வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பொழுது புலரும் நேரம் - கதை திரி

Status
Not open for further replies.
பொழுது புலரும் நேரம்.

நேரம் - 1

பல இடைஞ்சல்களுக்கு மத்தியில் தன் பணியை முடித்து கையோடு மடிக்கணினியை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தாள் இசைத்தமிழ். அனுதினமும் அவள் வாங்கும் பல பேச்சுகளுக்கு மத்தியில் இன்று புதிதாய் ஒன்றும் இணைந்துவிட்டது. அது வேறொன்றுமில்லை, திருமணம் தான். இருபத்திமூன்று வயது நிரம்பிய இசைத்தமிழ் வேலைத் தேடிக் கொண்டிருக்கும் யுவதி. எழுத்துக்கள் மீது தீரா ஆர்வம் கொண்டவளுக்கு அந்தத் துறையில் முன்னேற சரியான வாய்ப்புத்தான் கைகொடுக்கவில்லை. இதில் என்ன சம்பாத்தியம் வந்துவிடப் போகிறது எனும் பெற்றோருடன், பெண் பிள்ளைக்கு இதெல்லாம் தேவையா என்று உறவினரும் சேர்ந்துக் கொள்ள வலுக்கட்டாயமாக அவளின் எழுத்து அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது. ஆனால், அதை அவள்தான் ஒப்புக்கொள்ளவில்லை. அவளால் அதை விடவும் முடியவில்லை. இதோடு 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு பல படிகளில் உயர்ந்துக்கொண்டே வருகிறாள். பல விருதுகளைப் பெற்றுள்ளாள், இருந்தும் பயன் என்னவோ சுழி தான். மீண்டும் அவள் அன்னையின் அர்ச்சனை ஆரம்பமாகியது.

“தேடி வந்த வரன், எம்புட்டு தகிரியமா வேணாமுனு சொல்றவ? இருக்குறது ஒரே பொட்டக்கழுத. அத வெரசா கரை சேக்க வேணாவா? எம்புட்டு நாளு தான் நானும் அவரும் பொறுத்துப் பொறுத்து போறதுங்குறேன். ஒழுங்கா நான் சொல்றத கேளு. இல்லையின்டா என்ன நடக்குமுனு தெரியாது சொல்லி போட்டேன்” என்றபடியே தன் பணியைத் தொடர்ந்தார் இசைத்தமிழின் அன்னை லட்சுமி.

தோட்டத்திற்குச் சென்ற இசைத்தமிழின் தந்தை வெற்றிவேல் “இந்தா லட்சுமி, நாளக்கழிச்சு மாப்பிள்ளை வூட்டுக்காரவங்க வராய்ங்களாம். வெரசா பந்தல் போடோனும். அந்த குணா பயல வேற காணோம். பொறத்தால பழனி இருப்பான் அவன வர சொல்லு” என்றபடி தன் கை கால்களை சுத்தம் செய்துவிட்டு உள்ளே நுழைந்தார்.

கிராமத்தில் இந்த வழக்கம் உள்ளது. வெளியே சென்றுவிட்டு வந்தால் கை, கால்களை அலம்பிவிட்ட பின்னரே உள்ளே வரவேண்டும். இந்த செயல் ஏனோ தற்போதுதான் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் இன்று செய்துக் கொண்டு வருகிறோம் நாம். வெற்றிவேல் - லட்சுமி தம்பதியினர் மணவழகனூர் என்ற கிராமத்தில் வசிப்பவர்கள். தொடர்ந்து லட்சுமியின் உதரத்தில் (வயிற்றில்) எட்டு உயிர்கள் ஜனிக்காது போக ஒன்பதாம் மொட்டாய் மலர்ந்தவள்தான் இசைத்தமிழ். அவளுக்குப் பின்னும் யாரும் பிறக்கவில்லை. வெற்றிவேல் சாதாரண விவசாயக் கூலியாய் இருந்தவர், தன் கடும் உழைப்பால் தற்போது ஐந்து ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர். தன் மனைவி மீதும் மகள் மீதும் தீராப் பாசம் கொண்டவர். அதே சமயம் முற்போக்கு சிந்தனையாளர். அக்காலக்கட்டத்திலேயே பட்டதாரி பட்டம் பெற்றவர். ஆதலால் இந்த சாதி, மதம் போன்ற விடயங்களை அறவே வெறுப்பவர். அதற்கு முன்னுதாரணமாக லட்சுமியை காதலித்து மணந்தார். அவரின் ஒரே குறை ஈசன் திருவடியில் அமர்ந்துக் கட்டியம் கூறுபவரின் வார்த்தையை எள்ளளவும் மீற மாட்டார். இதனை குறை என்றும் கூற இயலாது, அவரின் தனிப்பட்ட நம்பிக்கை. அதை இந்நாள்வரை மற்றவர் மேல் திணித்தது இல்லைதான். ஆனால், இன்றோ தன் மகள் மீதே திணித்துக் கொண்டு இருக்கிறார். தன் எண்ணங்களின் பிரதிபலிப்பை அப்படியே இசைக்கும் கடத்தியவர். அதை, தற்போதுதான் உணருகிறார் வெற்றிவேல்.

உள்ளே வந்தவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே இசையை அழைத்தார். ஒரு பெருமூச்சொன்றை வெளியே விட்டவாறே வந்தாள் இசை. பலமுறை கேட்டாகிவிட்டது, மீண்டும் ஒரு முயற்சி “தமிழு... மறுவடியும் அப்பா கேட்குறேன்னு வருத்தப்படாதம்மா. ஏன்மா, கல்யாணம் வேணாமுன்னு சொல்றவ.? யாராயாவது விரும்புறன்னா சொல்லிடு தாயி. நானே சேத்து வைக்கேன்.” என்று பரிவாய் அவளின் தலையைக் கோதியவாறே கேட்டார்.

எத்தனை முறைதான் தான் பதில் கூறுவது என்று வருத்தப்பட்டாலும் ‘இல்லை’ என்றுதான் தலையை ஆட்டினாள். “அப்புறம் ஏன்மா கல்யாணம் வேணாமுங்கறவ? காரணத்தை சொல்லலாம்ல?” என்று பரிவாய்த்தான் கேட்டார்.

“நான் எழுதணும் பா. பல கம்பெனில இருந்து ரைட்டர்க்கு வேகன்சி வந்து இருக்குப்பா. அதுக்கு நீங்க முழு மனசோட சரின்னு சொல்லுங்கப்பா. உடனே நான் கல்யாணத்துக்கு சம்மதிக்குறேன்” என்றாள் இசை.

அவ்வளவுதான் இத்தனை நேரம் சாந்த சொரூபியாகக் காட்சியளித்த வெற்றிவேல் ருத்ரதாண்டவம் ஆடத் துவங்கிவிட்டார்.

“ஓங்கி ஒன்னு வுட்டேன்னா வையேன். நானும் பொம்பளபிள்ளைய அடிக்கக் கூடாதுன்னு பாத்துட்டே இருக்கேன். மறுவடியும், நான் புடிச்ச மொசலுக்கு மூணு காலுன்னு அதுலயே வந்து நிக்குறவ. இந்தாரு தமிழு, நமக்கு இந்த பிரஸ்சுலாம் ஒத்துவராது. அதுவும் நீனு ஒத்த பொட்டப்புள்ள. உன்னை காலாகாலத்துக்கு ஒருத்தனுக்கு புடிச்சு கொடுக்கோனும். கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் புருசன் வூட்டுக்கு போய் எல்லாத்தையும் பண்ணு, அவங்க சம்மதத்தோட. இப்போ மொரண்டு புடிக்காம தயாராகு. மாப்பிள்ளை டவுன்ல இருக்க சிவன் கோவில்ல உன்னைப் பாக்கோணும்னு சொன்னாவ. நீனு போய் பேசிப் பாரு, கிளம்பு!” என்றார் வெற்றிவேல்.

கண்களில் நீர் இப்பவோ அப்பவோ நின்று நர்த்தனம் ஆடிக்கொண்டு இருந்தது. இதுவரை அதட்டிக் கூட பேசாத தன் தந்தை, கொஞ்ச நாளாகவே சாடிக் கொண்டு வருவதை மங்கையிவள் கவனிக்கத் தவறவில்லை.

தந்தையின் பேச்சை மதித்துத் தன் அறைக்கு விரைந்தாள். ‘எவனோ தனக்காக காத்துக் கொண்டிருக்கிறான். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலிலேயே விழுவது மேல். இறுதி முறையாக அவனிடமும் பேசிப் பார்க்கலாம்’ என்று எண்ணியவாறே தயாராகினாள்.

தந்தை முதன்முதலாக எடுத்துக் கொடுத்த புடவையை அவருக்காக உடுத்தி, விரிந்திருந்த கூந்தலை பின்னலிட்டுக் கொண்டு கிளம்பினாள் இசைத்தமிழ்.

தன்னறையை விட்டு வெளியே வந்தவளை சற்று ஆச்சர்யத்தோடுதான் பார்த்தனர் வெற்றிவேலும், லட்சுமியும். வெற்றிவேலின் கண்களில் அவள் என்னுடைய பெண், என் பேச்சை மீறாதவள் என்ற கர்வம் மேலிட்டது.

அவளின் மாற்றம் நல்லவிதமாக அமைய வேண்டும் என்று மனதோடு வேண்டிக்கொண்ட லட்சுமி. “இந்தாடி, சாமி படத்துக்கிட்ட மல்லியப்பூ வச்சி இருக்கேன். சாமியக் கும்பிட்டு வச்சிட்டு போ. பாத்து சூதானம். பதமா பேசுடி. அத வுட்டுப்போட்டு, என் மண்டைக்குள்ள தான் அறிவு இருக்குன்னு நினப்புல மாப்பிள்ளைக்கிட்ட பேசாத. பேசிட்டு, புடிக்குதோ இல்லையோ கையோட அவுகள வூட்டுக்கு கூட்டியா.” என்று பல அறிவுரைகளை கூறி அனுப்பினார்.

தாயிடம் சிறு தலையசைப்பைக் கொடுத்தவள், கடவுளிடம் ‘உன்னால தான் எனக்கு இப்போ பெரிய சிக்கல். நான் பாட்டுக்கு நான் உண்டு, என் ரைட்டிங்ஸ் உண்டுன்னு இருந்தேன். உன் சன்னிதில யாரோ என்னவோ சொன்னாங்கன்னு உடனே கல்யாணம் செய்றாங்க. இப்போ கூட நீ எனக்குத்தான் சப்போர்ட் பண்ணணும் சொல்லிட்டேன். அந்த மாப்பிள்ளைக் கிட்ட என்னோட எண்ணத்தை சொல்லத்தான் போறேன். உன்னை பாக்கத்தான் வரேன். எனக்கு நல்ல வழியக் காட்டு’ என்று தலையில் சடாமுடியோடு வீற்றிருக்கும் ஈசனை வேண்டிக் கொண்டு புறப்பட்டாள்.

“அப்பா, போய்ட்டு வரேன்” என்று மெதுவாகக் கூறியவள், தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு புயல் போல் புறப்பட்டாள்.
  • ................................
மணி காலை பதினொன்று இருக்கும். ஆனாலும் சூரியனின் தாக்கம் சற்று குறைவுதான். ஆங்காங்கே குட்டையாய் தண்ணீர் வேறு தேங்கிக் கிடந்தது. அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பல வாகனங்கள் சென்ற வண்ணமே இருந்தன. மழை நின்ற பிறகும் மரம் பெய்கிறது, தன்னுள் இருக்கும் மழைத்துளிகளால். இதை எதையும் ரசிக்க மனமில்லாமல் கையில் ஒரு மஞ்சள் பையுடன், நெரிசல் மிகுந்த அச்சாலையில் தட்டுத்தடுமாறி சென்றுக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். பாவம், அவருக்கோ இந்த தள்ளாத வயதில் மூன்று கால்களில் நடக்க வேண்டிய நிலை. ஒரு வழியாக சாலையின் ஓரத்திற்கு வந்துவிட்டிருந்தார்.

“யம்மா, கண்ணு! இங்க கலெக்டர் ஆஃபிசுக்குப் போக பஸ் வருமாம்மா?” என்று வினவினார்.

“ஆஆன், வரும். வெய்ட் பண்ணுங்க.” என்ற பதில் வந்தது. அவரின் முகத்தைப் பார்க்கக் கூட அந்த யுவதிக்குக் காலமில்லை. சிறிது நேரம் காத்திருக்க, சரியாக பதினொன்று பதினைந்திற்கு ஒரு பேருந்து வந்தது.

இந்த நவீன உலகில், இன்னும் நவீனமாய் அந்த பேருந்து வந்தது. என்னதான் நவீனமாய் இருந்தாலும், மக்களின் தொகையும் அதற்கேற்றாற் போலத்தான் இருக்கின்றது.

“ஜி.எச். கலெக்டர் ஆஃபிஸ், வின்சென்ட். சுந்தர் லாட்ஜ், அஸ்தம்பட்டி” என்று நடத்துனர் கூச்சலிட, இது மகளிருக்கான இலவசப் பேருந்து போலும், பேருந்தின் முன்பாதியில் நிரம்பி வழிந்தனர் பெண்கள்.

சற்றுத் தடுமாறியபடியே, தன் பையை இறுக்கிப் பிடித்தவாறு பேருந்தின் பின்பக்கம் ஏறினார்.

“எங்க ஐயா போகணும்?”

“கலெக்டர் ஆஃபிசுக்கு” என்றபடி தன்னிடம் இருந்த பத்து ரூபாயை நீட்டினார். அதனைப் பெற்றுக் கொண்டு, மீதிச் சில்லறையோடு பயணச் சீட்டையும் நடத்துனர் வழங்கப் பெரியவர் பெற்றுக்கொண்டார். பத்தே நிமிடத்தில் நிறுத்தத்திற்கு வந்தது பேருந்து. தன் விசிலை ஊதியவர் “ஜி.எச்., கலெக்டர் ஆஃபீசுலாம் எறங்குங்க” என்று கத்த, மற்றவர்களின் இடிபாடு என்ற தள்ளு முள்ளில் தானாக இறங்கினார் அம்முதியவர்.

நிறுத்தத்தில் இருந்து மீண்டும் அந்த நான்கு வழிச் சாலையைக் கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வர, மணி பதினொன்று முப்பத்தைந்து.

அப்படியே அலுவலகத்தின் பக்கவாட்டுப் பகுதிக்குச் செல்ல, அங்கு பலபேர் மடிக்கணினியைக் கையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களின் கோரிக்கைகளை விண்ணப்ப மனுவாக மாற்றி தட்டச்சு செய்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

“எல்லாம் இந்த லைன் தாண்டி வராதீங்க! அப்ரோம் டிரோல் கேமரா நோட் பண்ணி கேஸ் போடும். எங்க கிட்ட கேஸ் வாபஸ் வாங்க வந்து நிக்கக் கூடாது. சோ, சரியா லைன்ல நில்லுங்க.” என்று ஒரு வெள்ளை நிற ஆடை அணிந்த ஒருவர் அனைவரையும் எச்சரித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரையும் சோதனை செய்தபடியே அனைவரையும் உள்ளே அனுமதிப்பதும் அவர்களின் பணியே.

“உங்க பையக் காட்டுங்க.” என்றபடி அம்முதியவரின் மஞ்சப்பையை விசித்திரமாகப் பார்த்து ஆராய்ந்தனர்.

“இன்னுமா இந்த மாதிரி பொருள் எல்லாம் யூஸ்ல இருக்கு?”

“இது எங்க தாத்தா கொடுத்தது. அவர் நியாபகமா நான் வச்சி இருக்கேன். நானே பெட்டிசன் எழுதிக் கொண்டு வந்துட்டேன். கொஞ்சம் என்னை சீக்கிரம் அலோவ் பண்ணா நல்லா இருக்கும்.” என்றார் அம்முதியவர்.

‘என்ன பென் அன்ட் பேப்பர் இன்னும் யூஸ்ல இருக்கா? வாட் அ மிராக்கல்.!’ என்று சிந்தித்தவன், யோசனையோடு “நீங்க கொஞ்சம் இந்த ஃபார்ம்ம பில் பண்ணிட்டு வைட் பண்ணுங்க.” என்றான் அந்த வெள்ளை உடை அணிந்த ஒருவன்.

அவரிடம் கொடுத்த மடிக்கணினியை புரியாமல் பார்த்தார். “என்ன பாக்குறீங்க? முன்ன பின்ன இத பாத்ததே இல்லையா, என்ன?”

“இல்ல, பார்த்து இருக்கேன். ஆனா, எனக்கு பயன்படுத்த தெரியாது. என் கூட யாரும் வரவும் இல்ல. நீங்களே கொஞ்சம் பில் பண்ணி கொடுங்க.” என்றார்.

அவரை அங்கு இருந்த அனைவரும் வித்தியாசமாகத்தான் பார்த்தனர். அவரின் உடையும், செய்கையும் அவரை அனைவரிடமிருந்தும் வேறுபடுத்தித்தான் காட்டியது. அப்போது தான், அவரை அந்த வெள்ளை உடைக்காரன் முழுவதுமாகக் கவனித்தான். அவர்....
  • ................................................

புலரும்...

 
நேரம் – 2 (a)

வெள்ளை உடைக்காரன் மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரும் அந்த முதியவரை அப்பொழுதுதான் முழுவதுமாகக் கவனித்தனர். வெள்ளைக் கதர் சட்டை அணிந்து, வெள்ளை வேட்டியுடன் தனது மூன்றாவது காலாக கையில் கருப்பு நிறக் குடையை வைத்து இருந்தார். அவரைப் பார்த்த உடனே நாம் சொல்லி விடுவோம் அவர் ஒரு விவசாயி என்று. ஆனால், அங்கிருக்கும் மக்களுக்குத்தான் அவரின் வெளித்தோற்றமும் சரி, அவரின் பேச்சும் சரி ஏதோ விசித்திரமான மனிதரைப் போலக் காட்டியது. ஆனால், உண்மையாலுமே அவருக்குத்தான் அங்கிருப்பவர்கள் அனைவரும் வித்தியாசமாக தெரிந்தார்கள்.

மணி பன்னிரண்டு.

எங்கிருந்தோ இன்னும் இரண்டு வெள்ளை உடைக்காரர்கள் விரைந்து அவ்விடம் வந்தனர்.

அவர்களில் அவ்விடத்தின் மேற்பார்வையாளரும் வந்திருந்தார். “இங்க என்ன நடக்குது 3கே49? யார் இது? இப்போ ஏன் மத்தவங்களோட கவனத்த இங்க திருப்பிக்கிட்டு இருக்க? உடனே அவர லைட் ரூம்க்கு கூட்டிட்டு போங்க! சீக்கிரம்.” என்று கட்டளைகளை விதித்தார்.

“3கே150, க்ரவுட் இங்க வராம பாத்துக்க. முக்கியமா டிரோல் கேம் இங்க கவர் பண்ணாம கன்ட்ரோல் பன்னு. எல்லாரும் எவ்ளோ கேர்லஸ்சா இருந்து இருக்கீங்க.? உடனே கன்ட்ரோலர் ரூமுக்கு போங்க. மத்த ப்ராசஸ் எல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கணும். எந்த வித கேப்பும் விழக் கூடாது.” என்றபடி அம்முதியவரின் அருகில் சென்றார்.

“நீங்க இவர் கூட போங்க.” என்றார் மேற்பார்வையாளராக இருந்த எஸ்30.

“நான் ஏன் போகணும்? நான் கலெக்டர் கிட்ட பெட்டிசன் கொடுக்கத்தான் வந்து இருக்கேன். அத விட்டுட்டு, என்ன ஏன் ஏதோ டெரரிஸ்ட் மாதிரி நடத்துறீங்க?”

“பெட்டிசனா? சரி, இந்த ரூமுக்கு போங்க. ரிட்டர்ன் ஃபார்ம் பெட்டிசன் (written form pettition) எல்லாம் இங்க தான் வாங்குவோம்.”

“ஓ..? சரி” என்றபடி அவர்கள் காட்டிய இடத்திற்கு சென்றார் அம்முதியவர்.

அம்முதியவரை அங்கு அனுப்பிவிட்டு, அலுவலகம் நோக்கி சென்றார். “சார், இங்க என்ன நடக்குது? யார் அவர்? பாக்கவே ரொம்ப வித்தியாசமா இருக்காரு? இப்டி எல்லாம் இருந்தா அப்ரோம் மக்கள் நாங்க எப்படி பாதுகாப்பா இருக்க முடியும்?” என்றார் அங்கு வந்திருந்த ஒருவர்.

“ஐ அம் எக்ஸ்ட்ரிமலி சாரி சார். சாரி ஃபார் இன்கன்வீனியன்ஸ். அவர லைட் ரூம்ல என்கொயரி பன்னிட்டு இருக்காங்க. மக்களோட பாதுகாப்புக்கு எந்த வித பிரச்சனையும் இருக்காது. நீங்க உங்க வொர்க்க எந்த இடையூறும் இல்லாம செய்யலாம்.” என்றபடி யோசனையுடன் லைட் ரூம் என்றழைக்கப்பட்ட இடத்தை நோக்கி நடந்தார் எஸ்.30 என்ற அடையாளம் கொண்ட, அதிரன்.

ஆயுதம் தாங்கிய மனிதர்கள் அங்கு காவலுக்கு இருக்க, அனைவரையும் ஒரு யோசனையுடன் பார்த்துக்கொண்டே சென்றார் அம்முதியவர். அந்த வளாகத்தில் சிறிது தூரம் நடந்து சென்றால் அந்த அறை இருக்கிறது. அம்முதியவருடன் வந்த இரண்டு பேரில் 3கே49 என்பவன் தன்னுடைய அடையாள அட்டையைக் காண்பிக்க, அவனின் விவரங்கள் திரையில் தெரிந்த பின், மூவரையும் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர்.

அனைத்தையும் உன்னிப்பாக மட்டுமே அந்த முதியவர் கவனித்து வந்தாரே தவிர, ஒரு கேள்வியும் அவர் கேட்கவில்லை. ஆனால், முகத்தில் ஒருவித பயம் தெரிந்தது என்னவோ உண்மைதான்.

“இந்த ரூம்குள்ள வெய்ட் பண்ணுங்க, உங்கள விசாரிக்கணும்.”

“நான் என்ன பண்ணேன்? பெட்டிசன் கொடுக்க வந்தது ஒரு குத்தமாய்யா? ஏன், இப்படி பன்றீங்க?” என்று குழப்பத்தில் இருந்தார் அவர்.

“இதுக்கெல்லாம் நான் பதில் சொல்லக் கூடாது. உள்ள போங்க” என்று அவரை உள்ளே அனுப்பி இரும்புக் கதவை மூடினான் அவன்.

தான் உள்ளே நுழைந்ததும், மூடிய கதவை அச்சத்துடன் பார்த்தவர், அப்போதுதான் திரும்பிப் பார்த்தார். கண்ணை கூசும் அளவிற்கு அங்கு வெளிச்சம் பரவிக் கிடந்தது என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக, நீல வண்ண வெளிச்சம்தான் அறையெங்கும் விரவிக் கிடந்தது. ஆங்காங்கே, நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு இருந்தது. மற்ற இடமெல்லாம் கண்ணாடியால் இருந்தது. அதாவது, உள்ளே இருப்பவர்க்கு வெளியே நடப்பது தெரியாது. ஆனால், வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே இவரைக் காண முடியும். அவ்வாறு அமைக்கப்பட்ட இடம்தான் அது.

அந்த நெல்மணிகள் அருகே சென்றவர், அதனைக் கண்ணாரக் கண்டு களித்தார். ‘எத்தனை தினங்கள் ஆகிவிட்டது, உன்னைக் கண்டு? இது போன்று என் நிலத்தில் இன்று விளையவில்லையே? சரியான நீர் வரத்து வேண்டும் என்று கேட்கத்தானே மனு கொடுக்க வந்தேன். என் குடும்பம் அங்கு என்னைக் காணாது தவிக்குமே?’ என்ற கவலைதான் அவருக்கு.

அப்போது, அந்த இரும்புக் கதவு மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு எஸ்.30 அதிரனும், அவனுடன் ஒருவர் முகக்கவசம் அணிந்தப்படியும் வந்தார்.

“இப்போ, எதுக்கு என்னை இங்க அடச்சு வச்சி இருக்கீங்க? மனு கொடுக்க வந்தது ஒரு குத்தமா? என்னைய விடுங்க, நான் எந்தத் தப்பும் செய்யல.” என்றார் அவர்.

அதிரன் “நீங்க மனு கொடுக்க வந்தது தப்பில்ல. ஆனா, இப்போ யாரும் பயன்படுத்தாத பொருட்கள கொண்டு வந்து, மக்கள் மத்தியில அச்ச உணர்வ கொண்டு வந்து இருக்கீங்க. அதுக்குதான், உங்கள தனியா வச்சி இருக்கும்.”

“என்ன, யாரும் பயன்படுத்தாத பொருளா? அப்டி நான் எதுவும் கொண்டு வரலீங்களே!” என்று ஒருமுறை தன்னையே ஆராய்ந்தார்.

“உட்காருங்க.!” என்றான் அதிரனுடன் இருந்த ஒருவன்.

அந்த முதியவர்தான் முழித்தார். ‘உட்காரு’ என்றால் எங்கே அமர்வது? அங்கு அமர்வதற்கு எந்த நாற்காலியும் மேசையும் இல்லையே?’ என்றுதான் அவரின் யோசனை இருந்தது.

ஆனால், அவரின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு விசயம் அங்கு நிகழ்ந்தது. அதிரனும் அவனுடன் இருந்தவனும் உட்கார, தானாக கீழிருந்து நாற்காலி வந்தது. அவர்களைப் பார்த்தபடி பயந்துக்கொண்டே அவரும் அமர போக, கீழிருந்து இவருக்கும் ஒரு நாற்காலி வந்தது. மனிதன் மிகவும் பயந்துதான் போனார்.

‘ஏதாவது மேஜிக்கா இருக்குமோ? எப்படி இப்போ இங்க சேர் வந்துச்சு? என்ன வச்சு என்னங்கடா பண்ண போறீங்க? கடவுளே காளியாத்தா! என்னை எப்படியாவது வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்துடு, தாயீ. உனக்கு, ஆடி மாசம் கிடா வெட்டுறேன்’ என்று மனதில் வேண்டிக்கொண்டார்.

“உங்க பேர் என்ன?” என்று அதிரன் கேட்டான்.

“வெற்றிவேல், நான் ஒரு விவசாயி” என்று மிடுக்காக பதிலளித்தார் அவர்.

“விவசாயி? அப்டின்னா? உங்களுக்கு கோட் எதுவும் இல்லையா?”

“கோட்ஆ? அப்படி எதுவும் எனக்குக் கிடையாதுங்க”

அதிரன் அவனுடன் இருந்தவனைப் பார்க்க, ‘நீ மேலும் பேசு!’ என்றபடி அமர்ந்திருந்தான். இருவரின் பேச்சுக்களை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

“சரி, நீங்க எங்க இருந்து வரீங்க?”

“மணவழகனூர்.”

“வாட்? ம..ண? கம் அகைன்!”

“மணவழகனூர்னு சொன்னேன்.”

“அப்டி ஒரு ஊரே இங்க கிடையாது. உண்மைய சொல்லு, யார் நீ? எந்த கான்டினன்ட்ல இருந்து வர? என்ன நோக்கம்? என்ன விதமான வெப்பன்ன இந்த பொருள்ல எல்லாம் மறச்சு வச்சு இருக்க? நீயா உண்மைய ஒத்துக்கிட்டா, கான்டினன்ட் ஹைனஸ் கிட்ட பேசி குறஞ்ச தண்டனை கொடுப்போம். இல்லன்னா, ரெண்டு கான்டினன்ட்டுக்கும் நடுவுல இப்போ இருக்குற பிரச்சனை இன்னும் அதிகமாகத்தான் ஆகும். ஒழுங்கா உண்மைய சொல்லிடு” என்று மிரட்ட ஆரம்பித்தான் அதிரன். அவனின் குரலில் வாயைத் திறந்தான் உடனிருந்த அமரவன்.

“அதிரா… ஜஸ்ட் ஸ்டாப். யூ மேக் ஹிம் ஃபீல் இன்செக்யூர்.” (Just stop. You make him feel uncomfortable. நீ அவருக்கு பாதுகாப்பு அற்ற உணர்வ ஏற்படுத்துற.)

“பட், அமர்…?”

“ஐ சே ஜஸ்ட் ஸ்டாப் இட்.!” என்றவன் வெற்றிவேல் பக்கம் திரும்பினான்.

“உங்கள பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. அதுக்கு முன்னாடி நான் கமன்டர் அமரவன் 3கே.சி1. நீங்க என்ன அமர்னு கூப்டலாம்.” என்றவன் அவரை ஆழ்ந்து நோக்க ஆரம்பித்தான்.

“என் பேர் வெற்றிவேலுங்க. நான் மணவழகனூர் கிராமம். என் மனைவி பேர் லட்சுமி. எனக்கு ஒரு மக, பேர் இசைத்தமிழ். நான் 1992லயே பட்டதாரி, விவசாயம் பண்ணிட்டு இருக்கேன்.”

“வாட்..? 1992ஆஆஆ?” என்று ஒருசேர இருவரும் தன் இருக்கையை விட்டு எழுந்தனர்.

“ஆமாங்க. அதுக்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சி ஆகுறீங்க?” என்று புரியாமல் பார்த்தார் வெற்றிவேல்.

அதிரன் கலவரமாக அமரவன் முகம் நோக்க, “இ.. இது… 3021 பிசி” என்று எச்சில் விழுங்கியபடி கூறினான் அமர்.

“என்னது? 3021ஆஆ?”

.....................................................
 
நேரம் - 2 (b)

தன் இருசக்கர வாகனத்தில் சிவன் கோவிலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள் இசைத்தமிழ். அவளின் மூளைக்குள் பலவித எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

‘பேசாம இப்படியே ஸ்கூட்டிய ஓட்டிக்கிட்டு எங்கயாவது போய்டலாமா? ஒரு பொண்ணு தன்னோட கனவுல ஜெயிக்க முதல்ல தன்னோட குடும்பத்தோட எவ்வளவு போராட வேண்டியதா இருக்குது. சத்தியமா என்னால முடியல. செண்டிமென்டல்லா பேசி பேசியே நம்மள சுயமா முடிவு எடுக்க விடாம பண்ணிடுறாங்க. எது செய்றதா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்ரோம் செய், உன் புருசன் சொன்னா செய். ச்சே, இத நினச்சாலே எரிச்சல் தான் வருது.! இத்தன வருசமா நம்மள வளத்தவங்களுக்கே நம்ம மேல ஏன் எந்த நம்பிக்கையும் வர மாட்டிங்குது.? எதுவா இருந்தாலும், இன்னும் என் லைப்குள்ள என்டர் ஆகாதவனயே உள்ள இழுக்குறாங்க.?

உண்மைய சொல்லனும்னா, நம்மள வச்சு நம்ம பேரன்ட்ஸ் ரிஸ்க் எடுக்க விரும்பல. அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நாம இருக்கணும், அவ்ளோதான். 21 வருசம் வளர்த்த இவங்களே நம்மளால எந்த பிரச்சனையும் ரிஸ்க்கும் வரக் கூடாதுன்னு நினைக்குறப்போ, பெண்களுக்கு கணவன்னு ஒருத்தன் புதுசா வரப்போறான். அப்போ அவன் மட்டும் ரிஸ்க் எடுக்க ஒத்துப்பானா?

இவங்க சொல்ற மாதிரி கல்யாணத்துக்கு அப்ரோம் நான் இத செய்யப் போறேன், அத செய்யப் போறேன்னு சொன்னா, ‘இதயெல்லாம் உன் வீட்ல இருந்தப்போ செஞ்சு இருப்ப தானே.? அங்க மாதிரி இங்க கிடையாது. நம்ம வீட்டுக்குன்னு சில முறைலாம் இருக்கு. இங்க இதுலாம் செஞ்சா எப்படி? இருக்குற வேலைய மட்டும் பாரு.’ன்னு சொல்லுவான். ஆக மொத்தம் பெண்களுக்கு முதல் மறுப்பு வீட்ல இருந்து தான் வருது.’ என்று மனம் போன போக்கில் எண்ணிக்கொண்டே கோவிலுக்கு வந்து சேர்ந்தாள்.

தன் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தியவள், சற்று அந்த சாலையை கவனித்தாள். ‘தான் கிளம்பிய போது, தன் கிராமத்தின் அமைதி எங்கே? தற்போது இந்த நகரத்தின் இரைச்சல் எங்கே.? அந்த மண்வாசனையும், மதி மயக்கும் தென்றலின் சுகந்தமும் இங்கு கிடைக்குமா?’ என்று தன் எண்ணங்களில் லயித்து இருந்தவளை,

“தமிழு… அம்மாடி தமிழு… இந்தாம்மா உனக்கு பூவு எடுத்து வச்சி இருக்கேன். உனக்காக நெரம்ப நேரமா உள்ள அவுக காத்துட்டு இருக்காவ. வெரசா போ” என்றார் அங்கு பூக்கடை வைத்திருக்கும் குணாவின் தாயார் அன்னம்.

“என்னங்க அத்த, நீங்களும் அப்பா கூட சேர்ந்துட்டு இப்டி பண்றீங்களே.? எனக்காக கொஞ்சம் பேசக் கூடாதா?”

“ஐயா, எது செஞ்சாலும் உன்ற நல்லதுக்குதான் செய்வாரு சாமி. நீ வெசனப்படாத சரியா? போ, போய் அவுகள பாரு.” என்றார்.

“அது சரி, உங்க அண்ணனுக்கு நீங்க இப்டிதான் சப்போர்ட் பண்ணுவீங்க. எங்க உங்க மவன்?”

“அவன், என்னைக்கு இங்குட்டு வந்து இருக்கான்.? தோட்டத்துல தான் இருப்பான். அவன வுடு. நீ போ ராசாத்தி” என்று அவளை அனுப்பினார்.

அவர் கொடுத்த பூஜை பொருட்களை பெற்றுக் கொண்டு, உள்ளே நுழைந்தவள், கொடி மரத்தை வணங்கிவிட்டு, நந்திப் பெருமாள் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

நந்தியின் காதில் தீவிரமாக ஏதோ கூறிக் கொண்டிருந்தவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான், அவன். அவன்தான் அகரத்தமிழன்.

நந்திப் பெருமாளை வணங்கிவிட்டு, நேரே கருவறைக்குச் சென்றவள் தென்னாடுடைய சிவனை கண் குளிர தரிசித்தாள்.

மனதில் ஆயிரம் கவலைகள் குழப்பங்கள் இருக்கத்தான் செய்தது. ஆனால், எதுவும் அவன் முன் சொல்லத் தோன்றவில்லை. அவன் திருவடி ஒன்றை சரணடைந்தாள் மட்டுமே போதும் என்று தோன்றியது போலும் அவளுக்கு. நீண்ட நேரம் சிவனின் லிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை அகரத்தமிழனின் அழைப்பு அவன்பால் திருப்பியது.

“இசை.?”

“ம்ம், ஆமா. நீங்க?”

“நான்தான், அகரத்தமிழன்.” என்றவன் சிநேகமாகப் புன்னகைத்தான்.

சரியென்று தலையாட்டியவள், “சாமி கும்பிட்டு வரேன் தெப்பக்குளம் பக்கத்துல வெய்ட் பண்ணுங்க.” என்றாள்.

சின்ன சிரிப்புடன் நகர இருந்தவன், “நீங்க சாமி கும்பிட்டீங்களா?” என்ற வினாவிற்கு ‘இல்லை’ என்றத் தலையசைப்புடன் அவளருகே நின்றான். தெய்வத்தை வணங்க அல்ல, அவளை ரசிப்பதற்கு.

புலரும்…
 
Last edited:
நேரம் - 3

காலமாற்றம் அனைவரையும் குழப்பாமலிருக்க, இனி காலத்தைக் குறிப்பிட்டபடி கதை நகரும்.

இடம் - 2021 மணவழகனூர்.

பிறையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு, மக்களுக்கு காட்சியளித்து தன்னிலை மறக்கச் செய்துக் கொண்டிருந்தார், எம்பெருமான். அவரைத் தன் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள் நம் இசைத்தமிழ். ஒருவழியாக இறைவனைத் தொழுது முடித்தவள், அகரனிடம் திரும்பி “போலாமா?” என்றுக் கேட்டாள்.

அவளையே மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தவன், அவளின் அழைப்பில்தான் சுயம்பெற்றான். “ம்ம், போலாம் இசை” என்றான் புன்னகைத்தப்படியே.

இருவரும், கோவிலுக்குப் பின்புறம் இருந்த தெப்பக்குளத்தின் படிகளில் வந்து அமர்ந்தனர்.

“ம்ம், சொல்லுங்க”

“என்னங்க சொல்றது? நீங்கதான் பொண்ணு பார்க்க வந்திருக்கிறதா வீட்ல சொல்லி என்னை இங்க அனுப்பி வச்சி இருக்காங்க. நீங்க என்னை கேட்குறீங்க.?”

“ஓ… உங்களையுமா? சரி, உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமா?”

“அதப்பத்தி உங்கக்கிட்ட பேசணும். பேசலாமா?” என்றாள் தயக்கத்துடன் இசை.

‘அதுக்கு தானே காத்துட்டு இருக்கேன்.’ என்று நினைத்தவன், “சொல்லுங்க.!”

“ரைட்டிங்க்ஸ் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?”

“என்னங்க, ஏதோ சொல்றேன்னு சொல்லிட்டு கேள்வி கேட்குறீங்க?” என்று சிரித்தான்.

“பதில் சொல்லுங்க, காரணமாத்தான் கேட்குறேன்”

“ரைட்டிங்க்ஸ்? புக்ஸ் படிப்பேன், ஆனா, ரைட்டிங்க்ஸ் பத்தி எனக்கு அவ்ளோவா தெரியாது. பட், நாவல் எல்லாம் படிப்பேன். அதுவும் என்கிட்ட ரேர் கலெக்சன் எல்லாம் இருக்கு. ஒரு நாள் ப்ரீயா இருந்தா சொல்லுங்க, என்னோட புக்ஸ் தரேன். படிங்க.” என்றான் அகரத்தமிழன்.

‘ஒருவேள இவன் நம்மள இம்ப்ரெஸ் பண்ண டிரை பன்றானோ? சரி, எதுக்கும் போட்டு பார்ப்போம்’ என்று நினைத்த இசை, “அப்டி என்ன ரேர் கலெக்சன் எல்லாம் வச்சி இருக்கீங்க?”

“என்கிட்ட இருக்குற நிறைய புத்தகங்கள், சயின்ஸ் பிக்சன். அதுவும் என்னோட பிரண்ட் எழுதின புத்தகம் தான். அவனோடது எல்லாம் படிக்குறப்போ அப்டியே அதுக்குள்ளயே மூழ்கி போய்டுவோம். அப்டி இருக்கும் அவனோட கதைகள் எல்லாம்.” என்றான் சிலாகித்து. அவளுக்கு சிறிது பொறாமை எட்டிப்பார்த்தது என்பது உண்மைதான். ஆனால், அது நல்லதல்ல, என்று தன் மனதை அடக்கினாள். அவனின் சொற்கள், அவள் மனதில் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆவலை எழுப்பியது.

அவன் தன் சொற்களால் அவளை சிறிது சிறிதாகத் அவன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தான்.

“நீங்களும் ரைட்டர் தானே? அங்கிள் சொன்னாரு. எப்படிப்பட்ட புக்ஸ்லாம் எழுதி இருக்கீங்க?”

அவளுக்கு தன் படைப்பைப் பற்றி கேட்டதும் அவ்வளவு மகிழ்ச்சி. உள்ளுக்குள் ஒரு குத்தாட்டம் ஆடிவிட்டாள்.

“இத பத்தி தான்ங்க நான் பேசவே வந்தேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே எழுதுறதுன்னா ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு தெரியுமா, எழுதுறதுலாம் ஒரு வரம்னு என்னோட ப்ரொபசர் சொல்லுவாங்க. எனக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், நான் என் கையில ஒரு பேப்பர் பேனா வச்சி இருந்தா, கண்டிப்பா அந்த பிரச்சனைக்கு நான் சீக்கிரம் ஒரு தீர்வ கண்டுபிடிச்சுடுவேன். கவலை, துக்கம், சந்தோசம் இப்டி என்னோட எல்லா ஃபீலிங்க்ஸ்சும் எழுதுறப்போ போய்டும். ரொம்ப ரொம்ப சந்தோசமாத்தான் இருப்பேன். ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும்ங்க, எனக்கு எழுதுறது ரொம்ப பிடிக்கும். அத என்னால விட முடியாது.” என்று தன் உயிரை அவ்வளவு சிலாகித்துக் கூறிக்கொண்டிருந்தாள். உண்மைதானே, எழுத்தும் எழுதுவதும் ஒரு வரம். அதனை உணருபவர்களுக்குத்தான் தெரியும், அதில்தான் நம்மின் உயிர்நாடி மறைந்திருக்கிறது என்று.

அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் தன் மனப்பெட்டகத்தில் பதிந்து வைத்துக் கொண்டிருந்தான் அகரத்தமிழன்.

“எனக்கு எழுதுறது அவ்வளவு பிடிக்கும் அகரன். ஆனா, அத ஏன் இந்த சொசைட்டி ஒரு ப்ரொபசன்னா பாக்க மாட்டிங்குதுன்னு தான் எனக்கு தெரியல. என் அப்பாக்கு அடுத்து என்னோட ரைட்டிங்க்ஸ் பத்தி உங்க கிட்ட தான் இவ்ளோ நேரம் பேசி இருக்கேன். ஆனா, அவரே இப்போ என்னோட சூழ்நிலைய புரிஞ்சிக்கல. அதுனால தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கல. எனக்கு என்னோட ரைட்டிங்க்ஸ் மேல நம்பிக்கை ரொம்ப இருக்கு. அது என்னைக்கும் என்னை கைவிடாது. அதுல நான் ஏதாவது சாதிக்கணும். இப்போ எனக்குன்னு ஒரு ஐடின்டி இருக்கு. ரைட்டர் இசைத்தமிழ். ஆனா, கல்யாணத்துக்கு அப்ரோம் எனக்கு இதே ஐடின்டி கிடைக்குமா, கன்டினியூ ஆகுமான்னு தெரியல. இவ்ளோ நாள் என்னை புரிஞ்சிக்கிட்ட எங்கப்பாவே இப்போ எனக்கு ஆப்போசிட்டா இருக்காரு. உங்கள யாருன்னு எனக்கு தெரியாது, அப்போ நான் எப்படி நம்பி கல்யாணத்துக்கு ஒத்துக்குறது சொல்லுங்க.?” என்று கேள்வியாய் கேட்டுத் தள்ளினாள்.

சொல்லப்போனால், இவள் இவ்வளவு பேசுவாள் என்று இவனுக்கு இப்போதுதான் தெரியும். ஆனால், இவள் தற்போது மனம்விட்டு பேசியுள்ளாள் என்பதை அவள் அறியவில்லை, அவன் கண்டுக்கொண்டான்.

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் இசை. ஆனா, இத என்கிட்ட தான் நீங்க நேரடியா கேட்டு இருக்கணும். உங்க அப்பா கிட்ட கேட்டா அவருக்கு எப்படி பதில் தெரியும் சொல்லுங்க. கல்யாணத்துக்கு அப்ரோம் உங்களோட எதிர்பார்புகள் எல்லாம் ரொம்ப ரீசனபிள். கண்டிப்பா உங்களுக்கு நான் சப்போர்ட்டா இருப்பேன். அதே மாதிரி என்னோட கனவ நான் அடையறதுக்கும் நீங்க எனக்கு உறுதுணையா இருப்பீங்கன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. என்மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?” என்று தன் மன எண்ணத்தை சொல்லிவிட்டான் அகரத்தமிழன்.

என்னவென்று மொழிவாள் பேதை, ஒரு மனிதன் தன்னுடைய விருப்பத்தை இவ்வளவு நம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் சொல்வானா? அவளுடைய கற்பனை கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஒருங்கே இணைத்துத் தன் முன் நிறுத்தியதைப் போன்று ஒரு உணர்வு.

‘நிறய பேசணும். கல்யாணத்துக்கு ஒத்துக்கவே கூடாதுன்னு தானே கிளம்பி வந்தேன். நான் பேசுற பேச்சுல இவன் தலை தெறிக்க ஓடுவான்னு நினச்சேன். ஆனா, ரெண்டு நிமிசத்துல எப்படி என்னோட மனச அவன் பக்கம் கொண்டு வந்தான். எனக்கு ஏன் பேச வாய் வரல.? அவன் கூட இப்போவே மனசு போக சொல்லுதே.! அய்யோ, தமிழ் உனக்கு என்னடி ஆச்சு? பேசுடி.’ என்று மனதுக்குள் ஒரு போராட்டமே நடத்திக் கொண்டிருந்தாள்.

“இசை, உங்களத்தான். நம்பிக்கை இருக்கா?” என்று அவளை உலுக்கினான் அகரத்தமிழன். இதுதான் இறைவன் முடிச்சு போலும். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள். இறைவன் சன்னதியில் நடக்கும் நல்ல காரியம் தடைப்பட்டு போகுமா என்ன? பெண்ணவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டானே அகரத்தமிழன்.

“அ... அது...” என்று இவள் தடுமாற, சரியாக அவளின் கைப்பேசி ஒலித்தது.

இருவரின் கவனமும் அதன்பக்கம் செல்ல,

இசை “அம்மாதான். உங்கள அப்டியே வீட்டுக்கு வர சொல்லத்தான் பேசுவாங்க. நீங்களே பேசுங்க” என்று அவனிடம் நீட்டினாள்.

இணைப்பை இணைத்து காதில் வைக்க, லட்சுமி கூறிய செய்தியில் அதிர்ந்துதான் போனான் அகரன்.

அதே சமயம் அந்த இடத்திற்கு குணா அரக்கப் பறக்க ஓடி வந்து கொண்டிருந்தான்.

--------------

இடம் - 3021 லைட் ரூம்.

“ஆமா, இது 3021 தான். எப்டி நீங்க இன்னும் உயிரோட இருக்கீங்க? எப்படி இது சாத்தியம்? ஐ கான்ட் பிலிவபல்.! அதிரா, உடனே ஹைனஸ் கிட்ட இன்பார்ம்ம பாஸ் பண்ணு. இவர, கன்ட்ரோல் ரூமுக்கு கொண்டு போகலாம்.” என்றான் அமரவன்.

“கொஞ்சம் நில்லுங்க தம்பி. நான் இப்போ வீட்ல இருந்து கிளம்புறப்போ கூட தேதி பார்த்து தான் மனுவ நிரப்புனேன். பாருங்க, இதுல நான் நிரப்பின தேதிய.” என்று தன் மனு விண்ணப்பத்தைக் காட்டினார்.

அதனைக் கண்டவர்கள் மேலும் அதிர்ந்தனர்.

“01.06.2021” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதிரன் “எனக்கு ஒன்னுமே புரியல, அமர். வெற்றிவேல், முதல்ல நீங்க உங்கள பத்தி முழுசா சொல்லுங்க.” என்றான்.

“அதான் சொன்னேன்லங்க, 1992ல நான் படிச்சு முடிச்சேன். என் மனைவிய காதலிச்சு கல்யாணம் செஞ்சேன். எனக்கு ஒரு மக, பேர் இசைத்தமிழ். எனக்கு இப்போ சொந்தமா விவசாய நிலம் இருக்கு. ஆனா, அந்த ஊருக்கு சரியா தண்ணீர் வரத்து கிடையாதுங்க. அதுக்காக தான் நான் இப்போ கலெக்டர் கிட்ட மனு கொடுக்க வந்தேன். நான் இப்போ எப்டி என் வீட்டுக்கு போறது? என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்து வச்சி இருக்கேன். என் மாப்பிள்ளை இன்னும் கொஞ்ச நேரத்துல வூட்டுக்கு வேற வந்துடுவாக. சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க” என்று தன்போக்கில் புலம்பித் தள்ளினார் வெற்றிவேல்.

“நீங்க கொஞ்சம் பதட்டப்படாம இருங்க, வெற்றிவேல்.! நீங்க சொல்றது எல்லாம் உண்மையான்னு நாங்க விசாரிக்கணும். எப்படி இது சாத்தியம்னே எங்களுக்கு புரியல. இப்போ உங்கள நாங்க வெளில விட்டா, அது உங்க உயிர்க்கும் ஆபத்தா கூட முடியலாம். நீங்க பேசுற பல வார்த்தைகள் எங்களுக்கு புரியல. அதுக்கான ஸ்பெசலிஸ்ட்டுக்கு இன்பார்ம் பண்ணணும். எங்களுக்கு என்ன கமான்ட் வருதோ அதுக்குதான் நாங்க ஒபே பண்ண முடியும். லெட்ஸ் சீ.! அதுவரைக்கும் நீங்க அதிரன் கூட இருங்க.” என்றான் அமர்.

அதிரன் கலவரமாக அமரை நோக்க, “அதிரன் என் கூட வா, உனக்கு சில கமான்ட் அலர்ட் பண்ணணும்.” என்று அவனைத் தனியே அழைத்து சென்றான்.

வெற்றிவேல் பயங்கர அச்சத்துடன் இருந்தார். எப்படியாவது தன் இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஒன்றே அவரின் எண்ணத்தை ஆக்கிரமித்து இருந்தது.

அமர் “லுக், அதிரா! இது ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கும் போல. வெற்றிவேல் சொல்றது எல்லாம் என்னால நம்ப முடியல, நம்பாமலும் இருக்க முடியல. வெளில வேற டிரோன் கேம் இருக்கு. அது மட்டும் இல்ல, இப்போ தான் கான்டினன்ட் அட்டாக் நடந்து முடிஞ்சு இருக்கு. இங்க இருக்குற ஒவ்வொரு உயிருக்கும் நாம தான் பொறுப்பு. எல்லாரோட பாதுகாப்பயும் உறுதி பண்ணிட்டு, அப்டியே சயின்ட்டிஸ்ட் கிட்ட நான் இத பத்தி பேசுறேன். அவர் மூலமா ஹைனஸ்க்கு தகவல் போனாதான் சரியா இருக்கும். இல்லன்னா, நாம கடுமையா தண்டிக்கப்படுவோம். அவர் கூடவே இரு. இந்தா வெப்பன், கேர்புல். அவரோட பாதுகாப்புக்கு நீ தான் முழுப் பொறுப்பு.”

“பட், அமர்? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. வெற்றிவேல் என்னை ஏதாவது பண்ணிட்டா?”

“பயந்து சாகாத, நான் போய் சர்விகா எல்.எஸ்.டி.201அ வர சொல்றேன். அவங்க வந்தா இவர் கிட்ட பேச்சுக் கொடுத்துட்டு கொஞ்சம் அவர நார்மலா வச்சி இருப்பாங்க. டோன்ட் பேனிக், வீ வில் பீ தேர்.” என்று அவனின் தோளில் தட்டிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான் அமரவன்.

தன் கைகளில் அவன் கொடுத்திருந்த அந்த எழுதுகோல் வடிவமைப்புக் கொண்ட லேசர் துப்பாக்கியையே வெறித்துக் கொண்டிருந்தான் அதிரன். மிகவும் ஆபத்தான நிலையில் மட்டுமே இதனை உபயோகப்படுத்த இங்கு அனுமதி, தேவையில்லாமல் பயன்படுத்தினால் கொடூர தண்டனை உண்டு என்பது அங்கு விதிக்கப்பட்டிருக்கும் விதி.

-----------------

புலரும்…
 
நேரம் - 4

இடம் – 3021, விஞ்ஞானி அறை

அதிரனிடம் வெற்றிவேலை ஒப்படைத்துவிட்டு, அவ்வலுவலகத்தில் இருக்கும் தடைசெய்யப்பட்ட பகுதியை நோக்கி ஓடினான் அமரவன். அந்த இடத்தை நெருங்கியதும், நான்கடுக்கு பாதுகாப்புக் கொண்ட முதல் கதவு அவனின் கட்டை விரல் ரேகையையும், இரண்டாம் கதவு அவனின் கருவிழியின் ரேகையையும் பதிவு செய்துக் கொண்டது. இரண்டாம் கதவைத் தொடர்ந்து வேகநடையிட்டவனின் கவனத்தை அங்கு புதிதாக உருவாகியிருந்த கண்ணாடித் தடுப்புச்சுவர் ஈர்த்தது. அதனை நோக்கி செல்ல எத்தனித்தவனை, டிரோல் கேம் தடுத்து நிறுத்தியது, “அந்நியர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை” என்று.

அதனை தன் கண்களில் பார்த்து மூளையில் பதித்துக் கொண்டவன், மூன்றாம் கதவை நோக்கி சென்றான். அங்கு இருந்த சோதனை கருவி அவனை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே உள்ளே அனுப்பியது.

நான்காவது கதவை நெருங்குகையில் அவனின் உள்ளுணர்வு அவனுக்கு ஏதோ உணர்த்தியது. இதற்கு முன் வெற்றிவேல் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன் இப்படி ஒரு படபடப்பு அவனிடத்தில். தனக்குள் ஏற்பட்ட புதிரான உணர்வை கண்டுபிடிக்க இயலாமல், மீண்டும் இப்படி தோன்றினால் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று தன் கையில் பொறுத்தப்பட்ட சிப்பில் குறித்துக் கொண்டான்.

நான்காவது கதவை நெருங்கியவுடன், அவனது அடையாள அட்டை, பெயர், தன் கழுத்தில் பொறுத்தப்பட்ட சிப் இவை அனைத்தையும், அங்கு இருக்கும் திரையில் பதிவிட்டான். இதனை பதிவிட்டப் பின்னர், ‘எத்தனை மணி நேரம் உள்ளே இருக்க போகிறீர்கள்?’ என்ற வினா அந்த திரையில் தோன்ற, வழக்கம்போல் பத்து நிமிடம் என்று போட இருந்தவன், சற்று நிதானித்து, “அரை மணி நேரம்” என்று பதிவிட்டான். அவன் செயல்பட ஆரம்பித்து இந்த 24 வருடங்களில் எந்த வித கட்டளையும் இல்லாமல் சுயமாக செய்த ஒரே விசயம் இதுவே. இதனை இவன் கவனிக்கத் தவறிவிட்டான், ஆனால், அந்த மைய இடத்தில் இந்த செய்தி கடத்தப்பட்டது.

உள்ளே நுழைந்தவனை வெற்றிடமே வரவேற்றது.

மணி மதியம் பன்னிரண்டு பதினைந்து (12.15 பி.ப)

அங்கு இருந்த அனைத்து கருவிகளும் சிவப்பு வண்ண ஆபத்து விளக்கை ஒளிர விட்டபடி இருந்தது.

அதனைக் கண்டவன் அதிர்ச்சியில் உறைந்தே போனான். “ஹோ, ஷிட்! என்ன நடக்குது இங்க?” என்று உச்சஸ்தானியில் கத்தியவனின் கழுத்தில் பொறுத்தப்பட்ட சிப் செயலிழந்து அணைந்து போனது. அமரவன் அங்கேயே மயங்கி விழுந்தான்.

இடம் 3021 – லைட் ரூம்

அதிரவன் வெற்றிவேலை பார்த்தவாறே நின்றுக் கொண்டிருந்தான். அவரும் அச்சத்துடன்தான் இருந்தார். வெற்றிவேலுக்கோ தன் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற பயம், அதிரவனிற்கோ வெற்றிவேல் தன்னை ஏதும் செய்திடக் கூடாது என்கிற பயம். அவர் அவனைத் தாக்க சிறிது முயன்றாலும் கூட அதிரன் ஆயுதத்தைப் பயன்படுத்தி விடுவான்.

அப்போது, அந்த லைட் ரூமின் கதவு திறக்கப்பட்டது. இரண்டு வீரர்கள் சகிதம் முகக்கவசம் அணிந்தபடி உள்ளே நுழைந்தாள் சர்விகா எல்.எஸ்.டி 201.

“டர்ன் ஆன் தி லைட்ஸ்” என்று கட்டளையிட்டபடி வந்தவள், “வேர் இஸ் அமர்?” என்று அதிரனிடம் கேட்டாள்.

“எனக்குத் தெரியல.! உன்னை பார்க்கத்தான் வரேன்னு சொன்னான்.” என்றவனை ஆழ்ந்து நோக்கினாள் சர்விகா. சட்டென அவனின் கைகளை பின்னுக்கே கட்டிக்கொண்டவன், அவளை நேருக்கு நேர் காணாது தவிர்த்தான்.

“ஓகே, திஸ் இஸ் வெற்றிவேல் ரைட்?” என்றவளுக்கு ஆமாம் என்று தலையாட்டினர் இருவரும்.

சர்விகா தன் கழுத்துப் பகுதியில் இருந்த சிப்பை அழுத்தி தன் மொழியை 2021ல் பேசப்பட்ட தமிழ் மொழியில் மாற்றிக் கொண்டாள். அங்கு இருந்த காவலாளிகள் வெளிச்சத்தைப் பரவ விட்டவுடன், அங்கு முன்பிருந்த அனைத்தும் மறைந்து விட்டது. வெற்றிவேல் மட்டுமல்ல அதிரனும் அதிர்ந்து போனான்.

சர்விகா தன் முகக் கவசத்தைக் கழட்டிட, “தமிழு…” என்றுத் தன் இருக்கையை விட்டு எழுந்தார் வெற்றிவேல்.

“என்ன? தமிழா? நீங்க இப்போ அத பெயரா சொல்றீங்களா? இல்ல தமிழ் மொழியா சொல்றீங்களா?” என்று கேட்டாள் சர்விகா.

அப்போதுதான் தன்னிலை அடைந்தார் வெற்றிவேல். “இல்ல, நீங்க… உங்கள பார்த்தா அப்படியே என் பொண்ணு மாதிரியே இருக்கீங்க.” என்றார்.

“ஓ, உண்மையாவா? நிஜமாத்தான் சொல்றீங்களா?” என்று புன்னகைத்தாள் சர்விகா.

அவருக்கு பேச நா எழவில்லை. அங்கிருந்த அதிரன்தான் இன்னும் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவனைக் கவனித்து விட்ட சர்விகா, “அரெஸ்ட் ஹிம்” என்றுக் கட்டளையை பிறப்பித்தாள்.

“வாட்? நான் என்ன பன்னேன்?”

“யூ ஆல்சோ எ கல்பிரிட். அமர் கூட சேர்ந்து நீயும் கான்டினன்ட்டுக்கு எதிரா செயல்பட்டு இருக்க. கார்ட்ஸ், அதிரன செல் 50ல போடுங்க. அமர் சயின்ஸ் ரூம்ல இருக்க எல்லாத்தையும் மிஸ் யூஸ் பண்ணிட்டான்னு கேஸ் பைல் செய்யப்பட்டு இருக்கு. சோ, ரெண்டு பேரயும் ஒரே செல்ல போடுங்க. ஹைனஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு.” என்றவளின் கட்டளைக்கு மறுபேச்சு இல்லாமல் அதிரனை அழைத்து சென்றனர். தற்போது அவன் எதுவும் பேசாமல் அவர்களுடன் சென்றுவிட்டான்.

ஆனால், வெற்றிவேல்தான் தனக்கு தொடர்ந்து நிகழும் இத்தனை விசயங்களில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தார்.

“நீங்க, நான் கேட்குற கேள்விக்கு எல்லாம் பொய் சொல்லாம எதயும் மறைக்காம பதில் சொல்லுங்க. அப்போதான் அடுத்து என்ன செய்ய முடியும்னு நாங்க முடிவு எடுப்போம்.” என்றவளுக்கு பயத்துடனே தலையாட்டினார்.

அமர் மற்றும் அதிரவனிடம் கூறியவற்றைத்தான் இவளிடமும் அச்சு மாறாமல் சொன்னார்.

“ஓகே, நீங்க சொல்றது எல்லாம் இப்போ சாத்தியமான்னு எங்களால உறுதியா சொல்ல முடியல. நீங்க கால இயந்திரம் மூலமா வந்து இருக்குறதா எங்களுக்கு தகவல் வந்து இருக்கு. ஒருவேல, உண்மையாலுமே அப்படி இருந்தா அதுக்கான வழி என்னன்னு பார்க்குறோம். அதுக்கு முன்னாடி இது என்ன இடம், என்ன என்ன விதிகள் இருக்குன்னு சொல்லிடுறேன். நியாபகம் வச்சிக்கோங்க.” என்று சொல்லத் தொடங்கினாள்.

அப்போது அவளுக்கு ஹைனஸிடமிருந்து அழைப்பு வந்ததற்கான தகவல் வந்தது.

தன் முன் நெற்றியைத் தேய்த்தவள், “கொஞ்ச நேரம் இங்க வெய்ட் பண்ணுங்க வெற்றிவேல். ஹைனஸ் வந்துட்டாரு. கார்ட்ஸ், நீங்க இங்கயே இருங்க. நான் போய்ட்டு வரேன்.” என்றவள் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டாள்.

வெற்றிவேலுக்கு தற்போது பயம் சென்று எரிச்சல்தான் வந்தது. ‘ச்சே, இது என்ன இடம்னே தெரியல. ஒன்னு என்னை இங்க இருந்து போக விடணும். இல்லயா, ஏதாவது தகவல் சொல்லணும். ஏதோ ஒன்னு சொல்ல வரப்போதான் கரெக்ட்டா வெளில போய்டுறாங்க. எம்புட்டு நேரம்தான் இங்கனயே அடஞ்சு கிடக்குறது. இவங்கள நம்புனா நமக்கு எந்த வழியும் கிடைக்காது. நாமளே தேடுனாத்தான் உண்டு’ என்று எண்ணியவர், ‘தடிமாடு மாதிரி இவனுங்க நிக்குறானுவ. இவனுங்கள என்னத்த செய்யலாம்?’ என்று சிந்திக்கலானார்.

“ஏம்ப்பா, இந்த இடத்த சுத்திப் பார்க்கலாமா?” என்று கேட்டார்.

அந்த இருவரில் முதலாமானவன், “கண்டிப்பா, இங்க இருக்க எல்லா இடத்தையும் நீங்க பார்க்கலாம். ஆனா, எந்த பொருளயும் நீங்க தொடக் கூடாது.” என்ற கட்டளையுடன் அனுமதித்தனர்.

இவரும், தற்போது வெளிச்சம் நிறைந்திருக்கும் இடத்தையே ஆராய்ந்துக் கொண்டிருந்தார். அவர்களைப் போல, இவரும் கட்டளையின்பேரில் தான் ஒவ்வொரு விசயத்தையும் செய்வார் என்று எண்ணிவிட்டார்கள் மடையர்கள்.

அந்த இடத்தில் பார்க்க ஒன்றுமே இல்லை. இருந்தாலும், அவர் அத்தனையும் ஆராய்ந்தார், ஏதேனும் யோசனை கிடைக்கிறதா என்று.!

உள்ளிருந்து பார்க்கையில், வெளியே பெரிய பெரிய கட்டிடங்கள் உருண்டை வடிவில் இருப்பதுபோல் காணப்பட்டது. நிச்சயம், இங்கிருந்து செல்ல வேண்டும் என்பதில் மட்டும் அவர் உறுதியாக இருந்தார்.

திடீரென்று நடந்த நிகழ்வினை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்த இடத்தை விட்டு தப்பித்தார் வெற்றிவேல்.

.....................

லட்சுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்த அகரனை, குணாவின் கத்தல் சத்தம் தன்னிலைப் பெறச் செய்தது.

“தமிழு... வெரசா கிளம்பு, ஐயாவ காணல.” என்றான் குணா.

முதலில் இசைத்தமிழுக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன குணா? என்ன சொல்ற? அப்பாக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

“உங்க அப்பா காலைல மனு கொடுக்க கலெக்டர் ஆஃபிஸ் போய் இருக்காராம். ஆனா, இன்னும் வீட்டுக்கு வரலன்னு ஆன்டி சொன்னாங்க.” என்றான் அகரன்.

“என்ன சொல்றீங்க, ரெண்டு பேரும்? எங்க அப்பா என்ன சின்ன புள்ளையா? கலெக்டர் ஆஃபீஸ்க்குதான போய் இருக்காரு. மணி என்ன பன்னெண்டு தான ஆகுது? வந்துடுவாரு.” என்றாள் நிதானமாய்.

குணா “அது இல்ல தமிழு... ஐயாவுக்கு...” என்று ஏதோ சொல்லத் தயங்கினான்.

“என்ன குணா?”

“அது... ஐயாக்கு...!”

“அப்பாக்கு என்ன?”

“ரெண்டு நாளா ஐயாக்கு பிரஷர் இருக்குது தமிழு...” என்றான்.

அது அவளுக்கு சற்றே அதிர்ச்சியான செய்திதான். ஆனால், அதுவும் தான் திருமணத்திற்கு சம்மதிக்காதது அவருக்கு இரத்த அழுத்தத்தைக் கூட்டியுள்ளது என்று யோசித்து விடைக் கண்டவளுக்கு கண்கள் இரண்டும் கண்ணீரைச் சிந்தின.

அவளின் கயல்விழிகளில் கண்ணீர் முத்துக்களை காணப் பொறுக்காத அகரத்தமிழன் “நீ பயப்படாத இசை.! உடனே போய் பார்க்கலாம் வா” என்று அழைத்தான்.

மறுபடியும் தன் அன்னையிடம் இருந்து அழைப்பு வர, “அம்மா, நானும் அகரன் அப்ரோம் குணா மூணு பேரும் இப்போ அப்பாவ பார்க்க தான் போய்ட்டு இருக்கோம். நீங்க பயப்படாதீங்க. கையோட கூட்டிட்டு வந்துடுறேன்.” என்றவளின் பதிலுக்கு,

“அதுக்கில்ல தமிழு, ரெண்டு நாளா அவுக சுணங்கிப் போய் இருந்தாவ. ஏதோ, மனசுக்கு தப்பா படுதுடி. வெரசா கூட்டியா தமிழு! உள்ளுக்குள்ள ஒரு மாதிரி இருக்குது.” என்று தன் பயத்தைக் கூறினார்.

“ஒன்னும் ஆகாது மா. அப்பாவ கூட்டிட்டு வரேன்” என்றவள், தன் இருசக்கர வாகனத்தை நெருங்கினாள்.

“இசை, நான் கார்ல வந்து இருக்கேன். மூணு பேரும் அதுலயே போய்டலாமா?” என்றவனின் கேள்விக்கு சம்மதமாய் தலையசைத்தவள் மகிழுந்தில் புறப்பட்டாள்.

சற்று நேரத்தில் எல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்துவிட்டனர். அவசர அவசரமாக இன்று மனு கொடுக்கும் இடத்திற்கு செல்ல, அங்கு யாருமே இல்லை.

அவ்வழியாக சென்ற ஒருவரிடம் விசாரித்தான் அகரத்தமிழன். “சார், இன்னைக்கு பெட்டிசன் கொடுக்க எங்க போகணும்.?”

“இன்னைக்கு பெட்டிசனா? தம்பி, கலெக்டர் இன்னைக்கு லீவ். நாளைக்கு தான் வருவாரு. இப்போதான் எல்லார்கிட்டயும் சொல்லி அனுப்பினேன். நீங்களும் நாளைக்கு வாங்க” என்றார்.

“அது இல்லங்க சார், என்னோட மாமா இன்னைக்கு இங்க தான் வந்தாரு. ஆனா, அவர் இன்னும் வீட்டுக்கு வரல. அதான், எங்கன்னு பார்க்க...” என்று இழுத்தவன், வெற்றிவேலின் புகைப்படத்தைக் காட்டினான்.

“இந்த ஆளா தம்பீ? சரியான பைத்தியமா இருப்பாரு போல?” என்றிட,

“ஏய், யாரப் பாத்து பைத்தியம்னு சொல்ற? சீவிடுவேன். என்ற ஐயா உனக்கு பைத்தியம் கணக்காவா தெரியாரு. அவருக்கு கலெக்டரு நல்ல பழக்கம் தெரியுமா உனக்கு?” என்று எகிறினான் குணா.

அகரன் அவனை அடக்கி விட்டு, “கொஞ்ச நேரம் சும்மா இரு. சார், இவர் பைத்தியம்லாம் கிடையாது. மணவழகனூர் பெரிய வீடு வெற்றிவேல் ஐயான்னா எல்லாருக்கும் தெரியும். இப்போ இவர நீங்க பாத்தீங்களா இல்லையான்னு சொல்லுங்க” என்று கேட்டான்.

“அவர் யாருன்னுலாம் எனக்கு தெரியாது தம்பி. ஆனா, இன்னைக்கு ஒரு பதினொன்றை வாக்குல இங்க வந்துட்டு பெரிய ரகளை பண்ணிட்டாரு. ஆனா, இதுல இருக்குற மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமா இருந்தாரு. முழுசா வெள்ளை கவுன் போட்டுக்கிட்டு, ஒரு மாதிரி இருந்தாரு. போலீஸ் கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாரு. அப்ரோம் என்ன ஆச்சுன்னு தெரியல. எதுக்கும் கேட் கிட்ட இருக்குற கான்ஸ்டபிள் கிட்ட கேட்டு பாருங்க” என்று தனக்கு தெரிந்த தகவலைக் கூறினார்.

இசை “என்ன சொல்றாரு, இவரு? அப்பா ஏன் இப்டியெல்லாம் இருக்கணும். எனக்கு ஒன்னுமே புரியல. முதல்ல அப்பா எங்கன்னு பாக்கலாம். எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு” என்றவளின் கைகளை ஆதரவாகப் பற்றியவன்,

“மாமா கிடைக்குறவர நான் கூடவே இருப்பேன், பயப்படாத இசை!” என்றான் அகரத்தமிழன்.

குணாதான் இதையனைத்தையும் கண்டுகொள்ளாது பரிதவிப்புடன் இருந்தான். சிறுவயதில் இருந்தே அவர் அணைப்பிலேயே வளர்ந்தவனாயிற்றே. ஊரே ஒன்று சேர்ந்து தனக்கும் தன் அன்னைக்கும் எதிராக திரும்பிய போது, ஆதரவு கரம் கொடுத்தவர் அவரே. உப்பிட்டவரை எள்ளளவும் நினை என்பார்கள். இவனோ, அவரை உயிர் இருக்கும்வரை நெஞ்சில் இருந்து நீக்காது இருப்பான்.

கவலையுடன் இருந்தவனை தைரியம் சொல்லி அலுவலகத்தின் முகப்பு நுழைவாயிலுக்கு அழைத்து வந்தாள் இசை.

அங்கும் அகரன் விசாரிக்க, அங்கிருந்த காவலர் ஒருவர் “ரொம்ப பேசுனாரு, அதுவும் புரியாத மாதிரி என்னன்னமோ பேசிக்கிட்டு இருந்தாரு. எஸ்.ஐ கடுப்பாகி கத்த, ‘இப்போ என்னோட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லலன்னா ரொம்ப பெரிய சிக்கல் இந்த உலகத்துக்கே வந்துடும்’னு சொன்னாரு. ஆல்ரெடி டென்சன்ல இருந்த மனுசன், இவர ஸ்டேசன் கூட்டிட்டு போய்ட்டாரு. சீக்கிரம் போனா பாக்கலாம். எஸ்.ஐ இருக்குற கடுப்புல இவர அடிச்சு கிடுச்சு வச்சிடப் போறாரு” என்று போகிற போக்கில் இதையும் சொல்லிவிட்டு போனார்.

அங்கிருந்த அனைவருக்கும் பயமும் குழப்பமும் அதிகரித்தது.

விரைந்து காவல் நிலையம் செல்ல, அங்கு இருந்த வெற்றிவேலைக் கண்டு அதிர்ச்சியாகினர் மூவரும்.

“அப்பா...”

“சர்விகா...? யூ ஆல்சோ ஹியர்..?” என்று அதிர்ந்தார் அவர்.

புலரும்....
 
poluthu pularum neram.jpeg

நேரம் - 5

இடம்: 2021 காவல் நிலையம்.

மணி பன்னிரெண்டு நாற்பது.

விரைந்து காவல் நிலையம் சென்ற மூவரும் அங்கிருந்த வெற்றிவேலைக் கண்டு அதிர்ந்தார்கள். அவர்களை விட அதிகமாக அதிர்ந்தது அவர்தான்.

“சர்விகா, நீ எப்படி இங்க?”

“சர்விகாவா? அது யாரு?” என்று கேட்டான் அகரன்.

“முதல்ல ஐயாவ இங்கன இருந்து கூட்டிப் போவணும் தமிழு. மத்தத அப்ரமேட்டுக்கா பேசிக்கலாம்” என்றான் குணா.

இசைத்தமிழ் அதிர்ச்சியில்தான் இருந்தாள். அவள் கண்ட, கண்டுக் கொண்டிருக்கின்ற இவர் நிச்சயம் அவளின் தந்தை இல்லை. அவர் உடை, பேச்சு அத்தனையும் வித்தியாசமாகத்தான் இருந்தது. ஒருவேளை நிஜமாகவே அவருக்கு மனநிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ? என்றுதான் தோன்றியது, அவளுக்கு. அவரை ஆராய முற்பட்டாள். உடலை முழுதாக மூடியபடி வெள்ளை ஆடை. கண்களுக்கு கண்ணாடி அதுவும் விஞ்ஞானிகள் அணிவதுபோல்தான் இருந்தது. கைகளுக்கு உறை, கால்களுக்கும் உறை அணிந்து இருந்தார். அவரின் தலைமுடி கழுத்தைத் தாண்டி இருந்தது. அதனையும் ஒன்றிணைத்து ஒரு தலைக்கவசத்திற்குள் அடக்கி இருந்தார். இப்போது தான் கண்டுக்கொண்டிருக்கும் இவருக்கும் தன் தந்தைக்கும் மலையளவு வித்தியாசத்தைக் கண்டுவிடலாம் என்று தோன்றியது.

அவர் அருகே சென்றவள், “யார் நீங்க?” என்று கேட்டாள்.

“சர்விகா, என்னை உனக்கு நியாபகம் இல்லயா என்ன? நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா? நம்மளோட ஹைனஸ்ச உடனே பார்க்கணும். இப்போ நாம எங்க இருக்கோம்?” என்று வரிசையாக கேள்விகளைத் தொடுத்தார்.

குணா காவல் ஆய்வாளரிடம் பேசிக் கொண்டிருக்க, அகரன் இசையை நோக்கிச் சென்றான்.

“இசை, அப்ரோம் பேசிக்கலாம். முதல்ல அங்கிள்ல வெளிய எடுக்கணும். நீ வா” என்று அழைத்தான்.

“அமர்…! நீயும் இங்கதான் இருக்கியா? ஹோ காட்! நான் ஏதோ மிஸ்டேக் பண்ணிட்டேன் போல. உடனே என்னை இங்க இருந்து கூட்டிட்டு போங்க” என்றார் அவர்.

“அமரா…? அங்கிள் என்ன ஆச்சு உங்களுக்கு? நான் அமர் இல்ல. அகரத்தமிழன். காலைல கூட நல்லாத்தான இருந்தீங்க?” என்று இவனும் புரியாமல் வினவினான்.

அங்கோ, குணா ஒருவாறு பேசி அவரை அழைத்து செல்ல உத்தரவு வாங்கிவிட்டான்.

“தமிழு… ஐயாவ கூட்டிப் போகலாம்னு சொல்லிட்டாங்க. வாங்க ஐயா போவலாம்” என்று அழைத்தவனை அவர் புரியாமல் பார்த்தார்.

“இது யாரு சர்விகா? ஐயா மீன்ஸ்.?” என்று அவளிடம்தான் பேசினார்.

தன்னிலை அடைந்த இசை, “முதல்ல இங்க இருந்து வெளில போகலாம்.” என்று அவரையும் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வந்தாள்.

மூவரும் மகிழுந்தில் ஏற, அவர் மட்டும் ஏறாமல் அதையே ஆராய்ந்து கொண்டிருந்தார்.

“இது என்ன டிசைன் சர்விகா? பார்க்கவே புதுசா இருக்கு? இதுக்குள்ள எப்டி போறது?” என்று கேட்டவரை குணாதான் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அகரன் அவரை உள்ளே இழுத்து அமர வைக்க, குணா வண்டியை இயக்கினான்.

“அட, உள்ள இப்டிதான் உட்காரனுமா அமர்.? பரவால்ல, இங்க ஆட்டோமேட்டிக் இல்லாம நாமளே ஹேண்டில் பன்றது நல்லா இருக்கு தானே.? என்றவர் குணாவைப் பார்த்து, இது எந்த டிபார்ட்மென்ட் கீழ உருவாக்கப்பட்டுச்சு?” என்று கேட்டார்.

குணா என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க, இசை “இது ப்ரைவட் கம்பெனிதான் தயாரிக்குது” என்றாள்.

“நோ சர்விகா. மகிழுந்தை சுட்டிக்காட்டி நான் இந்த இன்ஸ்ட்ரூமென்ட்ட கேட்கல. இத கேட்டேன்.” என்று குணாவை சுட்டிக்காட்டினார்.

“என்ன? இதுவா?” என்று மூவரும் அவரைப் பார்க்க, அகரன் தன்னை மீறி வெளிவந்த சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டான்.

“யெஸ், இத தான் கேட்குறேன். லைக், நான் சயின்டிபிக் டிபார்ட்மென்ட் கீழ வருவேன். சர்விகா நீ ஸ்பெசல் ஸ்கிள் டிபார்ட்மென்ட் கீழ வருவ. இதோ, அமர் சோல்ட்ஜர் டிபார்ட்மென்ட் கீழ வரான் இல்லயா. லைக் தட், இது எதுக்கு கீழ வருது? இது வரை இத நான் நம்ம கான்டினன்ட்ல பார்த்ததே கிடையாதே!” என்றார்.

இசை தன் தந்தை இவர் இல்லை என்பதில் உறுதியாகிவிட்டாள். அப்போது அவள் தந்தை எங்கே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இவரை விசாரித்தாள் தன் தந்தை இருக்குமிடம் பற்றி அறியலாம் என்று எண்ணியிருக்க, இவரோ தனக்கு பேச இடமே தராமல் இருப்பது சற்று எரிச்சலைத்தான் தந்தது.

“ஐயா, நீங்க ஏன் என்னன்னமோ பேசுறீக? நான் உங்க வூட்டு வேலைக்காரனுங்கதான் ஐயா. ஆனா, நீங்க என்ன அது, இதுன்னு கூப்டுறது மனசுக்கு சங்கடமா இருக்குதுங்க” என்றான் குணா.

“உனக்கு இப்போ இந்த இடத்துல என்ன பேருன்னு எனக்கு தெரியாது. சோ, உன்னை வேற எப்படி நான் கூப்டுறது?”

அவர் தன்னை வேற்று ஆளாக நினைத்து பேசுவது குணாவிற்கு வருத்தத்தைதான் அளித்தது. “என் பேரு குணாங்க ஐயா” என்றான்.

“குணாங்க..? பேரே வித்தியாசமா இருக்கு. உனக்கு கோட் எதுவும் இல்லயா?” என்று கேட்டார்.

அகரனுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்புதான் வந்தது. “ஏன் இசை, இவர் நிஜமா உன் அப்பாதானா?” என்று கேட்டான்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவள், இவனின் கேலியில், “கொஞ்சம் உன் திருவாய மூடிக்கிட்டு வரீயா? நானே செம கடுப்புல இருக்கேன். இவர் ஏன் இப்படி பேசுறாருன்னு எனக்கு மட்டும் எப்டி தெரியும்? நானும் உன் கூட தானே இருக்கேன்.” என்று கத்தினாள்.

‘ஆத்தி… ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கே இந்த பொல பொலக்குறாளே? கல்யாணம் ஆனா, என்ன பண்ணுவாளோ?’ என்று அவனால் மனதிற்குள் நினைக்க மட்டும்தான் முடிந்தது.

“குணா, வண்டிய வயக்காட்டு பக்கம் ஓரமா நிறுத்து” என்றவள், தன் அருகே அமர்ந்திருந்தவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகிழுந்து நின்றவுடன் “கீழ இறங்குங்க” என்றாள்.

அனைவரும் இறங்கிட, “இது என்ன இடம்? ஓ… இங்க என்ன இவ்ளோ சூடா இருக்கு? சர்விகா இப்போ ஏன் நாம இங்க நிக்குறோம்?” என்று சரமாரியாக கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.

“என்னது சூடா இருக்கா? என்ன குணா, இந்நாள் வரைக்கும் உன் ஐயா இங்க வந்ததே இல்லயா என்ன? உச்சி வெயில்ல அவருக்கு மண்டையில ஏதாவது பிரச்சனை ஆகிபோச்சா?” என்று கேட்டவனை இருபக்கமும் இருவரும் முறைத்துத் தள்ளினர்.

“இன்னொரு முறை நீ வாயத் தொறந்த, நானே கோணூசி வச்சி தச்சி விட்டுடுவேன்” என்று அடிக்குரலில் சீறினாள் இசை.

“நீங்க யாரு?”

“என்ன சர்விகா, வந்ததுல இருந்து..” அவரை கை நீட்டி தடுத்தவள்,

“நான் சர்விகா கிடையாது. என்னோட பேர் இசைத்தமிழ். என்னோட அப்பா எங்க? நீங்க எப்டி என்னோட அப்பா மாதிரியே இருக்கீங்க?”

“வாட்…? அப்பா? ஓ அப்போ ப்ளட் ரிலேசன்லாம் இருக்குறது உண்மையா? உன் பேர் என்ன சொன்ன? இசை… இசைத்த.. கம் அகைன்!”

“இசைத்தமிழ்”

“ஓகே. நான் கேட்குற கேள்விக்கு முதல்ல நீங்க பதில் சொல்லுங்க. அப்போ தான் நான் யாரு என்னன்னு சொல்ல முடியும்.” என்றவருக்கு சம்மதமாய் தலையசைத்தாள். அவளுக்கு தன் தந்தை தற்போது எங்கிருக்கிறார் என்று மட்டும் தெரிந்தாள் போதும்.

“இது என்ன இடம்?”

“இது மணவழகனூர்.”

“ம..ண… என்னமோ! எந்த வருசம்?”

“2021”

“வாட்..? ரியலி.? ஓ மை ஹைனஸ்… நான் சாதிச்சுட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி யூனிவர்ஸ்.” என்றவர், தான் நின்ற இடத்திலேயே குதித்தார்.

“அதான், நீங்க கேட்ட கேள்விக்குலாம் பதில் சொல்லியாச்சுல. இப்போ சொல்லுங்க, யார் நீங்க?” என்று கேட்டான் அகரன்.

“யெஸ்! நான் இன்பத்தமிழன் எஸ்.எம்.எச். ப்ரம் சயின்டிஃபிக் டிபார்ட்மென்ட் எர்த் கான்டினன்ட்”

“என்ன? எர்த் காண்டினன்ட்டா?”

“ஆமா, அமர்.! சாரி, இது 2021 ன்னா நீங்க அமர் கிடையாது. உங்க பேர் என்ன?”

‘ஹப்பா, இப்போ தான் இவர் அறிவா பேசி இருக்காரு’ என்று எண்ணியவன், “முன்னாடியே சொன்னேன், பரவால்ல. இப்போவும் சொல்றேன். என்னோட பேர் அகரத்தமிழன்”

“தமிழு… அப்போ இவர் நம்மளோட ஐயா இல்லீயா?” என்று கேட்டான். அவனின் குரலில் அளவுக்கு மீறிய பதட்டமும் கவலையும் தெரிந்தது.

“இல்ல குணா. அப்பா எங்கன்னு இவர்தான் சொல்லனும்” என்றிட, மூவரும் அவரைத்தான் பார்த்தனர்.

“இங்க ரொம்ப சூடா இருக்கு. வேற எங்கயாவது நல்ல இடமா இருந்தா சொல்லுங்க” என்றார் இன்பத்தமிழன்.

குணா மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு, ஒரு வேப்பமரத்தின் அருகே சென்றான். அங்கு வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது.

இன்பத்தமிழன் அந்த இடத்தையே ஏக்கமாகப் பார்த்தவர் ஏதும் பேசவில்லை.

பொறுமையிழந்த இசை, “இப்போ என்னோட அப்பா எங்க? நீங்க என்னன்னமோ சொல்றீங்க. தெளிவா என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க” என்று கத்தினாள்.

அவளையே அழுத்தமாகப் பார்த்தவர், “உன் அப்பா ஐ மீன் வெற்றிவேல் ரைட்? இப்போ அவர் 3021 வது வருசத்துல இருக்காரு.” என்றதில், அனைவரும் சிலையாகி விட்டனர்.

முதலில் தன்னிலை மீண்டது குணாதான். “என்ன வெளயாட்டு காட்டுறீங்களா? உங்க உருவம் அப்டியே என்ற ஐயா மாதிரி இருக்குதுன்னுதான் நான் பேசாம கிடக்கேன். இல்லன்டா, இந்நேரம் இங்க என்ன நடந்து இருக்குமுன்னு தெரியாது. ஒழுங்கு மருவாதையா ஐயா எங்கன இருக்காவன்னு சொல்லீடுங்க” என்று சீறினான்.

அவனின் சீறலுக்கெல்லாம் அவர் அஞ்சியதுபோல் தெரியவில்லை.

“என்னை நீங்க எதுவும் செய்ய முடியாது. அப்டி ஏதாவது செய்ய முயற்சி பண்ணா, அங்க இருக்குற வெற்றிவேலுக்குதான் பிரச்சனை.” என்றதில் இசை கண்களாலேயே குணாவை அடக்கினாள்.

“தயவு செஞ்சு சொல்லுங்க.! இது எப்படி சாத்தியம்? என் அப்பா எப்டி 1000 வருசத்துக்கு முன்னாடி போனாரு. தெளிவா நீங்க சொன்னாதானே புரியும்” என்றாள் இறைஞ்சலாக.

“முன்னாடி போய்ட்டாரா? அப்போ அங்கிள் டைம் டிராவல் பண்ணி இருக்காரா? வாவ்… எப்டி சார் இது? ரொம்ப இன்ட்ரஸ்டிங்க்கா இருக்கே. அப்போ நானும் டைம் மிசின் மூலமா என் ஃபியூச்சர்ர பார்க்கலாமா?” என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான் அகரன். இசையும் குணாவும் அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்துக் கொண்டிருந்தனர்.

“இது டைம் மிசின் கிடையாது. அத விடவும் அட்வான்ஸ் சிஸ்டம். கிட்டத்தட்ட டைம் டிராவல் மாதிரி தான். ஆனா, இப்போ எங்க கான்டினன்ட்ல இருக்குற விசயங்கள் எல்லாம் உங்க கற்பனைக்கும் எட்டாத விசயங்கள்” என்றார் இன்பத்தமிழன்.

அகரனின் ஆர்வம் இன்பத்தமிழனுக்கும் தொற்றிக்கொண்டது போல் உணர்ந்தவர், “உங்களுக்கு மேலோட்டமா சொன்னா புரியாது. நான் தெளிவா சொல்றேன், கேளுங்க.” என்று கூறத் தொடங்கினார்.

புலரும்...
 
Last edited:


poluthu cover.jpg
நேரம் – 6

இடம் – 2021 – மணவழகனூர்

அகரன் மட்டுமல்ல, இசைக்கும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உந்தித் தள்ளியது, அவர் சொல்வதை கேட்க வேண்டும் என்று.

மூவரும் அந்த வேப்பமர நிழலில் அமர்ந்துக் கொண்டனர். அந்த வேப்பமரத்தையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த இன்பத்தமிழனை, அகரன் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அவரு மூஞ்சில படமா ஓட்டுறாங்க? இப்போ என்னத்துக்கு அவர இப்டி பாத்துக்கிட்டு கிடக்கீங்க?” என்றான் குணா.

“அட டேய்! உனக்கு எங்க இத பத்திலாம் புரிய போகுது.? இதுலாம் ரொம்ப பெரிய விசயம் தெரியுமா? என்னோட ஏழாம் அறிவுப்படி இவர் பெரிய சைன்ட்டிஸ்ட்டா தான் இருக்கணும். இவர மட்டும் எப்டியாவது பேசி கரெக்ட் பண்ணிட்டா நாமளும் நம்மளோட எதிர்காலத்த பார்க்கலாம் தெரியுமா?” என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தான் அகரன்.

“அப்டி போய்தான் உங்களோட எதிர்காலத்த தெரிஞ்சிக்கணும்னு அவசியம் கிடையாது. நானே சொல்றேனே அங்க என்ன மாதிரி இருக்கும்னு” என்றார் இன்பத்தமிழன்.

“அதுக்குத்தானே வெய்ட் பன்றேன். சொல்லுங்க, சொல்லுங்க” என்றான் அகரத்தமிழன்.

“இந்த சொர்க்கம் உங்க எதிர்காலத்துல நரகமாத்தான் இருக்கும். இப்போ நீங்க அனுபவிக்குற எந்தவொரு விசயமும் உங்களோட சந்ததிகளுக்கு கிடைக்காது. இந்த இயற்கை இப்போ உங்களுக்கு வரம். ஆனா, பின்னாடி அதான் சாபமா மாறப் போகுது. அதுக்கான வழியத்தான் இப்போ நீங்க எல்லாரும் செய்துக்கிட்டு இருக்கீங்க” என்றதில் மூவரும் உறைந்தே விட்டனர்.

“என்ன சொல்றீங்க நீங்க.?” என்று அதிர்ந்து வினவினாள் இசை.

“நான் சொல்றது, நான் பார்த்து ஆராய்ச்சி பண்ண விசயங்கள்தான். இப்போ நீங்க இருக்குறது 2021. ஆனா, நான் கிட்டத்தட்ட 1000 வருசம் முன்னால இருந்து வந்து இருக்கேன். இப்போ உங்க காலத்துல உலகம்னு சொல்ற ஒட்டுமொத்த பூமியோட மக்கள் எண்ணிக்கை 8 பில்லியன் இருக்கலாம். ஆனா, என்னோட காலத்துல 3021ல மொத்த எண்ணிக்கை 30லட்சம் தான்.”

“அன்பிலிவபல்.! அப்டின்னா ஏதோ ஒரு பெரிய அழிவு காரணமாத்தான் இப்படி கொறஞ்சு இருக்குது இல்லயா? அப்டி என்னதான் ஆச்சு?” என்று கேட்டாள் இசை.

அவளை மெச்சும் பார்வை பார்த்தவர், “யெஸ், கரெக்ட்தான். அப்டி ஒரு அழிவுக்கு பின்னாடி ஒரு பெரிய கான்டினன்ட்டோட உருவாக்கம் இருக்கு.”

“கான்டினன்ட்னா கண்டம் தானே? அப்போ அந்த அழிவுக்கு பின்னாடி பூமி ஒரு கண்டமா மாறிடுச்சா?” அதிர்ச்சி விலகமால் கேட்டான் அகரன்.

