வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மெய் தழுவிய நேசப்பூவே 2

GG writers

Moderator
பெண்ணவளின் விழிகளில் கண்ணீர் கரை கட்டியிருக்க கௌசல்யாவோ பேத்தியின் கண்களைத் துடைத்து விட்டவர்,

"எதுக்காகடா தங்கம் இப்படிக் கலங்கிப் போய் இருக்க? அவனுக்கு உன் அம்மா மேல கோபம்டா, அதைத் தான் இப்படி காட்டிட்டு போறான். விடுடா மா... போகப் போக எல்லாமே சரி ஆகிடும்டா. சரி. நீ வா, உனக்கு ரூம் ரெடி பண்றேன். நீ குளிச்சிட்டு வா... நாம சேர்ந்து சாப்பிடலாம்." என்று அவளைச் சமாதானம் செய்தவர் அங்கிருந்த ஒரு வேலைக்கார பெண்ணை அழைத்தவர்,

"மஞ்சுளா பாப்பாவுக்கு ரூம் காட்டு. அப்படியே ஹீட்டர் போட்டிருக்கியான்னு செக் பண்ணிட்டு வந்திடு. நீ போடாத் தங்கம்..." என்று பேத்தியை அனுப்பியவர் சிலையாய் அமர்ந்திருந்த சாரதாவின் அருகே வந்து,

"அக்கா எதுக்கு இப்படி இருக்கீங்க? தம்பியோட குணம் தான் உங்களுக்குத் தெரியும் இல்லை, அவனுக்கு நம்ம மலர்னா உயிரா இருந்தான். எப்போ அவ போனாளோ அப்பவே இப்படி இறுக்கமா மாறிட்டான். சீக்கிரம் எல்லாமே மாறும் க்கா..." என்றார் ஆறுதலாய்.

"கௌசி அன்னைக்கு மட்டும் நாங்க அப்படியொரு வார்த்தை கேட்கலைன்னா அவ இங்கேயிருந்து போயிருக்கமாட்டா இல்லை. இவனும் இப்படி இறுக்கமா மாறியிருக்கமாட்டான். அப்போ செஞ்சத் தப்பு இப்போ தாக்குது. அவ இல்லாம இந்த வீடே வீடா இல்லை. இன்னைக்கு அவ பொண்ணு வந்திருக்கா, ஆனா அதைக் கூடச் சந்தோஷமா அவளை நம்மால வரவேற்க முடியலை..." என்ற சாரதாவின் கவலை படிந்த வார்த்தைகளை அப்போது கீழே இறங்கிக் கொண்டிருந்த ரத்னத்தின் காதுகளிலும் விழுந்தது.

ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாய் வந்து டைனிங் டேபிளில் அமர, சாரதா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு வேகமாய் சென்று மகனுக்குப் பரிமாறினார்.

வேண்டா வெறுப்பாய் உணவைக் கொறித்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் கொலுசுச் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தவனின் கண்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.

ஆம், அங்கே தாரணி தான் பாவாடை தாவணியில் வந்துகொண்டிருந்தாள்.

அவன் மட்டும் அதை அதிர்ச்சியாய் பார்க்கவில்லை வீட்டின் பெரியவர்களும் தான் அதை அதிர்ச்சியாய் பார்த்தனர்.

அவள் புடவையோடு வந்தபோது கூட ஏதோ முதல் நாள் என்று நினைத்தனர். ஆனால் அவள் குளித்து விட்டுப் புத்துணர்ச்சியாய் வரும்போது கூடத் தமிழகத்தின் பாரம்பரிய உடையான தாவணி பாவாடையை அணிந்து வந்ததில் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

நம்மூர் பெண்களே இப்போது இந்த உடையைக் கேவலமாய் பார்க்கும்பொழுது பிறந்ததிலிருந்து லண்டனில் அந்த நாட்டு நாகரிகத்துடன் வளர்ந்த பெண் எப்படி இப்படி வந்துள்ளாள் என்று தான் தோன்றியது.

