வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மௌனங்கள் பேசும்! - 12

GG writers

Moderator
மௌனங்கள் பேசும்!

மௌனம் 12

இதழ் பிரியாமல் விழிகளில் உள்ளடங்கிய புன்னகை,தமிழவனின் அதிகாரத்தில் புதுமை தான்.

அவன் தணிந்து,விழிகளில் கனிந்து,அவளிடம் பேசியெதை தோழர்கள் கண்டிருந்தால்,நெஞ்சு வலி வந்திருக்கும்.

அவள் மீது அவன் இழுத்து வைத்துக் கொள்ளும் கோபங்கள் இருந்தாலும்,அவள் முன்னே அது எதுவும செல்லுபடியாகப் போவதில்லை,என்பதை இன்னும் உணர்ந்து தொலைக்கவில்லை,பையனவன்.

"இந்தாளு ஒன்னு.." அத்தை மகன் என்றாலும் அந்நியவன் என அவள் சலித்துக் கொள்ள,அதை கண்டு கொண்டவனின் மனமும் முறுக்கிக் கொண்டது.

"அங்க எடம் இல்ல சார்.." தன்மையாய் பதில் சொன்னாலும்,அந்த விழிகளில் அது இல்லை."மேலும் பேசாதே" என விழிகள் அவனிடம் கட்டளை விதித்தது.பயம் தான்,ஆயினும் எட்ட நிறுத்தும் தன்மை அகன்று போயிருக்கவில்லை.

"ம்ம்.." என்றவனுக்கு அவளுடன் பேசவும் தன்முனைப்பு இடம் தராதிருக்க,மீளவும் இருக்கைக்கு வந்து அலைபேசியில் ஆழ்ந்தவன் நிமிர்கையில்,இருக்கையில் சாய்ந்து உறங்கி இருந்தாள்,அவள்.

வதனத்தில் அசதி தெரிய,மார்புக்கு குறுக்கே கையை கட்டியே ஒரு பக்கம் சரிந்து அவள் நித்திரையில் ஆழ்ந்திருக்க,அவன் முகமும் அளவில்லா மென்மையை தத்தெடுத்து தன்னில் பூசிக் கொண்டது,தன்னை மீறி.

அவளின் புறக்கணிப்பு,அவனின் திமிரைக் கிளப்பினாலும்,ஏனோ அது பிடித்தும் இருந்தது.

அந்த பாராமுகம்..
அந்த அழுத்தம்..
அந்த எட்ட நிறுத்தும் தன்மை..
அந்த பயம்..
எல்லாம் அவனுக்கு வெகுவாய் பிடித்துப் போகும் மாயை பிடிபடவில்லை.

அவளின் செயல் ஒவ்வொன்றும் அவளின் திமிராகத் தோன்றாது,அழுத்தமாகவே அவனுக்குத் தெரிய,அந்த அழுத்தம் அவனின அழுத்தமாய் அவள் வசம் இழுத்து இறுக்கிக் கொள்வது போல்.

அவளின் மென்மையுடன் கலந்த அழுத்தம்,அவனை அவள் புறம் ஈர்த்துத் தொலைத்திட,அந்த உணர்வுக்கும் இன்னும் அவன் எந்தவொரு பெயரையும் சூட்டியிருக்கவில்லை.

அவளிடத்தில் வேறு யார் இருந்தாலும்,அவனின் திமிருக்கும் தன் முனைப்புக்கும் முகத்தில் அடித்து விட்டு நகர்ந்து இருப்பான்.இருப்பது அவளாயிற்றே.தமிழின் மொழியாயிற்றே.

இந்த மாற்றமே போதாதா,அவளை அவனின் அவளென்று அவன் மனம் ஏற்றுக் கொள்ள துவங்கி இருப்பதை பறைசாற்றிட..?

தமிழோ,உறங்கிடவில்லை.உறக்கம் வரவுமில்லை.அடிக்கடி அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனின் ஒப்புதலின்றி அவளைத் தழுவும் விழிகளை தவிர்க்க தெரியாமல் திணறி நின்றான்,திமிர் பிடித்தவன்.

