அத்தியாயம்: 2
யாரோ பைக் காரன் இடித்து விட்டான் என்று நினைத்த வெண்ணிலா அது இளங்கதிரவனாக இருப்பான் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை.
அவன் நக்கல் பேச்சில் தான் அவனை அடையாளம் கண்டு கொண்டவளுக்கு சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் நினைவு வந்து நெஞ்சத்தில் நெருப்பை பற்ற வைத்தது.
யாரை தன் வாழ்க்கையில் மீண்டும் பார்த்து விட கூடாது என்று உறுதியாக நினைத்தாளோ! அவன் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவான் என்று துளி கூட நினைத்து பார்க்க இல்லை. அப்படி இருக்க அவன் வந்தது திகைப்பு என்றால் முன்பு இருந்த திமிர் துளியும் குறையாமல் நின்றவனை பார்த்து கோபம் வந்தது.
அதிலும் இளங்கதிரவனின் திமிர் பேச்சி அவளின் வாய் பூட்டை அவிழ்த்து விட "ரோடு என் அப்பா போட்டது இல்லை தான். ஒத்துக்குறேன். உன் அப்பா போட்டதும் இல்லை. இப்படி நடு ரோட்டுல போற வரவங்களை இடிச்சி தள்ளிட்டு போக!. பார்த்து இரு போலீஸ் தூக்கி உள்ள வச்சிட போறாங்க" என்றாள் வெண்ணிலாவும் கோபமாய்.
அவள் சொன்னதை கேட்டு "ஹாஹாஹா" வாய் விட்டு சத்தமாய் சிரித்த இளங்கதிரவன் "என்னை உள்ள தூக்கி வைக்க போறாங்களா? வைக்கட்டும்... வைக்கட்டும்... யார் வராங்கனு பார்க்கலாம்! இந்த எசிபி இளங்கதிரவனை உள்ள வைக்க!" என்றான் மீசையை முறுக்கி விட்டபடி திமிராய்.
அதில் வெண்ணிலாவின் மனம் ஒரு முறை அதிர்ந்து அடங்க அவனிடம் வெளிக்காட்டி கொள்ளவில்லை. இத்தனை வருடத்தில் ஒரு நொடி கூட வெண்ணிலா அவனை தேடியதோ அவனை தெரிந்து கொள்ள முயன்றதோ இல்லை. எங்கேனும் அவன் பெயர் அடிபட்டாலே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவாள். அப்படி இருக்க அவன் எசிபி என்பது அதிர்ச்சியை தான் தந்தது.
அதிலும் ஒரு காவல்துறை அதிகாரியான அவன் செயல் கோபத்தை கொடுக்க "உன்னை மாதிரி சட்டம் என் சட்டை பையில் என்று பேசிட்டு சுத்துற போலிஸ் பத்து பேர் இருந்தா நாடு விளங்கிடும்" என்றாள் நக்கலாய்.
"உன் திமிர் உன்னை விட்டு போகுமா? அப்போ இருந்து இப்போ வரை இந்த திமிர் மட்டும் குறையவே இல்லைடி. இப்போ தானே வந்து இருக்கேன் இனிமேல் குறைச்சிடுறேன்" என்ற இளங்கதிரவன் வெண்ணிலாவை வன்மமாய் பார்த்தான்.
"நீதானே சாப்பாடு போட்டு வளர்த்து விட்ட? குறைக்குறதுக்கு..." என்று வெண்ணிலாவும் கோபமாய் கூற,
"நான் திமிரை சொன்னேன். கொலுப்பை சொல்லவில்லை. உனக்கு அப்படியும் ஒரு எண்ணம் இருக்கும் போல!" என்ற இளங்கதிரவனின் பார்வை ஒரு நொடி வெண்ணிலாவை அழுத்தமாய் தழுவி மீள,
அவன் பார்வையில் கூசியவள் "சீ பொறுக்கி நாயே. பதினைந்து வயசுலயே பொறுக்கிட்டு அலைஞ்சவன் தானே! உனக்கு புத்தி வேற எப்படி போகும்?" என்ற வெண்ணிலா அவனை முறைத்து விட்டு அங்கிருந்து நகர போக,
"யாருடி பொறுக்கி?" என்று கேட்டு ஆவேசமாய் பைக்கில் இருந்து இறங்கிய இளங்கதிரவன், நொடியில் வெண்ணிலாவை நெருங்கி அவள் கையை பின்னால் வளைத்து இருந்தான்.
அதில் அவனை முறைத்த வெண்ணிலா "சீ விடுடா என்னை" என்றவள் அவனிடமிருந்து கையை விலக்க பார்க்க,
அவளை விலக விடாமல் அழுத்தமாய் பிடித்து கொண்டவன் "நீ சீன்னு சொல்ற அளவுக்கு நான் தாழ்ந்து போயிடலை. இந்த திமிருக்கு தான்டி என்கிட்ட வாங்க போற! உன்னை என் முன்னாடி கண்ணீர் விட்டு கதற விடலை நான் கதிரவன் இல்லைடி" என்றான் ரௌத்திரத்துடன்.
வெண்ணிலா அப்போதும் அவனை முறைத்து நின்றவள் "அப்படி ஒரு நிலமை வந்தா பார்த்துக்கலாம்" என்று அஞ்சாமல் கூறி அவள் கையை விலக்க பார்க்க, இளங்கதிரவனின் இறுக்கமான படியில் அது முடியாமல் போனது.
"பெரிய கண்ணகி! நீ முறைச்சா நான் பொசுங்கிடுவேன் பாரு போடி..." என்றவன் அப்போது தான் வெண்ணிலாவின் கண்களில் பிரதிபலித்த வலியை பார்த்தான்.
அதில் அவளை இன்னும் நெருங்கி அவள் கண்களை விழி அசைக்காமல் பார்த்தவன் "ஹப்பாடா... இப்போ தான்டி மனசுக்கு குளுகுளுனு இதமா இருக்கு" என்று கூறி கொண்டே அவள் கையை இன்னும் பின்னால் வளைக்க, அதில் எழும்பு உடைந்தது போன்ற பெரும் வலி ஒன்று வெண்ணிலாவின் உடலெங்கும் பரவ அவள் கண்களில் கண்ணீர் பெருகி நின்றது.
ஆனாலும் அவன் முன் கண்ணீர் சிந்தி விட கூடாது என்ற வைராக்கியத்தில் அதை வெளியேர விடாமல், பல்லை கடித்து வலியை பொறுத்துக்கொண்டு வெண்ணிலா நிற்க
"இது தான் டி வேணும். உனக்கு வலிக்கனும் ஆனா அந்த வலி எனக்கு தெரிய கூடாதுனு உனக்கு நீயே வலியை தரனும். உனக்கு வலிக்கலையோனு நான் இன்னும் இன்னும் உன்னை வச்சி செய்யனும். உன் கணக்கை தீர்க்க நேரம் வந்துடுச்சி டி. தீர்த்து விட்டா தான் எனக்கு தூக்கம் வரும். அதுவரைக்கும் இந்த கதிரவனுக்கு தூக்கம் இல்லை. என்ன சொன்ன பொறுக்கியா? பொறுக்கி என்ன செய்வான்னு காட்டுறேன்" என்றான் இளங்கதிரவன் கண்கள் வஞ்சத்தில் பளபளக்க
ஆனா அதை பார்த்த வெண்ணிலாவிடம் பயம் என்ற பிரதிபலிப்பு துளியும் இல்லை. 'முன்பு செய்ததை விட பெரிதாய் என்ன செய்துவிட போகிறான்' என்று நினைத்தவள் கை வலித்தும் அவன் முன் கண்ணீர் சிந்தி விட கூடாது என்ற வைராக்கியத்தில் இறுகி நின்றிருந்தாள்.
இறுகி கிடந்த அவள் முகத்தை இகழ்ச்சியாய் பார்த்த இளங்கதிரவனின் நெஞ்சம் அவளை விட பல மடங்கு கோபத்திலும், பழி வெறியிலும் இறுகி கிடந்தது. அந்த கோபத்தை விழிகளில் தேங்கி அவளை பார்த்தவன் அவளை உதறிவிட்டு திரும்பி செல்ல,
"வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு டா. கட்டாயம் உன்னை வதம் பண்ண வருவான்" என்ற வெண்ணிலா நிதானமாய் சத்தம் உயராமல் அதே நேரம் அழுத்தமாய் சொல்ல,
"பார்க்குறேன் டி. எந்த வல்லவன் வந்து உன்னை எங்கிட்ட இருந்து காப்பாத்துறான்னு" என்ற கதிரவனின் பைக் புழுதி பறக்க அங்கிருந்து கிளம்பி சென்றது.
அதுவரை அவன் முன்பு சிந்தி விட கூடாது என்று தேங்கி நின்றவளின் கண்ணீர் பூமியில் பட்டு தெரிக்க வழிந்த கண்ணீரை துடைத்தபடி உடையிலும் கல்லூரி பேக்கிலும் ஒட்டி இருந்த மண் மற்றும் தூசியை தட்டிவிட்டாள்.
ஆனால் மனநிலை கடலில் ஆழ் கடல் சீற்றம் என கோபத்தில் பொங்கி கொண்டிருந்தது.
"ச்சை இந்த பொறுக்கி நாய் எல்லாம் திரும்பி வரலைன்னு யார் அழுதா? ஊரை வீட்டு போனவன் அப்படியே போக வேண்டியது தானே..., எத்தனையோ அப்பாவி எல்லாம் ஆக்ஸிடன்ட்ல போய் சேருறான் இவனுக்கு எந்த லாரியும் கிடைக்கலை போல..." என்று திட்டி கொண்டிருந்த வெண்ணிலா,
"நிலா என்ன ஆச்சி? ஏன் இங்க நிக்குற? ஹேய் இது என்ன கையில ரத்தம்?" என்று பதறி அவள் அருகில் வந்தான் சரவணன்.
இளங்கதிரவனின் தம்பி. கணித பேராசிரியர். கணிதத்தில் பிஹெச்டி முடித்து விட்டு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றான்.
"எல்லாம் உங்க அண்ணன் அந்த பொறுக்கியாள தான். ச்சை அவனெல்லாம் இங்க வரலைன்னு யாரு அழுதா? ஊரை விட்டு போனவன் அப்படியே போக வேண்டியது தானே!" என்ற வெண்ணிலா இளங்கதிரவன் மேல் இருந்த கோபத்தை எல்லாம் சரவணனிடம் காட்ட,
"என் அம்மா" என்றான் சரவணன் நிதானமாய்.
அதில் "என்ன?" என்ற வெண்ணிலா அவனை புரியாமல் பார்க்க, "இல்லை யார் அழுதானு கேட்டியே...? அதான் என் அம்மா அழுதாங்கனு சொன்னேன்" என்றவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து அவளின் அடிபட்ட கையில் கட்டி விட,
அவனை முறைத்த வெண்ணிலா அவன் கையை தட்டி விட்டு அங்கிருந்து விறுவிறுவென்று சென்றாள்.
"நீங்களும் அவன் தம்பி தானே! வேற எப்படி இருப்பிங்க!" என்று முணுமுணுத்தபடி வெண்ணிலா செல்ல
"நிலா... இது என்ன பேசிட்டு இருக்கும் போது பாதில போறது? நீ கதிரோட நம்ம உறவை இணைச்சி பாக்குறியா? அப்படினா இங்கேயே சொல்லிடு இனிமேல் உன் வழிக்கே வர மாட்டேன். என்னை பற்றி உனக்கு நல்லா தெரியும்" என்றான் சரவணன் அழுத்தமாய்.
அதில் கோபமாய் ரோட்டை உதைத்து விட்டு திரும்பி வந்தவள் அவனை முறைத்துவிட்டு பைக்கில் அவன் பின்னே அமர,
"பிடிச்சிக்கோ. மறுபடியும் கீழ விழுந்து காலை உடைச்சி வச்சிக்காத. அப்பறம் எனக்கு தான் கஷ்டம்" என்றவன் இதழ் பிரியா புன்னகையுடன் சொல்ல,
"எல்லாம் என் நேரம். ச்சை..."என்று ஆத்திரத்தில் பல்லை கடித்த வெண்ணிலா அவன் தோளில் கை வைத்து பிடித்து கொண்டாள்.
வெண்ணிலாவை அருகில் இருந்த மருத்துவமனை அழைத்து சென்று டிடி போட்டு விட்டு அழைத்து வந்து வீட்டில் விட்டவன் "ரெஸ்ட் எடு. அதுக்கு முன்னாடி காலேஜ்கு போன் செய்து நாளைக்கு சேர்த்து லீவ் செல்லு" என்று சரவணன் சொல்ல வெண்ணிலா மௌனமாய் நின்றிருந்தாள்.
அவள் அமைதியை பார்த்தவன் "நிலா.." என்று அழுத்தமாய் அழைக்க,
"அவன் ஏன் மறுபடியும் வந்தான்? நிம்மதியே போச்சி. என்னமோ வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டாம்னு தோனுது. காலேஜ் ஒரு வாரம் லீவ் சொல்ல போறேன்" என்ற வெண்ணிலா தன்பாட்டிற்கு பேசி கொண்டே செல்ல,
"பேசி முடிச்சிட்டியா? சரி நாளைக்கு மறுநாள் கிளம்பி இரு. நான் காலேஜ்ல ட்ராப் பண்ணிட்டு. பிக் அப் பண்ணிக்குறேன்" என்றான் சரவணன்.
"இப்போ என்ன உங்க பிரச்சனை? சும்மா எரிச்சல் படுத்திட்டு இருக்கிங்க! எனக்கு எதுவும் பிடிக்கலை என்றவள் கோபமாய் கத்த,
"உனக்கு என்ன பிரச்சனை?" என்றான் சரவணன் நிதானமாய்.
"உங்க குடும்பம் தான் பிரச்சனை. உங்க அண்ணன் தான் பிரச்சனை. அந்த வீட்டுக்கு வரதை நினைச்சாலே உடம்பெல்லாம் எரியுது" என்ற வெண்ணிலாவின் முகம் கோபத்தில் சிவந்து போக,
"நடந்து முடிஞ்சதை விடு நிலா. நீ ஏன் அதையே நினைச்சி உன்னை கஷ்டப்படுத்திக்குற?" என்ற சரவணன் அவளை கனிவுடன் பார்க்க,
"முடியலை. மறக்குற மாதிரியா உங்க அண்ணன் பண்ணான். நினைச்சாலே நெஞ்செல்லாம் எரியுது..." என்றாள் வெண்ணிலா அதீத கோபத்துடன்.
"அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற நிலா?" என்று சரவணன் கேட்க,
"எதுவுமே பண்ண முடியாதது தான் என் கோபத்துக்கு காரணம். ஏதாவது பண்ண முடிஞ்சா என் கோபம் குறையுமோ? என்னோவோ?" என்றவளுக்கு இளங்கதிரவனை நடு ரோட்டில் விட்டு சாட்டையால் அடிக்கும் வெறி வந்தது. ஆனால் வந்து என்ன பயன் எதுவும் செய்ய முடியாது.
ஒரு மாவட்டத்தின் ஐபிஎஸ் ஆஃபிஸரை என்ன செய்து விட முடியும்! அவள் நினைத்து போல் அடித்து விட முடியுமா! இல்லை அவன் செய்ததை மறந்து கடந்து விட தான் முடியுமா! அதை நினைத்த வெண்ணிலாவின் முகம் மீண்டும் உணர்ச்சிகளை தொலைத்து நின்றது.
"எல்லாத்துக்கும் காலம் பதில் தரும் நிலா அது வரை வெயிட் பண்ணு. இப்போ எதை பற்றியும் யோசிக்காம போய் ரெஸ்ட் எடு" என்று வெண்ணிலாவை சமாதானம் செய்து விட்டு சரவணன் அவன் வீட்டிற்கு செல்ல
"நில்லுடா... நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? அந்த வெண்ணிலா கூட பேசாதனு சொன்னா உன் மூளையில் ஏறாதா? எப்பவும் அவ கூட சேர்ந்து ஊர் சுத்தாம உன்னால் இருக்க முடியாதா?" என்றார் வேலம்மாள் கோபமாக.
"அம்மா பேசுற வார்த்தையை யோசிச்சி பேசுங்க சொல்லிட்டேன். ஊர் சுத்துறேன் அது.. இதுன்னு.. எல்லாம் பேசாதிங்க. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் கேட்டுட்டு பொறுமையா போக மாட்டேன்" என்ற சரவணன் அடக்கப்பட்ட கோபத்துடன் பேச
"ஹோ... அந்த அளவுக்கு வந்துட்டா? என்ன பேசி உன்னை மயக்கி வச்சிருக்கா? இப்படி அவ பின்னாடியே சுத்துற..." என்று வேலம்மாள் சொல்லி முடிக்கும் முன்
"அம்மா..." என்று கத்திய சரவணன் சாப்பிட்டு மேஜையில் இருந்த தண்ணீர் சொம்மை எடுத்து விட்டெறிய, அது தரையில் பட்டு தண்ணீரை சிதறிய வேகம் சரவணனின் கோபத்தை காட்ட, பார்த்து நின்ற வேலம்மாள் வெடவெடத்து போனார்.
அவர் நடுக்கத்தில் சற்று நிதானித்த சரவணன் "உங்கிட்ட பல முறை சொல்லிட்டேன். பேசுற வார்த்தையை யோசிச்சி பேசுங்கனு. உங்க முத்த பையன் மாதிரி பொறுமையா நீங்க பேசுறதை கேட்டுட்டு இருக்க மாட்டேன்" என்று அவரை எச்சரித்தவன், அடுத்த பத்து நிமிடத்தில் கல்லூரிக்கு கிளம்பி சென்றிருந்தான்.
அதுவரை அங்கே நடப்பதை ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்தபடி கவனித்து கொண்டிருந்த இளங்கதிரவன் பேப்பரை மடித்து வைத்தபடி "அம்மா சாப்பாடு எடுத்து வைங்க டியூட்டி போக லேட் ஆகிட்டு" என்று விட்டு அவன் அறைக்கு போக,
"ஏன் கதிரவா.. நான் என்ன பேசிட்டேன்னு இப்படி நிலையா நின்னுட்டு போறான்? நீயும் பார்த்துட்டு இருக்க? என்ன சொக்கு பொடி போட்டாளோ... இவன் இப்படி அவ பின்னாடியே சுத்துறான். நீயும் என்னனு ஒரு வார்த்தை கேட்க மாட்டேங்குற" என்று விசும்பலாக சொல்ல,
"அவனுக்கு பிடிக்காததை நீங்க ஏன் பேசுறிங்க! விடுங்க. போய் சாப்பாடு எடுத்து வைங்க..." என்று விட்டு அவனும் சென்று விட, வேலம்மாள் இளங்கதிரவனின் இந்த பேச்சில் திகைத்து நின்றார்.
அவன் தனக்கு சாதகமாய் பேசுவான் என்று நினைத்து சரவணனிடம் அப்படி பேசியவருக்கு ஏமாற்றமாய் போய் விட அதற்கும் காரணம் வெண்ணிலாவென பழி சொல்லியபடி கதிரவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தார்.
இளங்கதிரவன் கிளம்பி வரவும், அவனுக்கான அரசாங்க வாகனம் அவன் வீட்டு வாசலில் வந்து நிற்க, காக்கி உடையின் கம்பிரமாய் வந்து வாகனத்தில் அமர்ந்தவன் "சைரன் ஆன் பண்ணுங்க ராமர்?" என்றான்.
"சார்!! இங்க சைரன்!!" என்ற ஓட்டுனர் தயங்கி அவனை பார்க்க,
"என்ன இந்த ஊருக்கு? கொம்பு முளைச்சிருக்கா? ஆன் பண்ணுங்க ராமர்" என்று இளங்கதிரவன் அழுத்தி சொல்ல,
தன் மேல் அதிகாரியின் பேச்சை தட்ட முடியாமல் ஓட்டுனர் வாகனத்தின் சைரனை ஆன் செய்ய அந்த தெருவில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் இருந்தவர்கள் அதிர்ச்சியும் வியப்புமாய் வெளியே வந்து எட்டி பார்த்தனர்.
சொக்கநாதனூர் விவசாய பூமி மட்டும் இல்லை அரிச்சந்திரன் என்ற நல்ல மனிதரின் வார்த்தைக்கு கட்டு பட்ட ஊரும் கூட. ஊரில் என்ன தவறு நடந்தாலும் அரிச்சந்திரனின் தீர்ப்பில் நியாயம் கிடைக்கும் நல்லது நடக்கும் என்று நம்பி காவல் நிலையம் செல்லாமல் அரிச்சந்திரனின் வார்த்தைக்கு கட்டு பட்டு வாழும் ஊர்.
அப்படி பட்ட ஊரில் அரிச்சந்திரனின் மகனாய் பிறந்து இளங்கதிரவன் வேலையில் சேர்ந்து அடுத்த நிமிடம் தன் தனிப்பட புகாராய் தன் முதல் புகாரை சொக்கநாதனூர் மேல் பதிவு செய்து இருந்தான்.
தொடரும்...❤️