அறிவழகன் தனது அலுவலக அறையில் தீவிர சிந்தனையிலிருந்தார். கையிலிருந்த பைலில் சொல்லிய விஷயம் அவருக்கு உவப்பானதாக இல்லை. இது அவர் எதிர்பார்க்காத ஒன்று. ஆனால் யூகித்த ஒன்று. இருந்தும் மனம் சண்டித்தனம் செய்தது.
வாழ்க்கையில் எவ்வளவு தான் பணத்தை சம்பாதித்தாலும் சில விஷயங்களை எத்தனை கோடி கொடுத்தாலும் மாற்ற முடியாதே.
கொட்டிய பாலையும் சிதறிய வார்த்தைகளையும் ஒரு போதும் திரும்ப பெற முடியாதே.
என்றோ நடந்த ஒரு தவறு இலக்கணப் பிழையாகி இன்று வாழ்க்கையையே ஆட்டம் காண வைத்து விட்டதே.
தனக்கு கிடைத்த பாடத்தின் பலனை அவனிடம் காட்டாவிட்டால் அவர் என்ன மனிதர்.
பாவத்தின் பலனை ஒன்று அனுபவிக்க வேண்டும். இல்லை சரிசெய்ய வேண்டும். மனிதனாய் பிறந்தால் இதில் ஒன்றை கண்டிப்பாக தேர்ந்தெடுத்து தானே ஆக வேண்டும். அது தானே விதியின் மந்திரம்.
'அவனுக்கு எவ்வளவு தொல்லை கொடுக்க முடியுமோ அத்தனையையும் செய்தாயிற்று. கோபத்தில் பதிலுக்கு ஏதாவது செய்வான் என்று பார்த்தால் இவன் என்னடாவென்றால் குளத்தில் எரிந்த கல் போல சலனமின்றி இருக்கிறானே..' என்று அவர் புலம்பி கொண்டிருக்க..
அவனோ பதுங்கி நின்று இரையை வேட்டையாடும் யுக்தியில் தெளிவாயிருந்தான். தானாக கனியும் பழத்திற்கு என்ன ருசி இருந்தாலும் கல்லடி பட்ட பழத்தில் தானே அவனுக்கு சுவாரஸியம். தன் உழைப்பு இன்றி வரும் எதையும் அவன் கண் கொண்டு பார்ப்பதே இல்லையே.
மேசையின் மீதிருந்த போட்டோ பிரேமை எடுத்துப் பார்த்த அறிவழகன் "உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரதுன்னு சத்தியமா எனக்கு தெரியலடா. ஆனா கண்டிப்பா உன்னை இறங்கி வர செய்வேன். உங்க ரெண்டு பேரையும் ஒரு வழி பண்ணாம என்னோட உயிர் என்னை விட்டுப் போகாது.." என்று சொல்லியவர் புகைப்படத்தை இருந்த இடத்தில் வைத்தார்.
அந்த புகைப்படத்தில் உத்தமசோழனும் தேன் மொழியும் மண கோலத்தில் ஜோடியாக நின்றபடி புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.
இவர் செய்யப் போகும் குழறுபடியால் அவர்கள் இருவரது வாழ்வும் என்ன ஆகப் போகிறதோ? காலம் ஒன்றே இதற்கு பதில் சொல்லும்.
*****************
தேன் மொழியின் கல்லூரியில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் மாணவி ஒருத்தி பாரதியாரின் கவிதையை தன் அழுத்தமான குரலில் பதிவு செய்துக் கொண்டிருந்தாள்.
"தேடிச்சோறு நித்தம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்கூற்றுக் கிரையானப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
'நினைத்தாயோ..' என்று அந்த மாணவி முடிக்க தேன் மொழியின் நினைவடுக்கில் உத்தம சோழன் வந்து நின்றான்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வலியும் கடமையுமாக காலத்தை கடத்தியவளுக்கு இப்போதெல்லாம் சதா அவனே கண்முன் வருகிறான்.
வீட்டிலிருந்தால் மீனாட்சி ஏதாவது பேசி மனதை கிண்டுவார் என்ற காரணத்திற்காகவே பெரும்பாலும் அவள் வீட்டில் இருப்பதில்லை. அம்மு பிறந்த பின் கூட அவரே குழந்தையை கவனித்துக் கொள்ள அவளுக்கு படிப்பையும் தொழிலையும் தவிர வேறு எதுவும் மனதில் பதியவில்லை. அம்முவும் தன்னை தொல்லை செய்யாமல் பொறுப்பாய் இருக்க அவளுக்கு அவள் கனவை நோக்கி ஓடுவதில் எந்த சிரமமும் இருந்ததில்லை.
ஆனால் அம்மு 'என் தந்தை ஏன் என்னுடன் இல்லை' என்று கேட்டதிலிருந்து தேன்மொழியின் மனம் கொஞ்சம் கலங்கிப் போனது என்பது தான் நிஜம்.
ஒரு வேளை உத்தம சோழன் 'குழந்தை என்னிடம் தான் வளர வேண்டும் என்று சொல்லிவிட்டால்.. ' அய்யோ அது அவளால் நிச்சயம் முடியாதே.
அப்படி ஒரு நிலைமை வருவதற்கு முன் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டாள்.
விழா அரங்கத்திலிருந்து வெளியேறியவள் கால்கள் கல்லூரி கட்டிடத்தின் மேல் தளத்தில் போய் நின்றது.
நாலா பக்கமும் தென்னை மரத்தின் குளுமை கண்களை நிரப்ப குளிர்ந்த காற்றை ஆழ்ந்து சுவாசித்தாள். அது அவள் மன உஷ்ணத்தை கொஞ்சம் தணித்தது.
மனதின் பாரம் குறைய குறைய அவளுக்கு உத்தம சோழனை முதன் முதலில் பார்த்த அன்றைய தினம் நினைவடுக்கில் வந்து சென்றது.
அப்போது அவள் கல்லூரி முதலாமாண்டு. வழக்கம் போல ஒரு நாள் அவள் தனது காரில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தாள். சிக்னலில் கார் நிற்க பார்வை ஏதேட்சையாக மக்கள் கூட்டத்தில் பதிந்தது.
அதில் சாம்பல் நிற ஆக்டிவா பைக்கில் அமர்ந்திருந்த ஒருவன் தன் தலைகவசத்தை கழற்றி தன் அடர்ந்து வளர்ந்த கேசத்தை தலையை ஆட்டி சரி செய்துக் கொண்டிருந்தான். அந்த மேனரிசம் அழகாயிருந்தது பார்ப்பதற்கு. ஏனோ அவனிலிருந்து விழிகளை அகற்றாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
இது புதிது அவளுக்கு. இப்படி ஒருவனை நின்று ரசிப்பது என்பதெல்லாம் முற்றிலும் புதிது. தந்தையை சுற்றிலும் தன் உலகத்தை அமைத்துக் கொண்ட சாதாரணப் பெண்களில் அவளும் ஒருத்திதான் அன்று வரை.
இந்த கண்கள் இருக்கிறதே.. அப்பப்பா.. அது தான் காதலுக்கு முதல் தூது போலும். இதை அறியாத பேதையவள் அவன் கண் பார்க்க முயன்றாள். அவன் பிம்பத்தை காண வேண்டி காரிகை விழியுயர்த்தி எட்டிப் பார்க்க தென்றல் காற்று அவளை முந்திச் சென்று அவன் வதனத்தை முத்தமிட்டு நின்றது.
கூடவே அவன் கேசத்தினை கட்டி ஆரத் தழுவ.. அவனது நீண்ட கேசம் காற்றிலே அலைபாய்ந்தது. அது அவனை மேலும் கவர்ச்சியாய் காட்டியது தேன்மொழியின் கண்களுக்கு.
கண்களை மறைத்தவாறு தலைமுடி கவிழ்ந்திருக்க அதுவோ அவனை பேரழகனாய் காட்டியது. இன்னும் கண் பார்க்கவில்லை.. முகத்தை முழுதாய் பார்க்கவில்லை. ஆனால் தேன்மொழியின் நெஞ்சில் அவன் ஆழமாய் பதிந்துப் போனான்.
அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது அன்று அவன் டார்க் ஆலிவ் கீரின் கலர் ஆடை அணிந்திருந்தான். அது அவனை அட்டகாசமாய் காட்சிப் படுத்தியது என்றால் மிகையில்லை. அவன் முகத்தைப் பார்ப்பதற்குள் சிக்னல் விழ வண்டிகள் ஒவ்வொன்றாக கிளம்பியது.
அவளது பார்வை அவன் முகத்தை காணவே தவமிருக்க அது புரிந்தார் போன்று தலைகவசத்தை அணிந்தபடி அவளைப் பார்த்தான் ஆக்டீவாவில் அமர்ந்திருந்த அந்த ஆகச்சிறந்தவன்.
கண்ணும் கண்ணும் பட்டுத் தெறித்தது ஓர் நொடி. ஆகா.. என்னமாய் அழகாய் பற்றிக் கொண்டது காதல் நெருப்பு. மன்மதன் சரியாய் தான் பற்ற வைத்திருக்கிறான். கிடைத்த சிறு இடைவெளியில் அழகாய் ஊடுருவி சென்று விட்டதே இந்த காதல் அஸ்திரம்.
மின்னல் கீற்றாய் சிறு சலனம் இருவருக்குள்ளும். இரத்த நாளமெங்கும் மின்சாரம் தாக்க உடல் சிலிர்த்து அடங்கியது. காதலென்னும் மெல்லிய உணர்வு சரியாய் கடந்து சென்றது இருவரிலும்.
அந்த புதுவித அனுபவத்தில் இதயத்தின் ஸ்வரம் நின்று துடிக்க தேன்மொழி ஸ்தம்பித்துப் போனாள். பாவம் பெண்ணுக்குள் பூத்த முதல் ரசாயண மாற்றம் அல்லவா.. கொஞ்சம் தடுமாறிப் போனாள். நல்ல வேளை காரில் அமர்ந்திருந்தாள். இல்லையெனில் பொத்தென்று மயங்கி கீழே விழுந்திருப்பாள்.
வாகனம் வேகமெடுக்க இருவரும் தங்கள் பாதையில் செல்ல வேண்டிய நிலை. அவர்களுள் நொடியில் வந்த உணர்வு அடுத்த கணமே பிரிந்து சென்றிருந்தது.
தேன்மொழி அவனை அதன் பின் காணவேயில்லை. சில சமயம் அவனை கண்கள் காண அடம் பிடிக்கும். ஆனால் அவள் அத்தகைய உணர்வுக்கு இடம் கொடுக்காமல் கடிவாளமிட்டு மனதை இறுக்கி பிடித்துக் கொள்வாள்.
அப்படியே மூன்று மாதங்கள் கழிய அவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று.. அவள் உத்தம சோழனோடு கடந்த விட்ட காலத்தில் நின்றிருக்க கையிலிருந்த தொலைப்பேசி சரியாய் தொல்லை செய்தது.
அந்த கல்லூரியின் கரஸ்பாண்டன் தான் அவளை அழைத்துக் கொண்டிருந்தார். சட்டென்று பழைய நினைவுகளை உதறியவள் பச்சை பொத்தானை அழுத்தி காதில் பொருத்தினாள்.
"தேன் மொழி காலேஜில தான இருக்கீங்க.." என்று அவர் வினவ.. "யெஸ் சார். இங்க காலேஜில தான்".
"ஓ.. அப்போ சரி. ஒரு முக்கியமான விஷயம். எனக்கு ஒரு உதவி செய்யணுமே".
"ம்ம்.. சொல்லுங்க சார் நான் இப்போ என்ன பண்ணனும்".
"நம்ம காலேஜ் டேக்கு இன்வைட் பண்ண வேண்டிய சீப் கெஸ்ட்ல ஒருத்தங்களை நீங்க போய் சந்தித்து நம்ம கல்லூரி சார்பாக அழைப்பிதழை கொடுத்துட்டு வர முடியுமா.." என்று அவர் சொல்ல தேன்மொழியும் உடனே ஒத்துக் கொண்டாள்.
"கண்டிப்பா சார். நீங்க அட்ரஸ் அனுப்புங்க நான் பார்த்துக்கிறேன்".
"ரொம்ப நன்றி மா. நான் இங்க அவசர வேலையில் மாட்டிக்கிட்டேன். இல்லைன்னா நானே போய் இன்வைட் பண்ணியிருப்பேன்".
"அதனால என்ன சார். இந்த காலேஜ் முதல்வரா நான் என்னோட வேலையை தானே செய்யப் போறேன்".
"ஓகேம்மா. இப்போ உடனே போய் பாரு. அவர் இன்றைக்கு தான் பீரியா இருக்காராம். நான் உன்னோட நம்பருக்கு லொகேஷன் ஷேர் பண்ணுறேன்"
"ஓகே சார்" என்றவள் அழைப்பினை துண்டித்தவள் தனது வண்டியில் கிளம்ப ஆயத்தமானாள்.
******************
ஆதிரா குட்டுவை அழைத்துக் கொண்டு அந்த உயர்தர பல்பொருள் அங்காடிக்கு வந்திருந்தாள். கூடவே அன்னபூரணியும் சில பொருட்களை வாங்க வேண்டி வந்திருந்தார்.
குட்டுவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தும் சில வாரங்கள் ஆகியிருந்தது. எனவே எல்லோரும் சேர்ந்து வந்திருந்தனர்.
ஆதிரா பரிதியுடன் அலைப்பேசியில் உரையாடிய படி இருந்தாள். வெகு நாட்களாக பிரிந்திருந்த காதலின் வலி அவன் வார்த்தைகளில் இருந்தது.
"லட்டுமா... இன்னும் எவ்ளோ நாள் தான் இப்படி போன் மூலமாவே என்னை தவிக்க விடப் போற..."
"ஹேய். என்னால இந்தியாவை விட்டு எங்கேயும் வர முடியாது. முடிஞ்சா நீ சீக்கிரம் உன் வேலையை முடிச்சிட்டு ஊருக்கு வர வழியை பாரு" என்று அதட்ட..
"எல்லாம் என் நேரம்டி. இந்த கான்டிராக்ட் மட்டும் முடியட்டும் உன்னை வந்து வச்சிக்கிறேன் டி" என்று அவன் நிலையை எண்ணி வருந்தியபடி சொன்னான்.
அவன் வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான அவகாசம் முடிய இன்னும் சில மாதங்கள் மீதமிருந்தது.
"எப்படி இடுப்புலயா தூக்கி வச்சிக்கப் போறீங்க" என்று ஆதிரா அவனை கிண்டலடிக்க..
"இடுப்புலயா இல்லை வேற எங்கேயுமான்னு வந்து செய்து காட்டுறேன் பாருடி.." என்று அவன் இயலாமையில் வெடித்தான்.
"ச்சீ... போங்க.. ஆசை தோசை அப்பள வடை. என் கை என்ன சும்மா இருக்கும் நினைக்கிறீங்களா..". ஆணின் அவஸ்தை உணராமல் பிதற்றியது பெண்கிளி.
"அதெப்படி சும்மா இருக்கும்.. அதுக்கு நான் தான் முக்கியமான வேலை கொடுத்திருவேனே..". கள்வனான் காதலன்.
"பரிதி..." என்று அவள் அவன் பெயரை சொல்லி மிரட்ட..
"அட போடி.. மனுசனை நிம்மதியா பேச கூட விட மாட்ட.."
"நான் என்ன பேச வேண்டாம்னா சொன்னேன். நீ ஒழுங்கா பேசு .. நான் கேட்கிறேன்".
"ஒன்னும் வேண்டாம்" என்று அவன் முறுக்கிக் கொள்ள சில பல சமாதானங்களை சொல்லி அவள் தான் அவனை நார்மலாக்க வேண்டியிருந்தது.
குட்டுவும் அன்னபூரணியும் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கில் இருந்தனர். துறுதுறுவான குட்டுவால் ஓரிடத்தில் ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடி ஆடிய படியே இருந்தான்.
"அப்புமா..நாம சீசா விளையாடலாம்.. வாங்க" என்று சொல்லி அவரை விடாப்படியே அழைத்து சென்று அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடினான். அப்படியே ஒவ்வொரு விளையாட்டையும் அன்ன பூரணியின் துணையுடன் விளையாட அன்னபூரணி விரைவிலேயே சோர்ந்துப் போனார்.
"குட்டு செல்லம்.. நீ போய் மத்த பசங்க கூட சேர்ந்து விளையாடு அப்புமா இங்கேயே உட்காந்து உன்னை பார்த்துட்டே இருப்பேனாம். சரியா.." என்றவர் அங்கிருந்த கண்காணிப்பாளரிடம் சொல்லி குழந்தையை பார்த்து கொள்ள சொன்னவர் ஓரமாய் அமர்ந்து கொண்டார்.
அங்கு வந்த ஆதிரா அன்னபூரணியோடு சேர்ந்து கொண்டாள். அன்னபூரணி ரெஸ்ட் ரூம் செல்ல ஆதிரா அவருக்கு துணையாக சென்று விட்டு உடனே வந்து விட்டாள்.
அதுவரை விளையாடிக் கொண்டிருந்த குட்டுவை காணவில்லை. ஆதிரா அங்கிருந்த கண்காணிப்பாளரிடம் சென்று விசாரிக்க யாரோ ஒரு பெண்மணி கூட்டி சென்றதாக சொல்ல ஆதிராவுக்குள் பயப்பந்து உருளத் தொடங்கியது.
*********************
சீப் கெஸ்ட்டை பார்க்க சென்ற தேன்மொழி அந்த அலுவலகத்தின் ரிசப்சன் பெண்மணியிடம் தனது கல்லூரியின் பெயரை சொல்ல அவள் தனது முதலாளியிடம் பேசி விட்டு சொல்வதாக சொன்னாள்.
ஐந்து நிமிட காத்திருப்புக்கு பின் தேன்மொழி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டாள். கைப்பையிலிருந்த அழைப்பிதழை கையில் எடுத்துக் கொண்டவள் கதவினை தட்டிக் கொண்டு "மே ஐ கமின் சார்" என்று கேட்டப்படி உள்ளே சென்றாள். அங்கே அழகிய அசுரனாய் அவளை வதம் செய்ய அவன் இராட்சத புன்னகையோடு நின்றிருந்தான்.
மேசையின் மீது சாய்ந்தபடி சாக்லெட் நிற கோட் சூட்டில் கணையேந்திய அர்ஜுனனை போல அவளை பார்த்தப்படியிருந்தான்.
"அர்ஜுனா.. உனக்கு என்ன தெரிகிறது" என்று கேட்ட துரோணருக்கு "பறவையின் கண் தெரிகிறது" என்று இலக்கில் மட்டுமே கண்ணாய் இருந்தானே அந்த அர்ஜுனனை போல.. தனது இலக்கான அவளில் மட்டுமே குறியாயிருந்தான்.
அங்கே .. அந்த இடத்தில் நிச்சயமாய் அவள் உத்தம சோழனை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவளது அதிர்ந்த பார்வையே சொன்னது. அதிர்ச்சியில் கையிலிருந்த அழைப்பிதழ் கீழே விழ அது பறந்து சென்று அவன் காலடியில் விழுந்தது. இனி உன் வாழ்வும் என்னிடத்தில் தான் என்பதை சொல்லாமல் சொல்லியது அந்நிகழ்வு.
உத்தம சோழன் தன் காலடியில் விழுந்த அழைப்பிதழை தான் அணிந்திருந்த லெதர் ஷீவினை கொண்டு மிதித்தப்படி அவளை பார்த்தான். புலியிடமிருந்து தப்பிக்க போராடும் மான் குட்டி போல மிரண்ட விழிகளோடு நின்று கொண்டிருந்த தேன்மொழியை பார்க்கையில் அவனுக்கு சுவாரசியம் கூடியதோ.
அந்நாள் வரை தேன்மொழி சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த தைரியம் நிலநடுக்கத்தில் சுக்கு நூறாய் உடைந்த கட்டிடம் போல சில்லி சில்லியாய் நொருங்கி கொண்டிருந்தது.
குட்டு என்ற பெயரில் தொழில் நிர்வாகம் அனைத்தும் இருக்க அது உத்தம சோழனுக்குரியது தான் என்று தேன்மொழி அறிந்திருக்க வாய்ப்பில்லையே. அதனால் அவள் சீப் கெஸ்ட் இவன் தான் என்று நினைக்கவில்லை.
நிதானமாக நடந்து சென்று அவனது நாற்காலியில் அமர்ந்தவன் கால்களிரண்டையும் மேசை மீது வைத்தவன் திமிரில் பெண்ணவள் கொஞ்சம் சுயம் பெற்றாள். நிமிடத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டவள் நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த தோரணையுமாய் அவனை ஏறிட்டாள் இப்போது.
கலங்கிய நீரில் கல்லெறிவதை விட தெளிந்த நதியில் கல்லெறிந்து விளையாடுவது தானே ஆர்வத்தை தூண்டும். அவள் தெளிவாக இருந்தாள். அவன் அவளுள் மீன் பிடித்து ருசி பார்க்க விரும்பினான்.
"யெஸ்.." என்றபடி தாடையை தடவி கொடுத்தவனை அமைதியாக பார்த்தாள் தேன்மொழி. எதிராளியை உடனே சுட்டு வீழ்த்துவதை விட அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை முதலில் கணிப்பதே நல்ல தலைவனுக்கு அழகு என்று கற்றுக் கொடுத்தவனே அவன் தானே.
தன்னை வாவென்று அழைக்கவில்லை. அமர்ந்து கொள் என்றும் சொல்லவில்லை. மரபுக்கு கூட அவனிடம் வரவேற்பதென்பதே இல்லையே. மாறாக கால்களை மேசை மீது வைத்தப்படி தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே செய்யும் அவனை துளியும் அவள் கண்டு கொள்ளவே இல்லை.
நீ யார் என்னை தாழ்வுப்படுத்த? வெற்றியோ தோல்வியோ என் வாழ்வில் நுழைய நான் தான் இடம் கொடுக்க வேண்டுமே தவிர அடுத்தவரல்ல.
வைரம் பாய்ந்த உள்ளமாயிற்றே அவளது. வாழ்க்கையில் அவன் கற்று தந்த பாடம் தான் எத்தனை விலை மதிப்பில்லாதது.
காலியாக இருந்த இருக்கையை எடுத்துப் போட்டு கால் மேல் கால் போட்டப்படி நன்றாக சாய்ந்து அமர்ந்தாள் தேன்மொழி. ராணியின் கம்பீரத்தோடு அமர்ந்திருந்தவளை அழுத்தமாய் ஏறிட்டான் உத்தம சோழன். வலக்கை அடிவயிற்றினோரம் வைத்திருக்க இடக்கை இருக்கையின் கைப்பிடி மீது தொங்கவிட்டப்படி அமர்ந்திருந்தது அவனுக்கு கோவில் சிற்பத்தை நினைவுருத்தியது. வழுவழுப்பான அந்த கைகளின் அழகிலிருந்து விடுபட அவனது கண்கள் அடம் பிடித்தது.
"ம்..ம்..ம்.." உதட்டினை உள்ளிழுத்தப்படி சொன்னவன் "லுக்ஸ் குட்" என்று பாராட்ட சிரம் அசைத்து ஏற்றுக் கொண்டதோடு சரி.. தவிர்த்தும் பணிவென்பதை அவள் காட்டவும் இல்லை. அவனுக்கு உணர்த்தவும் விரும்பவில்லை.
"இன்ட்ரஸ்டிங்" அவனிதழ்கள் முணுமுணுத்துக் கொண்டது.
மார்ல்பொரா ரக சிகரெட்டினை எடுத்து உதட்டில் பொருத்தியவன் புகையை உள்ளிழுக்க அவனை தூக்கிப் போட்டு மிதிக்கும் எண்ணம் தேன்மொழியினுள் மின்னலென வந்துப் போனது.
தனக்கு புகைப்பது பிடிக்காது.. ஒத்துக் கொள்ளாது.. என தெரிந்தும் வேண்டுமென்றே செய்யும் அவனை என்ன செய்தாலும் தகும்.
தன்னை இம்சிக்க அவன் செய்யும் சிறு முயற்சிக்கு கூட கிஞ்சித்தும் பிரதிபலிப்பு காட்டக் கூடாது என்பதில் தெளிவாயிருந்தாள் தேன்மொழி.
எந்தவித உணர்வுமின்றி அவனை ஏறிட.. தான் செய்யும் ஒன்றுக்கும் எதிர் பாய்ச்சல் இல்லாமல் போகவே அவனுக்கே சலிப்பாய் இருந்தது போலும். மேற்கொண்டு எதையும் பேசாமல் புகைப்பதிலேயே அவன் கவனமாய் இருக்க.. அவள் அவனைப் பார்த்தப்படி இருந்தாள். கையிலிருந்த சிகரெட் தீரும் வரை பொறுமையாய் இருந்தவள் அதன் பின் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
"வெல். உங்களோட கோமாளி வித்தை முடிஞ்சதுன்னா.. நான் வந்த விஷயத்தைப் பத்தி பேசலாம்".
'அடி பாதகத்தி.. இப்படி சட்டுன்னு கோமாளி பட்டம் கட்டிடீயே.. என்னோட ஸ்டேட்ஸ் என்னன்னு தெரியுமாடி' உத்தம சோழனின் மனம் உடனடி கவுண்டர் கொடுத்தது.
கோபமுகமூடியை அணிந்தவனாக "என்ன தைரியம். என் இடத்துல இருந்து கிட்டே என்னை கோமாளி வித்தை காட்டுறவன்னு சொல்றியா..." என்றவன் இடது மீசையோரம் இருமுறை துடித்து அடங்க மீசையை முறுக்கிக் கொண்டான்.
'பெரிய இவன். மீசையை முறுக்குனா நாங்க பயந்துருவோமா.. அட போடா..' தூசியை தட்டுவது போல அவன் பேச்சை தட்டி விட்டாள் தேன்மொழி.
"நீங்க வம்பு வளர்க்கணும்னு பேசுறீங்க. நான் இந்த விளையாட்டுக்கு வரல.." என்று இப்போது நேரிடையாகவே சொன்னாள்.
"ஓஹோ.. அப்போ கட்டில் விளையாட்டுக்கு வறீயா.. மாமன் பீரியா தான் இருக்கேன்" ஒற்றை கண்ணை சிமிட்டியப்படி சொல்ல அவள் காது வழி புகை வராத குறை.
"யூ... ராஸ்கல். ஹவ் டார் யூ.." அதுவரை கட்டி காத்தப் பொறுமை பறந்து போக இருக்கையிலிருந்து எழுந்தவள் நொடி பொழுதில் அவனை அடிக்க கை ஓங்கியிருந்தாள்.
அவனும் இதை தான் எதிர்பார்த்தான் போலும். அவளது கையை தடுத்து பிடித்தவன் கண்களை நேருக்கு நேர் சந்திக்க இரு கூர்மையுள்ள வாள்கள் மோதியது போல தீப்பொறி பறந்தது.
"பிரமாதம் மிசஸ்..." என்று சொல்ல வந்தவன் அவள் கோபம் புரிந்து "வாட் எவர் தேன்மொழி உங்க காலேஜில இப்படி தான் இன்வைட் பண்ணுவீங்களா. இப்படி தான் மத்த மாணவர்களுக்கும் கத்துக் கொடுக்கவும் செய்றீங்களா" என்று கேட்க..
"லீவ் மை ஹேண்ட் மிஸ்டர்.." என்றபடி பற்களை கடிக்க அவன் வேடிக்கைப் பார்த்தான் அவளை.
"விடுங்கன்னு சொல்றேன்ல.." அவனிடமிருந்து கைகளை விடுவிக்கப் போராடியவளுக்கு மேலும் சிரமம் கொடுக்காமல் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றான்.
அய்யனார் போன்று தன்னருகே இருந்தவனை முறைத்துப் பார்த்தாள் தேன்மொழி.
"ஐ செட் லீவ் மை ஹேண்ட் "
இதழ்கள் படபடக்க சொல்லவும் என்ன நினைத்தானோ கைகளை விடுவித்து விட்டான். ஆனால் அவள் அருகாமையிலிருந்து சிறிதும் விலகவில்லை. நூலிழை இடைவெளி தான்.
"ஓகே... கூல் ஹனி" என்று இரு கரங்களையும் மேலே தூக்கி ஆசுவாசப்படுத்தினான். விம்மி புடைக்கும் பெண்ணவளின் நெஞ்சின் ரீங்காரம் அவனுள் சொட்டு சொட்டாய் இறங்கியது. அதை துளியளவேனும் வீணாக்க அவன் எண்ணவில்லை. பொக்கிஷமாய் அவன் இதய கூட்டில பத்திரப்படுத்திக் கொண்டான். அவளிலிருந்து கமழும் நலங்கு மாவின் மணம் வியர்வையோடு சேர்ந்து அவனுக்கு தீர்த்தமாய் மணத்தது. அள்ளி பருகி மோட்சமடைய இளமை துடித்தது. கட்டிய மனைவியாயிருந்தாலும் கண்ணியம் காக்க வேண்டிய நிலையை எண்ணி அவன் மனம் எப்போதும் போல வருந்தியது.
இருந்தும் அந்த நிமிடத்தை அவன் தவறவிட விரும்பவில்லை. கண்களை மூடி அந்நொடியை ஆழ்ந்து அனுபவித்தான். அவள் மூச்சு காற்றின் ஆலாபனை அக்கணத்திற்கு கூடுதலாய் இனிமை சேர்த்தது.
அவன் மயக்கத்தை கலைத்தாள் அவன் அன்பு மனையாட்டி.
அவன் நெஞ்சில் பேனா வைத்து அவள் அருகிலிருந்து அவனை விலக்கி நிறுத்தியவள் "இந்த ஊரு உலகத்துல ஆளே கிடைக்கலன்னு உங்களை போய் சீப் கெஸ்ட்டா இன்வைட் பண்ண நினைக்கிறாங்க.." தலை சரித்தப்படி இதழ் சுழித்து சொன்னவளை என்ன நடக்கிறது என்று உணர்வதற்கு முன் இடையில் கை கொடுத்து தூக்கி மேசை மீது அமர்த்தியிருந்தான் உத்தம சோழன்.
அவள் இடுப்பின் இரு பக்கமும் அவளை தொடாமல் கைகளை அரணாக மேசை மீது வைத்தவன் அவள் புறம் குனிந்து.. "தப்பு செல்லம். அது அப்படியில்லை. நீ இன்வைட் பண்ண வந்திருக்க.." என்றவனை முறைத்துப் பார்த்தாள் தேன்மொழி.
அன்று கண்களை மறைத்தப்படி இருந்த முடிகளை இப்போது ஸ்டைலாக மாற்றி பார்மல் லூக்கிற்கு ஏற்றாற் போல வெட்டியிருந்தான் அவன். இருந்தும் ஓரிரண்டு முடி கற்றைகள் புருவமத்தியில் விழத் தான் செய்தது. விரல் கொண்டு அதை கலைத்து விடும் ஆர்வம் அவளுள் எழுவதை ஏனோ தடுக்க முடியவில்லை.
அவனை அவள் விலக்க நினைக்க அவனோ நெருங்கி வந்தான். சலிப்பாக இருந்தது அவளுக்கு. "உங்களுக்கு பிடிச்சிருந்தா என்ன வேண்டுமானாலும் செய்வீங்க. அதுவே வேண்டாம்ன்னா திரும்பியும் பார்க்க மாட்டீங்க. அப்படி தானே" பொரிந்து தள்ளினாள் அவள்.
"பின்ன என்ன செய்யணும். மகாராணி நீங்களே சொல்லுங்க. அடியேன் கேட்கிறேன்" என்று கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு சொல்ல பற்களுக்கிடையே செவ்விதழ்களை மடித்து புன்னகையை அடக்கினாள் அவனது செயலில்.
'அடியே தேன்மொழி.. சிரிச்சிறாதடி. கோபத்தை இழுத்துப் பிடிச்சுக்க' அவளது மனம் அவளை அதட்டியது.
அவனுக்கு அவள் செயல் புரிந்தாலும் காட்டி கொள்ள முனையவில்லை. அந்த நேரம் அவனது அலைப்பேசி அழைக்க யோசனையோடு அட்டன் செய்தான்.
"என்ன முக்கியமான நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?" அந்த பக்கமிருந்த அறிவழகனிடமிருந்த கேலிக்குரல் அவனைச் சீண்டியது.
"ஆமான்னு சொன்னா போனை வைக்கப் போறீங்களா? "
"உன்னோட திமிரு அடங்கவே அடங்காதாடா..."
"மிஸ்டர் பியூட்டி.. அது என் கூடவே பிறந்தது. அது எப்படி அடங்கும்.. " என்றவன் அடங்க "வேண்டியவங்ககிட்ட மட்டும் தான் அடங்கும்" என்றபடி தேன்மொழியை பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டியபடி இதழ்களை குவித்தான்.
அழைப்பு வந்ததும் அவன் அவளிடமிருந்து விலகவும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவள் மேசை மீதிருந்து இறங்கி நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.
"பியூட்டி கியூட்டின்னு கூப்பிட்டன்னு வை பேசுறதுக்கு வாய் இல்லாம பண்ணிடுவேன். ஜாக்கிரதை.. "
மனிதர் அருகிலிருந்தால் பஸ்பமாக்கியிருப்பார் போலும். குரலில் அத்தனை கோபம்.
"சரி விடுங்க கியூட்டி.. நமக்குள்ள என்ன மரியாதை வேண்டியிருக்கு. அப்புறம் என்ன விஷயம் சொல்லுங்க.. சிறப்பா செஞ்சிடலாம்.." என அவன் இரு பொருள்பட சொல்ல..
"விஷயம் என்னன்னு தானே கேட்ட மவனே.. நீ தேயிலை தூளை விக்கிறியா இல்லை பூச்சியை போட்டு மக்களை ஏமாத்துறீயா.? "
"ஏய்.. ". அவனது அதட்டலில் தேன்மொழி ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தவளாக குழப்பத்துடன் அவனை பார்த்தாள். அவனும் அவளது பதட்டம் அறிந்து முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் உரையாடினான்.
"ஹா... ஹா... என்ன கோபம் வருதா... இதுக்கே இப்படி கத்துனா. இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்ளோ இருக்கு.."
"எதுனாலும் என் கூட விளையாட வேண்டியது தானே கியூட்டி. அதை விட்டு நான் செய்யுற தொழிலை எதுக்கு அவமானப் படுத்த நினைக்கிறீங்க மை பியூட்டி. நான் அமைதியா இருக்கிறேன்னு உங்க இஷ்டத்துக்கு ஆடாதீங்க ஸ்வீட்டி" என்று அவன் வார்த்தைக்கு வார்த்தை பியூட்டி கியூட்டி என்றழைத்து கொஞ்சியபடியே அவரை வெறுப்பேற்றினான்.
தவறான வார்த்தைகளை விட்டு மீண்டும் அவன் சிக்கலில் மாட்டி கொள்ள விரும்பவில்லை. பேசுகையில் வார்த்தையில் கவனம் வேண்டும் என்பதை அவனுக்கு காலம் நன்கு உணர்த்தி சென்றிருந்ததே.
"இது வெறும் டிரெய்லர் தான் கண்ணா.. இனி பார்க்க தானேப் போற இந்த மாமனோட ஆட்டத்தை.." என்றபடி அவர் அழைப்பை துண்டிக்கவும் அவனது அறைக்கதவை திறந்து கொண்டு அவர்கள் வரவும் சரியாய் இருந்தது.
உணவுத் துறையை சார்ந்த அதிகாரி ஒருவர் தன் அடையாள அட்டையை காட்டி "மிஸ்டர் உத்தம சோழன் நாங்க உங்க பேக்டரியை சோதனைப் போட வந்திருக்கோம்" என்று கூற தேன்மொழி அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள்.
அதே சமயம் அன்னப்பூரணியும் உத்தம சோழனை அழைத்து விஷயத்தை சொல்ல அதிர்ந்து போனான் அவன். அடுத்து என்ன செய்வது என்ற சிந்திக்க மறந்த நிலை.
அவனது அதிர்ச்சி அவளுக்கு எதையோ உணர்த்த பயத்துடன் அவனைப் பார்த்தாள். 'சொல்லாதே.. விபரீதமாக எதையும் சொல்லாதே' என அவள் மனம் கூக்குரலிட்டது
எதையோ சொல்ல வாய் திறந்தவன் காற்றை மட்டுமே செய்தியாக சொல்ல விழி விரித்துப் பார்த்தாள் தேன்மொழி.
'என்ன... அவளது சோழன் பயப்படுகிறானா..'
"என்னவாயிற்று.." என்று அவனை உலுக்கியவள் "உங்களை தான் கேட்கிறேன்.. யாருக்கு என்னவாயிற்று. ஏன் பேயறைந்தது போல இருக்கிறீர்கள். வாய் திறந்து சொல்லுங்களேன்" என்று கேட்டவளை இயலாமையுடன் பார்த்தான் உத்தம சோழன்.
"க்கு...குகுட்டு...குட்டுவ... " என்று சொல்ல வந்தவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தவள் அவனை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தாள். "போதும் நிப்பாட்டுங்க.. இப்பவும் உங்களுக்கு அவதான் முக்கியமில்ல.ச்சீ.. நீங்க எல்லாம் என்ன ஒரு மனுஷன்" குட்டு என்பது ஆதிரா என்று தவறாக நினைத்தவள் சகட்டு மேனிக்கு அவனை வார்த்தைகள் கொண்டு வதைத்தாள்.
"வாட் யூ மீன்.." அதுவரை குழந்தை காணாமல் போன பதற்றத்திலிருந்தவன் அவளது பேச்சில் இறுக்கமடைந்தான்.
"மீனும் இல்லை.. வாத்தும் இல்லை. நான் கிளம்புறேன். இனி நீங்க இருக்கிற பக்கம் வந்தேன்னா... என்னை"
"கட்டி அணைச்சு உம்மா கொடுக்கவா.. " அந்த நேரம் கூட அவனது குறும்பு பேச்சு அவளை கவர்ந்திழுக்க ஆசைக் கொண்டது.
லேசாக புன்னகைக்க துடித்த இதழ்களை பற்களுக்குள் சிறையிட்டு அடைத்தவள் அவனை முறைத்தப்படி அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
அவனை விட்டு விலகியிருக்க அவள் சித்தம் கொள்ள சிந்தையெங்கும் அவன் பிம்பமே சேமித்து வைக்கப்பட்டிருப்பதை பெண்ணவள் எப்போது உணர்ந்து கொள்ள போகிறாளோ?
உத்தம சோழனுக்கு இருந்த அவசரத்தில் தேன்மொழியின் பேச்சின் அர்த்தத்தை உணர்ந்து கொள்ள மறந்தான்.
'குட்டுவா.. இல்லை கட்டி காத்த தொழிலா' என்று குழம்பி போய் நின்றவன் அவள் சொல்லிவிட்டு சென்றதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
அவன் முன்னால் இருந்த அதிகாரிகளிடம் அவன் எத்தனை தூரம் விளக்கமளித்தாலும் ஒன்றும் மாறப் போவதில்லை என்பதை உணர்ந்தவனாக அவர்களை தொழிற்கூடத்தை சோதனையிட அனுமதித்தான்.
மடியில் கணமிருந்தால் தானே பயம் கொள்ள வேண்டும்.
அதே நேரம் அவன் ஆபிசில் இருந்த படியே குட்டுவை தேடும் முயற்சியில் இறங்கினான். தன்னுள் எழுந்த பதற்றத்தை தணித்தவன் சற்று நிதானித்து யோசிக்கலானான்.
அவனுக்கு தெரியும் குட்டு புத்திசாலி குழந்தையென்று. அதனால் அவன் என்ன நடந்திருக்கும் என்று அவதானிக்க முயன்றான்.
மாலின் உரிமையாளரிடம் பேசி முதலில் சிசிடிவி காட்சிகளை சரிபார்க்க செய்தான். அதில் அவன் எதிர்பார்த்தது போலவே இருக்கவும் முகம் மலர்ந்தது. தேனு ஏன் குட்டு என்ற பெயர் சொன்னதும் திட்டினாள் என்ற கேள்விக்கான பதில் அவனுக்கு புரிந்தது போல இருந்தது.
என்ன நடந்திருக்கும் என்று ஒருவாறு புரிந்து கொண்டவன் மனம் மத்தாப்பூவாய் மின்னியது. தாய் அன்னப்பூரணியை அழைத்து விஷயத்தை கூறி பதற்றத்தை தணித்தவன் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று சொல்லிவிட்டு அலைப்பேசியை வைத்துவிட்டான்.
வானுக்கும் மண்ணுக்கும் இடையே வரும் வானவில் போல அவன் வாழ்க்கை ஒரு நொடியில் வண்ணமயமாக மாறியதில் திக்கு முக்காடிப் போனான் அந்த ஆண்மகன்.
இத்தனை நாட்களாக தேன்மொழியின் மீது கொண்டிருந்த கோபம் கூட சூரியனை கண்ட பனித்துளி உருகுவது போல மறைந்து போனது. மாற்றம் தான் எத்தனை விசித்திரமானது.
தங்கள் வாழ்க்கை தடம் புரண்ட அன்றைய நாளில் எங்கோ ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும். அது எங்கே என்று அவனால் ஓரளவு அனுமானிக்க முடிந்தது. ஆயினும் உறுதியாக தெரியவில்லை. அது தெரிய வேண்டுமானால் தேன்மொழியின் தாய் தந்தையுடன் மனம் விட்டு பேச வேண்டும்.
உத்தம சோழனின் தொழிற்சாலையை சோதனை செய்த அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த தகவல் பொய் என்பதை ஆராய்ந்து ஒப்பு கொண்டவர்களாக அவன் முன்னே வந்து நின்றனர்.
"வெரி சாரி மிஸ்டர் உத்தமசோழன். உங்களோட நேரத்தை நாங்க தேவையில்லாம வீணடித்து விட்டோம்" என்று உண்மையாக வருத்தம் கொள்ள அவனும் அலட்டி கொள்ளாமல் அதை சிறு தோள் குலுக்கலுடன் ஏற்றுக் கொண்டான்.
ஆனாலும் அவர்கள் மூக்குடைக்க தவறவில்லை அவன். "கம்பெளய்ன்ட் வந்ததும் ஆக்சன்ல இறங்கிறது சரிதான்.. ஆனா யார் மேல புகார் வந்திருக்குன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கு அப்புறம் விசாரணை பண்ணுறது உங்களுக்கு நல்லது" என்று வெளிப்படையாகவே தன் கோபத்தை காட்டினான். அவன் கண்களில் வேட்டைக்கான பளபளப்பு. அதில் ஓர் நொடி பயந்து போயினர் அந்த அதிகாரிகள்.
"இல்லை மிஸ்டர் உத்தம சோழன்" என்று குறுக்கிடு செய்தவரை கொஞ்சமும் மதியாமல் "மிஸ்டர் மினிஸ்டரெல்லாம் இருக்கட்டும். இனி ஒரு தரம் இப்படி என் பாக்டரிக்குள்ள தவறான எண்ணத்தோட காலடி எடுத்து வச்சீங்க..." என்று இதழ் மடித்து விரல் நீட்டி எச்சரித்தவன் "கெட் லாஸ்ட்" என்று வாசலை காட்டவும் அவர்கள் சங்கடத்துடன் அங்கிருந்து உடனடியாக கிளம்பினர்.
உயிரோடு விட்டால் போதும் என்றெண்ணியிருப்பார்கள் போலும். ஏதோ அவர்கள நல்ல நேரம் அவன் ஒன்றும் செய்யவில்லை.
அவர்கள் வெளியேறியதும் அவன் உதவியாளரிடம் அன்றைய வேலைகளை எல்லாம் தள்ளிப் போட சொல்லிவிட்டு அலுவலகத்திலிருந்து விரைவாக கிளம்பினான்.
செல்லும் வழி நெடுகிலும் பழைய நியாபகங்கள் அணி வகுக்க அவன் அதில் சுகமாய் மூழ்கினான்.
அன்று டிராபிக் சிக்னலில் உள்ளுணர்வு ஏதோ சொல்லவும் தான் அவன் அவளை முதல் முதலில் பார்த்தது.
பொதுவாக காதல் எப்படி வரும் ? முதல் பார்வையிலேயே எங்கோ ஒரு மணி அடிக்கும். அடி வயிற்றில் இனம் புரியாத ஒரு சங்கடம் எழுந்து நெஞ்சு குழிக்குள் அடைத்து மூச்சு விட மறக்க செய்யும். இவள் தானா ? இவன் தானா..? என்று இதயம் துடிப்பது நின்றது போல ஒரு மாயை எழும். மீண்டும் ஒரு முறை அந்த திருமுகத்தை பார்க்கத் தோன்றும். பார்த்துக் கொண்டே இருக்க மனம் அடம் பிடிக்கும். வாழ்நாள் கூடவே இருக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும் என்று சொல்லுவார்களே.
ஒரு படி மேலே சென்று சிலரால ஒரு கணம் கூட பிரிந்து இருக்க முடியாது. பிரிந்தாலும் மற்றவர் நினைவாகவே இருக்கும். அது தான் காதல் என்று பல கவிஞர்கள் தங்கள் பாடலில் வர்ணித்திருக்க உத்தம சோழன் அதில் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தான். அ.து எப்படி கண்டதும் காதல் வரும்..?
பள்ளி பருவத்தில் தமிழ் ஆசிரியர் கம்ப இராமயணத்தில் சீதை இராமன் சந்திப்பு பற்றி சொன்ன விஷயத்தை எண்ணி அன்று நகைத்தவன்.. இன்று அதே போல அவனுக்கு நடக்கவும் கொஞ்சம் திகைத்துப் போனான்.
அன்று இராமன் மிதிலை நகர் வீதியில் வருகிறான். மாடத்தில் சீதை தோழிகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். கை தவறி பந்து வீதியில் செல்லும் இராமன் மேல் தவறுதலாக விழுந்து விடுகிறது.
மாடத்தில் இருந்து சீதை எட்டிப் பார்க்கிறாள். பந்து எங்கிருந்து வந்தது என்று இராமன் மேலே பார்க்கிறான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்".
இருவரில் யார் முதலில் பார்த்தது ? சீதை முதலில் பார்த்தாளா? இராமன் முதலில் பார்த்தானா ?
அண்ணல் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்று சொல்லி இருந்தால் முதலில் இராமன் பார்த்தான், பின் சீதையும் பார்த்தாள் என்று வரும்.
அவள் நோக்கினாள். அண்ணலும் நோக்கினான் என்று சொல்லி இருந்தால் முதலில் சீதை பார்த்தாள். பின் இராமன் பார்த்தான் என்று வரும்.
கம்பன் அப்படி சொல்லவில்லை.
அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்கிறான்.
இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பார்வைகள் ஒன்றை ஒன்று ஒரே சமயத்தில் பார்த்துக் கொண்டன. இன்னும் சொல்லப் போனால், பார்வைகள் பார்த்துக் கொள்ள வில்லையாம். பார்வைகள் சந்தித்தன. அவர்களால் அந்த பார்வையை நகர்த்த முடியவில்லை. கண்ணை எடுக்க முடியவில்லை. ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டது போல லாக் ஆகி கொண்டது.
அவளோ தோழிகளோடு மாடத்தில் நிற்கிறாள். அவனோ, வீதியில் பல வித மக்களோடு நடந்து போய் கொண்டிருக்கிறான். நின்று பார்க்க முடியாது. பார்வையை தவிர்த்தே ஆக வேண்டும். ஆனாலும் முடியவில்லை.
கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டனவாம். கவ்விக் கொண்டது என்றால் அதை சுலபத்தில் எடுக்க முடியுமா என்ன..? சரி, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் மனதில் என்ன ஓடியது?
இந்த உணர்ச்சிகள் இருக்கிறதே ஒரு நிலையில் நிற்காது. அலைந்து கொண்டே இருக்கும். அவர்கள் பார்த்த அந்த ஒரு கணத்தில் உணர்ச்சிகள் ஒன்று பட்டுவிட்டன. வேறு எந்த எண்ணமும் இல்லை. ஒன்றி விட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் தொடவில்லை. உடலால் இணைய வில்லை. ஆனால் ஒன்றாகிப் போனார்கள்.
இத்தனையும் நிகழ்ந்தது ஒரு நொடியில். அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் என்று கம்பர் சொல்லியிருந்தாரல்லவா..
அதே போல அவனும் உணர்ந்தான். மாயை என்றெண்ணிய காதலில் இன்று அவன் வசமாய் சிக்கிக் கொண்டான்.
தேன்மொழியும் உத்தம சோழனும் அந்த இராமன் சீதை போல வீதியில் தானே நின்று கொண்டிருக்கிறார்கள். வண்டியை கிளப்பி கொண்டு செல்ல வேண்டிய நிலை.
இருந்தும் விலக முடியவில்லை. கடினப்பட்டு அன்று பிரிந்து சென்ற பின்.. கிட்டதட்ட இரண்டரை மாதங்கள் கழித்து மீண்டும் அவளை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது அந்த புது காதலனுக்கு.
உறவுக்கார திருமண விழாவிற்கு தாயுடன் வந்திருந்தவன் கண்ணில் அன்று போல ஏதேச்சையாக விழுந்தாள் அவன் தேவதை.
ஆரஞ்சும் அடர் பச்சை பார்டரும் சேர்ந்தார் போல இருந்த அந்த லெஹாங்கா அவளை வானத்தில் இருந்து இறங்கி வந்த அழகி போல மிகைப்படுத்தி காட்டியது என்றால் பொய்யில்லை. பெண் வீட்டை சார்ந்தவள் போலும். மணமகளோடு சேர்ந்து நின்று கொண்டிருந்தாள்.
வரிசை தட்டுகளை சரிபார்த்து அவள் அடுக்கி வைத்து கொண்டிருக்க அவளது செழுமையான அங்கங்களின் அசைவில் ஆசை கொண்டு திரிந்தான் அக்காதலன்.
கண்ணெடுக்காமல் விழிகள் அவள் பின்னேயே வலம் வர அவன் சப்த நாடியும் அவள் பாத கொலுசில் அடங்கிப் போனது விந்தையிலும் விந்தை.
தாய் அன்னபூரணியுடன் மேடையேறி மணமக்களை வாழ்த்திவிட்டு இறங்குகையில் அவளை மீண்டும் பார்க்க நேரிட்டது. பிடித்து வைத்த கொழுக்கட்டை போல அவன் வழியிலேயே நிற்க அவள் அவனை கடந்து சென்றாள்.
அவள் மணம் அவன் நாசி புகுந்து சடுகுடு ஆட கிறங்கிப் போனான் உத்தம சோழன்.
'டேய்.. நீ தான் இப்படி லிட்டர் கணக்குல ஜொல்லு விட்டுட்டு இருக்க. அவளுக்கு உன்னை யாருன்னே தெரியல. இதுல பெரிய காவிய காதல் கணக்கா.. இராமன் சீதைன்னு பிணாத்திட்டு இருக்க..'
அவளை நினைத்து அவன் தவித்து கொண்டிருக்க அவனை காரி துப்பியது மனசாட்சி.
அப்போது தான் அவனுக்கு நிதர்சனம் உரைத்தது. அவன் வாழ்க்கை முறையே வேறு. படிப்பு முடிந்ததும் வேலை.. பின் தொழில் என்று அவன் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்க அவனுள் எழுந்த காதலை எண்ணி வியப்பாய் இருந்தது.
இத்தனை நாளில் ஒரு நாள் கூட மற்ற காதலர்களை போல அவன் அவளை தேடி அலைந்ததில்லை. அவன் வாழ்வோடு இயல்பாய் தான் வாழ்ந்தான். என்ன ஒன்று அவள் நினைவு நெருஞ்சி முள்ளாய் இதயத்தின் ஒரு ஓரமாய் உறுத்திக் கொண்டே இருக்கும்.
ஆனால் அவள் நினைவு அவனுள் எந்த விட தடங்கலாகவும் இல்லை. சொல்லப்போனால் சுகமாய் தான் இருந்தது.
ஒன்று நமக்கு கிடைக்க வேண்டும் என்று விதியிருந்தால் அது எந்த தடங்கல் வந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி .. தகர்த்தெறிந்து நம்மிடம் வந்து சேர்ந்தே தீரும். இது தானே பிரபஞ்சத்தின் விதி.
அவனுக்கு அவளை பிடித்திருந்தது. அதற்காக அவன் மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை. நடக்க வேண்டுமென்றால் நடக்கட்டும் என்ற ரீதியில் அவனிருந்தான். ஏனெனில் அவன் குண இயல்பே அதுதானே.
மற்ற உறவுகளுடன் அவன் ஐக்கியமாகி விட தேன்மொழி அவனை கண்களில் நிரப்பி கொண்டாள். அவளுமே முதலில் அவனை எதிர் பார்த்திருக்கவில்லை. அவனை கடந்து செல்லும் நொடி வரை அவன் யாரோ என்று தான் நினைத்தாள்.
அருகே அவன் கண்களை தரிசித்தப் பின் தான் இது அவன் தான் என்று உணர்ந்து கொண்டாள். அவனுக்கு தெரியாமல் அவன் பின்னேயே அவள் பாதங்கள் பயணித்தது. காதல் அதன் வேலையை அழகாய் காட்டியது அவளிடத்தில்.
முகத்தை மறைக்கும் கற்றை முடிகளை இலகுவாக ஒதுக்குவதிலிருந்து.. பேன்ட் பாக்கெட்டில் கைகளை விட்டு நெஞ்சு நிமிர்த்தி பேசும் தோரணையும்.. அவ்வப்பொழுது முழங்கையினுள்ளே சட்டையை மடக்கி விடுவதையும்.. அரிதாக இருந்த தாடியை தடவி கொடுப்பதையும்.. பேசும் பொழுது அவன் கண்களில் தெரியும் தீட்சண்யத்தையும்.. என அவனது ஒவ்வொரு அசைவையும் அவள் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆணைப் போல பெண் யோசிப்பதில்லையே. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஒரு பெண்ணின் மனதை ஆணும் அறிந்து கொள்ள முடிவதில்லையே. அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியமாகும். அந்த உறவு எல்லோருக்கும் அமைவதில்லை. அப்படியொரு ஒரு உறவு வாய்க்கப்பெற்றால் அதுவன்றோ சொர்க்கம்.
தேன்மொழியை பொறுத்த மட்டில் அவளுக்கு ஒன்று பிடித்து விட்டால் பிடித்தது தான். அவளுக்கு பிடித்துவிட்டால் அவள் வீட்டில் யாரும் தடையாக இருந்ததில்லை. அவள் அம்மாவாக இருந்தாலும் அப்பாவாக இருந்தாலும் இருவரும் அவள் மகிழ்ச்சிக்கே முன்னுரிமை கொடுத்து பழகியிருந்தனர். வீட்டின் செல்ல மகள் ஒன்று கேட்டு எவரும் முடியாது என்று சொன்னதில்லை இதுவரை.
இருந்தாலும் அவள் அடம்பிடித்து வாங்கியதில்லை. தவறாக எதுவும் செய்யாதவரை தடுக்க வேண்டிய அவசியமில்லையே அவள் பெற்றோருக்கு.
இது காதல் தான் என்பதை அவள் உள்மனம் நன்கு உணர்ந்திருந்தது. அவனை பற்றிய தகவல்களை திரட்டுவதில் தெளிவாயிருந்தாள் தேன்மொழி.
கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை என்று பாடியதெல்லாம் சாதாரண காதலர்களுக்கு. இவர்களது காதல் காவியம் படைக்க காத்திருக்கும் அற்புத காதலாயிற்றே. காலம் தாண்டி வாழும் உண்மை காதல் அல்லவா இவர்களது.
உண்மையான காதல் என்று
ஒன்று உள்ளது..
காலம் கடந்து போன பின்பும்
மண்ணில் வாழ்வது..
தேன் ஸ்வரம் - 9
திருமண வீட்டிற்கே உரிய கலகலப்பு குறையாமல் இருக்க மணமக்களை சுற்றி இளசுகள் கூடி நின்று கிண்டல் கேலி என்றிருக்க இதை தனது இருக்கையில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் உத்தம சோழன்.
உறவுகார பெண்மணியுடன் நின்று பேசிக் கொண்டிருந்த அன்னபூரணியின் கண்கள் மகன் தனியே அமர்ந்திருப்பதை கண்டதும் அந்த பெண்மணியிடமிருந்து விடைபெற்று விட்டு மகனருகே வந்து அமர்ந்தார்.
''என்னடா பண்ணிட்டு இருக்க.. போய் உன்னை மாதிரி பசங்க கூட சேர்ந்து இருக்க வேண்டியது தானே.."
"ச்சு... அதெல்லாம் எனக்கு ஒத்து வராதுமா".
"ஏன்டா அப்படி சொல்ற. ஒத்து வராமலா இத்தனை பசங்க அங்க சேர்ந்து நிக்குறாங்க.."
"ம்மா.. சொன்னா புரிஞ்சிக்கோங்க.. நான் அங்கே போனா.. எவனாவது ஏதாவது கிண்டுவான். பின்ன நாம ஒரு காலத்துல அப்படி இருந்தோம் இப்போ இப்படி இருக்கோம்னு.. எக்ஸட்ரா... எக்ஸட்ரா... ன்னு பேச்சு நீளும். பின்ன எனக்கு கோபம் வரும். அப்புறம் இது கல்யாண வீடா இருக்காது சுடுகாடா தான் இருக்கும். உங்களுக்கு அது ஓகே வா ".
சிரியாமல் சொன்ன மகனை முறைத்து பார்த்தவர் "வாயை மூடுடா.. நல்ல நாள் அதுவுமா என்ன பேச்சு பேசுற. எப்பா ராசா... நீ எங்கேயும் போக வேண்டாம் இங்கேயே இரு.." என்றவர் அவன் கூடவே சேர்ந்து அமர்ந்து கொண்டார்.
உத்தம சோழனின் தாய் தந்தை இருவருமே பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர்கள். திருமணமான புதிதில் வழக்கமான மண வாழ்க்கை போல இனிமையாக தான் சென்றது. ஆனால் போக போக தொழில் ஒடிந்து போக கடைசியில் அத்தனையும் தூக்கி தாரை வார்க்கும் நிலை.
அது தாங்க முடியாத உத்தம சோழனின் தந்தை அவனது பதினெட்டாவது வயதிலே மராடடைப்பு வந்து இறந்து போனார். அன்று வரை துக்கம் என்ற ஒன்றை அனுபவித்திராத உத்தம சோழன் அதன் பின் கற்று கொண்டது ஏராளம்.
வாழ்க்கைக்கு எது தேவை என்பதை நன்கு உணர்ந்தவனாக அவன் படிப்பில் முழுக் கவனம் செலுத்தினான். நண்பர்கள் உறவுகள் என்று அவர்கள் தங்கள் குடும்ப நிலையை காட்டி கேலி பேசவும் அவர்கள் அனைவரையும் ஒதுக்கி வைத்து விட்டான்.
தந்தையின் தொழில் தான் ஒடிந்து போனதே ஒழிய தாயின் சொத்துக்கள் இன்னமும் பாதுகாப்பாய் தான் இருந்தது. இருந்தும் எத்தனை இடர் வந்தாலும் அதில் கை வைக்க கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான் உத்தம சோழன்.
இன்னும் ஓராண்டில் படிப்பு முடிந்துவிடும். பின் தந்தையின் தொழிலை போலவும் தானும் புதிதாய் தொழில் ஒன்றை தொடங்கி தந்தை இழந்த அனைத்தையும் எப்பாடு பட்டாவது மீட்டெடுக்க வேண்டும். யார் யாரெல்லாம் தங்களை எல்லாம் எள்ளி நகையாடினார்களோ அவர்கள் முன்னே மீண்டும் கெத்தாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வெறியோடு இருக்கிறான் உத்தம சோழன்.
இகழ்ச்சி என்பது ஏழை மக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா என்ன.. நன்றாக வாழ்ந்து கெட்டவர்களுக்கும் பொருந்துமே.
கேலி கிண்டல் என்பது அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் மனதை மகிழ்விக்கும்படி அமைய வேண்டும். அது தான் உண்மையான கேலி பேச்சுக்கு அழகு.
ஆனால் பலரும் இதை சரிவர செய்வதில்லை. அடுத்தவர் மனம் புண்படும் என்றெல்லாம் யோசிப்பதேயில்லை. தனக்கு தான் பேச தெரியும் என்று கண்டதையும் பேசி மனதை காயபடுத்துவதில் வல்லவர்களாக திகழ்வார்கள்.
ஓரிடத்திற்கு சென்றால் தேவையில்லாத பேச்சு வரும் என்று தோன்றினால் அதை தவிர்ப்பது தானே புத்திசாலித்தனம். உத்தம சோழனும் அந்த ரகம்.
"ஹேய்.. பூரணி.. நீ அன்னபூரணி தானே.." என்றபடி அவர்கள் அருகே வந்த பெண்மணியை உத்தம சோழனும் அன்னபூரணியும் இது யாராக இருக்கும் என்று எண்ணியபடி பார்த்தனர்.
"ஏய்.. பூரணி உனக்கு என்னை அடையாளம் தெரியலையா.." என்றபடி அவர் பூரணியின் அருகில் அமந்துகொண்டார்.
"இ..இல்லை.. சரியா நியாபகத்துக்கு வரல.. நீங்க..". அன்னபூரணிக்கு சுத்தமாக நினைவு வரவில்லை.
"நான் மீனாட்சிடி. உன்னோட காலேஜில படிச்சேனே. நியாபகம் இருக்கா.."
"ஆங்.. நியாபகம் வந்திடுச்சி. காலேஜ் படிக்கும் போது தினமும் மல்லிப்பூ வச்சிட்டு வர மல்லி மீனாட்சி தானே நீ.." என்று கல்லூரி கால பெண்ணாக பட்ட பெயரையெல்லாம் சரியாக சொல்லி நினைவுப் படுத்த மீனாட்சியும் அன்னபூரணியும் தங்கள் மாணவ பருவத்திற்கே சென்று விட்டனர்.
கிட்டதட்ட பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேர் பார்த்து கொள்ளும் தோழியரின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லவா வேண்டும்.
கண்களில் மகிழ்ச்சியுடன் தோழியுடன் கதை பேசும் அன்னையை கண்ணில் மின்னிய ஆனந்த கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தான் உத்தம சோழன். தந்தை இறந்த பின் தாயை இப்படி மகிழ்ச்சி பொங்க அதுவும் அந்த சந்தோஷம் கண்களில் பிரதிபலிக்கும் படி பேசி பார்த்ததில்லை எனலாம்.
அவனுக்கு தாயின் இளமை மீண்டு வந்தது போல பிரம்மை. இதற்கு காரணமான மீனாட்சிக்கு மனதார நன்றி சொல்லி கொண்டான்.
"உன்கிட்ட பேசிட்டு இருந்ததுல இவனை அறிமுகப்படுத்த மறந்துட்டேன் பாருடி. இதோ.." என்று உத்தம சோழனின் கை பிடித்து "இவன் தான் என்னோட மகன் உத்தம சோழன்".
"சின்ன வயசுல இவனை பார்த்தது.. இப்போ நல்லா ஜம்முன்னு வளர்ந்துட்டான். அவங்க அப்பா மாதிரியே நல்ல உயரமில்ல.." என்று சொல்ல அன்னபூரணிக்கு அவர் கணவரின் நினைவில் மனம் கலங்கியது. அவர் இருந்திருந்தால் மகனும் மற்ற பையன்கள் போல இயல்பாய் வாழ்ந்திருக்கலாமே. பெற்ற மனம் குழந்தையின் மகிழ்வை தானே விரும்பும்.
"என்னடி டல்லாகிட்ட. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா.."
"அப்படியெல்லாம் எதுவுமில்லை மீனா.. அவங்க அப்பா நியாபகம் அவ்ளோ தான். ஆமா.. உனக்கு எத்தனை பசங்க.."
"எனக்கு ஒரே ஒரு பொண்ணு தான். இங்க தான் எங்கயாவது இருப்பா.. எங்க இருக்கான்னு பார்க்கிறேன்.." என்று கண்களை சுழல விட்டவர் ஒரு திசையை காட்டி "அது தான் என் மகள்" என்று கை காட்டியவர் மகளை அருகே அழைத்து அன்னபூரணியிடம் அறிமுகப் படுத்தினார்.
"இவள் தான் என் பொண்ணு தேன்மொழி".
உத்தம சோழனுள் வாழ்வில் இராண்டாம் முறையாக ஆனந்த அதிர்ச்சி. அவள் வந்து விட்டாள். அவன் தேவதை இப்போது அவனை தேடி வந்து விட்டாள். தொலைதூர கனவு என்றெண்ணியவனுக்கு இப்படி தொட்டு விடும் தூரத்தில் காணவும் முகத்தில் தவுசன் வால்ட் பிராகாசம்.
கண்ணும் கண்ணும் ஒன்றை ஒன்று தொட்டு சென்றன. அவள் தலையிலிருந்த பூவின் மணம் அந்த கணத்தை ஆழ்ந்து அனுபவிக்க சமாரம் வீசியது. காதல் என்ற ஒன்று புகுந்து விட்டால் கள்ளத்தனம் செய்ய சொல்லி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
காதல் கொண்ட இரு உள்ளங்களும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை தழுவி செல்வதில் திறமையாளராக இருந்தனர்.
பெண்ணுக்கு இயல்பாய் அமைந்த நாணம் நேருக்கு நேர் பார்க்க தடை போட.. ஆணுக்கு அவன் வகுத்து வைத்திருந்த வரை முறைகள் தடா போட்டது.
மீனாட்சியும் அன்னபூரணியும் இவர்களது காதல் நாடகத்தை ஆராயாமல் தங்கள் பேச்சில் ஐயக்கியமாகியிருந்தனர்.
தரையை தொட்டு விரிந்திருந்த நீண்ட பாவாடையை இரு பக்கமும் தூக்கி பிடித்திருந்தவள் அமர்வதற்கு இடம் பார்க்க அவன் தனக்கு அருகே இருந்த நாற்காலியை கண்களால் சுட்டி காட்டி அமர சொன்னான்.
அவளும் மறு பேச்சின்றி அமர்ந்து கொண்டாள். காதலின் பாஷை அவர்களிடத்தில் அழகாய் பேச தொடங்கியது. கண்களின் பாஷை புரிந்து கொண்டால் அங்கே வாய் வார்த்தைக்கு வேலையேது?
அவ்வப்போது இருவரும் முகம் பார்ப்பதும் பின்னர் விலக்கி கொள்வதுமாய் ஒரு வித சங்கோஜத்துடன் இன்ப அவஸ்தையில் மிதந்து கொண்டிருந்தனர். அந்த கணங்கள் இருவருக்கும் புதிது.
ஒருவர் அருகாமையை மற்றவர் அறியாமல் அனுபவித்து மகிழ்ந்தனர்.
மகளின் அருகே யாரோ ஒரு அந்நிய ஆண் மகன் அமர்ந்திருக்கவும் தேன் மொழியின் தந்தைக்கு மூக்கு புடைத்தது. அதுவரை வீட்டு பெரியவர்களுடன் அமர்ந்திருந்தவர் "இந்த மீனாட்சி மகளை தனியா விட்டுட்டு எங்கப் போனா" என்று நினைத்தப்படி மகளின் அருகே வந்தார்.
வந்தவர் அப்போது தான் கவனித்தார் உத்தம சோழனின் கம்பீர தோற்றத்தை. சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் தான் அமர்ந்திருந்தான். ஆனால் பார்ப்பதற்கு ஏதோ பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தது போல கம்பீரம் அவனிடத்தில்.
பரந்து விரிந்த அவன் தோள்கள் அவன் ஆளப் பிறந்தவன் என்பதை சொல்லாமல் சொல்ல அவனை உற்று நோக்கினார் அவர். முகத்தில் இராஜகலை வெளிப்படையாகவே தெரிந்தது. கண்டிப்பாக இவன் சாதாரணவனாக இருக்க முடியாது. சிறப்பாக தொழில் நடத்தும் அவரால் அவனது குணநலனை பார்த்த மாத்திரத்தில் உணர்ந்து கொள்ள முடிந்தது.
தன்னருகே யாரோ நிற்பது போல தோன்றவும் தேன்மொழியும் உத்தமசோழனும் ஒரு சேர நிமிர்ந்து பார்த்தனர். அந்த அழகில் ஒரு தகப்பனாய் அவருள் மெல்லிய ஆசை முகிழ்த்தது.
"அப்பா" என்றபடி தேன் மொழி எழ.. பூரணியிடம் பேசிக் கொண்டிருந்த மீனாட்சி திரும்பி இவர்களை பார்த்தார். "என்னங்க வந்துட்டீங்களா. இது யாருன்னு தெரியுதா.. என் கூட படிச்ச அன்னபூரணி.. நாம கூட இவங்க கல்யாணத்துக்கு சேர்ந்து போனோமே.." என்று நினைவுறுத்த அவருக்கு புரிந்தது.
அவர்களது செல்வநிலை அவர் அறியாததா.. இடையில் ஏதோ போதாத காலம்.. நடக்க கூடாதது நடந்து விட்டது. இருந்தும் அவர்கள் குடும்பத்தின் மீதான மரியாதை அவருக்கு குறையவில்லை. ஏனென்றால் அன்னபூரணியின் குடும்பம் நேர்மைக்கு பெயர் போனது.
அந்த ஒரு காரணமே அவருக்கு அந்த குடும்பத்தை பிடிக்க போதுமானதாக இருந்தது.
"ஹாங்.. நல்லாவே நியாபகம் இருக்கு மீனாட்சி" என்று மனைவியிடம் சொன்னவர்.. "எல்லோரும் செளவுக்கியமா" என்று பொதுப்படையாக பூரணியிடம் கேட்டவர் மகளின் அருகே அமர்ந்து கொண்டார்.
"என்னங்க இந்த பையன் உத்தம சோழன் தான் பூரணியோட ஒரே பையன்" என்று சொல்ல அவருக்கு மனதில் ஓடியது எல்லாம்.. 'கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா' என்பது தான்.
மகள் அப்பா என்றழைத்ததும் அதிராமல் நிமிர்வாகவே தன்னை பார்த்த அந்த ஆடவன் மேல் மதிப்பெண் கூடியது. தவறான எண்ணமிருந்திருந்தால் கண்டிப்பாக என் கண் பார்த்திருக்க மாட்டான் என்று யூகித்தவருக்கு ஏனோ மனம் நிறைந்த திருப்தி.
ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்றில்லாமல்.. பேராசை கொண்டு ஒற்றை பிள்ளையை மட்டும் பெற்று வளர்த்திருக்க.. மகள் வளர்ந்து பெரியவளாகி திருமண வயதை தொட இருக்கிறாளே. அவளுக்கு வரப் போகின்ற மணவாளன் இராஜகுமாரனாக இருக்க வேண்டும் என்று தானே எந்த ஒரு தகப்பனும் விரும்புவான். அவரும் அப்படி தான் விரும்பினார். கூடுதலாக அவர் வீட்டோடு மருமகனாக இருந்தால் நலம் என்றெண்ணினார்.
'உத்தம சோழனும் ஒற்றை பிள்ளை. தாய் மட்டும் தான். அவரையும் சேர்த்து வீட்டோடு வைத்து கொண்டால் ஆகிற்று' என்று தான் அவருக்கு தோன்றியது. இருந்தும் அது நடக்கும் போது பார்த்து கொள்ளலாம். ஒரு வேளை மகளுக்கு பிடிக்காமல் போனால்.. இவனை போல இன்னொருவனை பார்க்க வேண்டியது தான்.
அப்போது கூட அவனைப் போல ஒருவன் என்று தான் நினைத்தார். அந்தளவு அவன் அவர் மனதில் பதிந்து போனான்.
சீதையின் மனதை போல இராமனும் ஜனகரின் மனதில் தன் தடத்தை அழுத்தமாய் பதித்து விட்டான்.