வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வாயுரைக்க வருகுதில்லை நன்நேசம் - 3

GG writers

Moderator

உ​

நேசம் 3​

வானில் மேகங்கள் திட்டு திட்டாய் கோலங்கள் போட்டிருக்க அவற்றை கிழித்துக்கொண்டு சென்றது விமானம். அதில் அமர்ந்திருந்தவளின் மனதையும் அப்படித்தானே கிழித்தனர் அன்று. காதலிப்பதைவிட காதலிக்கப்படுவதுதான் இனிமை என்பார்கள் கவிஞர்கள். அந்த இனிமையை நான் ரசிக்க கூடாதா? தனக்கு மட்டும் மறுக்கப்பட்டதேன்? ஏன் அதன் ஏகபோக உரிமை குமுதாக்கு மட்டும்தானா?? அவளுக்கு மட்டும் ஏன் எல்லாம் சரியாக அமைந்தது?​

அன்று குடும்பத்தாரிடம் நற்பெயர் எடுக்க அழகான ஒரு திட்டத்துடன் அறையிலிருந்து வந்த குமுதா நேரே அருணாசலத்திடம் வந்தவள் அவரின் காலை பற்றிக்கொண்டவள் ஓரக்கண்ணால் குடும்பத்தினரின் முகத்தை ஆராய்ந்தாள். எல்லோர் முகத்திலும் கவலையும் ‘நீயா இப்படி செய்தாய்’ என்ற அதிருப்தியும் நிலவிக்கொண்டிருந்தது. அவளுக்கு தேவைப்பட்டதும் அதுதானே. நல்ல வேளை தேவா அங்கு இல்லை. விஷயங்களை புட்டுபுட்டு வைத்து விட்டு சென்று விட்டான் போலும் என்று நினைத்து கொண்டவள் தன் நாடகத்தை ஆரம்பித்தாள்.​

“அப்பா… தேவா சொன்னதுபோல் ஒரு ஊதாரியா வசீயை நான் பார்த்ததே இல்லை!! ரொம்ப அமைதியா அன்பா பேசுவான். எதிர்காலத்தை பத்தி பொறுப்பா பேசுவான். பேசி பேசியே என் மனசை கரைச்சிட்டான். நான் என்ன செய்வேன்? என்னை ரொம்ப வெகுளியா வளர்த்திட்டீங்க ப்பா!! அதான் ரொம்ப ஈசியா என்னை ஏமாத்திட்டான்” என்றவள் மறுபடியும் குடும்பத்தாரை பார்க்க… அனைவரும் அமைதியாக அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தனர்.​

“ஆமாம் ப்பா நா… நான் அவனை காதலித்தது உண்மை ஆனால்… ரெஜிஸ்தர் மேரேஜ் எல்லாம் பண்ணல. அவன் சிநேகிதன் கல்யாணத்துக்கு என்னை சாட்சி கையெழுத்து போட சொல்லிதான் கூட்டிட்டு போனான். ஆனா என்னை இப்படி ஏமாத்துவான் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல..” கண்ணீர்விட்டாள். தான் தப்பிப்பதற்காக பழி அனைத்தையும் வசீகரன் தலையில் கட்டிவிட்டாள்.​

“என்னடி சொல்லுற?” முத்தம்மா அருகில் வர​

“ஆமாம் ம்மா!! அன்று எங்களுக்கு கல்யாணம் என்றே எனக்கு தெரியாது ம்மா. நான் தப்பு செய்வேன்னு நீங்க நினைக்கிறீங்களா? நான் உங்க வளர்ப்பு மா” பனிகட்டியை தாயின் தலையில் வைக்க… “என் கண்ணே!!” என்று குளிர்ந்து போனாள் பெத்தவள்.​

என்னதான் இருந்தாலும் சாட்சி கையெழுத்து போடும் இடத்துக்கும் திருமணம் புரிகிறவர்களின் கையெழுத்து போடும் இடத்துக்கும் வித்தியாசம் இருக்குமே. படித்தவள் இவளுக்கு தெரியாதா… நம்பாத பாவனையில் சிவா நின்றிருக்க “அக்கா பாவம்ல” என்றாள் நிலா. ‘வெகுளி அவளா இவளா?’ சிவா மனதில் பட்டிமன்றம் நடந்தது.​

“சரி முடிவா என்ன சொல்லுற குமுதா!! அவனை காதலிச்சிருக்க… எதற்காக உன்னை அவன் ஏமாத்தி கல்யாணம் செய்யனும்?” என்ற அருணாசலத்தின் கேள்வியில் ‘சபாஷ் சரியான கேள்வி’ என்று சிவா நினைக்க​

“தெரியலையே ப்பா!! வெளுத்ததெல்லாம் பாலுனு நினைச்சது என் தப்புதான் ப்பா. ஆனா இப்படி பொய் சொல்லி கல்யாணம் செய்தவனை என்னால் மன்னிக்கவே முடியாது ப்பா!! கல்யாணம் என்பது என்ன சின்ன விஷயமா? ஒருத்தனை நம்பி என் வருங்கால வாழ்க்கையை பகிர்ந்துக்க போற பெரிய விஷயம் இல்லையா!!”​

“என்னை ஏமாத்தியிருக்கான்!! நம்பிக்கை துரோகம் செய்திருக்கான்!! இன்னும் என்னென்ன பொய் சொல்லியிருப்பானோ?? அப்போ தேவா அவனைப்பற்றி சொன்னது எல்லாம் உண்மைதான் போல” என்றவளின் பேச்சில் சிவாவே புருவம் ஏற்றிவிட்டான் ‘உண்மையாக இருக்குமோ’ என்றெண்ணும் அளவுக்கு.​

“அப்போ அந்த பையன் உனக்கு வேண்டாமா?” அருணாசலம் முடிவாக கேட்க​

“ஐயோ சட்டப்படி கல்யாணம் செய்திருக்காங்களே!! என்ன இப்படி கேட்கிறீங்க. பையனை கூப்பிட்டு சொல்லி திருத்த பார்க்காம..” முத்தம்மா பதற ‘இந்த அம்மாவை வச்சிக்கிட்டு…’ தாயென்றும் பாராமல் மனதில் கறுவிய குமுதா​

‘பொய்யோடு ஆரம்பிச்ச கல்யாணம் அம்மா!! காதலிச்ச பாவத்துக்காக வாழ்நாள் முழுதும் அந்த முள்ளோடு வாழ சொல்லுறீயா? உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லுங்க… நான் அவனோடு வாழ்ந்து நாசமா போறேன்!!” என்றவள் அழுது கரைய…​

நிலாவுக்கு கண்ணீர் வந்து விட்டது. ‘பெண்ணாக பிறக்க பெரும் தவம் செய்ய வேண்டும் என்று பாரதி சொன்னாரே… குமுதா நிலையறிந்தால் சொல்லியிருக்க மாட்டாரோ… அப்பா என்ன முடிவெடுக்க போறாங்கனு தெரியலையே!!’ கவலையுடன் தந்தையை பார்க்க​

“என்ன பண்ணலாம் சிவா?” அருணாசலம் மகனை நோக்கி கேட்க “இது குமுதா வாழ்வு அப்பா” என்றவன் குமுதாவை நோக்க​

“அண்ணா என்னை மன்னிச்சிடு!! எப்படியாவது அவன்கிட்ட இருந்து எனக்கு விடுதலை வாங்கி கொடு… வீட்டுக்கு தெரியாம காதலிச்சது எத்தனை பெரிய தப்பு என்பதை நான் உணர்ந்துட்டேன்” என்று கைகூப்பியவளை அதிர்வுடன் பார்த்தார் முத்தம்மா.​

முத்தாம்மாவின் ஒவ்வாமை.. சிவாவின் நம்பாமை… அருணாசலத்தின் இயலாமை… குமுதாவின் கயமை என அனைத்து உணர்வுகளும் அங்கே போட்டிப்போட்டு நர்த்தனமாடி இறுதியில் ‘விவகாரத்து’ என்று முடிவானது. முத்தம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பெற்ற மகளின் வாழ்வு எனும் தராசு மகள் பக்கம் சாய மகளை மடிதாங்கிக் கொண்டார்.​

