வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மௌனங்கள் பேசும்! - 07

GG writers

Moderator
மௌனங்கள் பேசும்!

மௌனம் 07

அபினவ்வின் பேச்சில் சற்றே அமைதியாகிப் போனாள்,வைஷ்ணவி.அவன் சொல்வது போல் இந்த விடயத்தை ஆறப்போடுவதே,உசிதம் என்று தோன்றிற்று,அவளுக்கு.அதுவும் இளைய அண்ணனின் விருப்பம் என்னவென்று கேட்டறியாமல் எந்த தீர்மானத்துக்கும் வர இயலாதே.

"வைஷு இது கல்யாணம்..உனக்கு புடிச்ச பொண்ண உங்க அண்ணனுக்கு கட்டி வக்கிறது இல்ல..அவருக்கும் ஒரு விருப்பம் இருக்கும்..சப்போஸ் அவரு மனசுல யாராச்சும் இருந்தா என்ன பண்ணுவ நீ...?"

"......................"

"பாக்கறதுக்கு இவங்க ரெண்டு ஒன்னு சேந்தா நல்லாருக்கும்னு நமக்கு தோணலாம்..ஆனா அவங்கவங்களுக்கு தான் தெர்யும்..தனக்கு எப்டி பட்டவங்க வந்தா வாழ்க்க நல்லா இருக்கும்னு.."

"நா அந்த மீனிங்ல சொல்ல வர்ல.."

"எந்த மீனிங்னாலும் இது மாறாது..இப்போதக்கி இந்த கதய எடுக்காத..என் கிட்ட ஒளறி வச்ச மாதிரி வேற யார் கிட்டவும் ஒளறியும் வக்காத.." கண்டிப்பாய் உரைத்திட,ஆமோதிப்பாய் தலயசைத்தாள்,அவள்.

அப்படியே பொழுதும் கழிந்து இரவும் வர,அவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் முன்னே இருக்கும் முச்சந்தியின் நின்றிருந்த,பையனவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

விழிகளில் பரவி நின்றிருந்த சிவப்பே,அவனின் அகத்தில் கிளர்ந்திருக்கும் அனலை தெள்ளத் தெளிவாய் விளக்கிட,முகமோ இறுகிப் போயிருந்தது.

அவனின் கோபத்தை முழுதாய் கிளப்பி விட்டது தெரியாமல்,திவ்யாவோ ஸ்கூட்டியில் வந்திறங்க,உடன் வந்திருந்த பெண்ணவளுக்குமே,நெஞ்சத்தில் பயம்.விழிகளிலும் அது வியாபித்துத் தெரிந்தது.

தங்கையானவள்,சொன்ன விடயத்தின் வீரியம் அப்படிப்பட்டது.
"எனக்கு அவர பாக்கனும்..இல்லன்னா தா ஏதாச்சும் பண்ணிப்பேன்.." மிரட்டியே,தமக்கையை உடன் அழைத்து வந்திருந்ததும்.

"நீ போய் பேசு.." என்றதுடன்,அவள் நின்று கொள்ள,பையனவனை நோக்கி அடியெடுத்து வைத்திட்டவளின் இதயத்தில் ஆயிரம் குழப்பங்களும் அளவுக்கு மீறிய பயமும்.

அவள் வந்து நிற்கும் முன்னமே,அவனின் பார்வை அவளை எரிக்கத் துவங்கி இருந்தது.அவளை நோக்கி அவன் வீசிய பார்வையில் அத்தனை அனல்.

அவளுக்கோ,அவன் விழிகளில் தெறித்த சினத்தில்,வார்த்தைகளே வரவில்லை.அனைத்த்மிழ்ந்து தொண்டைக்குழிக்குள் ஒட்டிக் கொண்டிக்க என்ன பேசுவதென்று தெரியவுமில்லை.

பையனவனோ,எதுவும் பேசவில்லை.அளவுக்கு மீறிய கோபத்தில் எங்கே பேசினால்,வார்த்தைகள் தடித்து விடுமோ என்கின்ற பயம்.அதனால் தான்,இந்த நிதானம்.

அவளுக்கு அவனின் நிதானத்தில் இன்னும் பயம் பிடித்துக் கொள்ள,அவனை ஏறிட்டன,விழிகள்.அவன் ஏதேனும் கேட்பான் என்று எதிர்ப்பார்த்துஅவளிருக்க, தாடைகள் இறுக,அவன் கடைபிடித்த அமைதியே,அவளை பேசச் சொல்லி கட்டளையிட்டது.

"நா..நா.." அவள் கலங்கிய விழிகளுடன் திணறிய போதும்,சற்றும் அசைந்து கொடுக்கவில்லை,அவன்.அந்த மனநிலையின் சாயல் கூட இல்லை,அவன் அகத்தில்.அகத்தில் இல்லாதது,எங்கனம் விழிகளில் தெரியுமாம்..?

"நா சொன்ன..." அவள் துவங்கும் போதே,அவனின் விழிகள் இடுங்கி கூர்மையாகின.அந்த விழிகளில் கூர்ப்பார்வையில் அவளுக்குள் கிடுகிடுத்தது.

"நா சொன்ன மாதிரி..எப்டியாச்சும் கல்யாணத்த நிறுத்திருங்க.." என்று,அழாத குறையாய் அவள் உரைத்திட,அவன் முகம் சிவந்து போக,ஆத்திரம் கண்ணை மறைத்தது.

உணர்ந்து உரைக்கிறாளா இல்லை,புரியாது விளையாடுகிறாளா என்கின்ற சந்தேகமே வந்து விட்டது,பையவனுக்குள்.அவள் கூறும் விடயம் அத்தனை எளிதானது ஒன்றும் இல்லையே.

திருமணத்தை தள்ளிப் போட்டால் எத்தனை எத்தனை பிரச்சினைகள் வரும் என்று நினைத்தவனோ தன்னால் பெருமூச்சு விட்டுக் கொள்ள,அதை பற்றி யோசியாமல் தன் பிடியில் நிற்பவளின் மீது அவனுக்கு உச்சபட்ச எரிச்சல்.

"ஆர் யூ மேட்..? படிச்ச பொண்ணு தான..? அறிவில்ல..எதயும் யோசிச்சு பாக்க மாட்டீங்களா..?உங்க விருப்பத்துக்கு கண்ட மாதிரி அத இத செய்னு சொல்லி கிட்டு இருக்கீங்க..? விளயாட்டா இருக்கா எல்லாம்..?"

அடிக்குரலில் சீறியவனுக்கு ஆத்திரம் அடங்க மாட்டேன் என்றிருந்தது.தன் வார்த்தைகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள படாத பாடு பட்டுப் போனான்.

"இல்ல..இல்ல.." அவள் அழுகுரலில் ஏதோ சொல்ல வர,அதைக் கேட்டிடும் பொறுமை கூட,அவனிடம் இல்லை.அப்படியொரு சினம் விழிகளில்.

"வீட்ல கேட்டுட்டு தான மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணுனது..நீங்க தான அவசரப்படுத்துனீங்க..இப்போ என்ன..? அதுவும் நாளன்னிக்கி கல்யாணத்த வச்சி கிட்டு.."

"ப்ளீஸ் புரிஞ்சிகோங்க..நா கல்யாணத்த நிறுத்த சொல்லி சொல்லல..ஒரு மூணு மாசத்துக்கு தள்ளிப் போடலாம்னு தான் சொல்றேன்..அத மட்டும் செஞ்சு கொடுங்க.."

"லெட்ஸ் கால் ஆஃப் தி வெட்டிங்.." வெடுக்கென்று அளவுக்கு மீறிய கடுப்புடன் அவன் உரைத்திட,அவளுக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.கண்ணீர் கன்னத்தை தாண்டி வழிந்தும் விட்டது.

அவளுக்கு அவனைப் பிடிக்கும்.அவனை திருமணம் செய்திடவும் விருப்பம்.ஆனால்,திருமணத்தை தள்ளிப் போட வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்கிறாள்.அதனால் தானே,அவனிடம் வந்து கெஞ்சிக் கொண்டிருப்பது.

"இல்ல..இல்ல அப்டிலாம் பண்ண வேணாம்..தள்ளி மட்டும் போடலாம் ப்ளீஸ்.." அவள் கெஞ்ச இறங்கி வரவில்லை.

தூரத்தில் நின்றிருந்த பெண்ணவளுக்கு கெஞ்சும் தங்கையையும் அதற்கு அசராது இருக்கும் பையனவனையும் பார்க்கையில் ஏதோ பிரச்சினை என்று தோன்றினாலும்,அவர்களுக்கு இடையில் செல்ல விரும்பவில்லை,தமக்கையானவள்.

அவர்களில் இருந்து தள்ளி நகர்ந்து ஓரமாய் சென்று தரித்துக் கொண்டாள்.நெஞ்சமதில்ல,நினைவுகள் அலைமோதிட,மார்புக்கு குறுக்கே கையை கட்டியவாறு அண்ணாந்து பார்த்தவளின் விழிகளில் ஈரம் துளிர்த்தது.

இங்கு,அவள் எவ்வளவு கெஞ்சியும் பையனவன் ஒத்துக் கொள்வது போல தோன்றிடவில்லை.அவளிடம் ஏதேனும் பிரச்சினையா என்று தன்மையாய் விசாரித்த போதும்,அவள் இல்லையென்று முரண்டு பிடிக்க,அவனுக்கும் ஏனோ இறங்கி வர மறுத்தான்.

அவள் பிடிகொடுக்காத போது,அவன் மட்டும் எங்கனம் இறங்கி வந்திட..?

இறுதியில் அவன் பிடிவாதமே ஜெய்த்திட,வீட்டுக்கு வந்து அனைவரின் முன்னிலையிலும் திருமணத்தை நிறுத்தும் படி கூறிடும் எண்ணத்துடன் வந்தவனுக்கு,மனம் ஒப்பவில்லை.

அதற்கென்று,திருமணத்தை தள்ளிப் போடும் படி,உரைப்பவளின் மீதான கோபம் தீராதிருக்க,என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நின்றான்.தளம்பாய் இருந்தது,மனநிலை.

யோசித்து யோசித்து பார்த்தவனுக்கு,சரியான முடிவொன்றை எடுத்திட இயலாமல் போய் விட,அறைக்குள் நுழைந்தவனோ,கட்டிலில் சாய்ந்து கொண்டான்.

சொந்த பந்தங்கள் தோழர்கள் முதற்கொண்டு அனைவரும் வந்திருக்கும் சமயத்தில் போய்,எப்படி திருமணத்தை தள்ளிப் போடச் சொல்வது என்கின்ற யோசனை வேறு மண்டையைப் பிளந்தது.

அதுவும் எதையும் கூறாமல் பூசி மெழுகி தன் எண்ணத்தை சாதிக்க முயலும்,திவ்யாவின் மீதும் கடுங்கோபமும்.

அன்றைய இரவு அவனுக்கு உறக்கமின்றியே கழிந்து போக,விடிந்ததுமே அபினவ்வை பார்க்க கிளம்பி விட்டான்.

தடதடவென அறைக்கதவு தட்டப்படும் சத்தத்தில் கலைந்த அபினவ்வுக்கு அங்கு பையனவனைக் கண்டதும் அதிர்வு தான்.

"என்ன மச்சான் இந்த நேரத்துல..?" கேட்டுக் கொண்டே வெளியே வர,அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவனோ,தரித்தது அந்த வீட்டிற்கு வெளியே தான்.

ஆட்கள் ஓரிரண்டு பேர் அந்த காலைவேளையிலும் திருமணத்துக்கான வேலைகள் செய்து கொண்டிருக்க,அதைக் கவனித்தவனுக்கு சலிப்பு வேறு.

வந்தவனோ,நடந்ததை சுருக்கமாக கூறி முடித்திட,அபினவ்வோ தலையைப் பிடித்துக் கொண்டான்.

"நா வேணுன்னா வைஷு கிட்ட சொல்லி திவ்யாவுக்கு என்ன ப்ரச்சனன்னு கேட்டு பாக்க சொல்லவா..?"

"ம்ஹும்..அப்டி எதுவும் வேணா..கேட்டாலும் அந்த பொண்ணு சொல்ல மாட்டுச்சு..இப்போ என்ன பண்றது..?"

என்று முதன் முறையாய் அவனிடம் ஆலோசனை கேட்டிட,என்ன சொல்வதென்று தெரியவில்லை,அபினவ்வுக்கும்.

பையனவனின், கேள்விக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியாது,யோசித்த அபினவ்வுக்கு திவ்யாவிடம் என்ன பிரச்சினையென்று கேட்பது தான் உசிதம் என்று தோன்றிற்று.

"மச்சான்..திடுதிடுப்புன்னு என்னால எதுவும் சொல்ல முடில..ஆனா அந்த பொண்ணு கிட்ட வைஷுவ வச்சி பேசுறது தான் சரின்னு தோணுது..உங்க அத்த பொண்ணு வேணும்னா கேட்டு பாக்கலாமா..அவங்க பெரிம்மா பொண்ணு தான..அவங்க கிட்ட வேணும்னா கேட்டு பாக்கலாமா..?" என்றிட,ஆணவனுக்கும் அதுவே உசிதமாய்ப் பட்டது.

"ம்ம்..அதுவும் நல்ல யோசன தான்..அந்த பொண்ணு கூட நானே பேசறது தான் சரின்னு படுது..வைஷு கிட்ட சொல்லி அந்த பொண்ண வர சொல்லுங்க.. மீட் பண்ணி பேசி என்னன்னு பாக்கலாம்"

அபினவ்வுக்கு ஏனோ,பையனவனின் வார்த்தைகளை ஒப்புக் கொள்ள இயலவில்லை.அதுவும் அவன் தனியாகச் சென்று பேசுவதென்பது,விபரீதமாக முடியக் கூடும் என்கின்ற எண்ணமும் எட்டிப் பார்த்திற்று.

மறுத்துப் பேச வழியின்றி,சரியென்று தலயைசைத்திட,அவனுக்கு சிறு தலயசைப்பை பதிலாகக் கொடுத்தவாறு கிளம்பிச் சென்றான்,பையனவன்.

"எங்கடி போறோம்.." நூறாவது தடவையாய் வினவிய,பெண்ணவளுக்கு பதில் சொல்லாமல் அமர்ந்து இருந்த வைஷ்ணவிக்கும் பதட்டமே.

அதுவும் கணவனோ,அவளிடம் எதையும் விளக்கிச் சொல்லாமல் வெறுமனே கட்டளையை மட்டும் விதித்திட,அவளுக்கு மண்டை குழம்பியது.

வண்டியை செலுத்திக் கொண்டு வந்த அபினவ்வோ,ஓரிடத்தில் ஓரம் கட்டிட,பெண்ணவளை இழுத்துக் கொண்டு இறங்கினாள்,வைஷ்ணவி.

காரில் இருந்து இறங்கி வந்து,பெண்ணவளை சங்கடத்துடன் பார்த்தான்.அவள் முகத்தில் இருந்த குழப்பம் அவனுக்கு சிறு வருத்தத்தை அளித்தது.

"சாரி சிஸ்டர்..உங்க கிட்ட எதயும் சொல்லாம அழச்சிட்டு வந்ததுக்கு..சின்ன ப்ரச்சன..இதுக்கு சாலியூஷன் உங்களால கெடக்கும்னு நம்பறோம்..கார்ல மச்சான் இருப்பாரு..அவர் கிட்ட தயவு செஞ்சி பேசி இதுக்கு ஒரு முடிவ கொண்டு வாங்க.." என்க,அதிர்ந்து விட்டாள்.

அதுவும் பையனவனுடன் அவளை கதைத்திடச் சொல்வது,அவளுக்கு பெரும் சங்கடத்தையும் அதிர்வையும் தந்திட,சட்டென மறுப்பைத் தெரிவிக்கும் விதமாய்,இடம் வலமாய் அசைந்தது,அவள் சிரசு.

"இல்லண்ணா..இங்க..நாளக்கி கல்யாணத்த வச்சி கிட்டு..நா தனியா.." என்றவளுக்கு கோர்வையாய் வார்த்தைகளும் வரவில்லை.

அவள் முழுதாய் முடிக்காவிடினும்,அபினவ்வுக்கு அவளின் எண்ணப்போக்கை கணிக்க முடியுமாய் இருக்க,சின்னப் புன்னகையொன்றை சிந்தினான்,அவன்.

"நீங்க மட்டும் இப்போ போகலனா நாளக்கி கல்யாணம் நடக்குறதே கன்ஃபார்ம் இல்ல.." அவன் போட்டுடைத்திட,பெண்கள் இருவரின் முகத்திலும் அப்பட்டமான அதிர்வு.வைஷ்ணவி பேயறைந்தது போல நின்று விட்டாள்.

"என்ன ப்ரச்சன..?" படபடப்பாய் பெண்ணவள் கேட்டிட,அபினவ்வின் விரல்களோ காரை சுட்டிட,விடுவிடுவென நடந்து சென்று கார்க்கதவை திறந்தாலும்,பையனவனைக் கண்டதும் அவளிதயம் நின்று துடித்தது.

பயத்திலும் பதட்டத்திலும் அவளுக்கு வார்த்தைகளே வராது போக,அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவனோ,அவளைக் கவனித்து ஏறி அமரச் சொன்னான்,விழிகளால்.

கரமெல்லாம் நடுங்கத் துவங்கிற்று,பெண்ணவளுக்கு.இதயத்தில் அதை மீறிய நடுக்கம்.அவனுடன் தனியாக பேசுவதை எண்ணுகையிலயே,நா வரண்டு போக தொண்டைக்குழிக்குள் ஆயிரம் பந்துகள் வந்து அடைத்துக் கொண்ட உணர்வு.

"உள்ள ஏறி உக்காருன்னு சொன்னேன்.." சினத்தில் சீறியவனோ,அவள் விழிகளில் தெரிந்த மிரட்சியைக் கண்டு தன்னை கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள்ளவும் அவள் படக்கென்று ஏறி அமரவும் சரியாய் இருந்தது.

அவள் உள்ளே ஏறி அமர்ந்ததில்,இலேசாய். தலை கதவின் மேல் முகப்பில் இடிபட,அதில் அவள் முகம் சுருங்கினாலும்,சட்டென தன்னை மீட்டுக் கொண்டாள்,அவனுக்கு காட்டாதிருக்கும் பொருட்டு.

"லுக்..உன் தங்கச்சி நாளக்கி கல்யாணம் வேணாம்னு தள்ளிப் போடுங்கன்னு சொல்லி கிட்டு இருக்கா..என்னால எதுவும் பண்ண முடில.."

"அவங்களுக்கு என்ன ப்ரச்சனன்னு கேட்டா எதயும் சொல்லவும் மாட்டேங்குறாங்க..நீ தான் இந்த ப்ரச்சன என்னன்னு கேட்டு சொல்லனும்..இல்லன்னா வெட்டிங்க கால் ஆஃப் பண்ணிர வேண்டியது தான்.." படபடவென வந்து விழுந்தன,வார்த்தைகள்.

அவன் அசட்டையாய் மொழிந்திட,அவள் அதிர்ந்து திகைத்திட,விரிந்து நின்றன,அவள் விழிகள்.

அவன் முகத்தில் எந்த விதமான வருத்தமோ கவலையோ காணக் கிடைக்கவில்லை.கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்திடப் பார்க்கிறார்களோ என்கின்ற சந்தேகமும் வந்து விட்டது,அவளுக்கு.

ஆயினும்,அவனைப் பற்றி தெரியுமே.எந்த வித அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் அடி பணிந்து போக மாட்டாள் என்று அவள் அறிவாளே.

"இல்ல நா பேசி பாக்கறேன்.." தயங்கித் தயங்கி மொழிந்தவளுக்கு,இருவருக்கும் இடையில் நுழைந்திடவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

"நா மத்தவங்க மாதிரி இல்ல..கல்யாணப் பண்ணிக்கபோற பொண்ணுன்னு என்னோட கேரக்டரயும் என்னோட செல்ஃப் ரெஸ்பெக்டயும் என்னால விட்டுட்டு இருக்க முடியாது..உன் தங்கச்சிக்கு இது நல்லா தெர்யும்..ஸோ கண்டிப்பா எனக்கு இன்னிக்கி பதில் தெரிஞ்சாகனும்.."

"சரி.."

"ம்ம்..கேட்டு சீக்கிரமா எனக்கு ஃபோன் பண்ணு..இல்லன்னா கல்யாணத்த மொத்தமா நிறுத்திர்ரதா உன் தங்கச்சி கிட்ட சொல்லு"

"இல்..இல்ல நா பேசறேன் அவளோட..ஆனா.." மேலும் பேச முடியாது இழுத்தாள்,பெண்ணவள்.

அவளின் இழுப்பில் அவனுக்கும் கோபம் வந்து விட்டது.விழிகளில் அனல் தேக்கி அவன் திரும்பி முறைத்திட,தயங்கித் தயங்கி நிமிர்ந்து அவள் விழிகளை ஏறிட,அவன் விழிகளுக்குள் அவள் பார்வை பாய்ந்திட,அவனின் அனல் மெல்ல அணைவது போல்.

விழி சுருக்கி அவள் விழிகளைப் உரசவனின்,கோபம் கொஞ்சமாய் மட்டுப்பட,அவள் பேச்சைத் துவங்கினாள்.

"இப்போ சொல்ல முடியாத ப்ரச்சன அவளுக்கு இருக்கலாம்ல..அத கொஞ்சம் யோசிச்சு பாக்கலாமே சார்.."

தயங்கித் தயங்கி கோபப்படுவானோ எனப் பயந்து,மெதுவான ஓசையில் அவள் உரைத்திட,அவனில் சட்டென ஒரு நிதானம்.

விழிகளை அவள் பார்வை நிரப்ப,செவிகளை அவள் குரலோசை நிறைக்க,அவள் உதிர்த்த வார்த்தைகளில் மெல்லத் தணிந்து தளர்ந்தான்,பையனவன்!

மௌனம் பேசும்!

2025.03.29
 
Last edited:
Top