GG writers
Moderator
உ
நேசம் 9
“வா தேவா வந்து நிலாவுக்கு இந்த ஆரத்தை போட்டு விடு..” என்று கௌரம்மா அழைக்க… தேவாவின் பார்வை நிலா அணிந்திருந்த சங்கிலியில் தொங்கி கொண்டிருந்த மோதிரத்தில் படிந்து மீண்டது
சற்றே தயங்கியவன் அருணாசலத்தையும் முத்தாம்மாவையும் பார்த்து “இல்ல… இப்போ வேணாமே!! திடீரென பெண் பார்க்க வந்து நிச்சயம் செய்வதெல்லாம் எனக்கு ஒகே. பட்…. இதை அக்சப்ட் பண்ண நிலாவுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாமே!! அதற்குள் நகை போடுவது எல்லாம்…” என்றவனை இடைமறித்தாள் குமுதா
“என்ன இது எல்லாம்!! நிறுத்துங்க!!” என்று வந்து நின்றாள் குமுதா. நிலாவின் பார்வையோ குமுதாவின் மேல் கூர்மையாக படிந்தது.
“நடுவில் குறுக்கிடுவதற்கு ஸாரி பட் தேவா சொல்வதுதான் சரி. கல்யாணம் ஆவதற்கு முன் நகை போடுவது எங்க வழக்கத்தில கிடையாது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து போடும் முதல் நகை திருமாங்கல்யமாகதான் இருக்கும்” என்றவளின் பேச்சை குணாளனும் தலையசைத்து ஆமோதித்தான்.
அவன் மனதிலோ வன்மம். திருமணம் முடிந்த இத்தனை காலத்தில் ஒரு தடவையேனும் தன்னை மச்சான் என்று அழைக்காத சிவாமேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு. ‘பார்த்தியா உன் அண்ணனை’ என்று உசுப்பிவிட… சரியான தருணத்தில் களத்தில் குதித்துவிட்டாள் குமுதா.
அப்படி ஏதும் கிடையாது என்று சொல்ல அருணாசலத்துக்கு ஆசைதான் ஆனால்… தேவா குடும்பத்தாரின் முன் மகளை சிறுமை படுத்த முடியாமல் கையாலாகத்தனத்துடன் நின்றிருக்க… முகம் முழுக்க கலவரத்துடன் நின்றிருந்தார் முத்தம்மா.
“ஒத்துக்குறேன் குமுதா. என் பிறந்த வீட்டிலும் அந்த வழக்கம் இல்லைதான். ஆனால் எங்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு அதுவும் நான் அவங்க குடும்பத்தோட மருமகள் என்று உறுதிபடுத்திய பிறகு அவங்க வழக்கத்தை ஏத்துக்கிட்டேன்… அதேபோலத்தானே நிலாவும். இப்போ நிலா எங்க வீட்டு மருமகள். ஒரு மருமகளா எங்க வீட்டு முறையை ஏத்துக்கத்தானே வேணும்” ரேணுகா சொல்ல
“இல்ல..” குமுதா மறுக்க முனைய
“கொஞ்சம் பொறு சொல்லி முடிச்சிடுறேன் குமுதா. என் மாமியாரின் குடும்ப வழக்கப்படி நிச்சயம் முடிந்தவுடன் குலதெய்வத்துக்கு பொங்கல் வைப்பாங்க” என்றவளை இடையிட்டாள் குமுதா
“எங்க குடும்பத்திலும்தான் இருக்கு..” பட்டென குமுதா சொல்லிவிட
“உங்க குடும்பம்னு எதை சொல்லுற பிறந்த வீடா இல்ல புகுந்த வீடா? யார் வீட்டு குலதெய்வத்துக்கு பொங்கல் வைத்தீங்க?” புரியாமல் கேட்பது போல் ரேணுகா பாவலா செய்ய..
‘அடப்பாவி கிராதகி என்னை மாட்டி விட்டுட்டாளே!! இப்போ நான் என்ன சொல்ல? என் வீட்டு குலதெய்வம் என்று பொய் சொல்ல முடியாது. சொல்லிட்டா குணாவின் மரியாதை கெட்டு விடுமே. குணா வேற கௌரவம் பார்ப்பவனாயிற்றே!’ மனதோடு அலறியவள்
“அது… என் வீட்டுக்காரர் வீட்டு குலதெய்வம் கோவில்ல” சிறுகுரலில் சொல்ல
“அதேதான் குமுதா… கல்யாணத்துக்குமுன் புகுந்த வீட்டு வழக்கத்தை நீ எப்படி ஏத்துக்கிட்டீயோ… அதேபோலதான் இதுவும்!!” அமைதியாக குமுதாவின் மூக்கை அறுத்தாள் ரேணுகா.
“தேவா போங்க… போய் நம் வழக்கத்தை செஞ்சிடுங்க” ரேணுகா சொல்ல… நிலாவின் முகத்தை பார்த்தவன்
“வெய்ட் அண்ணி…” என்றான்.
“அ.. நிலா உனக்கு இதில் சம்மதமா?” என்று அனைவரின்முன் கேட்க… கடுகடுவென வந்தது அவளுக்கு. ‘என்னமா நல்லவன் வேஷம் போடுறான் இந்த தர்பூஸ்!!’ மனம் கொந்தளிக்க… எதையும் முகத்தில் காட்டாமல் அமைதியாக நின்றாள்.
ஒரு பக்கம் அவள் மனம் தேவாவை போட்டு தாளித்தாலும் இன்னொரு பக்கம் அவனை தன் வாழ்வில் ஏற்க முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறாள் என்பதுதான் உண்மை. குமுதா எதையாவது செய்து இந்த சம்பந்தத்தை உடைத்துவிடும் நோக்கில் இருப்பதை அறிவாள். அதன் மூலம் தற்சமயத்துக்கு கல்யாணம் என்ற ஒன்றிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைக்கும். ஆனால் அவளால் அதை எண்ணி சந்தோஷப்பட முடியவில்லை.
தேவா இல்லையென்றால் இன்னொரு சோதா வரதான் செய்வான். அந்த சோதாவைவிட தன்னைபற்றி முழுதும் அறிந்த இந்த தேவாவே மேல் என்று மனம் சொன்னாலும் இன்று அவனின் இந்த தர்பூஸ் அவதாரம்…. தாமரை இலை மேல் ஒட்டாமல் தள்ளாடும் நீர் போல தள்ளாட செய்தது. தான் அறிந்த தேவா இவனில்லையே! சரிபட்டு வருமா? எல்லாவற்றிகும் மேலாக விமலனை தன்னிடமிருந்து பிரித்த குமுதாவையும் குணாளனையும் ஜெயிக்க விடுவதா?
ஒரு நிமிடம் ஆனபின்பும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்து தேவாவின் இரத்த அழுத்தத்தை எகிர வைத்தவள் பின்பு சிவநேசனை பார்த்து “எனக்கு சம்மதம் ண்ணா” என்றுவிட்டு ஓரக்கண்ணால் குமுதாவை பார்க்க… அவள் எதிர் பார்த்ததுபோல முகம் சுண்டிபோனது அவளுக்கும் அவள் கணவனுக்கும்.
கேள்வி கேட்ட தன்னை தவிர்த்து சிவாவிடம் பதில் சொன்னவளின் மேல் கோபம் வந்த்து தேவாக்கு. அதே நேரம் அவள் கண்கள் சென்ற திசையை கண்டவன் புரிந்துக்கொண்டான் அவள் நோக்கம்.
‘ஆங்… இதான் வேணும் எனக்கு’ நிலா மனம் குத்தாட்டம் போட அவள் முகம் விகசித்தது. தேவா கண்டுக்கொண்டதை அவள் அறியவில்லை. அழுத்தமான காலடிகளுடன் ஒருவன் தன்னருகில் வருவதை உணர்ந்து அவள் அவனை நிமிர்ந்து பார்க்க…. அருகில் நெருங்கியிருந்தவன் அவளை ஆழ பார்த்துக்கொண்டே ஆரத்தை எடுத்து அணிவித்தான்.
சாதாரணமாக ஒன்றும் அணிவிக்கவில்லை. நின்று நிதானமாக அவனின் விரல்கள் அவளின் தோள் உரசி பின்னங்கழுத்தில் தங்கி குசலம் விசாரிக்க வைத்து விட்டு… பின்பு அவளின் கழுத்து ரோமங்கள் எல்லாம் விரித்த குடைபோல் குத்திட்டு நிற்பதை கண்டு திருப்தியுற்றவன் அவள் காதில் “என்னை இரிடேட் பண்ணா இதுதான் நடக்கும்” என்று கிசுகிசுத்துவிட்டு நல்ல பிள்ளையாக தாயின் அருகில் சென்று நின்றுக்கொண்டான்.
‘என்ன நடந்தது? இவன் என்ன சொல்லிட்டு போறான்?’ யோசித்தவள் விடை கிடைத்துவிட ‘அடப்பாவி தர்பூஸ்!!’ மனம் காறிதுப்பியது.
“அடுத்து கல்யாண தேதி எல்லாம் பேச ஆரம்பிக்கலாமா அண்ணா… வீட்டில் போய் நான் தனி ஆளா நின்று நாள் குறிக்கிறதை விட… இங்கேயே உங்களோடு சேர்ந்து இருவருக்கும் தோதான நாளா பார்த்து முகூர்த்த நாளை ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்..” மறுக்க தோன்றாத பண்பட்ட பேச்சுக்கு அருணாசலம் தலைசைக்க… நிலா அறைக்குள் நுழைந்துக்கொண்டாள். அவளுடன் சேர்ந்து ரேணூகாவும் இலக்கியாவும் நுழைய…
என்ன பேசுவதென்று தெரியாமல் “வாங்க” என்பதுடன் நிறுத்திக்கொண்டாள் நிலா.
“அவ்வளவுதானா? நல்லா ஜோடி சேர்ந்தீங்க… தேவாதான் ஒன்றிரண்டு வார்த்தை அளந்து பேசுவார்னா நீயுமா?” என்று புன்னகைக்க… சேர்ந்து புன்னகைக்க முடியாமல் தடுமாறினாள்.
‘இங்கே மட்டுமல்ல அவன் வீட்டிலும் அளவோடுதான் பேசுவானாமே!! அதுதான் அவன் இயல்போ? பிறகு ஏன் என்னிடம் மட்டும் இந்த மாற்றம்?’ குழம்பி கொண்டிருந்தவளின் கரத்தை மெதுவாக தட்டினாள் இலக்கியா
“ஹாங் என்ன இலக்கியா?” தடுமாறினாள்
“அண்ணா நினைவா?” கேலி பேச… தன் மடத்தனத்தை எண்ணி நொந்துக்கொண்டவள் பொதுவாக புன்னகைத்தாள்
“குமுதா எங்கே நிலா?” மறுபடியும் ரேணுகா கேட்க
“ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருப்பா… நேற்று வளைகாப்பு நடந்துச்சுல்ல… ரொம்ப சோர்வா இருக்கா போல..” நிலா சமாளிக்க
“நல்லதுதான் கல்யாண தேதி ஃபிக்ஸ் பன்ற வரைக்கும் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கட்டும்… பிறகு தகவலா சொல்லிக்கலாம்” தலை குனிந்து கேட்டுக்கொண்டாள் நிலா.