அனைவரும் தன்னையே பார்ப்பதைக் கண்டு மெல்லச் சிரித்தபடி அங்கே வந்தவள்,

"என்னாச்சி, ஏன் எல்லாரும் இப்படி பாக்குறீங்க?" என்றாள் அனைவரையும் பொதுவாய் பார்த்து.

அவளின் கேள்வியில் சுயம் வந்த ரத்னவேல் மட்டும் உணவின் பக்கம் பார்வையை வேகமாய் திருப்பிக் கொண்டான்.

ஆனால் அதுவும் பெண்ணவளின் கூரான விழியிலிருந்து தப்பாமல் போனது.

அவளைப் பார்த்துச் சிரித்தபடி அவளின் அருகே வந்த கௌசல்யாவோ,

"இல்லைடா தங்கம்... உன்னை இப்படிப் பாக்கும்போது எங்க மலரே திரும்பி வந்த மாதிரி இருக்கு. அதுவும் இந்தத் தாவணி பாவாடையோட அப்படியே தேவதை மாதிரி இருக்கக் கண்ணு. எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு." என்று பேசிய படி அவளின் கன்னத்தை வழித்துத் திருஷ்டி கழித்தார் கௌசல்யா.

"நான் நல்லாருக்கேனா பாட்டி..." என்றபடி தன் பாவாடை தாவணியுடன் சுற்றினாள்.

"உனக்கு என்ன ராஜாத்தி நீதான் வானத்துல இருந்து இறங்கி வந்த தேவதை மாதிரி இருக்கியே..." என்றவர் மற்றவர்களையும் திரும்பிப் பார்க்க அவர்களும் அவரின் வார்த்தையில் இருந்த உண்மையில் அனைவரும் சந்தோஷமாய் தாரணியை பார்த்தனர்.

இவர்களின் பேச்சில் கலக்காமல் சாப்பிடுவது மட்டுமே முக்கிய வேலையென ரத்னம் சாப்பிட்டு எழுந்து அவளைக் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.

போகும் அவனைப் பார்த்தவளின் கண்களில் சொல்லொனா வலி தோன்றியது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த கௌசல்யாவோ அவளின் வாடிய முகத்தைக் கண்டு,

"அம்மாடி ராஜாத்தி கலங்காதடி தங்கம். அவன் யாரு உன் மாமன் தானே, சீக்கிரமே உன்னைப் புரிஞ்சிட்டு வந்து பேசுவான்டா. அவனுக்கு உங்க அம்மா மேல கோபம் கூட இல்லைடா தங்கம், அவனை விட்டுப் போன வருத்தம். அதுக்கு தான் கோபம்னு முகமூடி போட்டுட்டு சுத்துறான் உன் மாமன். நீ வாடாத் தங்கம் சாப்பிடுவ... ஆமா உனக்குச் சாப்பிட என்ன என்னடா தங்கம் பிடிக்கும். சொல்லுடா சாமி அத்தனையும் நான் சமைச்சு தரேன்." என்றார் பாசமாய்.

"பாட்டி நீங்க வழக்கமா என்ன சாப்பிடுவீங்களோ அதுவே எனக்கும் போதும். அங்கே அம்மாவும் இதெல்லாம் தான் அதிகமா சாப்பிடுவாங்க. சரி வாங்கப் பாட்டி பசிக்குது. சாப்பிடலாம் தாத்தாஸ் வாங்க." என்று அனைவரையும் அழைத்தபடி அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

அவளை அமர வைத்தவர்கள் அவளுக்கு என்ன பிடிக்கும் எனக் கேட்டுக் கேட்டு அத்தனையும் பரிமாறித் தங்களின் கைகளாலே ஊட்டி விட்டார்கள்.

அவர்களின் பாசத்தில் உள்ளம் நெகிழ்ந்து போனது தாரணிக்கு.

எத்தனை பாசம் கொண்டுள்ளார்கள் தன் தாயின் மீது. இவர்களைத் தன் தாய் பிரிந்தது நிச்சயம் தவறு தான் என்று தோன்றியது.

ஆனால், அதே சமயம் இத்தனை பாசமான குடும்பத்தைத் தன் தாய் வேண்டுமென்றே பிரிந்து சென்றிருக்க மாட்டார். நிச்சயம் அவர் பிரிந்திருக்கிறார் என்றால் அதற்கான வலுவான காரணம் எதுவேனும் இருக்கக்கூடும் என்று அவளின் நியாய மனது நீதி தராசைத் தூக்கியது.


***

அதே நேரம் அந்த மலைப் பிரதேசத்தில் இருந்த அந்தப் பங்களாவில் அரக்கத்தனமாக ஒரு சத்தம் கேட்டது.

உள்ளே ஹாலில் இருந்த சோபாவில் ஆத்திரம் பொங்க அமர்ந்திருந்தான் அவன்.

"எப்படிடா அவ வந்தா? யாருடா அவ? நம்மளோட திட்டத்துக்கு அவ தடையா வந்தா அவளைக் கொன்னுடுங்க. கொஞ்சமும் வெச்சி பாக்க வேண்டாம். அவளுக்காக நாம பின் வாங்க முடியாது." என்று காட்டு கத்தலாய் கத்தினான்.

அதே நேரத்தில் மாடர்ன் உடையில் நளினமாய் ஹீல்ஸ் சப்பல் அணிந்து உள்ளே வந்தாள் அவள்.

இருக்கும் அத்தனை ஒப்பனை வகைகளையும் தன் முகத்தில் அள்ளிப் பூசியிருப்பாள் போல் அத்தனை ஒப்பனை கொண்டு செயற்கை முகம். அதில் பூசப்பட்டிருந்த செயற்கை புன்னகை. அவளின் கண்ணைப் பார்ப்பவர் நிச்சயம் அவளின் காலில் விழுந்துவிடுவார்கள். அத்தனை பொய்மை பூசப்பட்ட முகம்.

"ஹாய் டார்லிங்... எதுக்கு இப்போ இத்தனை கோபம்? அவ என்ன அவ்வளவு பெரிய ஆளா? எங்கிருந்து டார்லிங் அவ வந்தா? நானும் அந்த ரத்னத்தை வளைக்க எத்தனையோ முறை டிரை பண்ணிட்டேன். ஆனா எதுக்கும் அசைஞ்சு கொடுக்கமாட்டேங்கிறான்" என்றாள் அவனின் மடியில் அமர்ந்து கொஞ்சியபடி.

தன் மடியில் அமர்ந்தவளை அலட்சியமாய் பார்த்தவன், "நீ என்ன நினைச்ச தாரா, அவனை அவ்வளவு சுலபமா வளைச்சிடலாம்னு நினைச்சியா? அவன் நாணல் இல்லை தாரா, சிங்கம்! யாருக்கும் அவ்வளவு சுலபமா சிக்கமாட்டான்" என்றான் தன் எதிரியைக் கணித்தபடி.

"டார்லிங், நீ என்ன அவனைப் புகழற... அவன் உன்னோட எதிரி. அதை முதல்ல நினைவு வச்சிக்கோ." என்றாள் ஆத்திரமாய்.

"கமான் டார்லிங், எதிரியோட பலமும் தெரிஞ்சிக்கணும் தாரா. அவனோட பலமே அவன் சொல்லமாட்டான், செஞ்சு காட்டுவான். இத்தனை நாள் தொழில் உலகத்துல அவனைப் பார்த்ததுல தெரிஞ்ச உண்மை இது. உண்மை கசப்பா இருந்தாலும் சில நேரம் நாம ஏத்துக்கத்தான் வேணும்." என்றான் அவன் எங்கோ பார்த்தபடி.

"ஓ... கமான் ஹர்ஷா, நீ அவனைப் பத்தி அளவுக்கு அதிகமா பில்டப் பண்றேன்னு நினைக்கிறேன்." என்றாள் தாரா.

அவளைப் பார்த்து எள்ளலாய் சிரித்தவன், "உனக்கு அவனோட பலம் தெரியலை. நான் சொல்றேன் அதை நீ அவன்கிட்ட செஞ்சு பாரு. அவனோட பலத்தை நீ தெரிஞ்சுப்ப..." என்றவன் அவள் காதுகளில் எதையோ கூற, அதைக் கேட்டவளின் முகத்தில் யோசனை வந்தது.

மறுநாள் அதைச் செயல்படுத்திப் பார்க்க, அவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்து போய்க் காணப்பட்டது.


***


லண்டனில் அந்தப் பரந்து கிடந்த தோட்டத்தின் நடுவே இருந்த பங்களாவின் ஹாலில் வேலையாட்கள் குழுமியிருக்க அங்கே வந்த ஒருவன்,

"உங்க எல்லாருக்கும் இனிமே இந்தப் பேலஸில் வேலை இல்லை. உங்களோட செட்டில்மெண்ட் பிராசசிங் எல்லாத்தையும் முடிச்சிட்டு நீங்க இன்னைக்கே இங்கேயிருந்து கிளம்பலாம். இது பாஸோட உத்தரவு." என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அங்கே இருந்த லிப்ட் கதவு திறக்கப்பட முப்பது வயதுக்குள்ளான ஒரு வெள்ளைக்கார இளைஞன் அங்கே வந்தான்.

அதுவரை அங்கே பேசிக் கொண்டிருந்த ஒருவன்,

"வெல்கம் மிஸ்டர் ஹாட்ரிக்... நீங்கச் சொன்னதை அப்படியே இவங்ககிட்ட சொல்லிட்டேன் மிஸ்டர் ஹாட்ரிக்." என்றான் இயல்பாய்.

"ஓகே கெலன். இவங்களை அனுப்பி வச்சிட்டு நான் கேட்ட டீடெயில் என்னாச்சின்னு எனக்கு அப்டேட் பண்ணுங்க." என்று சொல்லியவன் அங்கிருந்து ஓர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

அந்தக் கெலன் என்பவனோ அங்கிருந்த ஆட்களை அனுப்பிவிட்டு ஹாட்ரிக் நுழைந்த அறைக்குள் நுழைந்தான்.

அவனை எதிர்பார்த்திருந்தவன் போல அங்கிருந்த ஆபிஸ் டேபிளில் அமர்ந்து கெலனின் முகத்தைப் பார்த்தான்.

"மிஸ்டர் ஹாட்ரிக், மேடம் இப்போ இங்கே இல்லை. அவங்க பேமிலி மட்டும் தான் இங்கே இருக்கு. அவங்க எங்க போனாங்கன்னு யாருக்கும் சரியா தெரியலை. ஆனா சீக்கிரமே கண்டுபிடிச்சி அவங்களை உங்ககிட்ட கொண்டு வந்து ஒப்படைக்கிறது என்னோட பொறுப்பு." என்றான் கெலன்.

அதைக் கேட்ட ஹாட்ரிக்கும் சரி என்று தலையசைத்து அவனை அனுப்பி வைத்தவன், தன் மடிக்கணினியை ஓபன் செய்து அதிலிருந்த புகைப்படத்தைப் பார்த்துப் புன்னகை செய்தவன்,

"ஹாய் பேபி, நீ எங்கே போன? உனக்காக நான் இங்கே காத்திருக்கிறது உனக்குத் தெரிஞ்சும் ஏன் பேபி என்னை விட்டுப் போன? என்னை விட்டுப் போனதுக்கான தண்டனை உனக்கு உண்டு பேபி..." என்று விகாரமாய் சிரித்தான்.

அந்த மடிக்கணினியின் புகைப்படத்தில் சிவப்பு வண்ணப் பட்டுப் புடவையில் தேவதையைப் போல் சிரித்தபடி நின்றிருந்தாள் தாருனிகா.

ஹாட்ரிக் யார்? அவனுக்கும் தாருனிகாவுக்கும் என்ன சம்பந்தம்? அடுத்தடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.

மெய் தழுவும் நேசம் தொடரும்…
✍️





 
Last edited:
Top