விட்டாள். அதன் பின்னரே அவள் வாழ்வு பூரணத்துவம் அடைந்தது போலிருந்தது. அவன் இல்லையென்றால் தானில்லை அதுவே நிதர்சனம்.. இப்போது கூட அவன் அருகில் இல்லாது இவ்வளவு தூரம் தள்ளி நிற்கும் வேதனையை அவளால் தாங்க முடியவில்லை. ஆனால் அவனை அந்த நிலையிலும் பார்க்க முடியவில்லை அதனாலேயே அப்பா கூப்பிட்டதும் மறுக்காது அவருடன் வந்துவிட்டாள்.


நந்தி! கம்பீரமாக பார்த்துப் பழகியவனை இப்போது கட்டுக்களோடு அடைபட்டு பார்ப்பது வேதனையான விஷயம். அது தன்னால் முடியாது என்று அவளும் தீர்மானமாக நம்பினாள். ஆனால் அங்கே படுத்திருக்கும் ஒருவனும் அவளை மிகவும் தேடுவான் என்று அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.


இருளுக்குள் மசமசவென்று தெரிந்த அவளது உருவமும், அவன் உடல் உணர்ந்த அவள் தேகமும், அதில் தெரிந்த நடுக்கமும், அவளது அழுகை கலந்த வார்த்தைகளும் இன்னமும் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. அதனாலேயே அவன் உயிர் பிழைத்திருக்கிறான்.. எழுந்தது முதல் அடிபட்ட தலை அவ்வளவு வலித்த போதும் வலுக்கட்டாயமாக கண்களைத் திறந்து அவ்வறை முழுவதும் அலசினான்.


அறையில் அவள் இல்லை. அவளது வாசம் மட்டுமே நிறைந்திருந்தது. எங்கே போனாள்? அவன் கேள்வி கேட்டுக் கொண்டான். காப்பாற்றுவது மட்டுமே தன் கடமை என்றெண்ணி விட்டாளா? இனி என் பக்கம் வரமாட்டாளா? நானிருக்கிறேனா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ள மாட்டாளா? அவ்வளவுதானா? ம்ஹூம் இல்லை அவள் எனக்கு வேண்டும். இனி இருக்கும் என் வாழ்நாள் முழுக்க அவள் மட்டுமே வேண்டும். அவளில்லை என்றால் நானும் இல்லை. அது அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அதனாலே தான் அவள் அந்த இரவு நேரத்திலும் வந்திருக்க வேண்டும். எனக்கொன்று என்றால் அவள் துடிக்கிறாள். அவளது துடிதுடிப்பை மயங்கிய நிலையிலும் நான் உணர்கிறேன். இதுதான் அபரிமிதமான நேசமா? அவளை நான் நேசிக்கிறேனா? ஆம், சிவா நான் உன்னைப் பார்க்க வேண்டும். இந்த நந்தி உன்னைப் பார்க்க வேண்டும். என் நேசத்தினை வெளிப்படுத்தி உன்னை நான் என்னோடே வைத்துக் கொள்ள வேண்டும். நேற்று பதட்டத்திலும் பயத்திலும் ஒலித்த உன் அழைப்பை மயக்க, கிறக்க வர்ணம் பூசி நான் கேட்க வேண்டும். வா சிவா! என்று அவன் அவளை நினைத்தபடியே உள்ளே உளறிக் கொண்டிருந்தான்.


தனக்கு நேர்ந்ததன் பிண்ணனியில் இருப்பது யார் என்று அவனுக்குத் தெரிந்தது. அப்படியிருந்தும் ஏனோ இன்று வழக்கமாக வரும் அதீத கோபம் வரவில்லை. ஏனென்றால், இந்த சதியே அவனின் பாதியினை அடையாளம் காட்டியிருக்கிறது. அதனாலேயே இந்த வலியையும் அவன் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டான்.


உள்ளே மருத்துவர் நுழைந்ததும் அவனிடம் வழக்கமான கேள்விகளைக் கேட்டு ஊசியினை செலுத்த அவன் "டாக்டர்! உங்களோட போன் கொஞ்சம் குடுக்குறீங்களா. நான் வீட்டுக்குப் பேசணும்" என்றான்.


"உங்க வொய்ப் வீட்டுல பேசிட்டாங்களே நந்தி"


"என்ன சொன்னீங்க?"

"அது நந்தி... உங்க பேர் அதான"

"ஆமா.. பட் வொய்ப்ன்னு சொன்னீங்களே"

"ஆமா! சிவன்யா.. உங்க வொய்ப்தானே. அவங்கதான் உங்களை அட்மிட் பண்ணிட்டு இப்போ வரைக்கும் கூடவே இருந்தது. அவங்களுக்கு உங்க மேல ரொம்ப காதலா.. அவ்வளவு அழுகை. ஹாஸ்பிட்டலையே ரெண்டு பண்ணிட்டாங்க. அப்பறமாத்தான் அவங்க அப்பாகிட்ட பேசி அவங்களை கொஞ்ச நேரம் வெளிய கூட்டிட்டு போகச் சொன்னேன்‌. அவங்க இருந்த கண்டிஷன் அந்த மாதிரி. இன்னும் கொஞ்ச நேரம் இருந்துருந்தா அவங்களையும் இங்க அட்மிட் பண்ண வேண்டிய சூழ்நிலையே வந்துருக்கும். அவங்க கிளம்பினப் பிறகு உங்க அம்மா வந்துட்டாங்க. வெளிய தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரங் கழிச்சு வந்து பார்க்கச் சொல்லுறேன். நீங்க தூங்குங்க.. ஹெவி ப்ளட் லாஸ் வேற. நீங்க நிறைய ரெஸ்ட் எடுக்கணும். அப்போத்தான் சீக்கிரமா ரெக்கவர் ஆவிங்க" சொல்லிவிட்டு டாக்டர் வெளியேறிவிட, நந்தியின் மனம் சிவன்யாவிலே நிலைத்து நின்றது.

-----------------------

இரவின் தொடக்கத்திலே சிவன்யா தன் அறைக்கதவை வேகமாக தட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் வந்திருந்த மாணிக்கமும் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்த தங்கமும் வேகமாக ஓடி வந்த கதவைத் திறந்துப் பார்க்க அவள் அவர்களைத் தள்ளிவிட்டு வெளியே சென்றாள்.

"சிவா நில்லுடி" என்று தங்கம் பின்னாலே செல்ல "அவ ஹாஸ்பிட்டலுக்குத்தான் போவா. நீ இங்கேயே இரு. நான் போயிட்டு வர்றேன்" என்று மாணிக்கம் பின் தொடர்ந்து செல்ல அவள் அதற்குள் பாதி தூரம் சென்றிருந்தாள். மனம் நந்தி நந்தி என்று அரற்றிக் கொண்டிருந்தது.


மருத்துவமனைக்குச் சென்றவளை வெறுமையான அந்த அறைதான் வரவேற்றது. இதை எதிர்பார்த்துதானே அவள் அவ்வளவு அவசரமாக அங்கே ஓடி வந்தாள். அவன் படுக்கை காலியாக இருந்ததை ஏற்க முடியாமல் அதை வெறுமனே வருடிவிட உள்ளே மாணிக்கம் நுழைந்தான்.


"சிவன்யா"

"அப்பா! நந்தி, என்னை விட்டுப் போயிட்டான்" என்றதும் மாணிக்கத்திற்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்தது.

"எப்படி அவனை டிஸ்சார்ஜ் பண்ணலாம். நான்தானே சைன் பண்ணியிருக்கேன். என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமல் எப்படிப்பா"

"இது ஆரம்ப சிகிச்சை தர்றதுக்கான இடம்தான். இங்கயிருந்து வேற ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறது வாடிக்கைதானே. தலையில நல்ல அடி வேற. அதெதுவும் பிரச்சனையா இருக்குமா என்னென்னு ஸ்கேன் பார்க்கணும். அந்த டாக்டர்ஸ்கிட்ட கன்சல்ட் பண்ணனும் இன்னும் எவ்வளவோ இருக்கு டா சிவா.. இங்க நாம புலம்புறதுல அர்த்தமே இல்லை"

"அப்பா எனக்கு நந்தியை பார்க்கணும். டாக்டர்கிட்ட கேட்டுட்டு வர்றேன்" என்று சென்றவள் சற்று நேரங் கழித்து அமைதியாக வெளியே வந்து "டாக்டர் எந்தவித தகவலும் சொல்லல. அவங்களுக்கே தெரியாதாம். வேற ஹாஸபிட்டல் கூட்டிட்டுப் போறோம்னு போயிட்டாங்களாம்" என்று அவள் சொல்லவும் மாணிக்கம் "சரி வாம்மா.. எப்படியும் இந்த ஊர்தானே நாம விசாரிச்சுக்கலாம்" என்க,

"அப்பா நீங்க போங்க நான் நந்தியைப் பார்த்துட்டு வீட்டுக்கு வர்றேன்" இப்போது அவள் எந்த நந்தியைச் சொல்லுகிறாள் என்று புரிந்த மாணிக்கம் "நடை சாத்திருக்கப் போறாங்க" என்றான்.


"இல்லை.‌ இன்னும் கொஞ்சம் டைம் இருக்கு" என்றவள் அப்பாவை அனுப்பிவிட்டு மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள்.


இரத்தம் வழியும் முகத்தோடு இதோ இந்த அறைக்குள் தான் அனுமதிக்கப் பட்டிருந்தான். அடுத்துப் பார்க்கையில் தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. முகத்தில் இருந்த இரத்தம் துடைக்கப்பட்டு தெளிவாக இருந்தது. ஆனால் அவள் இருக்கும் நேரமெல்லாம் மயக்கத்தில் தான் இருந்தான்.


நேற்று கடையில் பார்க்கும் போது கூட அவனை இப்படி நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் இப்போது நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவன் நினைவில் சுழன்றாடிக் கொண்டிருந்தவளுக்கு அருகே எதுவோ சலசலக்கும் சப்தம் கேட்க திரும்பி அந்த திசையைப் பார்த்தாள்.


'சிவன்யா நான் எப்பவும் உன் நந்தியாய் மட்டும் இருக்க ஆசைப்படுறேன். கூடிய சீக்கிரம் உன்னைத் தேடி வருவேன்'


கைவலியைப் பொறுத்துக் கொண்டு கிறுக்கிய அவசரக் கிறுக்கல்தான். ஆயினும் அதனுள் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். மீண்டும் மீண்டும் அந்த இரு வரிகளைப் படித்தாள். தனக்குள்ளயே நிறைத்தாள். நிச்சயம் அவன் வருவான் என்ற எண்ணம் அவளுக்குள் இருக்கிறது.

அந்த தாளினைப் பத்திரப்படுத்தியவள் வாழ்க்கையில் முதன்முறையாக நந்தி கோவில் திறந்திருக்கும் போதுகூட அதனுள் நுழையாமல் கடந்திருந்தாள். கோவில் தாண்டிய அந்த வேளையில் அந்த கடையினையும் பார்த்துக் கொண்டாள். நேம் போர்டு இல்லாமல் வெறுமையாக பூட்டியிருக்க நேற்று நடந்த நிகழ்வெல்லாம் அவளுக்கு நினைவு வந்தது லேசாய் திடுக்கிட செய்தது.


அவனுடன் பேசியே ஆக வேண்டும் என்று அவளுக்குத் தோன்ற வீட்டுக்குப் போனதும் போனை எடுத்து நந்திக்குத்தான் அழைத்தாள். ஸ்விட்ச் ஆஃப் என்பதே பதிலாக கிடைத்தது.


மீண்டும் அந்த தாளினை எடுத்து பார்த்தாள். நடந்து முடிந்த எல்லாவற்றிற்கும் நந்தி பதில் சொல்லிவிட்டான் என்பது புரிந்தது.

-------------------------

"அம்மா!"

"என்னப்பா என்ன செய்யுது. டாக்டரை வரச் சொல்லவா?"