ரேணுகா சொல்லும் அளவுக்கு அவள் மதிப்பை அவளே குறைத்துக்கொண்டாள். இதில் தான் சொல்வதற்கு ஒன்னுமில்லை என்ற எண்ணத்துடன் அமர்ந்திருக்க… சிவநேசன் உள்ளே நுழைந்தான்.
“டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க போல..” என்று எழுந்துக்கொண்ட ரேணுகா இலக்கியாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட… நிலாவின் அருகில் அமர்ந்துக்கொண்டான் சிவா. இருவரிடத்திலும் மௌனம்.
ஓரக்கண்ணால் தங்கையை ஆராய்ந்தான். ‘நகக்கண்களே நீங்கள் எல்லாம் சுகமா’ என்று விசாரித்துக்கொண்டிருந்தாள். கால் விரல்கள் பத்தும் குளிர்ந்துவிட்டன போலும் ஒன்றோடு ஒன்று உரசிகொள்ள வைத்தாள். அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவளின் செயல்கள் அவளின் அமைதியின்மையை எடுத்து சொல்ல… மனதை திடப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தான் சிவா
“என்னை மன்னைச்சிடு நிலாமா!!”
“அண்ணா என்ன இது?” பதறினாள்
“நீ நினைக்கலாம்... நான், அப்பா எல்லாம் உன்னை பாரமா நினைக்கிறோம் என்று”
“இல்லண்ணா அப்படி இல்ல!!”
“அப்படி நினைச்சாலும் தப்பில்லை எங்களோட செயல்… உன்னை கார்னர் பண்ணியது எல்லாம் தப்புதான். எங்கே உன் வாழ்க்கை இப்படி எங்கள் குடை நிழலில் வாழ்ந்திடுவாயோனு ஒரு அச்சம் வந்திடுச்சு மா”
அவள் நினைத்த்துதான்… ஆனால் அதை அண்ணன் வாய்மொழியாய் கேட்க துக்கம் தொண்டையை அடைத்தது.
“எங்களுக்கு அதில் கஷ்டமில்லை ஆனால்… நினைத்து பார்… இப்பொழுதே அம்மா குமுதா பிரெக்னன்னா இருக்கானு அவ செய்ற அராஜகத்தையெல்லாம் உன்னை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக சொல்லுறாங்க… அடுத்து பிள்ளை பிறந்ததும் குறை சொல்லாமல் இருக்க மாட்டாள் குமுதா. அதுக்கும் உன்னைதான் அனுசரிச்சி போக சொல்வாங்க. பின்நாளில் எனக்குனு ஒருத்தி வந்துட்டா… அவளும் ஏதோ ஒரு காரணம் கொண்டு என்முன் ஒன்றும் சொல்லாம… நான் இல்லாத போது ஜாடையாக ஏதாவது சொன்னால் அதுக்கும் அம்மா உன்னைதான் அனுசரிச்சி போக சொல்வாங்க… இத்தனை பேரை அனுசரிச்சி போகும் வாழ்க்கையை வாழதான் நீ பிறந்தாயா? இப்படிப்பட்ட வாழ்க்கைதான் உனக்கு வேண்டுமா?”
“அண்ணா!!”
“இரண்டு வருடம் உன்னை யாரும் தொந்தரவு செய்யல… அவனை மறக்கமுடியாம படிக்க போறேன்னு சொன்ன… தடுத்தவங்களை மீறி உன்னை நானும் அப்பாவும் அனுப்பி வச்சோம். எதற்கு தெரியுமா? கால போக்கில் உன் ரணங்கள் ஆறும்… புது மனிதர்களோடு பேசி பழகும்போது மறப்பாய் மாறுவாய் என்ற எண்ணம் எங்களுக்கு. ஆனா உன் விஷயத்துல நானும் அப்பாவும் தோத்துட்டோம் டா” தளர்ந்து வந்த வார்த்தைகள் அவளை சுட்டது.
“உனக்கென்று ஒரு குடும்பம் இருக்கனும் என்று நாங்க ஆசைப்பட்டது தப்பா நிலாமா?”
‘தப்பில்லைதான்.. என் நன்மைக்கு என்று எனக்கு தெரியிது ஆனா..’ மனம் தவிக்க மறுபடியும் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த மோதிரத்தை அழுந்த பிடித்துக்கொண்டாள்.
“உன்னைப்பற்றி எல்லாம் தெரிந்த தேவாவை நான்தான் தேர்ந்தெடுத்தேன். அவங்க வீட்டிலும் பெண் தேட ஆரம்பிச்சதா அவன் என்கிட்ட சொல்லவும் உடனே உன்னைபற்றி சொன்னேன்” இத்தனை நேரம் விமலன் நினைவுகளோடு தவித்து கொண்டிருந்தவள் தேவாவை பற்றி சொன்னதும் அத்தனையையும் மறந்து சிவாவின் பேச்சை இடைமறித்தாள்
“நீ என்னை கட்டிக்கசொல்லி கெஞ்சினீயா ண்ணா?” பரிதவிப்புடன் அவள் கேட்க
“என்னமா இது? எந்த விதத்தில் நீ குறைஞ்சிட்டே நான் அவன்கிட்ட கெஞ்சறதுக்கு… சொல்லு!! அவன்கிட்ட உன்னை பற்றி சொல்லுபோது அவன் ஒரு கணம் யோசிச்சிருந்தாலும் வேண்டாம்னு நானே சொல்லியிருப்பேன். ஆனா நான் சொன்ன அடுத்த நொடி என் கையை பிடிச்சி சம்மதம் சொல்லிட்டான்.
'கெஞ்சலையா!! அடப்பாவி தர்பூஸ்!! என்னகிட்டயே உன் டிராமாவ காட்டிட்டல..’ மனதோடு கறுவியவள் அடுத்த சந்தேகத்தை கேட்டாள்
“நீ மட்டும்தான் அவனுடன் பேசுனீயா?”
“ப்ச்!! நிலா என்ன இது அவன்.. இவன்னுட்டு..”
“தங்கு ஸ்லீப்பாகுது ண்ணா”
“ம்ம்.. சரி உன் கேள்விக்கு வருவோம். அன்று என்கூட அப்பாவும் வந்திருந்தார்”
“ஓ.. அப்போ இந்த விஷயத்துல பொய் சொல்லல ஆனாலும் கெஞ்சினாங்கனு பில்டப் பண்ணதெல்லாம் ஓவர்டா தர்பூஸ். இரு… உன்னை… இந்த விஷயத்தை நான் சும்மா விட போறதில்ல’ அவள் மனம் தேவாவுடன் சண்டை போட்டு கொண்டிருக்க… சிவா தொடர்ந்தான்
“நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது அவன் இவன்னு கூப்பிட்டுக்கோ… ஏன் வாடா போடானு கூட சொல்லிக்கோ! அதெல்லாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். அது உங்க பிரைவசி” தங்கைக்கு எடுத்து கொடுக்க… அவள் இதழில் வன்ம புன்னகை ஒன்று வந்தமர்ந்தது.
__________
அடுத்த வாரம் நிலாவின் பரீட்சை முடிந்ததும் செமெஸ்டர் ப்ரேக் இருக்க… அந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் என்று முடிவானது. திருமணம் முடிந்தும் கடைசி செமஸ்டர் என்பதால் அவள் படிப்பை தொடர்வதை பற்றி யாரும் பிரச்சினை எழுப்பவில்லை. குமுதா இருந்திருந்தால் வந்திருக்க கூடும். அவள்தான் மூக்கறுக்கப்பட்ட அவமானத்தில் அறைக்குள் நுழைந்துக்கொண்டாளே.
கிளம்புகையில் அனைவரின் முகத்திலும் பரிபூரண சந்தோஷம் மட்டுமே தெரிந்தது. சிவநேசன் பேசி சென்றதிலிருந்து நிலாவும் முடிந்தளவு தேவாவுடனான தன் வாழ்க்கையை மனதவில் ஏற்க முனைய ஆரம்பித்தாள். இதற்குமுன் பாரமாய் இருந்த மனம் சற்று கனம் குறைவதை போல் உணர்ந்தாள்.
ஆனால் கிளம்புகையில் அவனை முறைக்கவும் தவறவில்லை. அதை அவன் பார்த்தால்தானே… உதட்டில் சிறிதளவு புன்னகையுடன் அருணாசலத்திடம் பேசி சென்றவன் காரில் ஏறும் சமயம் ஒரு கணம் அவளை பார்த்துவிட்டு சென்றான்.
‘என்ன பார்வை அது? முறைத்தானா? இல்லையே… கர்வமா? அப்படியொரு கர்வ பார்வையாக தோன்றவில்லையே!! கண்களில் ஒருவித பளபளப்பு தோன்றியதே… அது எதனால்? என்னை வென்றுவிட்ட களிப்பா? ஹ என்னை வெல்ல முடியுமா?’ எண்ணப்பறவை தேவாவை சுற்றியே வலம் வர… அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.
இங்கே முத்தம்மாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல் சிவாவும் அருணாசலமும் முத்தம்மாவுடன் அவளின் அறையை நோக்கி நடக்க… அறையினுள் குமுதாவின் ஆவேசமான குரல் கேட்டதும் அப்படியே நின்றுவிட்டனர்.
“ஒருத்தனை வாழவிடாம செய்திட்டு கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாம சீவி சிங்காரிச்சிக்கிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ண ரெடியா இருக்கா பாருங்க!! எனக்கு பத்திக்கிட்டு வருது!! நான் அத்தனை எடுத்தி சொல்லியும் அவன் கையால ஆரத்தை வாங்கிக்கிட்டு… ச்சே!!” புலம்பி கொண்டிருந்தாள்.
“எப்படி பேசுறா பாருங்க!!” சிவநேசன் முத்தம்மாவிடம் புலம்ப… அவருக்கும் அதிர்ச்சிதான். குமுதாவின் அளவுக்கதிகமான வெறுப்பு ஏன் என்று அவருக்கு புரியவில்லை. கர்பவதிகளுக்கு ஹார்மோன் மாற்றங்களாலும் மூட் ஸ்விங் ஆவது இயல்பு என்று நினைத்திருக்க… எதையோ மனதில் வைத்து பேசுவது போல் தோன்றியது அவருக்கு.
கணவனும் மகனும் குமுதாவிடம் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்வதை கண்டு பல முறை கடிந்திருக்கிறார். குமுதா கொஞ்சம் பொறாமை குணம் கொண்டவள்தான். அதற்காக அவளை ஒதுக்கும் அளவுக்கு இருவரும் நடந்துக்கொள்வது சற்று அதிகப்படி என்றே தோன்ற அவர்களிடம் குமுதாக்காக வாதாடினார். பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை விரும்புபவர். அதனால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பது தவறில்லை என்று சொல்லி வளர்த்தவர். ஆனால் இன்றைய குமுதாவின் பேச்சு அவரால் அப்படியே கடந்து போக முடியவில்லை.
அப்படி என்ன நிலாவின் மேல் இந்தளவு வெறுப்பு? நிலாவின் காதல் விவகாரத்தை தவிற வேறு எதுவும் இருவருக்குள் நடந்திருக்குமோ? சின்னவளுக்கு கல்யாணம் என்றால் இவள் ஏன் கொதிக்கிறாள்? எதுவோ பெரிதாக நடந்திருக்கிறதோ? முத்தம்மாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
சிவநேசனுக்கு தன் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. கதவை தட்டியவன் குமுதாவிடம் நறுக்கென்று கேள்விகள் கேட்க காத்திருக்க… கதவை திறந்த்து என்னவோ குணாளனாக இருக்க… வாயை இறுக மூடிக்கொண்டான்.
வந்த விஷயத்தை அருணாசலம் விவரமாய் சொல்ல வந்து சேர்ந்தாள் குமுதா.
“ஓ கல்யாண தேதியையே ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா? பேஷ்! பேஷ்! இதுதான் உங்க மூத்த மகளுக்கும் மருமகனுக்கும் கொடுக்கும் மரியாதையா?” குமுதா ஆரம்பிக்க
“ஏன் இத்தனை நேரம் ரெண்டு பேரும் வெளியூரிலா இருந்தீங்க? இங்க இருக்கிற ரூமிலிருந்து வெளியே வர முடியலையாமா உனக்கு?” சிவா எகிற
“அவளுக்கு டயர்ட் அதான் ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்தா..” குணாளன் மனைவிக்கு பரிந்து பேச
“அவளுக்கு தானே டயர்ட். நீங்க வந்திருக்கலாமே. வீட்டின் மூத்த மாப்பிள்ளையா முன்னே நின்று பேசியிருக்கலாமே?” இந்த தடவை அருணாசலம் நேரடியாகவே மோத
“என்னப்பா இது? ரெண்டாவது மருமகன் வரும் முன்னமே இவரை குற்றம் சாட்டுற மாதிரி பேசுறீங்க!! என் குறைகளை ஏத்துக்கிட்டு எனக்கு வாழ்வு கொடுத்தவரை கொண்டாடாம அவமானப்படுத்துறீங்க” புது பிரச்சினையை குமுதா கிளப்ப முனைய
“நாங்க அவமானப்படுத்தினோமா? அதை நீ சொல்லாதே!! வீட்டில் உன் தங்கச்சியை பெண் கேட்டு வந்து நிச்சயமும் செய்துவிட்டு மற்றதை பேச ஆரம்பிக்கும்போது நீதானே அறைக்குள் புகுந்துக்கிட்ட… சரி அதை விடு… உனக்கு டயர்ட்… உன் வீட்டுக்காரர் மூத்த மருமகனாய் இங்கேயே உட்கார்ந்து நிலாக்கு நல்லது பேச கலந்திருக்கலாமே!” சிவா பட்டென கேட்டுவிட முகம் கன்றி போனான் குணாளன்.
“ஒரு மாசமா இருக்கிற தங்கை மனசு நோகும்படி பேசலாமா அண்ணா? இப்படி பேசினால் என மனதுக்கு கஷ்டமாக இருக்காதா? நிம்மதியில்லாமல் பிரசவம் பார்க்கதான் இங்கே என்னை அழைச்சி வந்தீங்களா அம்மா?” தன் ஆயுதத்தை வைத்து முத்தம்மாவை தாக்க
“சரி.. சரி.. எல்லோரும் இந்த பேச்சை விடுங்க!! குமுதா இங்கே பார்.. உன் பிரசவம் முடிஞ்சிதான் கல்யாண தேதி கேட்டோம். அவங்கதான் பிரசவத்துக்கு அப்புறம் கை குழந்தையை வச்சிக்கிட்டு நீயும் மாப்பிள்ளையும் அலைய கூடாதுனு யோசிச்சு உன் பிரசவத்துக்கு முன்னமே கல்யாணம் வச்சிக்கலாம்னு முடிவெடுத்தாங்க”
“உனக்காக எல்லோரும் யோசிச்சிதான் செய்றோம்… நீயும் உன் பங்குக்கு நிலாக்கு பேஷா செய். என்ன மாப்பிள்ளை சரியா சொன்னேனா?” என்று அருணாசலம் கேட்க… பதில் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டிக்கொண்டான் குணாளன்.
இங்கே இவர்கள் முட்டி கொண்டிருக்க… அறையில் நிலா அவளின் தர்பூஸுடன் முட்டிக்கொண்டிருந்தாள்.
Last edited: