GG writers
Moderator
உ
நேசம் 11
நாளை பரீட்சை என்பது நினைவில்லாமல் விமலன் தந்த மோதிரத்தை கையில் வைத்து பார்த்து கொண்டிருந்தாள். இதயமோ நடந்தவற்றை கடக்க மறுக்கிறது. காலமோ கடக்க செய்கிறது. காலத்தின் வலிமையின் முன்னே காதலின் வலி வலுக்க... துவண்டு அமர்ந்திருந்தாள் நிலா. புதிரான ஒன்று தனக்குள் சென்று கொல்லாமல் கொன்று துடிக்க துடிக்க வலிக்க செய்து இதயத்தை நின்று துடிக்க செய்தது.
வேண்டாமே இந்த காதல் அவஸ்தை என்று விலகி நின்றாலும் வலிய வந்து தினித்த காலத்தை சபித்தாள். சுடும் தீயை போல தினமும் அதை நினைத்தே வெந்து போகின்றது அவளின் பாழாய் போன மனம். என்றுமில்லாமல் இன்று தனிமை அவளை வலுவிழக்க செய்து கொண்டிருந்தது.
இரண்டு வருடங்கள் தனிமையில் இனிமையை கண்டவள் இன்று இந்த ஓர் இரவை கடக்கவே சிரமப்பட்டாள். ஏதாவது செய்து தன்னை மீட்டுக்கொள்ள துடித்தாள். பேசாமல் சிவநேசனை அழைக்கலாமா என்று யோசித்தவள் அலைபேசியை எடுத்து பார்க்க… கடைசி அழைப்பு தர்பூஸ் என்ற பெயரில் இருப்பதை கண்டதும்… நினைவு அவன் சொன்ன ‘என் கடைசி மூச்சு’ என்ற சொல்லில் தேங்கி நின்றது.
‘நீ சாதா டெவில் இல்லடா ஜீன்ஸ் பேண்ட் போட்ட மாடர்ன் டெவில்’ வாய் தானாக முனுமுனுத்தது.
அதே நேரம் கையிலிருந்த அலைபேசியில் வாட்சப் மெசெஜ் வந்ததற்கான இசை இசைக்க… எடுத்து பார்க்கையில் தர்பூஸ் என்ற பெயர் மின்னி மறைந்தது. ‘திங்க் அஃப் த டெவில்’ என்று சொல்லிக்கொண்டவளின் இதழ் விரிந்தது. தொடுதிரையை தடவ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவு என்பதும் ஆரம்பமே….
படித்தாள். படித்துக்கொண்டே இருந்தாள். எத்தனை முறை படித்தாள் என்று அவளுக்கே தெரியாது. படிக்க படிக்க விதை ஒன்று வேர்விட்டதுபோல் உணர்ந்தாள். இதுவரை ஒட்டித்திரிந்த தனிமை விலகி ஓடுவதை போல் ஓர் உணர்வு. சிவநேசனை அழைக்க நினைத்தவள் அவளரியாமல் தேவாவை அழைத்துவிட்டாள்.
“தர்பூஸ்” என்றழைத்தாள்
“பரவாயில்லையே! கால் பண்ண தெரியுதே?”
“அதெல்லாம் தெரியும். டெவிலுக்கு கொம்பு முளைக்க வைப்பானேன் என்ற நல்ல எண்ணம்தான்”
“சரிதான்” புன்னகைத்திருப்பான் போலும்
“சிரிக்காதீங்க!! மேசெஜ் அனுப்பும் நேரமா இது?”
“கால் பண்ணும் நேரமா இது?”
“கேள்வி கேட்டா பதில் சொல்லனும் கேள்வியை பதிலா சொல்லக்கூடாது”
“பரீட்சைக்கு ரெடியா?”
“அதெல்லாம் ஏற்கனவே படிச்சு முடிச்சாச்சு”
“தூங்கும் எண்ணம் இல்லையோ?”
“அது…“ தனிமை பயம் கொள்ள வைக்கிறது என்பதை சொல்ல முடியாமல் தடுமாறினாள்
“இன்னொரு மெசெஜ் அனுப்பவா அழகி?”
“இல்ல சொல்லுங்க… கேட்டுக்கிறேன்” பேச்சை வளர்த்தாள்.
“வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா”
மென்குரலில் அவன் பாடி காட்ட… கண்மூடி கேட்டு கொண்டிருந்தாள். கண்களை திறக்க மனமில்லை. திறந்தால் எங்கே சிறகு முளைத்து பறந்து சென்ற இறுக்கங்கள் யாவும் திரும்பி வந்து விடுமோ என்று பயந்தாளோ என்னவோ. கண்களை இன்னும் இறுக மூடிக்கொண்டாள்.
“ஆழகி… வைக்கவா??”
“டெவில் எப்போ ஏஞ்சல் அவதாரம் எடுத்துச்சாம்?” அவன் கேள்வியை அசட்டை செய்தவள் பேச்சை நீட்டித்தாள்
“ஏன்னா டெவிலுக்கும் ஏஞ்சலுக்கும் இடைவெளி ஒரு மெல்லிய கோடு மட்டும்தான். இரண்டுமே ஆவிகள்தான். ஒன்று நல்ல ஆவி இன்னொன்று கெட்ட ஆவி” விரிவுரையாளன் அளவுக்கு அவன் விளக்கம் கொடுக்க
“யோவ் தர்பூஸ்!! நல்லா வாயில வந்திரும். தனியா இருக்கிறவகிட்ட ஆவி கீவினு சொல்லிக்கிட்டு”
“யோவ்வா.. ம்ம்.. நாட் பேட். மரியாதை தூள் பறக்குது!! வெல் ஃபார் யோர் இன்ஃபர்மேஷன் ஆவியை பற்றி நான் பேச ஆரம்பிக்கல. நீதான் டெவில் ஏஞ்சல் என்று சொன்ன. அதற்கு நான் விளக்கம் கொடுத்தேன் தட்ஸ் ஆல்”
“உங்க விளக்கத்துல தீயை வைக்க!! போச்சு போச்சு என் தூக்கம் போச்சு..” சிறுபிள்ளைபோல் புலம்பினாள்
“ஆமாம் ஆமாம் அது என்கிட்ட வந்திடுச்சு போல… ஹாவ்… செம்ம தூக்கம் வருது. குட் நைட் அழகி” கொட்டாவி விட்டுக்கொண்டே அவன் அழைப்பை துண்டித்துவிட… “திமிர் பிடிச்சவன் வச்சிட்டான். கனவுல மோகினி வந்து உன்னை அமுக்கட்டும். இது இந்த நிலாவோட சாபம்” என்றவள் அலைபேசியில் கந்தர் ச்ஷ்டியை ஒலிக்கவிட்டு ஒருவழியாக தூங்கி விட்டாள்.
அதற்கடுத்த வந்த நாட்கள் எல்லாம் வீட்டினரின் அழைப்புகளோடு கழிந்தன. இடையில் கௌரம்மாவும் இலக்கியாவும் அழைத்து பேச… தனிமை என்ற சொல்லுக்கே இடமில்லாமல் கழிந்தன நாட்கள். அன்று டெவிலுக்கும் ஏஞ்சலுக்கும் விளக்கவுரை கொடுத்தவன் அதன் பிறகு அவளை அழக்கவுமில்லை கண்டுகொள்ளவுமில்லை. அவளும் எதிர் பார்க்கவில்லைதான் ஆனாலும் அவனிடம் சண்டை போட்ட சம்பாஷனைகளை அனுதினமும் அசைபோடவும் மறக்கவில்லை.
பரீட்சை முடிந்து அன்று கிளம்பும் நாள் வந்தது. இம்முறை இரயில் செல்ல ஆசையாக இருந்தது அவளுக்கு. அதைபற்றி சிவநேசனிடம் சொல்ல… ஒரேடியாக மறுத்துவிட்டார் முத்தம்மா. அவரின் இறுகிய முகத்தை கண்டவனுக்கு அவரின் பேச்சை மீறமுடியவில்லை. அலைபேசியை தாயிடம் கொடுத்துவிட்டு பேச வைத்தான்.
“இதோ பாரு நிலா நீ எத்தனை சீக்கிரம் வீட்டில் இருக்க முடியுமோ… அத்தனை சீக்கிரம் இருக்கனும். இரயில் எல்லாம் சரிப்பட்டு வராது. அன்று மாதிரி ஃபிளைட்ல வந்திரு!! கல்யாணம் இன்னும் மூன்று வாரத்தில் வச்சிக்கிட்டு இரயில்ல வரேன் பஸ்ல வரேன் என்று சொல்லாதே!! இந்த தடவை என் பேச்சி மீறி நடக்க மாட்டனு நம்புறேன் என்றவர் அலைபேசியை சிவா கையில் தினித்துவிட்டு பூஜையறைக்குள் நுழைந்துக்கொண்டார்.
ஏனோ அவர் மனம் நிலையில்லாமல் தவித்து கொண்டிருந்தது. ஏதாவது நடந்து விடுமோ என்ற கலக்கம் மனதினுள். வெளியில் சொல்லி யாரையும் கலவரபடுத்த விரும்பவில்லை அவர். “கிருஷ்ணா என் குடும்பத்தை பத்திரமா பார்த்துக்க” கண்கள் கலங்க வேண்டினார்.
சட்டென கண்களை திறந்தவர் எழுந்து சிவாவை தேடினார். மதிய உணவு உண்ண வந்தவன் கடைக்கு சென்றுவிட்டான் போலும்… வீடு அமைதியாக இருந்தது. அருணாசலம் கல்யாண பத்திரிக்கை அலுவலகத்து சென்றிருக்க… குமுதா மாதாந்திர செக் அப் சென்றிருந்தாள். குணாளன் டெல்லிக்கு ஒரு கேஸ் விஷயமாக சென்றிருந்தான்.
இதேபோல்தான் அன்றொருநாள் இனம் புரியாத பயம் மனதை கவ்விக்கொண்டு ஆட்டம்காட்ட அன்றிரவு அருணாசலம் நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்தார்… இன்னொருமுறை விமலனின் அந்த கறுப்பு நாள் அன்றும் இதேபோல் பயம் வந்தது. இதோ இன்றும் அதேபோல் மனம் பிசைய ஆரம்பிக்க அனைவரின் நலத்தையும் அறிய அழைத்து பேசிய பிறகே சற்று ஆசுவாசமானர். ஆனாலும் இடுப்பில் சொருகி வைத்த முள்போல் பயம் மனதை குத்திக்கொண்டே இருந்தது.
-------------
“எங்கே இருக்க?”
“உங்களுக்கு எதுக்கு நான் சொல்லனும்?”
“சொல்லாட்டி போ!! சிவாக்கிட்ட உன் தங்கை என்னை யார் என்று கேட்கிறானு சொல்லிடறேன்”
“என்ன மிரட்டுறீங்களா?”
“மிரட்ட நீ என்ன பெரிய தாதாவா இல்ல ரௌடியா?”
‘சென்னை நான் பிறந்த இடம்!!”
“உன் புகுந்த வீடும் அங்குதான் இருக்கு!!”
“இன்னும் புகுந்த வீடு ஆகல… சின்ன திருத்தம். வருங்கால… நல்லா கேட்டுக்கோங்க மிஸ்டர்… வருங்கால புகுந்த வீடு”
“அப்போ நான் உன் வருங்கால கணவன்தானே!!”
‘ச்சே இவனை பேசி ஜெயிக்க முடியலையே! இல்லை என்றும் சொல்ல முடியாது… ஆமாவும் சொல்ல முடியல… என்ன சொல்வது? பேசாமல் இருப்போம்…’ மனம் குமைய அமைதி காத்தாள்.
“அழகி…”
“இந்த அழகி எல்லாம் வேணாம் சொல்லிட்டேன்”
“ஓ… ஆனால் எனக்கு இந்த அழகிதான் வேணும்” என்றவனின் குரலில் ஸ்தம்பித்து போனாள். உடலில் மெல்லிய நடுக்கம் பரவ…
“என்ன சொன்னீங்க?” அவளுக்கே கேட்காத குரலில் கேட்க
“ஏன் ஞாபகம் இல்லையா? இரு குடும்பத்தார் சூழ… உன் சம்மதத்துடன் உன் கழுத்தில் ஆரம் அணிவித்தேனே… என் கை பட்டதும் உன் கழுத்து ரோமங்கள் எல்லாம்…”
“ஸ்டாப் இட்!!.” அவனை பேசவிடாமல் இடைமறித்தாள் அன்றைய நினைவின் தாக்கம் இன்றும் கழுத்தோரம் சிலிர்க்க நின்றாள்.
“ஓ… ஞாபகம் வந்திடுச்சோ?.”
“இப்போ என்ன… உங்களுக்கு நான் எங்கே நிற்கிறேன்னு தெரியனும் அவ்வளவுதானே!!” பொருமிக்கொண்டே சொல்ல
“இப்பொழுதுதான் என் கேள்வியே உனக்கு புரிஞ்சதா?”
“யோவ் உன்னை போய் இத்தனை வருஷமா பழம்னு நினைச்சேன் பாரு என்னை சொல்லனும்”
“சொல்லிக்கோ சொல்லிக்கோ நோ அப்ஜெக்ஷன்”
“நீங்க யாரு எனக்கு பெர்மிஷன் கொடுக்க?”
“உன் வருங்கால மாமியார் பெத்த உன் வருங்கால கணவன். இன்னும் சந்தேகமா?”
“ஷப்பா முடியல சாமி!! நான் கேட் G முன் நிற்கிறேன்”
“அங்கே கருநீல நிற ஜீப் நிற்கிறது பார்!”
“ம்ம்.. பார்த்துட்டேன் வரேன்” என்றவளுக்கு பெரும் தயக்கம். இதுநாள் வரை சிவாவுடன் மட்டும்தான் பயணித்திருக்கிறாள். சில சமயம் தேவாவும்கூட வருவான்தான். ஆனால் இன்று அப்படியில்லையே. அவன் காரில் அதுவும் அவனுடன் தனி பயணம். முதல் தனி பயணம். நினைக்கையில் உள்ளூர சிறு நடுக்கம் வந்தது.
எத்தனை மெதுவாக நடந்தாலும் கார் நிற்கும் இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டாள். ‘எந்த கதவை திறக்க? முன்னே அமரவா இல்லை பின்னே அமரவா?’ அவள் மனதின் பட்டிமன்றத்தை முன் கதவை திறந்து தேவா முடித்துவைத்தான். சில்லென காரின் ஏசி முகத்தை அறைய… சுகமாக இருந்தது. அவனோ அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.
“கார் ஏசியின் அருமை சென்னையின் வெயிலில் தெரியும் என்று புதுமொழி எழுதலாம் போலிருக்கு” என்றவனை விழிவிரிய பார்த்தாள். ஏனென்றால் அவள் அதைதான் நினைத்து கொண்டிருந்தாள்
“ம்ம்… உங்களுக்கு கருநீல நிறம் பிடிக்குமா?” ஏதோ பேசவேண்டும் என்று கேட்க
“யெஸ்… பாரதியார் கவிதை படிக்க ஆரம்பிச்சதலிருந்து கருநீலம் என்றால் ரொம்ப பிரியம். நீயும் படிச்சிருக்க தானே?”
“படிச்சிருக்கேன்… ஆனா இளையராஜா பாட்டுதான் ஃபேவரட்.”
“சரிதான்… இந்த டிப்ஸ் வருங்காலத்தில் உன் வருங்கால கணவனுக்கு உதவும்” புன்னகைத்தான்
“வருங்கால கணவன்னு சொன்னா மட்டும் பத்தாது. மங்களூருக்கு வந்து சேர்ந்த அன்றைக்கு பேசுனதுதான். அப்புறம் எஸ்கேப் ஆகியாச்சு.. இதுல வருங்காலமாம் வருங்காலம்!!” அவள் பொரிய ஆரம்பிக்க
“ஏதிர்பார்த்தியா அழகி?” அந்த சொல்லுக்கே வலித்திருக்காது போல… அத்தனை மென்மையான குரலில் அவன் கேட்க… ‘எதிர்பார்த்தேனோ?’ அவள் மனம் வினவ… தொண்டையில் எழுதுவோ ஒன்று அடைத்து அவளை பேச விடாமல் செய்தது. கைப்பையின் வாரை கைகள் திருகி கொண்டிருக்க… என்னெவென்று சொல்ல முடியாத உணர்வொன்று அவளை தாக்கியது.
‘அழகிக்குகூட வார்தைகள் பஞ்சமாகிறதே? என்ன அதிசயம்!” மறுபடியும் அவன் சீண்ட… ஏனோ இந்த முறை கண்களில் ஒருவரி நீர்படலம் நின்று கோலம் போட்டுக்கொண்டிருந்தது.
சட்டென காரை ஓரம் கட்டியவன் காரின் ஸ்டாரிங்கை அழுந்த பற்றிக்கொண்டான். நரம்போடிய அவன் கரத்தை ஒரக்கண்ணால் பார்த்தவள் கோபத்தில் இருக்கிறானோ என்று நினைத்து அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க… அதே நேரம் அவனும் அவளை பார்த்தான்.
அந்த நீர்விழிகள் அவனை என்னவோ செய்தன “காட்!! மெஸ்மெரைசிங் ஐஸ்” மனம் கூச்சலிட… இருதய துடிப்பின் சத்தம் வெளியே கேட்டுவிடுமோ என்று அஞ்சினான். இத்தனை அருகில் அவளை பார்க்கையில் உள்ளே பாகாய் உருகினான். ஒன்றும் அறியா பாவை உருக்கினாள்
அவன் பார்வையை தாங்கி நின்றவளுக்கு கண்களை இமைக்க முடியவில்லை. அந்த கண்கள் சொல்லும் செய்தியை படிக்க மனம் ஆவலாய் துடித்தது. எட்டி பார்த்த நீரை தட்டி விட மனமில்லாமல் இமைக்காமல் அவனை பார்த்தாள். புரியாத அர்த்தங்கள்… விளங்க முடியாத பாவனை.
படபடவென்று பேசிய உதடுகள் வார்த்தையின்றி தவித்தன… அவன் பார்த்த பார்வையில். ஏதோ பேசுகின்றன அவன் விழிகள். என்னவாக இருக்கும்?
கேள்விகள் கேட்டே படுத்துபவனின் அதரங்கள் மூடினாலும் பார்வையால் செய்தி அனுப்புகிறான். படிக்க தெரியா பாவையிடம். ஆனால் உணர்கிறாள் என்பதை இங்குமங்கும் பூப்பந்தாட்டம் ஆடிய கருவிழிகள் ரகசியம் சொல்லின.
இடி மின்னலென ஆர்ப்பரித்த அவளது நெஞ்சம்… மயிலிரகாய் வருடிச்சென்ற அவனது பார்வையில்… சாரலாகி… புது உறவானவன் மென்காற்றாய் உருகொள்வதை உணர்ந்தாள்.
முதலில் பார்வையை விலக்கி தலை குனிந்தது தேவாதான். குனிந்த வாக்கில் பார்வையை மட்டும் உயர்த்தியவன் “ஜூஸ் வாங்கிட்டு வரேன். தாகமா இருக்கு!!” என்றவனின் பார்வை வேறு எதுவோ ஒன்றை சொல்லியது.
“ம்ம்..” என்றவள் பேசவில்லை. அவன் பார்வை சொன்ன செய்தி என்ன என்று யோசிக்கலானாள். ஊடுருவும் பார்வை கன்னி மனதை புது ரசனையில் மலர்ந்தது. அவளுமே உணர்வுகளின் சதிராட்டத்தில் களைப்பாகினாள் போலும். ஜூஸ் குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற சரியென்று விட்டாள்.
கார் கதவை திறந்தவன் “அடுத்த வாரம் முகூர்த்த பட்டெடுக்க போறோம். உனக்கு பிடிச்ச கலர்ல புடவை எடுக்கலாம். அப்படியே எனக்கு பிடிச்ச கொலுசையும் சேர்ந்து வாங்கிடலாம்” என்றவன் சாலையாய் தாண்டி சென்றுவிட்டான்.
அவன் சொல்லில் ஏசி காரில் அமர்ந்திருந்தவளுக்கு குப்பென வேர்த்தது.
“ஆம் அடுத்து திருமணம் தானே? இவனுடனான திருமணத்துக்கு நான் தயாராகிட்டேனா? மாறிட்டேனா?” தலையை திருப்பி சாலையை கடந்து கொண்டிருந்தவனை பார்த்தாள். பேசி பேசியே என்னை மாற்றிவிட்டானோ இவன்?
வெள்ளை டீஷர்ட்டும் கருநீல நிற ஜீன்ஸும் உடுத்தியிருந்தான். கண்களில் கூலர் சென்னை வெயிலுக்கு இதமாக போட்டிருப்பான் போலும். அது அவனுக்கு தனி அழகை கொடுத்தது என்றே சொல்லலாம். இரண்டு ஜூஸ் கப்களை கையில் பிடித்துக்கொண்டு நடந்து வந்துக்கொண்டிருந்தான்.
‘அழகாதான் இருக்கான்’ மனம் சொல்லிய நொடி அவன் வானத்தில் குட்டிகரணம் அடித்து புவியீர்ப்பு சக்தியால் மீண்டும் மண்ணில் விழுந்தான். என்ன நடந்தது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள் நிலா.
என்ன? என்ன நடந்தது இப்பொழுது? கண்கள் இருட்டிக்கொண்டு வர… இருபுறமும் தலையை ஆட்டியவள் சட்டென காரிலிருந்து இறங்கி ஓட.. அங்கே தேவா முகமெல்லாம் ரத்தம் வழிந்தோட உணர்வின்றி கிடந்தான்.
Last edited: