வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மௌனங்கள் பேசும்! - 03

GG writers

Moderator
மௌனங்கள் பேசும்!

மௌனம் 03

மனமெங்கும் பெரும் கனம்.அழுந்தி அடைத்து திணற வைத்திடும் பாரத்தை போக்கும் வழி தெரியாது நடந்து வந்தவளுக்கு,தன் வாழ்க்கை பாதையும் போக்கற்றது,போலவே தோன்றிற்று.

அதை நினைக்கையில் விழிகளில் கட்டிய நீருடன் இதழ்களின் ஓரத்தில் விரக்திச் சிரிப்பு உண்டாகிட,ஆழமாய் மூச்சிழுத்துக் கொண்டாள்.

பேரூந்து நிறுத்தத்தில் இருந்து வீடு வரை தனியாக நடந்து வந்தவளுக்கு,இப்போதெல்லாம் இந்த தனிமை வெகுவாய் பழக்கப்பட்டு இருந்தது.

இதற்கு முன்னும் இதை அனுபவித்து இருந்தாலும்,இடையில் தவறிப் போன தனிமை இழுத்தெடுத்து மடியில் வைத்து தாலாட்ட,ஏற்காமல் முடியாமல் தவித்துப் போனவளுக்கு,அடுத்து என்னவென்று புரியவேயில்லை.

வீட்டுக்கு முன்னிருக்கும் முச்சந்தி வரை விழிகளில் கோர்த்திருந்த நீருடன் வந்தவளோ,வீட்டை நெருங்கியதும் விழிகளை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.அவளால் யாரிடமும் மனம் விட்டு தன் பிரச்சினையைக் கூறிடவும் முடியாது.அந்த நிர்ப்பந்தம் அவளுக்கு.

எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு,தன்னை மெதுவாய் சமன் செய்து கொண்டு பாதங்களை எட்டு வைத்தாலும்,அவள் மனதில் சில பிம்பங்கள்.

சில வாரங்கள் கடந்திருந்தன.


"சத்தம் போடாத அபி.." ஏதோ அழுத்ததில் இருந்தவன் திடீரென கத்தி விட,அதட்டலாய் வந்து விழுந்த வார்த்தைகளில்,மிரண்டு போய் விழித்தாள்,அபிராமி.

பார்வதியுமே,பையனவனின் கத்தலில் தன்னை மறந்து ஸ்தம்பித்து போய் இருக்க,இருவரையும் முறைப்புடன் தீண்டி விட்டு அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.

திருமணக் களை முகத்தில் கொஞ்சமும் இல்லாது,கடுகடுவென இருந்தவனை பார்த்து,ஆயாசப் பெருமூச்சு விட மட்டுமே முடிந்தது,மற்றையவர்களால்.

கதவை அறைந்து சாற்றிய வேகமே,அவனின் கோபத்தை பட்டவர்த்தனமாய் எடுத்துக் காட்டிட,தொங்கிப் போன முகத்துடன் அன்னையைப் பார்த்தாள்,அபிராமி.

"எதுக்கும்மா அண்ணன் இப்டி கடுகடுன்னு இருக்கு..?இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் வேற"ஆதங்கமாய் கேட்டவளுக்கு தெரியுமே,அண்ணனின் குணமே இது தான் என்பது.

பிடிவாதமும் அதிகம்.அதை மிஞ்சும் அளவு கோபமும் உண்டு.விவரம் தெரிந்த நாட்களில் இருந்து அது தெரிந்தாலும்,அவனின் பாசத்தை உணர்ந்தே இருந்தாலும்,சில சமயங்களில் ஆற்றாமை எழுவதை அவளால் தடுக்க முடிவதில்லை.

"உங்க அண்ணன பத்தி தான் உனக்கு தெரியும்ல..அப்றம் எதுக்கு யோசிச்சி கிட்டு இருக்க..வேலயா இருக்குறப்போ டிஸ்டர்ப் பண்ணி இருப்ப நீ..நல்ல வேள சொந்தக்காரங்க யாரும் இருக்குறப்போ கத்தல"என்றவருக்கு,இப்பொழுத்தெல்லாம் மகனிடம் முன்பிருந்த அழுத்தமும் பிடிவாதமும் இல்லை என்பதே பெருத்த நிம்மதியை கொண்டு சேர்ப்பித்திருந்தது.

"முன்னவெல்லாம் எப்பவும் இப்டி தான இருப்பான்..இப்போ எப்பவாச்சும் அப்டி நடந்துக்குறான்..விடுடிதங்கமே.."சர்வ சாதாரணமாய் சொல்லி விட்டு,அவர் நகர்ந்திட,தீயென முறைத்தாள்,அவரை.

