வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வீணையின் தேன் ஸ்வரம் நீயடி 💖- கதை திரி

Status
Not open for further replies.
தேன் ஸ்வரம்-10 🍯🍯🍯

தேன் மொழியின் குடும்பத்தோடு சேர்ந்து உத்தம சோழனின் குடும்பமும் உணவுண்ண அமர இந்த முறை தேன்மொழிக்கும் உத்தம சோழனுக்கும் நடுவே தேன்மொழியின் தந்தை புகுந்து கொண்டார்.

'அய்யோ வடை போச்சே' என்று தேன்மொழி வருந்த அவளது தந்தை எதையோ சாதித்த பெருமையில் புன்சிரிப்புடன் இலையில் கை வைத்தார். என்ன இருந்தாலும் பெற்றவர் அல்லவா. கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக இருப்பதில் தவறில்லையே.

அவருக்கு உத்தமசோழன் மீது நல்ல அபிப்பிராயம் இருந்த போதும் குஞ்சை அடை காக்கும் தாய் கோழியாய் மாறிப் போனார். பாவம் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. காதல் கடல் மலை கண்டம் எல்லாம் கடந்து எங்கிருந்தாலும் போய் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தே தீருமே.

வகை வகையான உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட தேன்மொழி அவளுக்கு பிடித்தமான இனிப்பு பலகாரத்தை முதலில் உண்டு விட்டாள். அவளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடித்தம். தந்தையை நிமிர்ந்து பார்க்க அவரும் புரிந்தார் போல் அவர் இலையிலிருந்ததை மகளுக்கு கொடுத்துவிட்டார்.

பலகாரம் வாயில் வைத்ததும் கரைந்து தொண்டை குழிக்குள் வழுக்கி கொண்டு சென்றது. அதன் சுவையில் மெய் மறந்து கண்களை மூடி ரசித்திருந்தாள் தேன்மொழி.

'இன்னும் ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்கும் ஆனால்.. ம்கூம்.. உடல் எடை கூடி விடுமே..' அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

மற்ற பதார்த்தத்தை அவள் ருசி பார்க்க நினைக்க அவள் முன் அவன் கரம் நீண்டிருந்தது. "இந்தா என்னோட பங்கையும் சேர்த்து சாப்பிடு" என்று உரிமையுடன் அவள் இலையில் உத்தம சோழன் வைக்க தேன் மொழியின் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சி.

அவளின் அப்பனுக்கோ அதிர்ச்சியில் கண்கள் வெளியே தெறித்து விடும் போல. உத்தம சோழனோ இதை வெகு இயல்பாய் எடுத்துக் கொள்ள அவர் திருதிருவென முழித்தார்.

இதை பார்த்த மீனாட்சி "தேன்மொழி நீ என்ன பண்ணுற. இன்னும் சின்ன குழந்தைன்னு நினைப்பா?" என்று கடிய..

"இருக்கட்டும் விடு மீனா.. இந்த வயசுல தான் எல்லாம் சாப்பிட முடியும். நாற்பது தாண்டிச்சுன்னு வை ஒன்னும் கண்ணுல பார்க்க கூட முடியாது. நீ சாப்பிடுமா" என்றபடி அன்னபூரணியும் தனது இலையிலிருந்ததை அவளுக்கே வைக்க தேன்மொழிக்கும் அவள் தந்தைக்கும் கண்கள் நிரம்பியது அவரது அன்பில்.

இன்று தான் பார்க்கிறார். ஆனால் அக்கறையாய் நடந்து கொள்கிறாரே.

அன்னபூரணியை தனது மாமியாராக மனதில் கருதிய தேன்மொழிக்கு இவர் குணம் எப்படியோ என்று சிறு கலக்கமிருக்க இப்போதோ அவரது செயலில் அவர் மீது முழுதும் நம்பிக்கை கொண்டாள்.

தேன்மொழியின் தந்தைக்கோ அவர் இன்னொரு தாய் போல மகளை பார்த்து கொள்வார் என்றெண்ணம் தோன்றி மறைந்தது.

"எல்லோரும் ஒன்னு கூடியாச்சா.. கடைசில நான் மட்டும் தனியா.." என்ற மீனாட்சி அவர் இனிப்பையும் மகளுக்கே கொடுத்து விட எல்லோர் முகத்திலும் புன்னகை. அக்காட்சியை புகைப்பட கலைஞர் தனது புகைப்பட கருவியில் பதிவாக்கிக் கொண்டார்.

அன்பெனும் ஊஞ்சலில் ஆடுகையில் கால்களிரண்டும் ஓய்வதில்லையே. கைகள் தளரவும் விடுவதில்லையே. இங்கேயும் அவர்கள் அப்படித்தான் அன்பை அடிப்படையாக கொண்டு உறவைக் கொண்டாடினர்.

விழா முடிந்து கிளம்பும் வரை எல்லோரும் ஒன்றாகவே இருந்தனர்.

நம் நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் அடுத்தவர் கல்யாண வைபோகத்தில் தான் சமைந்து வரும் என்பது எத்தனை உண்மை.

விடைபெற்று செல்கையில் தேன்மொழி உள்ளுக்குள் கலங்கி போனாள். 'இனி பார்க்க முடியாதே..' அவள் எண்ணம் கண்களில் தெரிய உத்தம சோழன் அதை கண்டுக் கொண்டான்.

கண்களை மூடி திறந்து 'எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன். நீ கவலைப் படாதே' என்பது போல செய்தி சொல்ல தேன்மொழியின் வதனம் வர்ணஜாலங்களை பூசிக் கொண்டது.

இதை கண்டும் காணாதது போல லிட்டில் பிரின்ஸசின் டாட் பார்த்தும் விலகிக் கொண்டார். மனிதருக்கு கொஞ்சம் நாகரீகம் தெரிந்து விட்டதோ என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

வண்டியை எடுப்பதற்காக அங்கிருந்து வந்தவர் வண்டியை ஸ்டார்ட் செய்த படி மகளருகே வந்து நின்றார். எப்போதும் துள்ளி குதித்து வரும் மகள் இன்று இவரது வண்டி சத்தம் கேட்டும் திரும்பி பார்க்கவில்லை. அதை கண்டு அவருக்கு லேசாக பயம் பிடித்துக் கொண்டது.

எங்கே மகளுக்கு தான் முக்கியமற்றவனாக மாறி விடுவேனோ என்று..

மீனாட்சியும் ஸ்னேகிதி பூரணியுடன் இன்னும் நின்று பேசி கொண்டிருக்க கடைசியில் வீட்டு பெண்கள் இருவருக்கும் தான் வேண்டாதவனாக ஆகி விட்டேன் என்றெண்ணம் அவர் மனதில் முளைவிட்டது.

ஹார்னை அழுத்தி ஒலி எழுப்பி அவர்களை அவர் பக்கமிழுக்க விழைந்தார். மீனாட்சியோ "ஏன் ஹார்ன் அடிக்கிறீங்க. கொஞ்சம் பொறுங்க " என்று சொல்ல மனிதர் பல்பு வாங்கியது தான் மிச்சம்.

"ம்மா.. போதும்.. விட்டா நாள் முழுதும் நின்னு பேசிட்டே இருப்பீங்க. வாங்க போகலாம்" என்று உத்தம சோழன் சொல்ல..

அதில் மலர்ந்தவராக "பரவாயில்லை.. மாப்பிள்ளை நம் கட்சி தான். கொஞ்ச நேரத்தில் நான் பயந்து விட்டேனே" என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

"டேய் நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு.." என்று அவன் தோளில் பூரணி ஒரு அடியை போட..

"நான் வேணும்னா உங்களை அவங்க வீட்லயே கொண்டு போய் விடுறேன். உட்காந்து நிதானமா பேசிட்டு வாங்க" என்று காரியவாதியாக பேசி தேனுவின் அப்பாவின் பிராண வாயுவை நொடியில் தடை செய்தான்.

மனிதருக்கு நெஞ்சு வலி வராத குறை. நெஞ்சை பிடித்தப்படி அடுத்து என்னவோ என்று வண்டியிலிருந்தபடி பார்க்க..

"அய்.. இந்த ஐடியா நல்லா இருக்கே பூரணி. நமக்கு இப்படி ஒரு எண்ணம் வரவே இல்லை பாரு. நீ வேணும்னா வீட்டுக்கு வாயேன்.." என்று மீனாட்சி அழைக்க..

"இல்லை மீனா இன்னொரு நாள் பார்க்கலாம். நீ உன்னோட அட்ரசை சொல்லு. ஒரு நாள் மீட் பண்ணலாம்" என்ற தாயின் பேச்சில் இடைபுகுந்தவன்..

"அம்மா.. நீங்க எந்த யுகத்துல இருக்கீங்க.." என்றவன் மீனாட்சி பக்கம் பார்த்து "ஆன்ட்டி நீங்க உங்க லோகேஷனை குகூல் மேப்ல ஷேர் பண்ணுங்க. நான் அம்மாவை கொண்டு வந்து விடுறேன்".

"ஓ.. சரிப்பா.. ஆனா என்கிட்ட ஸ்மார்ட் போன் இல்லையே.."

"அதுக்கென்ன ஆன்ட்டி..அங்கிள் கிட்ட இருக்குமே.." என்றவன் அவரை பார்த்து "அங்கிள் நீங்க ஷேர் பண்ணுங்க.." என்று கூற..

அவர் தனது போனை எடுக்க அதுவோ சார்ஜ் இல்லாமல் உயிரை விட்டிருந்தது அவரது உயிரை எடுப்பதற்கு வேண்டி.

"என்ன அங்கிள் உங்க போனுல சார்ஜ் இல்லையா" அவரது முகம் பார்த்தே யூகித்து கேட்க..

"ஆமாப்பா.." என்று அவர் சொன்னார்.

"சரி விடுங்க அங்கிள்". பெரிய இவனாக விட்டு கொடுக்க..

"தேனு பாப்பா.. அதான் உன்கிட்ட போன் இருக்குதுல.. பையனுக்கு அனுப்பி கொடுத்துரு.." அங்கிருந்து விரைவாக கிளம்பி விடும் எண்ணத்தில் அவர் சொல்ல உத்தம சோழன் மனதுக்குள் மத்தள சத்தம் கொட்டியது.

பெற்றவர்கள் முன்னேயே மகளின் நம்பரையும் வாங்கி.. வீட்டு முகவரியையும் சேகரித்து கொண்டானே.. படுபாவி பயல்.

தேன் மொழிக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது. கள்ளன் எப்படி சாமர்த்தியமாக காய் நகர்த்தி விட்டான்..

'எப்படி எப்படி.. என் அம்மா வாயாலயே வீட்டிற்கு வர சொல்லி அழைக்க வைக்கிறாயா நீ... பலே கில்லாடிடா.." என்று தேன் மொழியின் கண்கள் அவனிடம் பேச..

"ஹா..ஹா.. மருமகனை மாமியார் கூப்பிடாம வேறு யார் கூப்பிடுவா" என்று கெத்தாக காலரை உயர்த்திக் கொண்டான்.

'என் நம்பர் வாங்கினியே.. உன் நம்பரை தர வேண்டியது தானே..'

கண்கள் பேச மொழி அங்கே அந்நியப்பட்டு போனது. அவள் விழிகள் கண்ட பின்னால் அவனுக்கு பேசும் மொழிகள் மறந்து போனது தான் காதலின் அற்புதம்.

'ம்கூம்.. இது சரி பட்டு வராது. மாப்பிள்ளை தான் பொண்ணை அழைக்கணும். அது தான் பொண்ணுக்கு அழகு'' அவன் கண்கள் கறாராக சொன்னது.

'பார்க்க பிள்ளை பூச்சி மாதிரி இருந்துட்டு என்னம்மா ஏமாத்துற. ச்சீ.. பிராடு..'

'ம்..ம்.. நான் பிராடு தான்.. உன்கிட்ட மட்டும்..' என்று கண்களில் காதல் பொங்க பேச தேன்மொழியின் கன்னங்கள் செர்ரி பழம் போல சிவந்து போனது.

'வீட்டுக்கு போனதும் கால் பண்ணுனனு வை எங்க அப்பாகிட்ட போட்டு கொடுத்துருவேன்..' என்று செல்லமாக மிரட்டியவள் 'அழைத்து பேசு' என்ற மறைமுக செய்தியை சொன்னாள். இப்போது உத்தம சோழனுக்கு சிரிப்பு பொங்கியது.

சிரிக்கும் பொழுது கூடுதல் தேஜஸோடு அவன் முகம் மிளிர அந்த கணத்தை ஆசையோடு அள்ளிக் கொண்டாள் தேன்மொழி.

அத்தனை அழகையும் ஒன்றாக்கிய ஒரு சிரிப்பு அது. அவனுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தான் அதில் தனிச்சிறப்பு.

வார்த்தைகள் சொல்லாத அன்பை கண் பாஷை மூலம் பேசி தங்கள் முதல் காதலை வளர்த்துக் கொண்டனர் அவர்கள். இரு இணைக் கண்கள் எழுதும் ஒரு வண்ணக் கவிதை தானே இந்த காதல்.

வாய் வார்த்தையாக இன்னும் காதலை உறுதி செய்யவில்லை இருவரும். ஆனால் இருவருக்கும் நடுயே பொதுவாயிருந்த காதல் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தொடங்கியது. காதலுக்கு யார் அனுமதியும் தேவையா என்ன. காதலுக்கு சொந்தக்காரர்களே வழிவிட்டு நிற்க சிவப்பு கம்பளத்தில் உலா வருவது தானே காதலுக்கு அழகு.

இவர்கள் முக மலர்ச்சி தேனுவின் தந்தைக்கு விஷயத்தை கடத்த உள்ளுக்குள் நொந்துப் போனார்.

கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்? கன்ப்யூசன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே! என்று பாடி ஆடிய தனுஷின் இடத்தில் இப்போது இவரல்லவா மாட்டிக் கொண்டார்.

பாவம் வயது ஆகி விட்டதல்லவா.. இளசுகளின் சூது எளிதில் இவருக்கு பிடிபடவில்லை போலும்.

"சரி பேசியது போதும். மீனாட்சி வா கிளம்பலாம்" எரிச்சலுற்றவராக சொல்ல.. மீனாட்சியும் பூரணியிடமிருந்து விடை பெற்று வந்து காரிலேறிய அந்த நிமிடத்திற்குள் தேன்மொழியும் உத்தம சோழனும் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முற்பட்டனர்.

தேன்மொழி யாருக்கும் தெரியாமல் அவனது சட்டை நுனியை பற்ற சராலென அவனுக்குள் பற்றியது காதல் நெருப்பு. உடல் தீண்ட வில்லை.. ஆனால் உள்ளத்துக்குள் புகுந்து யுத்தம் செய்தாள் அவன் காதலி. பாவபட்ட ஆணும் தான் என்ன செய்வான். தவித்துப் போனான்.

'அடியே..அழகியே.. என்னை என்ன செய்கிறாய் நீ..'

அவஸ்தையுடன் அவன் அவள் முகம் பார்க்க.. அந்த கண்களில் பிரிவின் வேதனை.

என்ன செய்வதென்று தெரியாமல் தலையை கோதிக் கொண்டவன் இதழ் குவித்து ச்ச்.. சென்று முத்தத்தை காற்று வழி அனுப்ப அது சேர வேண்டிய இடத்தில் சரியாய் போய் சேர்ந்தது.

காற்றில் பறந்து சென்ற அந்த முத்தமே அவன் காதலின் ஆழத்தை பெண்ணவளுக்கு பறைசாற்றியது.

அதில் நாணமுற்றவளாக அவன் சட்டை நுனியை இறுகப் பற்ற அவன் இதய துடிப்பு வேகமெடுத்தது.

'அடியேய் மாயக் கண் அழகி உன் மாமன் பாவமடி.. மயக்கும் மாய விழியாலே என் விரதத்தை முறிக்காதே.. பின்னே நடக்கும் விபரீதத்திற்கு நான் பொறுப்பல்ல'. அவன் உள் மனம் அபாய மணி எழுப்பியது.

அவளது வெட்கத்தை தாண்டிய அவளின் விலை மதிப்பற்ற புன்னகை அவனை கபளீகரம் செய்ய துடித்தது.

அதில் தவித்தவனாக.. 'இராட்சசிடி நீ. மனுஷன் நிலைமை தெரியாம படுத்தி எடுக்குற ' அவன் கடிய..

'இந்த அன்பு உண்மை தானே.. பொய்யில்லையே..' பெண்ணிற்கே உரிய அச்சம் அவனிடம் கேள்வி கேட்டது.

கண்களால் சமாதானம் சொன்னவன் அலை பாய்ந்த அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டான். அவையும் இது தான் சாக்கென்று பச்சக்கென்று இறுக கட்டிக் அணைத்துக் கொண்டது.

அவிழ்த்திரிந்த அவள் கூந்தலின் அழகில் சொக்கிப் போனவனாய்.. நெற்றியில் புரண்டோடிய முடிகளை விரல் நுனி கொண்டு நகர்த்தி காதின் பின் சேர்த்தான்.

அந்த சிறு தொடுகையே அவன் உணர்வுகளை தகர்த்தெறிய போதுமானதாக இருந்தது. அவளை தேற்றப் போய் கடைசியில் அவன் தோற்றுப் போனான் பலகீனமாய்.

எங்கே அவளை நெருங்கி விடுவோமோ என்று நொருங்கி போனவனாக அவளை விட்டு விலகி சென்றான். தாயை வண்டியில் ஏற்றிக் கெண்டவன் கையசைத்து 'போய் வா.' என்க.. அவளும் மகிழ்ச்சியுடனே சென்றாள்.


கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்..
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்..
ஆனாலும் என்ன தாகம்..
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன..
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன..
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்..
 
Last edited:
#பிரம்மாஸ்திரம்_44
#வீணையின்_தேன்_ஸ்வரம்_நீயடி

வீணையின் தேன் ஸ்வரம் நீயடி(VTSN) கதையின் அடுத்த அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மக்களே...
வாழ்க வளமுடன்



 
Status
Not open for further replies.
Top