தேன் ஸ்வரம்- 1 (b). 🍯
பலத்த கரகோஷ சாரல்களுக்கு நடுவே தலை நிமிர்ந்தபடி நடந்து கொண்டிருந்தவள் அவர்களது வாழ்த்துகளை எல்லாம் சிறு புன்னகையுடன் கடந்து சென்றாள்.
அது பெண்கள் படிக்கும் இளங்கலை கல்லூரி. சுற்றிலும் மாணவிகள் படை சூழ கம்பீர நடையுடன் அந்த அரங்கத்தின் உள்ளே மேடையேறினாள் அவள்.
"வாழ்த்துக்கள் தேன் மொழி.." என்றபடி கையில் சிவப்பு நிற பூங்கொத்தினை கொடுத்து வரவேற்றார் அந்த கல்லூரியின் தாளாளர் ஜான் பீட்டர்.
மரியாதை நிமித்தமாக மற்ற பேராசிரியர்களும் வந்து வாழ்த்துகளை தெரிவிக்க அனைத்தையும் தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டாள்.
"இவங்க தான் மிசஸ் தேன்மொழி.
நம்ம கல்லூரிக்கு புதிதாக வந்திருக்கும் பிரின்சிபால். இந்த சின்ன வயசுலயே இவ்ளோ தூரம் முன்னுக்கு வந்திருக்கிறாங்கான்னா... அதுக்கு காரணம் அவர்களோட விடாமுயற்சியும் கடின உழைப்பும் தான். கண்டிப்பா இவங்க உங்களை போன்ற இளந்தலைமுறையினருக்கு நல்லதொரு முன்னுதாரணமா இருப்பாங்க அப்படிங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை. மிசஸ் தேன்மொழி கேன் யூ கிவ் டூ வார்ட்ஸ்..."
தன்னை பேச அழைத்தவரை இளமுறுவலுடன் எதிர் கொண்டவள் மாணவிகளை பார்த்து பேசத் தொடங்கினாள்.
"ஹாய் மை டியர் பியூட்டி புல் பட்டர்பளைய்ஸ். உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு. என்னடா.. இப்படி சொல்றேன்னு பார்க்கிறீங்களா.. ஏன்னா உங்களோட எனர்ஜி பார்க்கும் போது அய்யோ நானும் திரும்பவும் காலேஜ் படிக்க கூடாதான்னு இருக்கு " என்று சொல்ல அரங்கத்தினுள் மாணவிகளின் கூச்சல். அவர்களை எல்லாம் கையசைப்பில் அடக்கியவள் "அதுலயும் உங்க சிரிச்ச முகம் இருக்கே அப்பப்பா.. சான்சே இல்ல. சோ எப்பவும் இதே போல சிரிச்சிக்கிட்டே இருங்க. அது தான் எங்க எல்லோரட கனவும் கூட..." என்று இயல்பாய் அவர்களோடு நட்புரவோடு உறவாடியவளை அவர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்துப் போனது.
"ஐ லவ் யூ மேம் " கூட்டத்தில் இளம் பட்சிகள் தங்கள் அன்பினை கொட்ட அதில் சுகமாய் நனைந்தாள் தேன்மொழி. "ஐ லவ் யூ டூ " என்று பதில கொடுத்தவள் அதே மகிழ்ச்சியுடன் அன்றைய நாளை கடந்தாள்.
தேன்மொழி. இவளுக்கு தெரியாத ஒன்றே இல்லை எனலாம். சொந்தமாக பொட்டிக், பேக்கரி ஷாப் வைத்து நடத்தி கொண்டிருப்பவள். புதிதாக நர்சரி ஒன்றை கூட ஆரம்பித்திருக்கிறாள்.
ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணி நேரம் பத்தாமல் தொடர்ந்து பல வேலைகளில் தன்னை புகுத்திக் கொள்பவள். ஓய்வென்பது அவளுக்கு பிடிக்காத ஒன்று.
சும்மா ஓயந்திருந்தால் கண்ட நினைவுகளும் சிந்தையில் நிரம்பி கடைசியில் அவனிடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும். அதை மறக்கத் தானே அவள் அத்தனை வித்தைகளையும் கற்று தன் முழு நேரத்தையும் தொழிலிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறாள்.
இதோ இப்போது ஏற்றிருக்கும் கல்லூரி பதவி கூட அதற்காக தானே.. தொழில் தொழில் என்று ஓடுபவளுக்கு இன்றைய இளந்தலைமுறையை கண்டாலாவது வாழ்க்கையில் பிடிப்பு வராதா... என்ற நப்பாசையில் அவளது தாய் மீனாட்சி இந்த வேலையை பரிந்துரைக்க அவளோ தனக்கு கிடைத்த மருந்தாக பற்றிக் கொண்டாள்.
எல்லாம் அவனை மறக்க தான். அவன் ஒருவனை மறக்கத் தான். அவள் வாழ்வையே புரட்டிப்போட்டவனை மறக்கத் தானே. ஆனால் அது நடக்க கூடிய காரியமா?
பூவாய் அவள் இதயத்தில் நுழைந்தவன் சூறாவளியாய் துவம்சம் செய்து சென்றவனை அவ்வளவு எளிதில் மறந்து விட தான் முடியுமா?
எத்தனை மகிழ்ச்சியோடு அவன் கரம் பிடித்தாளோ அதற்கு இரட்டிப்பாய் வேதனையோடு அவன் உறவிலிருந்து வெளியேறியதை எப்படி சொல்ல...
இணை சேர்கையில் வருகின்ற மகிழ்ச்சி ஏன் விட்டு விலகுகையில் வருவதில்லை. காலம் தான் எத்துணை கொடூரமானது. வலிக்க வலிக்க பல ரணங்களை ஆறாத் தழும்பாக விட்டு செல்கிறது.
செல்லும் வழி வேறு வேறாக ஆனப்பின் இவர்களை ஒன்று சேர்க்க காலம் என்னத் திட்டம் தீட்ட போகிறதோ..