நேசம் -03
எங்கும் அவள்! எதிலும் அவள்! விழி மூடியும் அவள் பிம்பமே! விழி திறப்பினும் அவள் பிம்பமே! இது அவள் மேல் கொண்ட நேசமல்ல.. அவள் மீது கொண்ட உணர்வு! அவள் மீது கொண்ட கோபம்… அவள் மீது கொண்ட அற்றாமை... நினைக்க விரும்பவில்லை என்றாலும் கண்முன்னே காட்சி படமாக விரிந்தது அவன் வாழ்ந்தும் வாழாத வாழ்க்கை.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள ஓர் கிராமம் தான் அத்தியூர். அதாவது கும்பகோணத்தில் இருந்து சிறு தொலைவில் இருக்கும் உத்தமதாணி கிராமத்திற்கு அருகில் இருக்கும் கிராமம். இந்த கிராமத்து மக்களின் வருவாயே விவசாயம் சார்ந்து தான் உள்ளது. அதிலும் நெல், கோதுமை. வாழை, கரும்பு என் பல விதமாக பயிர்கள் பயிரிடப்படுகிறது. இத்தைகைய கிரமத்தில் பிறந்தவன் தான் இளமாறன்.
இந்த கிராமத்தில் பெரிய தலைக்கட்டு குடும்பம் தான் வீரய்யன் - ஜெயலட்சுமி தம்பதியர்கள். இவர்களின் முதல் குமரன் தான் சுயம்புலிங்கம். அடுத்து இளையவள் பேச்சுகனி. மாறனின் அன்னை. அதன் பின் பல வருடங்கள் இடைவெளியில் பிறந்தவர் தான் ராசமணி.. வீட்டின் கடைக்குட்டி.
திருமணத்திற்கு பின் ஒரு விபத்தில் பெற்றவர்களோடு கணவனையும் சேர்ந்து இழக்க பதினைந்து வயது மகனோடு தனித்து நின்றார் பேச்சுகனி. இருப்பினும் அண்ணனின் வீட்டில் கையேந்தவில்லை அந்த கிராமத்து பெண்மணி. தனது கணவனுக்கு சொந்தமான தோட்டம் துறவுகளே ஏக்கர் கணக்கில் இருக்க அதை வைத்தே தங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டனர்.
ஆனால் அண்ணன் மீது கொல்லை பாசம். அதுவும் தம்பி ராசு மீது உயிரையே வைத்திருந்தார். கணவன் இன்றி தனித்து வாழ்ந்தவரோடே அக்காவிற்கு பாதுக்காப்பாக தங்கிக் கொண்டான், ராசமணி. அப்போது அவருக்கு இருபத்தி இரண்டு வயது.
அதனால் தான் என்னவோ. தன்னை விட ஏழு வயது பெரியவராக இருப்பினும் அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்துள்ளான் மாறன். ராசுவும் அதற்கு ஏற்ற மாதிரி தோழனாகவும் கண்டிக்க வேண்டிய இடத்தில் தகப்பனாகவும் மாறி விடுவார்.
தேவிப்பிரியா, தரகர் மூலம் பெரிய மாமன் சுயம்புலிங்கம் கொண்டு வந்த வரன். ஒரு வகையில் தூரத்து சொந்தம் என்பதால் பேச்சுகனிக்கும் பிடித்துவிட்டது. மாறனிடம் புகைப்படத்தை காட்ட பார்த்ததுமே, பெண் பிடித்துவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அவளின் அமைதியான முகம் அவனை ஈர்த்தது என்பதே உண்மை. மறுப்பு சொல்ல எதுவும் இல்லாததால் அவனும் சம்மதித்து விட்டான்.
அதன் பின் துரிதமாக திருமண பேச்செல்லாம் முடிந்து விட, திருமணம் நாளை எனும் போது அதற்கு முந்தின நாள் நிச்சியதார்த்தம் வைத்திருந்தனர். நலங்கு எல்லாம் முடிந்து விட அப்போது தான் வாயை திறந்தார் மணமகளின் அன்னை பொன்னம்மா.
“ஏன் சம்மந்தி உங்க அண்ணன் வூடு தான் நல்லா தாராளமா இருக்கே.. பொறவு எதுக்கு இந்த மாதிரி வூட்டுல இருக்கிங்க” என்று பழைய காலத்து மச்சு வீடு போன்று தோற்றம் கொண்ட வீட்டை சுற்றி பார்த்தபடியே கேட்க, அவர் அருகிலே அமர்ந்திருந்த பிரியாவும் தாய் சொல்வதை கேட்டபடி அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
திருமண வேலையில் கவனமாக இருந்த பேச்சுகனி அவர் பேச்சின் சாராம்சம் புரியாது. "அதுதான் சம்மந்தி நீங்களே சொல்லியாச்சு, அது அண்ணா வூடுனு. பொறவு எதுக்கு அங்க போய் தங்கிட்டு, இதோ இங்கிருந்து இரண்டு எட்டு எடுத்து வைச்சா, வூடு வரப்போகுது. பொறவு என்ன”, என்றபடி மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.
ஏனோ அந்த பேச்சுகளை கேட்ட ராசுவுக்கோ, இந்த திருமணம் சரியாக வருமா என்றபடியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
“மாமா என்னாச்சு... ஏதோ சிந்தனையில் மிதக்குறாப்புல இருக்கு" என்று கேட்ட மாறனை பார்த்தவர்,
"ஏன் மருமவனே கண்ணால பொண்ணு பார்த்தா அவ்ளோ சூதானமா இருக்கிறாப்புல தெரியலையே.. ஆத்தா பேச்சை கேட்டு மண்டை மண்டை ஆட்டிட்டு இருக்கிற மாதிரி தெரியுது... இது சரியா வருமா" என்றிட,
"இதுல என்ன மாமா இருக்கு. என்னை மாதிரி அப்பா இல்லாமல் வளர்ந்த புள்ள மாமா அது... அதுனால் ஆத்தா மேல பாசம் வைச்சு இருக்கும்... அவ்ளோ தான்" என்று இலுகுவாக சொல்லியவனின் முகம் கல்யாண களையில் ஜொலித்துக் கொண்டிருக்க அதற்கு மேல் எதுவும் சொல்லாது ராசுவும் அமைதியாகி விட்டார்.
அடுத்த நாள் பிரம்ம முகூர்த்தில் நல்லபடியாக திருமணம் முடிந்து இதோ தம்பதியர் சகிதமாய் மணமகன் இல்லம் வந்தாயிற்று. நேற்றைய இரவு திருமணத்தை நினைத்து ஒரு சுகமான நினைவிலேயே மிதந்து கொண்டிருக்க, அதன் விளைவு தற்போது கண் சொக்கியது இளமாறனுக்கு இருந்தும் விழிகள் அவன் மனையாளை தான் தேடியது.
இவள் தான் தன் மனைவி என்று உறுதியான பின் அவள் மீது ஒரு பிடித்தம். அந்த பிடித்தமே ஏதோ ஓர் உணர்வாக மாற, அந்த பெயர் தெரியா உணர்வோடே அவளை பார்வையால் ரசித்து கொண்டு இருந்தான் இளமாறன்.
இவன் நேசம் வைத்தால் போதுமா அவளும் அல்லவா நேசம் வைக்க வேண்டும். நெடு நெடுவென கறுமை நிறத்தில், இருந்தவனை கண்டவளுக்கு துளியும் அவன் மீது நேசம் வரவில்லை... ஏன் பாசம் கூட வரவில்லை. கருமை கண்ணணாக இருந்தாலும் அவனின் மாய சிரிப்பு அனைவரையும் ரசிக்க தூண்டுவதாக தான் இருக்கும். ஆனாலும் அவன் மனைவியை ஈர்க்க வில்லை போலும்!!
ஆம் அவனின் தோற்றமே அவளுக்கு ஒரு பிடித்தமின்மையை கொடுத்தது. எப்போதும் அன்னையின் பேச்சை மறுக்காதவள் இதற்கும் தன் மறுப்பை தெரிவிக்கவில்லை. தலையாட்டி பொம்மையாக அவனை மணந்து கொண்டு இதோ அவனின் மனைவியாக வலம் வந்து கொண்டு இருந்தாள்.
பதற்றத்தோட வந்த ராசுவோ, "மாறா. ஏதோ களத்து மேட்டுல பிரச்சனை போல... நான் போய் ஓரெட்டு பார்த்திட்டு வந்திடுறேன்" என்று பேசியபடி கிளம்ப, “இரு மாமா. அவனுங்களை பேசி சமாளிக்க கஷ்டம் நானும் வரேன்" என்று அன்னை மறுக்க மறுக்க அவரோடு சென்றுவிட்டவன். வெகு நேரம் ஆகியும் வராது இருந்தவன் வந்தது என்னவோ நேரம் தாழ்ந்து தான்.
அவனை கண்ட பேச்சுகனி தான், “எய்யா மாறா... இன்னைக்கு சடங்கு வைச்சிருந்தா, நீ என்ன இம்புட்டு நேரம் கழிச்சு வந்திருக்க... மருமக, புள்ள எம்புட்டு நேரமா தான் காத்துக்கிட்டு கிடக்கும்” என்று அதட்டிட, கண்களோ அலைபாய்ந்தது மனைவி முகத்தை பார்க்க, அவளும் இவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள். அவளின் சுருங்கிய முகத்தை கண்டு வருந்தியவன்,
"கொஞ்ச கூலி கொடுக்கிறதுல கணக்கு பிரச்சினை ஆகிடுச்சு… அது சரி செஞ்சிட்டு வர இம்புட்டு நேரம் ஆகிடுச்சு மா…" என்று மனைவி மீது பார்வை பதித்தவாரே கூறிக் கொண்டு இருக்க… அமைதியாக இருக்காது வாயை திறந்தார் பிரியாவின் அன்னை பொன்னம்மா.
"ஏன் மாப்பிள்ளை… ஏதோ பெரிய படிப்பு படிச்சுபுட்டு சென்னை பட்டணத்துல, பெரிய உத்யோகத்துல இருக்கிறதா சொன்னாங்க. ஆனா நீங்க சேத்துல எல்லாம் வேலை செஞ்சிட்டு வந்திருக்கிங்க" என்று முகம் சுளிக்க, மாறனுக்கோ கோபம் பொங்கியது. இருந்தும் சூழ்நிலை கருதி அமைதியானவன்,
"ஏன் அத்தையாரே அதில் என்ன தப்பு இருக்கு. நம்ம வயல் நாம தானே வேலை பார்க்கனும், எங்களை மாதிரி இருக்கிறவங்க சேத்துல கால் வைக்கலனா நீங்க சோத்துல கை வைக்க முடியுமா" என்று புன்னகை முகத்தோடு கேட்க, பொன்னம்மாள் முகம் விழுந்துவிட்டது. பிரியாவோ தனக்கு தாலி கட்டிய கணவனை தான் வித்தியாசமாக பார்த்து கொண்டு இருந்தாள்.
முகமெல்லாம் வேர்வை சொட்டி, சட்டை கொஞ்சம் கசங்கியபடி மாறியிருக்க, வெள்ளை வேட்டியிலும் கொஞ்சம் சேறு படிந்து கரையாக மாறியிருந்தது. அவனை காண காண உள்ளுக்குள் ஆற்றமை தான் பெறுகியது. மாறனோ தான் கால தாமதமாக வந்ததால் தான் அவளின் முகம் இவ்வாறு உள்ளது என நினைத்தபடி அறைக்குள் நுழைந்து கொண்டான். சடங்கும் தள்ளி வைக்கப்பட, அதில் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தாள் தேவிப்பிரியா.
சடங்கு இல்லை என்றாகி விட, அதற்கு பிறகென்ன தனி தனி அறை தான். இதில் தாமதமாக வந்த தன்னையே நொந்து கொண்டவன், தேவியின் தரிசனத்திற்கு காத்திருக்க ஆரம்பித்தான் மாறன். ஆனால் அடுத்த நாள் விடியல் அவ்வளவு நன்றாக இருக்காது என்று அறியாது மெத்தையில் புரண்டபடியே உறங்கி போனான்.
காலை வேளை… அசதியில் உறங்கி கொண்டு இருந்தவனை எழுப்பினாள் தேவிப்பிரியா. மனைவியை கண்டு புன்னகை புரிந்திட அவள் இதழ்களும் புன்னகையில் விரிந்தது. தான் புன்னகை செய்தால் மற்றவரையும் புன்னகை செய்ய தூண்டும் விதமான புன்னகை தான் மாறனின் புன்னகை. அதன் பிரதிபலிப்பே அவளிடம் தோன்றிய புன்னகை!!
தன்னை சுத்தபடுத்தி கொண்டு வந்தவன் உணவு சாப்பிட அமர, அவனின் பார்வையோ மனைவி மீதே படிந்திருந்தது. மகனின் புன்னகை இதழும்… மலர்ந்த முகமும் பேச்சுகனி முகத்திலும் சந்தோஷத்தை கொடுத்தது. அவை எல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் மறைய போகிறது என்று அறியாது கேசரி செய்ய ஆரம்பித்தார் பேச்சுகனி.
நெடுநரேம் தூங்கி எழுந்த பின்பே வெளியே வந்தார் பொன்னம்மா. மாறன் சாப்பிடுவதை கண்டவரோ, அவன் எதிரில் அமர்ந்தபடி, "மாப்பிளை எப்போ சென்னை பட்டணத்துக்கு போக போறோம்” என்று ஆவலுடன் கேட்க, உணவை எடுத்த கரமோ அப்படியே அந்தரத்தில் நின்றது.
“என்ன அத்தையாரே நான் எப்போ சொன்னேன், சென்னைக்கு போறேனு. இனி இங்கன தான் நம்ம சோலி, நம்மளுடையதே கடை, தோப்பு துறவு எல்லாம் இருக்கும் போது அங்கன என்ன வேலை… அதுதான் அங்கே இறக்குற வேலையை விட்டுவிட்டு வந்திரலாம்னு இருக்கேன்” என்றிட அவனின் பேச்சில் இவர் தான் சிலையாக உறைந்து போனார்.
"என்ன மாப்பிள்ளை விளையாடுறிகளா… நீங்க சென்னை பட்டணுத்துல வேலை பார்க்கிறதால தான் உங்களுக்கு என் பொண்ணை கொடுத்தேன். இங்கன எல்லாம் சரிப்பட்டு வராது. அதுவும் கண்ணாலம் ஆகாத உங்க மாமன் இங்க இருக்கும் போது என் பொன்னு எப்படி இந்த வூட்டுல தங்குவா” என்று அங்கலாய்க்க, அடுத்த நொடி "கொஞ்சம் வாயை மூடுறீங்களா" என்று அவனின் கர்ஜனை சத்தத்தில் அனைவரும் கூடிவிட்டனர்.
"அடி ஆத்தி இப்போ எதுக்கு இப்படி கத்துறீக. இல்லாததையா நான் சொல்லிட்டேன். ஏன் மாப்பிள்ளை உங்க மாமனுக்கு கண்ணலாம் ஏற்பாடு செய்து அது நின்னு போயிடுச்சாமே… அதுனால் தான் இன்னும் கண்ணாலம் பண்ணாம ஒத்தையா இருக்காரா” என்றும் வேறு சந்தேகம் கேட்டு வைக்க, கோபத்தில் கண்கள் சிவந்து விட்டாது மாறனுக்கு
அதை கண்டதும் பேச்சை மாற்ற விரும்பியவராக, “என்ன மாப்பிள்ளை இப்போ எதுக்கு இந்த கோபம்... ஏற்கனவே உங்க ஆத்தா கிட்ட இதை பற்றி பேசிட்டேனே” என்று நொடித்துக் கொள்ள, இப்போது அவனின் பார்வை கூர்மையாய் படிந்தது அன்னையின் மீது.
“ம்மா இங்கன என்ன தான் நடக்குது. உன்கிட்ட நான் முன்னமே சொல்லி இருக்கேன் தான். நான் படிச்ச எம்.பி.ஏ படிப்பு நம்ம கடை எல்லாம் கவனிச்சுக்க தான். கண்ணாலம் முடிய, வேலை செஞ்சிட்டு பொறவு நம்ம கிராமத்துக்கு வந்து இங்கேயே வேலை பார்க்கிறது தான் என் ஆசைனு உனக்கு தெரியாதா" என்று கோபமாக கேட்டவனை கண்டு அவருக்கும் பதற்றம் தொற்றிக் கொள்ள,
"இல்ல ராசா. பொன்னு போட்டோ பார்த்ததும் ரொம்ப ஆர்வமா பார்த்தியா... அது தான் கண்ணாலம் முடிஞ்சதும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். அதுவும் இல்லாமல் சம்மந்தி அம்மாவும் மக கூட இருக்க ஆசைபட்டாக அதுதான் சென்னை பட்டணுத்துல நீ வேலை பார்த்தா, வசதியா இருக்கும்னு விட்டுட்டேன் ராசா” என்று கையை பிசைந்தபடி சொல்ல... மாறனால் எதவும் பேச இயலவில்லை. அப்படியே சோர்ந்து போய் அமர்ந்து விட்டான்.
அமர்ந்தபடியே மனையாள் முகம் பார்க்க, அவளோ எதுவும் பேசாது அவள் அன்னை பின் இருக்க, எரிச்சலாக தோன்றியது. எந்த அமைதி அவன் பிடித்தது என்று நினைத்தானோ அதுவே இன்று அவனுக்கு பிடிக்காது போக…
அதன் பின் எதுவும் பேசாது கண்ணை இறுக மூடிக் கொண்டவன், “இங்கிருந்தால் இவர் எதாவது திரும்ப திரும்ப பிரச்சினை செய்வாரோ” என்று பொன்னம்மாள் பற்றி சிந்தனையில் இருந்தான்.
அதுவும் அன்றி தன் மாமனை பற்றி திரும்பவும் பேசினால் தன்னால் கட்டுபடுத்த முடியுமா என்று நினைத்து கொண்டவனுக்கு ஒரே ஆறுதல் தன் மாமன் இங்கு இல்லை இவர் பேசியதை கேட்க நேரவில்லை என்பது தான்.
நெடு நேரம் யோசித்தவன் பின் ஒரு முடிவு எடுத்தவனாக, அடுத்த இரண்டு நாளிலே தன் மனையாள் மற்றும் அவள் அன்னையோடு சென்னை கிளம்பினான். இனி எல்லாம் நன்றாக நடக்கும் என நினைத்து! ஆனால் அதன் பின் நடந்த நிகழ்வுகள் அவன் சுயத்தை இழக்க செய்தது என்று சொன்னால் மிகையாகாது!
துளி துளியாய் விழுந்த மழை தூரலில் நினைவு கலைந்தவன்… வாழ்க்கையின் கசந்த பக்கங்களை நினைக்க விரும்பாது தளர்ந்த நடையோடு வீட்டை நோக்கி சென்றான் இளமாறன். இப்போது அவன் மனதில் மனைவியை நினைத்து வலி இருப்பினும், ஏதோ புதைக்குழியில் இருந்து மீண்டுக் கொண்டதாகவே நினைக்க தோன்றியது.
••••••••••
அத்தியூர்!
பாரதி வீடு!!
“பாரதி மா… அப்பா உனக்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும் மறைக்காமல் சொல்லனும்" என்று கேட்ட தந்தை சிவசாமியை பார்த்தவளுக்கு, அவர் என்ன கேட்க வருகிறார் என்று புரிந்து போனது.
"கேளுங்க ப்பா சொல்றேன்” என்றிட, "ஏன் கண்ணு மாப்பிள்ளை கூட கோச்சிக்கிட்டு தான் இங்கன வந்துட்டியா... என்ன பிரச்சினை டா" என்று கேட்க,
"ஆமா ப்பா சண்டை போட்டு தான் வந்தேன். ஆனா அந்த பிரச்சினை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை" என்றிட, அதை கேட்டதும் விறு விறு வென்று வந்து தன் மகளை அடித்தார் ஜோதி.
"ஏன்டி கழுதை என்ன பிரச்சினை இருந்தாலும் புகுந்த வீட்டுலே இருந்து பிரச்சனையை தீர்க்கனும்னு தெரியாதாடி. நான் உங்க அப்பாரு கூட எவ்ளோ சண்டை போட்டு இருப்பேன்.. ஆனா நானா இந்த வீட்டு படியை தாண்டி இருப்பேனா. ஆனா நீ என்ன செஞ்சு தொலைச்சு இருக்க... உன்னை இங்க பார்க்க வந்து அவருக்கு விபத்து ஆகிப்போச்சு. இனி உன் வாழ்க்கை என்னடி ஆகும்” என்று சொல்லியபடியே அடித்தார்.
அவர் அடிகளை எல்லாம் வாங்கி கொண்டவளோ அமைதியாக நிற்க, "ஏன்டி எதாச்சும் சொல்லி தொலையேன்... இப்படி கல்லு மாதிரி நிக்கற” என்று மீண்டும் இரண்டு அடி போட்டார்… அவரின் பேச்சை கேட்டபடி இருந்தவளோ,
“அந்த வீட்டுல இருந்து சண்டை போட அவன் என் அப்பா மாதிரி இல்லையே மா” என்றவள் வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் பொதிந்து இருக்க இறுகி போய் நின்றாள் பாரதி.
இரவு என்று ஒன்று வந்தால் தானே. பகல் என்று ஒன்று வரும். அ
துப் போன்று தான் துன்பம் என்று ஒன்று வந்தால் தானே... இன்பத்தை சுவைக்க முடியும். இன்பமும் துன்பமும் கலந்து வருவது தான் வாழ்க்கையின் நியதி!
தொடரும்…