GG writers
Moderator
உ
நேசம் 13
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டி. அந்த பிடித்தம் எப்பொழுது நேசமா மாறுனதுனு எனக்கே தெரியல… இதையெல்லாம் உன்னை என் மடியில் தாங்கி, என் கை வளைவுக்குள் உன்னை பொத்தி வச்சிக்கிட்டு சொல்லனும்னு ஆசைதான் ஆனா…" சட்டென நிறுத்தி
"உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா? இந்த ஊசிமிளகாய் மேல் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் பயம் இருக்கு” ரகசியமாய் புன்னகைத்தான்.
“என் நினைவெல்லாம் நீ மட்டும்தான். எப்போ வந்த? எப்போ என மனசுக்குள் புகுந்த ஏன்று எதுவும் எனக்கு தெரியாது… நீ நடந்தா… என்னுள் அசைவு… நீ பார்த்தா தீ பத்திக்கிது… நீ முறைச்சா பனிச்சாரல்ல நனைஞ்சதுபோல் குளிருது… இன்னும் நிறைய சொல்லிகிட்டே போகலாம்” என்றவன் அவளின் நகக்கண்களை ஆராய்ந்தான். அதற்கு குட்டி முத்தம்கொடுத்து கன்னத்தில் வைத்து தேய்த்துக்கொண்டான்.
“நீ முழிச்சிருந்தா இதையெல்லாம் சொல்ல முடியுமா தெரியலடி. விமலனுடன் உன்னை பல இடத்தில பார்த்த பொழுதுகூட என் மனதில் வேர்விட்ட நேசம் வாடவே இல்ல… புது புது துளிர் விட்டுக்கொண்டேதான் இருந்துச்சி. ஏன்னு தெரியுமா? ஏன்னா அதுக்கு நேசநீரை நான்தான் அனுதினமும் ஊற்றிக்கொண்டே இருந்தேனே... பிறகு எப்படி வாடுமாம் ம்..” காதல் பித்தேறி பிதற்றிகொண்டிருக்க
“நீ கிடைக்க மாட்ட என்று தெரிந்தும் உன் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகமாய் கூடிக்கொண்டே போனதே தவிற கொஞ்சம் கூட குறையல. ஆனால் எனக்குள் ஒரு நம்பிக்கை ஒரு நாள் நீ என்னிடமே வந்து சேர்ந்திடுவ என்று. எண்ணம்தான் வாழ்க்கை என்று இன்று புரிஞ்சிக்கிட்டேன்” என்றவன் பேச்சை நிறுத்தி கன்னத்தில் குடிகொண்டிருந்த அவள் விரல்களை மெதுவாக உதட்டுக்கு நகர்த்தி மென்முத்தம் ஒன்று கொடுக்க
“தர்ஷா….” மயக்கத்திலும் அவன் பெயரை சொல்லிக்கொண்டு மெதுவாக அவள் அசைய… அவன் பெயரை உச்சரித்த விதத்தில் பித்தானான்.
“முழிச்சிருக்கும் போது உனக்கு நான் தர்பூஸ் தூங்கும்போது மட்டும் தர்ஷாவா? தூங்கினாலும் முழிச்சாலும் என்னை மயக்கிக்கிட்டே இருக்கடி” கொஞ்சியவன் தன் நிலவின் முகத்தை மறைத்த கூந்தலை தன் சுவாசம் கொண்டு ஒதுக்கி மென்மையாக பாடினான்
நாணம் கொண்டு மேகம் ஒன்றில்
மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும்
முகத்தை மூடும் அழகென்ன
தூக்கத்தில் என் பேரை நீயும் சொல்ல
காரணம் காதல் தானே
என்று பாடியவன் அவள் அசைய ஆரம்பித்ததும் மெல்ல எழுந்து அவள் காதருகில் குனிந்தான்
“உன்னை கண்டவுடன் காதல் இல்லை பெண்ணே. நான் கண்ட உன்னுடன்தான் என் முதல் காதல்” என்றான் ரசனையுடன். அவளும் உணர்ந்தாள் போலும் தூக்கத்திலும் சிலிர்த்தாள்.
“உன்னால் என்னை ஏற்றுக்கொள்ள முடியாததற்கும் என்னால் என்னை மாற்ற முடியாததற்கும் இடையில் மாட்டிக் கொண்டது என் சிறு காதல் இதயம் தெரியுமா?” என்றவன் அவள் கண்கள் அசைவது கண்டு… நல்ல பிள்ளையாய் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
மெல்ல கண் விழித்தவள் சுற்றும்முற்றும் பார்க்க… அருகில் கண்மூடி அமர்ந்திருந்தவனை தவிர்த்து யாருமில்லை என தெரிந்துக்கொண்டவள் அவனை ஆராய்ந்தாள். தலையில் சின்ன கட்டு கூடவே முழங்கைகளில் சிராய்ப்பு இருந்தது. அதில் ஏதோ களிம்பு பூசப்படிருந்தது போலும். அவன் வெண்நிறத்துக்கு குருதியின் செந்நிறம் பளிச்சென தெரிந்தது.
“ப்ச்!! என்னால்தானே உங்களுக்கு விபத்து! நான் ராசியில்லாதவ என்று சொன்னா யாரும் கேட்கிறதில்லை… இப்போ பாருங்க..” என்று அவள் அவன் முகம் காண.. அவன் விழித்திருந்தான்.
“ம்ம்… பார்த்திட்டேன் சொல்லு!!” அவன் விழிப்பான் என்பதை எதிர்பார்க்காதவள் அடுத்து அவன் பேசியதை கேட்டு அதிர்ந்தாள். நெஞ்சில் கைவைத்து கண்கள் விரித்து வாய் பிளந்து எச்சில் விழுங்கியவளின் செயல்கள் அவனை கிறங்க செய்தது.
‘எப்போ முழிச்சீங்க?”
“துங்கினாத்தானே முழிக்க”
“இல்ல நான் பார்த்தேன் நீங்க கண் மூடி இருந்தீங்க”
“ஆமா யாரு இல்லனு சொன்னது?”
“ப்ச்! நான் சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்டுதான் கண்மூடி இருந்தீங்களா?”
“கேட்க காதின் புலன்கள் விழித்திருந்தால் போதும் என்பது என் கணிப்பு. கண்களும் திறந்திருக்கனுமோ?” என்றுவேறு கேட்டு வைக்க… விஜயகாந்துக்கு டஃப் கொடுத்தன அவள் விழிகள்.
‘ரொம்ப கலாய்க்கிறோமோ’ எண்ணியவன் “என்னவோ ராசி ரோசினு சொல்லிக்கிட்டு இருந்தியே அதை சொல்லு” விடாமல் அவன் வம்பு பண்ண
“ஆமாம் நான் ராசியில்லாதவ… அதனால்..”
“ஆமா நீ ராசியில்லாதவ நான் ராசியை மொத்தமா குத்தகை எடுத்துக்கிட்டவன். அதனால இப்போ என்ன?ம்ம்.. சொல்லு?”
“ஹாங் அது வந்து அதான் என் துரதுஷ்டம்தான் இந்த விபத்துக்கு காரணம் என்று..”
“ஓ… நீ அப்படி சொல்லுறீயா? ஆனா நான் அப்படி நினைக்கலயே… உன் ராசியால்தான் தலைக்கு வந்தது நெற்றியோட முடிஞ்சிடுச்சி என்று நினைச்சேன். அப்படி இல்லையோ?” அவனின் கடின குரல் அவளை தடுமாற செய்ய
“இல்ல… அப்படி இல்ல..”
அப்படி இல்லையா? அப்போ எப்படி? அதுவே நான் செத்து போயிருந்தா நீ இப்படி உன் ராசியை பத்தி புலம்பியிருக்கலாம்… நான் உயிரோடுதானே இருக்கேன்!! இல்ல நான் உயிரோடு திரும்பியதுதான் உனக்கு பிரச்சினையா?” தேளாய் கொட்டினான்.
கோபம் தலைக்கேற கட்டிலிருந்து குதித்தவள் சட்டென தன் கைகொண்டு அவன் வாயை மூடிக்கொண்டு ஓரு விரல்நீட்டி அவனை எச்சரித்தாள்.
“மூச்!! இன்னொரு தடவை இப்படி பேசினீங்க… நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. வாய் இருக்குனு என்ன வேணாலும் பேசுவீங்களா? வாயா இது? வாயா இது?” என்றவள் மூடிய கரம் நீக்கி அவன் வாய் மேலே இரண்டு அடி போட… சுகமாய் உருகி கரைந்து அவளன்பில் நனைந்தான் தேவா.
அமர்ந்த வாக்கில் அவனிருக்க அவனுக்கு வெகு அருகில் தெரிந்த மதிமுகத்தை கையில் அள்ளிக்கொள்ள துடித்தன அவன் கரங்கள். ஆனால் முடியாதே? இப்பொழுது அவனால முடிந்ததை செய்தான். அதான் கண்களால் தன் நேச அன்பை விடுத்தான்.
பளபளத்த கண்கள் எதையோ உணர்த்த முயல்வதை புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு அப்பொதுதான் தான் நின்றிருக்கும் நிலையை உணர்ந்தாள். “நானா? நானா? எப்படி இத்தனை அருகில்? அதுவும் உரிமையுடன் அவனை தொட்டு..’ அதற்குமேல் யோசிக்கமுடியாமல் தலையை இருபுறமும் ஆட்டிக்கொண்டே தள்ளி நின்றுக்கொண்டாள்.
“அது… அது… ஏதோ வேகத்துல… என்னை அறியாம..” வார்த்தைகளை பிய்த்து பிய்த்து பேச
“அறிந்தே வாங்கிக்கிட்டேன்… சண்டைல கிழியாத சட்டையில்லை… அதேபோல பொண்டாட்டி கையால அடி வாங்காத புருஷனும் இல்ல… என்ன மூன்று வாரத்துக்கு முன்னமே வாங்கிக்கிட்டேன்… இட்ஸ் ஒகே. நோ ப்ரோப்ளம்” தோளைகுலுக்கி கொண்டான்.
அவளுக்கோ அய்யோவென இருந்தது. ‘எப்படி வந்து மாட்டிக்கிட்டு நிற்கிறேன் பாரு! நிலா வர வர உனக்கு அறிவே வளர மாட்டிக்கிதுடி’ தன்னையே நொந்து கொண்டவள் என்ன செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்துக்கொண்டிருக்க… ஒற்றை விரலை அவளின் தங்க வளையலுக்கும் கைக்கும் ஊடே வைத்து மெல்ல வலையலை மேலே தூக்க அதிர்ந்தாள் நிலவவள்.
“இந்த கைதானே என்ன அடிச்சது?” என்றவனின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் வார்த்தைகள் தொண்டையில் நின்று போராட்டம் செய்ய ‘அய்யோ என்னை விடேன்’ என்று அவள் கண்களால் தூது விட அவளின் தவிப்பில் மயங்கியே போனான்.
‘பார்த்தே சாவடிக்கிறா’ மனம் குழைய பிடித்திருந்த வளையல் அவன் மனம்போல் விரலோடு ஊஞ்சலாடி கொண்டிருந்தது.
“இனி ராசி, அதிஷ்டம் அப்படினு ஏதாவது உளருனா… இந்த கையை கடிச்சி வச்சிருவேன் பார்த்துக்கோ!! எனக்கு என் எண்ணங்கள் முக்கியம்”
“செல்ஃபிஷ்’ மனம் கூவ வாய் மொழி அவன் விரலோடு உஞ்சலாடி கொண்டிருந்தது.
“என்னவோ என்னை மனசுக்குள்ள திட்டுற!! சரிதானே?” விரிந்த விழிகள் உண்மையென ஒப்புவிக்க… தலையோ இருபுறம் அசைந்து பொய்யுறைத்தது.
“பொய்க்காரி! பொய் சொன்னதுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கலாமா?” இப்பொழுது விழிகளோடு இணைந்து உதடுகளும் விரிய… வளையலை தன்னை நோக்கி இழுத்தான். சொல்லுக்கு கட்டுப்படும் கிளியென அருகில் நின்றிருந்தவளை அனுஅனுவசாக ரசித்தன அவன் விழிகள். அசையா விழிகள் அதிகத்துக்கும் பேசின.
வளையலுக்கு விடுதலை கொடுத்தவன் பார்வையை திருடிக்கொண்டான். விடுதலை பெற்ற கரமோ அந்தரத்திலே நிற்ககண்டு புன்னகை வந்தது அவனுக்கு. ‘அடியே அழகி… பார்த்தே என்னை கொல்லாதடி. என்னை நல்ல பையனா இருக்க விடு’ மனம் கெஞ்ச வஞ்சம் செய்த விழிகளை கஷ்டப்பட்டு திருப்பிக்கொண்டான். இடுப்பில் கைவைத்து ‘உஃப்’ என்றவன் சிலையென நின்றவளை பார்த்து
“என்ன ரொம்ப பேச வைக்கற நீ!! கல்யாணத்துக்கு அப்புறம் பனிஷ்மென்ட் கொடுத்துக்கிறேன்… இப்போ போ!” கடுமையாக சொல்ல நினைத்த வார்த்தைகள் அத்தனையும் மென்மையை தழுவிக்கொண்டு வந்தன.
உயிர் வந்த சிலை “என்ன போகனுமா!” கிள்ளையாய் கொஞ்சி அதிசயிக்க
“அப்போ என்கூடவே இருக்க போறீயா என்ன?”
அவளரியாமல் அவள் கன்னம் சூடேறியது.
“இல்ல அது நீங்களும் வரலாமே… நான் மட்டும் ஏன் தனியா போகனும்?” சம்பந்தமில்லாமல் ஏதேதோ சொல்ல…
‘இப்படி பக்கத்துல வந்து கண்ணை பார்த்ததுக்கே இப்படி உளறி கொட்டுறா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் உன் நிலமை மோசம்டா தேவா’ மனம் எள்ளி நகையாட
“என்னை இன்னும் டிஸ்சார்ஜ் பண்ணல அழகி. இல்லனா ஒன்னு செய்யேன்?” கோரிக்கை வைக்க
“என்ன செய்யனும்?”
“திருப்பி ஒரு தடவை மயங்கி விழுந்திடு! என் பக்கத்திலேயே ஒரு பெட் போட்டு அட்மிட் ஆகிக்கலாம்.. வாட் டு யு ஸே?” பரிகாசம் செய்ய… இதை சற்றும் எதிர் பார்க்காதவள்
“உங்களை போய் கேட்டேனே என்னை சொல்லனும்!! ஏதோ மறதியில பேசிட்டேன். அதுக்கு உங்க பக்கத்துல படுக்க சொல்லுவீங்களா?”
“ஓ… கல்யாணத்துக்கு அப்புறம் பக்கத்துல படுத்துக்கலாம் இப்போ எதுக்குனு சொல்ல வர… அப்படித்தானே?”
“யோவ் தர்பூஸு!! உங்களை போய் இந்த உலகம் நல்லவன், அமைதியானவன், பேச தெரியாவன்னு நம்புது பாருங்க.. அவ்வா வாயை திறந்தாலே வில்லங்க பேச்சு!!” மூச்சு வாங்க அவள் பேச
“வில்லங்க பேச்சுல என்னாம்மா இருக்கு? நீ மட்டும் மங்குனியாட்டம் ராசியில்லாத அதிஷ்டம் இல்லாதவனு பேசலாமா? வெளியே போய் நான் மாஸ்டர் படிக்கிறேன்னு சொல்லிடாதே!! சிரிச்சிட போறானுங்க..”
“யோவ்!!” அவனை திட்டுவதற்காக வார்த்தைகள் தேடியவள் அது கிடைக்காமல் போல “போயா டேமேஜ் பீஸு” என்று சொல்லிக்கொண்டு கதவை திறக்க… வெளியே சென்றவர்கள் அறைக்குள் நுழைந்தனர் கொசுறாக டாக்டரும்.
--------------
“அம்மா இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரியுதா?” என்ற குமுதாவை கலவரத்துடன் பார்த்தார் முத்தம்மா. ஏற்கனவே தன் உள் உணர்வுபயம் உண்மையானதில் கலங்கி போயிருந்தார். பயத்தில் எல்லோர் நலனையும் விசாரித்தவர் தன் வருங்கால மருமகனை விசாரிக்காமல் போனதை எண்ணி வருந்தி கொண்டிருந்தார்.
இன்னும் தேவாவை தன் குடும்பத்தில் ஒருவராக நினைக்கவில்லையோ என்ற குற்ற உணர்வில் தவித்து கொண்டிருந்தவரைதான் கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் குமுதா. மருத்துவமனைக்கு சென்றவர்கள் இருவரும் நலம் என்று மட்டும்சொல்லியிருக்க… சற்று நிம்மதியுடன் அமர்ந்திருந்தார். இருவருக்கும் கண் திருஷ்டி பட்டு விட்டதோ என்று நினைத்து கொண்டிருக்க பெரியவள் வேறு சொல்ல மனம் சுனங்கிபோனார்.
இவள் வாயிலிருந்த நல்ல வார்த்தையே வராதே என்று நினைக்க அதை உண்மை என்று நிரூபித்தாள் குமுதா.
“அவளுக்கு ஏதோ தோஷம் இருக்குனு நினைக்கிறேன் ம்மா. பேசாம இந்த கல்யாணத்தை கொஞ்சம் தள்ளி வச்சிட்டு… ஒரு நல்ல பூசாரியை பார்த்து பரிகாரம் பண்ணா என்ன?”
“நாக்கை கள்ளிச்செடியாட்டம் வச்சிருக்க குமுதா!!” கடுப்புடன் முத்தம்மா சொல்ல
“கள்ளிச்செடியா இருந்தாலும் நல்லதுதானே சொல்லுறேன் ம்மா. நல்லா யோசிச்சு பாருங்க. நானும் குணாவும் காதலிச்சோம் அதனால ஜாதகம் பார்க்க வேணாம்னு சொல்லிட்டாங்க… ஆனா இவளுக்கு வீட்டுல பார்த்ததுதானே? ஏன் ஜாதகம் பார்த்து தோஷம் இருக்கானு செக் பண்ணாதான் என்ன?”
“அது எல்லாம் வேண்டாம்!!”
“ஹையோ!! அம்மா… அம்மா… தோஷம் ஒன்னுமில்லனா எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்தான். அப்படி ஏதும் இருந்தாலும் கவலைப்பட ஒன்னுமில்லமா… பரிகாரம் பண்ணிக்கலாம்னு தானே சொல்லுறேன். எல்லாம் அவ நல்லதுக்குதானே ம்மா!!” தேன் தடவி பேச… சற்று குழம்பி போனார் முத்தம்மா.
“நம்ம தேவாதானே மா… சொன்னா கேட்டுக்க போறார். அவங்க கல்யாணம் நல்லப்படி நடக்கனும்னு அவருக்கு மட்டும் ஆசை இருக்காதா? ஆரம்பமே இப்படி அபசகுனமா நடந்திருக்கு. போகபோக என்ன நடக்குமோ? அதற்குமுன் நாமளே பரிகாரம் ஏதும் பண்ணிட்டா நிலா சுகமா வாழ்வால்ல”
அடிமேல் அடிக்க அவசியமே இல்லாமல் வார்த்தைகளுக்கு தேன் தடவியே கரைத்தாள் குமுதா. சின்னவளை நினைத்து வருந்திக்கொண்டிருந்த தாய் மனம் கரைந்தது. தேன் என்று நம்பி தேளுக்கு செவி சாய்க்க ஆரம்பித்தார் முத்தம்மா.
“இது சரியா வருமா குமுதா? நிச்சயம் எல்லாம் முடிஞ்ச பிறகு ஜாதகம் பார்க்கனும்னு சொன்னா அவங்க தப்பா நினைச்சிக்க மாட்டாங்களா?” சிலந்தி வலையில் அழகாக விழுந்தார் முத்தம்மா.
“என்னம்மா நீங்க!! நாம என்ன அவங்க பையனுக்கா தோஷம் இருக்குனு சொல்லுறோம்… நம்ம நிலாக்குதானே தோஷம் இருக்குனு சொல்லுறோம்! நாம அவளுக்கு பரிகாரம் பன்றதுல்ல அவங்களுக்கு என்ன நஷ்டம்?” உசுப்பேற்றியவளின் வார்த்தை ஜாலத்தை உற்று கவணித்திருந்தால் அவருக்கும் புரிந்திருக்கும் குமுதாவின் குள்ளநரித்தனம்.
“எனக்கு என்னவோ இவளோட தோஷத்தாலத்தான் அவ காதல் கைவிட்டு போச்சுனு நினைக்கிறேன்… இந்தனை காலம் இல்லாம சரியா கல்யாண பேச்சை எடுத்ததும் அவ தோஷம் வேலை காட்ட ஆரம்பிடுச்சு பாருங்க..” நிலாக்கு தோஷம் என்று உறுதிபடுத்தி பேசினாள் குமுதா.
தேனீயோ தேளோ இரண்டும் கொட்டும் குணம் உடையவை என்று அறியாதவராக கௌரம்மாக்கு அழைக்க ஆரம்பித்தார் முத்தம்மா. அங்கு ஒருத்தி வஞ்சக புன்னகை சிந்தியதை கவணிக்க தவறினார்.
“அண்ணி… உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனுமே..” முத்தம்மா ஆரம்பிக்க
“நானும் ஒரு முக்கியமான விஷயத்தை பேசதான் வந்துக்கிட்டு இருக்கேன் அண்ணி. இருங்க வந்திடுறேன்” என்ற கௌரம்மா அழைப்பை துண்டித்துவிட… என்னவென கேட்ட குமுதாவிடம் விளக்கியதும் முகம் மாறினாளவள்.
“என்னம்மா இது… எனக்கு என்னவோ நடந்த விபத்தை அபசகுணம்னு சொல்லிடுவாங்கனு தோனுது. கல்யாணத்தை நிறுத்திடுவாங்களோ? விடக்கூடாது ம்மா!! நம்ம வீட்டு பிள்ளை அவங்களுக்கு என்ன கிள்ளுகீரையா? விடக்கூடாது மா!!” விஷயம் என்னவென்று தெரியாமலேயே இமயமலை அளவுக்கு முத்தம்மாவை உசுப்பேற்றி விட்டாள் குமுதா.
Last edited: