GG writers
Moderator
உ
நேசம் 2
அன்று
அப்பொழுது நிலவழகி கல்லூரியின் முதலாம் ஆண்டில் கால் பதித்திருக்க… குமுதமலர் இறுதியாண்டை நிறைவு செய்யவிருந்தாள். அக்காள் படிக்கும் அதே கல்லூரியில் தனக்கு இடம் கிடைத்ததில் நிலவழகிக்கு பெரும் நிம்மதி. இருக்காதா பின்னே ஃபிரஷஸ்க்கு நடக்கும் ரேகிங்கை அவளும் கேள்வி பட்டிருக்காளே. அக்காள் இருக்க பயமேன் என்ற துணிவுடன் செல்ல… முதள் நாளே துணிவுகள் எல்லாம் சுக்குநூறாகி போனது.
சீனியர்ஸிடம் தான் குமுதமலரின் தங்கை என்று சொல்லவும் கண்கள் மின்ன இன்னுமே குஷியாகி போயினர் என்றுதான் சொல்ல வேண்டும். குமுதாவிடம் சொன்னாலும் அதை அவள் கண்டுக்கொள்வதாய் தெரியவில்லை. ஏன் என்று அவள் யோசிக்கையில்தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.
ரேகிங் செய்யும் அத்தனை சீனயர்ஸும் தன் பெயர் சொல்லி அழைக்காமல் குமுதமலரின் தங்கை என்றே விளித்தனர். அதுவும் சும்மா ரேகிங் செய்கிறேன் என்று ஒப்புக்கு சொல்லிக்கொண்டு பாடவோ ஆடவோ செய்யவிட்டு இறுதியில் ‘நாளை உன்னை ரேகிங் செய்யாமல் இருக்கனும் என்றால் நீ உன் அக்காவுடன் வரவேண்டும்’ என்று கட்டளையிட்டனர்.
நடந்ததை குமுதாவிடம் அப்படியே ஒப்புவித்தால் அவளிடமிருந்து ஓர் அலட்சிய புன்னகைதான் பதிலாக இருக்கும். ஏன்? எதனால்? ஒன்றும் புரியவில்லை நிலாவுக்கு. ஒரு வழியாக ரேகிங் காலம் முடிய… இப்பொழுது பிரச்சினை வேறு ரூபத்தில் வந்தது. வாரம் ஒரு கடிதமாவது நிலா கையில் கிடைத்துவிடும் குமுதாவிற்கு கொடுக்க சொல்லி. முதலில் என்ன ஏது என்று தெரியாமல் அதை குமுதாவிடம் கொடுத்தவள் பின்பு இதே வழக்கமாகி கொண்டிருக்க விழித்துக்கொண்டாள்.
இதய அறுவை சிகிச்சைக்குப்பின் தந்தை பணி ஓய்விலிருக்க… குடும்பத்தை தன் கையில் தாங்கி கொண்டிருந்த சிவநேசனிடம் சொல்லவா வேண்டாமா என்று யோசனையில் இருக்க… அதிலேயே சில மாதங்கள் கடந்திருந்தன. ஆனால் புதிதாக குமுதாவிடம் சில மாற்றங்களை கண்ட பின்புதான் தான் தாமதித்தது பெரும் தவறு என்று புரிய வந்தது.
இருவரும் ஒரே அறையை பகிர்வதால் குமுதாவின் மாற்றங்களை நிலவழகியால் உணர முடிந்தது. அடிக்கடி அலைபேசியில் மூழ்குவதும் யாரிடமோ தனியாக மணிக்கணக்கில் பேசுவதும் பின்பு எதையோ நினைத்து சிரிப்பதும், முகம் சிவப்பதுமாக இருப்பவளை கண்டவளுக்கு புரிந்து போனது அக்காள் யாரையோ காதலிக்கிறாள் என்பது. இதை புரியாமல் இருக்க அவள் ஒன்னும் சிறு குழந்தையல்லவே… காதல் வயப்பட்ட தன் சக தோழிகளை கண்டிருக்கிறாள். போதாதென்று சினிமா வேறு பல விஷயங்களை சொல்லி கொடுத்திருக்கிறதே.
அப்பொழுது சிவநேசன் தன் நண்பன் தேவாவுடன் புதிதாக தொழில் ஆரம்பித்து முன்னேறி கொண்டிருக்கும் காலம்… சற்றும் தாமதிக்காமல் அண்ணனிடம் விஷயத்தை காதில் போட்டு விட்டாள். சிவநேசனுக்குமே அதிர்ச்சிதான். இது தாமதிக்க கூடிய விஷயமல்ல என்றெண்ணியவன் நண்பன் தேவாவின் துணையோடு விசாரித்ததில் கிடைத்த தகவல் குடும்பத்தையே ஆட்டம் காண வைத்தது.
----------------
இரண்டு வருடங்களுக்குமுன் நடந்தவற்றை நினைத்து கொண்டிருந்த நிலாவுக்கு குமுதாவை எண்ணி ஆற்றாமையாக இருந்தது. ‘இது மட்டும் என்றால்கூட பரவாயில்லை ஆனால் அதன் பிறகு அவள் செய்தவைதான் இப்பொழுது அவளின் தூரதேச தனிமை’ என்றெண்ணியவளின் முகம் வேர்த்திருந்தது. மனதின் புழுக்கம் முகத்தில் பிரதிபலிக்க… ஜன்னல் கம்பியை இறுக பற்றிக்கொண்டாள்.
விட்டுப்போன உறவை மறக்க முடியாமல் அவள் அல்லாடிக்கொண்டிருக்க… இடையில் வார்டனிடமிருந்து அழைப்பு. தன்னை பார்க்க குடும்ப உருப்பினர் யாரோ வந்திருப்பதாக சொல்லப்பட… குழப்பமானாள். யார் வருவதாக இருந்தாலும் அண்ணன் தகவல் சொல்லியிருக்ககூடும் என்ற சிந்தனையுடன் செல்ல… அங்கே குணாளன் நின்றிருந்தான். ‘இவங்க ஏன் இங்கே?’ என்ற யோசனையுடன்
“என்ன விஷயம்? இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?” மாமா என்று உறவுகொண்டு அழைக்காமல் யாரிடமோ பேசுவது போல் பேசியவளை முறைத்தவன்
“டெல்லிக்கு போயிருந்தேன். வளைகாப்புக்கு வர முடியலனு சொன்னீயாமே… குமுதா சொல்லி அழுதா. அதான் வர வழியில உன் புரொஃபசரை பார்த்துட்டு உனக்கு லீவு கேட்ட வந்தேன்” என்றான் அலட்சியமாக
“அதான் படிப்பு இருக்கு என்று சொன்னேனே..” பட்டு கத்தரித்தாள்
“ஸ்டடி லீவ் என்று புரொஃபசர் சொன்னாரே!! ப்ச்!! அதைவிடு உன் அக்காதானே அவ.. கர்ப்பிணியை ஏன் கெஞ்ச வைக்கிற” அவனின் அதிகபிரசங்கித்தனத்தில் கொதித்து போனவள்
“கர்ப்பிணிப்பெண் கெஞ்சுனா அவ பாவம்… அதுவே கன்னிப்பெண் கெஞ்சுனா அவ பாவி… அப்படித்தானே!!” மிளகாயாய் காய்ந்தவளின் பேச்சுக்கு பதிலில்லை குணாளிடம். முகம் கறுத்து தொண்டை வற்றியது அவனுக்கு. தண்ணிரை எடுத்து குடித்தான். பேச்சில் உள்ள காரத்தை தண்ணீர் கொண்டு விழுங்கிக்கொண்டான் போலும்.
இவளை பேச விட்டால் தன்னையே மடக்கி விடுவாள் என்பதை உணர்ந்தவன் அவளை கார்னர் செய்யும் வழியை கையிலெடுத்தான். சட்டென எழுந்தவன் அலட்சியத்துடன் அவளை பார்த்து
“வெல் நீ வரதும் வராததும் உன் விஷ். பட்…. ஒரு விஷயம் நீ எப்பொழுதும் மறந்துடற நிலா” புருவம் சுருக்கியவள் கேள்வியாய் அவனை நோக்க
“நம்ம குடும்பத்துக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் ஒன்று இருக்கு… நீ வரலனா அந்த விஷயம் எல்லோர் காதுக்கும் போயிடும். அப்புறம் உன் குடும்ப மானம் என்னாகும்னு நீயே யோசிச்சிக்கோ… அதுலயும் உன் அப்பா அதான் என் மாமனார் ஹார்ட் பேஷண்ட் வேற” என்று சொல்ல
அதிர்ந்துவிட்டாள் நிலா. ‘உண்மைதானே.. குணாளன் செய்யக்கூடியவன்தான். மற்றவர்களின் உயிரை துச்சமாக நினைப்பவன். இவனுக்கு அப்பாவெல்லாம் ஒரு பொருட்டல்ல. ஐயோ! அப்பாவால் இன்னொரு அதிர்ச்சியை தாங்க இயலாதே!!” அதிர்ந்து கலங்கி நின்றிருந்தவளை கண்டவனுக்கு பரம திருப்தி.
அவளை சொடக்கிட்டு அழைத்தவன் “சும்மா பிலிம் காட்டாம.. ஒழுங்கா வந்து சேரு!!”. சொன்னவனின் முகத்தில்தான் அத்தனை எகத்தாளம். வெந்து வெதும்பி போனாள் பெண்ணவள்
ஆயிரம் ஆசைகளோடு கட்டிய காதல் கோட்டை மணல் வீடாகி அழிந்து போனதை தாங்க முடியாமல் மன அழுத்தத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவளை இன்னுமே தளைகள் கொண்டு இறுக்கியது குடும்ப பந்தம். இதோ தந்தை பேர் சொல்லி மிரட்டி செல்லும் குணம் கெட்ட குணாளன் போன்றோருக்கெல்லாம் அடிபணிந்து செல்லும் நிலையை அடியோடு வெறுத்தாள் நிலா.
வேறு வழியில்லை. அதே காயம்பட்ட பாதையில் மறுபடியும் போக வேண்டும். பின் வாங்க முடியாது… முன்னாடி போகதான் வேண்டும். குணாளன் போன்றோரை எல்லாம் அவர்கள் வழியில் சென்றுதான் அடக்க வேண்டும். முடிவெடுத்தவள் அண்ணனுக்கு தான் வருவதாக ஒரு குருஞ்செய்தி அனுப்பிவிட்டு மளமளவென கிளம்பிவிட்டாள். போகும் வழியில் அழைப்பு வந்துவிட்டது சிவநேசனிடமிருந்து.
“என்ன நிலா என்ன திடீர் பிளான் மாற்றம்?” ஆழம் பார்த்தான்
“மச்சானுக்கும் அம்மாக்கும் நடுவுல நீ அல்லாடுறத நினைச்சு ஒரு பரிதாபம்தான்” பரிகாசம் செய்ய முயன்றாள்
“அப்படியா? நான்கூட டில்லிக்கு போன மச்சான் நடுவுல மங்களூருக்கு ரூட்டை மாத்திட்டாரோ என்று நினைச்சேன். எம்புட்டு அப்பாவி பாரு நானு” அவனும் அவள் வழியில் பரிகசிக்க
“அண்ணனுக்கு தெரியாததும் எதுவும் உண்டோ?” கண்டுக்கொண்ட அண்ணனின் மேல் பாசம் பொங்கியது
“என்ன செண்டிமெண்டா? மிரட்டலா?”
“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு கிளம்பிட்டேன் ண்ணா” என்றாள் தெளிவாக.
“சரி சரி பஸ்ல வர வேண்டாம். நேரா ஏர்போர்ட்டுக்கு போ. தேவாகிட்ட சொல்லி ஃபிளைட் டிக்கட் போட்டாச்சு. இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு. வாட்ஸப் பாரு”
“ண்ணா… ம்ம்.. செலவு அதிகம் வரும்” தயங்கி திக்கி பேச
“உன் அண்ணனும் பணக்காரன்தான் மா..” என்றவனின் பாசம் அவளை நெகிழச்செய்தது.
“இல்ல.. வளைகாப்பு செலவு எல்லாம் நாமதான் பார்க்கனும்ல… அதான்” தயங்கி பேசியவளை நினைத்து வருந்தினான். ஒரு தங்கை செலவு செய்வதை நினைத்து மருக மற்றொருத்தியோ செலவு செய்ய வற்புருத்துகிறாள். அதை நினைத்து பெருமூச்சு விட்டவன்
“எல்லாம் ஆச்சுடா… பாக்கி நீ வந்துட்டா போதும் விழாவே நிறைஞ்சிடும்” என்றவன் வைத்துவிட… அவள் நினைவுகள் மறுபடியும் பின்னோக்கி சென்றது.
