வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மௌனங்கள் பேசும்! - 09

GG writers

Moderator
மௌனங்கள் பேசும்!

மௌனம் 09

அவள் உரைத்திட்ட வார்த்தைகளில் இருந்த உண்மை அவனை நிதானிக்க வைத்திட்டாலும்,அதை கூறுகையில் அவள் விழிகளில் தெரிந்த உணர்வொன்று அவனை தணிய வைத்தது.தணிய வைத்து அணைத்துப் போட்டது,அவனையும் அவனின் கோபங்களையும்.

ஏனென்று இல்லாமல் கட்டுப்பட்டான்,அவளுக்கு;அவளின் கருமணிகளின் அசைவுக்கு.அதைத்தாண்டிட முடியாமல் ஏதோ ஒரு தடை,திரை மறைவில் இருப்பது போன்று எண்ணம் உருப்பெற்றது.

பெரும் குழப்பத்துடன் கொதித்துக் கொண்டிருந்தவனை,அவளின் வார்த்தைகள் அப்படியே அடங்கச் செய்திட,விழிகளை அழுந்த மூடித் திறந்தவனுக்கு தன் நடத்தையின் மீது சந்தேகமே முளைத்திற்று.

"லெட்ஸ் சீ.." அவ்வளவு தான் என்பது போல் அவன் நிறுத்திக் கொள்ள,சிறு தலையசைப்புடன் இறங்கிக் கொண்டவளின் முகமெல்லாம் வியர்த்திருந்தது.

அவள் இறங்கிச் செல்ல,அவன் அவளைத் தான் பார்த்திருந்தான்.அவளின் பேச்சை சட்டென தன்னை கட்டுப்பட வைத்திடும் என்று துளியும் நினைத்திருக்கவில்லை,அவன்.அவளில் தங்கியிருந்த விழிகளில் ஏகப்பட்ட குழப்பங்கள்.

வைஷ்ணவியுடன் வீட்டுக்கு வந்தவளின் விழிகளோ,திவ்யாவைத் தேடிட,அவளோ பெண்ணவளின் விழிகளுக்கு அகப்படவில்லை.

"எங்க போனா இவ..?" யோசனையுடன் வீடு முழுவதும் தேடியவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.விடயம் தெரிந்தவளுக்கு,யாரிடமும் எதுவும் கூறவும் முடியவில்லை.

மணப்பெண்ணைக் காணவில்லை என்று கூறினால்,வீட்டின் மொத்த நிலமையும் தலைகீழ் ஆகிவிடும் என்று அவளுக்கு புரியாமல் இல்லையே.

வீடு முழுக்கத் தேடி பார்த்தவளுக்கு அப்படியொரு பதட்டம்.அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கவும் இயலாமல்,மூளை மரத்துப் போய் இருக்க,அறைக்குள் வந்து கதவை அடைத்தவளுக்குள் அச்சுறுத்தும் சிந்தனைகள் வேறு எட்டிப் பார்த்து பயத்தை தூண்டி விட்டன.

அறையின் யன்னலின் ஊடு எட்டிப் பார்த்தவளுக்கு,அந்த பூர்வீக வீட்டின் பின்னே இருக்கும் சிறிய வீடு திறந்து இருப்பது யோசனயைத் தர,விழிகளில் கேள்விகள்.

வேக எட்டுக்களுடன் அவ்வீட்டுக்கு வந்திட்டாள்.திறந்திருந்த கதவை புருவ நெறிப்புடன் பார்த்தவளோ,உள்ளே நுழைந்திட,மெல்லிய இடைவெளியுடன் சாற்றியிருந்த அறைக்கதவை திறந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

குருதி தோய்ந்த உடையுடன் மருத்துவனையில் அமர்ந்து இருந்தவளின் கண்கள் கலங்கிப் போய் இருந்தன.உடன் பிறவா தங்கை என்றாலும்,அவள் மீது பாசம் அதிகம்.

வேக நடையுடன் மருத்துவமனைக்கு வந்த பையனவனுக்கும் மனதில் அப்படியொரு குற்றவுணர்வு.அவன் ஒப்புக் கொள்ளாததால் தான் இப்படியொரு முடிவை அவள் எடுக்கத் துணிந்து இருப்பாள் என்பதை அவனை வருந்தச் செய்தது.

பாதச்சத்தங்களில் நிமிர்ந்து பார்த்த பெண்ணவளுக்கும்,அங்கு பையனவனை கண்டதும் பெருத்த ஆசுவாசம்.

மணிக்கட்டை அறுத்துக் கொண்டு,குருதியுடன் அவள் வீழ்ந்து கிடந்ததை கண்டு பயந்தாலும்,சுதாரித்து சமயோசிதமாய் சிந்தித்து,அபினவ்வையும் வைஷ்ணவியையும் அழைத்து வீட்டினர் யாருக்கும் தெரியாமல் தான்,மருத்துவமனைக்கு அழைத்து வந்தது.

மருத்துவமனைக்கு வந்த பின்னரே,அழைப்பெடுத்து பையனவனிடம் விடயத்தை கூறிட,அவனும் உடனே கிளம்பி வந்து விட்டான்.

"என்னாச்சு..? எதுக்கு திடீர்னு இப்டி சூசைட் அட்டம்ப்ட் பண்ணியிருக்காங்க..?" நெற்றியை நீவியவாறு கேட்டவனுக்கு பதில் சொல்லத் தெரியாது,அவளின் விழிகளும் நீரேற்றிக் கொள்ள,அந்த ஈரத்தின் காரணம் அவள் மட்டுமே அறிந்ததாய்.

மறுப்பாய் தலையசைத்து விட்டு,இருக்கையில் அமர்ந்து கொண்டவளுக்கு,வீட்டினர் எவ்வாறு எடுத்துக் கொள்வார்களோ என்று நினைக்கும் போதே உள்ளம் கலங்கிற்று.

அவனின் விழிகள் அவளைத் தான் ஆராய்ந்தன.அந்த விழிகளில் தெரிந்த கலக்கம் குற்றவுணர்வுக்கு மேலான வலியை அவனுக்குள் உண்டு பண்ணாமல் இல்லை.

பையனவனோ,ஏற்கனவே கேட்டு திருமணத்தைத் தள்ளிப் போடும் படி தந்தையிடம் பேசுச் சென்று கொண்டிருக்கையில் தான்,பெண்ணவளிடம் இருந்து அழைப்பு வந்ததே.

பெண்ணவளின் வார்த்தைகளை அவனால் அத்தனை எளிதாக புறந்தள்ள முடியாது இருக்க,மனமோ அவளின் பேச்சை கேட்ட விந்தையென்னவென்று அவனறியான்.

அவனே,ஒத்துக் கொண்டு சம்மதம் சொல்லியிருப்பது தெரியாமல்,தற்கொலைக்கு முயன்று இருப்பவளை எண்ணுகையில் சினமும்.

வீட்டினர் மருத்துவமனைக்கு வர,அவர்களிடம் சாதாரண மயக்கம் என்று நம்ப வைத்திடும் போது உயிரே போய் விட்டது,நால்வருக்கும்.

அபினவ்வின் தோழனொருவனும் அதே மருத்துவமனையில் பணி புரிவதால்,அவர்களை நம்ப வைத்திட முடியுமாய் இருக்க,திவ்யாவின் தாயாரின் விழிகளில் தான் சந்தேகம்.

சொல்லச் சொல்லக் கேளாமல்,அவர் அவள் அனுமதிக்கப்பட்டு இருந்த அறைக்குள் நுழைந்திட,பார்த்தவுடன் விடயம் புரிந்திற்று.

மகளின் நிலையைக் கண்டதும் தன்னாலே,அவரின் விழிகளில் நீர் நிரம்பிட,சேலைத்தலைப்பால் வாயைப் பொத்தி அழுதவரை தேற்றி சமாதானப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவளின் மீது படிந்தது,பையனவனின் பார்வை.

பெருமூச்சுடன் விழிகளோ திருப்பியவனோ,தன் தாயாரை பார்த்திட,பார்வதியின் முகமோ கவலையில் தோய்ந்து கிடந்தது.

மகனின் திருமணத்தில் உண்டாகியிருக்கும் தடங்கல்,அவருக்குள் ஆயிரம் அலைக்கழிப்புக்கள் உண்டு பண்ணியிருந்தது.

தாயின் அருகே வந்தவன்,அவரை அழைத்துக் கொண்டு போய் ஏதோ கூற,அதிர்வில் அளவுக்கு மீறி விரிந்தன,அவர் விழிகள்.

மகனின் பேச்சில் அதிர்ந்தவருக்கு,சில கணங்கள் பேச்சே வரவில்லை.அவன் சொல்வதை கிரகித்து ஏற்று பதில் சொல்லிட,சில நிமிடங்கள் தேவைப்பட்டது என்னவோ,உண்மை.

அவரோ,அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது விழித்திட,அதற்குள் தன் பேச்சுக்கு ஒப்புக் கொள்ளும் விதமாய் தாயின் மனநிலையை மாற்றி இருந்தான்,மகனானவன்.

பேசிப் பேசியே காரியம் சாதிப்பது,அவனுக்கு கை வந்த கலையாயிற்றே.தாயைப்பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பவன்,அவர்ப் பேசிப் பேசியே சரி கட்டியிருந்தான்.

பார்வதியோ,தெளியாத முகத்துடன் திரும்பி நடந்திட,தாயினதும் மகனினதும் சம்பாஷணையை தூரத்த நின்று கவனித்துக் கொண்டிருந்தவளின் விழிகளோ,தன்னை கேளாமல் பையனவனிடம் படிந்தன,கலவரத்துடன்.

இதழ் உதிர்த்திடா அவளின் மௌமான வார்த்தைகள்,அவனுக்கு புரிந்தது போலும்.கட்டை விரலை உயர்த்தி,"சக்ஸஸ்" என்றான்,இதழ்களுக்குள்ளால்.

ஏனென்று ஆயிரம் கேள்வி கேட்டவர்களை சமாளித்து திருமணத்தை தள்ளிப் போடுவது ஒன்றும் அத்தனை எளிதான விடயமாக இருக்கவில்லை.

அதுவும் நாளை திருமணம் என்றிருக்க,ஆயிரம் கதைகள் வந்தாலும்,பையனவன் உறுதியாகத் தான் இருந்தான்,தன் தீர்மானத்தில்.

திவ்யா தற்கொலைக்கு முயன்றதில் இருந்து,அவனுக்குள்ளும் பல்வேறு கேள்விகள் ஊடுருவியிருந்தன.அவளிடம் கேட்டு தெளிவு பெற வேண்டிய எக்கச்சக்க விடயங்கள்,அவன் மனதில்.

அவள் இருக்கும் நிலைக்கு,அவளிடம் எதையும் கேட்க முடியாத சூழ்நிலை.அதனாலேயே,இத்தனை பொறுமையாய் அவனிருப்பது.இல்லையென்றால்,உடனே விடயத்தை கறந்து இருப்பான்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் சில மாதங்கள் பிற்போடப்பட,இங்கு ஒருவரின் மனதில் மட்டும் வன்மமான எண்ணங்கள்.

________________

"ஷீ ஈஸ் ஓகே நவ்..ஆனா அவங்க கிட்ட பேசும் போது அவங்க சட்டுன்னு எதயும் சொல்றாங்க இல்ல..சில பேர் ரொம்ப டைம் எடுத்துப்பாங்க..அது நார்மல் தான்..சைக்காட்ரிஸ்ட்னாலும் எங்க மேல அவங்களுக்கு நம்பிக்க வரனும் இல்ல.."

"....................."

"இப்போ தான ரெண்டு விசிட் வந்து இருக்காங்க..இன்னும் டூ வீக்ஸ்கு அப்றம் கூட்டிட்டு வாங்க..அப்போவாச்சும் ஏதாலும் சொல்றாங்களான்னு பாக்கலாம்.."

அவனின் தோளைத் தட்டி சொன்ன மருத்துவரிடம் சிறு தலையசைப்பை பதிலாகக் கொடுத்து விட்டு,வேக எட்டுக்களும் வண்டியின் அருகே வந்தான்,பையனவன்.

பின்னிருக்கையில் வெறித்த பார்வையுடன் திவ்யா அமர்ந்திருந்த, அவள் விழிகளில் அடிக்கடி கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தது.

அன்றில் இருந்து இப்படித் தான் இருக்கிறாள்.கேட்டாலும் எதுவும் சொல்வதில்லை.

வெறித்த பார்வையுடன் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பவளின் செயலில் பயந்து போய்,அவளின் தாயார் பெண்ணவளிடம் விடயத்தை தெரிவித்திட,கலங்கிப் போனவளோ,அழைப்படுத்தது வைஷ்ணவிக்குத் தான்.

முதலில் அவளிடம் பேசச் சொல்லி கூறியவளின் பேச்சைத் தட்டாது,பேசும் முயற்சியில் இறங்கிட,எதையும் சொல்லாமல் அதீத அழுத்தத்தில் மயங்கி விட்டிருந்தாள்,திவ்யா.

அதன் பின்னர் ஓரிரு முறை இவ்வாறு நடந்திடவே,பேசும் முயற்சியைக் கைவிட்டவர்கள் பையனவனிடம் விடயத்தை தெரிவித்திருந்தது.

சங்கவி வேண்டாமென மறுத்து அடம் பிடித்து விட்டார்,எங்கே மகளின் நிலை தெரிந்தால் திருமணத்தில் குழறுபடி நேர்ந்து விடும் என்று.அவரை சமாளித்த பெருமை பெண்ணவளையே சாரும்.

அவனோ,இதற்கு மேலும் தள்ளிப் போட முடியாது என்பதை உணர்ந்து,தெரிந்த மன நல மருத்துவரிடம் அவளை அழைத்து வர,முதலில் மறுத்தது,அவளின் தாயார் தான்.

