வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வாயுரைக்க வருகுதில்லை நன்நேசம் - 10

GG writers

Moderator

உ​

நேசம் 10​

எதுவும் கடந்து போகும் என்பதை சுலபமாக சொல்லிவிடலாம்… ஆனால் வாழ்வின் சில நொடிகளை… நினைவுகளை கடந்து வருவது அவ்வளவு ஒன்றும் சுலபமல்ல… அதைதான் அனுபவித்து கொண்டிருந்தாள் நிலவழகி.​

சிவநேசனின் வார்த்தைகள் அவளை நிலைகுலைய வைத்தன. போதாதற்கு தேவாவும் அவளை வார்த்தைகளால் கீறிவிட்டிருந்தான். தன்னை சுயநலக்காரி என்றவன்மேல் இப்பொழுது ஆத்திரம் வரவில்லை. மாறாக தன் குடும்பத்தின்மேல் அவன் வைத்திருக்கும் அன்பைகூட தான் வைத்திருக்கவில்லையே என்ற வருத்தம் அவளை அலைகழித்தது.​

இதுநாள்வரை சூழ்நிலைக் கைதி என்று சொல்லிக்கொண்டு சுயநலம் என்னும் குடைக்குள் ஒளிந்துக் கொண்டிருந்ததை சுட்டி காட்டியவன் மேல் கோபம் இல்லை. இன்னொருத்தர் சுட்டிகாட்டும் அளவுக்கு தான் இருந்ததை எண்ணி அவமானமாக இருந்தது.​

துவண்டுபோய் நின்றிருந்த தன்னை தாங்கி நின்றவர்களிடமிருந்து தள்ளி நிற்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்கு நிம்மதியின்மையை அல்லவா தந்திருக்கிறேன். அதைகூட உணராமல் தன்நிலை பற்றி மட்டும் எண்ணி வாழ்ந்திருப்பதை கண்டு வெட்கி போனாள் நிலா.​

மீண்டும் கிடைக்காத ஓர் உறவை நினைத்து மீள முடியாத வலியுடன் புது பயணம் ஒன்றை துவங்க தன்னை தயார் படுத்த முனைய வேண்டும் என்று முடிவெடுத்தவள் நிமிர்ந்து அமர.. வெளியே குமுதாவின் உயர்ந்த குரலும் வீட்டினரின் குரலும் சேர்ந்து கேட்டது.​

‘இந்த கும்முகுணா கொட்டத்தை அடக்கவாவது இந்த தர்பூஸை சகிச்சிக்கிட்டு கட்டிக்கனும்’ மனம் சொல்ல… அவள் நினைவுகளுக்குதான் எத்தனை சக்தி. அவள் நினைத்த மாத்திரத்தில் அவளை அழைத்திருந்தான் தேவா.​

‘கொஞ்ச நேரம் இவனை நினைச்சிடக்கூடாதே! சட்டுனு மூக்கு வேர்த்திடுமே இந்த தர்பூஸுக்கு!’ சலித்துக்கொண்டவள் அழைப்பை எடுக்க​

“ஓ… எடுத்திட்டீயா?” என்றான்.​

“என்ன எடுத்திட்டீயா? எப்பொழுதும் மொட்டை காத்தானுக்கு முடிச்சி போடுற மாதிரிதான் பேசுவீங்களா?” பொறிந்து தள்ளினாள்​

“நான் கால் பண்ணா எடுப்பீயானு ஒரு சந்தேகம் வந்துச்சு…” குரலில் கேலி இழையோடியதுபோல தோன்றியது அவளுக்கு கூடவே மெல்ல சிரித்தானோ என்ற சந்தேகம் வர… சற்றுமுன் காரில் ஏறும்போது அவன் சிந்திய கர்வ புன்னகை ஞாபகத்துக்கு வந்து இணைந்துக்கொள்ள… சுருசுருவென பொங்கியது அவளுக்கு​

“யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்” முத்தம்மாவின் மகளென நிரூபிக்க ஆரம்பித்தாள்.​

“நான் பூனை ஒத்துக்குறேன். நான் பேசுறதுகூட யாருக்கும் கேட்காதுனு சொல்லுவாங்க… அப்போ அந்த யானை நீயா?” கேலி பேசினானோ​

“பைத்தியமா உங்களுக்கு? என்னை பார்க்க யானை போலவா இருக்கு!!” குரல் உயர்ந்தது​

“பழமொழி சொன்னது நான் இல்லையே!”​

“ப்ச்! உங்களுக்கு என்ன வேணும்?” கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் பதிலை கேள்வியாய் கேட்பவனிடம் பேச சலிப்பு வந்தது அவளுக்கு​

“வேண்டும் என்று நான் எதுவும் சொல்லவில்லையே!” மறுபடியும் அதே தோரணையில் பதில் கொடுக்க ‘இவனை பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா ஆன்ட்டி’ மனதில் குமைந்தவள்​

“வேண்டாம் என்று சொல்லிட வேண்டியதுதானே!” இருபொருள்பட பேச​

“சம்மதம் சொன்னது நீதானே?” தக்க பதில் தந்தவன் மேல் இன்னும் கோபம் அதிகரித்தது​

“நானா? எல்லோரும் சேர்ந்து என்னை கார்னர் பண்ணிட்டு பேச்சை பாரேன்” வார்த்தையை விட​

“ஆமாவா? அப்படியா உனக்கு தோனுது?” அவன் குரலில் இருந்த வேறுபாடை அவள் கவணிக்கவில்லை​

“பின்ன இல்லையா?” அவனை போலவே பேச​

“ம்ம்.. சரி” இறுகிய குரலில் பேச்சை சுருக்கிக்கொண்டான். அப்பொழுதுதான் அந்த வேறுபாடை கவணித்தாள்​

“எ… என்ன ச… சரி?”​

“இனி உன்னை நான் கார்னர் பண்ண மாட்டேன்!! பை!!” வைத்து விட்டான்.​

வைத்துவிட்டானா? உண்மையிலேயே வைத்துவிட்டானா காதிலிருந்து அலைபேசியை எடுத்து இருமுறை சரி பார்க்க… ஆமாம் உண்மைதான் என்று அலைபேசியின் முகத்திரை காட்ட… அதிர்ந்தாள்.​

.நா… நான் இப்போ என்ன செய்ய? நிஜமாவே கோவிச்சிக்கிட்டான் போலவே. சற்றுமுன் அவன் சொன்னது உண்மைதானே. அத்தனை பேரின்முன் சம்மதம் வேண்டி நின்றானே!! நான்தான் வீம்புக்கு குமுதாவை பழிவாங்கவென்று சம்மதம் சொன்னேன். தப்பை என்னிடம் வைத்துக்கொண்டு அவனிடம் போய் காய்ந்து விட்டேனே!!’​

நிலையில்லாமல தவித்தவள் பின்பு அவனுக்கு அழைத்து மன்னிப்பு கேட்டுவிடலாம் என்ற முடிவுடன் அவனுக்கு அழைக்க… அழைப்பு சென்றதே தவிற அவன் எடுக்கவில்லை.​

இதோ ஸ்டடி ப்ரேக் முடிந்து அவள் கிளம்பும் நாளும் வந்துவிட்டது. நிச்சயத்தன்று அவனுடன் பேசியதுதான் இல்லை இல்லை முட்டிக்கொண்டதுதான்… அதன் பிறகு தன்னை தொந்தரவு செய்யாதவன் மேல் இன்னும் கோபம்தான் அதிகரித்தது. ‘ஒரு சொல் பொறுக்கமாட்டானாமா?’. தப்பு செய்த மனம் நச்சரிப்பு தாங்காமல் அழைத்து விட்டாள். சென்ற அழைப்புகளும் யாவும் எடுக்கப்படாமலே போக… இன்னுமே தவித்து போனாள்.​

‘அத்தனை எடுத்து சொன்னானே! தெளிவு படுத்தியவனை வலிக்க வைத்த தன் சொல்லின் மேல் கோபம். ‘வாய் இருக்கிறதென்று எதையும் பேசுவாயா நீ!’ பேசிய தன் உதட்டுக்கு தண்டனை கொடுக்க… அவளை பார்த்து சிரித்துக்கொண்டே சிவா அருகில் வந்தான்.​

“என்னடா சர்க்கஸ் வித்தை எல்லாம் பன்ற?” கேலி பேச… அவள் பார்வையோ அவன் பின்னால் துழாவி அலைபாய்ந்து சோர்ந்து பின்பு வாடியது… “ஒன்னுமில்ல ண்ணா” எண்ணம் மறைத்து புன்னகைத்து சொல்ல… அவன் அறியா விஷயமா என்ன… மனம் குளிர்ந்து போனது அவனுக்கு.​

“நான் வந்திருக்கேன்ல அதனால் தேவாவால் வர முடியல” அவள் தேடல் உணர்ந்து சொல்ல​

“அதை ஏன் என்கிட்ட சொல்லுற ண்ணா? நான் கேட்டேனா?” சிலுப்பிக்கொண்டாள்.​

“ஓ.. கேட்டது போல தோணுச்சு அதான் சொன்னேன்?”​

“நான் ஏன் கேட்கனும்? என் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணனும். அதான் ஏதாவது விட்டு போச்சானு தேடுனேன்” என்றாள். வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கி கொண்டான் சிவா.​

“சரி இந்தா பிளைட் டிக்கட். நல்லப்படி பரீட்சை எழுதனும் சரியா?” டிக்கெட்டை வாங்கியவளுக்குள் ஒரு குறுகுறுப்பு. ‘அன்றுபோல் இன்றும் அவன்தான் வாங்கியிருப்பானோ?’​

‘நேரில் வந்து கொடுக்க மனமில்லை போலும்’ மனதோடு சொல்லிக்கொண்டவள் பெருமூச்சுடன் கிளம்பினாள். ஒரு வேளை காரில் இருப்பானோ என்று அவசரமாக செல்ல முனைய அருணாசலமும் முத்தம்மாவும் முன்னே வந்தனர். இருவரையும் அணைத்துக்கொண்டவள் விடைபெற்று செல்ல​

“நிச்சயம் ஆன பொண்ணு பத்திரமா இருக்கனும்மா” என்று முத்தம்மா பத்திரம் சொல்ல​

“ஆமாம் பழைய காதலன் நினைப்பெல்லாம் தூக்கி போட்டு புதுசா வந்தவனை நினைச்சிக்கோ!! உனக்கு அதுல கஷ்டமெல்லாம் இல்லனு தெரியும்… ஆனாலும் அம்மா மறைமுகமா சொல்ல வந்ததை நான் தெளிவா சொன்னேன். அவ்வளவுதான் தாயே” முகவாயை தோளில் இடித்துக்கொண்டு குமுதா சொல்ல… இடிந்து போய் நின்றுவிட்டாள் நிலா.​

குமுதா சொன்னதும் தான் அவளுக்கு ஒன்று உரைத்தது. இப்பொழுதெல்லாம் தான் விமலனைவிட தேவாவைதான் அதிகம் நினைத்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். ஏன் இந்த மாற்றம்? எரிந்த கொண்டிருந்த தீ எல்லாம் எங்கே போனது? குழப்பத்துடன் அசைவற்று நின்றவளின் தோற்றம் முத்தம்மாவை தவிக்க வைத்தது.​

‘நான் என்ன சொல்ல வந்தேன் இவள் என்ன சொல்லி வைக்கிறாள்?’ குமுதாவை கடிய நினைக்க… இடுப்பை பிடித்துக்கொண்டு நின்றிருந்தவளின் தோற்றம் அவரை ஊமையாக்கியது. தப்பை தட்டி கேட்க முடியாமல் அவரின் தாய்ப்பாசம் இருதலைகொள்ளி நிலைக்கு தள்ளியது.​

சட்டென தன்னை சுதாகரித்துக்கொண்ட நிலா “உனக்கு என்ன உரிமை இருக்கு என்னைப்பத்தி பேச” நிதானமாக கேட்டாள்.​

“ஏய் நான் உன் அக்காடி!! எனக்கு உரிமை இல்லையா? இந்நேரம் குணா இருந்திருக்கனும் என் உரிமை என்ன என்று சொல்லிருப்பார்!!”​

“உனக்கே உரிமை இல்லங்கிறேன்.. இதுல உன் புருஷன் உரிமை பத்தி பேசுற!! என் உணர்வுகளை மதிக்காத இடத்தில் உரிமைக்கு மட்டும் இடம் கொடுக்கனுமா என்ன!!” புருவம் உயர்த்தி ஏளனமாக சொல்ல​

“ஏய் வயிற்றில் இருக்கும் குழந்தை எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கும்டி. சின்னம்மாவா ஒழுங்கா பேசு!!’ திடீர் பாசம் பாயாசமாக பொங்க​

“உன் ஆனவ கேள்விக்கெல்லாம் பாப்பா மாதிரி திமிராகதான் பதில் சொல்லனும். இவ கிடக்கிறா… பாப்பா நீ கிளம்பு!!” குமுதாவை முறைத்துக்கொண்டே அருணாசலம் சொல்ல… “அம்மா பாருங்க அப்பா எப்படி பேசுறாங்கனு!” தாயிடம் புகார் வாசிக்க​

“நீ முதல்ல உள்ளே போ குமுதா… ஒட்டி பொறந்ததெல்லாத்தையும் தவுட்டுக்கு வித்துபுட்டு ஒட்ட வந்த உண்ணிய இடுப்புல சொருகின கதையா இருக்கு உன் பேச்சு” முத்தம்மா சொன்னதும் புரியாவிட்டாலும் தனக்கு சாதகமான பதில் இல்லை என்பதை புரிந்துக்கொண்டவ்ள் ஜகா வாங்கிக்கொண்டாள்.​

-----------​

விமான நிலையத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள் நிலா. மனம் சுய அலசலில் பிசியாக இருந்தது. ‘இங்கு வருவதற்கு முன்பு விமலனின் நினைவுகளை பொக்கிஷமாய் சுமந்திருந்தேன். அவனை நினைக்காத நாளில்லை. ஆனால் இந்த இரண்டு நாட்களாக நான் நானாக இல்லை… ஏன்? ச்சே!! எல்லாம் இந்த தர்பூஸால் வந்தது.’​

மறுபடியும் அவள் மனம் தேவாவின் வசம் சென்றது. மனதோடு வசை பாடினாள். சாபம் கொடுத்தாள். அவன் பேசிய கடைசி வார்த்தையை எண்ணி சுனங்கி போனாள். மன்னிப்பு கேட்க விட மாட்டிக்கிறானே!! தட்டாமாலையாய் தேவா அவளை சுற்றி சுற்றி வந்தான்.​

ஒரே ஒரு முறை… கடைசியாக அழைத்து பார்க்கலாமா? எடுக்காவிட்டால்? எடுக்காவிட்டால்... போடா வென்று!! நான் என்ன உன் வாயில் போடும் சிப்ஸுனு நினைச்சியா கூலாங்கல்லுடா நானு!! அப்படியே தொண்டையை அடைச்சி மூச்சு வராம ஆக்கிருவேன் பார்த்துக்கோ!! பல வசவுகள் கொடுத்துவிட்டு அவனுக்கு அழைக்க… இந்த முறை அழைப்பு எடுக்கப்பட்டது​

“ஹ… ஹலோ ஹலோ நா… நான் நிலா பேசுறேன்… கேட்குதா?”​

“ம்ம்… கேட்குது”​

“நான்… நான்… ஏர்போர்ட்ல இருக்கேன்’’ சம்மந்தமில்லாமல் பேசினாள்​

“ஓ…”​

“நாளைக்கு பரீட்சை”​

“ஓ… பாஸாகனுமா? இல்ல பாஸாக வேணாமா?”​

“என்ன கேள்வி இது? பரீட்சை எழுதுவது பாஸாகத்தானே?”​

“பாஸாகிட்டா கல்யாணம் முடிஞ்சு இன்னும் ஆறு மாசம் நீ படிக்க போகனும். ஃபெயிலாகிட்டா படிப்புக்கு முழுக்கு போட்டுட வேண்டியதுதான்”​

“நான் ஏன் ஃபெயிலாகனும்?” மூச்சிறைக்க கேட்க​

“பாஸாகிறதை பத்திதான் முதல்ல சொன்னேன். அது ஏன் உன் மனசுல பதியல?”​

‘அதானே ஏன் பதியல?’ கிடுக்கு போட்டவன்மேல் கடுப்பு வந்தது​

“அது அது நெகடிவ்வா பேச கூடாதுல..”​

“பாசிட்டாகவும் சொன்னேனே!”​

“அது… நான் படிப்புக்கு முழுக்கு போட மாட்டேன்!”​

“அப்போ பாஸாகி கல்யாணத்துக்கு ரெடியாகிடுவனு சொல்ற.. ரைட்?”​

“ஏது!! ம்ம்… அது… வந்து.. உங்களுக்கு விமலனை பற்றி தெரிஞ்சும் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க?”​

“ஏன் அவனை தெரிஞ்சதுக்கும் நம்ம கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்?” குரல் மாறி போனதை நன்றாக உணர்ந்தாள்​

“அது வந்து… நாங்க ரெண்டு பேரும்..”​

“நீ மௌன ராகம் படம் பார்த்திருக்கிறாயா?”​

“ம்ம்… பார்த்திருக்கிறேன். இன்ஃபாக்ட் நான் இளையாராஜாவின் தீவிர ரசிகை”​

“ஓ… அந்த படத்துல் கல்யாணம் முடிஞ்சதும் ரேவதி அவங்களோட ஃபிளாஷ்பேக்கை சொல்வாங்க..”​

“ஆமாம்..”​

“அதேபோல் நம் கல்யாணம் முடிஞ்சதும் நீயும் உன் ஃபிளாஷ்பேக் கதைய சொல்லிக்கோ!!”​

“கதை முடிஞ்சதும் கொலுசு ஒரு பக்கமும் டிவோர்ஸ் பேப்பர் ஒரு பக்கமும் வச்சிருப்பீங்களா?” துடுக்காய் சொல்ல​

“உன் ஆசைக்கு கொலுசு மட்டும் வாங்கி வைக்கிறேன்”​

“அப்போ டிவோர்ஸ்?”​

“என் மூச்சு நின்ற பிறகுதான் உனக்கு விடுதலை. அது எப்போ வேண்டும் என்று நீயே முடிவெடுத்துக்கலாம். பை அழகி..” அவள் மனம் காயப்பட்டது. அவனின் தனி அழைப்பு கூட அவள் மனதில் பதியவில்லை.​

“என்ன!! ஏன் இப்படி..”​

“உன் அண்ணனும் உன் அப்பாவும் எனக்கு எந்தளவுக்கு முக்கியம் என்று ஏற்கனவே உன்னிடம் சொல்லியிருக்கேன்!”​

“அதுக்கு!!! இப்படி பேசலாமா… உயிர் என்ன விளையாட்டு பொருளா?” தழுதழுத்தாள்​

“நீ ஏன் அப்படி நினைக்கிற… நீ அதை கேட்காத வரைக்கும் என் ஆயுள் கெட்டினு சொல்ல வந்தேன்.”​

“போதும்!!”​

“போதுமா சரிதான். ஒகே பை ஆல் த பெஸ்ட் அழகி”​

“அழகியா??”​

“நீ இந்த தேவதர்ஷனை தர்பூஸ் என்று கூப்பிடலாம் நான் நிலவழகியை அழகி என்று கூப்பிட கூடாதா?”​

“அது வந்து… சும்மா..” பிடிபட்ட தோரணையில் அசடு வழிந்தாள்​

“அது அதேதான். பை அழகி” வைத்துவிட்டான்.​

‘அழகியாமே அழகி! எத்தனை உரிமையா கூப்பிடுறான். இருடா ஒருநாள் இல்ல ஒரு நாள் அழகினு குப்புடுற வாயில சாணியை கரைச்சி ஊத்துறேன். அப்போ உனக்கு தெரியும் இந்த நிலா யாருனு!’ விமான அழைப்பு வந்துவிட மனதோடு அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே சென்றாள். அவளின் பழைய துடுக்குத்தனம் மெல்ல எட்டிபார்க்க மெல்ல மெல்ல மாறினாள். மாற வைத்தான் தேவா என்றே சொல்லலாம்.​

--------------​

“ஏன்டா என் தங்கச்சியை போட்டு இப்படி பந்தாடுற” சலிப்புடன் சொன்னவனின் முகம் விகசித்திருந்தது. அது பரவச சலிப்பு. அகம் நிறைந்திருக்க வாய் வேறு சொல்ல… அகத்தை முகம் பிரதிபலித்தது.​

“யார் நானா?” என்றவனின் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் ஒரு தனி சோபை இருந்ததை சிவாவால் உணரமுடிந்தது.​

“கொஞ்ச நாளா உன் அழகு கூடுதே என்ன ரகசியம் மச்சான்?” மறுபடியும் வம்பிழுக்க..​

“வேறு என்ன கல்யாண களைதான். இதுல என்ன ரகசியம் இருக்கு!” உடைத்து பேசியவன் மேல் அன்பு பொங்கியது சிவாக்கு.​

“நீ இல்லனா இந்த சிவா என்னாகிருப்பேன் தேவா?” கரகரப்பான குரலில் சிவா கேட்க… நண்பன் நெகிழ்ந்திருக்கிறான் என்பதை உணர்ந்த தேவா மென்மையாக புன்னகைத்தான்.​

“அன்று மட்டும் உன் அப்பா என்னை உன் கடைக்கு பார்ட்னராக்கி விடாமல் இருந்தால் அதுவும் ஒத்தை ரூபாய் கூட வாங்காமல் பணம் என் மகனுடையது கடையை வழிநடத்துவது என்னுடையது என்று சொல்லாமல் இருந்தால்…”​

“சிம்பிள் கடை என் பெயருக்கு வந்ததும் அப்பா சொன்னதை நான் செய்திருப்பேன்”​

“டேய் தேவா” நண்பனை கட்டிக்கொண்டான்​

“எப்படி உனக்கு அது தோனுச்சு?”​

“எது?”​

“அதான் நிலாவை கட்டிக்கனும் என்று. உண்மையை சொல். நிலாமேல் உனக்கு விருப்பம் இருக்கிறதா இல்லை என் குடும்ப சூழ்நிலை எண்ணி..”​

“வாட் நான்சென்ஸ்!! என்ன பேசுற நீ!! குடும்ப சூழ்நிலை அது இது என்று என்ன பேச்சு!! என்னை தியாகியாய் நினைச்சு பேசாதே!!” கண்டிப்புடன் பேச மனம் நிறைந்தது சிவாக்கு.​

“வளைகாப்பு முதல் நாள் குணாவும் குமுதாவும் பேசியதை கேட்டதும் எனக்குள் ஒரு தாட். வீட்டுல எனக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சாச்சு… அது ஏன் நிலாவா இருக்க கூடாது என்றுதான். அந்த எண்ணம் வந்ததும் நேரா உன்னிடமும் அப்பாவிடமும் கேட்டேன். தட்ஸ் ஆல்” என்றவன் தோளை குலுக்கி கொண்டான்.​

“உன் தாட்க்கு என் நன்றியை சொல்லிடு, உன்னைவிட எவனும் நிலாவை சந்தோஷமா வச்சிக்க முடியாது!!”​

“ரியலி?” புருவம் உயர்த்தியவனை பார்த்து புன்னகைத்தவன்​

“என் மச்சான் வெரி ஸ்மார்ட் தெரியுமா? பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே அவ அறைக்குள் போய் ஏதோ மந்திரம் ஓதியிருக்கான். இல்லனா இவ எந்த குழப்படியும் பண்ணாம அமைதியா வந்து நிற்பாளா?? அதுவும் குமுதாவை நிமிர்ந்து பார்த்து சம்மதம் சொன்னா பாரு… வாரே வாஹ்… அப்போதான் எனக்கு ஒன்று தெளிவானது.” என்றவனை என்னவென தேவா பார்க்க​

“நிலாவோட பூஸ்டர் தேவா மச்சான்தான்!!” சந்தோஷத்துடன் நின்றிருந்த சிவாவை கண்ட தேவா மனதில் நிம்மதி.​

“வாழ்க்கையே முடிந்துவிட்டாத எண்ணி உன் தங்கை வருந்திக்கிட்டு இருக்கா. ஒரு முடிவில்தான் இன்னொரு தொடக்கம் உருவாகும் என்று கத்து கொடுக்க நான் வந்திருக்கேன்.​

பெரிய சேலஞ்ச்தான் பட் எனக்கு சேலஞ்ச் பண்ண பிடிக்கும். பிஸ்னசாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி… சேலஞ்ச் இருந்தால் ரொம்ப சுவாரசியமாக போகுமாம். சுவாரசியமா வாழ எனக்குள் ஒரு ஆசை. துணையா உன் தங்கை… இனி அவள் என் அழகி” ரசித்து சொன்னவனை விழி அகலாமல் பார்த்தான் சிவா.​

கண்கள் கனவில் மிதக்க… மந்தகாச புன்னகையுடன் நின்றிருந்தவன் பேச்சில் சிறு பொறி தட்டியது சிவாக்கு. நிலாமேல் இவனுக்கு விருப்பம் இருந்திருக்குமோ?​

 
Last edited:
Top