GG writers
Moderator
உ
நேசம் 8
“கடைசி நிமிடத்தில் விஷயத்தை நம்மிடம் சொல்லுறாங்க என்றால் நாம அவங்களுக்கு முக்கியம் இல்லாதவங்களா போய்ட்டோம்! இல்ல அந்த முக்கியத்துவத்தை நாம நிலைநாட்ட மறந்துட்டோம் என்றுதான் அர்த்தம் குணா. நான் வராமல் இருந்தால்தான் என் முக்கியத்துவம் அவங்களுக்கு புரியும். அதனால மூத்த மருமகனா நீ இங்கேயே இரு. உன் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் என்றும் விட்டு கொடுக்காதே. இதை குமுதாகிட்டயும் சொல்லி வை” குணாவின் தாயார் சொல்லிவிட்டு சென்றிருந்தார்.
“மாமா… அம்மா சொல்லிவிட்டாங்க நாளைக்கு ஏதோ அவங்களுக்கு ஒரு முக்கியமான விஷேஷம் மதுரையில் இருக்காம். அதனால இன்றே மதுரைக்கு கிளம்பிட்டாங்க அவங்களால் வர முடியாதாம்” குணாளனின் குரலில் பணிவு இருந்தாலும் முகத்தில் எள்ளல் இருந்ததை கவணிக்க தவறவில்லை அருணாசலம்.
“ஓ.. அப்படியா மாப்பிள்ளை” என்றவர் அருகில் அமர்ந்திருந்த சிவநேசனை பார்த்து
“நீ பெண் பார்க்க வரபோறவங்ககிட்ட ஒரு வார்த்தை கேளுப்பா… நாளை இல்லனா வேற நல்ல நாள் ஏதும் இருக்கா என்று” கட்டளையிடுவதுபோல் பாசாங்கு செய்ய… சிவநேசனும் தந்தை சொல் கேட்டு அழைத்தவன் சில நிமிடங்கள் பேசிவிட்டு வந்தவன்
“இருக்காம் ப்பா” என்று சொல்ல… அவர்களை மிதப்புடன் பார்த்தான் குணாளன். இதுதான் அவனுக்கும் வேண்டும். ‘வீட்டு மப்பிள்ளையை கேட்காமல் இத்தனை பெரிய விஷயத்தை எப்படி அவர்களாகவே முடிவு செய்யலாம்? அம்மா சொன்னதுபோல் தன் முக்கியத்துவம் குறைந்துவிட்டதோ’ என்று எண்ணி பேச்சை துவங்க… கிடைத்த பதிலில் திருப்தி அவனுக்கு.
தந்தையும் மகனும் எதையோ தீவிரமாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே மாமியார் கொண்டுவந்து காப்பியை அருந்தியவன் “எப்போ வராங்களாம்?” சாவகாசமாய் கேட்க… சிவா மனதுக்குள் மத்தாப்பு வெளிச்சம்
“இன்று… அதாவது இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்களாம்” குணாவிடம் பதில் சொன்னவன் “அப்பா பூவும் பலகாரமும் வாங்கினா போதும்தானே?” பேச்சின் ஜாகை மாற்றிக்கொண்டான் சிவா. ‘என்ன? இன்றா!!’ ஆதிர்வுடன் குணா அமர்ந்திருக்க
முத்தம்மாவை அழைத்த அருணாசலம் “முத்து நம்ம பாப்பாவை பெண் பார்க்க இன்றே வராங்களாம்” என்றதும் அவரும் அதிர
“என்னது!! என்ன சொல்லுறீங்க நீங்க… ஏன் இந்த அவசர மாற்றம்?” படபடப்புடன் கேட்க அருணாசலமோ குணாளனை கைகாட்டி எல்லாம் இவன் செயல் எனும்விதமாக சொல்ல… திடுக்கிட்டான் குணாளன் ‘நான் என்னத்த கண்டேன்’ என்று மனதுக்குள் புலம்ப
“ஓ… மாப்பிள்ளை ஐடியாவா? அப்போ சரியாகத்தான் இருக்கும்” முத்தம்மா புகழாரம் சூட்டியதும் வாயெல்லாம் பல்லாக மாமியாரை பார்த்தவன்
“மூத்த மருமகன் நான்தானே பார்க்கனும் அத்தை” தன் முக்கியத்துவத்தை அடிக்கல் நாட்டிவிட்டு மனைவியிடம் விஷயத்தை பகிர சென்றுவிட்டான்.
“கிழிச்சான்!!” வெறுப்புடன் சிவா சொல்ல…. அதை கண்ட முத்தம்மா நேற்று அவன் பேசியதையும் சேர்த்து கடிந்தார். சலிப்புடன் தலையாட்டியவன்
“அம்மா ஒரு பழமொழி சொல்லுறேன் கேட்டுக்குங்க… என்னதான் முக்கி முக்கி வச்சி குளிப்பாட்டினாலும் ஊர்க்குருவி ஊர்க்குருவிதான் பருந்து பருந்துதான். பருந்துக்கு இறையை கொத்திக்கிட்டு போய் சாப்பிட்டாதான் அதுக்கு நிம்மதி ஆனா ஊர்க்குருவிக்கு அப்படியில்ல. எது கிடைக்குதோ அதை தின்னு நிம்மதியா இருக்கும்” என்றவன் கிளம்பிவிட்டான்.
“என்னங்க இவன் இப்படி பழமொழியை தலைகீழா சொல்லிட்டு போறான்?”
“உன் பையன்தானே… உன்னை மாதிரிதானே இருப்பான். நீ முதல்ல பாப்பாவை தயார் படுத்து” இன்னும் ஒரு மணி நேரமே இருக்க மனைவியை துரிதப்படுத்தினார்.
“ஏங்க… நேத்துலேர்ந்து கேட்கிறேன் யாரு பையன்?” சட்டென கேட்க
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க முத்து… பார்த்துக்க… நான் கடைவரைக்கு போயிட்டு வரேன். பேச நேரமில்ல” என்றவர் கிளம்பினார். இல்லை இல்லை தப்பித்து ஓடினார்.
‘இந்த மனுசனோட..’ அலுத்துக்கொண்டாலும் சின்னவளுக்கு நல்லது நடக்கப் போவதை எண்ணி அவர் மனம் நெகிழ்ந்திருந்தது. விறுவிறுவென சின்னவளின் அறைக்கு நுழைய… ஜன்னலின் திண்டில் அமர்ந்திருந்தவளின் விழிகள் துளசி மாடத்தை வெறித்துக்கொண்டிருந்தது.
முதலில் அதிர்ந்த முத்தம்மாவின் மனம் பின்பு பிசைந்தது. ‘விமலு தம்பி வந்தா அங்கேதானே நின்னு பேசிக்கிட்டு இருக்கும்!’. சட்டென மகள் அருகில் சென்றவர் அவள் தோள் தொட.. திரும்பி பார்த்தவள் புன்னகைத்தாள். ஜீவனில்லா புன்னகை. ஒளியில்லா பார்வை. பெற்றவளின் வயிறு கலங்கியது.
‘இவளை இப்படியே விட்டா மதர் திரேசாவோட வாரிசு நானுதான்னு சொல்லிக்கிட்டு திரிவா!! இருடி வரேன்..”
“உன் அப்பா சொன்னதை கேட்டியாடி?” முத்தம்மா புதிர் போட, புருவ முடிச்சுடன் தாயை ஏறிட்டவள் பார்வையால் என்னவென கேட்க
“வர போகும் பையன் யாருனு கேட்டா சொல்லுறதுக்கு நேரமில்ல பார்த்து தெரிஞ்சுக்கோனு சொல்லிட்டு கடைக்கு போறார். என்னடி இது அநியாயம்?”
“கடைக்கு போற அவசரமா இருக்கலாம்மா”
“அட கூறு கெட்டவளே இம்மாம் நீளமா கடைக்கு போறேன்னு சொல்ல முடிஞ்சவருக்கு ஒத்தை வார்த்தையில் பையன் பேரு சொல்ல முடியாதா!!” ‘அதானே’ என்று மனதில் நினைத்தவளுக்கு தந்தையை நினைத்து சிறு புன்னகை வந்தது.
“இந்த வயசிலும் குடுகுடுனு ஒடுறார். பழமொழி ஒன்னு சொல்வாங்க தும்பி பறந்தால் தூரத்தில் மழைனு. இந்த கிழட்டு தும்பி எந்த மழையை வரவைக்க போகுதுனு நானும் பார்க்கிறேன்!!” முந்தானையை உதறி இடுப்பில் சொருகியவரை பார்த்து கலகலவென சிரித்தாள் நிலா.
