வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன்(அத்தியாயம்-26)

GG writers

Moderator
ரேணுகா 💝வேலன்
(அத்தியாயம் -26)

அதன்பின் 6 மாதங்களுக்கு பிறகு..தன் மகன்
சக்தியோடு ரேணுகா மற்றும் வேலன் பூமாவின் திருமணத்திற்காக சக்தி-விஜயகுமாரை அழைத்துவர காஷ்மீர் போனார்கள்.

அங்கு வீட்டில் சக்தியும்-விஜயகுமாரும் கால்பந்து விளையாட.. “நான் தான் டா ஜெயிப்பேன்”என்றாள் சக்தி.

“நான் விட்டாதானடி ஜெயிப்ப” என்று இருவரும் விடாது வீட்டை சுற்றி பந்தை உதைத்து விளையாட அந்நேரம் வந்த ரேணுகா, வேலனை பார்த்து “ஏய் அண்ணன்,அண்ணி” என்று பந்தை விட்டாள் சக்தி.

“ஏய் நான் தான் டி வின்” என்றான் விஜய்.

பின் ரேணுகா-வேலனை பார்த்து“மச்சான்,தங்கச்சி வாம்மா” என்று அழைத்தான்.

அவர்களை அமர வைத்து விருந்து உபசரித்தனர்.

அதன் பின் “நீ தோத்துட்ட சக்தி மச்சான் கூட ஊருக்கு கிளம்பு” என்றான் விஜய்.

“ஏய் அது எப்படி அண்ணியை பார்த்ததாலதான் விட்டேன்.”

“அது எல்லாம் பேச்சு கிடையாது நீ விட்ருக்க
கூடாது” என்றான் விஜய்.

“என்னடா மாப்ள பேசுறீங்க” என்று கேட்டான்
வேலன்.

“அத நான் சொல்றன் உன் மாப்ள பூமா கல்யாணத்துக்கு வரலையாம் லீவு கேட்க மாட்டாராம்..அதனாலதான் பெட் வச்சு புஃட் பால்
விளையாடுனோம் கடைசில நீங்க அவன ஜெயிக்க வச்சுட்டீங்க” என்றாள் சக்தி.

“டாக்டரே நீ போய் கிளம்பு பெட் பெட்டுதான்”என்று அவளை அறைக்குள் அனுப்பி வைத்தான் விஜய்.

“அண்ணன் நீங்க வராம எப்படி” என்று கேட்டாள் ரேணுகா.

“ஆமாடா மாப்ள வாடா” என்றான் வேலன்.

“சக்தியோட மெட்டர்னிட்டி டைம்ல எல்லா நாளும் அவ கூட இருக்கணும்,அதான் லீவு எடுக்காம ஓடுறேன்,தப்பா நினைச்சுக்காதீங்க அவகிட்ட இதை சொல்லிடாதீங்க..”என்று கேட்டு கொண்டான் விஜய்.

“விஜய் மாதிரி நான் யாரையும் பார்க்கல ரேணுகா என் தங்கச்சி ரொம்ப லக்கி டா மாப்ள” என்றான் வேலன்.

“போடா மச்சான் அவ கிடைச்சதுக்கு நான் தான் லக்கி..”என்றான் விஜய்.

“குட்டி சக்தியை கொடு தங்கச்சி” என்று மருமகனை கையில் வாங்கியபடி “சரி உன் நாத்தனார் ரெடி ஆயிட்டாளான்னு பார்த்துட்டு வர்றேன்” என்று சொல்லி போனான் விஜய்.

சக்தி ரூமில் ரெடியாகி முகத்தை பாவமாய்
வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

“என் சக்தி செல்லம், சக்தி தங்கம் ஏன் முகத்தை உம்முன்னு வச்சிருக்கீங்க பார்க்க நல்லா இல்ல” என்று மருமகனை கொஞ்சியபடி அவளிடம் ஜாடையாய் சொன்னான் விஜய்.

அதற்கும் அமைதியாய் அவனை நோக்கினாள் சக்தி.

விஜய் குழந்தை சக்தியின் பிஞ்சு கைவிரல்களை அத்தை சக்தியின் கன்னங்களில் மோத வைத்ததும் தன்னை மறந்து சிரித்து மருமகனை கையில்
வாங்கினாள் சக்தி.

“கோபம் போயிருச்சா,எதுவும் பேசாம ஜாலியா போயிட்டு வா” என்று சக்தியை, ரேணுகா, வேலனுடன் அனுப்பி வைத்தான் விஜய்.

அதன்பின் பூமா திருமணம் நல்லபடியாக நடந்து முடிய சக்தி வீட்டில் மீண்டும் காஷ்மீர் கிளம்ப துணிகளை எடுத்து வைக்க..ரேணுகா வந்தாள்.

“சக்தி என்னடி ஆர்மி யூனிபார்ம் சேலையை ஏன் டி கொண்டு வந்த” என்றாள்.

“அது உன் அண்ணன் என்கிட்ட ஏதாச்சும் சொல்லணும்னா லெட்டர் எழுதி என் யூனிபார்ம் பாக்கெட்ல வச்சிருவான்.. நானும் பதில் எழுதி அவன் யூனிபார்ம் பாக்கெட்ல வச்சிருவேன்” என்றாள் சக்தி.

“நல்ல புருஷன் பொண்டாட்டி டி நீங்க.....”

“என்ன டி பண்றது சம்-டைம்ஸ் ஒருத்தரையொருத்தர் மீட் பண்ண கூட முடியாது”என்றாள் சக்தி.

“அது சரி சம்மந்தி அம்மா எப்ப என் பையனுக்கு
பொண்ணு பெத்து தரப் போறீங்க” என்று கேட்டாள் ரேணுகா.

“ஆசதான் டி உனக்கு..எனக்கு பையன் தான் வேணும் விஜி மாதிரி.. நீ பொண்ணு பெத்துக்கோ டி”என்றாள் சக்தி.

“சரிமா மருமகனயாச்சும் சீக்கிரம் பெத்துகொடு” என்றாள் ரேணுகா.

“சீக்கிரம் சொல்றேன் சரியா..”என்றதும் ஒரு சேர இருவரும் சிரித்தனர்.

அதன்பின் சக்தியை மீண்டும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த 2 வருடத்திற்கு பின் சக்திக்கு சீமந்தம்
செய்து அவளை விஜயகுமாரும்,அவளது
அம்மாவும் இரயிலில் அழைத்து வர கோபமாய் அமர்ந்திருந்தாள் சக்தி.

“ஏன்மா உன் கோபம் இன்னும் குறையலையா” என்று கேட்டான் விஜய்.

“அதெல்லாம் குறையாது..என் வளைகாப்புல எல்லாரும் இருந்தாங்க, ஆனா ரேணுகா வரல ல.. என்ன விட அவளுக்கு வேலை பெரிசா போச்சுல”என்றாள் சக்தி.

“சரி டென்சன் ஆகாத..”என்றான் விஜய்.

அவளது அம்மா சக்தியை பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தாள்.

“என்ன அத்தை சிரிக்குறிங்க” என்று கேட்டான் விஜய்.

“நீங்க பயப்படாதீங்க மாப்ள இவ கோபம் அவள பார்த்த உடனே காணாம போயிடும்.”

“நான் உன் மருமகள பார்த்தா தானே..”என்று கோபமாய் பதில் சொன்னாள் சக்தி.

மீண்டும் அவள் அம்மா சிரிக்க..புரியாமல் பார்த்தான் விஜய்.

“மாப்ளை அவ நாத்தனாரேன்னு கூப்பிட்டு கண்ல 4 சொட்டு கண்ணீர் விட்டா போதும் உங்க பொண்டாட்டி உருகி ஊத்திருவா” என்றாள் அம்மா.

“அதையும் பார்ப்போம்” என்றாள் சக்தி.

பயணம் முடிந்து சக்தி-விஜயகுமார், அம்மா வீடு போய் சேர்ந்தனர்.

விஜயகுமாரை நோக்கி இரண்டரை வயது குழந்தையான மருமகன் சக்தி ஓடி வந்து
மாமாவின் கால்களை பற்றவே..
குழந்தை சக்தியை தூக்கி கையில் வைத்தபடி ரேணுகாவை ஆச்சர்யமாய் பார்த்தான் விஜயகுமார்.

“ஹேய் சக்தி அங்க பாரு”என்று அவன் சொல்ல அவளோ “நான் பார்க்க மாட்டேன்” என்று திரும்பி நின்றாள்.

“நாத்தனாரே சாரி நாத்தனாரே” என்று இடைவிடாமல் அழைத்தவாறு சக்தியின் முன்னால் வந்து நின்றாள் ஐந்தரை மாத கர்ப்பிணியாக ரேணுகா.

“ஹேய் அண்ணி சொல்லவே இல்லடி நீ..”

“சூப்பர் தங்கச்சி சரியான போட்டி” என்றான் விஜய்.

“அம்மா ஏன் மா நீ கூட சொல்லல” என்று கேட்டாள் சக்தி.

“உன் அண்ணன் அண்ணிதான் சர்பிரைஸ் ஆக இருக்கணும்னு சொல்ல விடலம்மா” என்றாள் அம்மா.

பேசி கொண்டு இருக்கவே சக்திக்கு வாந்தி வர அவள் வேகமாய் அவ்விடம் விட்டு நகர,குட்டி சக்தியை தன் அத்தை கைகளில் கொடுத்து விட்டு வேகமாய் சென்று சக்தியின் தலையை பிடித்தான் விஜய்,
வாந்திக்கு பின் அவளை அமர வைத்து தன் வேட்டியால் வேகமாய் அவள் வாயை துடைத்து
விட்டான் விஜய்.

“ஹேய் விஜி..இது நம்ம வீடு இல்ல.. எல்லாரும்
பார்க்கிறாங்க” என்றாள் வெட்கத்துடன் சக்தி.

“சாரி டி மறந்துட்டேன்” என்றான் விஜய்.

அனைவரும் சிரித்தபடி அவர்களை கடந்து
போயினர்.

அடுத்த 2 மாதங்களில் சக்திக்கு பிரசவமாகி அவள் விரும்பியது போலவே மகன் பிறந்தான்.

விஜயகுமார் மகனை கையில் வாங்கி ஆசையாய் பார்த்து “வேலன்” என்று பெயர் சொல்லி குழந்தையை முத்தமிட்டான்.

வேலன் கண்கலங்க “டேய் மாப்ள என்னடா வேற பெயர் வைக்கலாம்ல..”

விஜய் குழந்தையை பார்த்து “வேலா நீ உன் மாமா வேலன் மாதிரி அம்மாவையும், கூடப்பிறந்தவங்களையும்,மனைவியையும் அன்பா பார்த்துக்கணும்..” என்று குழந்தையிடம் சொல்லிவிட்டு திரும்பி “டேய் மச்சான் உன்ன விட குடும்பத்தை பொறுப்பா பார்க்கிறவன நான் பார்த்ததே இல்ல.. நீ ரியல் ஹீரோ டா..என் வேலன் உன்ன மாதிரி இருக்கணும் ரியல் ஹீரோ வா”என்றான் விஜய்.

சக்தியின் அம்மா இவர்கள் நால்வரையும் குழந்தையையும் சேர்த்து சுத்தி போட்டு “என்
பிள்ளைங்க எப்பவும் இதே போல ஒன்னா இருக்கணும்” என்று கண்கலங்க மகிழ்வாய் சொன்னாள்.

விஜயகுமார் ரேணுகாவின் ஏழரை மாத வயிற்றில் உள்ள குழந்தையை பார்த்து “என்னம்மா உன் புருஷன் வேலன் வந்துட்டான்,நீ எப்ப வரப் போற” என்று கேட்டதும்.

குழந்தை வயிற்றினுள் துள்ளியது “அண்ணா நீங்க பேசுனா குழந்தை ரெஸ்பாண்டு பண்ணுறா ”என்றாள் ரேணுகா.

“அப்ப உனக்கு 2வது பையன் தான் ரேணுகா” என்றாள் சக்தி.

“ஹேய் போடி விஜயகுமார் மருமக உள்ள இருக்கா..என்னடா வேலா உன் பொண்டாட்டிய சீக்கிரம் வர சொல்லு பார்க்கணும்” என்றான் தன் மகனை பார்த்து விஜய்.

“ஹலோ சார் என் அண்ணன் வேலனுக்கு இன்னும் 2 சிஸ்டர்ஸ் இருக்காங்க என்ன தைரியத்துல வேலன் பொண்டாட்டினு சொல்றீங்க” என்று கேட்டாள் சக்தி.

“என்ன மச்சான் இப்ப உள்ள இருக்கிற என் மருமகள எனக்கு கொடுத்துருங்க..உங்க அக்கா,தங்கச்சிக்கு உங்கப்பா மாதிரி 2 பொண்ணு எக்ஸ்ட்ரா பெத்து கொடுத்துருங்க” என்றான் விஜய்.

“மாப்ள நாம் இருவர் நமக்கு இருவர் என் மகன் சக்தி பாவம்ல..”

சிறிது நாட்களுக்கு பின் வீட்டில் அம்மா கோபமாய் சக்தியிடம் “நீ காஷ்மீர்லேயே இருந்திருக்கலாம்” என்றாள்.

“ஏன்ம்மா..”

“பின்ன மருமகன் ஒரு வேலை உனக்கோ உன்
மகனுக்கோ செய்ய விட மாட்டேன்றார்..”

“அம்மா விஜி எப்பவும் அப்படிதான்...இதுக்கு போய் கோபப்படுவியா?”

“இல்லடி நீ சாப்பிடுற பத்திய சாப்பாடுதான்
அவரும் சாப்பிடறார் அதுதான் கோபம்” என்று
அம்மா சொல்லும் போதே விஜய் உள்ளே வந்தான்.

“ஏன் மாப்ள யாராவது உங்கள இப்படி பார்த்தா 3 பொம்பளைங்க இருந்துட்டு உங்கள வேலையை செய்ய வைக்குறோம்ன்னு தப்பா நினைக்கிறது மட்டுமில்லாம உங்கள ஏதாச்சும் தப்பா சொல்லிட்டா..உங்கம்மா இருந்தா இப்படி வேலை செய்ய விடுவாங்களா..?” என்றாள் சக்தியின் அம்மா.

“அத்தை நீங்கதான என் அம்மா..தங்கச்சி மாசமா இருக்கா,பொண்டாட்டி குழந்தை பெத்துருக்கா,அம்மா நீங்க வயசானவங்க உங்க மகன்,பேரனையும் சேர்த்து பார்க்கணும். நான் ஆம்பள மாப்ளன்னு சொல்லிட்டு சும்மா இருக்கணும்ல..பேசுறவன பத்தி எல்லாம் நீங்க யோசிக்காதீங்க அம்மா பழி சொல்றவனுக்கு வழி சொல்லவும் தெரியாது, பிறருடைய வலிகளும் புரியாது, என் மனைவி எனக்கானவ, அவளுக்காக நான் எதுவும் செய்வேன் நீங்க எதுவும் ஃபீல் பண்ணாதீங்க ” என்றான் விஜய்.

“சக்தி உன் அப்பா,அண்ணன விட ஒரு நல்ல மனுஷன கடவுள் உனக்கு கொடுத்துருக்கார்..மனசார சொல்றேன் கர்வம்,கள்ளம்,கபடம் இல்லாத மகன் என் மருமகன் விஜய்” என்று மனநிறைவாய் சொல்லி அறையை விட்டு போனாள் அம்மா.

“விஜி இங்க வாயென்..”என்று அருகில் அமர அழைத்தாள் சக்தி.

அவன் அருகில் அமர்ந்ததும், “ஏன் இப்படி பண்ற ?”என்று கேட்டாள் சக்தி

“நான் என்னடி பண்ணுனேன்..”

“ஏன் பத்திய சாப்பாடு சாப்பிடுற..சரியான சாப்பாடு எடுத்துக்கலன்னா எப்படி டா ஆர்மி-ஃ பீல்ட் ல போய் சண்ட போடுவ..”

“ஹேய் நீ வாய்க்கு ருசியா சாப்பிடாத போது நான் மட்டும் எப்படி டி சாப்பிடறது”

“டேய் நீ ஒரு சோல்ஜர் இப்படி சாப்பாடு மாத்தி எடுத்துக்கிட்டா உன் பலம் குறைஞ்சிடும் டா”என்றாள் கவலையாக சக்தி.

அவள் தோள்களில் கை போட்டு, அவளை நெருக்கத்தில் பார்த்து “என் சக்தியே நீ தான் டி சக்தி.. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் நீ என் மடியில தூங்கு, இராத்திரி எல்லாம் வேலனோட நீ சரியா தூங்கல” என்று அவளை மடியில் சாய்த்து தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.

ரேணுகா சக்தி அறைக்கு தற்செயலாய் வர
விஜயகுமார் மடியில் சக்தி தூங்க மகன் வேலனை தோளில் போட்டு அவர் தூங்க வைக்க பார்ப்பதற்கே இப்படியும் ஒரு அன்பானவரா என்று வியக்க வைத்தது.

அண்ணன் வேலன் சத்தமாய் வந்து அவர்களை எழுப்பி விட்டான்.

விஜயகுமார் ரேணுகாவின் வயிற்றின் சிசுவை பார்த்து “என்ன மருமகளே எப்ப வருவ..உன்ன பார்க்க ஆசையா மாமா வெயிட் பண்றேன்.”

“விஜி ஆரம்பிச்சிட்டியா” என்று கேட்டாள் சக்தி.

“நீ சொல்லுமா ரேணுகா மருமகள என் மகனுக்கு தருவியா..”

“அண்ணன் உங்க மகன் உங்கள மாதிரி இருந்தா கண்ண மூடிட்டு என் பொண்ண கொடுத்துருவேன்”
என்று பதில் சொன்னாள் ரேணுகா.

“ஆனா மாப்ள நான் என் பொண்ண கொடுக்க மாட்டேன்” என்றான் வேலன்.

“அப்படி சொல்லுடா வேலா ரொம்பதான் பண்றாங்க இவங்க 2 பேரும்” என்றாள் சக்தி.

“டேய் வேலா என் பேரன் வேலன் உரிமையோட வந்து உன்கிட்ட கேட்பான்,மாமா என் பொண்டாட்டியை எனக்கே கொடுன்னு வந்து
நிற்பான்,உன்னால அவன ஒன்னுமே செய்ய முடியாது” என்றாள் வேலனின் அம்மா.

“அய்யோ அம்மா நீயும் அந்த அண்ணன் தங்கச்சி கூட சேர்ந்துட்டியா..?”என்று கேட்டாள் சக்தி.

அதன்பின் சக்தி ரேணுகாவின் வயிற்றின் சிசுவை பார்த்து “நீ அவ்ளோ ஸ்பெஷலா..உன் மாமா உன்ன இப்படி தாங்குறான்.. வெளியில வா மாமியார் யார்ன்னு காட்டுறேன்” என்றாள்.

விஜய் ரேணுகாவின் வயிற்றின் சிசுவை பார்த்து “நீ பயப்படாத மருமகளே உன் மாமியார் நியாயமா இருந்து நம்மள டார்ச்சர் பண்ணுவா, நாம 2 பேரும் சேர்ந்து அவள லவ்-டார்ச்சர் பண்ணுவோம்..”

“என்ன டா பண்ணுவீங்க 2 பேரும்” என்று கேட்டாள் சக்தி.

அவன் மீண்டும் ரேணுகாவின் வயிற்றை பார்த்து.. “மருமகளே உன் மாமியாரை டாக்டரேன்னு கூப்பிடு உருகிடுவா..”

“ஹேய் விஜி உன்ன” என்று சிரித்தவாறே
அடித்தாள் சக்தி.

சில நாட்களுக்கு பின் ரேணுகாவின் 2வது
குழந்தைக்கு பெயர் வைக்க ரேணுகா,வேலன் மற்றும் சக்தி விஜயகுமார் கலந்து யோசித்தபோது..

சக்தியும் வேலனும் சேர்ந்து “பையன் பிறந்தா என் அப்பா பெயரும்,உன் அப்பா பெயரும் சேர்த்து வெங்கட ராஜன்னு வைக்கலாம்” என்றனர்.

ரேணுகா மற்றும் விஜய்குமார் சேர்ந்து யோசித்து பொண்ணு பிறந்தா“உங்கம்மா பெயரும் எங்கம்மா பெயரும் சேர்த்து சித்ரலேகான்னு வைக்கலாம்” என்றனர்.

அப்பொழுது சக்தி “ஏன் இவ்வளவு கஷ்டம் உன் ரிப்போர்ட்ஸ் கொடு பையனா, பொண்ணான்னு சொல்லிடுறேன்” என்றாள்.

“நீ கொடுக்காத தங்கச்சி..டாக்டரே..என் மருமகள நீ ஒன்னும் கண்டுபிடிக்க வேண்டாம்..”என்றான் விஜய்.

“விஜி நீ கொஞ்சம் ஓவரா-தான் பண்ற” என்றாள் சக்தி.

அந்நேரம் டெலிபோன் அடிக்க விஜய் போய் எடுத்து பேசிவிட்டு அமைதியாய் சங்கடமாய் சக்தி அருகில் வந்தான்.

“என்னாச்சு விஜி..”

“காஷ்மீர் போணும் கமாண்டர் தான் போன்
பண்ணார்” என்றான்.

அவளும் அமைதியாக “சரி நீ ரெடியாகு..”என்றாள்.

சிறிது நேரத்திற்கு பின் விஜய்குமார் மகன்
வேலனை கையில் தூக்கி கொஞ்சி முத்தமிட்டு “அம்மாவை நீ நல்லா பார்த்துக்கணும் டா” என்றார்.

சக்திக்குள் சொல்ல முடியாத வலி விஜயகுமாரை பிரிவது நினைத்து ஆனால் வலிகளை மறைத்து சிரித்தபடி விஜியைபார்க்க திரும்பினாள். “இப்படியே எவ்வளவு நேரம் பேசிட்டிருப்ப டிரெயின் டைம் ஆயிடும் கிளம்பு”என்றாள்.

“டாக்டரே நான் சீக்கிரமாய் திரும்பி வந்துருவேன் ஃபீல் பண்ணாத”

“நான் ஃபீல் பண்ணனா டா உன்கிட்ட..”

“நீ சொல்ல மாட்ட டாக்டரே,சொன்னா நான் உடைஞ்சிருவேன்னு தெரியும் உனக்கு..”

“டைம் ஆகலையா.. நிறைய தடவை நீ இதே
மாதிரி போயிருக்கலடா.”.

“அப்ப எல்லாம் நீ காஷ்மீர்ல இருந்த டி..இப்ப ஏதோ மாறி இருக்கு உன்ன,வேலன விட்டு போக மனசே வரல..”என்றான்.

“விஜி என்ன பாரு நாட்டுக்கு தேவையானப்ப
நாம சேவை செய்யணுமில்ல..அது நம்ம 2 பேரோட டியூட்டி தான..”என்றாள்.

விஜய்குமார் சோகமாக சக்தியை பார்க்கவே...

அவள் அவன் முகங்களை பிடித்து..கண் கலங்க “சரி அப்ப நானும் உன் கூடவே கிளம்பவா..”என்று கேட்டாள் சக்தி.

“வேணாம் அங்க வந்தா நீ தனியா கஷ்டப்படுவ..இங்க எல்லார் கூடவும் இரு”
என்றான்.

“சரி அப்ப நீ சிரிச்சிட்டே கிளம்பணும்.. இல்லன்னா உன் கூடதான் வருவேன் பார்த்துக்கோ” என்றாள் சக்தி.

“சரி” என்று சிரித்தவன்..சக்தி கையில் செயினை கொடுத்து “மருமக பிறந்ததும் போட்ரு” என்றான்.

“ஹேய் இது என்ன சி.எல்.வின்னு டாலர்” என்று கேட்டாள்.

“சித்ரலேகா வேலன்” என்றான் விஜி.

“டேய் இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசுனோம் அதுக்குள்ள எப்படி டாலர்..”

“நானும்,தங்கச்சியும் முன்னாடியே பேசிட்டோம்”
என்றான்.

“பையன் பிறந்தா என்ன செய்வ..”

“டாலர் கழட்டிட்டு செயின மட்டும் போடு டி ஆனா மருமகதான் பிறப்பா”

“தெரியாமதான் கேட்குறேன் மருமக மேல
ஏன் இவ்ளோ பாசம் உனக்கு..”

“எனக்கு தோணுது சக்தி.. நீ என்னோட சக்தி..என் மருமக மகன் வேலனோட சக்தின்னு..”

“இருந்தாலும் உனக்கு பேராசைதான் விஜி, நானும்,வேலனும் மாமா-பொண்ணயோ, அத்தை பையனையோ கல்யாணம் பண்ல.
நாங்க சந்தோசமா வாழலையா?” என்று கேட்டாள்.

“நம்ம பையனுக்கு பொண்ணு எங்கன்னாலும் கிடைக்கும். உன்ன மாதிரி ஒரு பொண்ணு
வேணும்னா அது உன் அண்ணன் வாரிசா
மட்டும்தான் இருக்க முடியும்” என்றான் விஜய்.

பிரிய மனமின்றி விஜியை வழியனுப்பி வைத்தாள் சக்தி.












































 
Top