வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

விண்ணிலும் சிறையெடுப்பேன் விண்மீனே - கதை திரி

Status
Not open for further replies.
பயணம் 1

நள்ளிரவு இரண்டு மணி,
மின்விளக்கின் வெளிச்சத்தில் இருளை கிழித்து ஔிர்ந்துக் கொண்டிருந்த ஆய்வுக் கூடத்தில் இருந்த அனைவரின் விழிகளும் நித்திரைக்கு கெஞ்ச, இருபதுகளின் பாதியில் இருந்த பாவையவள் மட்டும் சோர்வு சிறிதுமின்றி தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடர்ந்த காட்டின் நடுவே வெளி உலகத்தின் கண்ணுக்கு மறைவாக இருந்த ஆய்வுக்கூடத்தில் நேரத்தை கவனத்தில் கொள்ளாது தன் பணியை செய்துக் கொண்டிருந்த பாவையவளை பார்த்த மற்றவர்களுக்கு, "எப்போது இவங்க வேலையை முடிப்பது எப்போது நாம் உறங்கச் செல்வது..." என்று புலம்ப மட்டுமே முடிந்தது.

மனதில் நினைத்ததை எல்லாம் வார்த்தைகளாக பேசும் உரிமை அவர்களுக்கு இல்லை. தங்களுக்கு சொல்லப்படும் வேலையை செய்து முடிப்பது மட்டுமே அவர்களின் கடமை. அதற்காகவே நினைத்து கூட பார்க்க முடியாத அளவு ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

தங்களுக்கு கிடைக்கும் பணத்திற்காகவும், அதன் மூலம் தாங்கள் அனுபவிக்கும் சொகுசு வாழ்க்கைக்காகவும் எதிர்த்து கேள்வி கேட்காமல் அனைத்தையும் செய்துக் கொண்டு இருக்கின்றனர்.

மாதத்தில் இரு நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதி உண்டு. மற்ற நேரங்களில் வெளியுலக தொடர்பு என்பது செல்போன் மற்றும் கணினி வழியாக மட்டுமே. அதற்காக இந்த ஆய்வகத்தில் வேலை செய்பவர்கள் கைதி போல இருக்கின்றார்கள் என்று கூறி விட முடியாது.
வேலை செய்பவர்களுக்கு தேவையான அனைத்தும் ஆய்வகத்தின் வளாகத்திற்குள்ளே கிடைக்கும். எதற்காகவும வெளியேச் செல்லும் தேவை என்பது அவர்களுக்கு இல்லை.

"ஸ்மித் எவ்ரி திங் ஓகே..." என்று தன்னருகில் கேட்ட குரலில் பதற்றம் கொள்ளாமல், தன் கையில் இருந்த நுண்ணிய பாகங்களால் ஆன மிளகு அளவு மட்டுமே இருக்க கூடிய அந்த சிறு பொருளை அதன் இடத்தில் கவனமாக வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்த 'ஸ்மித்' என்று அனைவராலும் அழைக்கப்படும் ஸ்மிருத்தா கண்களில் எச்சரிக்கை மட்டுமே இருந்தது.

ஸ்மிருத்தா பிரம்மன் படைத்த அழகின் மொத்த உருவம் என்று கூறினாலும் அது மிகையல்ல. அழகு நிலைய ஒப்பனை எதுவும் இன்றி ஐந்தரையடியில் சந்தனத்தினால் செய்த சிலை போல இருந்தவள், தொடர் வேலையினால் சற்று மெலிந்து காணப்பட்டாலும் அதுவும் தனி அழகையே அவளுக்கு கொடுத்தது.

இடை தாண்டி வளர்ந்த கார் கூந்தலை செய்யும் வேலைக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டையிட்டிருக்க, அதுவும் அவளுக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது.

"பிரபா உனக்கு எத்தனை தடவை சொல்றது... நான் வேலை செய்யும் போது என்ன கூப்பிடாதன்னு.
கொஞ்சம் கவனம் சிதறியிருந்தாலும் என்னுடைய நாலு வருட உழைப்பு ஒரே நொடியில வீணா போகியிருக்கும்." என்று குரலில் கூடியிருந்த கோபத்தை அப்படியே வெளிப்படுத்த, தன் இரு கைகளையும் சரணடைவது போல உயர்த்திய பிரபஞ்சன்,

"சாரி ஸ்மித்..." என்று எந்த வித அலட்டலும் இன்றி மன்னிப்பு கேட்டவன் தன் கை கடிகாரத்தை காட்டி

"இட்ஸ் கெட்டிங் லேட்... மத்தவங்களுக்கு ரெஸ்ட் வேணும். மீதி வேலைய நாளைக்கு கன்டின்யூ பண்ணிக்கலாம்." என்று பிரபஞ்சன் கூறிய பிறகே நேரம் இரண்டை கடந்திருப்பதை உணர்ந்தாள்.

சுற்றிலும் நின்றவர்களை பார்க்க, அவர்களோ தூக்க கலக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தனர். தலையை அசைத்து பெரும் மூச்சை வெளியிட்டாள்.

"ஓகே... இன்னைக்கு இத்தோட முடிச்சிக்கலாம். டுமாரோ மார்னிங் டென் ஓ க்ளாக் எல்லாரும் இங்க இருக்கணும். நவ் யூ கேன் மூவ்." என்று ஸ்மிருத்தா கூறிய நொடி அனைவரும் அவரவர் இருப்பிடம் நோக்கி விரைந்தனர்.

அனைவரும் வெளியேறியதும் ஸ்மிருத்தா தன்னிடமிருந்த சிறு பொருளை மீண்டும் எடுக்க முயற்சிக்க, அவள் கையை பற்றி தடுத்த பிரபஞ்சன், "ஸ்மித் இப்போ டைம் இரண்டு, உனக்கும் ரெஸ்ட் தேவை..." என்று அமைதியாக கூறினான்.

"நோ பிரபா... இன்னைக்கு இத முடிக்காம என்னால வர முடியாது. நீ வேணும்னா போ... நான் பாத்துக்கிறேன்." என்று தன் வேலையில் கவனமாக, அவளை பற்றி நன்கு அறிந்திருந்தவன் தொந்தரவு செய்யாமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

ஸ்மிருத்தா, பிரபஞ்சன் இருவரும் சில நிமிட இடைவெளியில் ஒட்டி பிறந்த இரட்டையர்கள். அவர்களின் தந்தை ஹர்ஷா இந்தியாவில் முதல் பத்து பணக்காரர் வரிசையில் இருப்பவர். தாய் ஸ்ருதி மரபணு ஆராய்ச்சியாளர்.

பிரபஞ்சன் தந்தையை பின்பற்றி அவர் தொழிலையும், ஸ்மிருத்தா தாயின் வழியை பின்பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்ப, அதற்கு தந்தையின் பண பலம் பேருதவியாக இருந்தது.

கடந்த சில வருடங்களாக ஸ்ருமித்தா மரபணு மாற்றத்தில் தனக்கு தோன்றிய எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்க விரும்ப, அதற்காகவே இந்த ரகசிய ஆராய்ச்சிக்கூடம்.

ஆரம்பத்தில் ஸ்மிருத்தாவின் கருத்தில் உடன்பாடு இல்லாத பிரபஞ்சன், உடன் பிறந்தவளின் மகிழ்ச்சிக்காக சில பல கோடிகள் செலவானால் தான் என்ன என்று தன் தங்கைக்கு உதவ ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் தங்கை விருப்பப்படி செயல்பட அனுமதித்தவனுக்கு கடந்த சில நாட்களாக அவள் மேற்கொள்ளும் ஆரய்ச்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என முடிவுக்கு வந்தவன் அதை எப்படி வியாபாரமாக மாற்றலாம் என யோசிக்க ஆரம்பித்தான்.

ஸ்மிருத்தா தனது உழைப்பை வியாபாரமாக்க விட மாட்டாள் என்று தெரிந்தாலும், தனது பாசத்தால் தங்கையை சமாளித்துக் கொள்ளலாம் என்ற குருட்டு தைரியத்தில், யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் சில முடிவுகளை எடுத்தான்.

இன்று தனது எண்ணத்தை பற்றி தங்கையிடம் பேசி விட வேண்டும் என்றே உடல் சோர்வையும் பொருட்படுத்தாது நள்ளிரவிலும் உறங்காது காத்திருந்தான்.

"எஸ் நான் ஜெயிச்சுட்டேன்." என்று உற்சாகமாக கத்திய தங்கையின் சத்தத்தில் தன் சிந்தனையிலிருந்து வெளி வந்த பிரபஞ்சன் முன் தன் கையில் இருந்த பொருளை காட்ட அவன் விழிகள் நம்ப முடியாத வியப்பில் விரிந்தது.


"இது... இது... எப்படி என்னால நம்ப முடியல..." என்று பிரபஞ்சன் அதிசயித்தான்.

ஸ்மிருத்தா தான் அணிந்திருந்த வெள்ளை நிற கோட் காலரை தூக்கி பெருமை பொங்க, "அது தான் ஸ்மிருத்தா." என்று கூறியவள் தன் கண்டுபிடிப்பை கவனமாக அங்கிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு, தன் கைப்பட எழுதிய குறிப்புகளை ரகசிய அறையில் இருந்த இரும்பு பெட்டகத்தில் பத்திரப்படுத்தினாள்.

வெளியில் வந்த ஸ்மிருத்தா தன் கண்டுபிடிப்பை சிறு ஊசியில் எடுத்து இரும்பு கூண்டில் அடைத்து வைத்திருந்த வெறி பிடித்த சிக்கு (ஸ்மிருத்தா ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் நாய்) உடலில் செலுத்த படிப்படியாக மாற்றம் தெரிய ஆம்பித்தது.

முன்பு ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருந்த சிக்கு ஸ்மிருத்தா செலுத்திய மருந்தின் விளைவால் அமைதியாகி தன்னிடத்தில் அமர்ந்துக் கொண்டது.

சிக்கு அமைதியாகியதும் அதை மின்னணு கம்பிகளுக்கு நடுவே வைத்து பரிசோதனை செய்ய, ஸ்மிருந்த பார்த்துக் கொண்டிருந்த திரை முதலில் 10 என்று இருந்தது படிப்படியாக குறைந்து 0.00008 என்று காட்டியது.

மீண்டும் சிக்குவின் உடலில் இருந்த வெயர்களை அகற்றிவிட்டு அதை அதனிடத்தில் விட்டவள் தனது ஓய்வறைக்குச் சென்று தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு, இலகுவான பருத்தி இரவு உடையில் வெளியே வந்தாள்.

அவள் வரும் வரை பிரபஞ்சன் மனது பலதையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது. அண்ணனின் யோசனை படிந்த முகத்தை பார்த்தபடி வெளியே வந்த ஸ்மிருத்தா "என்ன ஆச்சு பிரபா?" என்று அவன் தோளை தொட்டு கேட்டாள்.

தங்கையை பார்த்தவன் சிறிது யோசனைக்கு பின்பு, "நான் உன் கிட்ட ஒன்னு சொல்லணும்... இத நீ கேட்டு எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு தெரியல. பட் இது எல்லாம் நம்ம நல்லதுக்காக தான்." என்று தயங்கிய படி பேசினான்.

தன்னிடம் பேச எதற்கு தயக்கம் என புரியாமல் பார்த்த ஸ்மிருத்தாவின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

"ஆரம்பத்தில எனக்கு நீ பண்ண போறேன்னு சொன்ன ஆராய்ச்சில பெருசா நம்பிக்கை இல்ல. அதுவும் சில மாசமா என் கிட்ட இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போயிட்டு." என்று தங்கையில் முகம் பார்க்க முடியாமல் தலையை குனிந்து தரையை பார்த்த படி பேச, அவன் முகத்தை நிமிர்த்திய ஸ்மிருத்தா புன்னகைத்தாள்.

"நீ என்ன முழுசா நம்பலன்னு எனக்கு தெரியும். என் துறையில இருக்கிற பெரிய பெரிய ஆராய்ச்சியாளர்கள் கூட நான் செய்ய நினைக்கிறத ஆதாரம் இல்லாம சுலபமா நம்ப மாட்டாங்க.

இதுல நான் என் படிப்பு முடிக்கும் முன் செய்ய நினைச்சத எப்படி நீ நம்ப முடியும். இதுக்காக நீ வருத்தப்படாத." என்று தமயனை ஆறுதல் படுத்த நினைத்தாள்.

"சாரி ஸ்மித் உன் திறமை மேல நம்பிக்கை இல்லாம மிஸ்டர் பஷீர் கிட்ட உன் ஆராய்ச்சியை ### கோடிக்கு விலை பேசிட்டேன்." என்று ஸ்மிருத்தாவின் தலையில் இடியை இறக்கினான்.

தன் சொந்த சகோதரனிடமிருந்து இத்தகைய நம்பிக்கை துரோகத்தை எதிர்பாராத ஸ்மிருத்தாவிற்கு அதிர்ச்சியில் பேச கூட நா எழவில்லை. பத்து வயதில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற வெறி, படிப்பு ஆரம்பித்ததும் உடன் ஆரம்பித்த ஆராய்ச்சி.

அதுவும் கடந்த நான்கு ஆண்டுகளாக தூக்கம் மறந்து, உணவு கூட சரியான நேரத்திற்கு எடுக்காமல் உடலை வருத்தி தான் செய்த தவத்தை விலை பேசிவிட்டு வந்தவன் மீது கடலளவு கோபம் இருந்தாலும் அதை காட்ட ஸ்மிருத்தா விரும்பவில்லை.

அண்ணன் கைகள் மேல் இருந்த தன் கரத்தை மெல்ல விலக்கி தனது ஆய்வுக்கூடத்தில் தனக்கென இருந்த அறைக்கு வந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

வெகு நேரம் தங்கைக்காக காத்திருந்த பிரபஞ்சன் இப்போதைக்கு தங்கையிடம் தன் சமாதானம் எடுபடாது என்பதை புரிந்துக் கொண்டு வெளியேறினான்.

தனதறைக்கு வந்த ஸ்மிருத்தா பித்து பிடித்தது போல அமர்ந்திருந்தாள். விடியலை உணர்த்திய கடிகார ஓசையில் தன்னை மீட்டுக் கொண்டவள் எழுந்து ரகசிய அறையிலிருந்த தனது ஆராய்ச்சி தொகுப்புக்களை சேகரிக்க ஆரம்பித்தாள்.

தான் சேகரித்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் சுற்றிலும் பார்க்க, இருட்டை தவிர வேறு எதுவும் இல்லை.


ஆள் நடமாட்டமில்லா கட்டில் விடியும் நேரம் உலவும் மிருகங்களின் ஓசை செவியில் விழுந்தாலும் எதையும் கருத்தில் கொள்ளாமல் நடந்தவள் தன் ஆராய்ச்சி தகவல்கள் அடங்கிய அனைத்தையும் பத்திரப்படுத்தி முடிக்கும் போது பொழுதும் முழுவதும் விடிய ஆரம்பித்தது.

வேகமாக தன் ஆய்வுக்கூடத்திற்கு வந்தவள் தன் கண்டுபிடிப்பை தன் கையாலே மாற்றி அமைக்க ஆரம்பித்தாள். சொந்த அண்ணன் மீது கொண்ட நம்பிக்கை பொய்த்து போனதில் அவள் யாரையும் நம்ப தயாராக இல்லை.

நாட்கள் யாருக்கும் காத்திராமல் வேகமாக பயணிக்க, உடன்பிறந்தவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதே அரிதாகியது.

ஸ்மிருத்தா தனது ஆராய்ச்சி முடிவை சரி பார்ப்பதிலும், பிரபஞ்சன் தனது தொழில்களிலும் கவனத்தை செலுத்த, அவர்களின் பிரச்சனை பேசப்படாமல் அப்படியே நீர் பூத்த நெருப்பாய் இருந்தது.

சிறு வயதிலே தவறு செய்பவர்களை கண்டால் ஸ்மிருத்தாவிற்கு சுத்தமாக பிடிக்காது. தங்கள் வீட்டில் வேலை செய்பவர் தொடங்கி பள்ளி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் நல்லவர்களாக மட்டுமே இருக்கு வேண்டும் என நினைப்பாள் அவள்.

தவறு செய்தவர்களை தண்டிக்கவும், தண்டனை வாங்கி கொடுக்கவும் சற்றும் யோசிக்க மாட்டாள்.

அவள் நெருங்கிய தோழி உடன் பயின்ற மாணவனிடம் காதலை உரைத்து, அவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கோபத்தில் அவனை பற்றி தவறாக பள்ளி முதல்வரிடம் புகார் அளிக்க, தோழி என்றும் பாராமல் உண்மையை கூறி அவளுக்கு தண்டனை கிடைக்க செய்திருந்தாள்.

"நீ நல்லவளா இருந்தா இந்த உலகமும் அப்படி தான் இருக்கும்ன்னு நினைக்கிறியா. உன்னால எனக்கு மட்டும் தான் தண்டனை வாங்கி தர முடியும்.
உன்னால முடிஞ்சா இந்த உலகத்த மாத்தி காட்டு." என்று அவள் தோழி கூறிய வார்த்தையின் எதிரொலிப்பே ஸ்மிருத்தாவின் ஆராய்ச்சி.

அனைத்து மனிதர்களிடமும் இருக்கும் கெட்ட எண்ணங்களை எப்படி நீக்குவது என தனது பதினென் வயதில் யோசிக்க ஆரம்பித்தவள் தாயின் மரபணு ஆராய்ச்சியை மையமாக கொண்டு தனது எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தாள்.

இயற்கையாக மனிதனிடம் காணப்படும் மூர்க்க குணத்தை கூட குறைத்து மென்மையான குணமுடையவராக மாற்ற முடியும் என்பதை தனக்கு தானே நிரூபிக்கவே அவளுக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது.

ஸ்மிருத்தாவின் ஆராய்ச்சிக்கு அவள் ஒரே நேரத்தில் பயின்ற ஜெனிட்டிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ரோபோட்டிக் இன்ஜினியரிங் படிப்பு பெரிதும் உதவியது. சாதாரண குழந்தைகளை விட அவளின் அபார மூளை செயல்படு திறனை பார்த்து கல்வித்துறை அளித்த சிறப்பு சலுகையே இரண்டு பட்டப் படிப்பை ஒரே நேரத்தில் முடித்தது.

அவள் ஆராய்ச்சியின் முதல் படியாக மனிதனின் மரபணுவில் உள்ள தீய எண்ணங்களை அளவிட உதவும் கருவியையும் கண்டறிந்தாள். அடுத்ததாக மரபணு மாற்றத்தின் மூலம் தீய எண்ணங்களை அழிக்க முடியும் என தனக்கு தானே நிரூபித்தாள்.

தன் ஆராய்ச்சிக்காக பயன்படுத்திய விஷம் நிறைந்த பாம்பு, வெறி நாய், தேனீ இன்னும் பல உயிரினங்களை பயன்படுத்தி அதில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டினாள். இதனால் விஷம் நிறைந்த விலங்குகள் கூட தீமை விளைவிக்கும் தங்கள் குணத்திலிருந்து மாறியது.

ஸ்மிருத்தா தனது ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் இன்னும் சில மாற்றங்கள் செய்த பின்னே உலகின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டிருந்தாள். அது மனித மூளையின் உட்புகுந்து செயல் திறன்களை கட்டுப்படுத்தும் மருந்தை செலுத்த கூடிய நுண்கருவி.

தனது ஆராய்ச்சி சரியானவர்கள் கையில் கிடைத்தால் மனித குலத்திற்கு தரும் நன்மையை விட, தீயவர்கள் கையில் கிடைத்தால் விளைவிக்கும் தீமைக்கு வாய்ப்பு அதிகமாக உண்டு என தெரிந்தே ஆரம்பித்தாள்.

டாக்டர் பஷீர் வேறு யாரும் அல்ல, இந்தியாவில் பிறந்து உலக நாடுகளை எல்லாம் வியக்க வைத்த மாபெரும் விஞ்ஞானி. அவரிடம் மாணவராக சேர உலகின் பல மூலையிலிருந்து ஆட்கள் தயாராக இருக்க, அவரோ ஸ்மிருத்தாவை தனது சிஷ்யையாக தேர்தெடுத்தார்.

ஸ்மிருத்தாவின் மூளை அனைவரையும் விட அதிவேகமாக சிந்திக்கும் திறன் கொண்டதாக இருப்பதே, பஷீர் ஸ்மிருத்தாவை தேர்வு செய்ததன் காரணம்.

சில மாதங்கள் மட்டுமே அவரிடம் பயிற்சி பெற்ற ஸ்மிருத்தா அவரின் படைப்புகள் தவறானவர்கள் கைக்கு விலை போவதை தானாகவே கண்டு விலகி வந்து விட்டாள். அப்படிப்பட்டவரிடம் தன் கண்டுபிடிப்பு கிடைத்தால் நிச்சயம் அழிவு ஏற்படும் என்று உணர்ந்தவள் அதை பாதுகாக்க வழி செய்ய ஆரம்பித்தாள்.

தந்தையின் செல்வாக்கு தனக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று நம்பினாள். ஆனால் சூழ்ச்சி செய்யும் உலகில் அதிகம் தாக்கு பிடிக்க முடியாது என்பது அந்த நல்லவள் விரைவில் உணரும் நாளும் வந்தது.

ஆய்வுக் கூடத்தில் இருந்த அனைவரையும் அனுப்பிவிட்டு தனிமையில் தனது கற்பனைக்கு இறுதி கட்ட உரு கொடுக்க ஆரம்பித்த ஸ்மிருத்தா அண்ணனின் வருகை உணர்ந்தும் திரும்பவில்லை.

"ஸ்மித் ப்ளீஸ் என்ன இந்த ஒரு தடவை மன்னிக்க கூடாதா?" என்று கெஞ்சி கேட்டான்.

தமயனை பார்த்து திரும்பிய ஸ்மிருத்தா "மன்னிப்பா... நீ செய்தது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்கு இன்னும் புரியவே இல்ல. என் கனவு தீமை இல்லாத நல்ல சமுதாயத்த உருவாக்கி காட்டுறது.

இது மட்டும் பஷீர் கைக்கு கிடைச்சிட்டா நம்ம நாடே அழிஞ்சிடும்." என்று ஆத்திரத்தில் கத்தி பேச, அவர்கள் இருந்த இடத்தை துப்பாக்கி ஏந்திய ஐம்பது நபர்கள் சுற்றி வளைத்தனர்.

இரட்டையர்கள் இருவரும் அதிர்ந்து விழிக்கும் போதே வஞ்சகம் நிறைந்த விழிகளுடன் அவர்கள் முன் வந்து நின்றார் டாக்டர் பஷீர்.

பார்ப்பதற்கு முப்பது போல தோன்றினாலும் பின் நாற்பதுகளில் இருப்பவர். அவரின் கண்ணசைவில் ஒருவர் நாற்காலியை எடுத்து வந்து போட, அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவர் பார்வை ஸ்மிருத்தா கையில் இருந்த பொருளின் மேல் படிந்தது.

"வெல் ஸ்மிருத்தா... எப்போ உன் கண்டுபிடிப்ப எனக்கு தர போற." என்று அதிகாரமாக கேட்க, அவரை வெறுப்புடன் பார்த்தவள்.

"எப்பவும் தர முடியாது." என்று அழுத்தமாக கூறிய நொடி, இரட்டையர் இருவர் தலையிலும் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது.

தலையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாமல் துணிந்து நின்றவளை கூர்ந்து பார்த்த பஷீர், தன் ஆட்களிடம் திரும்பி "ஒரு இடம் விடாம தேடுங்க..." என்று கட்டளையிட, அடுத்த சில நிமிடங்களிலே அந்த ஆய்வுக்கூடம் கலவர பூமியாக காட்சியளித்தது.

சிறு இடம் கூட விடாமல் தேடியும் தனக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்ற கோபத்தில் நாற்காலியில் இருந்து எழுந்து வந்தவர் ஸ்மிருத்தாவை ஓங்கி அறைய அவர் விரல் தடங்கள் அவள் கன்னத்தில் பதிந்து இதழ் ஓரத்தில் குருதி வழிய ஆரம்பித்தது.

தங்கையை காக்க வந்த பிரபஞ்சனை பஷீரின் ஆட்கள் பிடித்துக் கொள்ள அவனாலும் நகர முடியவில்லை.

ஸ்மிருத்தா கையில் இருந்த பொருளை தன் பலம் கொண்டு பறித்த பஷீர் சில நிமிட சோதனையிலே அது உண்மையானது அல்ல என கண்டுக் கொண்டான்.

ஸ்மிருத்தாவின் முடியை கொத்தாக பிடித்த பஷீர் "உண்மைய சொல்லு." என கேட்க, தன் வேதனையை மறைத்த படி, மறுப்பாக தலையாட்டினாள்.

அவள் மறுப்பில் வெறிக் கொண்ட பஷீரின் கண்ணசைவில் ஸ்மிருத்தா அருகில் ஆடவன் ஒருவன் வந்து நின்றான்.

இருவருக்கும் இடையே தொட்டுவிடும் தூரமே. அந்நிய ஆண்மகனின் அருகாமை அடுத்து அவன் செய்யப்போகும் செயலை உணர்த்த பெண்ணவள் மனது கலங்கினாலும் வெளியே திடமாகவே நின்றாள்.

காலம் காலமாக துணிந்து நிற்கும் பெண்களை வீழ்த்த ஆணவம் கொண்ட ஆண்களின் கடைசி ஆயுதம் பெண்ணவளின் கற்பு.

வெளியே திடமாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவள் மென்னையான இதயம் பயத்தில் அதிவேகமாக துடித்ததென்னவோ உண்மை தான்.


தன் நிலை எண்ணி முடிவெடுத்தால் ஒட்டு மொத்த உலகமே அழிவின் பாதையில் சென்றுவிடும் என்று தோன்றியது கலக்கத்தை துடைத்தெறிந்தாள்.

உலகத்தின் நன்மையை விட தான் ஒருத்தியின் நலன் பெரிதில்லை என முடிவெடுத்தவள் மனதின் உறுதி அவள் கண்ணிலும் குடிக் கொண்டது.

பஷீர் கட்டளையில் வந்த ஆடவன் ஸ்மிருத்தாவின் மேலுடையில் கை வைத்து இழுக்க, அவள் பருத்தி மேலாடையின் தோள் பக்கம் அவனின் பலத்தில் சிறிது கிழிந்து உள்ளாடை தெரிந்தது.

ஐம்பது ஆண்களுடன் அண்ணனும் இருக்கும் இடத்தில் தான் இருக்கும் நிலை எண்ணி உள்ளுக்குள் மறித்தாலும், வெறி பிடித்த நாய்களின் முன் கலங்காது துணிவுடன் "நீ என்ன செய்தாலும் உனக்கு எதுவும் கிடைக்காது." என்று கூறியவள் 'என்ன' என்பதில் சிறு அழுத்தம் கொடுத்து ஸ்மிருத்தா கூற, அருகில் நின்றவனிடமிருந்து துப்பாக்கியை வாங்கிய பஷீர்

"இந்த ஒரு வாரத்தில நீ எங்கயும் போகல. யார நம்பியும் உன் பார்முலா அண்ட் கண்டுபிடிச்ச மருந்த கொடுத்திருக்க மாட்ட. சோ ரெண்டும் இங்க தான் இருக்கணும். அத நானே கண்டு பிடிச்சிக்கிறேன்." என்று துப்பாக்கியை ஸ்மிருத்தாவை நோக்கி குறி வைக்க, அவளோ கற்பை இழப்பதை விட இறப்பு பெரியதல்ல என்று துணிவுடன் மரணத்தை சந்திக்க நிமிர்ந்து நின்றாள்.

"நோ... வேண்டாம்." என்று தன்னை பிடித்திருந்தவர்களை விலக்கிவிட்டு ஓடி வந்த பிரபஞ்சனின் சத்தத்துடன் "டுமீல்" என்ற துப்பாக்கி தோட்டாவின் சத்தமும் இணைந்துக் கொள்ள, திடீரென்று கண்ணை கூச செய்யும் ஔி அந்த ஆய்வுக் கூடத்தில் தோன்றியது.

அதிகபடியான வெளிச்சத்தில் அனைவரும் தங்கள் கண்களை மூடி திறக்கும் நேரத்தில் ஸ்மிருத்தா, பிரபஞ்சன் இருவரும் மாயமாக மறைந்திருந்தனர்.

அதே நேரம் நாற்காலில் சாய்ந்து நடப்பதை எல்லாம் தன் கணினி திரையில் பார்த்தபடி அமர்திருந்தவனின் முரட்டு உதடுகள் "லெட்ஸ் தி கேம் பிகின் மை மித்து பேபி" என்று மெல்ல முணுமுணுத்தது.


அவன் இசையரசன்...
ஆறடி இரண்டு அங்குலம் உயரத்தில், திராவிட நிறத்தில் ஆண்மையின் இலக்கணமாய் இருந்தவன், தன் முன் நெற்றியில் விளையாடும் முடிகளை அலட்சியமாக தள்ளிவிட்டபடி, அடுத்து செய்ய வேண்டிய செயல்களை திட்டமிட ஆரம்பித்தான்.






ஹாய் மக்களே
கதை படிப்பவர்கள் மறக்காம கமென்ட் பண்ணுங்க. அப்போ தான் கதை எழுதும் எனக்கும் ஒரு உற்சாகம் வரும்.
 
Last edited:
ஹாய் மக்களே...
எனது முந்தைய கதைகளுக்கு ஆதரவு தந்து போன்று இதற்கும் தங்கள் ஆதரவு தர வேண்டும்.

வாரம் மூன்று எப்பி வரும்.
முழு கதையை உடனே தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் அமேசானில் புத்தகத்தை படிக்கலாம்.


அல்லது கதை கேட்ட விரும்பும் நபர்கள் எனது ஆடியோ நாவல் சேனலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 7K வியூஸ் மூலம் எனக்கு அடையலத்தை கொடுத்த கதை. அதனால் கதை கேட்பவர்கள் மறக்காம லைக் பண்ணிட்டு சப்ஸ்க்ரைப் பண்ண மறக்காதீங்க.

 
பயணம் 2


பாரமாக கனத்த இமைகளை பிரிக்க முடியாமல் கஷ்டப்பட்டு விழி திறந்த ஸ்மிருத்தாவிற்கு தான் தன் ஆய்வகம் இல்லாமல் வேறொரு இடத்தில் கட்டிலில் படுத்திருப்பது கருத்தில் பட்டது.

கடைசியாக பஷீர் துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த தோட்டா ஒன்று தன் இதயத்தை உரசிச் செல்லும் முன் ஓடி வந்த அண்ணனும், ஆய்வகத்தில் தோன்றிய வெளிச்சம் மட்டுமே ஸ்மிருத்தாவிற்கு நினைவிருந்தது.

எவ்வளவு யோசித்தும் அதன் பின் நடந்த எதுவும் அவள் நினைவில் இல்லை. மெதுவாக எழுந்து தான் இருக்கும் அறையை நோட்டமிட்டவளுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.

அதே சமயம் அந்த அறை சாதாரணமானதாகவும் தோன்றவில்லை. தன்னை காக்க வந்த பிரபஞ்சன் நிலை என்ன ஆனதோ என்ற பயம் தோன்ற வேகமாக அறையின் கதவை திறக்க கை வைத்தவளுக்கு அது வெளிப்புறம் பூட்டப்பட்டிருப்பதில் சிறிது பதட்டம் தோன்றியது.

தான் கடத்தப்பட்டிருக்கின்றோமோ என்ற அச்சத்தில் சன்னல் கதவை திறந்து பார்த்தவளுக்கு அருகிலேயே வீடுகளும் அதில் மக்கள் நடமாட்டமும் இருப்பது தெரிய, தன்னை கடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகம் மெல்ல மறைந்தது.

குடியிருப்புக்களுக்கு நடுவே கடத்திய யாரையும் அடைத்து வைத்திருக்க மாட்டார்கள் என்று அவள் மூளை கூற, அதன் பிறகே பொறுமையாக தன்னை சுற்றி இருக்கும் பொருட்கள் அனைத்தையும், தான் இருக்கும் இடத்தையும் ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.

தன்னை சுற்றியிருக்கும் பொருட்கள் எல்லாம் பழக்கப்பட்டது போல தோன்றினாலும் அனைத்தும் வித்தியாசமாக இருப்பது போல தோன்றியது.

குளிரூட்டி இல்லாமலேயே அறை குளுமைாக இருப்பதை கவனித்தவளுக்கு தன்னை சுற்றி ஏதோ மர்மம் இருப்பது போல தோன்றியது.

ஸ்மிருத்தா தன் சிந்தனையில் இருக்கும் போதே அறை கதவு திறந்துக் கொள்ள, அழுத்தமான காலடி ஓசையுடன் உள்ளே வந்தான் இசையரசன்.

முதல் பார்வையிலே ஆளுமை நிறைந்த அவனின் தோற்றத்தில் ஒரு நொடி தடுமாறிய ஸ்மிருத்தா, தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு 'நீ யார்? என்பது போல கேள்வியாக பார்க்க, அதை சரியாக புரிந்துக் கொண்டவன்

"ஹாய் ஸ்மிருத்தா. ஐ எம் இசையரசன்... உன்ன மாதிரி நானும் ஒரு சயின்டிஸ்ட். எனக்கு உன்னோட உதவி தேவைப்படுது. அதனால இங்க வர வைச்சேன்." என்று நிதானமாக கூற, எதற்காக என்று கேள்வி தோன்றிய போதிலும், அதை தவிர்த்து,

"அப்போ என்னோட அண்ணன்..." என்று தமயனை நினைத்து ஸ்மிருத்தா பதற்றமாக கேட்டாள்.

"உன் அண்ணன் உதவி எனக்கு தேவையில்லை. ஆனாலும் அவன நினைச்சு நீ கவலைப்பட்டு எனக்கு உதவி செய்ய மறுத்திட்டா என்ன பண்ண. அதனால அவனையும் வர வைச்சாச்சு." என்று இசையரசன் கூறிய பிறகே ஸ்மிருத்தாவிற்கு நிம்மதியாக இருந்தது.

"நீ தயாராகி வந்தா உன் அண்ணன பாக்க போகலாம். அப்படியே உன்ன எதுக்காக இங்க வர வைத்தேன்னு சொல்றேன்." என்று கூறி, அறையின் மறுபக்கம் இருந்த கதவில் கை வைக்க அது திறந்துக் கொண்டது.

கதவில் சில வினாடிகள் செலவிட்டு திரும்பிய இசையரசன் ஸ்மிருத்தாவின் கைகளை பற்றி அதில் வைக்க அவள் கைரேகை பதிவு செய்யப்பட்டது.

"இனி நீ உனக்கு தேவைபட்ட இடத்தில உன் கைரேகையை பயன்படுத்தலாம்." என கூறி தன் கையிலிருந்த பையை அவளிடம் தந்து விட்டு ஸ்மிருத்தாவை பொருள் விளங்கா பார்வை பார்த்து விட்டு வெளியேறினான்.

இசையரசன் வெளியேறியதும் அவன் தந்த பையை திறந்து பார்த்தவளுக்கு எரிச்சலும் கோபமும் ஒரே நேரத்தில் வந்தது. அவளுக்கு தேவையான உடையுடன் உள்ளாடைகளும் இருந்ததே அவள் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் காரணம்.

'இவனிடம் யார் இதையெல்லாம் கேட்டா.' என்று மனதுக்குள்ளே வறுத்து தாளித்தவள் அறிந்திருக்க வாய்பில்லை ஆணவனின் மனதின் நிலையை.

ஸ்மிருத்தாவின் உடை கிழிந்திருப்பதை பார்த்தவன் இன்றைய நிலையில் அவளுக்கு தனது உதவி சங்கடத்தை தர கூடும் என்றாலும் யாரையும் அழைக்க முடியாத நிலையில் அவனே அவளுக்கான உடையை தேர்வு செய்து வாங்கியிருந்தான்.

நீண்ட நாட்களாக படிப்பு,வேலை, ஆராய்ச்சி என தன் கடமை தவறாது, பெண்களை தன்னிடம் அண்ட விடாமல் இருந்தவன், ஸ்மிருத்தாவிற்கான துணியை எடுத்து வைக்கும் போது வருடங்கள் கழிந்த பின்னும் அவன் இளமை உணர்வு தான் இன்னும் புத்துணர்வுடன் இருப்பதை உணர்த்தியது.

இசையரசன் அறையை விட்டு வெளியே வந்த பிறகும் ஸ்மிருத்தா தன் முன்னே இருப்பது போல தோன்றிய மாய தோற்றத்தை என்ன முயன்றும் விரட்ட முடியவில்லை.

"என்ன பொண்ணுடா இவ..." என்று வழக்கம் போல ஸ்மிருத்தாவை பற்றி நினைத்தவன் மனது அவனை கேளாமலே அவள் புறம் சற்று சாய்ந்தது.

முதல் முறை பார்க்கும் போது அவள் மீது தோன்றிய பிரம்மிப்பு இன்றும் அப்படியே இருக்க, அதையும் தாண்டி வேறாக மாறுவதை உணர்ந்து தடுக்க மனதின்றி அந்த உணர்வை ரசிக்க முடிவு செய்தான்.

அவனின் ரசனைக்கு நடுவே தான் செய்து முடிக்க வேண்டிய வேலை நினைவுக்கு வர தலையை கோதி தன்னை சமன் செய்தவன், முயன்று அவளை பற்றி நினைப்பதை ஒதுக்கி வைத்து அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட ஆரம்பித்தான்.

இசையரசன் காட்டிய கதவை திறந்து பார்த்தவளுக்கு அது குளியல் அறையுடன் கூடிய வெறுமையான பெரிய அறையாக மட்டும் தான் தெரிந்தது.

'பாத் ரூம்க்கு எதுக்கு செக்யூரிட்டி லக்.' என்று கேள்வி கேட்டுக் கொண்டே கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்த பின்னே தோள்பட்டை பக்கம் தன் உடை கிழிந்திருந்து தெரிந்தது.

கிழிந்த உடையுடன் அந்நிய ஆடவன் முன் நின்றுக் கொண்டிருந்த தன் நிலையை நிந்தித்துக் கொண்ட ஸ்மிருத்தா, இசையரசன் கொடுத்த உடையை போட மனதில்லை என்றாலும் வேறு வழியின்றி தயாராகி வெளியே வந்தாள்.

அவன் கொடுத்த உடை தனக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதை பார்த்தவளுக்கு மீண்டும் கோபம் பெருக்கெடுத்தது.

"ச்சீ... முதல் வீட்டுக்கு போனதும் இத கழட்டி குப்பையில போடணும்." என கூறிக் கொண்டே வெளியே வந்தவள் அறியாதது அவளின் அனைத்தும் அறிந்தவன் அவன் என்று.

ஸ்மிருத்தா வருவதற்காகவே காத்திருந்த இசையரசன் முன்னே நடக்க, அவனை மனதுக்குள் திட்டியபடி பின் தொடர்ந்தாள். பெண்ணவள் மெல்ல பேசினாலும் அவள் உதட்டசைவை கடை கண்ணால் கண்டவன் கண்டுக் கொள்ளாத பாவனையுடன் நடந்தான்.

தாங்கள் இருந்த அறையை விட்டு வெளியே வந்த பிறகு தான் ஸ்மிருத்தாவிற்கு அவள் இருந்த இடத்தின் விச்சித்திர நிலை கண்ணில் பட்டது.

ஒன்று போல காட்சியளித்த வீடுகளை பார்த்தவளுக்கு மலைப்பாக இருந்தது. வடிவம், நிறம் என அனைத்தும் ஒரே மாதிரியாக பத்து பத்து வீடுகளாக ஏறத்தாழ இருபது வரிசை இருந்தது. சீரான இடைவெளியில் இருந்த வீடுகளுக்கு சுற்று சுவர் என்பது இல்லை.

சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்க கூடிய அமைப்பு அனைத்து வீடுகளிலும் பொருத்தப்பட்டிருப்பதை கண்டவளுக்கு, இந்த குடியிருப்பு வாசிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் காய்கறி மற்றும் பூந்தோட்டமும், முன்புறம் நிழல் தரும் மரங்களுமென பசுமையான சூழலில் அமைந்திருந்தது.

பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் அனைத்தும் தான் இருந்த வீட்டை போல நவீன வசதிகளை கொண்டது என்று புரிந்தது. அதே நேரம் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் எதுவும் இல்லா வகையில் அனைத்தும் இருந்தது.

பத்து நிமிடங்களுக்கு மேலாக நடந்த ஸ்மிருத்தாவிற்கு கால் வலிப்பது போல இருந்தது. இவ்வளவு வசதியான குடியிருப்பில் வாகனமின்றி நடப்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.

"மிஸ்டர் இசையரசன் இன்னும் எவ்வளவு தூரம் இப்படி நடந்து போகணும்? உங்க கிட்ட கார், பைக் எதுவும் இ்ல்லையா?" என்று இசையரசன் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்ததில் மூச்சு வாங்க பேசியவளை பொருள் விளங்கா பார்வை பார்த்தவன், தனது வேகத்தை குறைத்துக் கொண்டான்.

"அவசியம் இல்லாத போது இங்க பெரும்பாலும் எல்லாரும் நடந்து தான் போவோம்." என்று கூற, அதன் பிறகே ஸ்மிருத்தா சாலையில் நடந்து வருபவர்களை கவனித்தாள்.

அனைத்து வீடும் பார்ப்பதற்கு வசதியாக இருந்தாலும் யாரும் வாகனத்தை பயன்படுத்தியதாக தெரியவில்லை. பெரும்பாலும் அனைவரும் நடந்து தான் சென்றனர்.

"ஏன் வசதி இருந்தும் யூஸ் பண்ணாம இருக்காங்க?" என்று முணுமுணுக்க, அது தெளிவாகவே இசையரசன் காதில் விழுந்தது.

"ஆடம்பர பொருளை அத்தியாவசியமா மாத்தினதால தான் இந்த உலகம் பாதிக்கப்படுது." என்று பதிலுக்கு இசையரசனும் முணுமுணுத்தான்.

மேலும் சில நிமிடங்களுக்கு பின் இருவரும் அடுக்கு மாடி கட்டிடத்தின் முன் வந்து நிற்க, பெயர் பலகையை பார்த்ததால் மட்டுமே அது அரசு மருத்துவமணை என்பது ஸ்மிருத்தாவிற்கு நன்கு புரிந்தது.

பளிங்கு போல மினுமினுங்கும் கட்டிடம் அரசு மருத்துவமனையாக இருக்குமா என்ற ஐயம் தோன்றினாலும், அண்ணனின் நினைவில் அதை விரட்டினாள்.

"பிரபாவுக்கு என்னாச்சு?" என்று கலங்கி போய் கேட்க,

"பயப்பட ஒன்னுமில்ல, புல்லட் லைட்டா உன் ப்ரதர் ஷோல்டர உரசினதுல கொஞ்சம் ப்ளட் லாஸ் அண்ட் டைம் ட்ராவல் ஒத்துக்கல. சோ அப்சர்வேஷன்ல இருக்கிறான்." என்று இசையரன் கூறினான்.

தன்னை காக்க தூப்பாக்கி குண்டு காயத்தை தாங்கிய தன் அண்ணனை பார்க்க வேண்டும் என்ற அவசரத்தில் இசையரசன் கூறியதை ஸ்மிருத்தா சரியாக கவனிக்கவில்லை.

கட்டிலில் மயக்கத்தில் இருந்த அண்ணனை கண்டதும் இது நாள் வரை அவன் மீது கொண்ட கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவன் கையை தன் கைகளுக்குள் கோர்த்து வைத்து கண்ணீர் வடித்தாள்.

"இங்க பாரு ஸ்மிருத்தா உன் அண்ணனுக்கு ஒன்னுமில்ல. சாதாரண மயக்கம் தான். இன்னும் கொஞ்ச நேரத்தில நார்மல் ஆகிடுவான்." என்று கூற, அதன் பிறகே மருத்துவமணை தோற்றத்தை கவனித்தாள்.

அனைத்தும் நேர்த்தியாகவும், அதே சமயம் அழகாகவும் இருக்க, இப்படி ஒரு அரசு மருத்துவமனையை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

சுத்தம், அழகு, பணியாளர் நடந்துக் கொள்ளும் விதம் என அனைத்தும் தனியார் மருத்துவமனையை விட பல படி மேலே இருந்தது.

"நான் பார்த்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல விட இது பல மடங்கு பெட்டரா இருக்கு. இது உண்மையாவே கவர்மென்ட் ஹாஸ்பிடல் தானா?" என்று தனது சந்தேகத்தை ஸ்மிருத்தா இசையரசனிடம் கேட்க, அவனும் ஆம் என்று தலையசைத்தான்.

"கவர்மென்ட் ஹாஸ்பிடல் கூட நல்லா இருந்தா மருத்துவம் எப்பவும் வியாபாரமா மாறாது." என கூறியவன், அவள் கேள்விக்கு முழுமையாக பதிலளிக்காமல் "நீ இங்கயே இரு நான் கொஞ்ச நேரத்தில வரேன்." என கூறிவிட்டு நகர, ஸ்மிருத்தா அண்ணன் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

வெள்ளை உடையணிந்து செவிலியர் ஒருவர் பிரபஞ்சன் நரம்பில் மருந்து ஒன்றை செலுத்த அவனிடம் சிறு முனங்கலுடன் அசைவு காணப்பட்டது.

அண்ணனிடம் அசைவு தெரியவும் ஸ்மிருத்தா அருகில் வர அவளை பார்த்து எழ முயன்ற பிரபஞ்சன் கையின் வலியில் முடியாமல் மீண்டும் படுக்கையில் சாய்ந்தான்.

"உனக்கு ஒன்னுமில்லையே?" என்று பிரபஞ்சன் மெல்லிய குரலில் தங்கையை நலம் விசாரிக்க,

"நான் நல்லா இருக்கேன்." என்று ஸ்மிருத்தா பதிலளிக்கும் போதே வேகமாக இசையரசன் அவ்விடம் வந்தான்.

"நம்மள கண்டு பிடிச்சிட்டாங்க, நாம சீக்கிரம் இங்க இருந்து போகணும்." என அவரப்படுத்த, பஷீர் தங்களை பின் தொடர்வதாக நினைத்து இரட்டையர் பதட்டமடைந்தனர்.

மருந்தின் மயக்கம் முழுமையாக தெளியாததில் இன்னும் சரியாக எழுந்து அமர முடியாத பிரபஞ்சனை சக்கர நாற்காலியில் அமர்த்தி இசையரசன் தள்ளிக்கொண்டு வர ஸ்மிருத்தாவும் அவனை பின் தொடர்ந்தாள்.

மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த வாகனத்தை பார்த்ததும் அண்ணன், தங்கை இருவரது விழிகளும் அப்பட்டமான அதிர்ச்சியை காட்டியது.

'சக்கரமே இல்லாம் சோப்பு டப்பா மாதிரி இருக்கிற இது காரு தானா! இந்த காரை எங்க வாங்கியிருப்பான். இவனும் சயின்டிஸ்ட்டுன்னு சொன்னானே ஒரு வேளை இவனே கண்டு பிடிச்சதா இருக்குமோ!' என்று ஸ்மிருத்தா யோசிக்கும் வேளையிலே பிரபஞ்சனை காரில் அமர வைத்து இருக்கைப் பட்டையையும் அணிவித்திருந்தான்.

அண்ணன் அருகில் அமரலாம் என்றால் அந்த இருக்கையோ மிகப்பெரிய பெட்டியை தன் மடியில் வைத்திருந்தது. வேறு வழியின்றி ஸ்மிருத்தா இசையரசனுடன் முன்னே அமர வேண்டியதாகியது.

தரையிலிருந்து ஒரு அடி உயரம் எழுந்து புவி ஈர்ப்பு விசையை மீறி பறக்க ஆரம்பித்த வாகனம் இரட்டையர்களுக்கு வியப்பை தந்தது. ஆனாலும் இசையரசன் விஞ்ஞானி என்பதே மேலும் கேள்வி கேட்காமல் அவன் கண்டுபிடிப்பு என்ற முடிவிற்கு வர வைத்தது.

அவர்கள் புறப்பட்ட சில நிமிடங்களிலே மருந்தின் தாக்கத்தில் பிரபஞ்சன் மீண்டும் உறக்கத்திற்குச் செல்ல, அண்ணனுடன் பேச முடியாமல் செல்லும் பாதையில் கவனத்தை திருப்பினாள்.

ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்த பாதையின் தோற்றம் மாறி மாயலோகம் போல காட்சியளித்தது.

பாதையின் காட்சி மாறியதை கவனித்தவளுக்கு, அதுவரை தரையில் சென்றுக் கொண்டிருந்த வாகனம் சற்று உயர்ந்து பல அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்ததை கூட தாமதமாகவே உணர்ந்தாள்.

தான் உணர்ந்ததை கிரகிக்கும் முன்பே அவள் பார்த்த பசுமையான தரையிலிருந்து பல அடி உயரத்தில் இயற்கையை பாதிக்காத வகையில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் எல்லாம் ஸ்மிருத்தாவின் கற்பனையில் கூட வந்ததில்லை.

கடலில் மிதக்கும் குட்டி குட்டி தீவுகளாக அமைக்கப்ட்டிருக்கும் குடியிருப்புகளும், அவற்றை பாதுகாக்கும் கண்ணாடி கவசங்களும், சாதாரணமாக பறந்து திரியும் சிறிய வகை வானூர்திகளும் திறந்த விழிகளை சிமிட்ட கூட விடவில்லை.

அவள் கண்கள் பார்க்கும் யாவும் 'மார்வல் மூவி பாக்குறத நிறுத்தணும் அதான் நமக்கு இப்படி கனவு வருது.' என்று ஸ்மிருத்தாவை மனதுக்குள் புலம்ப வைத்தது.

"நீ பார்க்கும் எதுவும் கனவு இல்ல. நிஜம் தான்." என்று இசையரசன் கூற, அவனை நம்பாமல் பார்த்த ஸ்மிருத்தா

"அப்போ இது என்ன இடம்." என்று குழப்பத்தில் ஸ்மிருத்தா கேட்டாள்.

"சென்னை..." என்று உடனடியாக இசையரசனிடமிருந்து வந்தது பதில்.

"கொஞ்ச நேரம் நான் மயக்கமா இருந்தா நீங்க சொல்றத எல்லாம் நம்புவேனா. ஒழுங்க கொண்டு போய் என் வீட்டுல விடு. என் டேட் அந்த பஷீர டீல் பண்ணிக்குவார். உங்க உதவிக்கு ரெம்ப நன்றி." என்று கூறிய ஸ்மிருத்தாவை ஓர விழியால் பார்த்தவன்

"நான் ஹாஸ்பிட்டல்ல பேசினத நீ சரியா கவனிக்கலன்னு நினைக்கிறேன். இது சென்னை தான். ஆனா உன்னோட காலம் இல்ல.
டைம் ட்ராவல் பண்ணி உங்க ரெண்டு பேரையும் 2523க்கு கூட்டிட்டு வந்திருக்கேன்." என்று கூற, ஸ்மிருத்தா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.

"இங்க பாருங்க இசை... எங்கள டாக்டர் பஷீர் கிட்ட இருந்து காப்பத்தினதுக்காக நீங்க சொல்ற எல்லாத்தையும் நம்ப முடியாது.
டைம் ட்ராவல் எல்லாம் கதைக்கு வேணா ஒத்து வரும் பட் நிஜ லைப்ல..." என்று கூறி தனது கட்டை விரலை கீழ் நோக்கி சரித்து நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினாள்.

"உன்னோட க்ருவல் ரிடியூஸ்மென்ட் கூட யாரும் இது வர செய்யாத ஒன்னு. அதுவும் மனித மூளையில மெசினின் செட் பண்ணி கன்ரோல் பண்றது யோசிச்சு கூட பாத்திருக்க மாட்டாங்க. அதுக்காக அது பொய்யின்னு சொல்ல முடியுமா?" என்று அவள் செய்த, எதிர்காலத்தில் செய்ய திட்டமிட்ட ஆராய்ச்சி பற்றி கூறினான்.

"இது எப்படி உனக்கு தெரியும். என் அண்ணனுக்கே இத பத்தி முழுசா தெரியாது." என்று தான் யாரிடமும் கூறாது மறைத்து வைத்ததை பற்றி இசையரசன் பேசியதில் சற்று பயந்து பேசினாள்.

"எனக்கு மட்டுமில்ல இந்த உலகத்துக்கே உன் ஆராய்ச்சி பத்தி தெரியும்." என்று கூறி தன் காரில் சில பொத்தானை அழுத்த, அவள் முன் சிறு திரை தெரிந்தது.

"இதுல சயின்டிஸ்ட் ஸ்மிருத்தான்னு உன் பேரை டைப் பண்ணு." என்று இசையரசன் கூற, மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல அவன் கூறியதை செய்தாள்.

ஸ்மிருத்தா என்ற பெயருக்கு இணையம் வழங்கிய தகவலில் அவள் இரு கண்களும் தெறித்து வெளியே விழும் அளவுக்கு விரிந்தது.

ஸ்மிருத்தா என்ற பெயரின் கீழே அவளின் இளமைகாலம் தொடங்கி, அவள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் அதற்கு கிடைத்த விருதுகள் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்ல அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனெனில் அதில் சில அவள் மனதின் எண்ணங்கள். அதை எதிர்காலத்தில் தகுந்த சமயத்தில் செயல்படுத்த காத்திருந்தாள்.

"இந்த காலத்தில நீ எல்லாரும் புகழ்ந்து பேச கூடிய ஒரு சயின்டிஸ்ட்." என்று கூறிய இசையரசனை பார்த்தவள் தன்னை நிலைப்படு்த்திக் கொண்டாள்.

"எதுக்காக என்ன அழைச்சிட்டு வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று கேள்வி கேட்க,

"நீ கண்டுபிடிச்ச நல்லது கெட்டதா மாறாம தடுக்க." என்று இசையரசன் கூறினான்.

"வாட் யூ மீன்..." என்று புரியாமல் கேட்டவளிடம்,

"நல்லது நடக்க நீ உருவாக்கிய பார்முலாவை வைச்சு கெட்டதை உருவாக்க இந்த ஐநூறு வருசத்தில பல முயற்சி நடந்தது. ஆனா எதுவும் வெற்றியடையல. கடைசியா நீ கண்டு பிடிச்ச கருவி முழுசா முடிக்கும் முன்ன நீ..." என்று சிறிது இடைவெளி விட்டவன் "அது எனக்கு இப்போ வேணும்." என்று கேட்ட குரலில் சற்று கட்டளை வெளிப்பட்டதோ என ஸ்மிருத்தா யோசிக்கும் முன் தொடர்ந்து பேசினான்.

"இப்போ நாம உன்னோட லேப்-க்கு தான் போறோம்." என்று இசையரசன் கூறியது தனக்கு முன் இருந்த கட்டிடம் இது உண்மை தான் என்ற சந்தேகத்தை உருவாக்கியது.

ஸ்மிருத்தா தனது ஆராய்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் இருப்பதால் ஆய்வுக் கூடத்திற்கு பெரிதாக எதையும் செய்திருக்கவில்லை.

அதிகபட்டசம் நாற்பது பேர் வேலை செய்யும் அளவிலே அவள் ஆய்வுகூடம் இருந்தது. அதுவே அவள் தேவைக்கு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அவள் கண் முன் இருந்ததோ ஆயிரக்கணக்கானவர்கள் பரபரப்பாக வேலை செய்யும் பரந்து விரிந்த இடம்.

அதன் தோற்றத்தை கண்டு திகைத்து 'அப்பாவோட மொத்த சொத்த வித்தா கூட நம்ம இத உருவாக்கியிக்க முடியாது.' என ஸ்மிருத்தா நினைத்தாள்.

"உன் லேப் அரசாங்க கட்டுப்பாடு இல்லாத சுதந்திர அமைப்பா தான் இன்னைக்கு வரை இருக்கு. இதுல நீ உருவாக்கினது கொஞ்சம் தான். உனக்கு அப்புறம் இத பாத்துக்க ஆரம்பிச்சவங்க செய்த மாற்றங்கள் தான் இது எல்லாம்.
உன் க்ரூவல்டி மெஷின் பர்மிஷன் கொடுத்தா மட்டும் தான் ஒருத்தர் உன் குட்னஸ் லேபை பொறுப்பேத்து வழி நடத்த முடியும்." என்று இசையரசன் விளக்கம் கொடுத்தான்.

சிறு விதையாக தான் இட்ட உழைப்பு மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்பதை பார்த்தவளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை.

"இப்போ இத யார் நிர்வாகம் செய்றாங்க. நான் பார்க்கலாமா?" என்று ஆர்வம் மேலோங்க கேட்ட ஸ்மிருத்தாவை இசையரசன் சிறு புன்னகையுடன் பார்த்தானே தவிர பதிலளிக்கவில்லை.

தன் கேள்விக்கு தலையை சரித்து, முத்து பற்கள் தெரியும்படி லேசாக இதழ் பிரித்து சிரித்தவனின் ஆளுமை நிறைந்த அழகில் தன் கேள்விக்கான பதில் வராததை கூட உணராமல் ஸ்மிருத்தாவின் இதயம் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது.

தனது காரிலிருந்து இறங்கிய இசையரசனை தொடர்ந்து இறங்கிய ஸ்மிருத்தா தன் கனவின் பிரம்மாண்ட வெற்றியை அவள் கண்ணால் பார்த்தாள்.

பிரபஞ்சன் அப்போது தான் விழித்திருக்க அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தான். செல்லும் வழியில் அண்ணனிடம் சுருக்கமாக நடந்ததை கூற, அவனுக்கும் தங்கை கூறியதை நம்புவதை தவிர வேறு வழியில்லாது உடன் சென்றான்.

ஓர் இடத்தில் அசையாது நின்ற இசையரசனின் பார்வை சென்ற திசையில் தங்கள் கவனத்தை செலுத்திய இரட்டையர்கள் இருவரும் ஸ்மிருத்தாவின் உருவ சிலையை கண்டு வியந்து நின்றனர்.

நீல நிற பளிங்கு கல்லால் செய்யப்பட்ட அந்த உருவ சிலையின் மீது சில நொடிகள் பார்வையை நிலைக்க விட்ட இசையரசன் "இந்த பக்கம் வாங்க." என்று கூறி அழைத்துச் சென்றது ஸ்மிருத்தாவின் பழைய ஆய்வுக்கூடத்திற்கு தான்.

காலங்கள் பல கடந்த பின்னும் ஸ்மிருத்தாவின் தனிப்பட்ட ஆய்வகத்தின் அமைப்பு மட்டும் மாற்றப்படாமல் அப்படியே இருந்தது. அனைத்தையும் தொட்டு தடவி பார்த்த ஸ்மிருத்தா இசையரசனிடம்

"இப்பாே சொல்லுங்க... எதுக்காக என்ன எதிர்காலத்துக்கு கூட்டிட்டு வந்தீங்கன்னு." என்று காரணம் கேட்க, எப்படி கூறுவது என தயங்கி, பின் ஒரு முடிவுடன்

"குட்னஸ் லேப் சீஇஓ-வ கொல்லணும்." என்று அழுத்தமான குரலில் ஸ்மிருத்தாவிடம் தான் கூற வேண்டியதை கூறி முடித்தான்.

அதுவரை சிறு மையலுடன் இசையரசனை பார்த்த ஸ்மிருத்தாவின் கண்களில் கனல் கூடியது.

"நோ..." என்று ஒற்றை வார்த்தையில் தன் ஒட்டு மொத்த வெறுப்புடன் மறுப்பை தெரிவித்தவள் நகரும் முன் லேசர் ஔி கதிரால் உருவான சிறையில் இருந்தாள். சக்கர நாற்காலில் இருந்து நகர நினைத்த அண்ணனை தடுத்து நிறுத்தியவள்

"இது ஓல்டேஜ் அதிகமான லேசர். டச் பண்ணா நம்ம கை துண்டாகிடும்." என்று கூறியவள் அசையாது நிற்க பிரபஞ்சனும் தங்கையை நெருங்க முடியாது இருந்தான்.

"நான் சொன்னத செய்தா இன்னைக்கே நீ உன் இடத்துக்கு போயிடலாம்." என்று கூறியவனை வெறுப்புடன் பார்த்த ஸ்மிருத்தா

"நெவர்..." என்று கூற, அவளுக்கு பதிலளிக்கும் முன் இசையரசன் கை கட்டியிருந்த பொருள் நிறம் மாற, அனைத்தையும் மறந்தவனாக அங்கிருந்து விரைந்துச் சென்றான்.

செல்லும் அவனையே பார்த்த ஸ்மிருத்தாவிற்கு மனதின் ஒரு ஓரம் வலிப்பது போல இருந்தது.

இளமை காலம் தொடங்கும் முன்பே ஆராய்ச்சியை ஆரம்பித்தவளுக்கு, யாரிடமும் ஈர்ப்பு தோன்றவில்லை என்பதை விட, யாரையும் கவனித்து பார்ப்பதற்கு நேரம் இருந்ததில்லை என்று கூறலாம்.

ஆராய்ச்சி மட்டுமே உலகம் என்றிருந்த ஸ்மிருத்தாவிற்கு பார்த்த சில நிமிடங்களிலே யாரிடமும் தோன்றாத ஈர்ப்பு இசையரசனிடம் தோன்றியது. அந்த ஈர்ப்பு தோன்றிய சில நிமிடத்திலே கருகியதை அவள் இளகிய மனம் ஏற்க மறுத்தது.



 
பயணம் 3


உலகம் முழுவதும் நல்லது மட்டும் நிறைந்ததாக மாற்ற நினைக்கும் தான் எப்படி ஒரு உயிரை கொல்ல சம்மதிப்பேன் என தன்னை அழைத்து வந்தான் என, இசையரசன் கூறியதை நினைத்து நினைத்து வருந்திய ஸ்மிருத்தா அப்படியே மடங்கி அமர்ந்தாள்.

தங்கையின் அருகிலேயே மெதுவாக அமர்ந்த பிரபஞ்சன் அவள் தோளை தொட்டு ஆறுதல் அளிக்க முடியாது வார்த்தைகளால் முயற்சி செய்ய எதற்கும் அவளிடம் பதிலில்லை.

"ஸ்மித் கவலைப்படாத பாத்துக்கலாம்." என்று வார்த்தைகளை கோர்த்து பேச, அதில் அண்ணனை திரும்பி பார்த்தவள்,

"எப்படி நீ என் முதுகுல குத்தினத பார்த்த மாதிரியா?" என்று கேட்க, தங்கையின் வார்த்தையில் துடிதுடித்த பிரபஞ்சன்,

"நான் உன் நல்லதுக்காக தான் ஸ்மித் எல்லாம் செய்தேன்." என்று பேச, கை உயர்த்தி தடுத்த ஸ்மிருத்தா,

"எது என் உழைப்ப விற்க நினைச்சதா? இல்ல என் லேப் பத்தின ரகசியத்தை பஷீர் கிட்ட சொன்னதா? என்னையும் உன்னையும் தவிர எனக்கு கீழ வேலை பாக்கிறவங்களுக்கு கூட குட்னஸ் லேப் ( Goodness Lap) வழி தெரியாது. பட் பஷீர்...
செக்யூரிடி கேமரா எதுலையும் சிக்காம, ஐம்பது பேரோட வந்து நிக்க உன் உதவி கண்டிப்பா இருந்திருக்கும்." என்று சரியாக கூற, தங்கையை தலை நிமிர்ந்து பார்க்க முடியாத பிரபஞ்சன்,

"உன்ன பார்க்க வழி சொன்னது உண்மை தான். பட் உன்ன காட்டி கொடுக்க நினைக்கல." என்று வருந்தி கூற,

"ப்ளீஸ் பிரபா இத பத்தி பேச வேண்டாம். முதல இங்க இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு பார்ப்போம்." என கூறி யோசிக்க ஆரம்பித்த ஸ்மிருத்தா தன் கழுத்தை மெல்ல தடவி பார்க்க, அவள் கழுத்து சங்கிலி தட்டுப்பட்டது.

தன் கழுத்திலிருந்து மெதுவாக அதை கழட்டி எடுத்த ஸ்மிருத்தா அதிலிருந்த டாலர் அமைப்பில் இருந்த பெட்டியை திறந்து லேசர் ஔிக்கதிர் மீது வைக்க, லேசர் ஔித்தொடர் வரிசை விலகி இருவருக்கும் வழி விட்டது.

"இது நீ கண்டு பிடிச்சதா?" என்று பிரபஞ்சன் வியந்து கேட்க, ஆம் என்று ஸ்மிருத்தாவின் தலை அசைந்தது.

லேசர் சிறையிலிருந்து வெளி வந்த ஸ்மிருத்தா அங்கிருந்த நவீன கால கணினி முன் நின்று அதை இயக்க ஆரம்பித்தாள்.

கடவுச்சொல் கேட்டு வழி திறக்காத கணினியை ஒரு நிமிடம் வெறித்து பார்த்தவள் விரல் ஏதோ ஞாபகத்தில் வேகமாக சில எழுத்துக்களை அழுத்தியது.

அவள் ஆச்சர்யப்படும் விதமாக கணினியின் கடவுச் சொல் முன்பு அவள் பயன்படுத்தியதாக இருந்தது. அதை பற்றி யோசித்து நேரத்தை வீணடிக்காமல் உள்ளே நுழைந்து ஆராய ஆரம்பித்தாள்.

தான் வாழ்ந்த உலகின் கணினிக்கும் இப்போது இருக்கும் உலகின் கணினிக்கும் மலையளவு வித்தியாசம் இருந்த போதும் அவள் ஆராய்ச்சி மூளை விரைவில் அனைத்தையும் உள்வாங்கி செயல்பட வைத்தது.

முதலில் தனக்கு தேவையான சில தகவல்களை எல்லாம் தன் மூளைக்குள்ளே சேகரிக்க ஆரம்பித்த ஸ்மித்தா, இறுதியாக குட்னஸ் லேப்பின் தற்போதைய சிஇஓ யார் என்பதை தெரிந்துக் கொள்ள முயற்சி செய்ய, திரையில் தோன்றிய உருவத்தில் இரட்டையர்கள் அதிர்ந்து நின்றனர்.

யாரோ உள்ளே வரும் ஆரவாரம் கேட்டு திரும்பிய இரட்டையர் இருவரும் மிடுக்காக நடந்து வரும் இசையரசனையும், திரையில் தெரியும் உருவத்தையும் மாறி மாறி பார்த்தனர்.

அவர்கள் அதிர்ந்து நின்ற நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த இசையரசன், திரையில் தெரியும் தனது உருவத்தில் பார்வையை நிலைக்க விட்டபடி,

"வெல்... நான் சொன்னத எப்போ செய்து முடிக்க போற?" என்று சாவகாசமாக கேட்க,

"நீ யாரு? நீயும், குட்னஸ் லேப் சீஇஓ-வும் ட்வின்ஸ்ஸா?" என்று பிரபஞ்சன் கேட்க, சத்தமாக வாய்விட்டு சிரித்தவன் தன் சிரிப்பை நிறுத்தி விட்டு,

"நான் தான் இந்த லேப் சீஇஓ. ஸ்மிருத்தா கொல்ல வேண்டியது என்னை தான்." என்று கூற,

"நீ என்ன லூசா..." என்பது போல இருவரும் அவனை பார்த்து வைத்தனர்.

"நீங்க என்ன லூசுன்னு நினைக்கிறது எனக்கு புரியுது. பட் எனக்கு ஸ்மிருத்தா என்ன கொல்லுறத தவிர வேற வழி தெரியல." என்று உதட்டை பிதுக்கி தோளை குலுக்கி கூற,

"நீ சாகணும்னு முடிவெடுத்தா அதை நீயே செய்ய வேண்டியது தானே. எதுக்காக என்ன ஐநூறு வருசத்துக்கு முன்ன இருந்து அழைச்சிட்டு வரணும்." என்று ஸ்மிருத்தா கேட்க அவள் முன் வந்து நின்றவன்,

"என்னால சாக முடியல. கடந்த பல நூறு வருசமா நானும் சாகணும்னு எவ்வளவோ முயற்சி பண்றேன் ஆனா முடியல. எனக்கு சாவே இல்லன்னு நினைச்சாலே வாழும் ஆசை இல்லாம போயிடுது. இது எல்லாத்துக்கும் காரணம் நீ தான். சோ நீ தான் என்ன கொல்லணும்." என சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த இசையரசன், அடிப்பது போல ஆவேசமாக பேச வேகமாக ஓடி வந்த இருவர் அவனை பிடித்துக் கொண்டனர்.

தன்னை பிடித்திருந்தவர்களிடமிருந்து விடுப்பட்டு ஸ்மிருத்தாவிடம் நெருங்க நினைத்த இசையரசனை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதும் ஸ்மிருத்தா, பிரபஞ்சன் இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

"ஸ்மித் இவன் சொல்ற எதாவது உனக்கு புரியுதா?" என்று கேட்ட பிரபஞ்சனை பார்த்து இல்லை என தலையசைத்தாள் ஸ்மிருத்தா.

"தெரியல... பட் என்னால ஏதோ தப்பு நடந்திருக்கு அது மட்டும் நல்லா தெரியுது." என தமையனுக்கு பதிலளிக்கும் வேளையில் புதியவன் ஒருவன் உள்ளே நுழைந்தான்.

"ஹலோ பிரண்ட்ஸ், டாக்டர் இசையரசன் கொஞ்ச நேரத்தில நார்மல் ஆகிடுவார். அது வரை நீங்க ரெஸ்ட் எடுத்தாலும் ஓகே. இல்ல சுத்தி பார்க்க நினைச்சாலும் சுத்தி பார்க்கலாம்." என்று இசையரசன் போலவே உடையணிந்தவன் கேட்க, என்ன பதில் கூறுவது என தெரியாமல் அவனை பார்த்தபடி நின்றனர்.

இசையரசன் ஒரு கொலை செய்ய தன்னை அழைத்து வந்ததே அதிர்ச்சியாக இருக்க, அதில் தன்னை தானே கொல்ல ஒருவன் நினைத்து பல நூறு வருடம் கடந்து ஒருவரை அழைத்து வந்து கொல்ல முயற்சிக்கின்றான் என்பது பேரதிர்ச்சியாக இருந்தது.

நடப்பது எதுவும் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் கூட தாங்கள் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிந்த ஸ்மிருத்தா, பிரபஞ்சன் இருவரும் யோசனையில் ஆழ்ந்தனர்.

பதிலுக்காக இருவரின் முகம் பார்த்து நின்றவனோ சலிப்பு சிறிதுமின்றி பொறுமையுடன் காத்திருந்தான். நீண்ட நேரத்திற்கு பின் அவனை கவனித்த ஸ்மிருத்தா "நீங்க இன்னும் போகலையா?" என கேட்டாள்.

"என் கேள்விக்கு பதில் கிடைச்சா போயிருப்பேன்." என்று புதியவன் கூற, அவன் முக பாவனையில் ஸ்மிருத்தா புன்னகைத்தாள்.

"உங்க பெயர் என்ன?" என தான் இருக்கும் இடத்தின் உண்மை நிலவரத்தை ஆரம்ப கேள்வி மூலம் விசாரிக்க ஆரம்பிக்க தொடங்கினாள்.

"இனியன்... இசையரசன் சார்க்கு அடுத்தபடி இந்த லேப்பை பார்த்துக்கிறேன்." என்று புன்னகை முகமாகவே கூற, மேலும் சில கேள்விகள் மூலம் தனது சந்தேகத்தை தெளிவுப்படுத்திக் கொண்டவளுக்கு இசையரசன் பொய் உரைக்கவில்லை என புரிந்தது.

"மேம் உங்களுக்கு டின்னர் ரெடி பண்ணட்டுமா?" என இனியன் கேட்க, வேண்டாம் என மறுக்க நினைத்தாலும் காலியான வயிற்றின் நிலை உணர்ந்து சம்மதமாக தலையசைத்தாள்.

"இது நானே என் கையால சமைத்தது. எங்க இசையரசன் சாருக்கு இது ரெம்ப பிடிக்கும்." என கூறி இருவருக்கும் இன்முகமாகவே பரிமாறினான்.

இனியன் கொடுத்த உணவின் பெயர் தெரியவில்லை என்றாலும் ஸ்மிருத்தா அதை ரசித்து உண்ண, அதன் சுவை அவளுக்கு பழக்கப்பட்டதாக தோன்றியது. பிரபஞ்சனுக்கு தான் பழக்கமில்லா உணவு தொண்டையில் இறங்காமல் சதி செய்தது.

"ச்சீ என்ன இது... இத எப்படி சாப்பிட முடியும்?" என்று வெறுப்புடன் கூற, இனியனின் முகம் சுருங்கியது.

இனியன் முகமாறுதலில் அண்ணனை கண்டிப்புடன் பார்த்த ஸ்மிருத்தா "பிரபா..." என அழுத்தி கூற, வேறு வழியின்றி உணவை மருந்து போல விழுங்கி வைத்தான்.

உணவருந்தி முடித்ததும் இருவரையும் ஆய்வகத்தின் மறுபுறம் அழைத்துச் சென்ற இனியன், அவர்களுக்கான அறையை காட்டி ஓய்வெடுக்க கூற, பிரபஞ்சன் உடல் சோர்வின் காரணமான கட்டிலில் விழுந்த நொடி உறங்கியிருந்தான்.

"பழைய லேப் பக்கத்துல இருக்க ரூம்ல யார் இருக்கா?" என தனது பழைய அறையை பற்றி இனியனிடம் ஸ்மிருத்தா விசாரிக்க,

"அது இசையரசன் சார் ரூம். அங்க போக யாருக்கும் அனுமதி கிடையாது." என கூறிவிட்டுச் செல்ல, ஸ்மிருத்தாவிற்கு தன் அறைக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

இனியன் சென்றதும் மெதுவாக யாரின் கவனத்தையும் கவராத வண்ணம் தனது அறையை நோக்கிச் சென்ற ஸ்மிருத்தா, அதன் வாயில் அருகே சற்று தேங்கி நின்றாள்.

கடவுச் சொல் கேட்ட கதவினை முறைத்து பார்த்தவள் இசையரசன் கூறியது நினைவு வந்தவளாக தனது கைரேகையை பதிக்க, கதவும் ஸ்மிருத்தாவின் கைரேகையை ஏற்று வழி விட்டது.

தனது அறையின் தோற்றம் சற்று மாறியிருந்த போதும், அதன் அமைப்பில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை.

தான் உபயோகித்த பொருட்கள் சில அப்படியே இருப்பதை கண்டு தொட்டு பார்த்தவள், அடுத்த அறையில் சுவர் முழுவதும் இருந்த ஓவியத்தில் மெய் மறந்து நின்றாள்.

இசையரசனும் அவளுமாக சேர்ந்து இருப்பது போல சிறிதும் பெரிதுமாக பல புகைப்படங்கள் சுவர் முழுவதையும் அலங்கரித்திருந்தது.

ஒவ்வொரு புகைப்படத்தையும் உற்று பார்த்த ஸ்மிருத்தாவிற்கு சந்தேகத்திற்கு இடமின்றி அதில் இருப்பது தான் என்றும், அதே சமயம் படங்கள் அனைத்தும் பழையது என்றும் புரிந்தது.

எதிர்காலத்தை சேர்ந்தவனுடன் எப்படி தன்னுடைய காலத்தில் புகைப்படம் எடுத்திருக்க முடியும் என்று சிந்திக்கும் வேளையில் இசையரன் இறுதியாக கூறியது நினைவில் வந்தது.

"என்னால சாக முடியல. கடந்த பல நூறு வருசமா நானும் சாகணும்னு எவ்வளவோ முயற்சி பண்றேன் ஆனா முடியல. எனக்கு சாவே இல்லன்னு நினைச்சாலே வாழும் ஆசை இல்லாம போயிடுது. இது எல்லாத்துக்கும் காரணம் நீ தான். சோ நீ தான் என்ன கொல்லணும்." என்று கோபமாக பேசியது நினைவில் வர அவள் ஆராய்ச்சி மூளை இது எப்படி சாத்தியம் என யோசிக்க ஆரம்பித்தது.

யோசனையுடனே சுவரில் இருந்த படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட சில படங்களில் இருவரும் கட்டி அணைத்தும், தோளில் சாய்ந்தும், இருப்பதை பார்த்தவளுக்கு தானா ஒருவனுடன் இப்படி ஒன்றி இருப்பது என்ற ஐயம் தோன்றியது.

இறுதியாக இருந்த மூன்று படங்களை பார்த்த ஸ்மிருத்தா அன்றயை நாளில் உச்சக்கட்ட அதிர்ச்சி நிலையை அடைந்தாள்.








 
 
பயணம் 4


தான் ஒரு ஆடவனுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதையே ஏற்க முடியாத ஸ்மிருத்தாவின் பார்வை, இறுதியாக பார்த்த மூன்று படங்களில் நிலைகுத்தி நின்றது.

ஒன்றில் மோதிரம் அணிந்த தன் விரல்களை அவன் விரல்களுடன் பிணைத்தபடி, இசையரசன் ஸ்மிருத்தாவின் நெற்றியில் முத்தமிடுவது போன்று காட்சியாக்கப்பட்டிருந்தது.

அடுத்த படத்தில் மேடிட்ட ஸ்மிருத்தாவின் வயிற்றை தாங்கி பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்தான் இசையரசன்.

இறுதியாக இருந்த புகைப்படத்தில் உலகையே வென்ற பெருமிதத்துடன் இருவரும் புன்னகைக்க, அவர்கள் இருவரின் இணைந்த கைகளில் இருந்த குழந்தையும் சிரித்துக் கொண்டிருந்தது.

இருபத்தி நான்கு மணி நேரத்தில் தனது வாழ்க்கை இத்தனை திருப்பங்களை சந்திக்கும் என ஸ்மிருத்தா கனவிலும் நினைத்ததில்லை.

முந்தைய நாள் இரவு பஷீர் மிரட்டலில் ஆரம்பித்து, இப்போது தான் இருக்கும் இடம் என அனைத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு இவையனைத்தும் கனவு என யாராவது கூற மாட்டார்களா என்று இருந்தது.

புகைப்படத்தையே வெறித்து பார்த்தபடி நின்ற ஸ்மிருத்தா இசையரசனின் வரவை உணரவில்லை. தன்னை மறந்து நின்றவளிளை பின்புறமிருந்து அணைத்த இசையரசன் அவள் கழுத்தில் இதழ் பதிக்க, திரும்பி பாராமலே அது யார் என்பதை அவளால் உணர முடிந்தது.

தன் கழுத்தில் உரிமையாக பதிந்த முத்தம் அவளுக்கு வெறுப்பை தராமல் வேறு உணர்வை தருவதை எண்ணி பார்த்தவளுக்கு நம்ப முடியாத அதிர்ச்சியே.

பெண்ணவளின் நிலை உணர்ந்து பெருமூச்சுடன் விலகிய இசையரசன், அவள் தோளை பிடித்து அழுத்தி அருகில் இருந்த நாற்காலியில் அமர வைக்க, அவளும் பொம்மை போல அமர்ந்தாள்.

"மித்து..." என்று கனிவாய் அழைத்தவன் குரலில் கனவிலிருந்து விழிப்பவள் போல் இசையரசனை ஸ்மிருத்தா பார்க்க, அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி பிடித்தவன் அவள் கண்களை பார்த்தபடி

"இத எல்லாம் பொய்யின்னு மட்டும் சொல்லிடாத." என்று உயிர் உருகும் குரலில் கூறியவன் வார்த்தைகள் ஸ்மிருத்தாவின் மனதை வலிக்க செய்தது.

"என்ன சுத்தி நடக்கிற எல்லாம் உண்மைன்னு புரிஞ்சாலும், என்னால ஏத்துக்க தான் முடியல." என ஸ்மிருத்தா வெறுமையாக கூற, அவளிடமிருந்து விலகி நின்றவன் நீண்ட பெரும் மூச்சுடன்

"ஓகே பைன்... நீ எதையும் ஏத்துக்க வேண்டாம். ஆனா நான் சொன்னத மட்டும் செய்து கொடு போதும். அடுத்த நிமிடம் நீ உன் இடத்துக்கு போயிடலாம்..." என கூற, அவனை முறைத்த ஸ்மிருத்தா

"என்னால முடியாது." என தீர்க்கமாக கூறினாள்.

"தென் உன்னால உன் காலத்துக்கு போக முடியாது." என்று கூறிய இசையரசனுக்கு புன்னகையை பரிசளித்த ஸ்மிருத்தா,

"என் உலகத்தை விட இந்த உலகம் எனக்கு பிடிச்சிருக்கு. சோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ம்ம் அப்புறம் நீ..." என யோசித்தவள்

"எனக்கு பிடிக்கலன்னு சொல்ல முடியல... பாத்துக்கலாம். போக போக பிடிச்சிரும்." என்று நிதானமாக கூறி முடித்தாள்.

அவளின் வார்த்தையில் கோபமாக எழுந்து நின்றவன், "பிரச்சனை இனி தான் ஆரம்பிக்க போகுது. அத சமாளிக்க தயாரா இரு." என்று தன் குரலில் கனிவு மறைந்து கனல் தெறிக்க இசையரசன் கூற அவன் முன் வந்து நின்று

"பிரச்சனைய பாத்து பயப்பட நான் ஒன்னும் கோழை இல்ல. எது வந்தாலும் என்னால சமாளிக்க முடியும்." என்று உறுதியாக ஸ்மிருத்தா கூற,

"உன் தப்பு என்னன்னு முழுசா தெரிஞ்சா நீயே என்ன கொன்னுடுவ. பாக்கலாம் நீயா? இல்ல நானான்னு?" என சவாலாக கூறிய இசையரசன் பார்வையை தயங்காது எதிர் கொண்டாள்.

தனது பார்வையை ஸ்மிருத்தாவிடமிருந்து விலக்கிக் கொண்ட இசையரசன் குளித்து வேறு உடை மாற்றி விட்டு உறங்க ஆயத்தமாக, அதுவரை ஸ்மிருத்தா இருந்த இடத்தை விட்டு சற்றும் அசையவில்லை.

அசையாது கட்டிலின் அருகில் நின்ற ஸ்மிருத்தாவின் கரம் பற்றி இசையரசன் இழுக்க, எதிர்பாராது நடந்த நிகழ்வை உணரும் முன் ஆணவனின் அணைப்பில் இருந்தாள்.

"நான் சொன்னத செய்யலன்னா என் கூட தான் இருக்கணும்." என்று மெல்ல அவள் காதுகளில் கூற, அவன் மூச்சுக் காற்றின் வெப்பத்துடன், அவன் குளிர்ந்த தேகத்தையும் உணர்ந்தவளால் முன்பு போல இயல்பாக இருக்க முடியவில்லை.

"நமக்கு கல்யாணமாகி எத்தனை வருசம் ஆகுது?" என்று அவனின் கவனத்தை தன்னிடமிருந்து விலக்க ஸ்மிருத்தா இசையரசனிடம் கேட்க,

''இன்னும் முப்பத்தி ஏழு நாளில் ஐநூறாவது வருசம் முடிய போகுது." என்று கூறியவன் வார்த்தையில் சற்று கர்வம் நிறைந்து காணப்பட்டது.

'ஐநூறு வருடம் கடந்த பின்னும் நீ மட்டுமே என் மனதில் இருக்கின்றாய். வேறு யாருக்கும் நான் உன் இடத்தை தரவில்லை' என்பதே அவன் கர்வத்திற்கு காரணம். அவன் கர்வம் ஸ்மிருத்தாவிற்கும் புரிந்தது.

சில மணி நேர பிரிவே ஒன்றித்து வாழும் கணவன் மனைவி இடையே தாபத்தை அதிகரிக்க போதுமானது.

அப்படி இருக்கையில் அன்றில் பறவையாக தன்னுடன் வாழ்ந்தவளை, நீண்ட பல நூறு வருடங்களுக்கு பின் பார்த்த இசையரசனின் தன் நிலையை வார்த்தைகளால் கூற முடியாது செயலில் உணர்த்த ஆரம்பித்தான்.

பெண்ணவள் பூவுடலை மறைத்த ஆடைக்கு விடை கொடுக்க முயன்றபடி அவளுக்கு தனது தாபத்தை கடத்த ஆரம்பித்த இசையரசன் செயலில் வெறுப்பு இல்லையென்ற போதிலும் ஆணவனின் அணைப்பை ஏற்க முடியாத ஸ்மிருத்தா அவனிடமிருந்து விலக நினைக்க, அவளின் முயற்சி அனைத்தும் இசையரசனின் மென்மை கலந்த வன்மை முன் கரைய ஆரம்பித்தது.

ஒருவேளை இசையரசன் செயலில் வன்கொடுமையை உணர்ந்திருந்தால் ஸ்மிருத்தாவின் எதிர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கும், ஆனால் அவனின் ஒவ்வொரு அசைவும் அவனின் காதலின் ஆழத்தை அல்லவா உணர்த்தியது.

எங்கே அந்த காதலில் தான் கரைந்து விடுவோமோ என ஸ்மிருத்தா எண்ணும் வேளையில், அவளை அணைத்திருந்தவன் கரம் தளர்ந்தது.

தன்னவளுடன் காமத்தில் இணைந்து வருடம் பல ஆன போதும் அவள் உடல் மொழி மட்டும் அவன் நினைவில் இருந்து அழியவில்லை. காமத்தில் மூழ்க நினைத்தவனின் காதல் மனது ஸ்மிருத்தாவின் விலகலை உணர்த்த, அவன் கைகள் அதுவாகவே தளர்ந்தது.

அவன் அணைப்பிலிருந்து மெல்ல விலகி கட்டிலில் அமர்ந்த ஸ்மிருத்தா தன் உடையை சரி செய்ய, இசையரசனும் மறுபுறம் திரும்பி நின்று தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வர பெரிதும் முயன்றான்.

சில நிமிடம் கண்களை மூடிய படியே அறைக்குள் நடந்தவனை இரக்கத்துடன் பார்த்த ஸ்மிருத்தாவிற்கு அவனின் ஏமாற்றம் புரிந்தது. முழுவதும் அவனை பற்றி அறியும் முன் தன் மனம் அவன் புறம் சாய்வதை உணர்ந்தவள் அதை தடுக்க நினைக்கவில்லை.

"இசை நாம கொஞ்சம் பேசலாமா?" என கூறி, தன்னருகே அவனை அமர சொல்ல, அவனும் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.

"சோ ஃபார் என் காலத்தில எனக்கு பாய் ப்ரெண்ட்ஸ் இல்ல... எப்படியும் அம்மா அப்பா சொல்ற பையன தான் மெரேஜ் பண்ணிக்கலாம்ன்னு இருந்தேன். இப்போ நீ தான் என் ஹஸ்பெண்ட்ன்னு நீ சொல்லாமலே எனக்கு புரியுது. அப்புறம் நான் இத ஏத்துக்க முயற்சி பண்றேன்.
எனக்கு தேவை நல்லது மட்டும் இருக்கிற உலகம். அதுக்கு தேவையான எல்லாம் இங்க இருக்கும் போது நான் எதுக்காக அங்க போக நினைக்க போறேன்." என்று கூற, அவளை கூர்ந்து கவனித்தான்.

"உன் அம்மா, அப்பா, அண்ணன் இவங்கள நிரந்தரமா உன்னால பாக்க முடியாம போயிடும்." என்று அழுத்தமாக கூற,

"கொஞ்சம் கஷ்டம் தான். அதுக்காக என்னால நீ சொல்ற மாதிரி கொலை செய்ய முடியாது. அப்பா, அம்மா, பிரபா இவங்க மூணு பேரும் என்ன நினைச்சு கவலைபட்டாலும், எனக்காக அவங்க வாழ்க்கையில தேங்கி நிக்க போறது இல்ல.
வருத்தம் இருந்தாலும் கொஞ்ச நாளில் அவங்க லைப்ல மூவ் ஆன் ஆகிடுவாங்க. பட் நீ என்ன நினைச்சிக்கிட்டே ஐநூறு வருசம் இருந்திருக்க. சோ உன் கூட இருந்தே நான் நினைச்சத செய்து முடிக்கிறேன்..." என்று இசையரசனுக்கு குறையாத அழுத்தத்தில் பேசி முடித்தவள் குரலில் அவள் முடிவின் உறுதி தெரிந்தது.

தன் கட்டை விரலால் புருவத்தின் மத்தியில் தேய்த்து யோசிக்க ஆரம்பித்தவன், சில நிமிட யோசனைக்கு பின் தன் கையில் அணிந்திருந்த காப்பு போன்ற பொருளை தொட, அதில் திரை ஒன்று விரிந்தது.

திரையின் மூலம் தனது உதவியாளர் இனியனை அழைத்தவன் "ஸ்மிருத்தா, பிரபஞ்சன் ரெண்டு பேரும் புறப்பட ஏற்பாடு பண்ணு." என கூறி, இனியன் பதிலுக்கு காத்திராமல் திரையை அணைத்துவிட்டான்.

"நீ போகலாம்." என்று அவளை பாராமல் கூறியவன் முகத்துக்கு நேரே வந்து

"நான் போக நினைக்கல." என கூற, அவளை ஒரு கையால் விலக்கி நிறுத்தியவன்

"எனக்கு பயன்படாத ஒன்னு இருந்தா என்ன? இல்லைன்னா என்ன?" என்று கூறியவன் அறையை விட்டு வெளியேறினான்.

இசையரசன் சென்றதும் வெகு நேரம் யோசனையிலே கழித்த ஸ்மிருத்தாவிற்கு தலை வலிப்பது போல இருந்தது.

சூடாக எதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தவள் வெளியே வர, இனியன் கண்ணில் பட்டான். தன் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அவனிடம் கிடைக்க கூடும் என நினைத்த ஸ்மிருத்தா "இனியன்..." என்று அவனை அழைக்க,

"சொல்லுங்க மேம்... எதாவது வேணுமா?" என்று கேட்க,

"என் கேள்விகளுக்கு பதில் வேணும்." என்றவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனிடம் தனியே பேச வேண்டுமென தெரிவிக்க, அருகில் இருந்த அறைக்கு அழைத்து வந்தான்.

"சொல்லுங்க மேம். உங்களுக்கு என் மூலமா என்ன தெரியணும்?" என புன்னகை முகமாக கேட்டான்.

"என்ன சுத்தி என்ன நடக்குது? நானும் இசையரசனும் கணவன் மனைவி என்பது உண்மைன்னா, ஏன் வேற வேற காலத்தில இருக்கிறோம்?
இசையரசன் எதுக்காக தன்னை கொல்ல என்னை அழைச்சிட்டு வரணும்?
அவருக்கு என்ன பிரச்சனை?
இங்க என்னை பின் தொடர்ந்து வரது யார்?" என்று மனதில் தோன்றிய சந்தேகத்தை கேட்டு வைத்தாள்.

"உங்க எல்லா கேள்விக்கும் பதில் என் கிட்ட இல்ல." என இனியன் கூற,

"உன் கிட்ட இருக்கிறத மட்டும் சொல்லு." என்று கோபமாக ஸ்மிருத்தா கேட்க, தனது முகத்தில் இருந்த புன்னகை மறைய ஸ்மிருத்தாவை பார்த்தவன்

"டாக்டர் இசையரசன் நேச்சுரல் ஹியூமன் (இயற்கையான மனிதன்) இல்ல. அவரு ஒரு ஜெனட்டிக் மாடிஃபைடு க்ளோனிங்.(மரபணு மாற்றம் செய்யப்பட்ட க்ளோனிங் மனிதன்)" என்று கூற, ஆராய்ச்சியை வாழ்வாக கொண்டவளுக்கே இனியன் கூறியதை ஏற்க முடியவில்லை.

"ஜெனட்டிக் மாடிஃபைடு க்ளோனிங்கா?" என தனது அதிர்ச்சி மறைக்காது ஸ்மிருத்தா கூற,

"எஸ் அவரு க்ளோனிங் தான். அதுவும் நீங்க உருவாக்கின க்ளோனிங்." என்று இனியன் இடியை அவள் தலையில் இறக்கினான்.

அடுத்து தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சியை ஏற்கும் துணிவின்றி அவள் உடல் தளர தரையில் மடங்கி அமர்ந்தாள்.
 
ஹாய் மக்களே...
கதை எப்படி போகுதுன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்கப்பா. குழந்தை மனசு அப்போ தான் சமாதானமாகும்.


 
Status
Not open for further replies.
Top