பார்வதி கூட,ஒரு நிமிடம் திகைத்து விட்டார்.அவரின் முகம் கலவரத்தை காண்பிக்க,தன் தாயாரிடம் விடயத்தை கூறிய,சங்கவியின் மீது பையனுக்கு கோபமும்.

"அபிக்கோ வைஷுக்கோ இப்டி ஒரு நெலம வந்தா என்ன பண்ணுவீங்க மா..? கல்யாணத்த நிறுத்தி இருப்பீங்களா..?" அவன் வெடுக்கென்று கேட்டு விட,அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

ஏதோ ஒன்றை,மனதில் வைத்து அழுத்திக் கொண்டிருக்கும் காரணத்தால் அவளை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முயல,அதை தவறாக புரிந்து கொண்டு திருமண விடயத்தில் தாயார் குழம்பிப் போவதில் உடன்பாடு இல்லை,அவனுக்கு.

இப்படி ஒரு விடயத்துக்காக திருமணத்தை நிறுத்த யோசிப்பவனும் இல்லை,அவன்.பார்வதியின் வளர்ப்பு ஆயிற்றே.

சங்கவியை ஒப்புக் கொள்ள வைத்திடும் பொறுப்பு பெண்ணவளிடம் இருக்க,அதை செய்து முடிக்கையில் அவளுக்கு உயிரே போய் விட்டது.

ஒருவாறு,அவளை இரண்டு வாரங்களாக சிகிச்சைக்கு அழைத்து வந்தாலும்,பயனேதும் இல்லை.

இன்றும் அதற்குத் தான்,அழைத்து வந்திருந்தான்.அவனால் தான் இந்த நிலமையோ என்கின்ற குற்றவுணர்வும் இதற்கான மறைமுக காரணம் போலும்.

வண்டியில் ஏறி காரைக் கிளப்பியவனோ,எதுவும் பேசவில்லை.திவ்யா அழுது கொண்டிருக்க,செய்வதறியாமல் கையைப் பிசைந்த வண்ணம் அமர்ந்து இருந்தாள்,பெண்ணவள்.

"எனி ப்ராப்ளம்..?" அவளின் முகத்தை ஆராய்ந்தவன் வினவிட,அவனின் கேள்வியில் விழுக்கென்று நிமிர்ந்து மறுப்பாய் தலையசைத்தாள்,பெண்ணவள்.

அவனோ,லாவகமாய் வண்டியோட்டியவாறு வானொலியை இயக்கி விட,அதில் ஏனோ சில பாடல் வரிகள்,அவளுக்கு ஏற்றாற் போல்.

விழிகள் முழுக்க நீர் கட்டி விட்டது,பெண்ணவளுக்கு.அவன் காணாதிருக்க,மடியில் முகத்தை புதைத்துக் கொண்டு சாய்ந்து விட்டிருந்தாள்,அவசரமாக.

அலைபேசியில் கவனமாய் இருந்தவனும்,அவளைக் கவனிக்காது போக,அவர்களை வீட்டில் விடும் போது தான் கவனித்தான்,அவளின் விழிகளும் சிவந்து இருப்பதை.

அவளோ,முகத்தை அழுந்த துடைத்து தன்னை மீட்டுக் கொண்டிருந்தாலும்,மெல்லி சிவப்பு விழிகளில்.வேறு யாரும் கண்டிருக்கவும் மாட்டார்கள்.கண்டிருந்தாலும் கண்டு பிடிப்பது என்னவோ சாத்தியமில்லை தான்.

"எல்லாரும் அமுக்கினிங்க தான் போல.." தனக்குள் நினைத்தவனோ,"அழுதியா..?" என்றான்,இயல்பான குரலில்.

அவனின் கேள்வியில் அவளுக்கு மீளவும் விழிகள் கலங்கிற்று.பையனவனின் கேள்வியில் அவள் விழிகளில் சட்டென்று நீர் கோர்த்துக் கொள்ள,இமை சிமிட்டி அடக்கிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்து மறுப்பாய் சிரசைத்தாள்.

அவளின் கண்ணீர் அவனை ஏதோ செய்தது;அவனுக்குள் என்னவோ ஆனது.உள்ளமதில் பெயர் சொல்லிடத் தெரியா ஒரு தடுமாற்றம்.

சிறு தலையசைப்புடன் வண்டியில் ஏறிக் கிளப்பியவனின் மனமோ நிலையில்லாது போக,தடுமாறிப் போனான்,பையனவனும்.

மௌனம் பேசும்.

2025.03.29
 
Last edited:
Top