வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மௌனங்கள் பேசும்! - 06

GG writers

Moderator
மௌனங்கள் பேசும்!

மௌனம் 06

தமக்கேற்றவாறு அவ்வீட்டை ஒழுங்கு படுத்தி விட்டு நிமிர்கையில் அஷ்வினுக்கு போதுமென்று ஆகி விட்டது.

"எங்கடா அவன்..?"

"தமிழ் என்ன பண்ணும்னு நெனக்கிற..கிச்சன்ல க்ளீனா அரேஞ்ச் பண்ணிட்டு இருப்பான்.." கலாய்க்கும் தொனியில் தான் உரைத்தான்,விக்னேஷ்.

கல்லூரிக்காலத்தில் இருந்து மூவரும் நண்பர்கள்.விடுதியில் கூட,ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டவர்கள்.ஆதலால்,மூவருக்கும் இடையில் நல்ல நட்பு.

சிறப்பான பட்டத்துடன் கல்லூரிப் படிப்பை முடித்து விட,அவர்களின் எண்ணம் போல் மூவருக்கும் ஒரே கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை கிடைத்திட,அது இன்னுமே வசதியாகிப் போனது,மூவருக்கும்.

நெருங்கிய நட்பானது,தோழர்களுக்குள் ஆழமான புரிந்துணர்வை விதைத்திருக்க,அது தான் தோழனின் நடத்தையை ஊகித்தவாறு உரைத்தான்,விக்னேஷ்.

சமயலறையை சரியாக ஒழுங்கு படுத்தி விட்டு,"வெளிய பொய்ட்டு வர்ரேன்.." அறிவிப்பாய் உரைத்து விட்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டு வெளியே சென்றான்,தமிழவன்.

"இந்த நேரத்துல எங்கடா போறான்..?"

"இந்த ஊர்ல பால் சப்ளை பண்ற ஆள பாத்து தண்ணி கலக்காம பால தர சொல்லி சொல்லிட்டு வர்ர போறான்னு தோணுது விக்கி..ஆனாலும் தாங்க முடில இவனோட அலம்பல"

"ஆமால..இத எப்டி மறந்தேன்..அவன் காஃபிக்கி எல்லாத்தயும் சரியா பாத்து செஞ்சி இருப்பானே.." என்று அலுத்துக் கொண்டாலும் தோழனின் நடவடிக்கையில் ஆயாசப் பெருமூச்சு எழாமல் இல்லை,மற்றைய இருவருக்கும்.

அப்படியே,சில நாட்கள் ஓடியிருந்தன.

அன்று ஞாயிற்றுக் கிழமை.கல்லூரியும் விடுமுறை,மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையும் இல்லாதிருக்கவே,விழிப்புத் தட்ட தாமதமாகி இருந்தது,பெண்ணவளுக்கு.

எட்டரை மணி போல் அவள் எழுந்து கொள்ள,இன்னும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்,கீர்த்தி.

சத்தம் செய்யாது அறையை ஒட்டியிருக்கும் குளியலறைக்குள் நுழைந்து,உடைகளை கழுவி குளித்துக் கொண்டு வந்தவளோ,கீர்த்தியை தட்டி எழுப்பி விட்டு இருவருக்கும் டீ போடத் தயாரானாள்.

"கீழ பால் பாக்கெட்ட போட்டு இருப்பாரு..நா போய் எடுத்துட்டு வர்ரேன்..தண்ணிய கொதிக்க வை.." என்கின்ற கட்டளையுடன் வெளியே வந்து சாந்தவியின் வீட்டு நுழைவாயிலை அடைந்திட,அதில் தொங்கிக் கொண்டிருந்தது,பால் பாக்கெட்.

அதை எடுக்கப் போகும் போது தான் கவனித்தாள்,எதிர்வீட்டு மதிலில் மீது கண்ணாடி போத்தலொன்று விழும் வாக்கில் இருப்பதை.

"விழுந்துரும் போல.." கையில் இருந்த பையுடன் நெருங்கி அதை சரிய்க்க முயல்கையில் அவளின் நேரம் போலும்,அவளின் கை தவறி கீழே விழுந்து உடைந்து போனது,அது.

கண்ணாடிப் போத்தல் சிதறிக் கிடக்க,அவளின் ஆடை முழுவதும் அதில் இருந்த பாலபிஷேகம்.பதட்டத்தில் குளித்து அவள் நிமிர,விழிகள் அதிர்வில் தெறித்து விரிந்தன.

உஷ்ணப்பார்வையுடன் அவள் முன்னே நின்றிருந்தவனின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.இதழ்களும் ஏதோ அசைந்து அவளுக்கு திட்டின போலும்.

நேற்றிரவு சயனிக்க தாமதமாகி இருக்க,காலையில் விழிப்புத் தட்டும் போது மணி தாண்டியிருந்தது.எழுந்தவுடன் தலைவலி,தமிழவனுக்கு.

காஃபி கலக்கிக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன் வெளியே வந்தவனுக்கு நடப்பதற்கும் தெம்பில்லாதது போல்.விண் விண்ணென்று தலை தெறித்து விடும் அளவுக்கு வலி.

நெற்றியை அழுந்தத் தேய்த்துக் கொண்டு வந்தவனின் விழிகளில் முதலில் விழுந்தது என்னவோ,அவளின் கையில் இருந்து போத்தல் கீழே விழுந்து பால் சிதறித் தெறிக்கும் காட்சி தான்.

உச்சபட்ச கோபம்.காஃபி கப்பை தட்டி விட்டதற்கு,முகத்தில் குத்து விட்ட சரித்திரங்கள் எல்லாம் அவன் கல்லூரிக்காலம் சுமந்து நின்றிருக்கிறது.

"இடியட் அறிவில்ல..கண்ண எங்க வச்சிகிட்டு அத எடுத்த..? இடியட்ட..எப்ப பாரு இரிட்டேட் பண்ணிகிட்டு..யாரு வந்து உனக்கு எடுக்க சொன்னா..?" காரசாரமான வார்த்தைகளில் திகைத்து விழித்தாள்,அவள்.

அவன் வார்த்தைகளும் விழிகளும் போட்டி போட்டுக் கொண்டு வீசிய அனலில் மிரண்டு போய் பார்த்தவளைக் காணக் காண,இன்னும் கோபம்,அவனுக்குள்!

ஹேசல் விழிகள் அள்ளித் தெளித்த செந்தணலில் பயந்தவளோ, முயன்று வரவழைத்துக் கொண்ட குரலில்,"சாரி" என்றிட,அவனுக்கு இன்னும் எகிறிற்று.

"சாரி சொன்னா சரியாய்டுமா..? நீயா வந்து இப்போ காஃபி போடுவ..?இடியட்ட்ட்ட்ட்.." அவன் சீற,தவறு தன் பக்கம் என்பதால் அடங்கிப் போனவளுக்கு அவனின் அதிரடியில் பயமும் வந்தது.

"சாரி சாரி தெரியாம..இத நீங்க வச்சிக்கோங்க.." தன் கையில் இருந்ததை அவனிடம் நீட்ட,உறுத்து விழித்தவனோ,அதை அவளிடம் இருந்து பறித்து வீசியெறிந்திட,அவனின் நடத்தையில் அதிர்ந்தவளின் விழிகளில் நீர் கோர்த்தது.

●●●●●●●●●

"காலைல காஃபி குடிக்காம இருக்கான்..மான்ஸ்டர் மூட்..தயவு செஞ்சு வாயக் கொடுத்து மாட்டிக்காத.."விக்னேஷோ தோழனிடம் பேச முயன்ற அஷ்வினை அடக்கிட,அவனோ முறைத்துத் தள்ளினான்,தோழனை.

தமிழவனின் அதிரடியையும் காரசாரமான பேச்சுக்களையும் வெளியில் வரும் போது, கவனித்தவனுக்கு,அவன் நடத்தை உவப்பாய்த் தோன்றிடவில்லை.அதுவும் தவறுதலாக நடந்திருக்கும் பட்சத்தில் அத்தனை தூரம் காய்ந்து விழுந்ததும் சரியெனத் தோன்றவில்லை.

"என்னா திட்டு திட்டுனான்னு தெரியுமாடா அந்த பொண்ணுக்கு..அழுதுருச்சு இவனோட திட்டுல.." கடுப்படித்தவனுக்கு சத்தியமாய் கோபமே,தோழனின் மீது.

கோபமென்றாலே,நிதானத்தை இழுத்து வைத்துக் கொள்பவன் அவளிடத்தில் நிதானம் தப்பி வார்த்தைகளை விட்டிருக்கக் கூடாது என்கின்ற எண்ணம்.

விக்னேஷ் பதில் சொல்வதற்குள்,கதவு தட்டப்பட,கையில் பால் போத்தலுடன் வந்திருந்தார்,பால் வியாபாரி.

அவரிடம் இருந்து வாங்கிக் கொண்டு சமயலறையை நோக்கி நடந்திட,அடுத்து சில நிமிடங்களில் காஃபி மணம் பரவி வந்து நாசியைத் துளைத்தது.

நுரை பொங்கும் காஃபியின் அசத்தலான வாசத்தை வழமை போல் சுவாசக்குழலில் நிரப்பி விட்டு,சுவைக்கத் துவங்கியவனின் நாவிரல்கள் காபி கப்பின் மீது தாளமிட,பெருவிரல் மேல் விளிம்பை அழுத்தமாய் உரசி அழுத்தியது.

சின்னச் சின்ன மிடறுகளாய் காஃபியது அவனின் தொண்டையை நனைத்திட,அவனின் தலைவலி காணமல் போன இடம் தெரியவில்லை.மொத்தமாய் காஃபியை அருந்தி விட்டு,கப்பையும் அலம்பி கழுவி வைத்து விட்டு முன் கூடத்துக்கு வர,அதற்கெனவே காத்திருந்தான்,அஷ்வின்.

"நீ பண்றது உனக்கே சரின்னு தோணுதாடா..?"என்று எகிறவும் அவன் கோபம் எதற்கென்று புரிந்தவனின் விழிகளில் அமர்த்தலான பாவம்.

"என்ன பண்ணுனேன்..?" அலட்டிக் கொள்ளாமல் கேட்டிட,அஷ்வினுக்கு பொத்துக் கொண்டு வந்து கோபம்.

"நீ பண்ணது சரியான்னு சொல்லு.."

"தப்பு அந்த பொண்ணு மேல தான்..அந்தப் பொண்ணு தான வந்து பாட்டில ஒடச்சா..அதுக்கு கோவம் வந்துருச்சு..அதான் இப்டி பண்ணேன்.."

"பொய் சொல்லாதடா..? பூஜாவோட ஃப்ரெண்டுன்னு தான இப்டி நடந்துக்குற..? இல்லன்னா இப்டி திட்டியெல்லாம் இருக்க மாட்டியே..?"

பதிலில்லை,தமிழவனிடம் இருந்து.தோள் குலுக்கலுடன் அலட்சியம் காட்டிட,நொந்து போனான்,அஷ்வின்.

"வேணும்னே பண்ற..பாவம் டா அந்தப் பொண்ணு.."

"தென் இப்போ என்ன பண்ண..?" கொஞ்சமும் பணிந்து வராது,என்கவும் வெறியாகிற்று,அவனுக்கு.

பெண்கள் மீது அவனுக்கு அந்தளவு நல்லபிப்பாரயம் இல்லை என்று தெரிந்தும் அவனிடம் எடுத்துரைத்திடப் போன தன் மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்திட,வெற்றுப் பாவம் மின்னியது,தமிழவனின் விழிகள்.

ஆம்.
அவனுக்கென்னவோ மகளிர் மீது நல்லபிப்ராயம் இல்லை,தான்.அஷ்வினை என்று குற்றுயிராக கண்டானோ அன்றே நம்பிக்கையெல்லாம் சிதைந்து போயிருந்தது.

அது அஷ்வினுக்கும் தெரியும்.பலமுறை தோழனிடம் உரைத்ததாயிற்று,அவனின் எண்ணப் போக்கை மாற்றிக் கொள்ளும் படி.கேட்டு விட்டு ஓயும் ரகமாயிற்றே அவனும்..?

இங்கோ,

கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டு அறைக்குள் வரும் போதே,அவளைக் கவனித்து விட்டிருந்தாள்,கீர்த்தி.

அவனிடம் திட்டி வாங்குவதைக் கண்டு அதை தடுக்க அவள் முன்பே,பெண்ணவள் மீள திரும்பி நடந்திருக்க,அப்போதே புரிந்தது,என்ன நடந்திருக்கும் என்று.

அவளுக்கு அவனின் கோபத்தைப் பற்றித் தெரியும்.கடுகடுவென்று இருப்பவன் என்றாலும்,தன்னுடன் எரிந்து விழுவதன் காரணமும் அவனுக்குத் தெரியும்.

அவளைப் பற்றி அவனின் எண்ணப்போக்கை அறியாதவளுக்கு,அது நிச்சயம் சரியானதாக இருக்காது மட்டும் என்பது உறுதி.

பூஜாவை நினைக்கையில் பற்றிக் கொண்டு வந்தது,இப்போதும்.இவன் மனதில் தவறான பிம்பம் உருப்பெற காரணம் அவள் என்று நினைக்கையில் அப்படியொரு எரிச்சல்.

"நா ஒன்னு கேட்டா பதில் சொல்லுவியா..?"

"என்ன கீர்த்தி..?" முயன்று தன்னை ஈடு செய்து கொண்டு வினவினாள்,பெண்ணவள்.

"எதிர்த்த வீட்டு ஆளு..அதான் அந்த தமிழ்..அவர பாக்கும் போது எனக்கே நார்மலா தோணல..எப்ப பாரு உன்ன மொறச்சி கிட்டே இருக்காரு.."

"......................"

"நா கூட,அவரோட சிடுசிடு கேரக்டரால தான் அப்டி இருக்காருன்னு நெனச்சேன்..ஆனா இன்னிக்கி இவ்ளோ திட்டுனாரு..நார்மலா தவறுதலா நடந்தா கோவம் வரும் தான்..அதுக்காக இவ்ளோ திட்றதெல்லாம்..எனக்குன்னா சரியா படல..? உனக்கு அவர ஏற்கனவே தெரியுமா..? உங்களுக்குள் ஏதாச்சும் சண்ட இருக்கா முன்னவே..?" யோசனையுடன் கேட்டாள்,அவள்.

தமிழவனின் நடத்தையை இன்று ஏனோ, சாதாரணமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

"ஒரு மாதிரி இருக்கு கீர்த்தி..இப்போ எதுவும் வேணாம்..அப்றமா பேசலாம்..எல்லாத்தயும் அப்றமா சொல்றேன் உன் கிட்ட.." தளர்ந்த த்வனியில் அவள் உரைத்த வார்த்தைகள் தோழியை மேலும் எதுவும் கேள்வி கேட்க விடாமல் செய்து விட்டது.

"ஆனா இன்னிக்கி அவர் நடந்துகிட்டது ரொம்ப ஓவர்.."

"தப்பு என் மேல இருக்குடி..அதுக்கு அவர் அப்டி ரியாக்ட் பண்ணி இருக்காரு..அந்த எடத்துல நாம இருந்தா என்ன செஞ்சு இருப்போம்னு தெரியாதுல..அதனால அவர தப்பு சொல்ல முடியாது..நா தான் சரியா விழாம எடுத்து வச்சிருக்கனும்.."

"வாய் கிழிய வக்கனயா பேசு..ஆனா திட்ட மட்டும் அமுக்கினி மாதிரி வாங்கிட்டு வா.."நொடித்துக் கொண்ட கீர்த்திக்கு,பெண்ணவளின் குணங்கள் அத்துப்படி ஆயிற்றே.

மறுநாள் பொழுது விடிய,அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பும் வழியில் எதிர்ப்பட்டான்,தமிழ்.

அவனைக் கண்டதும் பெண்ணவளுக்கு பயமும் பதட்டமும் தொற்றிக் கொள்ள,தலை தாழ்த்தவாறு அவள் கடந்திட,அவனின் விழிகளோ அலட்சிய பாவத்தை சுமந்து நின்றன.

"இடியட்ட்ட்ட்ட்.." இதழ்கள் தமக்குள் அவளைத் திட்டித் தீர்த்திட,பெருவிரலோ வழமை போல் அடர்கற்றை மீசையின் நுனியை சிறு அழுத்தத்துடன் தடவிக் கொடுத்தது.

அன்று மாலை இருந்த விரிவுரை இரத்து செய்யப்பட்டிருக்க,ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் இருந்தது,மாணவர் கூட்டம்.ஆங்காங்கே, கூட்டமாக அமர்வதற்கு ஏதுவாய் கல் இருக்கைகளும் போடப்பட்டிருந்தன.

"இந்த லெக்சர் கேன்சல்ங்குறத நியூஸ விட உலகத்துல ஹேப்பி நியூஸே இல்லல.." தோழி ஒருத்தி சிலாகித்துக் கூற,ஆமோதிப்பாய் ஒத்துக் கொண்டாள்,பெண்ணவளும்.

"அதுவும் நம்ம டெரர் பீஸோட லெக்சர்..அதட்டுற அதட்டுல மயக்கம் வருமோன்னு பயந்துட்டு இருந்தேன்..பயத்துல வயிறு வேற வலிச்சு வலிச்சு இருந்துச்சு..நல்ல வேள லெக்சர் கேன்சல்.." என்றொருத்தி கூறிட,அங்கே பெரும் சிரிப்பலை எழுந்தது.

அவர்கள் வெளியே இருக்கும் பொழுது தமிழவனின் வண்டி அவர்களை கடந்து செல்ல,அவர்களை இருவரையும் தவிர அனைவரின் விழிகளிலும் பளிச்சிடல்.

"இந்த ப்ரின்ஸ் ஒரு நாளாச்சும் பைக்ல வர மாட்டேங்குதே.." தோழியர் குறைபட,புரியாது புருவம் சுருக்கினாள்,பெண்ணவள்.

"யாருடி ப்ரின்ஸ்..?" குழம்பிப் போய் கேட்டாள்.பேராசிரியர் ஒருவரை செல்லமாக,"ஹேன்ட்ஸம்" என்று அழைப்பது தெரியும்.அவளுக்குமே அவரின் கம்பீரத்தின் மீது பிடிப்புண்டு.ஆனால், இது..? புதிதாய் வேறு..?

"கீர்த்தி நீ இவ கிட்ட சொல்லயா யாரு நம்ம ப்ரின்ஸ்னு..?" என்று கேட்டிட,கீர்த்தியோ திருதிருவென விழித்தாள்.

"யாருடி..? புதுசா ப்ரின்ஸ்..?"

"அதான்டி..நீங்க இருக்குற வீட்டுக்கு முன்னாடி குடி வந்துருக்காங்களே..அதுல செம்ம ஸ்மார்ட்டா ஒருத்தர் இருப்பாரு..அவரு தான் இப்போ நம்ம காலேஜ்கே க்ரஷ்.." என்றிட,திகைத்து விரிந்தன,அவள் விழிகள்.

மௌனம் பேசும்!

2025.03.27
 
Last edited:
Top