வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஆற்றலதிகாரம்(இது முடிவின் துவக்கம்) - கதை திரி

Status
Not open for further replies.
eiUMEXV84063.jpg

அத்தியாயம் 1



ஆதவன் உதித்து கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்கள் கடந்து சென்றிருக்க, அந்த பகல் நேர வெயிலின் பிரதிபலிப்பில் மின்னிக் கொண்டிருந்த சமுத்திரத்திற்கு மத்தியில், தன் படகில் நின்று கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான் அந்த மீனவன்.



அவன் வீசிய வலையில் சிக்கிய மீன்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்தது அந்த கருநிற கல்.



முதலில் அதை கவனிக்காமல், படகை கரை நோக்கி செலுத்த ஆயத்தமாகி கொண்டிருந்தவனின் கண்களை கூசச் செய்தது அந்த கல் வெளிப்படுத்திய வெளிச்சம்.



அந்த கருநிற கல்லை கண்டவனிற்கு மனதினுள் இனம்புரியாத ஆசை உண்டாக, அதை தன் கையில் எடுத்து திருப்பி திருப்பி பார்த்து அதிசயித்து போனான் மீனவன்.



அதன் ஜொலிப்பில் மனம் லயித்தவன், அது தான் கைவிட்டு போய் விடக்கூடாது என்று எண்ணி, அதை கயிற்றில் கோர்த்து அவனது வலப்புற புஜத்தில் அணிந்து கொண்டான்.



அந்த கல் அவன் வசம் வந்ததிலிருந்து எதையோ சாதித்ததை போல திரிந்து கொண்டிருந்தவன், மற்றவர்களின் கண்களில் சிக்காமல் போவானா? இல்லை, அவன் புஜத்தை அலங்கரித்த கருநிற கல் மற்றவர்களின் பொறாமையை தூண்டாமல் இருக்குமா?



அடுத்த ஒரு வாரத்தில், அந்த கருநிற கல் அலங்கரித்த அவனின் வலப்புற புஜம் தனியாக வெட்டப்பட்டது. அதில் உண்டான அதிக உதிரப்போக்கினால், அவன் மரணமடைந்தான். அந்த கருநிற கல்லோ அதன் அடுத்த எஜமானனை அலங்கரிக்க காத்திருந்தது!




*****



வரைப்பட்டிகையில் மின்னணு பேனாவைக் கொண்டு அவள் ஓவியத்தை தீட்டிக் கொண்டிருக்க, “ப்பே...” என்று பின்னிலிருந்து வந்த சத்தத்தில் அதிர்ந்து, அவள் கரம் பட்டு அந்த வரைப்பட்டிகை கீழே விழுந்து அணைந்து போனது.



வரைப்பட்டிகை கீழே விழுந்ததை விட, அதில் அவள் தீட்டிய ஓவியங்கள் பத்திரமாக இருக்கிறதா என்ற கவலை அவளை ஆட்கொள்ள, “பிசாசே, இப்படி தான் பின்னாடி வந்து பயமுறுத்துவியா?” என்று தன் கவலையை கோபமாக வெளிக்காட்டினாள் அவள்.



அவளால் ‘பிசாசு’ என்று அழைக்கப்பட்டவளோ, “ச்சு, உனக்கு மென்மொழின்னு பெயர் வச்சதுக்கு பதிலா வன்மொழின்னு வச்சுருக்கலாம்.” என்று சாவதானமாக கூறியபடி, தோழியின் கையிலிருந்த வரைப்பட்டிகையை வாங்கி ஆராய்ந்து பார்த்தாள்.



“அதான் ஒன்னும் ஆகலைல. அப்பறம் எதுக்கு இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுருக்க?” என்று கேட்டபடி, மென்மொழி வரைந்த ஓவியங்களை பார்வையிட ஆரம்பித்தாள் அவளின் ஒரே தோழி சுடரொளி.



“என்னடி அடுத்த வெப்டூன்னா? ஆமா, இதெல்லாம் பார்க்குறாங்களா என்ன? நீயும் வரைஞ்சு வரைஞ்சு உன் பிளாக்ல அப்லோட் பண்ற. ஆனா, வியூஸ் என்னவோ ஒரு டிஜிட்ல தான் இருக்கு.” என்று சுடரொளி கூற, “நான் வரையுறது என் நிம்மதிக்காக சுடர். மத்தவங்க பார்த்து ரசிக்கிறது ரெண்டாவது பட்சம் தான்.” என்றாள் மென்மொழி.



“ஹ்ம்ம், எல்லாம் சரி, அதென்ன கருப்பு கலர் கல்லு? ஏன் இந்த பிங்க் கலர்ல போட்டா ஆகாதா?” என்ற சுடரொளியின் கேள்விக்கு சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை மென்மொழியால்.



“அது... நான் பிளாக் அண்ட் ஒயிட்ல தான் வரையுறேன். அதான் கருப்பு கலர் கல்.” என்று எதையோ கூறி வைத்தாள் மென்மொழி.



அப்போது டப்டப்பென்று சத்தம் கேட்க, “இதோ வந்துட்டா உன்னோட ‘நான்-ஐடென்டிகல் ட்வின்’. அவ மாடலிங் பண்றா, ரேம்ப் வாக் நடக்குறா, எல்லாம் சரி தான். அதுக்குன்னு இப்படி வீட்டுக்குள்ள கூட ஹை-ஹீல்ஸ் போட்டுட்டு சுத்தனுமா என்ன?” என்று சுடரொளி மென்மொழியிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தாள் யாழ்மொழி.



சர்வ அலங்காரத்துடன் கிளம்பி வந்திருந்த யாழ்மொழியைக் கண்ட மென்மொழியோ, “என்ன யாழ், இன்னைக்கு எதுவும் ப்ரோகிராமா? வரதுக்கு லேட்டாகுமா?” என்று வினவ, யாழ்மொழியோ அவளின் வேலையை பார்த்துக் கொண்டே, ‘ஆம்’ என்னும் விதத்தில் அலட்சியமாக தலையசைத்தாள்.



அதில் கடுப்பான சுடரொளியோ, “கொஞ்ச நாளாவே அவ ஓவரா பண்ணுறான்னு தெரியுதுல, அப்பறம் எதுக்கு அவளை தாங்கிட்டு இருக்க?” என்று கேட்டுவிட, இது யாழ்மொழியின் காதுகளிலும் விழுந்து விட்டது.



“லுக், அவ என் ட்வின். எனக்காக கேர் பண்ணி கேட்குறா. உனக்கு என்ன? எங்க ரெண்டு பேருக்கு நடுவுல நீ யாரு?” என்று யாழ்மொழி கேட்க, “அடடே, அவ கேர் பண்றது எல்லாம் உனக்கு தெரிஞ்சுருக்கே!” என்று போலியாக ஆச்சரியப்பட்ட சுடரொளியோ, “நீ வேணும்னா வந்து சேர்ந்துப்ப, வேண்டாம்னா இக்னோர் பண்ணிட்டு போவ. என்னை என்ன உன்னை மாதிரின்னு நினைச்சியா? நான் அவ ஃபிரெண்டு. எப்பவும் அவ கூடவே நிக்கிற ஃபிரெண்டு.” என்று அழுத்தமாக கூறினாள்.



இதற்கு மேல் என்றால் கண்டிப்பாக சண்டை வலுக்கும் என்பதை உணர்ந்த மென்மொழியோ, “ப்ச், ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா? யாழ், நீ கிளம்பு.” என்று சூழ்நிலையை சமாளிக்க முயன்றாள்.



ஏனோ சுடரொளியை பார்த்தாலே யாழ்மொழிக்கு பிடிப்பதில்லை. இப்போது சுடரொளியின் பேச்சு அந்த பிடித்தமின்மையை அதிகரிக்கவே செய்தது.



“போகத்தான் போறேன். பின்ன, உங்களை மாதிரி வெட்டியா டேபும் கையுமாவா இருக்க போறேன்?” என்று யாழ்மொழி அவளின் எரிச்சலை வெளிப்படுத்த, தன் வேலையை பற்றி பேசியதும் மென்மொழிக்கே கோபம் வந்து விட்டது.



“யாழ், இதென்ன பேச்சு? உனக்கு உன் வேலை பெருசுங்கிற மாதிரி தான், எங்களுக்கு எங்க வேலை பெருசு. இன்னொரு முறை இப்படி பேசாத.” என்று அப்போதும் கோபத்தை கட்டுப்படுத்தியபடி கூறினாள் மென்மொழி.



யாழ்மொழிக்கோ மென்மொழி கூறியதெல்லாம் கருத்தில் ஏறவில்லை. அவள் நினைவில் இருந்ததெல்லாம், ‘ப்ச், இவளும் அவளோட சேர்ந்துட்டு என்னை பேசுறா!’ என்பது தான்.



அப்படியே விட்டிருந்தால் கூட, ஒரு முணுமுணுப்புடன் யாழ்மொழி கிளம்பியிருப்பாளோ என்னவோ, அன்றைய தினம் மூவருக்குமிடையே சண்டை நிகழ்ந்தே ஆக வேண்டும் என்று விதித்திருந்தால், அதை யாரால் மாற்ற இயலும்?



“அதான, நாங்க வெட்டியா இருக்கோம்னு நீ பார்த்தியா?” என்று மென்மொழிக்கு ஆதரவாக சுடரொளி கூற, அது யாழ்மொழியை மேலும் வெறுப்பேற்றியது.



“நீ என்னதான் ஓடியாடி வேலை செஞ்சாலும், மாசத்துக்கு இருபதாயிரம் தாண்டுமா உன் சம்பளம்? ஆனா, நான்… ஹ்ம்ம், இன்னும் ஒரு மாசத்துல என் ரேஞ்சே வேற! ச்சு, இதெல்லாம் ‘உன்’கிட்ட போய் சொல்லிட்டு இருக்கேன் பாரு!” என்ற யாழ்மொழி, அத்துடன் நிறுத்தாமல், “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?” என்று முணுமுணுத்தாள்.



அவளின் பேச்சு மென்மொழிக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்க, “நிறுத்து யாழ்! என்ன பேசிட்டு இருக்க நீ?” என்று கத்த, “நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்? அழகை பத்தி அழகா இருக்கவங்க கிட்ட தான பேச முடியும்.” என்று அப்போதும் புரிந்து கொள்ளாமல் பேசினாள் யாழ்மொழி.



“அழகா? வெளித்தோற்றம் மட்டும் தான் அழகுக்கான இலக்கணம்னு நினைச்சா, நீ ஒரு முட்டாள் யாழ். இவ்ளோ படிச்சு என்ன பிரயோஜனம்? உன்னை சுத்தி என்ன நடக்குது, யார் உன் நன்மைக்காக யோசிச்சு உன்னோட நிற்பாங்கன்னு கூட உன்னால யூகிக்க முடியல. நீயெல்லாம் லட்சத்துல சம்பாதிச்சாலும் என்ன யூஸ்? உனக்காகன்னு பார்த்து பார்த்து நாங்க சொல்றதெல்லாம் வேஸ்ட். பட்டு தான் நீ திருந்துவன்னா என்ன பண்ண முடியும். இனி, உனக்காகன்னு நான் எதுவும் பண்ண போறதில்ல. உன் வாழ்க்கை உன் கையில. என்ன வேணுமோ பண்ணிக்கோ.” என்றாள் மென்மொழி.



மென்மொழியின் இந்த பேச்சு மனதோரம் உறுத்தினாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு அசட்டு சிரிப்புடன் வெளியேறினாள் யாழ்மொழி.



அலையடித்து ஓய்ந்தது போலிருக்க, தோய்ந்து விழுந்த மென்மொழியை சுற்றி ஆதரவாக அணைத்துக் கொண்ட சுடரொளி, “இன்னைக்கு உனக்கு என்னாச்சு?” என்று வினவ, தோழியின் கரத்தை பற்றிக் கொண்ட மென்மொழியோ, “சாரி சுடர், அவ சார்பா நான் மன்னிப்பு கேட்குறேன்…” என்று பேச, அவளை இடைவெட்டிய சுடரொளி, “ஹே, லூஸா நீ? அவளைப் பத்தி தான் தெரியுமே. என்ன பேசுறோம்னு யோசிக்காம எதையாவது பேசிடுவா. அவளுக்காக நீ மன்னிப்பு கேட்பியா?” என்றாள்.



“இல்ல சுடர். இன்னைக்கு அவ பேசுனது…” என்று ஆரம்பித்த மென்மொழியை நிறுத்திய சுடரொளி, “என் அழகை பத்தி பேசுனதா? அதெல்லாம் நான் பெருசாவே எடுத்துக்கல மொழி. நான் கருப்புன்னு எனக்கு தெரியும். அழகுக்கான டெஃபனிஷன் கலர் இல்லன்னும் எனக்கு தெரியும். சோ, ஃப்ரீயா விடு.” என்று தோழியை சமாதானப்படுத்தியவள், “இப்படியே அழுது வடியாம, உன் வெப்டூன்னை போஸ்ட் பண்ணிட்டு வா, வெளிய போலாம். நாளைக்கு புது கதைக்கு படம் வரைய ஆரம்பிக்கணுமாம். சோ, நாம பிஸியாகிடுவோம்.” என்றாள்.



மென்மொழியும் தான் வரைந்தவற்றை வலைப்பதிவாக பதிவிட்டவள், “சுடர், தாத்தா வீட்டுக்கு போவோமா?” என்று வினவ, “ஆரம்பிச்சுட்டியா? அப்படி என்ன இருக்கு அந்த வீட்டுல? மியூசியமும் லைப்ரரியும் கலந்து வச்ச மாதிரி இருக்கும்.” என்று புலம்பிய சுடரொளியை இழுத்துக் கொண்டு அவளின் தாத்தா வீட்டிற்கு கிளம்பினாள் மென்மொழி.



*****



எரிச்சலும் ஏமாற்றமுமாக வெளியே வந்த யாழ்மொழியை மேலும் கோபப்படுத்தும் விதமாக, அவளின் மகிழுந்து பழுதாகி கிடந்தது.



“ச்சே, இன்னைக்கு என்னை டென்ஷனாக்கணும்னே எல்லாம் நடக்குமோ?” என்று எரிச்சலில் மகிழுந்தின் சக்கரத்தை உதைத்தாள் யாழ்மொழி.



அப்போது, “யாழு…” என்று பின்னிருந்து குரல் கேட்க, அது யாரென்று அறிந்தவளாக, ‘ஹையோ, இவனா?’ என்று எண்ணியபடியே திரும்பி பார்க்க, அங்கு தன் வழக்கமான புன்னகையுடன் நின்றிருந்தான் இன்பசேகரன்.



இன்பசேகரன், இரு மொழிகளுக்கும் பொதுவான நண்பன். பக்கத்து வீடு என்பதால் சிறுவயதிலிருந்தே தொடர்கிறது இவர்களின் நட்பு.



ஆனால், சமீபமாக ‘அழகு’ என்னும் மோகத்தில் சிக்கியிருக்கும் யாழ்மொழி, இன்பசேகரனை தவிர்க்க முயல்கிறாள். காரணம், அவளின் ‘அழகு’க்கான இலக்கணத்தில் அவன் பொருந்தாமல் போனது தான்!



இது தெரிந்தும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை இன்பசேகரன். அதனாலேயே, யாழ்மொழி எத்தனை முயற்சித்தும், சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் அவளிடமே வருகிறான் அவன்.



“யாழு, கார்ல என்ன பிரச்சனை? நான் வேணும்னா டிராப் பண்ணவா?” என்று இன்பசேகரன் கேட்க, அவனின் பழைய மகிழுந்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சரி என்று தலையசைத்தாள்.



அதிலேயே மகிழ்ந்து போனவன், செல்லும் வழி முழுவதும் பேச, பேசியவை அவளின் வேலை பற்றியது என்பதால், சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு யாழ்மொழியும் அதில் ஒன்றி விட்டாள்.



“***** குரூப்ஸ் நடத்துற ஈவண்ட் இன்னைக்கு. நான் தான் அதுல ஷோ-ஸ்டாப்பர் தெரியுமா?” என்று உற்சாமாக யாழ்மொழி பேச, அதை ரசித்தபடி வந்தான் அவளை ஒருதலையாக காதலிக்கும் இன்பசேகரன்.



அவள் விரட்டியடித்தாலும் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ள சொல்லும் இந்த பைத்தியக்காரத்தனத்தின் பெயர் காதல் என்றால், அவனும் காதலனே! என்ன, அவளிடம் தன் காதலை பகிராத ஒருதலை காதலன் அவன். அவளது அழகின் இலக்கணம் பற்றி அவனும் அறிவான் தானே, அதனால் உண்டான தயக்கமே அவனது காதல் ஒருதலையாக இருப்பதற்கான காரணம்.



இறுதி வரை, அவன் காதலை சொல்லப் போவதில்லை என்பதை அறிந்தால், இத்தனை காதலை தேக்கி வைத்திருக்க மாட்டானோ? அதுவும், சந்தேகமே!



“இன்பா, என்ன யோசிச்சுட்டு இருக்க? நான் எவ்ளோ பெரிய நியூஸ் சொல்லியிருக்கேன்.” என்று யாழ்மொழி சிணுங்க, “சாரி யாழு. ஏதோ ஒரு யோசனை. நீ சொன்னதை கவனிக்கல.” என்று நிதானமாக எடுத்துரைத்தான் இன்பசேகரன்.



“ப்ச், அப்படி என்ன யோசனை? அந்த மெடிக்கல் ஷாப் பத்தி தான? உன் டேலண்ட்டை அந்த மெடிக்கல் ஷாப்ல வேஸ்ட் பண்ணாதன்னு சொன்னா கேட்குறியா? ஓடாத மெடிக்கல் ஷாப்பை வித்துட்டு வேற பிசினஸ் பண்ணலாம்ல.” என்று யாழ்மொழி கூற, எதுவும் பேசாமல் வாகனத்தை செலுத்தினான் இன்பசேகரன்.



ஆனால், அவனின் கோபம் அவன் இறுகிய பிடியில் தெரிந்தது. காரணம், அவன் தந்தை நினைவாக இருப்பது அந்த அங்காடி மட்டுமே! அது தெரிந்தும், யாழ்மொழியின் இப்படிபட்ட பேச்சினை அவன் ரசிப்பதில்லை தான். அதற்காக, அவள் மீது கோபப்படவும் முடியாததால் தான் இந்த மௌனம்.



“ம்ச், உடனே சைலண்ட்டாகிடுவ. உன் பிசினஸ், என்னவோ பண்ணு.” என்றவள், தன்னை பற்றி பேச ஆரம்பித்து விட்டாள்.



“அடுத்த மாசம் ஒரு பெரிய ஆஃபர் வருதுன்னு வருண் சொன்னான் இன்பா. கண்டிப்பா, பட ஆஃபரா தான் இருக்கும். எனக்கு எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா? இந்த மேட்டரை உன்கிட்ட முதல்ல சொல்லியிருக்கேன்.” என்று யாழ்மொழி மகிழ்ச்சியுடன் கூற, ஏனோ அவளின் இந்த மகிழ்ச்சி அவனிற்கு தொற்றவில்லை.



காரணம் வருண்!



“யாழு, அந்த வருண்…” என்று இன்பசேகரன் ஆரம்பிக்க, “நிறுத்து இன்பா. நீ என்ன சொல்லப் போறன்னு எனக்கு தெரியும். வருண் சரியில்ல. அவன் பார்வை சரியில்ல. அவன் என்னை தப்பா கைட் பண்றான். இதை தான சொல்லப் போற? ப்ச், நான் சந்தோஷமான விஷயத்தை உன்கிட்ட ஷேர் பண்ணா, நீ அந்த மூடையே கெடுத்துட்ட இன்பா. இதனால தான், உங்க யாருக்கிட்டயும் எனக்கு பேச பிடிக்கல. வருண், எனக்காக எவ்ளோ பண்ணியிருக்கான் தெரியுமா? சும்மா, அவனை தப்பா பிரோஜெக்ட் பண்ணாதீங்க.” என்று அவள் கூற, சரியாக அவள் இறங்க வேண்டிய இடமும் வந்திருக்க, இன்பசேகரன் கூறுவதை கூட கேட்க விரும்பாதவளாக, வாகனத்திலிருந்து இறங்கி சென்று விட்டாள்.



‘மத்தவங்க எப்படின்னு யூகிக்கிற அளவுக்கு நீ இன்னும் வளரல யாழு. தப்பானவங்க கையில சிக்கிடுவியோன்னு பயமா இருக்கு.’ என்று எண்ணியவன் அறியவில்லை, அதற்கான இடத்தில் தான் அவளை விட்டு வந்திருக்கிறான் என்பதை.



*****



தாத்தா வீட்டிற்கு செல்லலாம் என்ற மென்மொழியை சரிகட்டி வெளியே சுற்றிவிட்டு, இறுதியாக தான் அங்கு அழைத்து வந்தாள் சுடரொளி.



உள்ளே நுழையும் போதே, “இந்த வீட்டை விற்கப் போறதா ஆண்ட்டி அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தாங்களே மொழி?” என்று சுடரொளி வினவ, “ஹ்ம்ம் ஆமா சுடர். நான் தான் பிடிவாதமா விற்கக் கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்.” என்றாள் மென்மொழி.



“ஏண்டி? நீயும் அவளும் ஒரு பக்கம், உங்க அப்பா, அம்மா, அண்ணன் ஃபேமிலின்னு ஒரு பக்கம் – எதுக்கு இது? இதை வித்துட்டு டெல்லில போய் செட்டிலாக வேண்டியது தான?” என்று சுடரொளி கேட்க, “என்னவோ எங்க ரெண்டு பேருக்குமே அங்க செட்டாகல சுடர். அதுலயும், இந்த வீடு… ம்ச், இதை விற்கக் கூடாதுன்னு மனசு அடிச்சுக்குது.” என்ற மென்மொழி ஆழ்ந்து சுவாசிக்க, அந்த வீட்டின் வாசனை அவளுள் நிரம்பியது.



“ஏனோ, இங்க வந்தாலே மனசு அமைதியா இருக்கு. தாத்தாவோட இங்க நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணதால இருக்கலாம்.” என்றவள், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அவளின் தாத்தாவின் புகைப்படத்தை பார்த்தாள்.



அந்த புகைப்படத்தை சுற்றி இருந்த சுவரை பல காகிதங்களும், செய்தித்தாள் துணுக்குகளும் அலங்கரித்திருந்தன.



“மொழி, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். உங்க தாத்தா எதுவும் சீக்ரெட் ஏஜெண்ட்டா இருந்துருப்பாரோ? எங்க பார்த்தாலும், நியூஸ் பேப்பர் கட்டிங், சீக்ரெட் கோட்ஸ்னு இருக்கு.” என்றாள் சுடரொளி.



அதில் சிரித்த மென்மொழியோ, “அவருக்கு தமிழ் மேலயும், பண்டைய தமிழ் மக்கள் மேலயும் தீரா காதல் சுடர். அவங்களை பத்தின கலெக்ஷன் தான் இது.” என்றவள், “உனக்கு தெரியுமா, பழைய ஓலைச்சுவடிகளை கூட அவரு கலெக்ட் பண்ணி வச்சுருந்தாரு.” என்றவள், பக்கவாட்டு அறையை திறக்க, அந்த அறையோ கலைந்து கிடந்தது.



“என்னடி இது, எப்பவும் கிளீனா வச்சுருப்ப. இப்போ பார்த்தா, ஏதோ திருடன் வந்து கலைச்சு போட்ட மாதிரி இருக்கு?” என்று சுடரொளி வினவ, “யாழ்..” என்று பல்லைக் கடித்தாள் மென்மொழி.



*****



“யாழ் பேபி, டைமாச்சு. நீ ரெடியா?” என்றபடி வந்தான் வருண்.



“எஸ் வரு. எப்படி இருக்கேன்?” என்று கேட்ட யாழ்மொழியை தலை முதல் கால்வரை அலசி ஆராய்ந்த வருண், “உனக்கென்ன பேபி, அழகா அம்சமா இருக்க!” என்று இளிப்புடன் கூறினான் வருண்.



அவன் எண்ணம் அறியாத பேதையோ, அதை பாராட்டாக எண்ணி, “அந்த பெரிய ஆஃபர் என்னாச்சு வருண்?” என்று கேட்டாள்.



“அதைப் பத்தி பேசணும் யாழ் பேபி. முதல்ல ஷோ முடியட்டும். அப்பறம் நிதானமா டிஸ்கஸ் பண்ணலாம்.” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.



அவன் ‘நிதானமா’வை நிறுத்தி நிதானமாக கூறியதைக் கண்டு கொள்ளாமல், கனவுகளில் மூழ்கி விட்டாள் யாழ்மொழி, அவளின் கனவு கனவாகவே இருந்து விடும் என்பதை அறியாமல்!



அவளின் நல்ல மனநிலையை கெடுப்பது போல அலைபேசி ஒலியெழுப்ப, அதில் தெரிந்த மென்மொழியின் பெயரை பார்த்ததும், ‘இவ எதுக்கு இப்போ கால் பண்றா?’ என்ற எண்ணத்துடன் அதை உயிர்ப்பித்தாள்.



அழைப்பு ஏற்கப்பட்டதும், “தாத்தா வீட்டுக்கு எதுக்கு வந்த?” என்று மென்மொழியின் கோபக்குரல் தான் கேட்டது.



“அவரு என்ன உனக்கு மட்டும் தான் தாத்தாவா? எனக்கும் அந்த வீட்டுல உரிமை இருக்கு.” என்று உரிமைக்குரல் உயர்த்தினாள் யாழ்மொழி.



“அதுக்கு இப்படி தான் கலைச்சு போடுவாங்களா? இங்க எவ்ளோ முக்கியமான பொருட்கள் இருக்கு தெரியுமா? நானே இன்னும் முழுசா எல்லாத்தையும் ஆராயல. அதனால தான், வீட்டை விற்க வேண்டாம்னு போராடிட்டு இருக்கேன். நீ என்னன்னா சர்வ சாதாரணமா நுழைஞ்சு எல்லாத்தையும் கலைச்சுருக்க.” என்று மென்மொழி கோபத்தில் பொரிய, “ப்ச், உன் பேச்சை கேட்கவெல்லாம் எனக்கு நேரமில்ல. அது என்ன பெரிய மியூசியமா? அப்படி கலைஞ்சுருந்தாலும் என்ன ஆகிடப் போகுது. ச்சு, எனக்கு நேரமாகிடுச்சு, நைட் வீட்டுக்கு வந்து பேசுறேன்.” என்று அழைப்பை துண்டித்து விட்டாள் யாழ்மொழி.



‘ஒரு ஓட்டை வீட்டுக்கும் அதுக்குள்ள அடைஞ்சு கிடக்க குப்பைக்கும் இவ்ளோ சீனு.’ என்று எண்ணிய யாழ்மொழியின் கரமோ தன்னிச்சையாக அவளின் கழுத்தணியை தடவியது.



அவள் அங்கு சென்ற போதே அந்த இடம் கலைந்து தான் இருந்தது என்பது அவளின் நினைவில் இல்லாமல் போனது யாரின் துரதிர்ஷ்டமோ!



*****



விமான நிலையம்…



ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்தவனிற்கு அலைபேசி சத்தம் சுத்தமாக கேட்கவில்லை. சில அழைப்புகள் தவறி போயிருக்க, அருகில் அமர்ந்திருந்தவர் உசுப்பியதும் தான் நிகழ்விற்கு வந்தான் அவன்.



அவருக்கு ஒரு நன்றியை கூறிவிட்டு அழைப்பை ஏற்க, எதிர்முனையிலிருந்து, “சார், நீங்க போன விஷயம் என்னாச்சு? அந்த வீட்டுல தேடிப் பார்த்தீங்களா? பொருள் கிடைச்சதா?” என்று கேள்விகள் அடுக்கப்பட, அவனோ என்ன நடந்ததென தெரியாமல் குழம்பினான்.



எவ்வளவு தான் யோசித்தாலும், அவனால் கடந்து போன அரை நாளில் நடந்த நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டு வர முடியவே இல்லை.



“ஃபிளைட் போர்ட் பண்ண போறேன். அப்பறம் கூப்பிடுறேன்.” என்று அழைப்பை துண்டித்தவன், அலைபேசியை மேல்சட்டை பைக்குள் வைக்க முயல, அவன் கையில் தட்டுப்பட்டது அந்த பொருள்.



புருவச்சுழிப்புடன் அவன் அதை எடுத்துப் பார்க்க, அவன் கரத்தில் ஜொலித்தது கருநிற கல்.


தொடரும்...


கதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் கருத்து திரியில் பகிருங்க.

 

Attachments

  • eiUMEXV84063.jpg
    eiUMEXV84063.jpg
    503.2 KB · Views: 1
eiTH1UF71531.jpg

இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்கள், நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே. கதைக்களமும் ஏனைய கருத்துக்களும் முழுவதுமாக கற்பனை இல்லை என்றாலும், அதை சுற்றி பின்னபட்ட கதை கற்பனையே ஆகும்.


அத்தியாயம் 2



“வயசு இருபத்திமூணாகுது. ஆனா, இன்னமும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.” என்று யாழ்மொழியை திட்டியபடியே கலைந்து கிடந்த பொருட்களை அடுக்கி வைக்க துவங்கினாள் மென்மொழி.



“ஹ்ம்ம், சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மொழி. இதுல, உங்க அப்பா அம்மா மேல தான் நிறைய தப்பு இருக்க மாதிரி எனக்கு தோணுது. பையன் மேல பாசம் இருக்க வேண்டியது தான். அதுக்காக பொண்ணுங்களை தனியா விட்டுட்டு எப்படி இருக்காங்க. மேபி, அவங்க கூடயிருந்து எடுத்து சொல்லியிருந்தா, யாழ் வயசுக்கேத்த மாதிரி யோசிச்சு நடந்துருப்பாளோ என்னவோ.” என்று சுடரொளி கூற, அதை மறுக்க முடியாததால் அமைதி காத்தாள் மென்மொழி.



சூழலை மாற்ற எண்ணிய சுடரொளியோ, அந்த அறையை சுற்றி பார்க்க, வெளியில் இருந்ததை போலவே பல செய்தி குறிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. அவை அனைத்தும் ஒன்றையே மையப்படுத்தி இருந்தன.



குமரிக்கண்டம்!



“குமரிக்கண்டமா? குமரிக்கண்டம்னா அழிஞ்சு போன நாடு தான? இதைப் பத்தி சில யூ-ட்யூப் வீடியோஸ் பார்த்துருக்கேன். இதையா உன் தாத்தா ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாரு? அப்போ இது கான்ஸ்பிரசி தியரி இல்லையா?” என்று சுடரொளி ஆச்சரியமாக வினவ, மென்மொழியோ சிரிப்புடன், “உண்மைன்னு நம்புறவங்களுக்கு உண்மை. கற்பனைன்னு நினைக்குறவங்களுக்கு கற்பனை!” என்று தத்துவம் பேசினாள்.



உடனே, மென்மொழியின் தலையை ஆட்டிப் பார்த்து விட்டு, “நல்லா தான இருக்க? இந்த வீட்டுக்குள்ள வந்தாலே நீ, நீயா இருக்க மாட்டிங்குற. ஒருவேளை, உங்க தாத்தா ஆவி எதுவும் உள்ள புகுந்துடுச்சோ?” என்று தீவிர பாவனையுடன் சுடரொளி வினவ, அவளின் முகபாவனையில் ஏதோ முக்கிய விஷயத்தை பகிரப் போவதாக எண்ணி கூர்ந்து கவனித்த மென்மொழியோ, அவளின் இறுதி வரியில் வெறியாகி, “என்னை கேலி பண்றது இல்லாம, எங்க தாத்தாவை வேற இழுக்குறியா?” என்று தோழியின் தலையில் கொட்டினாள்.



“பின்ன என்னடி, வயசான காலத்துல பேரன் பேத்தியை பார்த்துட்டு நிம்மதியா இருக்குறதை விட்டுட்டு, இப்படி ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்துருக்காரு.” என்று சுடரொளி கூற, “அவரோட பேஷன் இது சுடர். நானும் கூட இதே கேள்வியை அவருக்கிட்ட கேட்டுருக்கேன்.” என்று மென்மொழியோ தாத்தாவுடன் நடந்த உரையாடல் நிகழ்விற்கு சென்று விட்டாள்.



“தாத்தா, நீங்க ஏன் எப்போ பார்த்தாலும் இந்த நியூஸ் பேப்பரையும், பழைய ஓலைச்சுவடியையுமே பார்த்துட்டு இருக்கீங்க? எங்களையும் கொஞ்சம் பார்க்கலாம்ல!” என்று சிறுவயது மென்மொழி கேட்க, அத்தனை நேரம் தன் மூக்கு கண்ணாடி வழியே பழைய செய்தித்தாள்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆராவமுதனோ, “மொழிம்மா, இதெல்லாம் தாத்தாவோட பல வருஷ உழைப்பு டா. நம்ம மறந்த, மறைஞ்சு போன விஷயங்களை திரும்ப நம்ம மக்களுக்கு எடுத்து சொல்லணும் டா.” என்று கண்களில் கனவு மின்ன பேசினார்.



இதோ இப்போது கூட அந்த கனவு மின்னும் கண்கள் நினைவில் வந்து போயின மென்மொழிக்கு.



மென்மொழி தன் நினைவுகளில் மூழ்கிப் போயிருக்க, சுடரொளி மீண்டும் சுற்றிப் பார்க்க துவங்கினாள்.



அங்கு சரிந்திருந்த புத்தகங்களை அடுக்கி வைக்கும்போது தான் அதை கவனித்தாள். குமரிக்கண்டத்தை பற்றிய தமிழ் புத்தகங்களுக்கு இடையே ‘லெமூரியா’ பற்றிய ஆங்கில புத்தகங்களும், சஞ்சிகைகளும் இருந்ததை பார்த்த சுடரொளியோ, “உன் தாத்தா உண்மையிலேயே நிறைய ஆராய்ச்சி பண்ணியிருக்காரு மொழி.” என்று ஆச்சரியமாக கூறிவிட்டு, அவர் விட்டுச்சென்ற குறிப்பேட்டை படிக்க முயன்றாள்.



ஆனால், அவரின் கையெழுத்து புரியாமல் திக்கி திணறி வாசிக்க, நிகழ்விற்கு வந்த மென்மொழியோ சிரித்தபடி, “தமிழை குதறி வைக்காத. அதுல என்ன இருக்குன்னு நானே சொல்றேன்.” என்றவள் குமரிக்கண்டத்தை பற்றி அவளின் தாத்தா எழுதி வைத்ததை கூற ஆரம்பித்தாள்.



“இப்போ இருக்க நம்ம இந்திய பெருங்கடல்ல முற்காலத்துல ஒரு பெரிய கண்டம் இருந்ததா நம்ம இலக்கியங்களான தொல்காப்பியம், பரிபாடல், அகநானூறு, புறநானூறு சொல்லுது. அந்த கண்டம் கடல்கோளால கடலுக்கு அடியில் புதைஞ்சதா சிலப்பதிகாரத்துல கூட குறிப்பு இருக்கு. இந்த நிலப்பரப்புல 49 நாடுகளும், பஃறுளி ஆறு, குமரி ஆறுன்னு இரு ஆறுகளும் இருந்ததாவும் கூறப்படுது. மேரு மலைன்னு ஒரு மலை இருந்ததா சீன வரலாற்று குறிப்புல குறிப்பிடப்பட்டிருக்கு. பாண்டிய மன்னர்கள் இந்த நிலப்பரப்பை ஆண்டதாகவும், இங்க தான் மூன்று தமிழ்சங்கங்கள் நிகழ்ந்ததாவும் குறிப்புகள் இருக்கு. இவ்ளோ ஏன், பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் கூட இங்க தான் தோன்றுனதா வரலாறு சொல்லுது.” என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த மென்மொழியை இடைவெட்டிய சுடரொளியோ, “வெயிட் வெயிட், அப்போ இந்த குமரிக்கண்டம் தான் லெமூரியாவா?” என்று வினவினாள்.



“இல்ல சுடர், ரெண்டும் வெவ்வேற தியரி. இப்போ இந்த ‘லெமூரியா’ தியரி உண்மை இல்லன்னு நிரூபிச்சுட்டாங்க. ஆனாலும், குமரிக்கண்டத்தை பத்தி நம்ம இலக்கியங்கள்ல குறிப்பிட்டிருக்குறதால, குமரிக்கண்டம் இருந்ததற்கான சான்றுகளை நம்ம தமிழ் ஆய்வாளர்கள் தேடிட்டு இருக்காங்க.” என்றாள் மென்மொழி.



“ஆனா, ரெண்டு பெயர்களும் ஒரே நிலப்பகுதியை குறிக்கிறது தான?” என்று சுடரொளி குழப்பத்துடன் வினவ, “லெமூரியான்னு ஏன் பெயர் வந்துச்சு தெரியுமா? ஜெர்மன் ஆராய்ச்சியாளரான எர்னஸ்ட் ஹெக்கேல், மடகாஸ்கர், தென்னிந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக்கிடையே ஒரு அசாதாரண ஒற்றுமையை கண்டுபிடிச்சாரு. அதாவது மடகாஸ்கர்ல இருந்த ஒருவகை லெமூர் இனம், தென்னிந்தியாலயும், ஆஸ்திரேலியாலயும் காணப்பட்டுச்சு. வேற எங்கேயும் இந்த வகை லெமூர்கள் இல்லையாம். அப்போ தான் இந்த மூன்று இடங்களையும் இணைக்கிற மாதிரியான ஒரு நிலப்பரப்பு இருந்துருக்கணும்னும், அது காலப்போக்குல கடலுக்கடியில போயிருக்கணும்னும் ஒரு தியரி சொல்ல ஆரம்பிச்சாங்க. ஆனா, பல பில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி, அதாவது ஒரே பெரிய கண்டமா இருந்து பல கண்டங்களா பிரிஞ்ச போதே, இந்த லெமூர் வகை இனம் பரவி இருக்கும்னு பிற்காலத்துல, இந்த தியரிக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டாங்க.” என்றாள் மென்மொழி.



மீண்டும் ஏதோ கூற வந்த மென்மொழியை தடுத்த சுடரொளியோ, “எம்மா தாயே போதும். இவ்ளோ தகவல்களை ஒரேதா கேட்டா, என் மூளை தாங்காது.” என்றவள், அங்கிருந்த பொருட்களை அடுக்கி வைக்க உதவினாள்.



மென்மொழியும், “இதுக்கே இப்படின்னா, தாத்தாவோட மொத்த ஆராய்ச்சியையும் கேட்டா, என்ன பண்ணுவ?” என்று கேலியாக கேட்டு வைக்க, “ஹான், தூங்கிடுவேன்.” என்றாள் சுடரொளி.



அதற்கும் சிரித்தவாறே கீழே கிடந்த பொருட்களை பார்த்தாள் மென்மொழி. அங்கு அழகிய வேலைப்பாடு செய்யப்பட்ட ஒரு பெட்டி திறந்து கவிழ்ந்து கிடந்ததை கண்ட மென்மொழியோ, “இந்த பெட்டி…” என்று முணுமுணுத்தவாறே, அதை தூக்க அதிலிருந்து கீழே விழுந்தன இரு கற்கள்.



அவற்றை கையில் எடுத்து பார்த்த மென்மொழியோ, “இது அதே தான். ஆனா, அப்போ அஞ்சு கல்லு இருந்ததே.” என்று குழப்பத்துடன் தனக்குத்தானே பேச, தோழியிடமிருந்து பதில் இல்லாமல் போனதில் அவளை திரும்பி பார்த்தாள் சுடரொளி.



கையில் ஜொலிக்கும் கருநீலம் மற்றும் மஞ்சள் நிறக்கற்களுடன் குழம்பி நின்றவளை சமீபித்த சுடரொளி, “ஹை, கலர் கலர் கல்லு! நான் தான் சொன்னேன்ல, கருப்பை விட கலர் கல்லு தான் நல்லா இருக்கும்னு.” என்று பேசியவாறே மஞ்சள் நிறக்கல்லை கையில் எடுக்க, அடுத்த நொடி “ஆஹ்…” என்று அலறியவாறே அதை கீழே போட்டாள்.



தோழியின் அலறலில் நிகழ்விற்கு வந்த மென்மொழியோ, “என்னாச்சு சுடர்?” என்று பதற, “கல்லை தொட்டா ஷாக்கடிக்குது மொழி.” என்று கையை ஆட்டியபடி கூற, அவளை குழப்பமாக பார்த்த மொழியோ, கீழே கிடந்த மஞ்சள் கல்லை கையில் எடுத்தாள்.



“எங்கடி ஷாக்கடிக்குது?” என்று கையை விரித்து காட்ட, “நான் தொட்டப்போ மட்டும் ஷாக்கடிச்சதே.” என்ற சுடரொளியோ மீண்டும் அதை எடுக்க முயன்று, பின், “இல்ல இல்ல நீயே வச்சுக்கோ.” என்று கையை இழுத்துக் கொண்டாள்.



மென்மொழியோ அத்துடன் அதை மறந்தவளாக, மீதி மூன்று கற்களை தேட ஆரம்பித்தாள். கீழே மேலே என்று அவள் தேடுவதை பார்த்த சுடரொளி, “எதை தேடுறன்னு சொன்னா நானும் தேடுவேன்ல.” என்று கூற, “இதே மாதிரி இன்னும் மூணு கல்லு இருந்துச்சு சுடர். இப்போ ரெண்டு தான் இருக்கு.” என்றாள் மென்மொழி.



‘எது மூணா? ஒன்னு தொட்டதுக்கே ஷாக்கடிக்குது.’ என்று யோசித்த சுடரொளியோ, “நீயே மெதுவா தேடு மொழி.” என்று ஒரு இடத்தில் அமர்ந்து விட்டாள்.



தேடி தேடி களைத்த மென்மொழியோ, உதட்டைப் பிதுக்கி, “எங்க தேடியும் காணோம்.” என்று சோர்வாக அமர, “நீ எப்போ இதை பார்த்த?” என்று கேட்டாள் சுடரொளி.



“அது… நான் சின்ன வயசுல… ஹான், முதல் முறை இங்க வந்தப்போ பார்த்தேன். நல்லா இருக்கேன்னு எடுத்து பார்த்தப்போ, தாத்தா திட்டி வாங்கி ஒளிச்சு வச்சுட்டாரு.” என்றாள் மென்மொழி.



“என்ன ஒளிச்சு வச்சாரா? ஆமா, இது என்ன கல்லு? ராசிக்கல்லா இருக்குமோ? அப்போ எதுக்கு இத்தனை கல்லை வாங்கி வச்சுருக்காரு உங்க தாத்தா?” என்று சுடரொளி கேட்க, “இதுவும் அவரோட ஆராய்ச்சியோட ஒரு பார்ட்டா இருக்கும். இல்லன்னா, எதுக்கு இங்க வச்சுருக்கணும்?” என்று சரியாக யோசித்தாள் மென்மொழி.



“அப்போ இந்த கல்லுக்கும் குமரிக்கண்டத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றியா?” என்று சுடரொளி கேட்க, இருவரின் பார்வையும் அந்த கற்களிடமே நிலைத்தது.



*****



யாழ்மொழியின் இளஞ்சிவப்பு நிறத்திற்கு அவள் அணிந்திருந்த செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிற ஆடை வெகுவாக பொருந்தியிருந்தது. கையில்லாமல் முட்டி வரை நீண்டிருந்த அந்த ஆடைக்கு பொருத்தமாக அவள் அணிந்திருந்த செம்மஞ்சள் நிற ஒற்றைக்கல் கழுத்தணி பார்ப்போரை கவர்ந்தது.



அந்த ஒற்றைக்கல்லின் ஜொலிப்பிற்கு போட்டி போடும் விதமாக உதடுகளில் தேக்கி வைத்த கவர்ச்சிகரமான சிரிப்புடன் அந்த மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தாள் யாழ்மொழி.



அவள் சிரிப்பிற்கான காரணம், வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தருணம் நெருங்கி விட்டது என்ற செய்தி கிடைத்ததால் தான் என்பதில் ஐயமில்லை.



ஆனால், அந்த சிரிப்பு சில மணி நேரங்கள் கூட நிலைக்கப் போவதில்லை என்பது அந்த நொடி அவளிற்கு தெரியவில்லை!



*****


அந்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுபெற, பலரின் பாராட்டுகளை பெற்றதில் இன்ப வெள்ளத்தில் மூழ்கிய யாழ்மொழி முகம் முழுவதும் புன்னகையுடன் அவளிற்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றாள்.



அங்கு அவளுக்காகவே காத்திருந்த வருண், “யாழ் பேபி...” என்று அழைத்தபடி அவளை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பின் உள்ளர்த்தம் உணராத யாழ்மொழியோ, “என்னை ரொம்ப தான் காக்க வைக்கிற வரு. அந்த நல்ல விஷயத்தை சீக்கிரம் சொல்லேன்.” என்று சிணுங்கினாள்.



“நான் சொல்லலைன்னா யாழ் பேபிக்கு தெரியாதா என்ன?” என்று கண்ணடித்த வருண், அவளை ஒரு சுற்று சுற்றி கண்ணாடி முன் நிற்க வைத்து பின்னிருந்து அணைத்த வண்ணம், “என் அழகு யாழ் பேபிக்கு ஒரு பட ஆஃபர் வந்துருக்கு.” என்று ஆர்ப்பாட்டமாக கூறினான்.



இதை ஓரளவு யூகித்திருந்தாலும், அதை கேட்கும்போது உண்டான உற்சாகத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக அவன் பக்கம் திரும்பியவள், “ரியலி வரு? அச்சோ எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா?” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.



“நான் தான் சொன்னேன்ல, உன்னை உயரத்துக்கு கூட்டிட்டு போவேன்னு.” என்று அவளை இறுக்க அணைத்தபடி வருண் கூற, அது எந்த உயரம் என்பதை புரிந்து கொள்ளாதவளாக மகிழ்ச்சியில் திளைத்தாள் யாழ்மொழி.



‘எனக்காக இவ்ளோ செஞ்சுருக்க வருணை போய் குத்தம் சொல்றாங்க. இருக்கட்டும், முதல்ல ஜெயிச்சுட்டு அதுக்கு அப்பறம் பார்த்துகிறேன்.’ என்ற எண்ணம் வேறு யாழ்மொழிக்கு!



“யாழ் பேபி, இது கொஞ்சம் சின்ன பட்ஜெட் படம் தான். ஆனா, இதை மட்டும் பண்ணிட்டா, கண்டிப்பா பெரிய சான்ஸ் கிடைக்கும். அதுக்கு அப்பறம், இண்டஸ்ட்ரியே உன் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும்.” என்றெல்லாம் வருண் கூற, அந்த கனவுகளில் மூழ்கிப் போனாள் காரிகை.



அவளிடமிருந்து பதில் இல்லாமல் போனதில், தன்னிடமிருந்து அவளை பிரித்தவன், “என்னம்மா, சின்ன படம்னு அப்செட்டா?” என்று வினவ, “நோ நோ வரு. சின்ன படமா இருந்தா என்ன? இது எனக்கு கிடைச்சுருக்க பெரிய சான்ஸ். அதுக்கே உன்னை தேங்க் பண்ணனும்.” என்றாள்.



“குட் கேர்ள். இதான் உன்கிட்ட எனக்கு பிடிச்சது யாழ். எஸ், நீ சொன்ன மாதிரி இது பெரிய சான்ஸ். சோ, எக்காரணம் கொண்டும் அதை விட்டுடாத.” என்றவன், “அப்பறம் பேபி, இதுல கொஞ்சம் காம்பிளிகேஷன் இருக்கு.” என்றான்.



“என்ன காம்பிளிகேஷன் வரு?” என்று வருவது தெரியாமல் யாழ்மொழி வினவ, “நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும் யாழ்.” என்றான் சாதாரணமாக கூறினான் வருண்.



மனதிற்குள் மணியடித்தாலும், தடதடத்த இதயத்துடன், “அட்ஜஸ்ட்னா?” என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி கேட்க, “ப்ச், நீ என்ன சின்ன பிள்ளையா யாழ்? இது எல்லாம் கேள்விப்பட்டிருப்ப தான? இந்த சான்ஸுக்கு நிறைய போட்டி இருக்கு. ஆனா, நான் உன்னை ரெக்கமண்ட் பண்ணதால, உனக்கு கிடைக்க தான் நிறைய வாய்ப்பு இருக்கு. அதுக்கு காம்பேன்சேட் பண்ற மாதிரி... சில அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் பண்ணனும் யாழ்.” என்று கூறினான் வருண்.



வருண் கூறியதைக் கேட்ட யாழ்மொழிக்கோ தலை சுற்றியது. இதை எல்லாம் கேள்விபடாதவள் அல்ல யாழ்மொழி. ஆயினும், தனக்கு நடக்கும்போது அதிர்ச்சியாக தான் இருந்தது. அதுவும், தனக்கு உதவிய நண்பனே அதை சொல்லும்போது, இத்தனை நாட்கள் அவனுடன் பழகியது அருவருப்பாக இருந்தது.



இருப்பினும், நூறில் ஒரு வாய்ப்பாக, அவன் தன்னை கேலி செய்ய கூறியதாக இருந்து விடாதா என்று எண்ணம் எழுவதையும் தடுக்க முடியவில்லை. அத்தனை நம்பிக்கை அவன் மீது!



ஒருவேளை அவன் கூற வந்ததை தான் சரியாக எடுத்துக் கொள்ளவில்லையோ என்ற எண்ணத்தில், “என்ன அட்ஜஸ்ட்மெண்ட்? யாரை அட்ஜஸ்ட் பண்ணனும் வருண்?” என்று கேட்க, “ப்ச், முதல்ல ரிலாக்ஸா இரு யாழ். உனக்கு இது முதல் முறைல, அதான் இப்படி இருக்கு.” என்றவன், “டைரக்டருக்கும் ப்ரொட்யூசருக்கும் உன்னை பிடிச்சு போச்சு. அதான்...” என்று இழுத்தவனை, நொடியும் தாமதிக்காமல் அடித்தவள், “அதனால, என்னை கூ*டி கொடுக்க பார்க்குற, அப்படி தான?” என்று கத்தினாள் யாழ்மொழி.



அவள் அடித்ததில் கோபம் கொண்ட வருணோ, “யாழ், என்ன இது? இப்படி லூசு மாதிரி பிஹேவ் பண்ற?” என்று வருண் வினவ, “நான் லூஸா? நீதான் டா சைக்கோ! ஃபிரெண்டு மாதிரி பழகிட்டு, என்ன வேலை பார்க்க சொல்ற?” என்று கோபம் தாளாமல் கத்தினாள் யாழ்மொழி.



“என்னமோ பத்தினி மாதிரி கத்திட்டு இருக்க? கொஞ்ச நேரம் முன்னாடி என்னை கட்டிப்பிடிச்சுட்டு நின்னது மறந்துடுச்சோ?” என்று உதட்டை வளைத்து அவன் வினவ, தன்னை நினைத்தே அருவருத்து போனாள் யாழ்மொழி.



“ஓஹ், நீ ஃபிரெண்டுன்னு நினைச்சு கட்டிப்பிடிச்சுருப்ப!” என்று போலியாக வியந்தவன், அவளருகே வந்து, “அதே மாதிரி அவங்களையும் ஃபிரெண்டுன்னு நினைச்சு...” என்று சொல்லி முடிப்பதற்குள், காலிலிருந்த ஹீல்சை கழட்டி அடித்து விட்டாள்.



அதன் கூர்முனை பட்டு கன்னத்தில் கோடாக ரத்தம் வழிய, “சொல்ல சொல்ல கேட்காம என்னையே அடிக்கிறியா?” என்று அவளின் முடியை பற்றி இழுத்தான் வருண்.



சத்தம் கேட்டு வெளியே இருந்தவர்கள் வந்துவிட, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட வருணோ, மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டான்.



“அழகான முகமும், எடுப்பான உடலும் தவிர என்ன இருக்கு உன்கிட்ட? இத்தனை பெரிய ஆஃபர் அவ்ளோ சீக்கிரம் கிடைச்சுடுமா? அப்படி கிடைக்குதுன்னா, அது உன் அதிர்ஷ்டம். கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்காம, முட்டாள்தனமா பேசிட்டு இருக்க யாழ்.” என்று சற்று தன்மையாக வருண் கூற, அவனைப் போலவே அவனருகே வந்தவளோ, “உன் தங்கச்சி கிட்ட இதையே சொல்லேன்.” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.



அதில் அவன் கோபம் மீண்டும் கிளறப்பட, “யூ பி**, இனி எப்படி இந்த ஃபீல்டுல இருக்கன்னு பார்க்குறேன்.” என்று கூற, அவனை திரும்பி பார்த்து நடுவிரலை காட்டியவள், வேகமாக வெளியேறி விட்டாள்.



அவளிற்கு தெரியும், இனி இந்த துறையில் அவள் காலை கூட வைக்க முடியாது என்பது. அதற்காக, அவளின் தன்மானத்தை விற்க அவளின் மனம் இடம் கொடுக்கவில்லை.



தாமதமாக புரிந்து கொண்டாலும், வஞ்சகனை விட்டு விலகி விட்டாள் யாழ்மொழி. ஆனால், அவன் அத்தனை எளிதில் விட்டு விடுவானா?



