வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வாயுரைக்க வருகுதில்லை நன்நேசம் - 7 (2)

GG writers

Moderator

உ​

நேசம் 7 (2)​

இன்று​

வீட்டில் ஒவ்வொருவரும் அவரவர் யோசனையில் ஆழ்ந்திருந்தனர். நிலா குடும்பத்துக்கும் விமலனுக்கும் நடுவில் அல்லாடி கொண்டிருக்க… யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை. குணாளனும் குமுதாவும் வருபவன் யாராக இருக்கும் என்று விவாதிக்கொண்டிருக்க… வருபவனை வருந்தும்படி நடந்துக்கொள்வார்களா குமுதாவும் குணாவும் என்று சிவநேசன் யோசித்துக்கொண்டிருக்க… தன்னிடம் எதையும் கூறாமல் விஷயத்தை மறைத்த கணவனை முத்தம்மா முறைத்து கொண்டிருக்க… கையில் இருக்கும் பாரதியின் புத்தகம்தான் இப்பொழுது தனக்கு கவசமென அருணாசலம் முகத்தை அதில் பதித்திருந்தார்.​

“மா பழுத்தால் கிளிக்கு… வேம்பு பழுத்தால் காக்கைக்குனு சொல்லுவாங்க.. பழுத்த காய்கனிகூட மத்ததுக்கு உதவுது. ஆனா நான் கிழமாகிட்டேன் ஒன்னுக்கும் உதவ மாட்டேன்னு நினைச்சிட்டீங்களோ?”​

“ப்ச்!! முத்து ஏன் இப்படி பேசிக்கிட்டுருக்க?”​

“ஐயோ சாமி உங்களுக்கு தெரியாது பாருங்க”​

“பாப்பாக்கு ஒரு நல்லது நடக்கப்போகுது… இப்படி நீ முகத்தை தூக்கி வச்சிக்கலாமா?”​

“ஆமாமாம் கன்னுக்குட்டி மட்டும் கண்ணுக்கு தெரியும் அதை பெத்த தாய்ப்பசு எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலல??”​

“ப்ச்!! முத்து. எனக்கே நேற்றுதான் தெரியும். சிவாதான்…”​

“ஓ அவனும் இதுல கூட்டா?”​

“சொல்ல விடேன் டி!!” ஆருணாசலம் சலித்துக்கொள்ள “ம்க்கும்” முகத்தை திருப்பிக்கொண்டார் முத்தம்மா. மனம் ஆறவில்லை அவருக்கு. அப்படி என்ன சின்னவளை கொடுமை படுத்திவிட்டோம்… என்னை தள்ளி வைக்கும் அளவுக்கு என்ற ஆற்றாமையில் கண்ணீர் வந்து விட்டது.​

“உனக்கு பஞ்சுபோல இளகிய மனசுடி. அதனாலத்தான் பெரியவ எது செஞ்சாலும் பொறுத்து போற… ஆனா எல்லோராலும் அப்படி இருக்க முடியுமா? உனக்கு ஏப்படி பெரியவ முக்கியமோ அதே அளவுக்கு எனக்கும் அவ முக்கியம்தான். நம்ம பிள்ளையை நான் வெறுக்க முடியுமா? என்ன நீ பொறுத்து போற நான் முரண்டு பிடிக்கிறேன். அதுவும் நம்ம பாப்பா விஷயத்துல மட்டும்தான். அவ வாழ்க்கையில் நிறைய நடந்திருச்சி… அந்த காயங்கள் ஆற என்னால முடிஞ்சது அவளுக்கு துணையா நிற்கிறது மட்டும்தான். கூட ஆறுதலா சில வார்த்தைகள்”​

“நீ குடும்பத்தையே உன் கையில வச்சி பார்த்துக்கிற… அதனால எல்லோருக்காகவும் பார்க்கிற… ஆனா நான் என் பாப்பாக்கு மட்டும்தான் பார்க்கிறேன். சுயநலம்னு நீ நினைச்சாகூட தப்பில்லை. அவளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமையுற வரைக்கும் நான் இப்படித்தான் இருப்பேன். என் ஆயுள் முடியுறதுக்குள்ள…” என்றவரின் வாய் பொத்தினார் முத்தம்மா​

“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?” விசும்பிக்கொண்டே கணவனின் நெஞ்சமதில் சாய்ந்துக்கொள்ள… மனைவியை அணைத்துக்கொண்டார் அருணாசலம். பயத்தில் முத்தம்மாவின் உடல் நடுங்குவதை உணர்ந்தவர் அமைதியாக இருந்தார்.​

எதை சொன்னால் மனைவி அடங்குவாள் என்பதை தெரியாதவரா அவர். பெண் பார்க்கும் படலம் முடியும் வரைக்கும் வாயை திறக்க வேண்டாம் என்று சிவநேசன் சொன்னதை கடைபிடிக்க வேண்டி இப்படி பேசிவிட்டார். “இவளும் பாவம்தான். என்ன… பெரியவளின் சூட்சும புத்தியை உணராமல் இருக்கிறாள்’ என்று நினைத்து கொண்டார்.​

மறுநாள் விடிந்ததும் நிலாவின் அறைக்குள் நுழைந்தார் அருணாச்சலம். இன்னும் உறங்கி கொண்டிருந்தாள் அவள். மாசற்ற நிர்மலமான முகத்துடன் உறங்கும் மகளை கண்டவர் வருந்தினார். ‘இந்த நிர்மலமான முகத்தை கண்டு எத்தனை காலமாகிவிட்டது? குறும்புடன் துள்ளி திரிந்தவளின் வாழ்வில் நடந்த துயரம் அவளை தலைகீழாக மாற்றிவிட்டதே!! ஒரு பெருமூச்சுடன் வந்த வழியே திரும்பினார்.​

“ப்பா..” மகளின் குரல் கேட்டதும் சட்டென அவளருகில் விரைந்தவர் “பாப்பா… என் கன்னுக்குட்டி… இந்த அப்பா மேல கோபமில்லையே?” முகத்தை வருடிக்கொண்டே கேட்டவரை கூர்ந்து கவணித்தாள்​

முகம் கசங்கி… கீழ் இமை வீங்கியிருந்தது. தன்னால்தான் என்று தெரிந்தது. தனக்காக அத்தனை உறவுகளிடமும் மோதி நிற்பவர் இன்று தன்னிடம் கெஞ்சிக்கொண்டு நிற்பதை காண சகிக்கவில்லை அவளுக்கு.​

“நல்லா தூங்கலையாப்பா?” என்றெழுந்து அமர​

“என் பாப்பாக்கு என் மேல் கோபமோனு நினைச்சு தூக்கம் வரலடா” கேட்டதும் மனம் கனத்தது. ஓர் இரவில் ஆள் பாதியாகிவிட்டதுபோல் தோன்ற​

“என் அப்பா மேல எனக்கு என்ன கோபம் வந்திடப்போகுது?” புன்னகைத்தாள்.​

“உனக்கு தெரியாம மாப்பிள்ளை…”​

“மகளுக்கு தந்தை ஆற்றும் கடமைதானே! இதுல நான் ஏன் கோபப்படனும்?” சகஜமாக அவள் சொன்னதும் அவரின் முகம் சூரியனை கண்டு மலரும் தாமரையாய் மலர்ந்தது​

“அப்போ கோபம் இல்லத்தானே?”​

“இல்லவே இல்லை”​

“அப்போ சரி… இன்னொரு உண்மையையும் சொல்லிடுறேன். உன்னை பெண் பார்க்க அவங்க நாளைக்கு வரல” கேட்டதும் அவள் மனதில் பூச்சாரல் வீச “ஆமாவா?” என்று கேட்டாள்​

“ஆமாம் பாப்பா அவங்க இன்னைக்குதான் வராங்க” என்ற செய்தியில் விதிர்விதித்து போனாள் “இன்றா? இத்தனை சீக்கிரமாகவா?” குரல் கமர கேட்க​

“ஆமாடா… சொந்தங்க முன் பொய் சொன்னேன் டா. ஏன்னா என் மகளோட விஷேஷத்தில் நஞ்சுள்ளம் கொண்டவங்க வரக்கூடாது!! நல்ல உள்ளங்கள் மட்டும் போதும். அதான் பொய் சொல்ல முடிவெடுத்துட்டேன்”​

“அவங்க கேட்டா!!”​

“இன்றைக்கு நாள் நல்லாயிருக்கு என்று இன்றே வந்துட்டாங்கனு சொல்லிடுவேன் அவ்வளவுதான். சரி பாப்பா நீ குளிச்சி ரெடியாகு, காலை பத்து மணிக்கு வந்திடுவாங்க” அதிர்ச்சியிலிருந்து வெளி வர முடியாமல் அருணாசலத்தை பார்த்தவள்​

“அத்தனை சீக்கிரமாவா?” ஏனோ உடல் நடுங்கியது அவளுக்கு. அதை ஓரக்கண்ணால் கண்டவருக்கு வலித்தது. ஆனால் அவளை இப்படியே விட்டால் வேலைக்காகாது என்று நினைத்துக்கொண்டவர் வெளியே செல்ல முனைய​

“வரவங்க யார் அப்பா?” குரலில்தான் அத்தனை நடுக்கம்​

“அது வந்து… பையன் பெயர் தர்ஷன்.” என்றவர் அவசரமாக சென்று விட​

“யாரிவன்? பெயரை பாரு தர்ஷனாம்!! தார் போட்ட மூஞ்சிக்கு பாலிஷ் போட்டிருப்பான் போல!! தர்ஷனாம் தர்ஷன். இவன்கிட்ட நான் கல்யாணத்துக்கு ரெடினு யார் சொன்னா? டேய் யார்டா நீ? என் உயிரெடுக்க வந்துக்கிட்டு இருக்க? வாடா வா!! உன் உயிரை நான் எடுக்குறேனா இல்லயானு பார்!!” யாரென்று தெரியாமலேயே அவனை உண்டு இல்லை என வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டாள்.​

 
Last edited:
Top