வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வாயுரைக்க வருகுதில்லை நன்நேசம் - 6

GG writers

Moderator

உ​

நேசம் 6​

முகம் மலர பேசும் இந்த சின்ன பெண்ணின் ஆசைகள் எல்லாம் உண்மை தெரிய வந்தால் நிராசையாகி போக போவதை எண்ணி வருந்தினான். “குணாவும் உன் அக்காவும் எப்படி அறிமுகமானாங்க சொல்லேன்..” ஆர்வமாக கேட்பதுபோல் பாசாங்கு செய்தான் விமலன்.​

அவளின் வாடிய முகத்தை காணமுதல் தன்னை திடப்படுத்திக்கொள்ள எண்ணி அவன் கேள்வி கேட்க… அக்காளுக்காக தான் செய்த வீரதீர செயல்களை கைகள் அபிநயம் பிடிக்க சொன்னவளின் கூற்றை கூர்ந்து கேட்டவனுக்கும் ஒன்று மட்டும் புரிந்தது. இவை அனைத்துக்கும் காரணகர்த்தா குணாளன் என்பது. ஒரு புறம் தெரிந்தே செய்தவன் மேல் கோபம் அதிகரித்தது. இன்னும் வதனி அண்ணி வீட்டினருக்கு விஷயம் தெரியவில்லை. தாயிடம் மட்டும் வதனியுடனான திருமணத்தை நிறுத்த சொல்லியிருந்தான் குணாளன்.​

கண்ணெதிரே நிற்பவளின் அன்பில் நெகிழ்ந்து போனான். தமக்கைக்காக என்னவெல்லாம் செய்கிறாள்… குணமுள்ள தங்கைபெற குமுதா வரம் பெற்றிருக்கிறாள் போலும் என்றெண்ணியவன் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் அவனுள் வந்தது. நெற்றியை நீவிக்கொண்டவன் எதிரே நிற்பவளை பார்த்து​

“இப்போ நாம ரெண்டு பேரும் அவங்கமுன் போய் நின்று சர்பிரைஸ் கொடுத்தா எப்படி இருக்கும்?” என்று கேட்டதும் ஆர்வமாக தலையசைத்தவள் “கலக்குறீங்க சின்ன மாம்ஸ். ஸ்வீட் சர்பிரைஸ் கொடுக்குறதுல்ல எக்பீரியன்ஸ் இருக்கோ?” தெற்றுப்பல் தெரிய சிரித்தாள்.​

“நைஸ்..” குழப்பம் மறந்து அவள் புன்னைகையை பார்த்து சொல்ல​

“எது… உங்க ஸ்வீட் சர்பிரைஸா?” நிலா கேட்க சற்று தடுமாறியவன்​

“இல்ல… அந்த சின்ன மாம்ஸ்… தட் வன் நைஸ்” என்று சமாளித்தவன்​

“அதற்கு முன்னால இந்த நிலாக்கு ஒரு சின்ன புதிர். ஜோடி சேர்த்த நிலாவின் அறிவுக்கு ஒரு டெஸ்ட் என்றுகூட சொல்ல்லாம்” அவளைப்போலவே பேசி கண்ணடித்தான்.​

“கமான் கமான் டெல்… புதிர் எல்லாம் நிலாக்கு அத்திரி பத்திரி லாலா கடை ஜாங்கிரி மாதிரி..” என்றாள் ஆர்வத்துடன்.​

“ஒருத்தனுக்கு ஏற்கனவே அவனோட விருப்பமில்லாமல் நிர்பந்தத்தில் ஒரு பெண்ணோட நிச்சயம் ஆகிடுச்சு… அதாவது தங்கைக்காக பெண்ணெடுத்து பெண் கொடுப்பது என நிச்சயமாகிறது”​

“ஐயோ பாவப்பட்ட பய போல..” உச்சுக்கொட்டினாள்​

“ம்ம்… மிச்சத்தையும் கேளூ… ஒரு நாள் அவனுக்கு பிடிச்சதுபோல ஒரு பொண்ணு கண்ணுல படுது. அறிவு எச்சரித்தாலும் மனம் அவளை விரும்ப சொல்ல… மனம் சொன்ன பேச்சை கேட்டு அந்த பொண்ணை காதலிக்க ஆரம்பிச்சிட்டான்.. இப்போ அவன் வீட்டுல கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க… இப்போ சொல்லு அவன் என்ன பண்ணனும்” பந்தை அவள் புறம் வீசியவன் அவள் பதிலுக்காக காத்திருந்தான்.​

“அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணை லேட்டா பார்த்ததால இந்த பயலும் பாவம்தான். ஆனா ஆசை கண்ணை மறைக்க அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பொண்ணுக்கு பாவம் செய்ய துணிஞ்சிட்டான். செல்ஃபிஷ் ஃபெல்லோ. நிர்பந்தமா இருந்தாலும் இவன் சம்மதிச்சதாலத்தானே நிச்சயம் நடந்தது.?”​

“கரெக்ட்… நிலா கிளவர் கேர்ள்”​

“ஐ நோவ். பட் நான் இன்னும் சொல்லி முடிக்கல..”​

“இஜிட்?”​

“யெஸ் யெஸ்… இப்போ கல்யாணம் என்று வரப்போ… இன்னும் ஆழமா யோசிக்கனும் சின்ன மாம்ஸ். இவன் செஞ்சது தப்புதான் இல்லனு சொல்லல. பெரியவங்க ஒரு வார்த்தை சொல்லுவாங்க… பிடிக்காத பொண்ணும் வேகாத குழம்பும் ஒன்னுனு. முதலாவது வாழ்க்கை ரசிக்காது இரண்டாவது வாய்க்கு ருசிக்காது”​

சின்ன பெண், வெகுளி என்று நினைத்தவனுக்கு அவளின் பக்குவப்பட்ட பேச்சு ஆச்சரியமளித்தது. இன்னும் பேச வைத்து கேட்கும் ஆவல் உந்த​

“அப்படினா அந்த நிச்சயிக்கப்பட்ட பெண்ணோட வாழ்க்கை? அவன் தங்கை வாழ்க்கை? இதற்கும் சேர்த்து பதில் சொல்லனும்!" என்றான்​

“அட நான் என்ன சொல்ல முடியாதுனா சொன்னேன்? மூணு மாசத்துல புள்ள வேணும்னு சொன்னா முடியுமா!! ஒன்பது மாசம் வரை பொறுக்கனும்ல…” கேட்டவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது​

“சரி சரி என் தப்புதான் நிலா பேசி முடிக்கும் வரைக்கும் விமலன் மூச்!” வாயில் விரல் வைத்துக்கொண்டான். அவனறியாமல் பெண்ணவளோடு ஒத்திசைவானான்.​

“முதல்ல நிச்சயிக்கப்பட்ட பெண்ணோட திருமணம் நடந்தா இந்த பரதேசி நெஞ்சுல காதலிச்ச பெண்னை சுமந்துக்கிட்டு இவளோட வாழ்வான். இல்லனா காதலிச்சவள நினைச்சிக்கிட்டு இவளோட வாழாம போயிடுவான். இந்த மாதிரியான வாழ்க்கை வாழ்வது அந்த பொண்ணுக்கு அவன் பன்ற துரோகம் இல்லையா? இந்த மொள்ளமாரியோட தங்கச்சிக்காக இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை பலியாக்கலாமா?” குணாக்கு அவள் கொடுத்த பட்டங்களை எண்ணி சிரித்தவன்​

“ம்ம்… ஒகே… நிச்சயிக்க[ப்பட்ட பொண்ணை விட்டுருவோம்… ஆனா கூட பிறந்த தங்கச்சி… அவ வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டமா?”​

“கண்டிப்பா யோசிக்கனும்! பாதி கல்யாணத்தை பண்ணிட்டு இன்னொருத்திக்கு அம்பை விட்டவன்லாம் காதல் கண்ணை மறைச்சிடுச்சினு சொல்லிட்டு குருட்டுபய வேஷமெல்லாம் போடக்கூடாது. இவன் சால்ட்டை சாப்பிட்டா அடுத்தவன் வந்தா வாட்டர் கொடுப்பான்? அவன்தான் எடுத்து குடிக்கனும். ஒன்னு அவன் தங்கச்சிக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்கனும் இல்லனா தங்கச்சியை கட்டிக்க போறவன் காலுல தொபுக்கட்டீர்னு விழனும்” என்றவளை கண்ணிமைக்காமல் பார்த்தான் விமலன்​

யாரிவள்? குணாளன் செய்த இடியாப்ப சிக்கலை அவிழ்க்க வெகு அழகாக திட்டம் போட்டு கொடுத்துட்டாளே!! அவளின் மேல் அவனுக்கு தனி மரியாதை வந்தது. கைத்தட்டி பாராட்டியவன் “நைஸ் அண்ட் உன் பேச்சு பிரமாதம்” பாராட்டினான்.​

ஏனோ அவளுடன் கழித்த இந்த சில நிமிடங்களை வெகுவாக ரசித்தான் விமலன். ஒரு ராஜ்ஜியத்தில் ஏற்படும் சிக்கலை அவிழ்க்க ஒரு மந்திரியின் ஆலோசனைகள் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு அவளின் யோசனைகள் அவன் வந்த வேலையை முடிக்க உதவின.​

“நிலா… உன்னை சந்திச்ச இந்த ஈவ்னிங்கை நான் மறக்கவே மாட்டேன்” உணர்ந்து சொன்னான்.​

“அப்போ நிலாவை மறந்திடுவீங்களா?” விளையாட்டாய் அவள் கேட்ட நொடி திடுக்கிட்டான் விமலன். ‘இவளை என்னால் மறக்க முடியுமா? இவளுடன் சில நிமிட பழக்கம் மட்டுமே… அதுவே எத்தனை இனிமையாக இருக்கிறது…’ நினைத்த நொடி இனிமையாக உணர்ந்தவன் இதழ் பிரியா புன்னகை ஒன்றை சிந்த… இந்தமுறை “நைஸ்..” என்றாள் அவள்​

“என்ன நைஸ்?”​

“உங்க ஸ்மைல் நல்லாயிருக்கு” என்றதும் மனம் படபடத்தது அவனுக்கு. ‘என்ன இது சின்ன பிள்ளைபோல்’ மனதை அடக்க நினைக்க… ஒரு புறம் விடுவேனா உன்னை என்று அவளின் தெற்றுப்பல் புன்னகை மனதில் நின்று நர்த்தனம் ஆட மறுபுறம் தூங்கி கொண்டிருந்த கடமை கண்ணாயிரம் ‘அடங்குடா’ என்று எச்சரிக்க முயன்று பேச்சை மாற்றினான்.​

அதன்பிறகு அவளின் படிப்பை பற்றி பேசினார்கள். அவன் தொழிலை பற்றி பேசினார்கள். இருவரின் அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டனர். நூலகத்தும் வந்து சேர்ந்த பொழுது இருவருக்குள் இனிய உறவு ஒன்று மலர்ந்திருந்தது. இருவரும் அதை உணர்ந்தனர். மௌனமாக புன்னகைத்துக் கொண்டனர்.​

நிலாவுடன் விமலனை பார்த்த குணாளனுக்கு எந்த அதிர்வும் இல்லை. இதைதானே அவனும் எதிர்பார்த்தது. வதனியை தனக்கு பிடிக்கவில்லை என்று தாயிடம் சொன்னவனும் காத்துக்கொண்டுதான் இருந்தான். உளவு பார்க்க யாரேனும் வருவார்கள் என்று. இதனால் தனது வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று கணக்கிட்டவன் எண்ணம் பொய்க்கவில்லை. இதோ விமலன் வந்து விட்டான். இனி இவனை வைத்து தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற களிப்புடன் நிற்க…​

அவனுக்கு முற்றிலும் வேறாக குழப்பத்துடன் நின்றிருந்தாள் குமுதா. நிலாவுடன் ஓர் அழகன் நிற்கின்றான் அதுவும் அவளுடன் புன்னகை முகமாக பேசிக்கொண்டு நிற்கிறான். அவன் முகத்தை பார்த்தவளுக்கு புரிந்து போனது அவன் குணாளன் சொந்தம் என்று. அவள் ஒன்றும் நிலாபோல் வெகுளி அல்லவே. சூட்சுமக்காரிக்கு அறிவு அதிகம் என்பதை நிரூபித்தாள்.​

“வாடா விமல்… இவள் குமுதா உன் வருங்கால அண்ணி” என்ற குணாளன் குமுதாவை பார்த்து “என் சித்தப்பா பையன் விமலன். என் தம்பி” என்று அறிமுகப்படுத்த.. வெட்கத்துடன் பணிவாக புன்னகைத்தாள் குமுதா. போலி பணிவு என்பதை அறியாத விமலன் பதில் புன்னகை தந்தான். குணா ஏன் குமுதாவை தேர்வு செய்தான் என்பதை உணர்ந்துக்கொண்டான் அவன். இருவரும் ஜோடியாக நிற்கையில் ஜோடி பொருத்தம் அத்தனை அழகாக இருந்தது.​


“மாமா யூ ஆர் டூ லேட். சின்ன மாம்ஸுக்கு எல்லாம் தெரியும். எனிவே ஹேப்பி பெர்த்டே மாமா… இந்தாங்க என் பிறந்தநாள் பரிசு? அக்கா நீ பரிசு கொடுத்திட்டீயா?”​

“ம்ம்..” வெட்கத்துடன் குணாளனை பார்த்து புன்னகைக்க… அவர்களின் நெருக்கத்தை உணர்ந்துக்கொண்டான் விமலன். மனதில் வதனிக்காக வருந்தினான். ஆனால் இவர்களுக்கு எந்தளவு குணாளனை பற்றி தெரிந்திருக்க கூடும் என்ற யோசனையானவன்​

“குணா அம்மா உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க. வீட்டுக்கு போகலாமா? அண்ட் நிலா… நான் கொஞ்ச நாட்களுக்கு இங்குதான் இருப்பேன். மறுபடியும் நாளைக்கு மீட் பண்ணலாமா? எனக்கு கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு… உன் அக்காவும் உடன் வந்தா நல்லாயிருக்கும்” என்றவனை பார்த்து அப்பாவியாய் விழி விரித்த குமுதா​

“அச்சோ நாளைக்கு நிலாக்கு காலேஜ் இருக்கு. அவளுக்கு லீவ் இருக்கும்போதுதான் லைப்ரரிக்கு வருவா… அவளோடு நான் வருவேன்..”​

“பின்னால தொடுத்துக்கிட்டு மாமா வந்திருவார்..” நிலா சொன்னதும் குமுதா வெட்கத்துடன் தலை குனிந்துக்கொண்டாள். குனிந்து அக்காளின் முகத்தை பார்த்த நிலா “வெட்கப்படுறீயா அக்கா” என்று வம்பிழுக்க…. குணா குமுதாவை ரசிக்க…. விமலனும் ரசித்தான் அந்த காட்சியை.​

வம்பிழுத்தவளின் மேல் கண்கள் பதிந்திருந்தன. சிரிக்கும் பொழுது கன்னத்தில் பம்பரத்தால் துளை போட்டது போன்ற இரண்டு குழிகள் அவனை ஈர்த்தது. “நைஸ்” வாய் மென்மையாக முனுமுனுக்க… கண்டுக்கொண்டாள் குமுதா.​

“ஓஹோ கதை அப்படி போகுதோ!! ஆனா இந்த கறுப்பிக்கு இத்தனை அழகானவனா? அதுவும் எப்படி ரசிக்கிறான் பாரேன்!! குணாவைவிட இவன் இன்னும் அழகா இருக்கான். இதுங்க ஜோடி சேர்ந்தா என் மவுசு என்னாகிறது? குணாவோட மதிப்பு குறைஞ்சிடுமே!! ஆனா இவளை வச்சிதானே என் கல்யாணத்தை முடிக்க முடியும்!! முதல்ல என் கல்யாணம் முடியுற வரைக்கும் இதுங்களை யூஸ் பண்ணிட்டு அப்புறம் கழட்டி விட்டுறலாம்!!’ குருகிய நேரத்தில் மனதில் திட்டம் போட்டவள் நிலாவை ஆராய அவள் சகஜமாகதான் இருந்தாள்.​

“ஓ. ஒத்த டிராக்கா… அப்போ கழட்டிவிடறது சுலபம்தான்’ குதூகளித்துக்கொண்டாள் குமுதா.​

----------------​

இன்று​

மீண்டும் கிடைக்காத உறவை நினைத்து மீள முடியாத வலிகளுடன் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தாள் நிலா… சேர்ந்த காதல் ஒருமுறை தான் நினைக்கும் ஆனால் சேரா காதல் ஒவ்வொரு முறையும் அதன் வலிகளை அசைபோடும்… அப்படிதான் இவளும் அசைபோட்டுக்கொண்டிருந்தாள் கூடவே விமலுடன் பொக்கிஷ நினைவுகள். மனம் வலித்தது.​

விழி கடந்து கன்னத்தில் உறைந்திட்ட கண்ணீர் சொன்னது அவளின் தூங்கா இரவை. நேற்றிரவு குணாளன் சொன்னதை கேட்ட பின்பு எங்கனம் அவளை தூக்கம் அண்டும். சிவநேசன் ஆறுதலாக பேசினாலும் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த தீ இன்னும் அதிகமான உக்கிரத்தோடு குணாளனை தாக்க காத்திருந்தது.​

கதவை தட்டி உள்ளே நுழைந்த அருணாசலம் மகள் அமர்ந்திருக்கும் நிலை கண்டு கசங்கி போனார். “பாப்பா” என்று அவர் அழைத்து அணைக்கவும் “அப்பா..” என்றவள் இறுக அணைத்துக்கொண்டாள்.​

தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா தன் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே’ தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பந்தத்தை உணர்ந்து எழுதியிருப்பார் போல கவிஞர். அருணாசலத்துக்கு அது பொருந்தியது.​

“இந்த அப்பன் இருக்கிற வரைக்கும் என் தங்கத்துக்கு ஏதும் ஆக விடமாட்டேன் டா. ஒரு தடவை மத்தவங்களுக்குகாக யோசிச்ச இந்த அப்பனை மன்னிச்சிடு தங்கம்… இனி எனக்கு எல்லாமும் நீதான் டா. நீ என்ன முடிவெடுத்தாலும் இந்த அப்பன் உன் நிழலா இருப்பேன்” உணர்ச்சி பொங்க பேசியவருக்கு மூச்சிரைத்து வேர்த்தது. அதை உணர்ந்தவளுக்கு தன் மீதே கோபம் வந்தது.​

குணாளனால் அப்பாவின் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்து வந்தால்… தானும் தன் பங்குக்கு அவரை வருந்தவிட்டதை எண்ணி வருந்தியவள்​

“அப்பா… வர மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருந்த நான் வந்திருக்கேன்னா ஏன் என்னு யோசிக்க மாட்டீங்களா!! யார் என்ன சொன்னாலும் நான் யாரையும் விட போறதில்லை. குட்ட குட்ட குனிஞ்சதெல்லாம் போதும்!!” தந்தை சற்று இலகுவாவதை கண்டவளுக்கு அப்பொழுதுதான் நிம்மதியே வந்தது.​

“இனி மேகத்துக்குள்ள ஒளிய மாட்டீயே பாப்பா?”​

“அந்த மேகமா நீங்க இருந்தா குளிர் காய்ஞ்சிக்கிட்டே இருப்பேன் ப்பா” புன்னகைத்தாள். நிலாவின் கன்னத்தை தட்டிவிட்டு சென்றவர் மனதில் நேற்றிரவு சிவநேசன் சொன்ன விஷயம் வந்து போனது. மகன் சரியாகத்தான் அவன் தங்கையை கணித்து வைத்திருக்கிறான் என்று புரிந்தது.​

நேரே பூஜையறைக்குள் நுழைந்தவர் “இறைவா என் மகளின் வாழ்வு சிறக்க வழிகொடு… என் நிழலிலேயே வாழ்ந்திடவா அவள் பிறப்பெடுத்தாள்!! அவள் வாழ்வை செப்பணிக்கும் வரையாவது எனக்கு ஆயுள் கொடு..” தன் இளையமகளுக்காக மனமுருக வேண்டிக்கொண்டார்.​

அதன்பின் உறவினர்கள் வருகையும் குமுதாவை அலங்கரிக்க பார்லரிலிருந்து அழகு நிபுணர்கள் வரவு என வீடே பரபரப்பாக மாறியது. அசைந்தாடும் தங்கரதமோ என்று எல்லோரும் குமுதாவை கண்டு வாய் பிளக்க… தாய்மையின் பொலிவிலும் அழகு நிபுணர்களின் கைவண்ணத்தில் மெருகூட்டிய அழகிலும் லயித்து போனான் குணாளன்.​

மனைவிக்கு மாலையிட்டு சந்தனம்பூசியவன் அடுக்கியிருந்த காண்ணாடி வளையலை பார்த்தவன்… தன் தாயிடம் கண்காட்ட அவரும் பெருமையுடன் இரு தங்க வளையல்களை அவனிடம் கொடுத்து போட சொன்னார்.​

உறவினர்கள் சிலர் வாய் பிளக்க… அருணாசலம் முத்தம்மா முகம் மலர்ந்திருந்தது. மகளின் புகுந்த வீட்டினர் அவளை கொண்டாடுவதை நிறைந்த மனதுடன் பார்த்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக நலுங்கு செய்து வளையல்கள் அணிவிக்க இறுதியாக நிலாவும் வந்தாள்.​

“அட!! இவ வந்திருக்காளா?” கூட்டத்தில் ஒருவர் சொல்ல… சட்டென திரும்பியவள் “நீங்களே வந்திருக்கீக சொந்த தங்கச்சி வராம இருப்பேனா?” பட்டென சொல்லிவிட… அடுத்து வம்பிழுக்கும் அத்தைக்காரி “இம்புட்டு நாளும் இந்த சொந்த தங்கச்சிய காணலயே… அதான் கேட்டுப்புட்டாக” எகத்தாள குரலில் சொல்ல… அமைதியாக தமக்கைக்கு வளையலை போட்டவள்​

“அப்படியா? தர்மபுரில இருக்கிற அத்தைக்கு நான் வரதும் வராததும் தெரியுமா? தர்மபுரிலதானே இருக்கீக… இல்ல இங்குட்டு வீடு பார்த்து வந்திட்டீகளா? இது எனக்கு தெரியாம போச்சே!!” பகடி பேசுவதுபோல் சொன்னவளை ஏதும் செய்ய முடியாமல் அசட்டு புன்னகை சிந்தியவர் அமைதியானார் அத்தையானப்பட்டவர்.​

“அப்புறம் சம்பந்தி சின்னவளை எப்போ கட்டி கொடுக்க போறீங்க… வயசு ஏறிக்கிட்டே போகுது?” குணா ஜாடை காட்ட கேள்வி எழுப்பினார் அவனின் தாய்.​

“படிப்பு முடிஞ்சதும் பார்க்கலாம்னு..” முத்தம்மா சொல்லவர.. அவரை முடிக்கவிடாமல் அடுத்த கேள்வி பாய்ந்தது​

“இப்படித்தான் என் சொந்தத்துல ஒரு பொண்ணுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணலாம்னு சொன்னாங்க… நல்லா படிச்ச பொண்ணுக்கு படிச்ச மாப்பிள்ளை கிடைக்கல.. காலம் தள்ளி போனதுதான் மிச்சம்… நல்ல மாப்பிள்ளை கிடைக்காம இப்போ வேற வழி இல்லாம இரண்டாம் தாரமா வாழ்க்கை பட்டிருக்கா” உச்சுக்கொட்டி சொல்ல​

“அதான் சொல்லுவாங்க… எதையும் காலா காலத்துல செஞ்சிடனும்.. இல்லனா இப்படிதான் ஆகும்” வாயில் வெற்றிலையை குதப்பிக்கொண்டே இன்னொருவர் சொல்ல​

“அந்த பயல மறக்க முடியல போலிருக்கு!!” இன்னொருத்தர் கொழுத்தி போட​

“யாருல அது? ஓ லவ் மேட்டரா? அப்படி போடு அருவாளை!!”​

“அட இதுகூட தெரியாதா? அதான் குணாவோட தம்பிக்காரன்… அவன் சின்னம்மா பையன்”​

“ஆ.. அவனா!! அதான் அந்த பயலோட ஆத்தாக்காரி வளைகாப்புக்கு வரலயோ”​

இப்படியாக குணாவின் தாயார் பற்ற வைத்த தீ… பஞ்சாய் தீப்பிடிக்க வெகுண்டு எழுந்து விட்டான் சிவநேசன்​

“வளைகாப்புக்கு வந்தவங்க உங்க வேலை முடிஞ்சதுனா பந்தில போய் சாப்பாடுக்கு மட்டும் வாயசைச்சிக்கிங்க. எங்க வீட்டு பொண்ணை பத்தி பேசுனா நான் சும்மா இருக்க மாட்டேன். அது மாமனா இருந்தாலும் சரி மச்சானும் இருந்தாலும் சரி” என்றவன் குணாவை பார்த்து​

“என்ன நான் சொன்னது சரிதானே?” என்றதும்​

“சரிதான்… நம்ம குடும்பம் என்றால் என் அம்மாவும் அதில் அடக்கம்தானே சிவா? என் அம்மாவை அவமதிக்கிறது மாதிரி பேசுவது எனக்கு பிடிக்காது” இன்னும் பிரச்சினையை கிளப்ப பார்க்க​

“ஓ… அப்படியா சொல்லுறீங்க!! நிலாவை வச்சிக்கிட்டு அடுத்தவ ரெண்டாம் தாரமா போனதை அத்தை ஏன் இங்கு பேசனும்? அவமதிக்கிறது நானா உங்க அம்மாவா!!” சிவா வார்த்தைகளை கடித்து சொல்ல… குணா நிதானித்தான். தன் மதிப்பு சிறிதளவும் குறையக்கூடாது என்று நினைப்பவனுக்கு சற்றுமுன் சிவந்த கண்களுடன் சிவா கேட்ட கேள்வி பிடிக்கவில்லை. தன் முக்கியத்துவம் சரிகிறதோ என்ற எண்ணம் வர மனைவியை பார்த்தான். சிறு பார்வையிலேயே புரிந்துக்கொண்டாள் அவனின் தர்மபத்தினி​

“அண்ணா இது என்ன இப்படி பேசுற? என் அத்தைக்கு உரிமை இல்லையா?” வெறுத்து போய் பார்த்தனர் அருணாசலமும் நிலாவும். முத்தம்மா கலங்கி நின்றிருந்தார்.​

“அத்தைக்கு இருக்கும் அதே உரிமை இல்ல… இல்ல.. அதைவிட அதிக உரிமை நிலாமேல் எனக்கிருக்கு ஜாக்கிரதை!!..” பற்களை கடித்துக்கொண்டு சொல்லி கொண்டிருக்க… அருணாசலம் நடுகூடத்துக்கு வந்து நின்றார்​

“மன்னிக்கனும்.. விழா முடிஞ்சதும் சொல்லலாம் என்று நினைச்சேன் பரவாயில்ல… இப்பொழுதே சொல்லிடுறேன். நாளை மறுநாள் நிலாவை பெண் பார்க்க வராங்க. என் மகளின் மேல் உங்களின் அக்கறையை பார்த்துட்டேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்றவர் கைகூப்பி விட்டு அறைக்குள் செல்லுமுன் வழியில் நின்றிருந்த மகளை பார்வையால் கெஞ்சினார்.​

 
Last edited:
Top