*****



“தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் இல்ல சுடர். பல சயின்டிஃபிக் விஷயங்கள் அதுல இருக்கு தெரியுமா? சிலர், தொல்காப்பியமே பேசிக் தான். இதை விட அட்வான்ஸான புக்ஸ் எல்லாம் அழிஞ்சுடுச்சுன்னு சொல்றாங்க. அப்போ அந்த காலத்துல வாழ்ந்த மக்கள் அட்வான்ஸ்டா தான இருந்துருப்பாங்க?” என்று மென்மொழி இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே கூற, பின்னால் அமர்ந்திருந்த சுடரொளியோ, “யாராவது இவளை நிறுத்த சொல்லுங்களேன்! சும்மா பேச்சுக்கு கேட்டா, அதையே பேச்சா வச்சுருக்கா.” என்று புலம்பினாள்.



அப்போது மென்மொழியின் அலைபேசி ஒலியெழுப்ப, அதை எடுக்க வேண்டி அவளின் கைப்பைக்குள் கரத்தை நுழைத்தாள் சுடரொளி. அலைபேசியுடன் கருநீல நிறக்கல்லும் சேர்ந்தே வந்தது.



‘ஹையோ, இது எதுக்கு கையோட வருது!’ என்று பயந்தவள், அதை தன் கைப்பைக்குள் போட்டுவிட்டு, அலைபேசியை ஆராய ஆரம்பித்தாள்.



“அட இங்க பாரேன், உன் வெப்டூனுக்கு கூட யாரோ கமெண்ட் பண்ணியிருக்காங்க.” என்று சுடரொளி கூற, “யாரு சுடர்? என்ன கமெண்ட்?” என்று மென்மொழி வினவினாள்.



“யாரோ ‘ப்ளூ ஏஞ்சல்’ டி. இரு என்ன கமெண்ட்னு பார்க்குறேன்.” என்ற சுடரொளி சிரிக்க ஆரம்பித்தாள்.



“எதுக்கு டி சிரிக்கிற?” என்று மென்மொழி கேட்க, “நீ வரைஞ்ச அந்த கொலை கதைக்கு யாரோ ஹார்ட் கமெண்ட் பண்ணியிருக்காங்க. அநேகமா, ஏதாவது சீரியல் கில்லரா தான் இருப்பான்.” என்று கேலி செய்தாள் சுடரொளி.



“அடிங், என் கதையை கேலி செய்றியா? இரு உன்னை கீழ தள்ளி விடுறேன்.” என்று வாகனத்தை அசைக்க, அவர்களின் நேரமோ என்னவோ, சாலையின் நடுவே இருந்த ஒற்றை கல், அவர்களின் வாகனத்தை தடுமாற செய்திருந்தது.



அதில் கீழே விழுந்த சுடரொளியோ, “அடிபாதகத்தி, சும்மா சொல்றன்னு பார்த்தா, உண்மையிலேயே தள்ளி விட்டுட்டாளே.” என்று புலம்ப, “நானும் தான் கீழ விழுந்துருக்கேன். சும்மா புலம்பாம எழுந்து தொலை. நடுரோட்டுல வேற விழுந்துருக்கோம், லாரி, பஸ்னு ஏதாவது வந்துடப் போகுது!” என்றாள் மென்மொழி.



தள்ளாடியபடி எழுந்த சுடரொளி மென்மொழிக்கும் கைகொடுத்து தூக்கி விட, சற்று தள்ளி விழுந்திருந்த வாகனத்தை எடுக்க முயன்றாள் மென்மொழி.



கீழே விழுந்து அடிபட்டதால் சட்டென்று அவளால் அதை தூக்க முடியவில்லை. அவள் அதை தூக்க முயலும் போதே, ஹாரன் சத்தத்துடன் வெளிச்சமும் புலப்பட, “ஹையோ, எந்த நேரத்துல வாய் வச்சான்னு தெரியல. சீக்கிரம் தள்ளி வாடி.” என்று சுடரொளி கத்தினாள்.



மென்மொழியோ அப்போதும் வாகனத்தை தூக்குவதை கைவிடாமல் இருக்க, சரக்குந்தோ நிறுத்தும் எண்ணம் இல்லாதவாறு வேகமாக வந்து கொண்டிருந்தது.



“மொழி அதை விட்டு தூர வா.” என்று சுடரொளி கத்தினாலும், அதை காதில் வாங்காதவளாக மென்மொழி தன் வேலையில் கவனமாக இருக்க, வேறு வழியில்லாததால், சுடரொளியும் சென்று வாகனத்தை தூக்க, இறுதி நொடியில் அதை நகர்த்தியிருந்தனர்.



அந்த சரக்குந்து இருவரையும் உரசிக் கொண்டு சென்றிருந்தது. அதனால் உண்டான காயத்திலிருந்து இரத்தம் கோடாக வழிந்து கொண்டிருந்தது இருவருக்கும்.



*****



அதே சமயம், மற்றொரு சாலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்தனர் இருவர்!
தொடரும்...

கதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் கருத்து திரியில் பகிருங்க.
 
eiBLVUX17874.jpg



அத்தியாயம் 3



மழை வருவதற்கான அடையாளமாக இடி சத்தம் காதை பிளக்க, மின்னல் வெளிச்சம் கண்களை கூசச் செய்ய, காற்றும் தன் பங்கிற்கு வீச, ஆளவமற்ற சாலையில், இயற்கையின் லீலைகளில் மனம் ஒட்டாதவளாக தனித்து நடந்து வந்தாள் யாழ்மொழி.



அவள் உதடுகளில் சிரிப்பு இருக்கிறது தான். ஆனால், அது முன்னதை போல கவர்ச்சி சிரிப்பு இல்லை.



காலையில் கூட தங்கையிடம் தான் ஜெயிக்கப் போவதாக மார்தட்டினாளே, இப்போது அதை எண்ணி பார்த்ததால் உண்டான விரக்தி சிரிப்பு அது!



‘அழகான முகமும், எடுப்பான உடலும் தவிர என்ன இருக்கு உன்கிட்ட? இத்தனை பெரிய ஆஃபர் அவ்ளோ சீக்கிரம் கிடைச்சுடுமா? அப்படி கிடைக்குதுன்னா, அது உன் அதிர்ஷ்டம். கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்காம, முட்டாள்தனமா பேசிட்டு இருக்க யாழ்.’ – இவை யாழ்மொழியின் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன.



இவற்றை உதிர்த்தது அவள் நண்பன் என்று நம்பிய நயவஞ்சகன் என்பதை இப்போது தானே தெரிந்து கொண்டாள்.



இதோ மீண்டும் ஒரு விரக்தி சிரிப்பு!



‘அது சரி, அழகை தவிர என்கிட்ட என்ன இருக்கு? மொழியும் இதை தான என்கிட்ட காலைல சொன்னா!’ என்று எண்ணியபடியே நடக்க, அவள் மனநிலைக்கேற்ப, மழையும் பெய்ய துவங்கியது.



சாதாரண மழையாக அல்லாமல் துவக்கத்திலேயே அதன் தீவிரத்தை காட்டியது. இதுவும் விதியின் கணக்கோ!



யாழ்மொழி தன் சிந்தை மறந்து நடந்து கொண்டிருக்க, எதிரில் விளக்குகளை ஒளிரவிட்டபடி வேகமாக வந்து கொண்டிருந்தது அந்த மகிழுந்து.



அடுத்த கணம், அந்த கோரம் நிகழ்ந்திருந்தது. அதில் முழு தவறும் யாழ்மொழி பக்கம் தான் என்று தான் கூற வேண்டும்.



ஆள் இல்லாத சாலை என்பதால் வேகமாக வந்து கொண்டிருந்த மகிழுந்தின் முன் எதிர்பாராத விதமாக யாழ்மொழி வந்திருக்க, ஓட்டுநருக்கு சிந்திக்கும் அவகாசம் கூட இருக்கவில்லை.



விளைவு, மகிழுந்தின் முன்பக்கம் பலமாக மோதியதால் தூக்கி எரியப்பட்டாள் யாழ்மொழி. அவள் உடலிலிருந்து வழிந்த செந்நிற குருதி மழை நீருடன் கலந்து ஆறாக ஓடியது.



அவள் உதடுகளில் அப்போதும் சிரிப்பு. அவளின் இறுதி சிரிப்பாக இருக்குமோ?



*****



அதே சமயம் மற்றொரு சாலையில், மென்மொழியும் சுடரொளியும் நடக்கவிருந்த விபத்தின் வீரியத்திலிருந்து இன்னும் வெளிவரவில்லை.



‘எப்படி அந்த வாகனத்தை நகர்த்தினோம்? எப்படி அந்த சரக்குந்து மோதாமல் தப்பித்தோம்?’ என்பதே அவர்களின் மூளையில் ஓடிக் கொண்டிருக்க, அவர்களிடமிருந்த அந்த கற்கள் நொடிக்கு குறைவாக மின்னியதை அவர்கள் பார்க்கவில்லை!



சிறிது நேரத்தில் லேசாக துவங்கிய தூறல், அவர்களை சுயத்தை அடையச் செய்ய, கீழே கிடந்த வாகனத்தை உயிர்ப்பித்து அங்கிருந்து கிளம்பினர். செல்லும் வழியிலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பெரிதாக பெய்ய துவங்கிய மழை ஒரு காரணம் என்றால், நடக்கவிருந்த விபரீதமும், அதிலிருந்து தப்பித்த தாக்கமுமே முக்கிய காரணமாக இருந்தது.



ஒருவழியாக மென்மொழியின் வீட்டை அடைந்தவர்கள் உள்ளே கூட நுழையவில்லை, அதற்குள் அவர்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப் போடப்போகும் நிகழ்வுகளிற்கு சாட்சியாக வந்திருந்தது அந்த அழைப்பு!



மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பு, இருக்கும் குழப்பங்களை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு மென்மொழியையும் சுடரொளியையும் ஓடிடோடி வர வைத்திருந்தது.



அங்கோ இருவரைக் காட்டிலும் அதிக குழப்பத்துடன் பணியாளர்கள் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்க, நிறுத்தி நிதானமாக கண்டு கொள்ள நேரமில்லாமல், அவசரமாக வரவேற்பிற்கு சென்றவர்கள், “யாழ்மொழின்னு யாராவது அட்மிட் ஆகியிருக்காங்களா?” என்று விசாரித்தனர்.



அங்கிருந்த பணியாளரோ, “யாழ்மொழியா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டுவிட்டு, சற்று தள்ளி சிறு குழுவாக குழுமியிருந்தவர்களிடம் அழைத்து சென்று, அவர்களிடம் ஏதோ கூறினார்.



அங்கிருந்த மருத்துவர் ஒருவர், “யாழ்மொழிக்கு நீங்க என்ன வேணும்?” என்று கேட்க, “அவ என்னோட ட்வின் சிஸ்டர் டாக்டர்.” என்ற மென்மொழியோ, “அவ இப்போ எப்படி இருக்கா டாக்டர்?” என்று பயத்துடன் வினவினாள்.



“அவங்களுக்கு பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல. வெளிக்காயங்களுக்கு டிரசிங் பண்ணியாச்சு. பிளட் ஏறிட்டு இருக்கு.” என்று மருத்துவர் கூற, சிறிது ஆசுவாசமானாள் மென்மொழி.



அதை நீடிக்க விடாதவராக, “ஆனா, அவங்க கூட வந்தவருக்கு தான் ஹெவி இஞ்சுரி. நிறைய பிளட் லாஸ் வேற.” என்று ஒருவித பதற்றத்துடன் கூற, “கூட வந்தவரா? யாரு அது?” என்று கேட்டாள் மென்மொழி.



அந்த மருத்துவரோ இருவரையும் அருகிலிருந்த அறைக்கு அழைத்து சென்றவாறு, “அவரைத் தான் நாங்க தேடிட்டு இருக்கோம்.” என்று கூற, மென்மொழியும் சுடரொளியும் அந்த மருத்துவர் சுட்டிக்காட்டிய வெற்று கட்டிலையும், அதிலிருந்த வெண்ணிற விரிப்பை அலங்கரித்திருந்த செந்நிற குருதியையும் குழப்பத்துடன் பார்த்தனர்.



“தேடிட்டு இருக்கீங்களா? நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல டாக்டர்.” என்று சுடரொளி அந்த கட்டிலை பார்த்தபடி வினவ, அந்த மருத்துவரோ ஒரு பெருமூச்சுடன், “ஹெல்பர், அவரை இங்க படுக்க வச்சுட்டு, ட்யூட்டி டாக்டர் கிட்ட ரிப்போர்ட் பண்ணி கூட்டிட்டு வரதுக்குள்ள, அவரைக் காணோம். எங்க போனாருன்னு தெரியல. இன்ஃபேக்ட், அவரைத் தேடி தான் எல்லாரும் பரபரப்பா சுத்திட்டு இருக்காங்க.” என்றார்.



அதைக் கேட்டதும் சுடரொளியோ, “என்ன டாக்டர் இது, இவ்ளோ இர்ரெஸ்பான்சிபிளா பதில் சொல்றீங்க? அடிப்பட்டிருக்க பேஷண்ட்டை தனியா விட்டுட்டு யாராவது போவாங்களா? நிறைய பிளட் லாஸ்னு வேற சொல்றீங்க.” என்று கோபத்தில் பொங்க, “மிஸ், கொஞ்சம் பொறுமையா பேசுங்க. ஆக்சுவலி, இது ஆக்சிடெண்ட் கேஸ். போலீஸ் இல்லாம, ட்ரீட்மெண்ட்டே பண்ணியிருக்க கூடாது. ஆனா, பேஷண்ட் கண்டிஷனை கன்சிடர் பண்ணி தான் நாங்க ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கோம். ஆனா, நீங்க என்னடான்னா, எங்களை பிளேம் பண்ணிட்டு இருக்கீங்க.” என்று அந்த மருத்துவரும் கூறினார்.



இருக்கும் சூழ்நிலையில் இந்த சண்டை அவசியமா என்று எண்ணிய மென்மொழி தான் சுடரொளியை கண்ணசைவில் அடக்கியவாறு, “யாரு அவருன்னு ஏதாவது தகவல் இருக்கா?” என்று வினவ, “அவரை நாங்க செக் பண்றதுக்கு முன்னாடியே காணாம போயிட்டாரு. இதுல, எங்க தப்பும் இருக்கு தான். பட், இது அதைப் பத்தி பேசுறதுக்கான நேரமில்ல. ஹாஸ்பிடல் சுத்தி தேட சொல்லியிருக்கோம். அவரை எப்படியும் கண்டுபிடிச்சுடலாம்.” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “என்ன பிரச்சனை?” என்றவாறு வந்தான் அவன்.



நெடுநெடுவென உயரம், உயரத்திற்கேற்ற உடல்வாகு, அலையலையான கேசம், மாநிறம், எதையும் ஆராய்ச்சியுடன் பார்க்கும் விழிகள், கூர்மூக்கு, அளவான உதடு, நேர்த்தியான தாடி என்று அந்த சூழலிலும் அவனை அளவெடுத்தன மென்மொழியின் விழிகள், தன்னிச்சையாக!



“ஹலோ சார், நீங்க எங்க இங்க?” என்று அவனின் அடிபட்டு கட்டு போடப்பட்டிருந்த கையை பார்த்தவாறே கேட்டார் மருத்துவர்.



“அது ஒரு சின்ன ஆக்சிடெண்ட்.” என்றவன், “இங்க என்ன பிரச்சனை?” என்று மீண்டும் கேட்க, மருத்துவரோ நடந்ததை சுருக்கமாக விளக்கினார்.



அத்தனை நேரமும், ‘யார் இவன்? இவனுக்கு எதுக்கு இத்தனை விளக்கம் தராரு இந்த டாக்டர்?’ என்ற யோசனையே மென்மொழிக்கு.



அதையும் சரியாக படித்தவனாக, “ஐ’ம் யூகேந்திரன். இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்.” என்று மென்மொழியிடம் கூறிவிட்டு, மீண்டும் மருத்துவரிடம் திரும்பி, “சிசிடிவி செக் பண்ணீங்களா?” என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டான்.



மென்மொழிக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து செய்த கலவையாக இருந்தது அந்த நிமிடம்.



‘இப்போ எதுக்கு திடீர்னு நம்மகிட்ட இண்ட்ரோ குடுத்தான்? ஒருவேளை, என்னை அறியாம, சத்தமா கேட்டுட்டேனோ?’ என்று எண்ணியபடி நின்றாள் மென்மொழி. அந்த நிமிடம், இருக்கும் கவலைகளை எல்லாம் மறந்து தான் போனாள் அவள்.



“இருந்த டென்ஷன்ல அதை மறந்துட்டேன். இதோ, இப்போ போய் செக் பண்றேன்.” என்று மருத்துவர் கூற, ஏதோ யோசித்தவனாக, “நானும் வரேன்.” என்றான் யூகேந்திரன்.



“நீங்களா? உங்களுக்கு வேலை...” என்றபடி மருத்துவர் இழுக்க, “நோ பிராப்ளம்.” என்றபடி அவன் முன்னே நடக்க, வேறு வழியின்றி மருத்துவரும் அவனைப் பின்தொடர்ந்தார்.



அப்போதும் மென்மொழி அவளின் திகைப்பிலிருந்து வெளிவராமல் இருக்க, சுடரொளி தான் அவளின் தோளில் தட்டி அவளை நிகழ்விற்கு அழைத்து வந்தாள்.



“மொழி, உனக்கு என்னாச்சு டி? அப்போ இருந்து கூப்பிடுறேன், சிலை மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று சுடரொளி வினவ, “அது... ஒன்னுமில்ல சுடர்.” என்று திக்கினாள் மென்மொழி.



சற்று முன்னர் ஏற்பட்ட நிகழ்வுகளாலும், குழப்பத்தினாலும் உண்டான தடுமாற்றம் என்று எண்ணிய சுடரொளியும் அதை விட்டுவிட்டு, “யாழை பார்க்கணும்ல.” என்று மென்மொழிக்கு நினைவுபடுத்த, அப்போது தான் அந்த எண்ணமே தோன்றியது அவளிற்கு.



அதற்காக தன்னையே திட்டிக் கொண்டவள், முன்னே சென்று கொண்டிருந்த மருத்துவரிடம் விரைந்து, “டாக்டர், நாங்க யாழ்மொழியை பார்க்கலாமா?” என்று வினவ, “பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க.” என்று அவரும் அனுமதி கொடுத்தார்.



அப்போதும் அவளின் கண்கள், அவள் அனுமதியின்றி அருகிலிருந்தவனை பார்க்க முயல, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.



அதில் சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டாலும், அவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டதை கட்டுப்படுத்த சில நிமிடங்களானது மென்மொழிக்கு.



அவளிற்கு மட்டுமல்ல, அவனிற்கும் அதே நிலை தான்!



ஏனென்று தெரியாமல், அவளையே சுற்றி வரும் விழிகளை கட்டுப்படுத்த படாதபாடு பட்டான் அந்த காவலன்!



இல்லையென்றால், எப்போதும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவன், இப்போது வேலை இருந்தும், அதை விடுத்து, அவளிற்காக இதில் ஈடுப்பட்டிருக்க மாட்டான்.



அவன் சிந்தனை செல்லும் பாதையை அறிந்து சிறிது திடுக்கிட்டவனாக, ‘அவளிற்காகவா?’ என்று தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ள, அதற்கு பதில் வரும் முன், மருத்துவர் அவனிடம் காட்டிய காணொளி அவன் கவனத்தை ஈர்த்துக் கொண்டது.



*****



கட்டிலில் தோய்ந்து படுத்திருந்த உருவத்தை பார்த்தபடி அருகே சென்ற தோழிகள் இருவரும், “யாரு இது?” என்று வினவியபிடி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



அதே சமயம், அங்கிருந்த செவிலியோ, “நீங்க தான் யாழ்மொழி அட்டண்டரா? இந்த மெடிஸின் மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க.” என்று மருந்து சீட்டை நீட்டினார்.



வேறு அறைக்கு வந்து விட்டோமோ என்று எண்ணிய இருவருக்கும் குழப்பம் அதிகரிக்க, “சிஸ்டர், யாழ்மொழி எங்க?” என்று கேட்டாள் சுடரொளி.



அதற்கு அவரோ இருவரையும் ஒருமாதிரி பார்த்து, “என்ன காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா? சீக்கிரம் மருந்தை வாங்கிட்டு வாங்க.” என்று திட்ட, “ஹலோ, நாங்க என்ன காமெடி பண்ணோம்? இவங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது. எங்க யாழ்மொழி எங்க?” என்று எகிறினாள் சுடரொளி.



அவளின் கோபத்தை கண்ட செவிலியும் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து, “என்னங்க சொல்றீங்க? இவங்க தான் யாழ்மொழி. அப்படி தான் இவங்களை அட்மிட் பண்ணவரு சொன்னாரு.” என்று கூறினார்.



“அட்மிட் பண்ணவரா? அவரைத் தான் காணோமா? யாரு அவரு? என்னதான் நடக்குது இங்க?” என்று சத்தமாக யோசித்த மென்மொழிக்கு தலை சுற்றியது.



செவிலியோ இருவரையும் குழப்பத்துடன் பார்த்தபடி வெளியேற, அறைக்குள் இருப்பது மூச்சு முட்டுவதை போலிருக்க மென்மொழியை அழைத்துக் கொண்டு சுடரொளி வெளியே வந்தாள்.



“சுடர், என்னதான் நடக்குது? யாழ் எங்க?” என்று பதற்றமும் பயமும் கலந்த குரலில் மென்மொழி வினவ, “நீ கொஞ்சம் ரிலாக்ஸா இரு மொழி.” என்ற சுடரொளி, “நான் வேணும்னா அப்பா கிட்ட சொல்லவா?” என்று வினவினாள்.



அவளிற்கும் இதை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாமல், அதற்கு எப்படி தீர்வு காண்பது?



அதில் ஓரளவிற்கு தெளிவான மென்மொழியும், “இல்ல சுடர், முதல்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுப்போம். யாழ் எங்க? யாழ்னு சொல்லி ஏன் வேற யாரையோ அட்மிட் பண்ணியிருக்காங்க? இதுக்கெல்லாம் பதில் தெரியணும்னா அந்த காணாம போனவரை முதல்ல கண்டுபிடிக்கணும். அதுக்குள்ள அவசரப்பட்டு அங்கிளுக்கு சொல்லி அவங்களையும் டென்ஷன் படுத்த வேண்டாம்.” என்று கூறினாள்.



“மொழி, முதல்ல யாழுக்கு கால் பண்ணி பாரு.” என்று சுடரொளி கூற, “அட ஆமா, அவளுக்கு அடிபட்டுருக்குன்னு கால் வந்ததும், அவளுக்கு கால் பண்ணனும்னு கூட யோசனை வரல.” என்றபடி யாழ்மொழிக்கு அழைப்பு விடுக்க, அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.



அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருவரும் அந்த மருத்துவமனையின் பின்பக்க வாயிலை அடைந்திருந்தனர். மழை வலுவாக பெய்து கொண்டிருக்க, சற்று தொலைவில், யாரோ ஒருவர் கீழே விழுந்திருப்பதைக் கண்டாள் மென்மொழி.



“சுடர், அங்க பாரு. யாரோ கீழ விழுந்துட்டாங்க. மழை வேற பெய்யுது.” என்றவாறு, அந்த நபரை நோக்கி மென்மொழி ஓட, “மொழி, மெதுவா போ.” என்று கத்தியபடி சுடரொளியும் அவளைப் பின்தொடர்ந்தாள்.



அருகே சென்றபோது தான் அந்த நபரின் உடலிலிருந்து குருதி பெருகி வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு, “சுடர், சீக்கிரம் ஹெல்புக்கு யாரையாவது கூட்டிட்டு வா. அவருக்கு நிறைய பிளஸ் லாஸாகி இருக்கு.” என்று பின்னே வந்தவளிடம் கூறிய மென்மொழி, தரையை நோக்கி இருந்த அந்த நபரின் முகத்தை திருப்பிப் பார்த்தாள்.



மருத்துவமனையின் பின்புறம் என்பதால், அங்கிருந்த ஒற்றை விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் சரியாக தெரியாத அந்த நபரின் முகம், மின்னல் வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிய, “அச்சோ இன்பா.” என்று திகைப்பில் கத்தினாள் மென்மொழி.



அதற்குள், சுடரொளி செவிலியுடன் அங்கு வர, “இவரு தான் யாழ்மொழியை அட்மிட் பண்ணவரு. அவங்களை அட்மிட் பண்ணதும், அப்படியே மயங்கிட்டாரு. அவருக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணலாம்னு பார்த்தா, அதுக்குள்ள ஆளைக் காணோம். இப்போ இங்க இருக்காரு.” என்று பதற்றத்துடன் கூறியபடி, அங்கிருந்த மற்ற பணியாளர்களை அழைத்து வர வேண்டி உள்ளே ஓட, மென்மொழியோ என்ன நடக்கிறது என்பது புரியாமல், அதிர்ச்சியுடன் இன்பசேகரனை தொட்டாள்.



அதற்குள், சிலர் ஓடி வந்து கீழே கிடந்த இன்பசேகரனை தூக்கிக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்றனர்.



அதே சமயம், சிசிடிவி காட்சிகளை பார்த்து, பின்புறம் வந்திருந்தனர் யூகேந்திரனும் அந்த மருத்துவரும்.



மருத்துவர் இன்பசேகரனிற்கு சிகிச்சை அளிக்க சென்றுவிட, தோழிகள் இருவரையும் பார்த்தபடி அவர்களிற்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான் யூகேந்திரேன்.



அவனிற்கும் யோசிக்க வேண்டி இருந்தது.



அத்தனை நேரம் ஆளரவமின்றி இருந்த இடத்தில் திடீரென்று எப்படி இன்பசேகரன் தோன்றினான் என்ற கேள்வி அவன் மூளையை குடைந்து கொண்டிருந்தது.



அதே சமயம், தலையில் கைவைத்து குனிந்திருந்த மென்மொழியோ, சட்டென்று நிமிர்ந்து, “சுடர், நமக்கு நடந்த ஆக்சிடெண்ட், யாழுக்கு நடந்த ஆக்சிடெண்ட், இன்பாக்கு நடந்த - இதெல்லாம் ஏதோ கனெக்ஷன் மாதிரி தெரியல?” என்று வினவ, “மொழி, நான் ஏற்கனவே குழப்பத்தோட இருக்கேன். நீ வேற புதுசு புதுசா சொல்லி பயமுறுத்தாத. முதல்ல, யாழ் எங்கன்னு கண்டுபிடிப்போம். அதுக்கு இன்பா தான் பதில் சொல்லணும். ஆமா, இன்பா ஏன் வேற யாரையோ யாழ்னு அட்மிட் பண்ணனும்? எனக்கு என்னமோ, இந்த ஹாஸ்பிடல் மேல தான் டவுட்டா இருக்கு.” என்றாள்.



அத்தனை நேரம் அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த யூகேந்திரனின் மூளை யாழ்மொழி விஷயத்தை அலசினாலும், அவனின் விழிகள், மென்மொழியின் கால்சராய் பையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த வெளிச்சத்தையும் நோட்டமிட்டன.



அப்போது அவசர சிகிச்சை அறையிலிருந்து மருத்துவர் குழப்பத்துடனும் அதிர்ச்சியுடனும் வெளியே வர, அவரிடம் விரைந்த மென்மொழி, “என்னாச்சு டாக்டர்? இன்பா ஓகே தான?” என்று பதற்றத்துடன் வினவினாள்.



அவரோ பிரம்மையில் இருந்ததை போல, “ஹீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட். அது தான் எப்படின்னு தெரியல.” என்றபடி சென்று விட்டார்.



அவரையே குழப்பத்துடன் பார்த்த மென்மொழி, அறைக்குள் நுழைய, அங்கு சற்று முன்னர் காணப்பட்ட காயங்கள் எதுவுமின்றி சாதாரணமாக உறங்குவதை போல படுத்திருந்தான் இன்பசேகரன்.
தொடரும்...

கதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் கருத்து திரியில் பகிருங்க.
 
ei42XF330117.jpg


அத்தியாயம் 4



குருதி பெருகி வழிந்து ஓடிய காயங்கள் இருந்த சுவடின்றி, சொல்லப் போனால் என்றும் இல்லாத புது பொலிவுடன் நிச்சலனமாக உறங்கும் இன்பசேகரனை பார்த்த மென்மொழிக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்றே தெரியவில்லை.



வியப்பும் குழப்பமும் கலந்த கலவையாக அந்த அறையின் வாசலில் நின்றவளை நகர்த்தி இருந்தது, ‘யாழ்மொழி விழித்து விட்டாள்’ என்ற செய்தி!



முகம் அறியாத ஒருத்தி, தன் உடன்பிறந்தவள் என அடிபட்டு விழித்திருக்க, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாற்ற நிலையில் தான் இருந்தாள் மென்மொழி.



தோழியின் நிலை புரிந்தவளாக, “மொழி, முதல்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுப்போம்.” என்று ஆறுதலாக பேசியவாறு அவளை அழைத்துக் கொண்டு யாழ்மொழி இருந்த அறையை நோக்கி சென்றாள் சுடரொளி.



இருவரின் பேச்சையும் கேட்டவாறே யோசனையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான் யூகேந்திரன்.



அறைக்கதவின் கைப்பிடியை பிடித்தவாறு தயக்கத்துடன் மென்மொழி நிற்க, எத்தனை நேரம் அப்படியே நின்றாளோ, பின்னிலிருந்து செருமல் சத்தம் கேட்டதும் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.



அங்கு அவளையே துளைக்கும் பார்வை பார்த்திருந்தான் யூகேந்திரன்.



இதயத்தை துளைக்கும் அந்த கூர்ப்பார்வை அவளை பாதிக்க, ‘ச்சு, என்ன இது, ஏன் இப்படி பார்க்குறான்? ப்ச், இந்த சுடரை வேற காணோம்!’ என்று மென்மொழி நினைக்க, அதற்கு மறுமொழி கூறுவது போல, “என் பார்வையே அப்படி தான்.” என்று அவன் கூற, ‘இப்பவும் சத்தமா பேசிட்டோமா?’ என்று அவள் பதறினாள்.



அதையும் கேட்டது போல, இதழோரம் சிறு புன்னகை அவனிடம்!



அதை அவளிடம் கச்சிதமாக மறைத்தபடி, “உள்ள போற எண்ணம் இருக்கா இல்லையா?” என்று வினவ, அவளும் அவன் சொல்லிற்கேற்ப உள்ளே செல்ல கதவை திறந்து, பின் மீண்டும் மூடி பின்னடைந்தாள்.



அதில், அவன் மீது மோதியும் கொண்டாள்.



நிகழ்ந்த நொடி நேர தாக்குதலில், இருவருக்குமே புதுவித உணர்வு மனதிற்குள் தோன்றினாலும், இருக்கும் சூழல் உணர்ந்து அதை உள்ளுக்குள்ளேயே அமிழ்த்தி விட்டனர்.



சில நொடிகளில் சுயமடைந்த மென்மொழியோ, யூகேந்திரன் பக்கம் திரும்பி, “நீங்க ஏன் உள்ள வரீங்க?” என்று சந்தேகத்துடன் வினவினாள்.



அவளின் கேள்வியில் ஒற்றை புருவம் உயர்த்தியவன், “ஏன்னா, இது ஆக்சிடெண்ட் கேஸ். அதை விசாரிக்க வரேன்.” என்றவாறே, கதவின் கைப்பிடியை பிடித்திருந்த அவள் கரத்தின் மீது கைவைத்து கதவை திறந்தான் யூகேந்திரன்.



விளைவு, இருவரும் ஜோடியாக அந்த அறைக்குள் நுழைந்தனர்!



அவர்கள் பின்னே உள்ளே நுழைந்த சுடரொளியோ மென்மொழி அருகே வந்து, “அடியேய் மொழி, என்னடி நடக்குது இங்க? நம்மளை சுத்தி என்னென்னமோ நடந்துட்டு இருக்கு. நீ என்னன்னா, அந்த போலீஸ்கார் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க!” என்று கிசுகிசுப்பாக கூறினாள்.



“எருமை மாடே! எல்லாம் உன்னால தான். அந்த போலீஸ் கூட என்னை தனியா கோர்த்து விட்டு எங்கடி போன நீ? இதுல ரொமான்ஸ்னு கம்ப்லைன்ட் வேற!” என்று மென்மொழி மெல்லிய குரலில் கூறி பல்லைக் கடிக்க, “நான் எங்க போனேன். குத்துக்கல்லு மாதிரி அங்க தான் நின்னேன். ஆனா, நீங்க தான் என்னை ஒரு மனுஷியாவே மதிக்காம, கதவை இழு – தள்ளுன்னு ரொமான்ஸ் பண்ணீங்க.” என்றாள் சுடரொளி.



அதற்கு மறுமொழி கூற வந்த மென்மொழியை தடுத்த யூகேந்திரனோ, “உங்க சண்டையை அப்பறமா வச்சுக்கோங்க.” என்று கூறிவிட்டு, படுக்கையில் கண்மூடி படுத்திருந்தவளை நோக்கி அடியெடுத்து வைக்க, அவனை முந்திக் கொண்டு சென்றாள் மென்மொழி.



இவர்களின் சத்தத்தில் கண்விழித்தவளோ, வறண்டு கிடந்த உதடுகளை சிரமப்பட்டு பிரித்து, “மொழி...” என்று அழைக்க, அத்தனை நேரமிருந்த குழப்பம் மறைந்து, “யாழ்...” என்று அவளின் அடிபட்ட கரத்தை பற்றிக் கொண்டாள் மென்மொழி.



ஆனால், மென்மொழியின் நொடிநேர தயக்கத்தை கண்டு கொண்ட யாழ்மொழியோ, அதை தவறாக புரிந்து கொண்டு, “என்னை பார்க்க கூட பிடிக்கலையா மொழி? அது சரி, எப்போ பார்த்தாலும் உன்கூட சண்டை போட்டுட்டே இருந்த என்னை எப்படி பிடிக்கும்? எல்லாம் என் நேரம், நீ சொன்னதெல்லாம் நம்பாம, அவனைப் போய் நல்லவன்னு நம்பி... ப்ச், சொல்லவே அசிங்கமா இருக்கு மொழி.” என்று கண்கலங்கினாள் யாழ்மொழி.



அவள் தவறாக புரிந்து கொண்டு பேசுவதை தடுக்க எண்ணிய மொழி, அடுத்து அவள் கூறியவற்றை கிரகித்து, “என்னாச்சு யாழ்? அந்த ராஸ்கல் என்ன பண்ணான்? எப்படி இந்த ஆக்சிடெண்ட் நடந்துச்சு? அவன் தான் காரணமா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.



முதலில் பதில் சொல்ல தயங்கிய யாழ்மொழி, பின்னர் வெளியே கூறினாலாவது மனதில் ஏறிய பாரம் குறையும் என்று எண்ணினாளோ என்னவோ, நடந்தவற்றை சுருக்கமாக கூறினாள்.



“இடியட், உன்கிட்ட வாலாட்டுனப்போவே அவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருக்கணும் மொழி. பா***ட், இப்படி எல்லாம் சர்வசாதாரணமா கேட்க ஆரம்பிச்சுட்டானுங்க.” என்று கோபத்தில் கத்தினாள் சுடரொளி.



அதைக் கேட்ட யாழ்மொழியோ அதிர்ச்சியுடன் மென்மொழியை பார்த்து, “உன்கிட்டயா..? என்ன பண்ணான் அவன்?” என்று கேட்டவள், பதிலை எதிர்பார்க்காமல், “ஏன் என்கிட்ட சொல்லல?” என்று கேட்க, “சொன்னா மட்டும் நம்பியிருப்பியா?” என்று கோபம் குறையாமல் பதில் கேள்வி கேட்டாள் சுடரொளி.



“சுடர், இப்போ எதுக்கு இந்த பேச்சு?” என்று மென்மொழி தடுக்க, யாழ்மொழியோ குற்றவுணர்வுடன், “இதுவும் என்னால தான். இப்போ புரியுது மொழி, உனக்கு ஏன் என்னை பார்க்க கூட பிடிக்கலன்னு.” என்றாள்.



‘அட லூஸே’ என்பது போல யாழ்மொழியை பார்த்து வைத்த சுடரொளி, தன் கைப்பையிலிருந்த சிறிய கண்ணாடியை எடுத்து யாழ்மொழியின் கையில் திணித்தபடி, “இதுக்கு தான் அவ தயங்குனா. எக்குத்தப்பா யோசிக்கிற உன் மூளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடு.” என்றாள்.



“ப்ச், சுடர்.” என்று மென்மொழி சலித்துக் கொள்ள, யாழ்மொழியோ குழப்பத்துடன் அந்த கண்ணாடியை பார்த்த அடுத்த நொடி கத்த ஆரம்பித்து விட்டாள்.



அந்த கண்ணாடியை கீழே தூக்கி போட்டு, கீழே விழுந்து நொறுங்கியதை, ஏதோ தீண்டத்தகாததை போல பார்த்தபடி, “நோ நோ, இது நான் இல்ல. இது என் முகம் இல்ல. என் முகம்... அழகு... இல்ல இல்ல...” என்று அவளின் முகத்தை தொட்டு தடவியபிடி கத்தினாள்.



“ரிலாக்ஸ் யாழ்.” என்று எத்தனை சொல்லியும் யாழ்மொழியின் புலம்பல் நின்ற பாடில்லை.



அதில் எரிச்சலான மென்மொழி சுடரொளியை நோக்கி, “இப்போ இது அவசியமா?” என்று வினவ, “மறைச்சா மட்டும் எல்லாம் சரியாகிடுமா?” என்று மல்லுக்கு நின்றாள் சுடரொளி.



ஒரு பெருமூச்சுடன் யாழ்மொழி அருகே சென்ற மென்மொழி, தன்னிலை மறந்து புலம்பிக் கொண்டிருந்தவளை உலுக்கி, “இது நீ இல்ல தான். அதுக்காக இப்படி புலம்பிட்டு இருந்தா சரியாகிடுமா? நம்மளை சுத்தி என்னென்னமோ நடக்குது யாழ். அது என்னன்னு நம்ம தெரிஞ்சுக்கணும். அது தெரிஞ்சா, நீ ஏன் இப்படி மாறியிருக்கன்னும் தெரியும். டிரஸ்ட் மீ, திரும்ப நீ பழையபடி மாறிடுவ.” என்று நம்பிக்கை கொடுக்க, அவள் கரத்தை பிடித்துக் கொண்ட யாழ்மொழியோ, “நான் மாறிடுவேன் தான?” என்று பரிதாபமாக கேட்டாள்.



“உஃப், இப்ப கூட அழகா இல்லங்கிறது தான் அவ கவலை!” என்று சுடரொளி முணுமுணுக்க, அவளை திரும்பி முறைத்த மென்மொழி, மீண்டும் யாழ்மொழியிடம் திரும்பி, “கண்டிப்பா யாழ். இப்போ அந்த ஆக்சிடெண்ட் எப்படி நடந்துச்சுன்னு யோசிச்சு சொல்றியா?” என்று வினவினாள்.



அதில் நிதானத்திற்கு வந்த யாழ்மொழியும் கண்களை மூடி சிந்தித்து, “அந்த ஆக்சிடெண்ட்டே என்னால தான் மொழி. நடந்ததை யோசிச்சுட்டே, ரோட்டை பார்க்காம கிராஸ் பண்ண போய், எதிர்ல வந்த கார் கண்ட்ரோல் இல்லாம என்மேல மோதிடுச்சு.” என்றாள்.



“அப்போ இன்பாக்கு எப்படி அடிபட்டுருக்கும்?” என்று சுடரொளி மென்மொழியிடம் கேட்க, “இன்பாவா?” என்று அதிர்ந்த யாழ்மொழி, “அவனுக்கு அடிபட்டிருக்கா?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.



“உனக்கு அவனை, அந்த ஆக்சிடெண்ட் நடந்த இடத்துல பார்த்த ஞாபகம் இல்லையா?” என்று மென்மொழி வினவ, மீண்டும் யோசித்த யாழ்மொழி, “அந்த கார் என் மேல முழுசா மோதல மொழி. யாரோ எனக்கு முன்னாடி வந்து நின்ன மாதிரி இருந்துச்சு. அது, இன்பாவான்னு எனக்கு சரியா தெரியல.” என்றவள், சட்டென்று கண்களை திறந்து, “இன்பா... அவனுக்கு தான் நிறைய அடிபட்டுருக்கும். இப்போ எப்படி இருக்கான்?” என்று பதறினாள்.



“ஹ்ம்ம், உனக்கு முகம் மாறின மாதிரி, அவனுக்கு ஏற்பட்ட காயம் எல்லாம் மறைஞ்சு போச்சு.” என்று சுடரொளி கூற, குழப்பத்துடன் அவளை ஏறிட்டாள் யாழ்மொழி.



அதே சமயம், உள்ளே நுழைந்த செவிலி, “பேஷண்ட்டோட திங்ஸ்.” என்று மென்மொழியிடம் கொடுத்து விட்டு செல்ல, அதில் மற்றவைகளை மங்கச் செய்து ஒளிர்ந்தது செம்மஞ்சள் நிறக் கல்.



அதை பார்த்து விழி விரித்த மென்மொழி, “இது எப்படி உன்கிட்ட யாழ்?” என்று அதிர்ச்சி விலகாமல் வினவ, தலை குனிந்து யாழ்மொழியோ, “அது... தாத்தா வீட்டுல இருந்து எடுத்தேன்.” என்றாள்.



மென்மொழி கையில் வைத்திருந்த கல்லை பார்த்த சுடரொளியோ, “இது அதுல?” என்று அதை தொட கூட முயற்சிக்காமல் தள்ளி நின்று கொள்ள, அத்தனை நேரம் சற்று தள்ளி நின்று மூவரின் சம்பாஷணைகளை கவனித்துக் கொண்டிருந்த யூகேந்திரன், மென்மொழி அருகே வந்து அந்த கல்லை உற்று நோக்கினான்.



பின் என்ன நினைத்தானோ, “உன்கிட்ட இருக்க கல்லையும் எடு.” என்று மென்மொழியை பார்த்து கூற, அவளோ திகைப்புடன் அவனை பார்த்து, “என்கிட்ட கல் இருக்குன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று வினவினாள்.



அவனோ அதற்கு பதில் சொல்லாமல், கால்சராய் பைக்குள் கைவிட்டு எதையோ தேடி எடுத்து, கரத்தை விரித்து எடுத்த பொருளை மென்மொழிக்கு காட்டினான்.



அவன் கரத்தில் நீல நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது அந்த கல்!



அப்போது ஏதோ உந்துதலில் அவளின் கைப்பைக்குள் கைவிட்டு துழாவி கருநீல நிறக்கல்லை எடுத்த சுடரொளி, “அடக்கடவுளே, இதென்ன எல்லாரு கிட்டயும் கல் இருக்கு? ஆமா, இது எப்படி என் பேக்ல வந்துச்சு?” என்று ஒருபக்கம் குழம்ப, யூகேந்திரன் கையிலிருந்த கல்லை பார்த்த மென்மொழியோ, “இது தாத்தா வீட்டுல தான இருந்துச்சு?” என்று குழம்பினாள்.



“ஹையோ, இங்க என்ன தான் நடக்குதுன்னு யாராவது சொல்லுங்களேன்.” என்று யாழ்மொழி கூற, “அட இரும்மா, ஃபுல் கான்ஷியஸ்ல இருந்த எங்களுக்கே என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல. மயங்கி எந்திரிச்சதும் உனக்கு புரிஞ்சுடனுமா?” என்றாள் சுடரொளி.



குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மென்மொழியை சொடக்கிட்டு நிகழ்விற்கு அழைத்து வந்த யூகேந்திரன், “சிலை திருட்டு கேஸ் விசாரிக்க போன இடத்துல, சிலைகளோட இதுவும் கிடைச்சது.” என்றான் அவள் மனதில் நினைத்த கேள்விக்கு பதிலாக.



பின், “இந்த கல்லால யாழ்மொழிக்கு பவர் கிடைச்சுருக்குன்னு நினைக்குறேன்.” என்று யோசனையுடன் யூகேந்திரன் கூற, “எது பவரா? இப்படி முகம் மாறி இருக்குறது பவரா?” என்று பரிதாபமாக யாழ்மொழி வினவினாள்.



“ஆமா, உருவத்தை மாத்துற சக்தி.” என்ற யூகேந்திரன், “இஃப் ஐ’ம் நாட் ராங், இந்த கல்லை வச்சுருக்க நமக்கும் பவர்ஸ் கிடைச்சுருக்கும்.” என்று அவன் கையிலிருந்த நீல நிறக்கல்லை பார்த்துக் கொண்டே கூறினான்.



“அப்போ... அப்போ... இன்பாக்கு காயம் எல்லாம் மறைஞ்சு போனது தான் அவனோட பவரா?” என்று சுடரொளி ஆர்வமாக கேட்க, “இல்ல, அது அவனோட பவர் இல்ல.” என்ற யூகேந்திரனின் பார்வை மென்மொழியை நோக்கியது.



“நானா? நான் ஒன்னும் பண்ணல.” என்று மென்மொழி பின்வாங்க, “இன்பாக்கு டிரீட்மெண்ட் நடந்தப்போ, உன்கிட்ட இருந்த கல்லு க்ளோ ஆச்சு.” என்று யூகேந்திரன் கூற, அவள் கையிலிருந்த மஞ்சள் நிறக்கல்லை விழி பிதுங்க பார்த்தாள் மென்மொழி.



சுடரொளியும் அவளிடமிருந்த கல்லை பார்த்தபடி, “அப்போ எனக்கு என்ன பவர்?” என்று தனக்குத்தானே பேசிக் கொள்ள, எதையோ யோசித்த மென்மொழி சட்டென்று நிமிர்ந்து யூகேந்திரனிடம், “உங்களுக்கு என்ன பவர்?” என்று வினவ, அவனோ இதழோர சிரிப்புடன், “மைண்ட் ரீடிங்னு நினைக்குறேன். சிலரோட மைண்ட்வாய்ஸ் சத்தமா கேட்குது.” என்றான்.



உடனே, நெஞ்சில் கைவைத்துக் கொண்ட மென்மொழியோ வேகமாக மூச்சை விட்டுக் கொண்டே, ‘அடக்கடவுளே, இதனால தான் நான் மனசுல நினைச்சதெல்லாம் சரியா சொன்னாரா?’ என்று நினைக்க, அவளின் எண்ணத்தை மெய்ப்பிக்கும் விதமாக, “ஆமா.” என்று ஒற்றை சொல்லில் முடித்து விட்டான் யூகேந்திரன்.



அப்போது சுடரொளி அவனையே குறுகுறுவென்று பார்க்க, அதற்கான காரணத்தை உணர்ந்தவனாக, “எல்லாரோட மைண்ட்வாய்ஸும் கேட்கல. அந்த அளவுக்கு பவர் இன்னும் வரல போல.” என்று கூற, ‘ஹப்பாடி!’ என்று சுடரொளி பெருமூச்சு விட, மென்மொழியோ, “நான் மட்டும் என்ன பண்ணேன்?” என்று முணுமுணுத்தாள்.



இருவரையும் பார்த்த சுடரொளியோ, “க்கும் க்கும், அது சரி, இன்பாக்கு அப்போ என்ன பவர்?” என்று வினவ, “டிரான்ஸ்போர்டேஷன்” என்ற குரல் கதவு இருந்த திசையிலிருந்து வந்தது.



உள்ளே நுழைந்த இன்பசேகரனை கண்ட தோழிகள் இருவரும், “இப்போ எப்படி இருக்கு இன்பா?” என்று அவனருகே செல்ல, அத்தனை நேரம் அவனைக் கேட்டுக் கொண்டிருந்த யாழ்மொழியோ தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.



“எனக்கு ஒன்னுமில்ல.” என்று தோழிகளிடம் கூறிய இன்பசேகரனின் பார்வை அவனவளை தான் வருடியது.



யாழ்மொழி இருந்த கட்டிலருகே சென்ற இன்பசேகரன், “நீ ஓகேவா யாழு?” என்று வினவ, அவளோ நிமிராமல் தலையை அசைக்க மட்டும் செய்தாள்.



அவனோ மனதிற்குள், ‘என்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டியா?’ என்று நினைக்க, அவளோ, ‘எந்த மூஞ்சியை வச்சுட்டு உன்னை பார்க்க?’ என்று எண்ணினாள்.



அந்த காட்சியை மற்ற மூவரும் படத்தை போல பார்த்துக் கொண்டிருக்க, யூகேந்திரனை நோக்கி திரும்பிய சுடரொளியோ, “இவங்க மைண்ட்வாய்ஸை நீங்க மட்டும் இல்ல, நானும் கூட கேட்ச் பண்ணுவேன்.” என்று கூற, அவனோ பக்கென்று சிரித்து விட்டான்.



அவன் சிரிப்பை ஓரக்கண்ணில் மென்மொழி பார்க்க, “இங்க எவ்ளோ களேபரம் நடந்தாலும், உன் வேலைல சரியா இருக்கடி.” என்று கேலி செய்தாள் சுடரொளி.



சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்ட மென்மொழியோ, “லூசு, சும்மா தான் பார்த்தேன். உடனே, ஓட்ட ஆரம்பிச்சுடுவியா?” என்று சமாளிக்க முயல, அவளை மேலும் கேலி செய்ய ஆரம்பித்தாள் சுடரொளி.



அதற்குள் ஆண்கள் இருவரும், தங்களுக்குள் அறிமுகமாகிக் கொண்டனர்.



“இன்பா, உனக்கு எப்படி இந்த கல் கிடைச்சது?” என்று மென்மொழி வினவ, அவன் பதில் சொல்வதற்குள், “இதென்ன பெரிய ரகசியமா? உன்கூட பிறந்தவளுக்கு கல் கிடைச்சா, இவனுக்கும் கிடைச்ச மாதிரி தான? இந்த மாதிரி வேலைக்கு எல்லாம், ரெண்டும் ஒண்ணா தான சுத்தும்.” என்றாள் சுடரொளி.



அவள் கூறியது சரியாக இருக்க, அதை மறுக்க முடியாமல், “சாரி...” என்று மட்டும் கூறினான் இன்பசேகரன்.



“இன்பா, டிரான்ஸ்போர்ட்ஷன் தான் உங்க பவர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று அடுத்து யூகேந்திரன் விசாரிக்க, “யாழை இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணதும், என் காயத்தை பார்த்து, என்னையும் பெட்ல படுக்க வச்சுட்டு, டாக்டரை கூட்டிட்டு வரதா சொல்லி நர்ஸ் போனாங்க. அந்த செகண்ட்ல, இந்த கல்லுல இருந்து பச்சை கலர் லைட் வெளி வந்துச்சு. லேசான மயக்கத்துல இருந்த நான், அந்த வெளிச்சத்துல கண்ணை திறந்து பார்த்தப்போ, வேற இடத்துல இருந்தேன். அப்பறம் திரும்ப இங்க வந்துட்டேன்.” என்றான்.



“அப்போ ரூம்ல இருந்து ஹாஸ்பிடல் காரிடருக்கு போயிருக்க.” என்று மென்மொழி கூற, “இல்ல மொழி, காரிடருக்கு வரதுக்கு முன்னாடி வேற ஒரு இடத்துக்கு போனேன். அந்த இடத்துல ஒரு உருவம்... சரியா தெரியல. அது என் பக்கத்துல வரதுக்குள்ள திரும்ப ஹாஸ்பிடல் காரிடருக்கு வந்துட்டேன்.” என்றான் இன்பசேகரன்.



“யாரு அந்த உருவம்?” என்று அனைவரும் சிந்திக்க, சுடரொளியோ ஒருபடி மேலே சென்று, “எனக்கு புரிஞ்சுடுச்சு. இன்பா அந்த மிஸ்டீரியஸ் இடத்துல பார்த்தது ஒரு ஏலியன். இந்த கல்லு, பவர்ஸ்... எல்லாம் அந்த ஏலியன் நமக்கு கொடுத்தது. இதை வச்சு இந்த பூமியை நம்ம காப்பாத்தனும்.” என்று கூறியதோடு அல்லாமல், “எத்தனை படத்துல பார்த்துருக்கோம்?” என்றும் கூற, மற்றவர்கள் அவளையே ஏலியன் போல பார்த்தனர்.



“லூசு!” என்று தோழியை திட்டிய மென்மொழியோ, தன் கையிலிருந்த கல்லின் மீது பார்வையை பதித்தபடி, “இதைப் பத்தின தகவல் தெரியணும்னா தாத்தா வீட்டுக்கு தான் போகணும்.” என்றாள்.



அவள் கூறியதைக் கேட்ட மற்றவர்களும், அவரவர் கரத்திலிருந்த கல்லை பார்த்தனர்.



அதே சமயம், அந்த கற்களும் கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள் ஆகிய வண்ணங்களில் ஒளிர்ந்தன.



தொடரும்...



தாமதத்திற்கு மன்னிக்கவும். கதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் கருத்து திரியில் பகிரவும்.
 
Status
Not open for further replies.
Top