அந்த முறைப்புக்கு இடம் தராது,தடதடவென படிகளில் இறங்கும் சத்தம் கேட்டிட,நிமிர்ந்து பார்த்தவளுக்கு வெளியே செல்லும் விதமாய் கிளம்பி வந்த,அக்காளை கண்டதும் இன்னும் சினம் பீறிட்டது.

"கல்யாண வீட்டுக்கு வந்துட்டு எங்க நீ போற..? இப்பவாச்சும் உன் ப்ரெண்ட பாக்காம இருக்க முடியாதா..?அத்த வீட்டுக்கு போகாம இங்க இருந்தா தான் என்ன..?" கடுப்பை அடக்கிக் கொண்டு வினவிட,சிறு புன்னகையை பதிலாகத் தந்தாள்,வைஷ்ணவி.அபிராமியின் அக்கா.

பார்வதியின் மனதிலும் அதே எண்ணம் தான்.அண்ணனின் திருமணத்துக்கென வந்தவள்,வீட்டில் இருக்காது வெளியே கிளம்பிச் செல்வது கோபத்தைத் தான் தந்தது.

"அத்த வீட்டுக்கு தான..பொய்ட்டு கொஞ்ச நேரத்துல வந்துர்ரேன் டி.."

"ம்ம்கும்..நம்பிட்டேன்.." நொடித்துக் கொண்டே,தங்கையவள் முறைத்திட,அசடு வழிய சிரித்தாள்,அவள்.

"நா பொய்ட்டு வர்ரேன்.." தாயின் பார்வை,தன்னை அனலுடன் தீண்டுவது தெரிந்தும்,கண்டு கொள்ளாதது போல் கடந்து விட்டவளுக்கு,வெளியில் வந்ததும் தான் நிம்மதிப் பெருமூச்சு.

●●●●●●●●

வீசிச்செல்லும் காற்றுக்கேற்ப,அசைந்தாடிக் கொண்டிருந்தன கிளைகள்.

அசைந்தாடும் கிளைகளை இரசிக்கும் மனங்களுக்கு,ஒரு போதும் வேர்களின் வேதனை புரிவதில்லை.

வேர்களின் பிடிப்பு இல்லாவிடின்,இந்த கிளைகளால் ஒரு நிமிடம் கூட ஜீவித்து நிற்க முடியாது,என்பதை மனங்கள் உணர்வதில்லை.

செடி பிடிக்குமா..?
பூ பிடிக்குமா..?
என்று கேட்டால்,வேர் தான் பிடிக்கும் என்பாள்.

மண்ணில் மறைந்திருந்து,எல்லா வேதனைகளையும் தனக்குள் புதைத்துக் கொண்டு,கிளைகளையும் தாங்கிப் பிடிக்கும் வேரே அவளுக்கு பிடித்ததாய் தோன்றிடும்.

சிறு புன்னகையுடன் யோசனையில் இருந்தவளை கலைத்தது,தோழியின் சத்தம்.

அத்தையின் மகளாய் விட,தோழியாகத் தான் அவளுடன் நெருக்கம் அதிகம்.அவளுக்கு உறவென்பதை விட,எப்போதும் அவள் நல்ல தோழியே.

வைஷ்ணவியின் வரவில் மகிழ்ச்சி சூழ்ந்தாலும்,அத்துடன் தாமதியாமல் கடுப்பும் வந்து ஒட்டிக் கொண்டது.

"என்னடி அண்ணனுக்கு கல்யாணத்த வச்சிட்டு இப்போ இங்க வந்திருக்க..?"

"வந்தவள வான்னு கூப்டாம பேசற பேச்ச பாரு..சரியான லூஸு.." கடிந்து கொண்டே,மொட்டை மாடியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள வாஞ்சையாய் வருடிய பார்வை,தோழிக்குத் தெரியாமல் மறைந்தும் போனது.

"திட்டாம என்னடி பண்ணுவாங்க..? அண்ணனுக்கு ஒரு வாரத்துல கல்யாணம்..அதுக்கு வந்துட்டு இங்க வந்துட்டு டேரா போட்டுட்டு இருக்க..பொண்ணு வீட்டு சொந்தமா மாப்ள வீட்டு சொந்தமான்னு திண்டாடிப் போய் சித்தி இருக்க சொல்றதுக்காக இங்க இருக்கோம்..சரியாப் பாத்தா உங்க வீட்டுக்கு வர்லன்னு எங்கம்மா வேற பொலம்பிகிட்டு இருக்காங்க..இதுல நீயும் இப்டி இங்க வந்தா அவங்க திட்டுவாங்கடி..நா தான் உன்ன வர சொல்றேன்னு.."

"அட நீ வேற..? எங்கண்ணன் வேற மாப்ளயா அதுன்னு டவுட் வர்ர அளவுல சிடுசிடுன்னு இருக்கு..நீ வேற வாயக் கெளப்பாத..சரி நாங்க எல்லாம் நாலு நாளக்கி முன்னாடி தான் உங்க சொந்த ஊருக்கு போறோம்..நீங்க எப்போ போறீங்க..?"

"நாளக்கி சாயந்தரம் போலாம்னு இருக்கோம்.."

"எதுக்குடி உங்க சித்திக்கு அவங்க பொண்ணுக்கு குலதெய்வம் கோயில்ல தான் கல்யாணம் பண்ணனும்னு ஆச.."

"அது அவங்க கிட்ட தான் கேக்கனும்.."என்று தெரியாத பாவத்தில் கூறினாள்,அவள்.

"ஆமா ரகுக்கு என்ன பதில் சொல்லலாம்னு இருக்க..?" சட்டென்று தோழி கேட்டு விட,பதில் சொல்லத் தெரியாமல் ஒரு கணம் தடுமாறி நின்றாள்,பெண்ணவள்.

"என்னடி யோசிச்சி கிட்டு இருக்க..? உங்கிட்ட வந்து ரகு பேசி இருப்பான்ல..என்ன முடிவெடுத்து இருக்க..? என்ன பதில் சொல்லப் போற..?"

"நோ தான்.."உரைத்தவளின் குரலில் அப்படியொரு உறுதி.கொஞ்சமும் வருத்தத்தின் சாயல் இல்லை.அசைக்க முடியாத அழுத்தம் தெரிந்தது,விழிகளில்.

"ஏன்டி..?" ஆதங்கமாய் கேட்டாள்,தோழியவள்.

"தெரில டி..அப்டி கல்யாணம் பண்ணிக்கற அளவு யார் மேலயும் எனக்கு விருப்பம் வர்ல..வீட்ல பொண்ணு பாத்துட்டு போறவனுங்க எல்லாம் அது இதுன்னு கொற சொல்றப்போ மனசு வெறுத்துப் போச்சு.." என்கவும் தோழியின் விழிகளில் சந்தேகம்.

"இப்போ ரகு சொல்றப்போ எனக்கு சத்தியமா விருப்பம் வர்ல..அவரு மேல மரியாத இருக்கு தான்..அதுக்குன்னு விருப்பம்லாம் இல்லடி..அதுவும் இல்லாம நல்ல மனுஷன்..நல்ல பொண்ண கல்யாணம் பண்ணி கிட்டு நல்லா இருக்கட்டும்.."

"அப்போ நீ என்ன கெட்ட பொண்ணாடி பைத்தியம்..? ரொம்ப பிடிவாதமா இருக்கடி..ரகு ரொம்ப நல்ல பையன்..உன்னோட பிடிவாதத்தால அவன நீ மிஸ் பண்ணப் போற."

"நா மிஸ் பண்ற அளவு யாரும் என்னோட வாழ்க்கைல இல்ல வைஷ்ணவி..இப்போவும் எப்போவும் அப்டி தான்.."கூறியவளின் வார்த்தைகளில் துளியும் உண்மையில்லை.அவளைத் தொலைத்திட்ட பின் மீண்டும் கடந்த காலத்தை பற்றி யோசிக்கவும் விரும்பவில்லை,அவள்.

பெண்ணவளின் வார்த்தைகள் தோழியை ஆழம் பார்த்திட,அதற்கு மேல் அவள் எதுவும் பேசிடவில்லை.

"என்ன வேணா பண்ணிக்கோ.." என்றவள் கிளம்பிட,எத்தனை முயன்றும் தடுக்க முடியவில்லை,பெண்ணவளால்.

அவள் சென்றதும்,அப்படியே மடங்கி தரையில் அமர்ந்து விட்டவளின்,விழிகளோ அண்ணாந்து வானத்தை வெறித்தது.

வெகு பிரயத்தனப்பட்டும் அடக்க முடியாது போய் விட,விழிகளில் மெல்லிய ஈரம் கசிந்தது.

அழவில்லை.அழ விரும்பவுமில்லை.ஆனால்,விழிகளின் ஈரத்தை தடுக்கவும் முடியவில்லை.அழுகையை அடக்க முயன்றவளின்,தொண்டைக்குழி ஏறி இறங்கிட,அதன் விளைவாய் ஆழமாய் மூச்சு வாங்கிற்று.

ஓரிரு முறை விழி சிமிட்டி கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.அவளின் பேச்சுக்கு அடி பணிந்து,அதுவும் கன்னம் தொடாதிருக்க,நிம்மதியுடன் சிறு ஆசுவாசம்.

இதாவது,தன் விருப்பப்படி நடக்கிறது,என்று நினைத்து விட்டாள்,போலும்.அவளறியாமல்,அவளிடம் இருந்து பெருமூச்சுக்கள் வெளிப்பட,நிலை கொள்ள முடியாமல் தவித்துப் போனது,மனம்.

சில நாழிகைகள் கழிய,ஆற்றுப் படுத்திக் கொண்டு,கீழிறங்கிச் செல்ல,அவள் மீது யோசனையுடன் படிந்தது,அவளின் தாயாரின் பார்வை.

இப்படியே,ஒரு நாள் கடந்திருந்தது.

மறுநாள்,அனைவரும் திருமணத்துக்காக அவர்களின் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்க,பெண்ணவளின் முகத்தில் மட்டும் உயிர்ப்பே இல்லை.

தோழியுடனான உரையாடல் நினைவில் எழுந்து,மனதை ரணப்படுத்திற்று.

விழிகள் ஜீவனைத் தொலைத்து விட்டிருக்க,மனதில் பல்வேறு அலைக்கழிப்புக்கள் தோன்றி மறைந்தன.

நினைவுகள் மனதை அழுத்திக் கொண்டிருக்க,அவளின் முக மாற்றத்தை கண்டு கொள்ளவில்லை,யாரும்.திருமண பரபரப்பில் அதற்கான நேரமும் இருக்கவில்லை,என்பதே உண்மை.

யாருக்கும் காத்திராமல் நேரம் கடந்திட,கிளம்பி வண்டியில் ஏறிக் கொண்டனர்,அனைவரும்.

திவ்யாவுடன் பெண்ணவளை வரச் சொல்லிட,பின்னிருக்கையின் யன்னலோரத்தில் அமர்ந்து வந்தவளின் பார்வை,தற்செயலாய் திவ்யாவின் மீது படிந்தது.

அவள் முகம் பல்வேறு குழப்பங்களை பிரதிபலித்திட,அது புரிந்தாலும் அதைப் பற்றி கேட்கும் மனநிலையில் இருக்கவில்லை,பெண்ணவள்.

விழி மூடி சாய்ந்து கொண்டவளின் வதனத்தை மென்காற்று தழுவ,அது அவளில் இதத்தை கொண்டு சேர்ப்பிக்க,இதழ்களில் மெல்லிய புன்னகை.

அந்த புன்னகையுடன் விழிகளுக்குள் வந்து சேர்ந்து கொண்டது,அவனினுருவம்.அவளின் அவனின் உருவம்.

கேளாமலே,அவளின் புன்னகை மேலும் விரிய,அவன் நினைவுகள் வந்து மனதை நிரப்பி,நிகழை மறக்கடித்தது.

அவன்..
அவளின் அவன்..
அது அவள் மட்டுமே,அறிந்த இரகசியம்.அடி மனதில் ஆழ் மனக் கிடங்கில் பதுக்கி வைத்திருக்கும் ஒற்றை இரசகியம்.அவள் உயிருக்குள் உறைந்து இருக்கும் அழகிய மௌனம்.

முற்றுப் புள்ளி வைக்கப்பட காதல் அத்தியாயமே,அவளது.
இல்லை,இல்லை..அவர்களது.அவளோடு சேர்த்து அவனும் தான்,காதலித்தான்.

ஆயினும்..?
அதற்கு மேல் சிந்திக்கும் திராணி இல்லை,அவளிடம்.நினைவுகள் நெஞ்சை அடைத்தாலும்,அதில் அவளின் அவன் இருப்பதால்,மனதோரம் சிறு இதம் இடம் கேட்டு ஆட் கொண்டது.

நினைவுகள் மட்டும் மீள மீள பின் தொடர்ந்து,அவளை வலிக்கச் செய்திட்டாலும்,அவ்விதம் அவளை கொஞ்சம் ஆற்றுப் படுத்தியது.

நினைவு முழுவதும் அவளின் அவன்!நிகழில் தன்னை தொலைத்து அவனின் அவள்!

மௌனம் பேசும்!

2025.03.25
 
Last edited:
Top