“ம்மா… சந்தடி சாக்குல அப்பாவை கிழவன்னு சொல்லிட்டீங்க!!” வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க
“தாத்தாவாக போறாரு… கிழவன் இல்லாம இன்னும் குமரனா உங்கப்பா!!” மகளின் சிரிப்பை நிறைவுடன் பார்த்துக்கொண்டே இன்னும் பேச
“அதுசரி… அதை ஒரு கிழவி சொல்லுது பாரேன்” அப்பொழுதுதான் சிவாவுடன் உள்ளே நுழைந்த அருணாசலம் சம்பாஷனையில் இணைந்துக்கொண்டார். மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் வார… நிலாவின் அருகில் வந்த சிவா
“அம்மா அப்பா ரொம்ப ஸ்வீட்ல?” என்று ரசித்து சொல்ல… ஒப்புதலாய் தலையசைத்தவள் “என் அண்ணனும் ஸ்வீட்தான்” என்றாள். புன்னகைத்தவன் அவள் கையில் பூச்சரத்தை வைத்தான்.
“என் குட்டி நிலா பெரியவளாகிட்டானு நினச்சா ஆச்சரியமா இருக்கு” என்றவன் தலையில் கை வைத்து கோதிவிட்டு சென்றுவிட்டான்.
வெளியே கார் வரும் சத்தம் கேட்டதும் அனைவரும் அவசரமாக வாசலுக்கு செல்ல ‘வந்துட்டான் தர்பூசணி தர்ஷன்’ பொருமியவளின் உடல் வெளிப்படையாகவே நடுங்கியது. கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் மோதிரத்தை இறுக பற்றிக்கொண்டாள்.
“பயமா இருக்கு மாம்ஸ். ப்ளீஸ் பி வித் மீ” மூடிய இமைக்குள் வேண்டுதல்கள் தொடர… யாரோ வரும் அரவம் கேட்டு கண் திறந்தவள் அங்கு நின்றவனை கண்டு அதிர்ந்தாள்.
“நீங்களா??”
“ஆமா நான்தான் ஏன் இந்த அதிர்ச்சி?” புன்னகையுடன் அவன் கேட்க
“தர்ஷன்னு…”
“ம்ம்.. என் பெயர் அதானே… தர்ஷன்… தேவதர்ஷன்” இலகுவாக சொன்னவனை இன்னுமே அதிர்ந்து பார்த்தாள். தேவாதான் தன்னை பெண் பார்க்க வருவான் என்று அவள் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.
“ஏன்?”
“புரியல.. என்ன ஏன்?”
“ஏன் என்னை பெண் கேட்டு வந்தீங்க? அண்ணா வந்து உங்களை…” கெஞ்சினானா என்ற சொல்லை சொல்லமுடியாமல் தவித்து நின்றிருந்தாள்.
“ஆமாம்..” என்று முடித்துக்கொண்டான் தேவா. அதிர்ந்து நின்றவளை பாராததுபோல் நின்றுக்கொண்டான்
‘என்ன? அண்ணன் கெஞ்சினானா?’ அவனின் பதிலில் அவமானம் அவளை தின்றுகொண்டிருக்க
“நா… நான் அண்ணனிடம் பேசிக்கிறேன்” என்றவளை பேச விடாமல் தடுத்தவன்
“ப்ச்!! உன் அப்பாவும்கூடதான்” என்றான். அவன் சொல்லில் மொத்தமாக உடைந்து போனாள்.
‘என்னது!! அப்பாவும் அண்ணாவும் எனக்காக இவனிடம் கெஞ்சினார்களா!!’ உதட்டை அழுந்த கடித்து உணர்வுகளை கட்டுபடுத்தியவள்
“வேண்டாம் என்று சொல்லிடுங்க!!” முகத்தை திருப்பிக்கொண்டாள்
“என்னால் அது முடியாது. என் ஆருயிர் நண்பனையும், என் தந்தைக்கு நிகராக இருக்கும் அங்கிளையும் என்னால் அவமானப்படுத்த முடியாது!!” உறுதியுடன் சொன்னான்.
“ப்ச்!! ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்க. சரி நீங்க சொல்ல வேணாம். உங்க அம்மாவை வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க” பிடிவாதம் பிடித்தாள்
“ஏய்!!” என்று குரலை உயர்த்தியவன் “ஸீ அ… ம்ம்… நிலா எனக்கு அதிகம் பேச பிடிக்காது”
‘ஆமாமாம் இந்த தர்பூசணி ஒன்றிரண்டு வார்த்தை பேசுவதே பெரிசு… இப்போ இத்தனை நீளமாக பேசியதே உலக அதிசயம்தான்’ நினைத்துக்கொண்டாள்.
“என் குடும்பத்தாருக்கு உன்னை பிடிச்சிருக்கு..” அவ்வளவுதான் எனும்வகையில் அவன் திரும்பி செல்ல பார்க்க
“தேவாண்ணா..” என்று அழைத்ததும் சட்டென திரும்பியன் நொடிப்பொழுதில் அவள் அருகில் வந்து சுட்டு விரலை உயர்த்தினான். இத்தனை விரைவில் தன் அருகில் வந்து நிற்பான் என்று எதிர்பாராதவள் நெஞ்சை பிடித்துக்கொண்டாள்.
“இனி என்னை பார்ட்னர் அண்ணா என்றோ இல்ல தேவா அண்ணா என்றோ கூப்பிடாதே!!” எச்சரித்தவனை விழி விரிய பார்த்தாள். யார் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காமல் அமைதியான முகத்துடன் கேட்ட கேள்விக்கு அளவுடன் பதில் கொடுப்பானே. அது இவன்தானா? கேள்வி கேட்ட மனதை அடக்கியவள்
“பூனை போல வந்து போய்க்கிட்டு இருந்த தேவாண்ணாவா ப்ச் இல்ல… இல்ல.. தேவாவா இது? ஆமாம் இது தேவா இல்ல இது தர்பூஸ் அவதாரம் எடுத்த தர்ஷன்” மனதில் பேசுவதாக நினைத்து முனுமுனுத்துவிட… அருகில் நின்றிருந்தவனின் காதில் தெளிவாக விழுந்தது. முகத்தில் சிறுபுன்னகையும் ஒட்டிக்கொண்டது. அதை அவளிடமிருந்து மறைத்தவன்
“அம்மா உன்னை கூப்பிட சொன்னாங்க… அதுக்குதான் வந்தேன். போகலாமா?” என்றவனை குழப்பத்துடன் பார்த்தவள்
“அப்போ நான் சொன்னது எதுவும் செய்யமாட்டீங்க… ஆனா நான் உங்க பேச்சை கேட்டு தலையாட்டி பொம்மைபோல உங்க அம்மாவை பார்க்க வரனும். அப்படித்தானே!! முடியாது!!” கைகட்டி நின்றவள் அவனை முறைக்க… கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“என்னை ரொம்ப பேச வைக்கிற நீ!! ம்ம்… பரவாயில்ல பேச வேண்டியதை பேசிடுறேன்” என்றவனை கண்களால் எரித்தவள்
“நான் பேசதான் சொன்னேன். பேச மாட்டேன்னு சொன்னது நீங்க!!” என்றவள் அவனை பார்க்க அவன் கண்களில் ஏதோ ஒன்று வந்து போனது. என்னவாக இருக்கும்?
“நீ ஒரு கோழை!! நேற்று கேள்வி கேட்ட சொந்தங்களை சமாளிக்க முடியாமல் பொய் பேசியிருக்க!! நீ ஒரு சுயநலவாதி!!” குற்றங்களை அடுக்கியவனை போதும் நிறுத்து எனும் விதமாக கை காட்டியவளின் உதடுகள் கோபத்தில் துடித்தன.
“ஏன் நிறுத்தனும்? நீ சொன்னா நான் கேட்கனுமா என்ன? உண்மை சொன்னா கோபம் வருதோ?” மீண்டும் அவளை உசுப்ப
“என்ன உண்மையை கண்டீங்க” அனல் பறக்க கேட்டாள்
“ஏன் என்னை எல்லாம் பெண் கேட்டு வரக்கூடாதா என்று பொய்யாக வீரவசனம் பேசுனது நீதானே?? தளர்ந்து நிற்கும் உன் அப்பா உனக்கு முக்கியமில்லை. தங்கச்சியை வாழ வச்சிட்டுதான் தனக்கொரு வாழ்வு என்று தவமிருக்கும் அண்ணன் உன் கண்ணில் படல. எல்லோரையும் சமாளிக்க முடியாமல் தத்தளிக்கும் உன் அம்மா ஞாபகத்துக்கு வரல!! உனக்கு முக்கியம் நீ… உன் உள்ளம்… அதில் இருக்கும் நினைவுகள்! அவ்வளவுதான்! அப்போ நீ ஒரு சுயநலக்காரிதானே??” குரலை உயர்த்தாமல் அழுத்தமான குரலில் கேள்வி கணைகள் தொடுக்க…
அந்தோ பரிதாபம் கூர்முனைகள் சரியாக நெஞ்சை குத்தி கிழித்து விட்டன போலும். நெஞ்சை பிடித்துக்கொண்டவள் கண்களை மூடிக்கொண்டாள். ‘சுயநலக்காரி’ என்ற வார்த்தை காதில் தொடர்ந்து கேட்க…. கால்கள் பலமிழந்து போயின போலும். நிற்கமுடியாமல் தள்ளாடியவளை சட்டென தாங்கிக்கொண்டான் தேவா.
“உன்னை காயப்படுத்தனும் என்பது என் நோக்கமல்ல… உண்மையை மட்டும்தான் சொன்னேன். அதுவே உன்னை சுட்டிருச்சு பார்த்தியா?” என்றவனின் குரலில் மென்மை.. அதை உணர்ந்தும் உணராத நிலையில் அவள். மோன நிலை நிமிடங்களை தாண்ட
“ஐ டோண்ட் விஷ் டு டச் யூ பட் எனக்கு வேற வழி இல்லாமல் உன்னை தாங்கிக்கிட்டேன். என் மீது தப்பில்ல நிலா..” கரகரப்பான அவனின் குரலில் திடுக்கிட்டாள் நிலா. அப்பொழுதுதான் அவன் தன்னை தாங்கி நின்றிருப்பதை கண்டவள் சட்டென அவன் கரங்களை தட்டிவிட்டாள்.
“நல்லதுக்கு காலமில்லை என்பதை அடிக்கடி உணர வைக்கிற” என்றான்.
“தொட்டு பேசும் உரிமையை நான் உங்களுக்கு தந்தேனா??”
“எந்த உரிமையில் நான் உன்னுடைய தனிப்பட்ட அறையில் இருக்கிறேன் என்பதை உணர்ந்து பேசினால் நன்றாக இருக்கும்” என்றவனின் வார்த்தைகள் அவள் வாய்க்கு வேலி போட்டது.
கேட்டது தவறுதான் அதுக்காக இப்படி பேசலாமா என்று நினைத்தவள் வெட்டும் பார்வை ஒன்றை வீசிவிட்டு அவனை முந்திக்கொண்டு செல்ல… தேவாவும் பின் தொடர்ந்தான். உதட்டில் சிறு புன்னகை இழைந்தோடியது.
நிலா வருவதை பார்த்ததும் தேவாவின் தங்கை இலக்கியா “அண்ணி” என்று ஓடிவந்து கண்டிக்கொண்டாள். எதிர்பாராமல் இலக்கியா கட்டிபிடித்ததில் சமநிலை தவறியவள் பின்னால் வந்து கொண்டிருந்தவனின் மேல் மோதிவிட… உணர்ந்து விலகும்முன்
“இப்பொழுது யார் உனக்கு என்னை தொடும் உரிமை கொடுத்தது என்றெல்லாம் நான் கேட்கமாட்டேன்மா” காதோரம் உரசி சென்றன அவன் வார்த்தைகள். திடுக்கிட்டவள் அவனை பார்க்க… நல்ல பிள்ளையாய் சிவநேசன் அருகில் நின்றுக்கொண்டவனின் முகத்தில் எதுவோ ஒளிந்துக்கொண்டிருந்தது. என்னவென ஆராய்ச்சியில் இறங்கமுடியாமல் அனைவரும் அவளையே பார்க்க… அவளுள் திண்டாட்டம்.
“வாம்மா நிலா. இலக்கியா இங்கே வா… வந்து இந்த பூவை உன் அண்ணிக்கு வச்சிவிடு” என்று தேவாவின் தாயார் கௌரம்மா சொன்னதும்தான் அண்ணன் கொடுத்த பூவை தலையில் வைக்கவில்லை என்ற ஞாபகம் வர… தன்னையே நொந்துகொண்டவள் தலையை குணிந்துக்கொண்டாள்.
“எங்களுக்கு ஏற்கனவே நிலாவை ரொம்ப பிடிக்கும். பெண் பார்க்க வந்ததெல்லாம் சும்மா பேச்சுக்குதான்” என்ற கௌரம்மா தன் பெரிய மகன் வரதனையும் மருமகள் ரேணுகாவையும் பார்க்க… புன்னகையுடன் இருவரும் கொண்டுவந்த தட்டை அருணாசலம் முத்தம்மா தம்பதியிரிடம் கொடுக்க… கண்களில் நீர்படலம் எட்டி பார்த்தாலும் பிரகாசித்த முகத்துடன் தட்டை பெற்றுக்கொண்டனர்.
ஏதும் செய்ய முடியா நிலையில் தள்ளப்பட்டவள் குடும்பத்தாரை நிமிர்ந்து பார்த்தாள். பெற்றோரின் கண்ணோரம் தோன்றிய அந்த மெல்லிய நீர்தேக்கம் அவளை அசைத்தது. அவர்கள் அருகில் நின்றிருந்த சிவநேசன் ஆர்பாட்டத்துடன் “மச்சாஆஆஆன்!!” என்று கூவி நண்பனை கட்டிக்கொள்ள… அணைப்பில் இருந்தவனின் பார்வை அவளை அளந்தது.
‘கண்ணை நோண்டிருவேன்!!’ கண்களால் எச்சரித்தாள். யாரும் அறியா வண்ணம் ‘செய்துதான் பாரேன்!!” என்ற தெனாவெட்டு பார்வையை பதிலளித்தான் தேவா.
‘ச்சே இவன் என்ன மேக் என்றே தெரியலை… வெ.மா.சூ.சொ இல்லாதவனா இருப்பான் போல!’ மனதில் வைதவள் கௌரம்மா அருகில் வரவும் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
“என் வீட்டுக்கு வரப்போகும் என் மருமகளுக்கு இந்த மாமியாரின் சின்ன பரிசு” என்றவர் ஒரு பெட்டியை கையில் திணிக்க… அதை திறந்து பார்த்தவளின் கண்கள் விரிந்தன… அந்த பெட்டியில் ஆரம், அட்டிகை, ஜோடி வளையல்கள் என அடுக்கியிருக்க… ஐயோ இதை எப்படி ஏற்பது என்று தவித்து கொண்டிருந்தவளின் கரத்தை பற்றியவர்
“என் மூத்த மருமகளுக்கும் இதை போலவே ஒரு செட் நகையோடு சென்று பெண் பார்த்து நிச்சயம் செய்தோம். அதேபோல் உனக்கும் செய்கிறேன். மறுக்காதே” என்றார். நிச்சயம் என்ற சொல்லில் கையிலிருக்கும் நகையோடு மனமும் சேர்ந்து கனத்தது.
இனி அவ்வளவுதான் இல்ல. இனி இவனோடுதான் என் வாழ்வு இல்ல..” மனம் கனக்க பெருமூச்சுடன் தலை நிமிர்ந்தவளின் கண்களில் குமுதா தென்பட்டாள். அவள் பார்வை தன் கையிலிருக்கும் நகைகளின்மேல் வெறித்திருக்க….
‘இவ திருந்தவே மாட்டா’ என்று சலித்துக்கொண்டவளுக்குள் சட்டென ஒரு ஓளி தோன்றியது ‘இதை வைத்தே இவளை என்னால் வெறுப்பேற்ற முடியும்… செய்யலாமா?’ என்று யோசிக்க ‘வை நாட்.. செய்யேன்’ பட்டென மனம் பதில் சொல்லி விட. அவள் மனதின் ஓசை கௌரம்மாக்கு கேட்டுவிட்டது போலும்
“வா தேவா வந்து நிலாவுக்கு இந்த ஆரத்தை போட்டு விடு..” என்று அழைக்க… தேவாவின் பார்வை நிலா மேல் படிந்தது. நிலாவின் பார்வையோ குமுதாவின் மேல் இருந்தது.
“நிறுத்துங்க!!” என்று வந்து நின்றாள் குமுதா.
Last edited: