வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வாயுரைக்க வருகுதில்லை நன்நேசம் - 4

GG writers

Moderator

நேசம் 4​

இரண்டு வருடங்களுக்கு முன்​

“யப்போ!! பாருங்கப்பா இந்த குமுதாவை!!” ஆவேசமாக அருணாசலத்திடம் புகார் வாசித்து கொண்டிருந்தாள் நிலவழகி.​

“இந்தா நிலா.. ஏன் இவ்வளவு கோவம் உனக்கு? அக்கா அப்படி என்னதான் பண்ணிட்டா” சத்தம் கேட்டு வந்த முத்தம்மா நிலாவின் கண்ணீரை கண்டதும் நிதானித்தார். பெரியவள்தான் காரணம் என்பதை புரிந்துக்கொண்டார்.​

‘இன்று நேற்றல்ல கடந்த இரண்டு வருடங்களாக நடப்பதுதான். வசீகரனிடமிருந்து விவாகரத்து என்று முடிவானதோ அன்றிலிருந்து குமுதாவின் தாழ்வு மனப்பான்மை அதிகரித்துவிட்டது போலும். அழுத்தம் அதிகரித்துவிட்டால் அவள் நிலாவிடம் வம்பிழுப்பது வாடிக்கையாகிவிட்டது. பாவம் பெரியவள்’ என்று நினைப்பவர் நிலாவைதான் விட்டுகொடுத்து போக சொல்வார். இன்று என்னவோ என்று நினைத்துக்கொண்டு​

“என்ன நிலா இது… தொட்டதுக்கெல்லாம் அழுவனுமா என்ன?” சமாதானம் செய்ய முயல… இனி தனக்கு தாயிடமிருந்து நியாயம் கிடைக்காது என்று உணர்ந்தவளாய் தந்தையிடம் ஒடுங்கினாள் நிலா.​

“சொல்லுடா பாப்பா… குமுதா என்ன பண்ணா?” பெரியமகளை உணர்ந்தவராக சின்னவளின் தலையை கோதிக்கொண்டே அருணாசலம் கேட்க​

“இன்னைக்கி கல்யாணத்துக்கு போடுறதுக்காக நீங்க வாங்கி கொடுத்த பச்சைக்கல் ஜிமிக்கையை எடுத்து போட்டுக்கிட்டா ப்பா!!” விழிகளில் நீர் திரண்டு விழவா என்று காத்துக்கொண்டிருந்தது.​

தன் அண்ணன் மகளின் கல்யாண வரவேப்பிற்காக மகள்களுக்கு இரண்டு ஜிமிக்கிகள் வாங்கியிருந்தார். மூத்தவள் பால் நிற புடவைக்கு தோதாதாக முத்து ஜிமிக்கியும் நிலவழகியின் பச்சை நிற பாவாடை தாவணிக்கு தோதாக பச்சைநிற ஜிமிக்கியும் எடுத்திருந்தார்.​

‘குமுதாக்கு இதே வேலையா போச்சி… ஏன்தான் இப்படி பன்றாளோ!! எல்லாம் இந்த முத்து கொடுக்கும் இடம்’ மனதில் அதிருப்தியுடன் முத்தம்மாவை முறைத்தார்​

“நான் என்ன செய்யட்டும்? என்னை ஏன் முறைக்கிறீங்க? அவளோட பால் நிற புடவைக்கு பச்சைநிற ஜாக்கட் தைப்பானு நான் என்னத்த கண்டேன்? புடவை கட்டிட்டு பச்சை ஜிமிக்கிதான் அழகா இருக்கும்னு எடுத்து போட்டுக்கிட்டா. நான் என்ன செய்ய முடியும்? உண்மைக்கு சொல்லப்போனா இவளைவிட அவளுக்குதான் அது அம்சமா இருக்கு”​

முத்தம்மா அப்படி சொன்னதும் மனதில் அடி வாங்கினாள் நிலா. ‘அம்மாக்கு எப்பொழுதும் அக்கா மட்டும்தான் அழகு’ மனம் குறைபட… அதுவரை நிற்கவா விழவா என்று தயங்கி நின்ற கண்ணீர் கன்னத்தில் வழிய ஆரம்பித்தது.​

“அடடா ஆரம்பிச்சிட்டாளா அவளோட டிராமாவ!! இந்தாடி நிலா.. எனக்கு ஒன்னும் உன் நகை வேண்டாம். ஏதோ ஆசையா எடுத்து போட்டுக்கிட்டேன். வேணும்னா சொல்லு இப்பவே கழட்டி கொடுத்திடுறேன்! ஏதோ அக்கா என்ற உரிமையில எடுத்துக்கிட்டேன்.. எத்தனை அடி வாங்கினாலும் என் இடம் எதுனு எனக்கு தெரியாம போயிடுது” சலித்துக்கொண்டே வந்த குமுதாவை பார்த்த பெற்றோரின் கண்கள் நிறைந்தன. முத்தம்மாவின் மொத்த அழகையும் கொண்டிருந்த குமுதமலர் சிறு ஒப்பனையில்கூட அத்தனை அழகாக இருந்தாள்.​

மகளின் அழகை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் அவளின் இறுதி கூற்றில் மனம் காயம்பட்டுவிட அது அவர்களின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதுதானே குமுதாவுக்கும் வேண்டும்.​

காதல் என்ற வலையில் விழுந்து புத்திக்கெட்டு போய் தான் செய்த செயலால் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அவமானத்தை எல்லாம் செண்டிமெண்டாக பேசி ஒன்றுமில்லாமல் ஆக்குவதில் வல்லவள் அவள்.​

அவள் செய்யும் தந்திரங்களில் இந்த வார்த்தை ஜாலங்களும் ஒன்று என்பதை உணர மறந்தனர். இதேபோல் பலமுறை சூசகமாக பேசி பெற்றோரின் கண்களில் தோன்றும் அந்த வலியை வைத்துக்கொண்டு தனக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொள்வாள்.​

“பாப்பா..” என்று அழைத்து சமாதானம் செய்ய முயன்ற தந்தையிடமிருந்த விலகியவள் கண்களை துடைத்துக்கொண்டே “பரவாயில்ல ப்பா.. முத்து ஜிமிக்கியே எனக்கு போதும்” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.​

அவளும் தன் பெற்றோரை கவணித்துக்கொண்டுதானே இருந்தாள்! குமுதாவின் பேச்சில் கசங்கிய அவர்களின் முகம் சொன்னதே அவர்களின் கவலையின் அளவை. அவர்களுக்கு மட்டுமா… நிலாவுக்குமே வருத்தம்தான்.​

‘பாவம் அவ அறியாமல் செய்த செயலால் இன்றுவரை வருந்திக்கிட்டிருக்கா… பச்சைக்கல்லோ முத்தோ... எதுவா இருந்தா என்ன? முத்துக்கு தோதா வெள்ளைத்தாவணியை போட்டுக்கிட்டா போச்சி’ என்று சமாதானமடைந்தவள் சட்டென அலமாரியை திறந்து வெள்ளை தாவணியை எடுத்து மாற்றி அணிந்துவிட்டு ஹாலுக்கு வர அங்கே குமுதா தீவிரமாக பேசி கொண்டிருந்தாள்.​

“நிலாவோட தோல் நிறத்துக்கு பச்சை ஜிமிக்கி ஒத்து வராதுமா. பச்சை நிறமும் அவளின் கறுப்பு நிறமும் ஒத்து வருமா? ரொம்ப டல்லா தெரிவா... என் வெள்ளை நிறத்துக்குதான் அது சரியா இருக்கும். அன்னைக்கே சொல்லனும்னு நினைச்சேன் ஆனா அவளை குறைச்சி எடை போடுறேன்னு அவ தப்பா எடுத்திட்டா? என்னால தாங்க முடியாது ம்மா! அதுவே அவ அந்த முத்து ஜிமிக்கியை போட்டுக்கிட்டா அவ நிறத்துக்கு தூக்கி கொடுக்கும். அதுக்குதான் ம்மா நான் இப்படி செய்தது” தாயின் தலையும் அவள் சொன்னதுக்கு அசைய ஒரு பெருமூச்சுடன் கேட்டுக்கொண்டாள் நிலவழகி.​

சில சமயங்களில் அவளின் பேச்சு ஒப்புக்கொள்ளா முடியாவிட்டாலும்… அவள் மேல் உள்ள அனுதாபத்தால் அதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டாள். ஏன் இப்பொழுது கூட ‘பச்சைக்கல் தோதா இருக்காது பச்சை பாவடை மட்டும் என் நிறத்து தோதுப்படுமா?’ தொண்டைவரை வந்த வார்த்தையை விழுங்கிக்கொண்டாள்.​

குமுதா வகை படுத்தும் அளவுக்கு நிலா ஒன்றும் அவலட்சணமோ அல்லது கறுத்த நிறமோ இல்லை. மாநிறத்தழகி ஆனால் குமுதாவோ சிவப்பழகி. அதில் அத்தனை கர்வம் அவளுக்கு. அந்த கர்வத்தால் தன் அழகுக்குமுன் சற்று மங்கியே தெரியும் நிலாவை சூசகமாக மட்டம் தட்டுவாள். தன் பேச்சின் திறமையால் நிலாவின் மேல் மற்றவர்களின் பார்வை வண்ணத்தை மாற்றுவதில் வல்லவள்.​

காதல் பித்து முத்தியதில் அவள் எடுத்த முடிவினால் தன் குடும்பத்துக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டதுமல்லாமல் இப்பொழுதுவரை அச்சிக்கலிலிருந்து விடுபடும் முயற்சியில் தத்தளித்து கொண்டிருக்கிறனர். ஆம் அவளின் விவாகரத்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் விவாகரத்து கிடைத்துவிடும்​

ஆகவே குமுதா தன் பேச்சு திறமையால் குடும்பத்தாரிடம் அனுதாப அலையை தொடுத்துக்கொண்டிருக்கிறாள். செய்த தவறுகளை மறைக்கவென ஓயாத அலைகள் போல் தன் தொடர் முயற்சியின் விளைவு அவளை அப்பாவிப்பெண், அறியாமல் செய்த தவறால் மறுகி கொண்டிருக்கிறாள் என்ற முத்திரை குத்தி அனுதாபங்களை வெற்றிகரமாக பெற்றுக்கொண்டிருக்கிறாள்.​

இதோ இப்பொழுதும் ஒரு சின்ன பெண்ணின் நகையைகூட அவள் விட்டுவைக்கவில்லை. தங்கையென்றும் பாராமல் அபகரித்துக்கொண்டாள். தான் நிராகரித்த நகையைதான் தங்கை அணிய வேண்டும் என்ற சின்ன இன்பம் அவளுக்கு. ஆனால் அந்த இன்பத்தை அனுபவிக்க முடியாமல் அவள் உள்ளம் காந்தியது தற்பொழுது நிலாவின் தோற்றம்.​

ஒரு சின்ன தாவணியை மாற்றிவிட்டதன் பலனாக இப்பொழுது அந்த முத்து ஜிமிக்கி அவளுக்கு பொருந்தி போக கூடவே பச்சை நிற ஆரம் வெள்ளை தாவணிக்கு எடுப்பாக இருக்க நிலா இன்னும் அழகாக தெரிந்தாள். அவளின் பொறாமைத்தீக்கு நெய் ஊற்றுகிறோம் என்பதை அறியாமல் சின்னவளை புகழ ஆரம்பித்து விட்டார் அருணாசலம்.​

“அடடா என் கண்ணே பட்டுடும் போலிருக்கே!! இந்தா முத்து முதல்ல பாப்பாக்கு சுத்திப்போடு” என்றவர் நிலாவை உச்சி முகிர… உள்ள உணர்வுகளை முகத்திலிருந்து மறைக்க படாத பாடுபட்டாள் குமுதா​

“ஆமாம் மா அப்பா சொல்றது உண்மைதான்… அவளுக்கு முதல்ல சுத்தி போடுங்க… அவ பெயரை போலவே நிலா அழகா இருக்கா. நானும் சொல்லலாம் என்றுதான் நினைச்சேன்.. ஆனா என் சொல்பட்டு நிலாவுக்கு ஏதாச்சும் ஆகிடுச்சுனா… ஐயோ வேண்டாம்!! ஏற்கனவே இந்த குடும்பத்துக்கு கலங்கம் ஏற்படுத்துனவ என்ற பட்டத்தோட இப்பொழுது ராசியில்லாதவள் என்ற பட்டமும் சேர்ந்திடும்னு பயமா இருக்கு!!” உருக்கமாக பேச… சந்தோஷமாக நிலாவை பாராட்டி கொண்டிருந்தவர்கள் செய்வதறியாது கலங்கி நின்றனர்.​

“என்ன க்கா இப்படி எல்லாம் நீ நினைக்கலாமா? உன் கண்பட்டு நோக நான் என்ன அடுத்தவளா? உன் தங்கச்சிதானே க்கா!!” நிலாவும் தன் பங்குக்கு உருக… வந்து சேர்ந்தான் சிவநேசன்.​

குடும்பத்திரின் முகங்களில் வழிந்த சோகத்தை கண்டவனுக்கும் புரிந்தது அது குமுதாவின் விஷயத்தினால் என்பது. அதைத்தவிற வேறு என்ன விஷயம் இருக்கிறது கவலைப்பட! சூழ்நிலையை இலகுவாக்க நினைத்தவன் தாயை காண… அவர் ஆலதட்டுடன் நின்றிருந்தார்.​

“என்ன மா பெரியப்பா வீட்டு கல்யாண விருந்துக்கு போறோங்கிறதை மறந்துட்டியா என்ன? என்னவோ நான் ஒருத்திய கல்யாணம் முடிச்சிட்டு வந்து நிக்கிறது போல ஆலம் தட்டுடன் வந்துட்ட… இதுக்கே நான் சீக்கிரமா ஒரு பொண்னை பார்க்கனும் போலிருக்கே!!” கேலி பேசினான்.​

“தங்கச்சிங்க முன்னால என்ன பேச்சு பேசுற நீ சிவா!!” முத்தம்மா எகிற​

“அப்போ எங்களுக்கு பின்னால பேசலாமா மா” நிலா தாயை வார​

“அடிக் கழுதை!! வெத்தில பாக்குக்கே வழியில்லையாம் இதுல நாக்கு சிவந்துச்சாம்னு கேட்டானாம் மவராசன். அதுக்கு சப்பை கட்டு கட்டுறாளாம் நேத்து பெய்ஞ்ச மழையில முளைச்ச காளான்!!”​

“அடடே காளானும் வெள்ளை நான் போட்ட தாவணியும் வெள்ளை!! வாவ் கலக்குறீங்க முத்து ஜிமிக்கி வாங்கி கொடுத்த முத்தம்மா” சிவநேசனுடன் கைத்தட்டி கொள்ள​

“உங்கள… ம்ம்.. நல்லா வந்துரும் வாயில” முத்து பொரும​

“வாயில நல்லது வந்தா நல்லதுதானே முத்து” இந்த தடவை அருணாசலமும் கூட்டணியில் இணைய​

“உம்ம மவளுக்கு வழியை காண வக்கில்ல இதுல மவனோடு சேர்ந்து சிரிப்பு சோக்கு கேக்குதோ!!” முத்தம்மா கடுப்புடன் சொல்ல முகம் விழுந்துவிட்டது அருணாசலத்துக்கு.​

“என்னம்மா இது… உங்க மகதானே போக்கத்த வழிக்கு போய் இப்போ அடங்கி வீட்டோட இருக்கா… இதுல அப்பாக்கு என்ன வக்கில்லனு நீங்க சொல்லுறீங்க” சிரித்துக்கொண்டே சொன்னவனது வார்த்தையில் இருந்த உஷ்ணம் முத்தம்மாவை சுட்டது என்றால் குமுதாவுக்கு காந்தியது.​

‘ச்சே! இவன மட்டும் என்னால மசியவைக்க முடியலயே!! இருடா எனக்கு ஒரு காலம் வரும் அப்போ உன்னை வச்சி செய்றேன்!!’ மனதுக்குள் கருவிக்கொண்டாள். அவளை உணர்ந்தவனாக சிவநேசன் சட்டென அவளை நோக்க…​

“என்ன மனசுக்குள்ள என்ன போட்டு தாளிச்சிக்கிட்டு இருக்கிறாப்புல இருக்கே!!” ஜாலியாக பேசுவதுபோல ஆழம் பார்த்தான் தங்கையை​

“வலிக்கும்னு தெரிஞ்சே தானேண்ணே சொன்ன… தப்பு செஞ்சவ தாங்கிக்கத்தானே ஆகனும். ஆனா அண்ணா வெளி ஆளுகளவிட சொந்த தங்கச்சிய நீயே சுட்டிக்காட்டும் போது ரொம்ப வலிக்குது..” உருக்கமாக சொல்ல உருகியே போனார் முத்தம்மா. பெற்றவளல்லவா… மனம் கலங்கி துடித்தது மகளுக்காக. ஆனால் இந்த கலக்கத்துக்கெல்லாம் தகுதினாவள் அவள் இல்லை என்பதை உணரும் காலம் வரும் பொழுது சூழ்நிலை கைதியாகி கையாலாகாதனத்துடன் நிற்க போகிறார் என்பது தெரியாமல் போனது அவருக்கு.​

அத்தனை பேரையும் தன் பேச்சு திறமையால் கட்டி போட்டிருந்தாள் குமுதா. ஆனால் அவளின் பாட்சா சிவநேசனிடம் மட்டும் பலிக்காமல் போய் விடும். முத்தம்மா ஏதோ சொல்ல வர வாசலில் நிழலாடுவதை கண்டவர் சட்டென வாயை மூடிக்கொண்டார்.​

“வா தேவா..” என்று சிவநேசன் சொன்னதும் பொலிவிழந்து கிடந்த குமுதாவின் முகம் சூரிய பிரகாசமானது.​

“இல்ல பரவாயில்ல… ஆஃபிஸ் சாவி கொடுக்கிறேன்னு சொன்னீயே..” என்றவன் சிவாவிடம் கை நீட்ட.. பெண்கள் மூவரும் சமையலறைக்குள் நுழைந்தனர்.​

“ரூம்ல இருக்கு… இரு வந்திடறேன்… அம்மா தேவாக்கு ஒரு காப்பி” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சிவநேசன் நுழைய..​

காப்பி போடப்போன தாயை தடுத்த குமுதா “அவருக்கு நான் காப்பி போடும் பதம்தான் பிடிக்கும்” தானே முன்வந்து காப்பி போட்டவளை விழிவிரித்து பார்த்தாள் நிலவழகி.​

“பார்ரா!! இது எப்போதிலிருந்து?” அதிர்வுடன் தாயிடம் கேட்க​

தாய் அறியா சூலா.. முத்தம்மாவும் அறிவார். தேவா வந்தாலே மகள் முகம் பிரகாசிப்பதும் அவனுக்கென அவள் பார்த்து பார்த்து செய்வதும் கண்டவருக்கு பெருமூச்சு வந்தது. ‘எல்லாம் இவ நினைச்சப்படி நடந்தா நல்லாதான் இருக்கும். குமுதாவின் நிலை அறிந்தவன். நல்ல பையன் வேறு… ஆனால் குமுதா செய்து வைத்த காரியம்…’ அதற்குமேல் அவரை யோசிக்க வைக்காமல் மகள் காப்பியுடன் ஹாலுக்கு சென்றுவிட… அதிர்வுடன் நின்றிருந்த நிலாவை இழுத்துக்கொண்டு பெரியவளை தொடர்ந்தார்.​

தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த தேவாவிடம் காப்பியை நீட்டிக்கொண்டிருந்தாள் குமுதா. “எடுத்துக்கோங்க தம்பி” என்று முத்தம்மா சொன்னதும் நிமிர்ந்தவன் அங்கு குமுதாவை கண்டதும் அமைதியுடன் வாங்கி கொண்டவன் சிவாவின் வரவுக்காக காத்திருக்க.. அவன் மனதில் பாலை வார்த்ததுபோல் சாவியுடன் வந்தான் சிவநேசன்.​

கப்பை மேசைமேல் வைத்துவிட்டு சாவியை பெற்றுக்கொண்டவன் ஒரு சிறு தலையசைப்புடன் கிளம்ப எத்தனிக்க.. “அக்கா கொடுத்த காப்பியை குடிக்கலயா பார்ட்னர் அண்ணா?” துடுக்குடன் நிலவழகி கேட்டுவிட​

“அது வந்து… இப்போதான் சாப்பிட்டு வந்தேன் அதான்..” சமாளித்து சென்றுவிட… அருணாசலம் முத்துவை பார்த்த பார்வையில் துணுக்குற்றவருக்கு சலிப்பாக இருந்தது.​

‘நான் என்னவோ அவளை வாடி ராசாத்த்தி… காப்பி போட்டுடி என்று கட்டாயப்படுத்துனது மாதிரில இவரு என்னை முறைக்கிறாரு. எல்லாம் என் நேரம்’ சலித்துக்கொண்டே பதில் பார்வை பார்க்க​

“ஏண்டி முத்து…” என்று அவர் ஆரம்பிக்க “ஆமாமாம் நான்தான் வேட்டிக்குள்ள ஓணானை வெத்தல பாக்கு வச்சி அனுப்பிவிட்டேன் பாருங்க” கணவனை பேசவிடாமல் சமாளித்து தப்பித்து ஓட…. கலகலவென சிரித்தாள் நிலவழகி.​

பாவாடை தாவணியில் கலகலத்து சிரித்து கொண்டிருந்த மகளுடன் இணைந்து கொண்டனர் அருணாசலமும் சிவநேசனும். இருபத்திரண்டு வயதாகியும் இன்னும் பாவடை தாவணியில் உலா வருகிறாள். உபயம் குமுதா. சேலையில் பெரிய பெண்ணாக தெரிகிறாளாம். பார்க்க தன்னைவிட மூத்தவள்போல் தோன்றுகிறாள் என்று முத்தம்மாவிடம் எதேர்சையாக சொல்வதுபோல் சொல்லிவிட்டு செல்ல.. பெரியவளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமையும்வரை நிலவழகிக்கு சேலைக்கு தடா உத்தரவு போடப்பட்டது.​

“சரி சரி மணியாச்சு எல்லோரும் கிளம்புங்க..” சிவநேசன் நடுவராக சொல்லவும் தீண்டாமல் ஆறிபோயிருந்த காப்பியை பார்த்துக்கொண்டே சென்றார் அருணாசலம். மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது. இன்னுமே ஆறாவடுவாய் மகளின் செயல். இன்றைய விருந்தில் அண்ணன் குடும்பம் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் கொடுப்பதென்ற தவிப்பு ஒரு புறம் அவரை போட்டு உலுக்கிக்கொண்டிருந்தது.​

போன வருடமே குமுதாக்கு வரன் ஒன்றை கொண்டு வந்தவரிடம் மறுக்க வேண்டிய நிர்பந்தம் அருணாசலத்துக்கு. மகளின் விவாகரத்து கிடைத்துவிட்டால் அடுத்ததை கவணிக்கலாம். ஆனால் அது இன்னும் நிலுவையில் இருக்க… புது பிரச்சினையில் விழ அவர் தயாரில்லை. இதை அண்ணனிடமும் பகிரமுடியவில்லை. இதில் புதிதாக தேவாமீது குமுதாவின் ஆர்வ பார்வையை கண்டவருக்கு வேதனையாக இருந்தது.​

காரில் தந்தையின் சுருங்கியிருந்த முகத்தை கண்ட நிலாவுக்கு கவலையானது. ஏதோ ஒன்று அவரை வாட்டுகிறது என்பதை உணர்ந்தவள் அவர் வாடுவது பிடிக்காமல் தந்தையின் கரத்தை அழுந்த பற்றி தோளில் சாய்ந்துக்கொண்டாள்.​

‘இறைவா… அப்பா மனம் நோகாம நான் நடந்துக்கனும். அக்கா மூலம் வந்த மனக்கசப்பு எல்லாம் மறையும் அளவுக்கு நான் அப்பாவை தலை நிமிர வைக்கனும்..’ மனதில் வேண்டுதல்கள் தொடர்ந்தன.​

விருந்தில் சொந்த பந்தங்கள் கூடிவிட கேட்கவும் வேண்டுமோ… பெரியவர்கள் ஒரு பக்கம் கூடி பேசிக்கொண்டிருக்க.. இளைஞர் பட்டாளம் ஒரு பக்கம் மணமக்களை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். குமுதாவும் நிலாவும் மண்டப்பத்தின் தூண் அருகே நின்று நடப்பவற்றை ரசித்துக்கொண்டிருக்க… திடீரென ஓர் ஆண்குரல் குமுதாவை திரும்பி பார்க்க வைத்தது.​

நெடுநெடுவென வளர்ந்திருந்த ஓர் ஆடவன் “விருந்துக்கு வந்தோமா பார்த்தோமா ரசித்தோமா அதோட கிளம்பிடனும். இது என்ன கூத்தடிச்சிக்கிட்டு!!” என்றவன் எதேற்சையாக திரும்பி பார்க்க… குமுதாவின் பார்வையை சந்தித்தவன் “பெண்கள் என்றால் இப்படி இருக்கனும்டா” நண்பனிடம் இவர்களை சுட்டிகாட்டிவிட்டு நகர… குமுதாவின் மனமும் அவன் பின் சென்றது. அவன் குணாளன். அதுதான் அவர்களின் முதல் சந்திப்பு.​

இறைவன் போட்ட முடிச்சென்று குமுதா நினைக்க… குணாளன் திட்டம்போட்டு முடிக்க வைத்த முடிச்சென்று யாருக்கும் தெரியாமல் போனது.​

 
Last edited:
Top