கடந்து சென்ற தாதியிருவருமே,அவனையும் அவளையும் மாறி மாறி பார்த்து,தமக்கிடையே கிசுகிசுத்துக் கொண்டு நகர்ந்து விட்டிருந்தனர்.அவர்களில் பூத்த புன்னகை அவனுக்கு வேறு செய்தி சொல்லி விட்டிருந்தது.

அவளின் உறகத்தை கலைத்து விட்டு,அவள் முழுதாய்த் தெளிந்தெழும் முன்னமே கிளம்பியவன்,கையில் இரு காஃபியுடன் வந்திட,அவளுக்கோ ஐயோவென்றிருந்தது.

யாரையும் தன்னை அண்டவிடாது,எட்டவே நிறுத்தபவளுக்கு,அத்தை மகன்,அவனின் செயலில் தவறான எண்ணத்தையும் காண முடியாவிடினும் ஏற்க இயலவில்லை.ஒருங்கே எழுந்தது,எரிச்சலும் கோபமும்.

அவனோ,ஒற்றைக் கையால் காஃபியை சுவைத்துக் கொண்டே,மற்றையதை அவளிடம் நீட்டிட,உணர்வுகளை காட்டாதிருக்க அதிகம் முயன்று தோற்றாள்,அவள்.

"நா காஃபி குடிக்கிறதில்ல..எனக்கு காஃபி புடிக்காது" சட்டமாய் அவள் உரைத்திட,அதை அவன் எதிர்ப்பார்த்து வந்திருப்பான்,போலும்.
தமிழவனின் விழிகள் கோபத்தை தத்தெடுத்தாலும்,சில நொடிகள் இயல்பாகின.

அதற்குள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்திட,அவ்விடம் பரபரப்பானது.சாந்தவியின் சொந்தங்களும் வந்திருக்க,கிளம்புவதே உசிதம் என்கின்ற யோசனை.

"கீர்த்தி வா போலாம்..இப்போ போனா தான் கெளம்பி வரும் போது டைம் சரியா இருக்கும்.." அலைபேசியை கையில் எடுத்தவாறு அவள் உரைத்திட,பொதுவாக சொல்லிக் கொண்டு கிளம்பினர்,இருவரும்.

மருதவேலின் விழிகள் அவளை சொல்லாண்ணா உணர்வுடன் தீண்ட,அவளுக்கு எப்படியோ அதைக் கண்ட தமிழவனின் மனதில் பெரும் நிறைவு.

விக்னேஷின் விழிகள் தோழனை பல கேள்விகளுடன் மொய்த்தன.அஷ்வினுக்கும் அதே எண்ணம் தான்.

இரவு அவனுக்கு அழைப்பெடுத்திட,வேலையில் இருப்பதாய் பொய் உரைத்தவனை,விடிந்தும் விடியாத பொழுதே மருத்துவமனையில் அவர்கள் எதிர்ப்பார்த்திடவில்லை.தோழனின் ஆராய்ச்சிப் பார்வை லாவகமாய் புறக்கணித்துக் கொண்டிருந்தான்,தமிழவன்.

மொழியவளும், அவளின் தோழியும் வெளியேற முனையும் சமயம்,வந்து இடை மறித்தவனைக் கண்டதும் தலை வலித்தது,அவளுக்கு.

"இந்த மனுஷன்கு என்ன தான் ஆச்சு..?" உள்ளுக்குள் புலம்பினாள்,அவள்.

"நானும் வீட்டுக்கு தான் போறேன்..வாங்க போலாம்.." என்றிட முன்னேறப் பார்த்த கீர்த்தியை தடுத்து,மறுப்பாய் தலையசைத்தாள்,அவள்.

"என்னடி..?" என அவள் கேள்வி எழுப்பும் முன்னமே,கையைக் கிள்ளி விழிகளால் அவளை அடக்கி,அவனைப் பார்த்து மென் புன்னகை சிந்திட,அவள் விழிகளில் வந்து போன ஜாலங்கள் அவன் விழிகளுல் புகுந்து உயிரில் கலந்து நெஞ்சாங்கூட்டை ஆட்டிப் பார்த்தது.

அவள் விழிகளுக்குள் தொலைந்திருந்த,விழிகளை திருப்பவே பாடு பட்டுப் போனான்,பையனவன்.விழிகளை திருப்பியதும்,நெற்றியில் புரண்ட கேசத்தை ஒதுக்கி விட்டன,விரல்கள்.

அந்த புன்னகை உண்மையென்று அவன் நினைத்திடவில்லை.நினைத்திடும் படியாகவா இருந்தது,அவள் விழியின் மொழி..?பட்டவர்த்தமனாய் மன எண்ணங்களை எடுத்துரைத்திடும் விழிகள் அவளுக்கு.அவள் மனம் அவனுக்கு புரியாது போகுமா என்ன..?

"இல்ல நாங்க இங்க இன்னொரு வேலய முடிச்சிட்டு தான் வீட்டுக்கு போகனும்.." சமாளித்தவாறு,தோழியை இழுத்துக் கொண்டு நடந்திட,கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவனோ,இதழ் குவித்து ஊதிக் கொண்டான்.

இன்னும் மருத்துவமனைக்கு வந்திட,முக்கால் மணி நேரமே இருக்க,அவள் சொன்ன பொய் புரிந்து கோபம் உண்டாகினும்,ஏனோ இன்னுமின்னும் ஆழமாகியது,அவள் மீதான கண்ணோட்டம்.

புதிராய்த் தெரிகிறாள்.அவனுக்கு புதிதாகவும் தெரிகிறாள்.அவளால் அவனுக்கு கோபம் வராதது அவனுக்கே அதிசயம் தான்.

அவள் இயல்பில் நிலைக்க,அதில் ஏனோ அவன் இயல்பை தொலைக்க,தமிழின் அகராதியில் என்னென்னவோ புதுவித சங்கேதங்கள்.

ஏதோ செய்கிறாள் என்று மட்டும் புரிந்தது.என்னவென்று ஆராயும் எண்ணமின்றி இருந்தான்,தமிழவன்.

"நேத்து நைட் எங்கடா இருந்த..?"வண்டியோட்டியவாறு வந்தவனிடம் தோழன் வினவிட,மழுப்பலாய் பதில் சொல்லி சமாளித்தான்,அவன்.

அவனிடம் உண்மையை ஒப்புக் கொள்ளவும் மனம் வரவில்லை.ஏன் என்று கேட்டால் என்ன காரணம் மொழிந்திட..?
அவனே உணர்ந்து தெளியாததை எப்படி அவனும் உரைத்திட..?

அவன் வீட்டின் அருகே வண்டியை நிறுத்திடவும்,அவள் வெளியே வரவும் சரியாய் இருக்க,அவனின் ஒரு நொடிப் பார்வை சட்டென்று அவளைத் தழுவி மீண்டது,மின்னல் வேகத்துடன்.

மறுமுறை தமிழ் தான்,மருதவேலையும் சாந்தவியையும் சென்று அழைத்து வந்தது.வந்தவனோ,அடுத்து குளித்து விட்டு வேலைத் தளத்துக்கு வந்திருக்க,வேலையில் ஆழ்ந்து போனவனுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.

நான்கரை மணி போல் வெளியே வந்தவனின் விழிகளில்,சிற்றுண்டிச் சாலையில் அமர்ந்து நேற்று கண்ட அதே ஆடவனுடன் புன்னகை முகமாய் காஃபி குடித்துக் கொண்டிருப்பவளைக் கண்டதும் உச்ச சினம்.

அவன் கண்ட அதே,ஆடவன்.தமிழின் முகம் சட்டென மாறிப் போக,விழிகளும் சிவந்து போயிற்று.

அதுவும் நேற்று இரவு அவளிடம் தன்னை மறந்து தன்மையுடன் நடந்து கொண்டது நினைவில் வர,தன் மீதே கட்டுங்கடங்கிடாத கோபம்,அவனுக்கு.

"ச்சைக்.." தனக்கே திட்டிக் கொண்டவனுக்கு,தன்னிலை மறந்ததால் உண்டாகிய ஆத்திரம் எல்லாம் அவள் மீது திரும்பிட,அதை உணராமல் புன்னகையுடன் உரையாடிக் கொண்டிருந்தாள்,அவள்.