இருவீட்டாரும் காதோடு காதாக பேசி விவாகரத்து எனும் முடிவுக்கு வந்தனர். வசீகரன் குடும்பத்தினரும் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கும் பெரும் அதிர்ச்சி. வசீகரனுக்கு கிழே இன்னும் இருவர் கரை சேர்க்க இருக்க… மகன் தோள் கொடுப்பான் என்று நினைத்திருந்தவருக்கு அவனின் செயல் கோபமூட்டியது. நல்ல வேளை குமுதாவின் குடும்பத்தினர் மகளை கையோடு அழைத்து வந்து கல்யாணம் என்று வந்து நிற்காமல் விவாகரத்து என்று முடிவெடுத்ததில் அவருக்கு பேரானந்தம்.​

வசீகரனும் அவன் நண்பர் பட்டாளமும் கொதித்து போயிருக்க… துள்ளி வந்தவர்களை ‘கண்ணா களி திங்க ஆசையா’ என்று சிவா போலீஸை கண்காட்டி முறுக்கி நிக்க… கொதித்த மனமெல்லாம் நீராவியாக காற்றோடு காணாமல் போயின. வெறும் கையெழுத்தோடு தொடங்கிய வசீகரனின் காதல் கல்யாணம் நீதிமன்றத்தில் மறுபடியும் அதே கையெழுத்தோடு முடிவுபெற்றது.​

----------​

இன்று​

“என்னடி ஃபோன் போட்டா எடுக்க மாட்டியோ!!” வந்ததும் வராதுமாக முத்தம்மா ஆரம்பிக்க… ஏதும் சொல்லாமல் தாயை நோக்கி வந்தவள் அவர் எதிர்பாரா நேரம் சட்டென இறுக கட்டிக்கொண்டாள்.​

வெகு காலம் சென்று தாய்மடி தேடும் கன்றாய் வந்து கட்டிக்கொண்டவளின் செயலில் முத்தம்மா ஸ்தம்பித்து போனது சில நிமிடங்களே. அந்த சொற்ப நிமிடங்களுக்குள் பெற்றவளின் மனம் கலங்கி போனது. திக்கு தெரியாத காட்டிலிருந்து தப்பித்து வந்து சரணடைவது போலிருந்தது மகளின் அணைப்பு.​

‘பாஷை தெரியாத ஊரில் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தாளோ என் மகள்’ என்று உள்ளம் பரிதவிக்க நிலாவின் இறுகிய அணைப்பில் அமுதூரியது தாய் உள்ளம்.​

“நிலா..” தாயின் அழைப்பில் தெளிந்தவள் முகத்தை திருப்பிக்கொண்டு “எப்படி இருக்க ம்மா?” என்று கேட்க… கரகரப்பான அவளின் குரல் மகளின் துக்கத்தை ஞாபகப்படுத்த… முகம் வருடி கலைந்த முடியை ஒழுங்கு படுத்தியவர் தலையசைத்துக்கொண்டார். நா எழவில்லை பதில் சொல்ல.​

‘இறைவா என் மகளுக்கு நீதான் துணை’ மனதில் வேண்டிக்கொண்டார்.​

“பாப்பா..” அருணாசலத்தின் அழைப்பில் குரல் வந்த திசை நோக்கி திரும்பியவள் “வந்துட்டேன் அப்பா. இப்போ சந்தோஷம்தானே?” நீர்க்கோடுகள் மின்ன கண் சிமிட்டியவளை தோளோடு அணைத்துக்கொண்டார். தந்தைக்காக மகள் கண்ணீரை மறைக்க… தந்தையோ மகளுக்காக கண்ணீரை கண்ணுக்குள்ளேயே தேக்கி வைத்தார்.​

“வர மாட்டேன்னு சொல்லிட்டிருந்தீயே பாப்பா… நடுவுல என்ன மாயம் நடந்தது?” முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சியை காண்பித்து புன்னகையுடன் கேட்க… நெகிழ்ந்து நின்றவள் பதில் கூறும்முன் வந்து நின்றாள் குமுதா​

“உங்க மேல பாசம்னு நினைச்சீங்களா அப்பா? அதான் இல்ல” என்றவள் நிலாவின் முகத்தை அலட்சியமாக பார்த்துக்கொண்டு​

“சொல்லேன்டி உன் மாமாதான் உன்னை வற்புறுத்தி வரச்சொன்னார் என்று” கணவனை பெருமைபடுத்தி சொல்ல​

“ஆமாம்ப்பா வந்தார். வந்தவர் அன்பை காட்டி ஒன்னும் என்னை வர சொல்லல” என்றவள் குமுதாவை பார்க்க… தங்கையின் பார்வையின் அர்த்தம் புரியாமல் ‘இவ என்ன சொல்ல வரா.. உன் தங்கை வந்திடுவா கவலைப்படாதே குமுதா என்று சொன்னாரே’ கணவன் சொன்னதை நினைத்துக்கொண்டு பார்க்க​

“நான் விழாக்கு வரலனா நம்ம குடும்பத்துக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியத்தை எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்னு மிரட்டுனார் அப்பா!!” நிலா விஷயத்தை போட்டு உடைக்க…​

“என்னது!!” முத்தம்மா நெஞ்சில் கைவைக்க… சுதாகரித்த குமுதா சட்டென அவர் அருகில் நின்றுக்கொண்டாள். எங்கே பெற்றவளின் ஆதரவு தன் கைவிட்டு சென்றுவிடுமோ என்று அச்சமுற்றவள் முன்னெச்சரிக்கையாக அவரின் கைப்பற்றியவள்​

“இதுல என்ன தப்பு இருக்கு!! நல்லதுதானே நடந்திருக்கு… இல்லனா இவ வந்திருப்பிருப்பாளா அம்மா?” நிதானமாக சொல்ல​

“நான் வந்திருக்கலனா சொன்னப்படி செய்திருப்பாரா இல்ல செய்ய மாட்டாரா அதான் என் கேள்வி” அழுத்தமாக கேட்ட நிலாவை முறைத்து பார்த்தாள் குமுதா.​

“பதில் சொல்ல முடியல இல்ல மிசஸ் குணாளன்? நீ சொல்லுறதை பார்த்தா நம் குடும்ப கதை… அதாவது.. உனக்கு ஏற்கனவே ஒருத்தனுடன் ரகசியமாக திருமணம் ஆகிடுச்சி என்ற விஷயம் உன் சொந்தத்துக்கு எல்லாம் சொல்வதில் உனக்கு ஆட்சேபனை இல்லை போலிருக்கே!!” பரிகசிக்க​

இவை அனைத்தையும் வாசலில் நின்று கேட்டு கொண்டிருந்தான் குணாளன். அவன் பார்வை மனைவி மேல் நிலைத்து நின்றது. மற்றவர்களை பற்றி அவனுக்கு கவலை இல்லை. தன் மனைவியின் மனதில் தான் என்றும் கோபுரமாய் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று நினைப்பவன் அவன். அவர்கள் உறவில் சிறு சறுக்கல்கூட வந்திரக்கூடாது என்று அவன் செய்த செயல்கள் எண்ணிலடங்கா. அதில் நிலாவின் வாழ்க்கை கேள்வி குறியானதும் அடக்கம்.​

“நிலா!!” கோபத்தை அடக்கி கொண்ட குரலில் குணாளன் கர்ஜித்துக்கொண்டே உள்ளே வர​

“வாங்க மாப்பிள்ளை… இவ சொல்லுறது உண்மையா?” என்று முத்தம்மா கேட்க​

“சும்மா அவ வரதுக்காக சொன்னேன் அத்தை. மத்தப்படி என் மனைவி பெயரை நானே அசிங்கப்படுத்துவேனா!!” பதுங்கி பாசத்தை பிழிந்தான்​

“ஓ… அப்படியா விஷயம்!! இது எனக்கு தெரியாம போச்சே!! அப்போ சரி.. அப்பாவையும் பார்த்தாச்சு அம்மாவையும் பார்த்தாச்சு. எனக்கு அது போதும்!! நான் கிளம்புறேன்” என்றவள் கிளம்ப ஆயுத்தமாக​

“நாளைக்கி எனக்கு வளையல் போட நீ இங்கே இல்லனா… எத்தனை மணி நேரம் ஆனாலும் சரி நான் அந்த மனையிலிருந்து எழ மாட்டேன்!! இது என் வயிற்றில் இருக்கும் குழந்தைமேல் சத்தியம்!! இதைப்பற்றி உனக்கு கவலை இல்லனா தாராளமா போ!!” என்றவள் கணவனை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைய… சிலையாக நின்றனர் அனைவரும்.​

எந்த சூழ்நிலையிலும் தன் வார்தைகளே ஜெயிக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவள் மேல் அதிருப்தி அனைவருக்கும் உண்டு. ஆனால் இப்பொழுது அவள் உபயோகித்த வார்த்தைகள்… அதுவும் கர்ப்பிணியான அவள் பிறக்காத குழந்தை மேல் சத்தியம் செய்வது எல்லாம் நல்லதா என்று முத்தம்மா கைகளை பிசைந்துக்கொண்டு யோசித்து கொண்டிருக்க​

அரக்க பரக்க அறையிலிருந்து வெளிவந்த குணாளன் சமையலறைக்குள் சென்று தண்ணீராய் எடுத்துக்கொண்டு அறைக்குள் ஓட… மத்ததையெல்லாம் மறந்து என்னவோ ஏதோ என்று முத்தம்மா மருமகனை தொடர்ந்தார்.​

அனைத்தையும் ஜீவனற்று பார்த்து நின்றிருந்தாள் நிலவழகி. மென்மையாக அவள் தலையை கோதி கொடுத்து நின்றிருந்தார் அருணாசலம்.​

“ஏன் இப்படி?? என்ன இவ இப்படி இருக்கா!! பிறக்காத பிள்ளை மேல சத்தியம் எல்லாம் வச்சிக்கிட்டு… இவ திருந்தவே மாட்டாளா ப்பா!!” கசங்கி போனாள் நிலா.​

“இந்த தடவையும் உன்னை கார்னர் பண்ணிட்டால்ல..” என்ற அருணாசலம் சோர்ந்து அமர்ந்துவிட்டார்.​

“இல்ல ப்பா. நான் ஒரு முடிவோடுதான் வந்திருக்கேன். தனிமையில் நான் துவண்டு போனது எல்லாம் போதும்னு நினைக்கிறேன் ப்பா. ஜஸ்ட் இனாஃப். இனி யாருக்காகவும் நான் ஒதுங்கி போகப்போறதில்ல. எப்பொழுதும் போல இனி எனக்கு நீங்க துணையா இருப்பீங்க தானே ப்பா..” விழிகளால் கெஞ்சியவளை ஆதுரத்துடன் அணைத்துக்கொண்டார் அருணாசலம்​

“எப்பொழுதும் உன் அப்பா உன் செயல்களுக்கு தூணா இருப்பேன் பாப்பா. கவலைபடாதே” என்றவரின் முகம் எதையோ நினைத்து கசங்கி போனது. பார்வை சுவற்றை வெறித்திருக்க​


“அந்த கல்யாணத்துக்கு நாம போகாமலேயே இருந்திருக்கலாம் இல்ல பாப்பா. எல்லாருடைய வாழ்க்கையும்….” என்றவரை இடைமறித்தவள்​

“வாழபழ தோலுல காலை வச்சா வழுக்கிட்டு போகுமே அப்படி போயிருக்குமா ப்பா?” என்று சொல்ல பக்கென சிரித்துவிட்டார் அருணாசலம். அவருடன் சேர்ந்து நிலாவும் சிரித்தாள். முகம் மலர்ந்திருந்தது. மனமோ தந்தை சொல்ல வந்ததை எண்ணி கலங்கி போனது. இறுகியிருந்தவரை வேடிக்கை பேசி தளர்த்தியவளால் தன் மனதை ஆறுதல் படுத்த முடியவில்லை. ஆம் அப்பா சொன்னதுபோல அந்த கல்யாணத்துக்கு போகாமல் இருந்திருக்கலாம்.​

அயர்ந்து அமர்ந்திருந்தவர்களை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தனர் தேவாவும் சிவாவும். பார்வையால் சிவா என்னவென கேட்க பின்னர் சொல்வதாக சைகை செய்தவள்​

“அப்பா தேவா அண்ணாவும் அண்ணாவும் வந்திருக்காங்க” என்றவளின் மேல் தேவாவின் பார்வை படிந்து மீண்டது.​

“என்னப்பா தேவா எப்படி இருக்க? இப்போவெல்லாம் உன்னை அடிக்கடி பார்க்க முடியறதில்லையே..” என்றவரின் கேள்விக்கு தேவா சிறு புன்னகையுடன் தலையசைப்பை மட்டுமே பதிலாக தந்தான்.​

“உங்களுக்கு பயந்துதான் வராமல் இருக்காரோ என்னவோ?” என்ற நிலா சிவாவை பார்த்து கண்ணடிக்க… தேவா புருவம் உயர்த்தினான்.​

“ஏன் பாப்பா!!” அப்பாவியாய் அருணாசலம் கேட்க​

“அடிக்கடி வார்த்தைக்கு ஏத்தாப்புல அடிச்சு கடிச்சி வச்சிட்டீங்கனா!”​

“ஏய்… பாப்பா என்ன நீ!” என்று அவர் அசடு வழிய​

“நம்ம நிலா இஸ் பேக்” என்று சிவா சொல்ல… ஆமென தலையசைத்தான் தேவா. முன்பெல்லாம் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்தவள் பின்பு கடந்த இரண்டு வருடங்களாக உயிர்ப்பில்லாமல் நடமாடியவள் இன்று மறுபடியும் உயிர்த்தெழும்பியதை கண்டவர்களுக்கு மனம் கனிந்தது.​

“புது கடை திறக்கும் விஷயமா கொஞ்சம் பிசி அங்கிள். அதான் வர முடியல” தேவா மென்மையாக சொல்ல​

“வாவ் புது கடையா… வாழ்த்துகள் அண்ணாஸ்” ஆர்ப்பாட்டாமாய் துள்ளி குதித்தவளின் சந்தோஷம் அங்கிருந்தவர்களையும் தொற்றிக்கொண்டது. பேச்சும் சிரிப்புமாக மனங்கள் இங்கே கொண்டாட… உள்ளே அமர்ந்திருந்த இருவருக்கும் காந்தியது.​

“சும்மா சூட்டு வலிதான். வேறு ஒன்னுமில்லை மாப்பிள்ளை” என்ற முத்தம்மா அவசரமாக ஹாலை நோக்கி சென்றுவிட்டார். சின்ன மகளின் சந்தோஷக்குரல் அவரை ஈர்த்தது.​

“இங்கே நான் வலியில் துடிச்சிக்கிட்டு இருக்கேன் அங்கே எல்லோரும் வராதவ வந்துட்டானு கூத்தடிக்கிறாங்களா!!” பொறுமியவளுக்கு இணையாக குணாளனும் பொங்கினான்​

“வாயில்லா பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று தெரியாம போச்சு!! இருக்கட்டும் நாளைக்கு ஃபங்க்ஷன்ல அவளை கவணிச்சிக்கிறேன். என்னையே போட்டு கொடுக்கிறாளா… இருக்கட்டும்!!”​

குமுதாவை காணவென வந்த சிவா மற்றும் தேவா காதில் இவை தெளிவாக விழ… வந்த வழியே திரும்ப… அவர்களை இடிக்கும் நெருக்கத்தில் நின்றிருந்தாள் நிலவழகி.​

தந்தை சொன்ன வார்த்தைகள் அவள் மனதில் வந்து போயின “அந்த கல்யாணத்துக்கு போகாமல் இருந்திருக்கலாம்”​

 
Last edited:
Top