‘இந்த அண்ணன் மட்டும் இல்லயென்றால் என் நிலை??”
_________________________________________
நிலவழகி பேரழகி என்று எல்லாம் சொல்லிவிட முடியாது. அழகிதான் சிரிக்கும் பொழுது அவள் கண்களும் சேர்ந்து மின்னுவதை பார்த்து கொண்டே இருக்கலாம். அத்தனை வசீகரமாக இருக்கும். ஆனால் குமுதமலர் பேரழகி என்று பார்த்தாலே சொல்லிவிடலாம். குமுதாவிற்கு பச்சரி பற்கள் என்றால் நிலா தெற்றுப்பல் அழகி. சின்னவள் தாயின் முகவடிவும் தந்தையின் மாநிறமும் பெற்றிருக்க… பெரியவள் தாயின் மொத்த அழகையும் கொண்டிருந்தாள். அதில் குமுதாக்கு அத்தனை கர்வம்.
மற்றவர்கள் தன் அழகின் மீது பொறாமை படுவதில் அவளுக்கு பேரின்பம். பள்ளி காலங்களிலும் சரி கல்லூரி காலங்களிலும் சரி அவளின் அழகை கண்டு மயக்கம் கொண்டவர் பலர். அவர்களின் வழிசலில் பேரின்பம் கொள்பவள் அவர்களை சட்டை செய்ய மாட்டாள். குமுதாவிடம் அறிமுகம் கிடைக்கவென நிலாவை தூதாக பயன்படுத்தியவரும் உண்டு. அத்தனையையும் தூசு தட்டி விட்டாள். அவளை பொறுத்தவரை அவளின் அழகுக்கு இணையான அழகன் செல்வத்துடன் தன்னை நாடி வருவான் என்பதில் உறுதியாக இருந்தாள்.
அவள் நினைத்தது போலவே அவள் வாழ்வில் நுழைந்தான் வசீகரன் என்பவன். அன்றாடம் கல்லூரிக்கு BMW காரில் வந்திறங்கியவனை அவள் விழிகள் சிறைபிடிக்க… அவள் அழகில் கிறங்கி வாழ்நாள் கைதியாகிட முடிவெடுத்தான் வசீகரன். அழகையும் செல்வத்தையும் கண்டு மயங்கிய குமுதா அவன் பின்புலத்தை அறிய முற்படவில்லை.
அழகிய வதனம் கொண்ட வசீகரன் உண்மையில் பணக்காரனல்ல. அவன் தந்தையின் வற்புருத்தலால் கல்லூரிக்கு வருபவன் படிப்பை கிடப்பில் போட்டுவிட்டு ஊதாரியாக கூடா நட்புடன் ரோட் சைட் ரோமியோவாக சுற்றி கொண்டு பொறுப்பில்லாமல் இருந்தவனை கண்ட அவன் தந்தை அவனுக்கு பணம் கொடுக்க மறுக்க.. அவனுக்குமே தேவை இருப்பதால் அவரின் வற்புறுத்தலின் பேரில் அவரின் முதலாளிக்கு பார்ட் டைம் டிரைவராக வேலையில் சேர்ந்தான்.
முதலாளியை அலுவலகத்தில் விட்டுவிட்டு லூட்டியடிக்க கல்லூரிக்கு வந்தவனை முதல் பார்வையிலேயே வசீகரித்தாள் குமுதா. அவளின் பணத்தாசை எண்ணம் கொஞ்ச நாளிலேயே கண்டுக்கொண்டான் அவன். சற்று அதிர்ந்தும் போனான்.
பெண்களை ஏமாற்றுவது எல்லாம் கை வந்த கலை அவனுக்கு. ஆனால் குமுதாவின் அழகு அவனை தலைகுப்புற விழவைத்துவிட அவள்தான் தன் மனைவி என்று முடிவெடுத்துவிட்டான். அவளை அடைய நண்பர்களுடன் தீவிரமாக திட்டம் போட்டான்.
“என்ன வசீ எங்களுக்கே கட்டம் போட்டு கொடுக்கிறவன் நீ… உனக்குனு வரும்பொழுது மூளை வேலை செய்யலையோ” நண்பன் ஒருவன் எகத்தாளமாக சிரிக்க
“என்ன வேணாலும் சொல்லிக்கடா. அதை பத்தி எனக்கு கவலை இல்ல. எனக்கு அவ வேணும். அவ்வளவுதான்”
“டேய் என்னடா வசீ ரொம்ப சீரியஸா இருக்க? காதலில் விழுந்திட்டீயா என்ன?” இன்னொருவன் கேட்க
“அவ எனக்கு வேணும்டா… சீரியஸாதான் சொல்றேன். அவ என்னை பெரிய பணக்காரன்னு நினைச்சுக்கிட்டு இருக்கா. அந்த கார்கூட என்னதுதான்னு நினைச்சிக்கிட்டு இருக்கா. அவளுக்கு வேண்டியதெல்லாம் அழகும் பணமும். அழகு என்கிட்ட இருக்கு ஆனா பணம்? பார்ட் டைம் சம்பளக்காரன்கிட்ட என்ன காசு இருக்க போவுது? இருக்கிறதும் அவளை கரெக்ட் பண்ணவே சரியா போச்சு..”
“டேய் உன் சம்பளம் மட்டுமாடா? பாதி மாசம் எங்க பாக்கெட்டையும் சேர்த்துதானே காலியாக்கின”
“விடு மச்சான். உனக்குனு ஒன்னு வரும் போது சரி பண்ணிடலாம். முதல்ல ஏதாவது நல்ல ஐடியா கொடுங்கடா” என்றவனிடம் ஊதாரிகள் கொடுத்த திட்டம் எப்படி இருக்கும்? நாசமாக போகத்தானே இருக்கும். அவர்களின் திட்டப்படியே வசீகரனின் நாடகமும் அரங்கேறியது. முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு குமுதாவை காண சென்றவன்
“நான் இல்லாமல் நீ வாழ்ந்திடுவீயா குமு செல்லம்?” என்று சோகத்தை பிழிய
“என்ன வசீ? ஏன் இப்படி பேசுறீங்க?” அவளின் அதிர்வை உள்வாங்கிக்கொண்டவன்
“நம் காதல் விஷயம் அப்பாக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு. எனக்கு வேற இடத்துல பொண்ணு பார்த்துட்டார்… அடுத்த மாசம் கல்யாணம் ஃபிக்ஸ் ஆச்சு குமு. என்னால உன்னை விட்டு இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாது!! அதுக்கு நான் செத்திடுவேன். நான் இல்லாம நீ வாழ்ந்திடுவ தானே குமு..” சோகத்தை பிழிய
பிறகென்ன அழுதலும் தழுவலும் சிறப்பாக அரங்கேற இறுதியாக வீட்டினருக்கு தெரியாமல் நண்பர்கள் பட்டாளம் சூழ ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கொண்டனர். கணவன் மனைவியான பிறகு நெருக்கங்களும் கொஞ்சல்களும் சுதந்திரமாக உலாவர… அந்த நேரம்தான் நிலா கண்டுக்கொண்டாள்.
அவர்களின் ரகசிய திருமணத்தை பற்றி தேவா விசாரித்துவிட்டு வந்து சொல்ல… இடிந்து போயினர் அனைவரும். காதலுக்கு அத்தனை சக்தியா? எப்படி இருவரின் சந்தோஷத்துக்காக பெற்றவர்களின் பாசம் இரண்டாம் பட்சமாக போகிறது!! கூட பிறந்து வளர்ந்தவர்களையும் பெற்றவர்களையும் அழவைக்க துணிகிறது?
முத்தம்மா அழுது கரைய அருணாச்சலம் இறுகி போய் அமர்ந்திருந்தார். மாரடைப்பு மறுபடியும் வந்து விடுவேன் என்று எச்சரிக்கை விட நிதானமாக இருக்க முயற்சித்தார் அவர். இப்பொழுது அவரின் பார்வை குடும்பத்தினரை சுற்றி வந்தது. ஒரு தடவை மாரடைப்பு வந்து நரகத்தை கண்டாகி விட்டது. குமுதாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததுதான் அதற்காக இப்பொழுது இங்கேயே தேங்கி நிற்க முடியாதே!! முடிவெடுத்தவர் சிவநேசனை நோக்கினார்
“அந்த பையனை பத்தி விசாரிச்சியா சிவா?” என்று கேட்க சிவா தேவாவை பார்த்தான்
“அது அங்கிள்… “ தர்மசங்கடத்துடன் தேவா நெளிய
“உண்மையை சொல்லிடுப்பா. நல்லதோ கெட்டதோ அடுத்து என்ன செய்யலாம்னு முடிவெடுக்கலாம் ல” நிதானமாக அவர் சொல்ல
“அவன் பெயர் வசீகரன். உங்க பொண்ணுக்கும் அவனுக்கும் ஒரே வயசு. இருவருக்கும் ஒரு வருஷ பழக்கம். இந்த பையன்தான் மூத்தவன். இவனுக்கு அடுத்து ஒரு தம்பியும் தங்கையும் இருக்கு. அந்த பையனோட அப்பா ஒரு கம்பெனில கிளார்க்கா வேலை பார்க்கிறார். இவன் சரியா படிக்காம ஊரை சுத்திக்கிட்டு இருக்கிறதால அவங்க அப்பா அவரோட முதலாளிகிட்ட கெஞ்சி கூத்தாடி பையனுக்கு டிரைவர் வேலை வாங்கி கொடுத்திருக்கிறார். கஷ்டப்பட்டு முன்னேற் கொண்டிருக்கும் குடும்பம் அங்கிள்” என்று தேவா புட்டு புட்டு வைக்க…
அறையின் உள்ளே அமர்ந்திருந்த குமுதாவுக்கு தன் தலையில் ஆயிரம் மின்னல்கள் தாக்கிய உணர்வு. தான் ஏமாற்றப்பட்டதைவிட தான் ஒரு ஏழையை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்திருக்கோமே என்ற தலைகுனிவுதான் அவளை அலைகழித்தது.
“ச்சே!! இப்படி ஏமாந்து போனேனே!! நல்ல வேளை அந்த அதிகபிரசங்கி நிலா கண்டுபிடித்துவிட்டாள். வீட்டினரும் அவனிடமிருந்து என்னை காப்பாற்றிவிட்டனர். இல்லையென்றால் என்னவாகி இருப்பேன்?? என் அழகுக்கு ஓர் ஏழை விட்டில் வாழ்ந்து குப்பை கொட்டுவதா? ச்சே!! அவன் வார்த்தை ஜாலத்தில் பணக்காரன் என்று நினைத்து ரெஜிஸ்தர் மேரேஜ் வேறு செய்து விட்டேனே!! இப்பொழுது நான் என்ன சொல்லி வீட்டில் உள்ளவர்களிடன் நற்பெயர் எடுப்பது?”
ஒருவிதமான ஈர்ப்பு அல்லது புரிதல் இல்லாத அழகை கண்டு மட்டும் வந்த காதலுக்கு பிரச்சினை வந்ததும் ஆயுசு கம்மியாகி போகிறது. பலரும் எங்களுக்கும் காதலன் உண்டு காதலி உண்டு என்ற ரீதியில் அவசர அவசரமாக காதல் செய்கின்றனர். அதன் பிறகு இது சரிப்பட்டு வராது எனக்கூறி பிரிந்து விடுகின்றனர். ஆனால் இங்கே அவசர காதல் மட்டுமல்லாமல் அவசர கல்யாணம்கூட பிரியும் நிலைக்கு வந்து விட்டது.
நேர்மையானவர்கள் தவறு செய்தால் அதை நினைத்து மருகுவர் ஆனால் குயபுத்தி கொண்டர்வர்களோ செய்த தவறை நியாயப்படுத்த ஆயிரம் வழிகளை கண்டு பிடிப்பர். அப்படிதான் குமுதாவுக்கும் தப்பிக்க ஒரு வழி கிடைத்துவிட… உடனடியாக அதை செயல்படுத்த அறையை விட்டு வெளிவந்தாள்.
ஆனால் அங்கே அவள் எதிர்பாராத ஒன்றும் நடந்தது.
Last edited: