வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹40.கண்கள் உறங்க நினையாதே கதை திரி

Status
Not open for further replies.
1. கண்கள் உறங்க நினையாதே

ஆரல்வாய்மொழி
அருகே ஒரு அழகிய கிராமம்; வளர்பிறை சந்திரன் வலம் வந்து கொண்டிருந்த இரவு வேளை அது. அந்த ஊரின் சிறிய பேருந்து நிறுத்தத்தின் பின்புறமிருந்து கிசுகிசுப்பாக பேச்சு சத்தம் கேட்டது.
" என்னடா முழிக்கிற சீக்கிரம் புள்ளையை கூட்டிட்டு போவே " என்று பாரிவேந்தனை‌ துரிதபடுத்தினார், சித்தாராவின் தந்தைவழி ‌தாத்தா ராமசுவாமி.
" மாமா " என்று தயக்கமாக இழுத்த பாரியை நோக்கி,
" இந்த பிள்ளை இனிமே முழுக்க முழுக்க உன் பொறுப்பு " என்று கூறியபடி தன் பேத்தியின் மலர் கரத்தை பற்றி பாரியின் வலுவான கையில் வைத்தார், ராமசுவாமி. அந்த கணத்தில் பாரியின் ஆறடி தேக்குமர தேகம் சிலிர்த்தது உண்மையே. பின்னே சமீபத்தில் தாய் தந்தையை இழந்த பெண் அதுவும் வயது வந்த பெண்ணின் பொறுப்பை ஏற்பது என்றால் சும்மாவா?

சிறிது யோசனையாக தன் அருகே இருந்தவளை பார்த்தான், பாரி. தங்க நிற சரிகை வேய்ந்த மெரூன் கலர் பாவாடை சட்டையில் , மலங்க மலங்க விழித்த வண்ணம் குழந்தை போல் நின்றிருந்தாள், சித்தாரா. அந்த இருளில் கூட தேயாத முழுநிலவு போல் இருந்தது, அவளின் முகம்;
ஆனால் அதில் ஏதோ கலக்கம் தென்பட்டது. சித்தாரா பதின்பருவ பெண்; குழந்தைக்கும் குமரிக்கும் இடைப்பட்ட இரண்டும் கெட்டான் இயல்புடைய‌ வயது. தாய் தந்தையின் அரவணைப்பும் கண்டிப்பும் அதிகம் தேவைப்படும் நேரத்திலா இப்படி நடக்க வேண்டும். மாமன் தன்னை உற்று பார்க்கவும் லேசாக சிரித்தவள் முகத்தை மீண்டும் உம்மென வைத்து கொண்டாள்.

பாவம் அவளும் என்ன தான் செய்வாள்? சில மாதங்களுக்கு முன் பெற்றோரை இழந்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த ஊரை விட்டு ஒரே ஒரு ராத்திரியில் தாத்தாவை தவிர எவரும் அறியாமல் முற்றிலும் புதிய ஊருக்கு செல்ல போகிறாள். அதன் விளைவுகள் ஒருபுறம் இருக்க, இப்படி அவசர அவசரமாக புறப்படுவதே அவள் அமைதியை குலைக்க செய்வதாக இருந்தது.
ஆனால் , அவளை தன்னோடு அழைத்து செல்லும் பாரிவேந்தன் அவளுக்கு புதியவன் அல்ல; அவளது சொந்த தாய்மாமன் ; அவள் அம்மா செல்வராணியின் ஒரே தம்பி. ராணிக்கும் பாரிக்கும் வயது வித்தியாசம் மிக அதிகம். செல்வராணி , பாரியின் பெற்றோர்க்கு வளர்ப்பு மகள்; ரொம்ப வருடங்கள் கழித்து தங்களுக்கென ஆண் பிள்ளை பிறந்த பொழுது கூட வித்தியாசம் காட்டாது இருவரையும் உடன்பிறந்தோர் போலவே வளர்த்தனர்; இருவருக்கிடையே இயல்பாக ஏற்பட்ட சகோதர பிணைப்பும் வலுவாகவே இருந்தது. பாரிவேந்தனுக்கு கிட்டத்தட்ட இரண்டாம் அன்னையாகவே இருந்தாள், செல்வராணி.

தங்கள் வளர்ப்பு மகள் ராணியை நன்றாக படிக்க வைத்து உரிய வயது வந்ததும் செல்வாக்கான இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்னரும் கூட பாரி- ராணி உறவில் எந்தவொரு சிக்கலும் இருந்தது இல்லை. ராணியின் கணவர் ராஜசேகர் கூட அக்கா தம்பியின் பாசத்திற்கு உரிய மதிப்பு கொடுத்தே நடந்து கொண்டார்.அதற்கேற்ப பாரிவேந்தனும் அக்கா குடும்பத்துடன் இணக்கமாக முறையில் நடந்து கொண்டான்; அவர்களுடன் நல்லுறவை வளர்த்து கொண்டான். அவன் தந்தையை இழந்த பின்னர் அவனை தூணாக தாங்கி கொண்டது , அக்காவும் அக்கா கணவரும் தான்.
அக்காவிற்கு அடுத்து அவனது உயிர்‌ அக்கா மகள் சித்தாரா. அவள், செல்வராணி- ராஜசேகருக்கு ஒற்றை குழந்தை என்பதால் அந்த குடும்பத்திற்கே அவள் செல்லம் தான். வருடாவருடம் விடுமுறை தினங்களில் தமக்கை வீட்டில் ஆஜராகி விடுவான், பாரிவேந்தன். சித்து‌ , தாரா , தாரு, தாரு குட்டி ,தாரு செல்லம் என சித்தாரா வை தலையில் தூக்கி வைத்து ஆடாத குறையாக தான் கொண்டாடுவான்.

அவள் இந்த பூமிக்கு வந்த போது அவளை முதன் முதலில் வரவேற்று கையில் ஏந்தியவனே அவன் தான்.அப்போது அவனுக்கு வயது பன்னிரண்டு. தாய் வீட்டுக்கு பிரசவத்திற்கு வந்த அக்காவை ராமருக்கு உதவி புரிந்த அணில் போல் அவ்வபோது அக்கறை காட்டி பார்த்து கொண்டான், பாரி. கை குழந்தை சித்தாரா வை அவன் தரையில் விட்டதே இல்லை.காது குத்து வைபவத்தில் தன் மடியின் மீது சிறுமி சித்தாராவை பூப்போல மடியில் தாங்கி இருந்தான். ராஜசேகரின் பெரிய வீட்டின் ஓரத்தில் வயது பெண் சித்தாராவிற்கு ஓலை கட்டியவனும் அவனே. அதுவும் சேகர் வீட்டினர் சிலரின் பலத்த எதிர்ப்பை தாண்டி.
மற்றபடி எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது, ராணியும் ராஜாவும் ஒரு சாலை விபத்தில் மரணிக்கும் வரை. பிறகோ சினிமாவில் வருவது போல் திக் திக் திருப்பங்கள் தான்.


இன்னுயிர் சகோதரியையும் மதிப்பிற்குரிய மாமாவையும் மூட்டையாக பார்த்த பொழுதே பெருமளவு உடைந்து போனான், பாரி.
கண்ணால் பார்ப்பது காதால் கேட்பது
எதுவும் மூளைக்கு ஏறாமல் சாவி கொடுத்த பொம்மை போல் வளைய வந்த அக்கா மகளை கண்டதும் இன்னமும் நிலைகுலைந்து போனான். பட்டாம்பூச்சி திரும்பவும் கூட்டுப் புழு நிலைக்கு சென்றது போல் தனக்குள்ளே உறைந்து போன சித்துவை தேற்றும் வித்தை அவனுக்கு புரியவில்லை.ஆனால் நாட்கள் போக போக தான்
தான் தடுமாறி நிற்கும் நேரம் இதுவல்ல என்று அவனுக்கு புரிந்தது. ஏனெனில் ராஜசேகரின் அத்துணை சொத்திற்கும் ஒரே வாரிசான சித்தாராவை அனைத்து பக்கமும் ஆபத்து சூழ்ந்த நிலை; அற்பமாக சொத்து சுகத்திற்காக நெருங்கிய உறவினரே ஏதேதோ திட்டம் போட்டனர்.

இரண்டு மாதம் கிராமத்தில் இருந்து விட்டு தன் வேலை நிமித்தம் வெளியூருக்கு சென்ற பாரிவேந்தனை , தொலைப்பேசியில் அழைத்து உடனே வர சொன்னார், அக்காவின் மாமனார் ராமசுவாமி. பேத்தியின் மீது உண்மையான‌ அக்கறை கொண்ட மனிதர்.
அரக்க பறக்க ஓடி வந்து பார்த்தால்,
சித்தாராவின் அத்தை மகனுக்கும் , இப்போது தான் பதினெட்டில் அடியெடுத்து வைத்து இருக்கும் சித்தாரா விற்கும் அவசர திருமண ஏற்பாடு. அதுவும் அக்கா மகளின் வின் விருப்பம் சிறிதும் இன்றி. விடுவானா அவன் ? சித்தாரா வின் எதிர்கால கனவுகள் அவனறிந்தது தான். ஆனால், சட்டத்திற்கு அஞ்சாத கூட்டம், அவர்களின் உறவினர் கூட்டம். ஓரளவு விபரம் தெரிந்த அவனிடமே கொஞ்சம் எகத்தாளமாக தான் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்கள் தோரணையில் வாழும் சிறிய புத்தி கொண்ட அவர்களை சாதுவான சுபாவம் கொண்ட பாரிவேந்தனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.‌அக்கா மகள் விடயத்தில் அதிரடியாக எதை செய்யவும் அவனுக்கு விருப்பம் இல்லை.


சித்தாரா கெஞ்சியும் பாரி மிஞ்சியும் சாதகமாக ‌எதுவும் நடக்காது போக, முதியவர் ராமசுவாமி தான் இந்த யோசனையை கூறினார். அதன்படி பாரி அவர் பேத்தி சித்தாராவை யாருக்கும் தெரியாமல் இரவு வேளையில் அழைத்து கொண்டு ஊரை விட்டே ஓடி விடுவது.
படித்து ஐ.டியில் வேலை செய்யும் பாரிக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. ஆனால் வரைமுறை அற்ற அவர்களிடம் போட்டி போட அவன் தயாராக இல்லை. அத்தோடு அக்கா மகளின் எதிர்காலம் மிகவும் முக்கியம். எனவே தான் பாரி ராமசுவாமி யின் வார்த்தைகளை ஏற்று கொண்டான். ' தாரா குட்டி அவளது விருப்பம் போல் படிக்க வேண்டும்; அக்கா மாமாவின் ஆன்மா அப்போது தான் சாந்தி அடையும் ' என்று தனக்குள் சொல்லி கொண்டான்.


" ஏலே பஸ் கிளம்ப போவுது. இதான் கடைசி பஸ். திருநெல்வேலியை தாண்டிட்டா வேற எந்த பிரச்சனையும் இல்ல. மத்ததை நான் பாத்துக்கிடுதேன் " என்று கூறி அவர்களுக்கு தன் வார்த்தைகளில் ‌திடம் தந்தார், ராமசுவாமி. கிளம்பும் முன் தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள், பேத்தி. " மாமா கூட பத்திரமா இருக்கணும். அவன் சொல் பேச்சு கேக்கணும். அவனை தொந்தரவு பண்ண கூடாது என்ன ? " என்று புத்திமதி சொன்னபடி பேத்தியின் தலையை வருடி கொடுத்தார், ராமசுவாமி.
" போனதும் எதிர் வீட்டு சுரேஷ்க்கு தகவல் சொல்லிடு. நான் தெரிஞ்சுக்கிடுதேன் " என்றார், ராமசுவாமி.

ஒருவழியாக இருவரும் தாத்தாவிடம் விடைபெற்று கொண்டு பேருந்தில் ஏறி ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது; ஊர் எல்லையை தாண்டும் முன்னரே அடாவடியாக வண்டி வழிமறித்து நிறுத்தப்பட்டது.
அரிவாள் சுமந்த சிலரால் சித்தாராவும் பாரியும் பேருந்தில் இருந்து இறக்கி அல்ல இழுத்து செல்லப்பட்டனர்.
பாரிவேந்தனை இதற்கென்று ரெடியாக இருந்த நால்வர் பிடித்து கொள்ள,
" ஏம்லே எங்க அம்புட்டு பேரு கண்ல மண்ணை தூவிட்டு உன் மாமனோட‌ ஓடி போக பாத்தியாலே " என்று சித்தாராவை கை நீட்டி அறைந்தான், அவளது அத்தை மகன் ரத்னவேலு. அதை கண்ட பாரியின் இரத்தம் கொதித்தது. திமிறிய பாரிக்கு ஒரு அடியாளிடமிருந்து நாலு அடி உதை‌ விழுந்தது.
" இவ கிட்ட என்னலே பேச்சு? இப்பவே இங்கனயே வச்சு தாலி கட்டிட்டா பிறவு இவ உனக்கு அடங்கி தான போவணும் " என்று தன் மகன் ரத்தினவேலுக்கு விபரீத யோசனை சொன்னார், அவனின் தந்தை.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்களே அதுபோல் அவர் சொன்னது தான் மிச்சம். ஏற்கனவே
தன் பாக்கெட்டில் தயாராக வைத்து இருந்த தாலியை கையில் எடுத்தான், வேலு. ஒருமாதிரி இளித்து கொண்டே சித்தாரா வின் அருகே நெருங்கினான்; அச்சத்தில் அவளின் குண்டு மல்லி கண்கள் அகல விரிந்தன; தேகம் பதறியது; கைகால் உதறியது. " அம்மா " என்று உரக்க கத்தினாள். பயம் ஒருபக்கம் இருந்தாலும் தாராவின் கைகள் அனிச்சையாக அத்தை மகனின் முயற்சியை தடுக்க முயன்றன.ஒரு கட்டத்தில் தாராவின் எதிர்ப்பு பலமாக இருக்கவும், அவளை கீழே தள்ளிவிட்டான், ரத்னம். தன்னை தடுத்த அவள் கையை தன் செருப்பு காலால் மிதித்தான், அந்த அரக்கன்.

சித்தாரா துடிப்பதை கண்ட அவள் தாய்மாமன் பாரி அனைவரையும் தள்ளி விட்டு விட்டு தன் தாருவை நோக்கி ஓடினான்; அவளை காக்க வேண்டும் என்ற உத்வேகம் அவனது உடலில் புது தெம்பை கொடுத்தது.
வேலு விற்கும் பாரிக்கும் இடையே பலத்த பல பரீட்சை நடந்தது. அதன் முடிவின் போது சித்தாராவின் கழுத்தில் தாலி ஏறியது.


சில மணி நேரங்களுக்கு பிறகு


சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கும் அந்த எஸ்.ஈ.டீ.சி பேருந்தின் கடைசிக்கு முந்தைய வலப்பக்க இருக்கையில் தளர்ந்து போய் அமர்ந்து இருந்தான், பாரிவேந்தன். அவனருகே கழுத்தில் தாலியும் கலங்கிய கண்களுமாக சித்தாரா. இனி...


- தொடரும்
 
2. கண்கள் உறங்க நினையாதே' தாலியே தேவையில்லை
நீதான் என் பொஞ்சாதி ! ' என்று பேருந்தின் பழைய ஆடியோ சிஸ்டம் பாடி கொண்டிருந்தது. ' ப்ச்' என்று நெற்றியை தேய்த்தபடி அருகே இருந்தவளை பார்த்தான், பாரி.
கழுத்தில் தொங்கிய புதிய தாலியை பார்த்து பார்த்து அழுது கொண்டு இருந்தாள், சித்தாரா. இரவு நேர அமைதியில் அவளது அழுகை மற்ற பயணிகளை ஈர்ப்பதை உணர்ந்த பாரி, " உஷ் தாரா இப்ப என்ன ஆகிட்டு ன்னு இப்படி கண்ணை கசக்குற " என்று கொஞ்சம் கண்டிப்புடன் கேட்டான். தேம்பிய வண்ணம் " அப்போ இது " என்று தாலியை‌ நீட்டி காண்பித்தாள், தாரா. சில கணங்கள் ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு, " இது வெத்து கயிறு. நாம மதிப்பு கொடுத்தா தான் அது தாலி " என்று இயந்திர குரலில் கூறினான், பாரி.

புரியாத பாவனையை அவனுக்கு பதிலாக தந்த தாரா , " ஆனா அம்மா இதை " என்று ஏதோ சொல்ல வந்து தேம்பினாள். " சித்து ப்ளீஸ்டா. புரிஞ்சுக்க. நடந்தது கல்யாணமும் இல்ல. இது தாலியும் இல்ல. வேணும் னா இப்பவே தூக்கி வீசு கண்ணம்மா " என்றான், பாரி. " இல்ல மா...மா எனக்கு பயமா இருக்கு" என்று தாலியை கெட்டியாக பிடித்து கொண்டாள். " அய்யோ" என்று தலையில் அடித்து கொள்ள போனவன் சுற்றி முற்றி பார்த்து விட்டு, " சரி எல்லாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். இப்போ தூங்கு " என்று முடிந்தவரை அமைதியான குரலில் கூறினான். " தூக்கம் வர மாட்டேங்குது" என்று குழந்தை போல் கூறியவளின் ‌தலையை வருடி கொடுத்து , " கண்ணை மூடி சாஞ்சி உட்காரு " என்றபடி அவள் இருக்கையை அட்ஜஸ்ட் செய்து தந்தான். எப்போதும் அவன் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசி குறும்பு செய்யும் தாரா அமைதியாக அவன் பேச்சை கேட்பதே அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவள் மனத்தின் பாதிப்பை அவனுக்கு உணர்த்துவதாக இருந்தது.
' அக்கா இனி என்ன செய்றது ன்னு ஒன்னும் புரியலையே ' என்று மேலே பார்த்து புலம்பினான், பாரி.

சித்தாரா அழுத களைப்பில் தூங்கி விட்டிருக்க, பாரிவேந்தனுக்கோ சிவராத்திரி தான். மறுநாளை
பிரச்சினையின்றி எப்படி எதிர்கொள்வது என யோசித்து கொண்டிருந்தான். பாரிவேந்தன், ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். அவன் நர்மதா அபார்ட்மெண்ட்ஸ் ன் ஒரு நவீன ப்ளாட் வீட்டில் தங்கி இருக்கிறான். பலவிதமான மக்கள் வசிக்கும் அவ்விடத்தில் சிலபல விதிமுறைகள் உண்டு. எனவே திடீரென சித்தாரா வை அழைத்து போய் யாருக்கு என்ன பதில் சொல்வது என குழம்பி போயிருந்தான்,பாரி. அவர்கள் திட்டமிட்டபடி ஊரில் இருந்து ரகசியமாக வந்திருந்தால், கல்லூரியில் இடம் கிடைக்கும் வரை அவளை பெண்கள் விடுதியில் பாதுகாப்பாக தங்க வைப்பதாக இருந்தான். ஆனால் இப்போதோ என்னென்னவோ நிகழ்ந்து விட்டது. சித்தாரா இருக்கும் நிலையில் அது சாத்தியமான ஒன்று இல்லை. இனி அவளை தன்னுடன் தான் வைத்து கொள்ள வேண்டும்.
பாதி தூக்கத்தில் ' அம்மா அம்மா ' என புலம்பியவளை தோளில் சாய்த்து தட்டி கொடுத்தான், பாரி. மறைந்து போன தமக்கையை எண்ணி அவன் கண்களும் நீரை சுரந்தன." சித்தாரா " என்று தொண்டை கிழிய கத்தினான், ரத்னவேல்." சார் இது ஹாஸ்பிடல்" என்று அவனை சமாதானம் செய்ய முற்பட்டார், செவிலிய பெண். ஆம், பாரிவேந்தன் அடித்த அடியில் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டான், ரத்னம். பாரியின் அடித்து தள்ளி விடும் சமயத்தில் எதிரே வந்த காரின் மீது விழுந்ததும் இதற்கு ஒரு காரணம் தான். ஒற்றை காலை கட்டு போட்டு தொங்க விட்டிருக்கின்றனர்.
சித்தாரா வை அடித்த கரத்தை தூக்கி பார்க்க கூட முடியவில்லை. அவனது எல்லா பழிவெறியும் பாரியை விட சித்தாரா பக்கமே திரும்பியிருக்கிறது." டேய் மகனே இப்போ என்ன ஆகிட்டு ன்னு நீ இந்த கத்து கத்துறே. ஆம்பள சிங்கம் டா நீ . சீக்கிரமே குணமாகி போய் அந்த பொட்டை கழுதையை இழுத்துட்டு வா " என்று ஏற்றி விட்டார், அவனது தந்தை. " ஆமாம் பா அவளை சும்மா விடுறதா இல்ல. அவளை என் கால்ல விழுந்து கிடக்காம ஓயமாட்டேன்.என்னிக்கும் அவளும் அவ சொத்தும் எனக்கு தான் " என்று கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத ரீதியில் பேசினான், ரத்னம். அவன் தந்தையும் மகனுக்கு சரியாக தாளம் போட்டார். இந்த நிலையிலும் ரத்னத்தின் கண்கள் பழிவெறியில் பளபளத்தன‌. இந்த உரையாடலை ஒட்டு கேட்ட‌ தாத்தா‌ ராமசுவாமி மெளனமாக அழுதார்;' பேத்தியும் பாரியும் பத்திரமாக இருக்க வேண்டும் ' என்று கடவுளை வேண்டிக் கொண்டார்." பேபி இன்னும் கொஞ்ச நேரம் பேபி " என்று கெஞ்சினான், அபி.
எதிர்முனை என்ன சொன்னதோ
" ஓகே டிமாரோ கே எஃப் சி பார் ஷ்யூர்" என்று சமாதானம் கூறினான், அபி. எதிர்முனை " ம்ம் " போட , அபியின் அறைக்கதவு தட்டப்பட்டது.
" ஓ காட். ஐ வில் கால்யூ பேக் " என்று கூறிவிட்டு போனை கட் செய்த அபி கதவை வேகமாக திறந்தான். " மாம் வை ஆர் யூ டிஸ்டர்பிங் அட் திஸ் டைம் ( அம்மா இந்த நேரத்துல ஏன் என்னை தொந்தரவு செய்றீங்க ? ) என்று கடுகடுத்தான், அபி என்கிற அபினவ்." ஐ யம் யுவர் மாம் அபி ( நான் உன் அம்மா அபி) " என்று கண்டிக்கும் குரலில் கூறினார், அவனது தாய். " ஆமாம் உங்களுக்கு போர் அடிச்சா என்கிட்ட வந்துருவீங்க " என்று முணுமுணுத்தான், அபி.
" அபி வாட் இஸ் திஸ் அபி. யூ ஹவ் டூ கோ டூ காலேஜ் டிமாரா. வாட் ஆர் யூ டூயிங் இன் யுவர் பெட் டைம்? ( என்ன அபி இது ? நீ நாளைக்கு காலேஜ் போகணும். தூங்க வேண்டிய நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க?) " என்று ஆதங்கமாக கேட்டார், அபியின் அம்மா." மாம் ஐயம் அன் அடல்ட் . ஐ நோ வாட் டூ டூ ( நான் வளர்ந்த மனுசன்.என்ன பண்ணனும் ன்னு எனக்கு தெரியும்) " என்றான் அபி.
' அப்படியே அப்பன் மாதிரியே பொறந்து இருக்கான். அந்த மனுசன் வரட்டும் ' என்று மனதிற்குள் புலம்பிய படியே தன் அறைக்கு சென்றார், அபியின் அன்னை நிரோஷா.உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள், பூர்ணிமா.நாளைக்கு அவளை பெண் பார்க்க வருவதாக இருக்கிறார்கள்.அவளது தவிப்பிற்கு அது மட்டும் காரணம் அல்ல. அவள் மனதில் வாடகை இல்லாமல் குடியிருக்கும் அந்த கள்வன் செய்யும் பாடு. நாளை வருவதை சமாளிக்க அவளால் முடியும். ஆனால் எத்துணை காலம் இப்படி புதையல் காக்கும் பூதம் போல காதலை ரகசியமாக காப்பது ? பெற்றோர் ஆசியுடன் ஊர் உலகம் அறிய தன்னவனை‌ திருமணம் செய்து கொள்ள‌ வேண்டாமா ? அதற்கு முன் அந்த‌ ராஸ்கல் என்ன தான் நினைக்கிறான் என தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த காலத்தில் அவனை போல் ஒருவனை காண்பதே அரிது. அவனை நினைக்கையிலே பூர்ணியின் இதழோரம் சிரிப்பு பூ மலர்ந்தது.‌ ' நான் இங்க அவன நினைச்சு தூங்காம இருக்கேன். அந்த படவா என்ன பண்றேன் ' என்று யோசித்த வண்ணம் தன் மொபைலை எடுத்து அவனுக்கு போன் செய்தாள்.
ஆவலும் ஆசையுமாக அவன் கைப்பேசிக்கு‌ அழைப்பு விடுத்தால், நாட் ரீச்சபிள். கொஞ்ச நேரம் கழித்து
மீண்டும் முயற்சித்தால், அப்போதும் அதே இயந்திர பதில்.‌ ' பொறுக்கி பய எங்க என்ன பண்றானோ' என்று செல்லமாக அவனை திட்டிவிட்டு தங்கள் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளில் மூழ்கினாள் பூர்ணிமா, அந்த எண்ணத்தில் இடி விழ போவது தெரியாமல்.நர்மதா அபார்ட்மெண்ட்ஸ்.


விடிந்தும் விடியாத காலை பொழுது. பறவைகள் சத்தம் கேட்கும் என்று நினைத்தால் அது நம் தவறு. வேலைக்கு செல்லும் பெண்கள் இருக்கும் வீட்டில் இருந்து குக்கர் சத்தத்தை வேண்டுமானால் கேட்கலாம்.சின்ன பூங்கா போன்றிருந்த இடத்தில் இளைஞர் சிலர் உடற்பயிற்சியும் முதியவர் சிலர் நடைபயிற்சியும் செய்து கொண்டிருந்தனர்.அதில் பெண்களும் அடக்கம் தான்.வாட்ச்மேன் ராகேஷ் தன் சிறிய ரேடியோவில் இந்தி பாடல் கேட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த ஆட்டோ சுத்தம் பாடலின் இனிமையை கெடுக்க, சலிப்பு உடன் கதவை திறந்தார், வாட்ச்மேன். கடமையின் பொருட்டு ஆட்டோவை எட்டி பார்த்தார்; " பாரி சாப் கூட ஒரு..." என்று அவர் வியப்பில் இருக்கும் போதே ஆட்டோ உள்ளே சென்று விட்டது.
" சீக்கிரம் வா. முடிஞ்ச வரை யார் கண்ணுலயும் படாம உள்ளே போய்விடுவோம் " என்று பாரி பரபரக்க, தாரா ' ஆவென ' வாய்பிளந்து எட்டு மாடி கட்டிடத்தை வியப்பாக பார்த்து கொண்டிருந்தாள்.
" ஹேய் தாரு‌. இதுக்கெல்லாம் நேரம்
இல்ல. கமான் பாஸ்ட். கீதா ஆன்ட்டி பாக்குறதுக்குள்ள " என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே ,
பக்கத்து ஃப்ளாட் கீதாராணி அவர்கள் முன்வந்து நின்றார்.


' போச்சுடா. இனி மொத்த அபார்ட்மெண்ட் க்கும் நியூஸ் போயிடும் ' என்று மனதிற்குள் புலம்பிய பாரி, " குட்மார்னிங் ஆஆன்ட்டி " என்றான், தட்டு தடுமாறி. " குட் மார்னிங் குட் மார்னிங் " என்று அலட்சியமாக கூறிய கீதாராணி
அபார்ட்மெண்ட் ஐ எட்டாவது உலக அதிசயம் போல் பார்த்து கொண்டிருந்த சித்தாரா வை தன் கண்ணாடி கண்களால் ஆராய்ந்தார்.
அவள் கழுத்தில் புது தாலியை கண்டதும், " ஹேய் பாரி சொல்லவே இல்லை பாத்தியா ? நீ அடிக்கடி ஊருக்கு போகும் போதே நினைச்சேன். சும்மா சொல்ல கூடாது பொண்ணு திருநெல்வேலி அல்வா மாதிரி அம்சமா இருக்கா " என்று
உற்சாகமாக வளவளத்தார், கீதா.


" எங்க ஊரு கூட அதையும் தாண்டி " என்று ஏதோ சொல்ல வந்த தாராவை முறைக்க, " ஏன் மாமா இவங்க கிட்ட பேச கூடாதா ? " என்று அப்பாவியாக கேட்க , ' எல்லாமே நான்சிங் ஆ போதேடா ஆண்டவா ' என்று மீண்டும் மனதிற்குள் புலம்பினான்." அப்படி கேளுமா. இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். அவங்களுக்கு என்ன வேலைக்கு போயிடுவாங்க. நாம தான் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையாக இருக்கணும்.
ஆமாம் நீ பாக்க சின்ன பொண்ணா தெரியுறியே படிக்கிறியா " என்று விவரம் கேட்க, " ஆன்ட்டி ரொம்ப தூரம் டிராவல் பண்ணது டயர்ட் ஆ இருக்கு. அப்புறம் பேசலாமே " என்று பாரி நாகரீகமாக பேச்சை கத்தரிக்க ,
கீதாவும், " அதுவும் வாஸ்தவம் தான். நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்கு வாடிம்மா. பேச வேண்டியது நிறைய இருக்கு " என்றார்."கண்டிப்பாக அக்..கா இல்ல அத்தை " என்று உறுதி கூறிவிட்டு பாரியின் பின்னே ஓடினாள், சித்தாரா.
" இவங்க ரொம்ப நல்லவங்களா தெரியுறாங்க மாமா " என்ற தாராவிடம் ," பாத்ததும் யாரையும் நம்ப கூடாது " என்று மெல்லிய குரலில் கூறினான், பாரி. ' ஹான் ' என்று மலைத்து போனாள், சித்தாரா.- தொடரும்
 
Status
Not open for further replies.
Top