வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மெய் தழுவிய நேசப்பூவே 1

GG writers

Moderator
வானில் அலுமினியப் பறவை தரையிறங்கத் தொடங்கிய நேரம் ஆதவன் கிழக்கில் உதயமாகத் தொடங்கினான்.

வெளிச்சப் புள்ளியாய் தூரத்தே தெரிந்த விமானம் தரையிறங்கி அதன் கதவுகள் திறக்கச் சில நேரம் பிடிக்க அந்த நேரத்திலும் மக்கள் தங்களின் உறவுகளையோ நண்பர்களையோ அழைக்க வந்திருந்தனர்.

மீனம்பாக்கம் விமானநிலையம் காலை நேரப் பரபரப்பில் மக்களின் கூட்டத்தில் திளைத்தது.

கடைசியாக வந்த துபாய் விமானத்தில் மக்கள் தங்களின் செக்கின் முடித்து வெளியே வர அந்தக் கூட்டத்தினுள் தன்னை நுழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் மங்கையொருத்தி.

உயர்த்திப் போட்ட கொண்டை, உயர்தரமான பருத்திப் புடவை, கையில் ரோலக்ஸ் வாட்ச், ரோஜா நிறத் தேகம் கொண்டு கண்களில் கம்பீரம் தெரியப் பதுமையாய் வந்தவள் தன் பயணப்பெட்டியைச் சேகரித்து எடுத்துக் கொண்டு வெளியே வர அங்கே தாருனிகா என்ற தன் பெயர்ப் பலகையைத் தாங்கி நின்றவரைக் கண்டவள் அவரருகில் சென்றவள்,

"குட்மார்னிங் சார்! ஐ ஆம் தாருனிகா" என்றாள் கம்பீரமாய்.

"வாங்கம்மா மன்னிச்சிடுங்க மா, நான் உங்களைப் பார்த்தது இல்லை. அது தான் மா..." என்றார் இயல்பான பரபரப்புடன்.

"இட்ஸ் ஆல் ரைட் சார்... என்னைத் தெரிஞ்சிருந்தா நீங்க என் பேரை இப்படி வச்சி நின்னுட்டு இருக்க மாட்டீங்க இல்லை. சரி போலாமா சார்" என்றாள் அழுத்தமாய் சற்று சிரித்தபடியே என்றும் தோன்றியது.

"ம்ம் போலாம் மா... அம்மா இப்போ நாம கோயம்புத்தூருக்கு பிளைட்ல போயிடலாமா மா?" என்று அவளின் சவுகரியத்தையும் கேட்டார் பெரியவர்.

அவருக்கு நிச்சயம் ஐம்பது வயது இருக்கும். அவரைப் பார்த்தவள் மெல்லச் சிரித்தபடி,

"உங்க பேர் சார்..." என்றாள் இயல்பாக.

"தனபாலன் மா..." என்றார் மரியாதையாக.

"தனபாலன் சார், நீங்க என்னை அம்மான்னு கூப்பிட வேண்டாம். நான் உங்களைவிட வயசில் சின்னவ தான். சோ, நீங்கத் தாரணின்னு கூப்பிடுங்க. வீட்டுல அப்படித் தான் கூப்பிடுவாங்க. சரி இப்போ கோயம்புத்தூருக்கு பிளைட் இருக்கா?" என்றாள் கேள்வியாய்.

"ம்ம், இன்னும் ரெண்டு மணி நேரம் டைம் இருக்கு மா..." என்றார் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி.

"ம்ம், சரி அப்போ பக்கத்துல இங்கே ஹோட்டல் ஏதாவது இருந்தா பாருங்க. கொஞ்சம் ரெப்பிரஷ் ஆகிட்டு போலாம்." என்றாள் சுற்றியும் பார்த்தபடி.

சென்னை அவளுக்குப் புதிது. பிறந்ததிலிருந்து இப்போது வரைக்கும் லண்டனில் இருந்தே வாழ்ந்து பழகியவளுக்கு இங்கே உள்ள மனிதர்களும் அவர்களின் பழக்க வழக்கங்களும் பார்க்க ரொம்பவே பிடித்திருந்தது.

என்ன தான் அங்கேயே பிறந்து வளர்த்திருந்தாலும் கூட அவளைச் சுத்த தமிழ்ப் பெண்ணாகத் தான் வளர்த்திருந்தார் அவளின் அன்னை மலர்விழி.

இயல்பிலேயே அன்னை மீது அதீதப் பாசம் கொண்ட தாரணிக்கு அவர் சொல் தான் வேதம். அவள் பிறந்ததிலிருந்து இன்று வரை தன் ஊரின் பெருமையையும் நாட்டின் பெருமையையும் சொல்லிச் சொல்லி வளர்த்தவர் மலர்விழி.

மலர்விழி ஜோசப்பின் ஒரே மகள் தாருனிகா. தாய் இந்து தந்தை கிறிஸ்டின்.

ஆனாலும் இரு மதத்தையும் ஏற்று வாழப் பழகியிருந்தாள். ஜோசப் மலர்விழியின் திருமணம் காதல் திருமணம். தாய் தமிழ்நாட்டுப் பெண் தந்தை லண்டன் வாசி.

தாய்நாட்டின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அதன் அருமை பெருமைகளையும் மகளுக்குச் சொல்லி வளர்த்தார் மலர்விழி.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவளை அழைத்துச் செல்ல வந்த தனபாலனுடன் கோயம்புத்தூர் விமானத்தில் அமர்ந்திருந்தாள்.

அவர்கள் கோயம்புத்தூர் வந்திறங்கிய அடுத்த நொடி அவர்களின் முன்னே அந்தக் கடல் போன்ற கார் நின்றது.

அதைக் கண்டதும் கேள்வியாய் தனபாலனை பார்த்தவளுக்கு,

"அய்யா தான்மா அனுப்பியிருக்காங்க. போலாம் மா அங்கே உங்களுக்காக எல்லாரும் காத்திருக்காங்க" என்றபடி அவளுக்குப் பின்னே கார் கதவைத் திறந்து விட்டு இவர் முன்னே அமர்ந்ததும் அந்த வண்டி ஊட்டியை நோக்கிப் பறந்தது.

அழகான கொண்டை ஊசி வளைவுகளுடன் பசுமை போர்த்திய புல்வெளியைக் கண்டவளின் மனம் றெக்கை இல்லாமலே பறந்தது.

தன் தாய் பிறந்த ஊர். இந்த ஊரின் அருமை பெருமைகளைத் தாய் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் இன்று தான் நேரில் காண்கிறாள்.

எத்தனை அழகான இடம். காரில் அமர்ந்தபடியே கண்ணாடியை இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தபடியே வந்தாள் பெண்ணவள்.

"அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம எஸ்டேட் பேலஸ் வரப்போகுது மா" என்றார் முன்னறிவிப்பாய்.

அதைச் சந்தோஷமாய் கேட்டுக் கொள்ள மனமோ ஏதோ இனம் புரியா சஞ்சலத்தில் இருந்தது.

காரணம் அறியவில்லை என்பதை விடப் புரியவில்லை என்பதே மேலானது.

இன்னும் சற்று நேரத்தில் தன் தாய் பிறந்த வீட்டையும், வீட்டு மனிதர்களையும் காணப்போகிறாள். சிறு வயதில் இருந்தே யாரென்று தெரியாத சொந்தம் இன்று தன் தாயின் கனவுக்காக அந்தச் சொந்தங்களைத் தேடியும் உறவுகளைத் தேடியும் வந்திருக்கிறாள்.

பிரிந்த உறவுகளை மீண்டும் இணைக்க வந்திருக்கிறாள். நிச்சயம் அவளுக்கு அங்கே வரவேற்பு எப்படி இருக்கும் என்பது அவளுக்கு விளங்காத விடை தான் என்றாலும், தாய் சொல்லிய அவளின் பிறந்த வீட்டு மனிதர்கள் நிச்சயம் கெட்டவர்களாக இருக்க வாய்ப்பு இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.


சத்யமூர்த்தி பேலஸ் தங்களை வரவேற்கிறது என்ற தங்க நிற எழுத்துக்களைத் தாங்கிய போர்டை கண்டவளின் மனம் படபடத்தது.

ஆழ்ந்த சுவாசித்து பெருமூச்சு விட்டுத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் தன் தாயின் சொந்தங்களை ஏற்கத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள்.

நீண்ட பாதையில் சாலையின் இருபக்கமும் விதவிதமான செடிகள் தாங்கிய மலர்த் தோட்டம் காணப்பட்டது.

கண்களுக்கு விதவிதமாய் பூத்துக் குலுங்கிய மலரைக் கண்ட பெண்ணவளுக்கு அந்த இயற்கை அன்னையை அத்தனை பிடித்துப் போனது.

அந்தச் சலவைக் கற்கள் பதித்த பாதை நீண்ட நெடுந்தூரம் சென்றது. சிறிது தூரத்தில் கண் முன்னே அந்த வெள்ளை பளிங்கு மாளிகை தென்பட்டது.

சற்று நேரத்தில் அந்தப் பளிங்கு மாளிகை போர்டிகோவில் அந்தக் கார் வழுக்கிக் கொண்டு நின்றது.

அவள் கதவைத் திறந்து இறங்கும் சமயம் இரு வயதான தம்பதியர்கள் வேகமாய் வாயிலுக்கு வந்தார்கள்.

அவளைக் கண்டதும் நான்கு பேரின் விழிகளிலும் ஈரம் கசிந்தது. தொலைந்த போன தங்கள் மகள் இதோ தங்களின் பேத்தி ரூபத்தில் வந்ததை நினைத்து அந்த வயதானவர்களுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

அவளுக்கு அவர்களை எப்படி அழைக்கவென்று தெரியவில்லை. சிறு வயதிலிருந்து பார்த்த சொந்தம் இல்லை. ஆனால் அவளுக்கு அவர்கள் தான் தாத்தா பாட்டி என்பது நூறு சதவீதம் உண்மை.

சற்று நேரத்தில் தன்னை தேற்றிக் கொண்டவள் அவர்களை நோக்கிச் சென்று,

"கிரானி கிரான்பா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..." என்றபடி நால்வரின் கால்களிலும் ஒன்றாகவே விழுந்தாள்.

அதில் சுயம் வந்த பெரியவர்கள் அவளின் தலையில் கை வைத்து, "எப்போதும் சந்தோஷமா இருடா. அது என்ன சாமி கிரானி கிரான்பான்னு எது எதுவோ சொல்றே, அழகா தமிழ் பேசுற, அழகா தமிழ்ல தாத்தா பாட்டின்னு கூப்பிடு தாயி..." என்றார் சாரதா.

"இல்லை பாட்டி எனக்கு முதல்ல எப்படி அழைக்கிறதுன்னு தெரியலை. அதுவும் இல்லாம உங்களை இப்போ தான் பாக்குறேன். நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை பாட்டி அந்தப் பயம் தான்..." என்றாள் மென்மையாய் சிரித்தபடி.

"எங்க பேத்தி யாருக்குடா பயப்படணும், நீ உரிமையா கூப்பிடலாம்டா. உனக்குத் தான் அதுக்குண்டான முழு உரிமையும் இருக்கு." என்று அவளை நெட்டி முறித்தார் பெரியவர்.

"சரி சரி வா. ஆமா, வா முதல்ல நாங்க யாருன்னு உனக்குச் சொல்றோம்." என்று கூறியவரை தடுத்து நிறுத்தியவள்,

"நீங்கக் கௌசல்யா பாட்டி அப்புறம் இது பரசுராம் தாத்தா. அப்புறம் இவங்க சாரதா பாட்டி சத்யமூர்த்தி தாத்தா. இவங்க என் அம்மாவைப் பத்து மாசம் வயித்துல சுமந்தவங்க. நீங்க அவங்களை நெஞ்சில சுமந்தவங்க. என்ன பாட்டி நான் சரியா சொல்லிட்டேனா?" என்றாள் குதூகலமாய்.


"அப்படி சொல்லுடி என் ராஜாத்தி! உங்க அம்மா எங்களைப் பத்தி எல்லாம் உன்கிட்ட பேசியிருக்காளா மா? எங்களோட நினைப்பு கூட அவளுக்கு இருந்துச்சா மா?" என்றார் கௌசல்யா.

"உங்களோட நினைவுல தான் அவங்க உயிர் வாழ்ந்ததே பாட்டி..." என்றவளின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தது.

அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் துடைத்தவள் சிரித்தபடி அவர்களின் புறம் திரும்பினாள்.

"அப்படி எங்க மேல உயிரையே வச்சிருந்தவ இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட எங்களைப் பார்க்கணும்னு அவளுக்குத் தோணலையா மா? அன்னைக்கு நாங்க யோசிக்காம பேசினது தப்புன்னு அப்பவே புரிஞ்சிகிட்டமே டா... ஆனா, அப்பவும் அவ எங்களை மன்னிக்கத் தயாரில்லை தானே..." என்று மகள் பிரிந்த இத்தனை வருடங்களில் கலங்காத சத்யமூர்த்தி கூடக் கலங்கித் தான் போனார்.

அவரின் கலங்கிய முகம் தாங்காத சாரதா, "என்னங்க இது? எத்தனை வருஷம் கழிச்சி நம்ம பேத்தி வந்திருக்கா! சீக்கிரமே நம்ம பொண்ணும் நம்மகிட்ட வருவாங்க கோபம் மறந்து. நீங்க முதல்ல கண்ணைத் துடைச்சிகிட்டு நம்ம பேத்தியை வீட்டுக்குள்ள கூப்பிடுங்க..." என்றார் கணவனைச் சமாதானம் செய்தபடி.

பரசுராமும் கௌசல்யாவும் வாஞ்சையுடன் தங்களின் பேத்தியை அணைத்தபடி, "நீ உள்ள வாக்கண்ணு போலாம். இத்தனை வருஷம் கழிச்சி வந்திருக்கப் பேத்தியைப் பார்க்காம இன்னும் பழசைப் பத்தி ஏன் மாமா பேசுறீங்க?" என்று தன் மூத்தாரை வைதபடி தாரணியை உள்ளே அழைத்துச் சென்றார்.

அவர்களுடன் ஒரு ராஜகுமாரியாய் உள்ளே வந்தவள், அவர்களின் அருகே அமர்ந்து தன் சின்னத் தாத்தாவின் தோளில் பாந்தமாய் சாய்ந்து கொண்டாள் மங்கையவள்.

அவளுடன் அமர்ந்து அவளின் கைகளைப் பிடித்த படி அமர்ந்திருந்தார் கௌசல்யா.

கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த மகளின் உதிரத்தைக் கண்டதும் ஏதோ தங்கள் மகளே தங்களுடன் வந்து சேர்ந்துவிட்டதாய் சந்தோஷம் கொண்டார்கள் அந்த வயதானவர்கள்.

அவளை அழைத்து வந்ததுடன் தன் வேலை முடிந்தது என்று தனபாலனும் சென்று விட இவளோ தன் தாத்தா பாட்டிகளிடம் செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள்.

"கௌசி பாட்டி நான் இன்னும் ஒருத்தரை பார்க்கலை. ஆமா எங்கே அவரு, நான் வருவேன்னு அவருக்குத் தெரியும் இல்லை? இது தான் அவங்க அக்கா மேல அவருக்கு இருக்கிற பாசமா…" என்றாள் செல்லமாய் கோபித்தபடி.

பேத்தியின் சொல்லாடலைக் கேட்ட பாட்டிகளுக்குச் சிரிப்பு தான் வந்தது.

"உன் மாமனை கேட்குறியா தாயி... அவனுக்கு என்னவோ இன்னைக்கு முக்கியமான மீட்டிங்காம், போயிருக்கான். இப்போ வர நேரம் தான்டா..." என்றார் பேத்தியின் தலையை வருடியபடி.

அவர் சொல்லி முடித்த அதே நேரம் அந்த மாளிகையின் போர்டிகோவில் அந்த வெளிநாட்டுப் படகுக் கார் வேகமாய் வந்து நின்றது.

"இதோ பாரு உன்னோட மாமனே வந்துட்டான்" என்று பெருமை பொங்கக் கூறினார் சாரதா.

அதே நேரம் வெள்ளை சர்ட் கருப்பு கலர் பேண்ட்டில், மாநிறத் தேகம், ஆண்மையின் இலக்கணமாய் கம்பீரமாய் இறங்கிவந்தான் அவன்.

உள்ளே வந்தவன் கண்களில் விழுந்தாள் பொன்னிறத் தேகத்தாள். அவனின் கண்களில் மின்னல் தான் வந்து போனதோ சடுதியில். ஆனால், அடுத்த நொடியே அதில் கோபம் தான் தெரிந்தது.

தன் தாய் தந்தையர்கள் இடையே உரிமையாய் அமர்ந்தவளைக் கண்டவனின் விழிகளில் யாரெனக் கேள்வி தொக்கி நின்றது.

"வா ரத்னம், இது யாருன்னு தெரியுதா? உங்க அக்கா மலரோட மக. எப்படி வளர்ந்திருக்கிறா பாத்தியா பா..." என்றார் பரசுராம் பாசமாய்.

அதைக் கேட்டவனின் இதழ்களில் எள்ளலாய் ஒரு சிரிப்பு வந்து போனது.

"அக்காவா அது யாரு டாட்? அப்படி யாரு இருக்காங்க நமக்கு? ஏன் சத்திப்பா நாம வேணாம்னு தானே அவங்க இங்கே இருந்து போனாங்க? இப்போ என்ன புதுசா மகளை அனுப்பி சொந்தம் கொண்டாடுறாங்க?" என்றவனின் வார்த்தையில் அத்தனை வலி தாங்கி நின்றது. ஆனால், அது அங்கே இருந்த பெரியவர்களுக்குப் புரிந்தாலும் கூட, அவனின் பேச்சு பிடிக்கவில்லை என்பதை அவர்களின் முகம் உணர்த்தியது.

அவனின் கேள்வி அனைவருக்கும் நியாயமாய் தெரிந்தாலும் கூட, ஏனோ வீடு தேடி வந்த தங்களின் பேத்தியை வார்த்தை கொண்டு தாக்க வயதானவர்களின் நெஞ்சம் ஒப்புக்கொள்ளவில்லை.

அவனின் வார்த்தையில் நெஞ்சம் கனக்கக் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள் பாவையவள்.

அவளின் கண்ணீரைக் கண்டு கொள்ளாமல், அவளின் மேல் வெறுப்பைக் கொட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டான் ரத்னவேல்.


மெய் தழுவும் நேசம் தொடரும்...
✍️
 
Last edited:
Top