"இல்லை, போன் வேண்டும்"

"காலையில இருந்து ஏகப்பட்ட டெஸ்ட் எடுத்துருக்காங்க. நிறைய மருந்து சாப்பிடுற.. ஒழுங்கா ரெஸ்ட் எடுப்பா. அப்பறமா போன் தர்றேன்"

"அம்மா" அவனின் குரலின் மாற்றத்தில் போனை எடுத்து அவனின் கையில் தந்தாள் அன்னை.

"நீங்க போய் வெளிய வெயிட் பண்ணுங்க. நான் ஏதாவது வேணும்னா கூப்பிடுறேன்" என்று அவன் சொல்லவும் அவளும் வெளியேறிவிட்டாள்.

போனை வாங்கியதும் அவன் முகம் பிரகாசமாகியது. மருத்துவமனை கையேட்டில் இருந்து அவளது போன் நம்பரை அங்கிருந்து கிளம்பும் முன்னரே மனப்பாடம் செய்து வைத்திருந்தான் நந்தி.


இப்போது ஒவ்வொரு எண்ணாய் அழுத்தி அவளது நந்தி என்னும் குரலின் விளிப்புக்காக அவன் காத்திருந்தான். போனை எடுத்தவள் வேகமாக "ஹலோ யாருங்க" என்று கேட்க "சிவாவோட நந்தி" என்று கம்பீரமாகவும் காதலாகவும் உரைத்திருந்தான் அவளின் நந்தி..தொடரும்...


விமர்சனங்களை தெரிவிக்க
👇👇👇

 
அத்தியாயம் - 06


"நந்தி! நீங்களா?" கேட்டவளது உணர்ச்சிகளை அவன் உள்ளம் பத்திரமாக கையகப்படுத்திக் கொண்டிருந்தது.

"ஆமா சிவா.. எப்படி இருக்க?"

"அந்த கேள்வியை நான்தான் உங்ககிட்ட கேட்கணும். எப்படி இருக்கீங்க?" முடிவில் அவளது வார்த்தைகள் அழுகையெனும் அரிதாரம் பூசி வெளிவர,

"சிவா அழறயா நீ?.. அழாத... அப்பறம் இப்பவே கிளம்பி வீட்டுக்கு வந்துடுவேன்" என்று பட்டென்று சொல்ல அவள் "இல்லை, அழலை.. சொல்லுங்க" என்றாள்.

"என்னோட நலனை விட உன் நலன் தான் எனக்கு முக்கியம். நீ சொல்லு"

"ஏன் அப்படி?"

"அதுலதான் என்னோட நலனும் இருக்கு. நீ பண்ணின ஆர்ப்பாட்டம் எல்லாம் டாக்டர் சொன்னாங்க. அந்தளவுக்கா? என் மேல...." என்று அவன் கேட்காமல் விட்டுவிட, "எப்படி இருக்கீங்க நந்தி?" என்றாள் இவள் மீண்டும்.


"நல்லா இருக்கேன். தலை மட்டும் தான் வலிக்குது. அதுவும் உன்னை நினைச்சால் ரொம்ப வலிக்குது. சொல்லு.. நீ ஓகே வா"

"என்கிட்ட சொல்லாமல் கூட நீங்க போயிட்டீங்கள்ல. சோ என்ட்ட பேசாதீங்க"

"இல்லை சிவா, அதுக்கு வேற ரீசன் இருக்கு. ப்ளீஸ் அதை இன்னொரு நாள் சொல்லுறேன். பேசாதீங்கன்னு சொல்லாத. எனக்கு உன்ட்ட பேசிட்டே இருக்கணும்"

"டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டாங்களா?"

"எடுத்தாச்சு. எல்லாமே நார்மல் தான்"

"இப்போ எங்கதான் இருக்கீங்க? நான் பார்க்க வரலாமா? பார்க்கணும் போல இருக்கு"

"உன்னைத் தேடி நான் வர்றேன் சிவா. அதுதான் சரியா இருக்கும்"

"ம்ம் சரி"

"பார்க்கணும்னு நிஜமாவே ஆசைப்படுறயா சிவா?"

"நந்திக்கு ஆசையே இல்லையா?"

"அது இருக்கு நிறைய. பட் சட்டுன்னு எல்லாத்தையும் எக்ஸ்ப்ரஸ் பண்ண முடியல. தலையில பட்ட அடி கொஞ்சமா என்னைத் தேக்கி வைக்குதே. அதுக்காக பார்க்குறேன் இல்லைன்னா நான் உன் வீட்டுக்கு வந்து உன்னைக் கூட்டிட்டு வந்துருப்பேன்"

"நந்தி" அவள் அவன் அவசரம் கண்டு வேகமாக அழைக்க, "என்ன ஷாக் ஆகுற‌. ஹாஸ்பிட்டல்ல நீ என் வொய்ப்னு சொன்னதானே அதை உண்மையா மாத்த வேண்டாமா?" என்றான் இவன்.

"இனியும் மாத்துறதுக்கு ஒன்னுமே இல்லை. அது உண்மைதான் நந்தி"
சிவா இப்படிச் சொல்லியிருக்க அவனால் பேச முடியவில்லை. தன் மனதிலிருப்பதை எல்லாம் அவள் சட்டென்று சொல்லிவிடுகிறாளே.. என்று ஆச்சர்யங் கொண்டவன், "இப்போ எனக்குத் தோணுது உன்னை உடனே பார்க்கணும்னு" என்றான்.


"தலையில காயத்தை வச்சுட்டு வீட்டுக்கு வருவீங்களா? நல்லா இருக்காது. பொறுமையாவே வாங்க. ஆனால், உங்களுக்கு நடந்தது பார்த்தால் ஆக்சிடென்ட் மாதிரி தெரியல. நீங்க எப்படி அந்த இடத்துல?"


"இதையெல்லாம் பேசுறதுக்காகவா நான் உனக்கு போன் பண்ணேன். அதைப் பத்தி கேக்காத சிவா"

"நான் கேக்க கூடாதா? எனக்கு உரிமை இல்லையா?"


"இப்போ கேக்க வேண்டாம்னு சொல்லுறேன். எல்லாத்தையும் சொல்லுவேன். இதுல என்னாலயே நம்ப முடியாத விஷயம் நான் செத்து..."

"ப்ச் வாயை மூடுங்க. இப்படியா பேசுவீங்க"

"அப்படித்தான் நினைச்சேன். அந்த நைட் நேரத்துல யார் வந்து காப்பாத்துவாங்க நீயே சொல்லு. அப்படியே விட்டுருந்தால்?"

"வேற பேசலாம்" இப்போது அவள் பேச்சை மாற்றினாள்.

"அதுசரி, நான் அடிபட்டு கிடக்கேன்னு உனக்கெப்படித் தெரியும்"

"கனவுல வந்தது. உங்க அம்மாவை கோவில்ல மீட் பண்ணதுல இருந்தே ஒரு மாதிரி அவஸ்தையா இருந்தது. ஏதோ நடக்கப் போகுதுன்னு.. அதே மாதிரி காலையில நீங்க பிறந்தநாள்னு கோவிலுக்கு வந்தீங்கள்ல நான் கூட திருநீறு பூசிவிட்டேன்ல.. அப்பவும் அதே தாட் தான். அப்பறம் கடைக்கு கூட்டிட்டு போனப்போ அந்த நேம் போர்டு என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுச்சு. ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன். நைட் தூங்கிட்டு இருக்கும் போதே திடீர்னு உங்களுக்கு ஏதோ ஆன ஃபீல். அதான் வேகமாக ஓடி வந்தேன். வந்து பார்த்தால் அதே இடத்துல நீங்க... என்னால அதை பார்க்கவே முடியல நந்தி. கடைசியில அந்த நேம் போர்டு வேற காணோம். என்னாச்சுன்னு கேட்டால் சொல்லவும் மாட்டுறீங்க?" என்று அவள் சொல்ல சொல்ல அவன் புருவங்கள் சுருங்கியது.


அவனிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை என்பதை அறிந்தவள் "நந்தி இருக்கீங்களா?" எனக் கேட்க
"நந்தி சிவா முன்னாடிதான் எப்பவும் இருப்பான். நீ இதுல சந்தேகப் பட எதுவும் இல்லை" என்று முடித்திருந்தான்.


"நந்தி! நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் பாருங்க. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க. நாளை காலையில பேசிக்கலாம்"


"பரவாயில்லை சிவா. நீ பேசு. நான் அப்பறமா மொத்தமா ரெஸ்ட் எடுத்துக்கிறேன்.. " என்றவன் சட்டென்று "அம்மா நான் என்ன சொன்னேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க வெளிய போய் உக்காருங்கன்னு சொன்னேனா இல்லையா. இப்போ எதுக்கு வந்தீங்க. வெளிய போங்க" என கத்திச் சத்தம் போட இவள் ஒருநிமிடம் போனை எடுத்துத் தள்ளிப் பிடித்துக் கொண்டாள்.


"இல்லை. சாப்பிட்டு மாத்திரை போடணும் "


"எனக்குத் தெரியும். நீங்க போங்க கூப்பிடும் போது மட்டும் வாங்க" என்றே அவன் கோபத்தோடே பேச, "நந்தி! அம்மாகிட்டயா பேசுறீங்க" என்று அவள் பேசினாள்.


அவள் குரலைக் கேட்டு பெருமூச்சு விட்டு தன்னை சமன்படுத்தியவன் "ஆமா சிவா" என்றான்.


"எதுக்கு இப்படிக் கத்துறீங்க?" அவளால் அவனை அந்த மாதிரியான தோற்றத்தில் வைத்து சிந்திக்க முடியவில்லை. இந்தக் கோபமும் அவனுக்கு பொருந்தவே இல்லை.

"ப்ச் நத்திங். அதை விடு"


"அம்மாகிட்ட இப்படிலாம் பேசக் கூடாது நந்தி"


"நான் இப்படித்தான்" சிவா குரலில் இன்னமும் அதே எரிச்சல் இருந்தது.


"தலைவலியால இப்படி எரிஞ்சு விழறீங்களோ? நீங்க பர்ஸ்ட் போனை கட் பண்ணிட்டு ரெஸ்ட் எடுங்க. காலையில நான் பண்ணுறேன். ஆமா இதுவும் உங்க நம்பரா?"


"இதுதான் என் நம்பர்" என்றான் அழுத்தம் திருத்தமாக.


"அது நேத்து கடையில இருக்கும் போது வேற குடுத்தீங்களே!"


"அந்த நம்பரை டெலீட் பண்ணிடு சிவா. இதுதான் என்னோட நம்பர். நீ பேசணும்னு நினைச்சால் இதுக்குத்தான் கூப்பிடணும் சரியா?"


"ஓகே நந்தி. நான் இதையே save பண்ணிக்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க" என்று போனை வைத்துவிட தலையில் கைவைத்தபடி போனை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான் நந்தி.


என்ன செய்வது? என்ன செய்வது? அவன் மூளைக்குள் தாறுமாறாக பல எண்ணங்கள். அவளது முகம் அவனுக்கு நினைவில் இல்லை. ஆனால் அந்த குரல் நொடியும் தன்னை விட்டுப் பிரியாமல் தன்னுடனே பயணப்படுகிறது.. இதில் அவனே வியந்து பார்த்தது தான் ஒரு பெண்ணிடம் இப்படி பொறுமையாக பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். அவளுக்காகத்தானே இப்போதும் கோபத்தினை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் இருக்கிறான். இல்லையென்றால் நினைவு வந்த உடனேயே இதுக்கு காரணமானவங்களை தூக்கிப் போட்டு மிதித்திருப்பான்.


படுக்கையில் படுத்த வாக்கிலே அவன் யோசனை இப்படியே இருந்தது. விரைவாக செயல்படுத்த வேண்டிய பல வேலைகள் அவனுக்கு முன் வரிசைகட்டி இருந்தது.


வெளியே இருந்து அம்மாவை அழைத்தவன் சிவாவைப் பற்றி சொல்லி திருமணம் செய்வது தொடர்பாக பேசிட அவனின் அம்மாவுக்கு பயங்கர சந்தோஷம்.


"என் பையனோட உயிரையே அவ காப்பாத்திருக்கா. அவள் தான் நம்ம வீட்டுக்கு மருமகள். ஆனால் உன் நிலைமை"


"அம்மா நான் இப்போ ஓகேதான். சீக்கிரமா நான் அவளைப் பார்க்கணும்"


"சரிப்பா டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணட்டும். வீட்டுக்குப் போனதும் அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு நாம பொண்ணு வீட்டுக்குப் போகலாம்"


சரியாக இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டலில் இருந்தவன் டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லி வீட்டுக்கு கிளம்பிவிட்டான். தலையில் மட்டும் கட்டு போடப்பட்டிருந்தது.
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டவன் அதில் சிவன்யாவின் முகத்தினை கொண்டு வர முயற்சி செய்தான்.

தெளிவாக தெரியவில்லை. ஆனால் அவளின் மார்பினுள் அடங்கியிருந்த அந்த காட்சி அவனுக்குள் இப்போது புதிதாய் கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.


"சிவா" கிறக்கத்தோடு அவன் அழைக்க அந்த அழைப்பிற்கு சொந்தக்காரியே அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.


"சொல்லு சிவா"


"கூப்பிட்டீங்களா நந்தி?"


"ஆமா. உனக்குக் கேட்டுச்சா" ஆச்சர்யம் அவனிடத்தில்.


"கேட்டுச்சு அதான் போன் பண்ணேன். வீட்டுக்கு வந்துட்டீங்களா?"


"வந்துட்டேன் சிவா"


"வலி எல்லாம் இல்லையே"


"கொஞ்சம் இருக்கு"

"அப்போ ஹாஸ்பிட்டல்லயே இருக்க வேண்டியதுதானே. அப்படியென்ன பிடிவாதம் உங்களுக்கு"

"அங்க அடைபட்டு இருக்குறதுலாம் நந்திக்கு செட்டாகாது சிவா" அவன் கண்களில் கனல் ஏறியிருந்தது. அவன் வேகமாக வீட்டுக்கு வந்ததே சில வேலையை செய்ய வேண்டி தானே..


"வலிக்குதுன்னு சொல்லுறீங்களே"


"வலிக்குதுதான். அதுக்கு பெட்டர் ட்ரீட்மெண்ட் உன்ட்ட கிடைக்கும்னு நான் எதிர்பார்க்குறேன்"


"நானென்ன டாக்டரா?"


"பின்ன இல்லையா..? உன் ட்ரீட்மெண்ட் ஒன்னு போதும் நான் சரியாகிடுவேன்"


"ஓய் நந்தி.. என்ன பேச்சுலாம் வேற மாதிரி போகுது" அவள் சுதாரித்துவிட,
"நானென்ன செய்யுறது நீதான் மயக்கத்துல இருந்த ஒரு சின்னப்பையன கட்டிப்பிடிச்சு..." என்று அவன் இழுக்க,

"ஸ்டாப் ஸ்டாப்.‌ இப்படிலாம் பேசாதீங்க.. " என்று அவள் சொல்லவும், "ஏன் பேசக் கூடாது? எனக்கு உரிமை இல்லையா?" கோபமாய் கேட்டான்.


அது சட்டென்று அவளுள் உறுத்த, "நந்தி கோபமா பேசுறதா இருந்தால் போனை வைங்க" என்றதும் கோபத்தில் சட்டென்று வைத்துவிட்டான் அவன்.


போன் கட் ஆனதும் சிவாவுக்கு தலை வலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நந்தி ஏன் இப்படி பண்ணுறான்? இப்படி நடந்துக்கிறான். சின்ன விஷயம் அதுக்குப் போய் யாராவது இப்படி கத்துவாங்களா? இரண்டு நாளுக்கு முன்னாடி அம்மாகிட்டயும் அப்படித்தான் கத்திட்டு இருந்தான். அடிபட்டதுல மூளை குழம்பிடுச்சா என்ன? அவனை கோவில்ல பார்க்கும் போதும் சரி, கடையில வச்சுப் பார்க்கும் போது சரி எவ்வளவு அமைதியாய் பேசுனான். பணம் தர்றேன்னு சொன்னப்போ மட்டும்தான் அவன் முகம் மாறுச்சு. இப்போ ஏதோ தப்பா தோணுதே.. என்னவா இருக்கும்.. கண்டதையும் யோசித்து அவள் தன்னையே வருத்திக் கொண்டிருந்தாள்.


அங்கே அவனும், "நந்தி! நந்தி! உன்னை என்ன பண்ணுறதுன்னே எனக்குத் தெரியலைடா. உன்னால கோபத்தைக் கன்ட்ரோல் பண்ண முடியாது தெரிஞ்ச விஷயம் தான்.
அதுக்குன்னு அவகிட்டயும் அப்படியா பேசுவ. அவ என்னென்னு நினைச்சுத் தொலைஞ்சாலோ.. தெரியலையே..
மறுபடியும் போன் பண்ணுவோமோ?" நினைத்த உடனே கை அந்த வேலையே செய்திருந்தது.

"சிவா"

"என்ன நந்தி"

"சாரி சிவா" அந்த சாரியில் சமாதானம் செய்ய வேண்டிய கடமை மட்டும்தான் இருந்தது. அது புரிந்ததாலோ என்னவோ அவளும் "எதுக்கு? கத்துனதுக்கா தேவையில்லை நந்தி" என்றாள்.


"அப்படிப் பேசியிருக்க கூடாதுதான். ஆனாலும் பேசிட்டேன். சாரிடா"

"தேவையில்லை"

"சாரி மட்டும் தானே"

நந்தி! உன்கிட்ட எனக்கு ஏதோ வித்தியாசம் தென்படுது. அதை எப்படி உன்ட்ட சொல்லுறதுன்னு கூட எனக்குத் தெரியல என மனதுக்குள் நினைத்தாலும் அவள் "ஆமாம்" என்று சொல்லியிருந்தாள்.


இன்னும் ஏதேதோ சொல்லி அவளை சமாளித்தவன் போனை வைத்துவிட கொஞ்ச நேரங் கழித்து வெளியே வந்து அம்மாவுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் சிவன்யா.


அந்த நேரத்தில், சிவா என்ற பழக்கமான குரல் கேட்க அவள் எழுந்து "அம்மா வாங்க" என்று அழைக்க ராசம்மாள் பின்னாலேயே நந்தியும் வந்துக் கொண்டிருந்தான்.


அவனையே விழி நிறைத்து பார்த்துக் கொண்டிருந்த அவளுக்கு அவன் தலையில் இருந்த அந்த கட்டு மனதை வலிக்கச் செய்தது.


"சின்ன கட்டுதான் சிவா" என்று அவன் மென்மையாய் புன்னகைக்க அந்த புன்னகையில் தன்னைத் தொலைத்தவள் "நந்தி வாங்க" என்று அழைத்திருந்தாள்...தொடரும்...


விமர்சனங்களை தெரிவிக்க
👇👇👇

 
அத்தியாயம் 07


"உள்ள வாங்க நந்தி.." அவளை வரவேற்றவறின் முகத்தில் இருந்த புன்னகையை ரசித்தவன் அம்மாவின் அருகே வந்து அமர்ந்தான்.


"தலைவலி பரவாயில்லையா நந்தி?"

"இப்போ பரவாயில்லை சிவா"

"அவன் நல்லா இருக்கான் சிவாம்மா. அதுக்கு காரணமே நீதானே. நீ மட்டும் இல்லைன்னா அவனும் இல்லை"

"அய்யோ அம்மா! நந்திக்கு எப்பவும் ஒன்னும் ஆகாது"

"அந்த நம்பிக்கை எனக்கு எப்பவும் இருக்குடா சிவாம்மா.. அப்பா எங்கடா?"

"அவர் வர்ற நேரம்தான். நீங்க இருங்க நான் காஃபி எடுத்துட்டு வர்றேன்"
காபி குடித்துக் கொண்டிருக்கும் போதே அவன் பார்வை அவளை மட்டுமே தழுவிக் கொண்டிருந்தது. அவளும் அப்படித்தான்.

"நந்தி கடையை திறக்கவே இல்லையா?"

"இல்லை சிவா. அம்மாவுக்கும் திறந்த உடனே இப்படி நடந்து போனதுல பயங்கர வருத்தம் எனக்கும் கொஞ்சம் பொறுமையாய் இருக்குறது நல்லதுன்னு பட்டது. அதான்" அதற்குள் மாணிக்கம் வந்துவிட வந்தவர்களைப் பார்த்து "வாங்க" என்று வரவேற்றான்.


"நந்தியா?" சிவாவைப் பார்த்துக் கேட்டதும் "ஆமா அங்கிள்" என்றான் இவன்.

"இப்போ எப்படி இருக்கீங்க தம்பி. வலியெல்லாம் குறைஞ்சிடுச்சா"

"இப்போ எவ்வளவோ பரவாயில்லை அங்கிள். இரண்டு நாள் கழிச்சு கட்டை பிரிச்சுடலாம்னு சொன்னாங்க"

"சரிங்க தம்பி"

"இப்போ நாங்க வந்துருக்கது ஒரு நல்ல விஷயமாத்தான். என் பையன் நந்திக்கு உங்க பொண்ணு சிவன்யாவை கேட்டு வந்துருக்கோம்" ராசம்மாள் சொல்லவும்,
இது ஒருவகையில் எதிர்பார்த்த விஷயம்தான் என்பதால் மாணிக்கத்திற்கு பெரியதாக அதிர்ச்சி இல்லை.


"எங்க இரண்டு பேருக்கும் சிவாவோட விருப்பம் தான் எப்பவும் முக்கியம். நீ என்னம்மா சொல்லுற?"
சம்மதம் என்பது போல் தலையாட்டினாள். அதில் அவன் முகம் மலர்ந்தான்.

"ரொம்ப சந்தோஷம்‌. அப்போ ஒரு நல்ல நாள்ல முறைப்படி நிச்சயம் பண்ணிக்கலாம்" என்று இருவரும் கிளம்பிவிட, தங்கம் அவளிடம் "உனக்கு நிஜமாவே ஓகேவா சிவா" என்றாள்.

"ஏன்ம்மா இப்படிக் கேக்குறீங்க?"

"இல்லை சம்மதம் சொன்னதான். ஆனால் உன் முகத்துல சந்தோஷம் தெரியல. என்னால அதை உணர முடியுது. ஏன்டா?"

"அப்படிலாம் இல்லையே அம்மா"

"நான் உனக்கு அம்மா சிவா"

"எனக்கு நந்தியை எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்கேத் தெரியும்ல" இவளுக்கும் அம்மா இப்படிக் கேட்டதில் குழப்பம்.

"தெரியும். ஆனால்"

"அப்பறமேன் அம்மா உங்களுக்கு இந்த சந்தேகம். எனக்கு நந்தியை கல்யாணம் பண்ணிக்கிறதுல பரிபூர்ண சம்மதம் தான். போன் அடிக்குது நான் போய் பார்க்குறேன்" என்று அவள் நகர்ந்துவிட தங்கத்துக்கு மட்டும் மனம் நிலையாக இல்லை.

"நந்தி" என்று போனை எடுத்தவள் ஆசையாய் அழைக்க "என்ன பண்ணுற சிவா?" என்றான்.

"இப்போத்தானே பார்த்துட்டு போனீங்க. அதுக்குள்ள என்ன பண்ணிடப் போறேன். உங்களை அனுப்பி வச்சுட்டு நான் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன். நீங்களா தேடி வருவீங்கன்னு சொன்னீங்க. வந்துட்டீங்க நந்தி. அதுவும் அம்மாகூட வந்து கல்யாண விஷயமா அப்பாகிட்ட பேசுனீங்களே. எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா? ஆனால் தலையில அந்த காயம் மட்டும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. இன்னும் சரியாகலைல்ல"

அதற்குள் போன் கட்டாயிருந்தது. மீண்டும் எடுத்து அவள் டிரைப் பண்ண அவனுக்கு ரீச் ஆகவில்லை.


டவர் ப்ராம்ளம் போல. அதான் கால் கட்டாயிருக்கு என நினைத்து விட்டு அவள் அமைதியாகிவிட்டாள்.


அடுத்தடுத்து அவள் டிரைப் பண்ணும் போதெல்லாம் நந்தியை அவளால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. என்ன காரணம் என்று அவளால் அனுமானம் செய்யவும் முடியவில்லை.


அன்று கோவிலுக்குச் சென்றிருந்தாள் பவியுடன்.

"என்ன சிவா அம்மா என்னமோ சொன்னாங்க. நீ என்ட்ட சொல்லலை பார்த்தியா?"

"சொல்லத்தான் கூப்பிட்டேன்"

"மாப்ளை எப்படி?"

"அன்னைக்கு அந்த அம்மாவைப் பார்த்தோம் ஞாபகம் இருக்கா. அவங்க பையன்தான். பேர் நந்தி"

"இப்போ தெரியுது டி. நீ ஏன் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சுருக்கன்னு"

"ஏன்?"

"அந்த பேரே போதுமே? அதுக்குமேல உனக்கு வேற என்ன வேண்டும். ஆனால் அம்மாவுக்கு இதுல ஏதோ உடன்பாடு இல்லாத மாதிரி தெரியுதே சிவா. நீ கவனிச்சயா"

"அவங்க நான் முழுமனசா சரின்னு சொல்லலையோன்னு ஃபீல் பண்ணுறாங்க. இந்த டவுட் ஏன் அவங்களுக்கு வந்ததுன்னே தெரியல பவி"

"சரி விடு. ஒரே பொண்ணு. கல்யாணம் ஆகி போயிட்டா என்ன பண்ணுறதுன்னு பீலிங்ஸ்ல கண்டதையும் நினைச்சு குழம்பிக்கிறாங்களோ என்னவோ. வா நாம போய் உன் ஆளை பார்த்துட்டு வருவோம் "

"அவர் போன் பண்ணாலும் எடுக்க மாட்டுறார் டி. ஆளவே பிடிக்க முடியல. அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ பேசுனதுதான்"

"உன் ஆளுன்னு சொன்னது இப்போ இங்க உக்காந்துருக்காரே இந்த நந்தியை.. அப்போ அவ்வளவுதானா. இவரை டீல்ல விட்டுட்டயா"

"ச்சே ச்சே அதெப்படி என்னால முடியும்" என்று அவள் சொன்னாலும் பவித்ரா விடாமல்,
"நந்தி இனி அவ்வளவுதான் இந்த சிவா அவளோட நந்தியைத் தவிர வேற யாரையும் யோசிக்க மாட்டா. இனி பிரதோஷ காலத்துல மாய்ஞ்சு மாய்ஞ்சு சைட் அடிக்குற இவளோட தொல்லை உனக்கு இல்லை" என்று பேச இவளோ நந்தியைப் பார்த்த வண்ணம் இருந்தாள்.


எண்ணெய் பூசிய திருமேனிக் கொண்டு எழிலாய் அமர்ந்திருந்தவனின் திருமுகத்தில் இப்போது அவன் முகம் தெரிந்தது.

'நந்தி!'
தனக்குள்ளயே அழைத்துக் கொண்டாள்.

"போன் பண்ணினாத்தான் என்னவாம் நந்தி. ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது கூட விடாமல் பேசிட்டு இருந்தான்ல. இப்போ போன், மெசேஜ் எதுவும் இல்லை. இவனுக்கெல்லாம் எதுக்கு அந்த டப்பா போன்.. பேசாமல் அடுப்பில தூக்கிப் போட வேண்டியதுதான். அவன் வீட்டுக்குப் போன உடனே அதுதான் என்னோட முதல் வேலையே.. வரட்டும் அடுத்து வீட்டுக்கு.." என்று கோபமே இல்லாமல் அவள் திட்டிக் கொண்டிருக்க,

"அடுப்புல போடுவயா.. போனை மட்டுமா போன் வச்சுருக்க என்னையுமா?" என்றபடி நின்றிருந்தான் அவன்.


"நந்தி!"

"என்ன நந்திக்கிட்டயே நந்தியைப் பத்தி புகார் வாசிக்குற?" அவனது சிரிப்பில் தன்னைத் தொலைத்தவள் "நீங்க எப்போ வந்தீங்க" என தயக்கமாய் கேட்க,

"நந்திகிட்ட புலம்புனயே அப்போ இருந்து. என்னை அவ்வளவு மிஸ் பண்ணுறயா? அதான் சிவாவைப் பார்க்கணும்னு நான் ஓடியே வந்துட்டேன்" என்றான்.


"அம்மா வந்துருக்காங்களா?"

"அம்மாவா.. வீட்டுல இருக்காங்க சிவா"

இன்னும் தலையில் அந்த கட்டு இருக்க "வலிக்குதா?" என்று அவன் தலையை தொட்டுப் பார்த்தாள்.


அவளது தொடுதலில் தன்னைத் தொலைத்தவன் "நீ தொட்டபிறகு வலிக்குமா எனக்கு.." என்றதும் அவள் அந்த கட்டின் மீதே சிலும்பிக் கொண்டிருந்த முடியினை ஒதுக்கிவிட்டு கையை எடுத்துக் கொண்டாள்.

"ஏன் கையை எடுத்துட்ட? வச்சுக்கோ"

"நந்தி! பவி பார்க்குறா.. என் ப்ரண்ட்" என்று அவள் தயங்க பவி இருவரையும் பார்த்த வண்ணம் கொஞ்சம் தள்ளி இருந்தாள்.


அறிமுகத்துக்கு பின்னர் அவள் கிளம்பிவிட, "சிவன்யா நாம கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாமா?" என்றான் இவன்.

"எங்க நந்தி?"

"ஜஸ்ட், அப்படியே வெளிய"

"போகலாம். அப்பா அம்மாகிட்ட சொல்லணும்"

"மாம்ஸ் நம்பர் சொல்லு நான் சொல்லிடுறேன்"

"உங்ககிட்ட இருக்குமே"

"ப்ச் சிவா நம்பர் கொடு. அது மிஸ் ஆகிடுச்சு"

"சரி சரி" என்று அப்பாவின் நம்பரை குடுக்கவும் பேசி சம்மதம் வாங்கியவன் வெளியே இருந்த காரில் அவளை ஏறச் சொன்னான்.

"உங்களோடதா நந்தி"

"சிவாவோடது முன்னாடி பாரு..." என்று அவன் கண்ணாடியைக் காட்ட அங்கே சிவா என்ற பெயர் தான் வெகு ஸ்டைலாக எழுதப்பட்டிருந்தது.

"ஏறு சிவா" அவளை ஏற்றிக் கொண்டு அவன் செல்ல அவளுக்கு லேசாய் ஒரு தடுமாற்றம்.

"என்ன சிவா சட்டுன்னு டல்லாகிட்ட"

"இந்த கார்.. இப்படி உங்க பக்கத்துல நான்..." என அவள் தடுமாற "ஏதோ ஒரு கனவுன்னு சொன்னயே அது நாம கார்ல போற மாதிரி தான் வந்ததா?" என அவனே எடுத்துக் கொடுக்க.. அப்போதுதான் அவளுக்கும் அந்த நினைவுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.


கார் ஷீட் பெல்ட்டை விடுவித்துக் கொண்டு மரத்தின் மீது மோதி இரத்தம் வழிய பேசிக் கொண்டே சிவா என்று அழைத்த காட்சி அவள் கண்ணுக்குள் வர அவள் நந்தியின் கையினை பிடித்துக் கொண்டாள்.


"என்ன சிவா"

"ஒன்னுமில்லை. ஜாக்கிரதையாய் வண்டி ஓட்டுங்க. மறுபடியும் எப்போ வீட்டுக்கு வருவீங்க"

"வரும்போது வருவேன்"

"கல்யாணத்துக்கு நாள் பார்க்கணும்னு சொன்னாங்க இல்லையா. அதை அம்மா பார்த்துட்டாங்களா?"

"அம்மாவா?"

"அது அப்படியே கூப்பிட்டு பழகிட்டேன். மாத்திடுறேன்.. அத்தை.."

"பார்த்துட்டாங்க. சீக்கிரமா கழுத்துல தாலியோட நீ என் பக்கத்துல இருப்ப சிவா" என அவன் சொல்லவும்,
"ஐய் நந்தி" என்று அவள் சட்டென்று சொல்ல அவன் சின்ன சிரிப்புடன் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது காரில் சின்னதாய் ஒரு நந்தி சிலை இருக்க அதை இப்படியும் அப்படியுமாக பார்த்துக் கொண்டிருந்தவள்
"நந்தியை நான் வச்சுக்கலாமா?" என்றாள் அவனிடம்.

"கல்யாணம் பண்ணாமலே வச்சுக்கப் போறயா? இதெல்லாம் தப்பில்ல"

"வச்சுக்கிட்டாத்தான் என்னவாம்?"

"நான் ரெடிதான் சிவா"

"அட சும்மா இருங்க நந்தி.. "

"நீயே பேசிட்டு சும்மா இருங்கன்னு என்னைச் சொல்லுற பார்த்தியா? பட் நான் சும்மா இருக்கப் போறது இல்லை"

"என்.. ன பண்ணப் போறீங்க"

"அதுவா... எனக்கு உன்ட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு.."

"பேசுங்க" என்றதும் அவன் வண்டியினை ஓரமாக நிறுத்திவிட்டு அவன் ஷீட் பெல்ட்டை எடுத்துவிட்டு சட்டென்று அவள் மார்பில் தலை வைத்துக் கொண்டான்.

"ந..ந்தி" பேச்சு தடுமாறியவள் அவன் தலையை தூக்க முயற்சிக்க "ஷ்ஷ் சிவா கொஞ்ச நேரம் உன் மனசோட நான் பேச வேண்டியிருக்கு" என்று சொன்னவன் அப்படியே இருந்தான்.

அசையாது இருந்தவன் கண்மூடி அந்த மனதின் துடிப்பினை தன் துடிப்போடு பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த காட்சிதானே அன்றிலிருந்து அவனை கிளர்ந்தெழ வைத்துக் கொண்டிருந்தது. அப்போது எல்லாம் தெளிவில்லாமல் இருந்த காட்சி இப்போது தெளிவாக தெரியத் தொடங்கிறது.


குறுகுறுவென அவளுக்கு இருக்க கை அவளையும் அறியாமல் அவனை இன்னும் கொஞ்சமாய் இறுக்கிக் கொண்டது.


பேச்சற்ற மௌனம் இருவருக்கும் இடையே நீண்டிருக்க, அவனே அவளிடம் இருந்து பிரிந்தான்.
அந்த மயக்கத்திலே அவனை நிமிர்ந்து பார்த்தவள் "நந்தி என்னாச்சு? என்னமோ மாதிரி இருக்கீங்க?" என்று கேட்டதும்,

"சிவா" என்று மீண்டும் கட்டிக் கொண்டவன் "என்னால உன்னை விட்டு இருக்கவே முடியாதுடி. ப்ளீஸ் என்னை விட்டு போயிடாத. எனக்கு நீ வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நீ என்னை வெறுத்துட மாட்டீயே. நான் ஏதாவது தப்பு பண்ணாலும் என்னை விட்டுட்டு நீ போகக் கூடாது" என்று இறுக்கமாக பேச,

"என்ன பேசுறீங்க நந்தி. நான் ஏன் நந்தியை வெறுக்கணும். இப்படியெல்லாம் ஏன் யோசிக்கிறீங்க"

"நான் என்ன செஞ்சாலும் வெறுக்க மாட்டியே "

"சிவாவால நந்தியை எப்பவும் வெறுக்க முடியாது நந்தி" சொல்லிக் கொண்டே அவன் நெற்றியில் படிந்திருந்த முடியினை விலக்கிவிட்டு அங்கே முத்தமிட்டிருந்தாள்.


அது தந்த இதத்தில் இறுக்கமாக பேசியவன் இப்போது இளகி அவளையே இறுக்கமாக கட்டிக் கொண்டான்.தொடரும்...


விமர்சனங்களைத் தெரிவிக்க
👇👇👇

 
Status
Not open for further replies.
Top