"பிசாசு.." இதழ்கள் கடுகடுப்புடன் அசைந்து கொடுத்திட,விருட்டென்று அவன் நகர்ந்து விட்டாலும் அவன் மனம் ஆறவில்லை.

இரவு கவிழ்ந்திருந்த நேரம் அது.வானெங்கும் விண்மீன்கள் நிரம்பியிருக்க,இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதுக்குள் பலவித யோசனைகள்.

"என்னடி யோசிச்சிகிட்டு இருக்க..?" தோளைத் தட்டி வினவிய கீர்த்திக்கு மறுப்பாய் தலையசைத்து விட்டு மென் புன்னகையொன்றை பதிலாகக் கொடுத்தாள்,அவள்.

"சரி வா ஆன்டிய போய் பாத்துட்டு வர்லாம்..இப்போ அவங்க வீட்ல ஆளுங்க இல்ல.." என்றதும்,இருவரும் கிளம்பிச் செல்ல,இன்முகமாய் அவர்களை வரவேற்றார்,மருதவேல்.

அவரின் பார்வையில் நன்றியுணர்வு நிரம்பி வழிந்தது.முன்பிருந்தே,மொழியவள் மீது அவருக்கு தனிப்பட்ட ப்ரியம்,அவளின் நடத்தைகளால்.நேற்று அது இன்னும் ஒரு படி கூடிப் போனது என்பது மிகையாகா.

கூடத்து சோபாவில் சரிந்தவாக்கில் அமர்ந்து இருந்தார்,சாந்தவி.மருத்துவமனையில் இருந்து வந்தாலும்,இன்னும் அவரின் தேகசுகம் சீராகியிருக்கவில்லை,முழுதாய்.

"ஆன்டி இப்போ எப்டி இருக்கு..?"

"பரவால அரசி..கொஞ்சம் டயர்டா இருக்கு அதான்.."

"மாத்திர போட்டீங்களா ஆன்டி..?"

"ஆமா கீர்த்தி இப்போ கொஞ்சத்துக்கு முன்னாடி தான் போட்டேன்.."

"ம்ம்..பத்ரமா இருங்க ஆன்டி.." என்று மொழியவள் கூறுகையிலே,வாசலில் நிழலாடிட,நிமிர்ந்து பார்த்திட்டவளின் விழிகளுக்குள் தமிழவனின் விம்பம்.

தோழர்களும் அவனும் சாந்தவியை பார்த்து விட்டு கிளம்ப வந்திருக்க,எதிர்பாரா விதமாய் அவனுக்கு தேவி தரிசனம்.அவனை மீறி விழியோரம் மினுமினுப்பு தோன்றி நொடி நேரத்தில் மறைந்து போனது.

மொழியவளோ,சட்டென்று எழுந்து ஓரமாய்ச் சென்று நின்று கொள்ள,கீர்த்தியும் அவளைப் பின் தொடர்ந்தாள்.

வந்தவர்கள் இருவரும் பொதுவான சுக நல விசாரிப்புக்களை முடித்திருக்க,சாந்தவியை அறைக்குள் அழைத்துச் சென்றனர்,பெண்கள் இருவரும்.

காஃபி போடுவதாக எழுந்து சென்றவரை திருப்பி அனுப்பி இருந்தாள் பெண்ணவள்,அவளே காஃபி கலக்கிக் கொண்டு வருவதாக.
பையனவன் மறுத்து விட்டான்,காஃபி வேண்டாமென.அவன் தான் வெளியிடங்களில் காஃபி குடிக்க மாட்டானே.

இருவர் அமரும் சோபாவில் தமிழவனும் தோழனும் அமர்ந்திருக்க,அவர்களுக்கு முன்னே இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து இருந்தார்,மருதவேல்.அவரின் பக்கமாய் அஷ்வின்.

"ரொம்ப நல்ல பொண்ணுங்க ரெண்டு பேரும்..பெத்தவங்க கொடுத்து வச்சவங்க.." மனதார அவர் சொல்லிட,என்ன எதிர்வினையாற்றிட என்று தெரியாமல் குழம்பிப் போனான்,தமிழவன்.

அவள் மீது உண்டான கோபம் ஒரு புறமிருக்க,மறு புறமோ அவனையறியாது அவள் மீது ஆழ்மனதில் வேர்ப்பிடித்திருக்கும் காதல்.புறக்கணித்திடவும் முடியாமல்,ஏற்று நெகிழ்ந்திடவும் முடியாமல் மழுப்பலான முகபாவம் காட்டினான்.

"உங்க ஊரு பக்கம் தான் அதுல ஒரு பொண்ணு..அரசிய தெரியும் தான.." என்றிட,தொண்டைக்குழிக்குள் சிக்கின,வார்த்தைகள்.

ஆழமாய் மூச்சிழுத்து தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவனோ,உதடு பிதுக்கலுடன் மறுப்பாய் தலையசைத்திட்டான்.அஷ்வினின் விழிகளில் அதிர்வெதுவும் தோன்றவில்லை.

அதற்குள் சமயலறையில் இருந்து,"அங்கிள்" என்று அவள் அழைத்திட,எழுந்து சென்று காஃபியுடன் வந்தார்,அவர்.

சற்று நேரத்தில் மூவரும் கிளம்பிச் செல்ல,அதன் பின்னரே மாடியேறினர்,பெண்கள் இருவரும்.

"அங்கிள் சொல்ற மாதிரி ரொம்ப நல்ல பொண்ணு தான் போல..பாரேன் நேத்து அந்தம்மாவுக்காக தனியா ஹாஸ்பிடல்ல நின்னுருக்கு.." கூறிய தோழனின் வார்த்தைகளில் புரையேறிற்று,தமிழவனுக்கு.அஷ்வனின் பார்வை கள்ளமாய் பையனவனைத் தொட்டது.

"ஏன் அப்டி சொல்ற..?" மடிக்கணினியில் இருந்து பார்வையைத் திருப்பி கேட்டவனை புதிராகப் பார்த்தான்,தோழன்.பையனவன் அப்படி அடுத்தவர்களைப் பற்றி கதைப்பது கிடையாதே.

"எங்கண்ணனுக்கு வீட்ல பொண்ணு பாக்கறாங்கல.."

"அதுக்கு.." தமிழவனின் விழிகளில் கொஞ்சம் அனல் சேர்ந்தது.கேட்ட தொனியே வில்லங்கம் தான்.

"எங்க அண்ணனும் சாஃப்ட் தான..அதான் இந்த பொண்ண பத்தி வீட்ல சொல்லி கேக்க சொல்லலாம்னு.."

"செருப்பால அடிப்பேன்.." சிதறிய சில்லறையாய்,நொடி தாமதியாது இதழ்கள் வார்த்தைகளை உதிர்த்து இருந்தன.

"எதே?!" விக்னேஷ் அதிர,அஷ்வினின் புருவங்கள் உயர்ந்து நின்றன.

"வாய்ல நல்ல வார்த்தயா வந்துரும்..வாய மூடு.." விழிகளை இறுகப் பொத்தி ஆழமாய் மூச்சிழுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,தோழனைப் பார்த்திட,அவனோ புரியாத பாவத்துடன் நோக்கிக் கொண்டிருந்தான்.

"எங்க அண்ணனுக்கு பொண்ணு கேக்கறேன்னு.."

"ஒரு மண்ணும் தேவல.." காய்ந்து விழ,தோழனுக்கு எதுவும் புரியவில்லை.மற்றையவனுக்கு ஏதோ ஒன்றை ஊகிக்க முடிவது போல்.

"நீ எதுக்குடா கோவப்பட்ற..?" புரியாத திகைத்து,அவன் வினவிடவுமே,தன்னிலை உரைத்தது,தமிழவனுக்கு.

மொழியவள்,அவன் மொழிகளின் வரம்பினை தகர்க்க வைத்திட,தமிழவனின் தமிழும் தன்னிலை மறந்திடுது,போலும்.

"ச்சைக்க்க்.." தன்னைத் தானே திட்டிக் கொண்டவன்,இதழ் குவித்து ஊதி,தன்னை நிலைப்படுத்திக் கொண்டதெல்லாம் வேறு கதை.

"ஒன்னுல்ல மச்சான்..ஸ்டெரஸ்ஸா இருந்துச்சு அதான் இப்டி பிஹேவ் பண்ணி இருப்பேன் போல.." உப்பு சப்பின்றி பொருந்தாத ஒரு காரணத்தை, ஒப்புவித்து விட்டு,குளியலறைக்குள் நுழைந்திட,புரியாது பார்த்திருந்தான்,தோழர்கள்.

"பேய் புடிச்சி இருக்கா இவனுக்கு..? மாத்தி மாத்தி பேசி நம்மள சாவடிக்கிறான்.." உள்ளுக்குள் முணகியவாறு கட்டிலில் சரிந்து விட்டான்.

அன்று இரவு முழுக்க உறக்கமில்லை,தமிழவனுக்கு.தோழனுடனான சம்பாஷணையை மனதில் ஓடி,அவனை பெரும் அலைக்கழிப்புக்குள் தள்ளின.அஷ்வினின் பார்வை வேறு,அவனுக்கு உவப்பாகப் படவில்லை.

எந்த இடத்திலும் நிதானம் தப்பாதவன் அவன்.அவசரப்பட்டு தோழனிடம் வாயை விட்ட தன்னை எண்ணி நொந்தவாறு விழித்துக் கிடந்தான்,விட்டத்தில் விழிகளை மேய விட்டு.

அத்தை மகளாக அவளைத் தெரியும்.அவளுடன் அவ்வளவாய் பழக்கமும் இல்லை.மற்றையவர்கள் அடிக்கடி அவர்களின் வீட்டுக்கு வந்து சென்றாலும்,இவள் தலையைக் காட்டுவது குறைவு தான்.

அப்படியே வந்தாலும்,வைஷ்ணவியுடன் இருந்து விட்டுக் கிளம்புவாளே தவிர,மற்றைய எவருடன் பெரிதாக பேச மாட்டாள்.

அவனுக்கும் யாருடன் வழியச் சென்று பேசிடும் பழக்கம் இருந்திடாத பட்சத்தில்,அவளுடன் பேசுவதேயில்லை.வேறிடத்தில் அவளைக் கண்டால் புன்னகைப்பதும் இல்லை.

இருவரும் கண்டும் காணதது போல் கடந்து விடுவதே வாடிக்கை என்றிருக்க பெரிதும் குழப்பி விட்டன,புதிதாய் அவனுக்குள் வேர் விட்டிருக்கும் மாற்றங்கள்.

அவ்வப்போது அவனின் கவனம் அவள் மீது பதிவது உண்டு;பார்வை படிவதும் உண்டு.

அவளின் அழுத்தமும் நிமிர்வும் அவனின் கவனத்தை கொஞ்சமாய் திருப்பி இருந்தாலும்,அதற்கு ஈர்ப்பென்று பெயர் சூட்டிடவும் முடியாதிருக்க,இப்பொழுது நிலைமையோ தலைகீழாய்.

பெருமூச்சு விட்டுக் கொண்டான்,தன் நடத்தையை எண்ணி.குட்டை முடியுடன் ஓடித் திரிந்தவளின் விம்பம் விழிகளில் நிழலாட,தலையை உலுக்கிக் கொண்டு மீட்டு மறுபுறம் சரிந்து படுத்தாலும்,உறக்கத்தின் நாமமும் இல்லை,இமைகளின் ஓரத்தில்.

எழுந்து கொண்டு வெளியே வந்து மொட்டை மாடியில் தரித்திட,எதிர்வீட்டு யன்னலின் ஊடு கசிந்த வெளிச்சத்தில் அவள் நிழல் தெரிந்தது.
அந்த நிழலில் அவள் விழிகளிலும் நிறைந்தது.

புன்னகைப்பது போன்ற சாயல் புலப்பட அவனுக்கே தெரியாத,சின்னப் புன்னகை இதழ்களில்,யாராலும் கண்டுகொள்ள இயலாததாய்.

மொழியவளின் இழுப்புக்கு தமிழவனும் இசைந்து போகிறானோ என்னவோ..?

இதழோரம் உருப்பெற்ற நெளிவில் தெளிந்தவனோ,அழுத்தமாய் இதழ்களை ஒட்ட வைத்துக் கொள்ள,இம்சையாய் ஒரு உணர்வு,அவனில் முதன் முறையாய்.

மௌனம் பேசும்!

2025.04.01
 
Top