மனம் -1
மாலையிலிருந்து இரவு முழுதும் தொடர்ந்த இத்தனை நேர தூக்கத்தை ஒரு வழியாக முடித்தவன் சோம்பலை முறித்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிய எட்டிப் பார்த்து அதுவரை தன் பணியை செம்மையாக செய்து கொண்டிருந்த அந்த நிலா மகளுக்கும் அதன் நட்சத்திர தோழிகளுக்கும் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு தன் ஒளியை பரவ செய்து , விட்ட பணியை தொடங்கினான் ஆதவன். மெல்ல மெல்ல அவனின் கதிர்கள் அவ்வூர் எங்கும் விழ அழகாய் புலர்ந்தது அல்லிக் குளம்..
அல்லிக்குளம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இங்கு பெரும்பான்மையான வசதிகள் அவ்வளவாக இல்லையெனினும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வசதிகளை அரசு மேற்கொண்டு நடைமுறைபடுத்தி வருகிறது. அதன் வாயிலாக ஒரு பள்ளிகட்டிடம் , மொத்தம் இருநூற்றி அறுபது குடும்பங்கள் இருக்க குடும்பத்துக்கு ஒன்று என இருநூற்றி அறுபது குடிநீர் குழாய் வசதிகள் , இருபத்தி ஒரு கைக் குழாய்கள் , மூன்று குளங்கள் , இரண்டு தார் சாலைகள் , ரேசன் கடைகள் , பஞ்சாயித்து அலுவலகம் , கொஞ்சம் பெரிதாக விளையாட்டு மைதானம் என சில வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
அந்த ஊரில் அரிசி மண்டியும் , கரும்பு தோட்டமும் , ஆலையும் உண்டு. அதற்கு எல்லாம் சொந்தகாரன் ஒருத்தன் இருக்கிறான். அவன் தான் அந்த ஊரிலேயே பெரிய தலைக்கட்டு என அழைக்கப்படும் அவனது தந்தை அம்மையப்பனின் மறைவுக்குப் பிறகு ஊரின் மொத்த பொறுப்பையும் தன் கையில் எடுத்துக் கொண்டு ஊர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறான்.
இந்த ஊர் வசதிகள் கூட அவனின் தலையீட்டால் தான் இவ்வளவு எளிதில் கிடைத்திருக்கிறது. அம்மையப்பன் இருந்த காலத்திலயே அவரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச எவனுக்கும் துணிவுமில்லை. தகிரியமும் இல்லை. அவரின் மீது ஊர் மக்கள் அனைவருக்கும் அம்புட்டு மரியாதை. அதே அளவு மரியாதையை இன்று அவனும் பெற்று வருகிறான்.
அந்த கரும்பாலை போற வழியில் நின்றிருந்த மூவர் தங்களுக்குள் முணுமுணுத்து கொண்டிருக்க அவர்களுக்கு பின்னால் ஓடி வந்த ஒருவன் , "ஏலேயி ..! மாயி , மாரி , ஜோதி அங்குட்டு சின்னையா ஆலைக்கு போவாம இங்கன என்னல நிண்டு கதை பேசிட்டு கிடக்கியே " என்று வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான் பரிதி. இந்த நால்வரும் அம்மையப்பனின் கரும்பாலையில் தான் வேலை பார்க்கின்றனர்.
"அட யாம்லே ! இப்படி கத்திக்கிட்டு வர்றவ ? - மாயி.
"இல்லைலே ஆலைக்கு போவ நெரமாயிட்டு சட்டுபுட்டுண்ணு போவாம இங்கன நிக்கியலே சின்னையா வர நேரமாச்சு அதாம்ல கேட்டேன்" என்றான் பரிதி.
"அது ஒன்னுமில்லடே நம்ம ஊருல ஒரு விசயம் நடக்க போவுதாம் அத பத்தி தாம்ல பேசிட்டு இருக்கோம் அப்படியே நேரம் போனதே தெரிலலே " என்றான் மாரி.
"அப்படி என்னடே ஒலகம் மறக்க சங்கதிய பேசிட்டியே..! " என்று அங்கலாய்த்தான் பரிதி.
அதில் அந்த மூவரும் அவர்களுக்குள் பார்த்து சிரித்து விட்டு , " சொன்னா நீனே ரெண்டு நாளைக்கு ஒலகம் மறந்து கனா கண்டுட்டு திரிவலே பரிதி பயலே..!!!" என்று சிரித்தார்கள்.
"அப்படி என்னலே சேதி..? பீடிகை சாஸ்தியா இருக்கு.."
"ஏலேய்ய்..கோட்டி ..! நம்மூருக்கு சினிமா சூட்டிங்கு நடத்த வாராங்களாம்லே.. போன வாட்டி டவுன்ல சினிமா கொட்டகைக்கு போயி பார்த்தோமே அந்த படம் அதுல வர்ற நடிகன் , நடிகை தாம்ல இங்க வர போறானுவோ" என மாரி குதூகளிக்க ,
"என்னாதுஊஊ... நம்மூருல சூட்டிங்கா ஆஆ...!! " என வாயை பிளந்தான் பரிதி.
"அட ஆமாலே இவளோ நேரம் அப்போ என்னத்தை கேட்டுகிட்டு நின்ன ?சூட்டிங்கு தாம்.. அதும் நம்ம ஊருல தாம்ல.. இன்னொரு விசயம் நம்ம சின்னையாவே அதுக்கு அனுமதி கொடுத்துட்டாங்கன்னா பாத்துக்கோயேன் " என்க
"என்னதூ.. ஊ.." என்று மீண்டும் நம்பமுடியாமல் கேட்டான்.
"இவம் என்னலே எல்லாத்துக்கும் அதிர்ச்சி மேல அதிர்ச்சி ஆயிட்டு கெடக்கான். இந்த போக்கத்தவன்ட்ட சொன்னதுக்கு பதிலா ஆலைக்கு போயி இன்னும் நாலு பேருக்கு சொல்லிருந்தா நம்மளுக்கும் கொஞ்சகானு எண்சான்மென்டு (என்ட்ரடெயின்மென்ட்) ஆயிருக்கும்ல" என ஜோதி என்பவன் சொல்ல ,
"ஒன் இங்கிலீசுல மண்ணென்னைய ஊத்த ..அதாம் வரலல வாய மூடிட்டு வாலே " என்ற மாரி அவர்களை கூட்டிகிட்டு அங்கு சிலையாய் சமைந்து நின்ற பரிதியையும் கணக்கில் எடுக்காமல் போயினர்.
அப்போது அவ்வழியாக புல்லட் சவுண்ட் காதை கிழித்துக் கொண்டு செல்ல அச்சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தவன் வண்டி பின்னாடியே ஓடினான். சிறிது தூரம் சென்றதும் அந்த கரும்பாலை முன்னால் வண்டி நிற்கவும் பரிதியும் மூச்சு வாங்க வந்து நின்றான்.
அதிலிருந்து ஆறடி உயரமும் , அலை அலையான அடர்ந்த கேசமும் , எதிரிகளை வீழ்த்தும் கூரிய பார்வையும் , எளிதில் இழக மாட்டேன் என்று அடம்பிடிக்கும் இறுகிய முரட்டு இதழ்களும் , அதற்கு மேல் முறுக்கி விட்டால் எதிரில் நிற்கும் எவனையும் நடுங்க வைக்கும் மீசையும் , நம் பாரம்பரிய திராவிட நிறத்துக்கும் சற்று கூடுதலான மாநிறத்தில் திடகாத்திரமான உடற்க்கட்டுடன் கிராமத்து பைங்கிளிகள் எவரும் மயக்கம் கொள்ளும் கட்டிளங்களையாக வேட்டியை மடித்துக் காட்டியவாறு இறங்கி நின்றான் அவன் விஸ்வர பாண்டியன். நம் கதையின் நாயகன்..
இறங்கி நின்று சுற்றிலும் தன் பார்வையை சுழற்றியவன் பின்னால் பரிதி நிற்பதை கண்டு "என்னலே !இப்படி மூச்சு வாங்குத ? அப்படி என்ன தலைபோற விசியம்னு புல்லட்டு பின்னயே ஓடியாந்த ?"
"சின்னையா ..." அவன் முறைக்கவும் வாயை மூடியவன் "அது வந்துங்கய்யா.." என்று இழுக்க "அதாம் வந்துட்டியே நேரா விசியத்துக்கு வா" என லேசா அதட்ட மிடறு விழுங்கியவாரு ,
"அது ஒன்னுமில்லைங்கையா நம்மூருல சினிமா சூட்டிங்கு நடக்க போவுதாம்ங்கைய்யா.. அதுக்கு நீங்க அனுமதியும் குடுத்துப்புட்டதா பேச்சு அடிபடுது.." என்று சொல்லிவிட்டு அவனை பார்க்கவும் அவன் மேலே சொல் என தலையசைக்க , "அதாங்கைய்யா அது நேசந்தான்னுங்களான்னு கேட்டுட்டு போவலானு உங்க பின்னாலயே வந்தேன்னுங்கய்யா" என்று தான் வந்த விசயத்தை ஒருவாறாக கூறி முடித்தான்.
தலையை இடவலமாக ஆட்டிவிட்டு, "இத கேக்க தான் இம்புட்டு அலம்பலா லே.! நானும் என்னமோன்னு நெனைச்சுப்புட்டேன் .. ஆமாலே நீ கேள்வி பட்டதுலாம் நேசந்தான் சூட்டிங்கு நடக்க போவுதுவு நாந்தேன் அனுமதி குடுத்தேன் போதுமா.."
"அய்யா என்னையா உண்மையாலுங்களா??"நம்ப முடியாமல் பரிதி கேட்க ,
"அட நீ என்னலே ..இம்புட்டு நேரமா நான் என்ன கிந்திலயா சொல்லிகிட்டு இருந்தேன்"
"அய்யா அதுக்கில்லையா! இங்க இருந்து டவுனுக்கு போய் படம் பார்த்தாவே வையுவிங்க.. கண்ட கருமத்தையும் பார்த்திட்டு படிக்குற பிள்ளைங்க மனசை கெடுக்காதிங்கன்னு சொல்லுவீங்க , அதுனாலயே நம்ம ஊருல ஆடல் பாடல் நிகழ்ச்சி, கூத்து பட்டறைலாம் நடக்க கூடாதுன்னு சொல்லிப்புட்டிங்க வருசா வருசம் நம்மூரு திருவிழாக்கு மட்டும் போனா போகுதுன்னு இதுகெல்லாம் அனுமதி குடுத்து வச்சுருக்கீங்க..
ஏன்னா நம்ம ஊருல இப்போ உள்ள வசதி இன்னும் பெருவி நல்ல நெலைக்கு வரணுமுன்னா பிள்ளைங்க நல்ல படிக்கணும் இப்போ உள்ள படங்களை பார்த்து கெட்டு போயிற கூடாதுன்னு சொல்லியே எல்லாம் செய்யுரவீங்க நீங்கய்யா.. அதாம் இத நீங்க செஞ்சத என்னால இன்னமும் நம்ப முடியல.."
"ஆமாலே கட்டுப்பாடு விதிச்சவனே அதை தாண்டலாமான்னு நீ கேக்குறது புரியிதுலே ஆனா என்ன செய்ய ? முதல்ல போன போட்டு கேக்கும் போது முடியவே முடியாதுன்னு மறுத்துட்டேன் மறுக்கா மறுக்கா கேட்டு நின்னாவ.
அதும் இல்லாம அந்த தயாரிப்பாளரு வேற எங்க அய்யாக்கு ரொம்ப வேண்டியவரு. எங்க அய்யா காலத்துல இருந்து இன்னை வரைக்கும் யாசங்கேட்டு வந்தவைங்களை வெறும் கையோடு அனுப்புனதில்லை. அவரும் அவர் வயசுக்கு மீறி ரொம்ப கெஞ்சவும் மனசுக்கு கேக்கலை அதாம் சில பல நிபந்தனையை போட்டு ஒத்துக்கிட்டு இருக்கேன். இருக்குற நாளுல எதாச்சும் தப்பு நடந்துசுன்னா அதையே காரணங்காட்டி அனுப்பி வச்சுருவேன்லே அதனால நீ எதுவும் வெசனப் பட்டுக்காத சரியா..!"
"சரிங்கய்யா நீங்க ஒன்னு செஞ்சா அதுல காரணம் இல்லாம போவாது. இந்த ஊருக்காக பெரியய்யா செஞ்சதுலாம் கணக்குல அடங்காது.அவருக்கு போறவு நீங்கதான்யா எங்களுக்கு குலசாமி உங்களை பழிக்குறது சாமிய பழிக்குறதுக்கு சமம். இந்த கிறுக்கன் எதோ புத்தி பேதலிச்சு போயி தப்பா பேசிருந்தா மன்னிச்சுகோங்க அய்யா!!" கைக்கூப்பி கேட்க போக கையை தட்டிவிவிட்டவன் ,
"அட கூறுக் கெட்டவனே ! நீ யாருல எனக்கு .. என் பாலிய சிநேகிதன் லே ! நீ வேணா ஊருக்காக அய்யா மேல வச்ச மருவாதிக்காக என்ன சின்னையான்னு மருவாதியா கூப்பிட்டுக்கோ.! ஆனா நீ எப்பவும் என் நண்பன்தாம்ல வெளங்குச்சா .. அதனாலே நீ கேட்டதலாம் நான் பெருசலாம் எடுக்கலலே.. போ ! போயி வேலய பாரு" என விரட்டினான்.
அதில் தனக்கான வேலை நினைவு வரவும் "ஆட்டுங்கைய்யா" என்று ஆலைக்குள் ஓடினான். அவன் ஓடுவதை சின்ன சிரிப்புடன் பார்த்து விட்டு தன் வேலையான அந்த வார கணக்கு வழக்கை ஆலைக்குள் சென்று தன் இடத்தில் உக்கார்ந்து பார்க்க ஆரம்பித்தான்.
*****
இங்கு சென்னையில் "பிருந்தாவனம் இல்லம்" என்று அழகிய கற்வேலைபாட்டால் பொறிக்கப்பட்ட சுவற்றைத் தாண்டி உள்நுழைந்தால் நிஜமாகவே ஒரு பிருந்தாவனம் போல் காட்சியளிக்கும் அழகிய தோட்டமும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் காட்சியுமே காணலாம்.
அவற்றை எல்லாம் தாண்டி போட்டிகோவிற்க்கு போனால் அங்கு ஶ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழலை தன் வாயில் வைத்து கவிபாட அதை கீழே அமர்ந்து தலை சாய்த்து ரசனையுடன் ராதை கேட்பது போல் கலைநயமிக்க சிற்பங்களும் அதனை சுற்றி வட்டவடிவில் செயற்கை நீருற்று அமைந்திருக்க பார்க்கவே அத்தனை அற்புதமாக இருந்தது.
அங்கிருந்து அந்த பிரமாண்ட வீட்டினுள் சென்றால் பெரிய வரவேற்பும் அதிலிருந்து இடப்பக்கமாய் சமையலறை வலப்பக்கமாய் விருந்தினர் அறை , அதற்கு நடுவில் மேல் அறைக்கு போவதற்காக பெரிய படிக்கட்டுகள் இருக்க அதிலிருந்து முட்டி வரைக்குமான சிகப்புநிற குட்டை பாவாடையும் , கையில்லாத வெள்ளை நிற இடுப்பளவு கொண்ட சட்டையும் போட்டு கொண்டு முடியை விரித்து போட்டு இரண்டு அடி குதிகால் செருப்பு அணிந்து "டக்! டக் !டக்!" என இறங்கி கொண்டிருந்தாள் நம் நாயகி பார்வி. பார்ப்பதற்கு ஒரு பார்பி பொம்மை போலவே இருப்பாள். பார்வி ன்னு பேர் வச்சதுக்கு பார்பினே வச்சுருக்கலாம்.
கீழே வந்தவள் அங்கு சமையலறையில் தன் தந்தை தேநீர் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கண் மண் தெரியாமல் ஆத்திரம் வர "டாடி..!!" என்று கத்தினாள்.
அவள் கத்தியது கேட்டும் அசராமல் அவளுக்கும் தனக்குமாக தேநீர் வார்த்துவிட்டே அவளிடம் வர பெரிய பெரிய மூச்சுகள் விட்டு தன் தந்தையை முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவர் தேநீர் கோப்பையை அவளிடம் நீட்ட அதை வாங்காது முகத்தை திருப்ப , அவரின் கெஞ்சல் பார்வையில் போனால் போகுது என்று வாங்கியவள் ஒரு மிடறு சுவைத்து விட்டு அதன் சுவையில் லயித்தவள் , "டாடி.. எத்தனை தடவை சொல்லுறது கிச்சன் வேலையெல்லாம் நீங்க செய்யாதிங்கன்னு .. அதுக்கு தான் பட்டம்மா இருக்காங்களே அவங்க செஞ்சு தர போறாங்க. நீங்க ஏன் டாடி ஸ்ட்ரேயின் பண்ணிக்குறீங்க" அவர் உடலின் அக்கரையில் கவலையாக கேட்டாள்.
"ஓ மை டால்.. இதுல என்ன டா கஷ்டம் உண்மையா சொல்ல போனால் இது எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம் தான். குக்கிங் இஸ் மை பேஷன் டா.. அதுவும் என் டால்காக பண்ணுறதுன்னா இன்னும் பிடிக்கும். அப்போ அது எப்படி கஷ்டமா இருக்கும் சொல்லு?."
"இப்படி பேசியே ஷாட்அவுட் பண்ணிருவீங்களே" என்று சலித்தவள்
"அப்புறம் டாடி அந்த ஆளுட்ட அவன் ஊருல அவன் வீட்டுலயே சூட்டிங் ஸ்பாட் வைக்க பேசிட்டிங்களா ? ஊருல சூட்டிங் நடத்தவே ரொம்ப பிகு பண்ணி ஒத்துக்கிட்டான்னு சொன்னிங்க.. இதுக்கு என்ன சொல்றான் அவன் ?" என்று அவள் கேட்க ,
அதற்கு தொண்டையை செறுமியவாரு "அதை பத்தி இன்னும் அந்த தம்பி கிட்ட பேசலமா" என்க
"வாட்" என கோபத்தில் குதித்தாள் பார்வி.