“எந்த வருசத்துல இந்த அழிவு நடந்ததுன்னு என்னால இன்னும் சரியா கண்டுபிடிக்க முடியல. ஆனா, என்னோட ஆராய்ச்சிப்படி இந்த பெரிய அழிவுக்கு அப்ரோம் பூமி ரொம்பவே பாதிக்கப்பட்டுச்சு. வாழவே தகுதி இல்லாத இடமா மாறிடுச்சு. இங்க இருக்குற மரம், செடி, இயற்கையான காற்று இதெல்லாம் பாக்குறப்போ எனக்கு எவ்ளோ ஏக்கமா இருக்குதுன்னு தெரியுமா? ஏன்னா, நான் இருக்குற இடத்துல இத ஹைனஸ்சோட அனுமதி இல்லாம பார்க்கவே முடியாது. தடைசெய்யப்பட்ட பகுதில தான் இதுலாம் இருக்குது.” என்றார் வருத்தமாக.

“ஏது, இந்த மரம் செடி எல்லாம் தடைசெய்யப்பட்ட பகுதில இருக்குதா? என்னங்க ஐயா சொல்றீங்க? அப்டிலாம் கூட நடக்குமா என்ன?” என்று இப்போது தான் அவரின் வார்த்தைகளை நம்ப ஆரம்பித்தான் குணா.

“நடக்குமாவா? ஏற்கனவே நடந்துட்டு இருக்குன்னு சொல்றேன். நான் சொல்லப் போற விசயம் எல்லாம் உங்களோட கற்பனைக்கு எட்டாத, இப்டியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லன்னு நீங்க நினைக்குற விசயங்களா கூட இருக்கலாம். ஆனா, இதுக்கான ஆதாரம் என்னோட காலத்துல இருக்கு. அந்த பெரிய அழிவுக்கு பின்னாடி பெரிய உயிர் சேதம் நடந்துச்சு. எவ்ளோ பேர் இறந்துட்டாங்க. பூமி உடைய ஆரம்பிச்சுடுச்சு. அதாவது, பூமிக்கு அடியில இருக்குற பாறைத் தட்டுக்கள் பிளவுபட ஆரம்பிச்சு, பெரிய பெரிய பகுதியா சிதைஞ்சு போச்சு.

இன்னும் தெளிவா சொல்லனும்னா, பூமியே பாறைத் தட்டுக்களால் தான் ஆனது. அப்போ அது பல லேயர்ஸ்சா தான் இருக்கும். ஒவ்வொரு லேயர்லயும் ஒவ்வொரு விதமான பொருள் அதிகமா இருக்கும். இப்போ இருக்குற பூமிய பல அடி தோண்டினா முதல்ல காத்துதான் அதிகமா இருக்கும். அதுவும் சுவாசிக்க முடியாத காற்றுதான் இருக்கும். அப்ரோம் போக போக சூடான தண்ணீ இருக்கும். அப்ரோம் முழுக்க தண்ணீர் தாண்டி அதோட ஆழத்துக்கு போனா பாறைத்திட்டுக்கள் அதாவது இன்னொரு பூமி இருக்கும்னு உங்க காலத்துக்கு பின்னாடி வந்த சயின்ட்டிஸ்ட் ஆதாரப் பூர்வமா கண்டுபிடிச்சு இருக்காங்க.

அதுக்கு அப்ரோம் தான் அந்த பேரழிவு நடந்துச்சு. உங்களுக்கு புரியுற மாதிரி ஒரு கருத்து இருக்கு. சார்லஸ் டார்வின் சயின்டிஸ்ட் உங்களுக்கு தெரியுமா?” என்று கேள்வியாய் அவர்களை நோக்கினார்.

மூவரும் அதை ஆமோதிக்க, “அவரோட ‘தப்பி பிழைப்பன உயிர் வாழும்’ங்குற கருத்துதான் இங்க நூறு சதவீதம் உண்மை. அப்டி அந்த அழிவுல உயிர் பிழச்சவங்க தான் தன்னோட அறிவ பயன்படுத்தி இப்போ வாழ்ந்துட்டு இருக்காங்க.

பூமி பாறைத்தட்டா பிரிஞ்சதுக்கு அப்ரோம் நடுவுல பெரிய வெற்றிடம் அதாவது எம்ப்டி ப்ளேஸ் உருவாகிடுச்சு. என்னோட கணிப்புப்படி கிட்டத்தட்ட அந்த அழிவு நடந்து 200 வருசம் மக்கள் சரியான எந்த இடத்துலயும் வாழல. பாறை நகர்ந்துக்கிட்டே இருந்ததுனால அவங்களால எதுவும் செய்ய முடியல. அதுக்கு அப்ரோம் மறுபடியும் பாறைகள் நகர ஆரம்பிச்சு, சில பாறைகள் ஒன்னு சேர்ந்து ஒரு கான்டினன்ட்டா உருவாகிடுச்சு. இப்போ இருக்குற கணிப்புப்படி மறுபடியும் பூமி ஒன்னு சேர இன்னும் ஆயிரம் வருசங்கள் ஆகும். அப்டி சேர்ந்த பாறைகள் மொத்தமே அஞ்சு தான். பேருக்குதான் அந்த அஞ்சு கான்டினன்ட். அதுல நாங்க இருக்குற கான்டினன்ட்ல மட்டும்தான் இயற்கை வளங்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம். நூறுல 70 சதவீதம் முயற்சி செய்தா இங்க இருக்குற மாதிரியே அங்கேயும் எங்களால எல்லாம் உருவாக்க முடியும். உணவு, தண்ணீர், நிரந்தர இடம் இப்டி. ஆனா, மத்த கான்டினன்ட் எல்லாம் ரொம்ப ரொம்ப குறைவான சதவீதம் தான் இயற்கை வளங்கள உருவாக்கிக்குற வாய்ப்ப வச்சு இருக்கு. அதுனாலயே அடிக்கடி ஏதோ ஒரு கான்டினன்ட் எர்த் கான்டினன்ட் மேல போர்த் தொடுக்கும்.” என்றவரை இடையிட்ட அகரன்,

“அதென்ன எர்த் கான்டினன்ட்? அப்போ மத்த கான்டினன்ட்டுக்கும் பேர் இருக்கா என்ன?”

“ஆமா, இருக்கு. நாங்க இருக்குற இடம் மட்டும்தான் முறையா வாழுற இடம்மா அஞ்சு கான்டினன்ட் ஹைனஸ்சும் சேர்ந்து தீர்மானம் கொண்டு வந்து இருக்காங்க. அதாவது, இப்போ இருக்குற இந்த பூமி மாதிரி அங்க இல்லன்னாலும் இதுல ஒரு பங்கு வசதி அங்க கிடைக்கும். சோ, அது எர்த் கான்டினன்ட். பூமிய அஞ்சு பாகமா பிரிச்சா எப்டி இருக்கும்னு கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க. எர்த் கான்டினன்ட் பூமியோட நடுவுல இருக்கு. இத சுத்தி நாலா பக்கமும் நாலு கான்டினன்ட் இருக்கு.

வடகிழக்கு பகுதில இருக்குற கான்டினன்ட் வால்கேனோ கான்டினன்ட். அங்க, அதிக எரிமலைகள் போய்டுச்சு. சோ, அங்க எப்போ வேணாலும் எரிமலை வெடிப்பு நடக்கும். வடமேற்கு பகுதில இருக்குற வாட்டர் கான்டினன்ட் முழுக்க முழுக்க தண்ணீர் மட்டும் தான். அங்க இருக்குறவங்க எல்லாம் ஸ்கை ஷிப்ல தான் இருக்காங்க. தென்கிழக்கு பகுதில இருக்குறது வின்ட் (Wind- காற்று) கான்டினன்ட். அங்க அளவுக்கு அதிகமான காற்று எப்போ வேணா வீசும். அதுவே சில நேரத்துல புயல் காத்தா மாறவும் அதிக வாய்ப்புகள் இருக்கு. தென்மேற்கு பகுதில இருக்குற இடம் தான் ரொம்ப ஆபத்தான இடம். அங்க ஒரு பக்கம் உறைய வைக்குற பனிக்கட்டியும், இன்னொரு பக்கம் வறட்சினால இருக்குற வறண்ட இடம்தான் இருக்கும். அங்க இருக்குறவங்க தான் அடிக்கடி மத்த இடத்துல அட்டாக் நடத்தி மனுசங்கள கடத்திட்டு போய்டுவாங்க. அந்த இடத்துக்கு பேர், டெத் கான்டினன்ட். ஒன்ஸ், அங்க போய்ட்டா நிச்சயம் உயிரோட திரும்பி வர முடியாது.” என்றவர் மற்றவர்களை காண, மூவரும் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

“அந்த ஒரு பேரழிவுனால ஒன்னா இருக்க வேண்டிய பஞ்ச பூதங்கள் எல்லாம் பிரிஞ்சு போய்டுச்சுன்னு சொல்றீங்களா?” என்றான் குணா.

“ஆமா.! பஞ்ச பூதங்கள்னு நீங்க குறிப்பிடுற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எல்லாம் ஒன்னா இருந்தா மட்டும் தான் உயிர் வாழ முடியும். அப்டி அது பிரிஞ்சு போச்சுன்னா எதுவுமே நிலையா இருக்காது. உங்க காலத்துல இருந்து இன்னும் ஒரு நூறு வருசம் கழிச்சு ஒரு சயின்டிஸ்ட் ஒரு கருத்து சொல்லி இருக்காரு. அதாவது, ‘முறையா பாதுகாக்கப்படாத எந்தவொரு விசயமும் பின்னாடி அரிதான விசயமா மாறிடும்’ அதுனால தான், தடைசெய்யப்பட்ட பகுதில இயற்கை வளங்கள மத்த கான்டினன்ட்க்கு தெரியாம பாதுகாத்துக்கிட்டு வரோம்.”

“வெய்ட், ஒரு நிமிசம்.! முறையா பாதுகாக்கப்படாத எந்தவொரு விசயமும் பின்னாடி அரிதான விசயமா மாறிடும்னு நீங்க சொல்றது ப்ளட் ரிலேசன்ஸ்க்கும்மா?” என்ற இசையின் கேள்விக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தார் இன்பத்தமிழன்.

“அப்போ, நீங்க இருக்குற காலத்துல மனுசங்கள உருவாக்குறீங்களா?” என்றவளின் வினாவில் உடனிருந்த இருவருக்கும் நெஞ்சு வலி வராத குறைதான்.

“நீங்க நினைக்குறது உண்மைதான். எங்க எர்த் கான்டினன்ட்டோட முதல் விதி, யாரும் யாரையும் தொடக் கூடாது.”

“என்னது தொடக் கூடாதா…?” என்று ஒரே நேரத்தில் கேட்டனர் அகரனும் குணாவும்.

“ஆமா, அந்த பேரழிவுக்கு பின்னாடி அதிகமா மக்கள நோய் தாக்க ஆரம்பிச்சுது. யாராலயும் எதுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியல. உண்மைய சொல்லணும்னா எந்த ஒரு இயற்கை அழிவுக்கும் தீர்வு இயற்கையே தான். ஆனா, இப்போவே நீங்க கொஞ்சம் கொஞ்சமா அத அழிச்சிக்கிட்டு வரதுனால பின்னாடி அந்த இயற்கை தன்னையே அழிச்சிக்க நினச்சிடுச்சு போல, எங்களால எந்த நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்க முடியல.

ஒரு பேரழிவுல இருந்து மீண்டு வந்த எங்களால இன்னொரு அழிவ சமாளிக்கவே முடியல. அப்போ என்னோட சீஃப் தான் ஆராய்ச்சி பண்ணி அந்த மருந்துக்கான ஆரம்பத்த கண்டுபிடிச்சாரு. மக்கள் ஒருத்தர ஒருத்தர் தொடுறதுனாலயும் அவங்க மூலமா பிறக்குற குழந்தைங்கனாலயும்தான் நோய் அதிகமா உருவாகுது. இத ஹைனஸ் கிட்ட கொண்டு போனப்போ, அவர் 2900த்துல யாரும் யாரையும் தொடக் கூடாதுங்குற விதிய கொண்டு வந்தாரு.

அந்த விதிய யாராவது ஃபாலோ பண்ணாம இருந்தா கண்டிப்பா அவங்கள டெத் கான்டினன்ட்டுக்கு அனுப்பிடுவோம்னு கடுமையா அறிவிச்சுட்டாரு.”

“அப்போ…? கு.. குழந்தைங்க எப்டி பிறப்பாங்க? 30 லட்சம் மக்கள் தொகை எப்படி சாத்தியம் ஆச்சு?” என்றுக் கேட்டாள் இசை.

“அது என்னோட ஆராய்ச்சினால தான் சாத்தியம் ஆச்சு. என்னோட சீஃப் 150 வருசம் இருந்தாரு. அப்போ அவர் ஆராய்ச்சி பண்ண விசயம் தான் மைன்ட் கன்ட்ரோல் பாப்புலேசன். அதாவது, பிறக்கப் போற ஒவ்வொரு குழந்தையோட டி.என்.ஏ வயும் நாங்க எப்டி வேணுமோ அப்டி மாத்தி அவங்களோட மைன்ட்ட சின்ன வயசுல இருந்தே ஹைனஸ்சோட கன்ட்ரோலுக்கு கீழ மட்டும் செயல்படுற மாதிரி கொண்டு வந்துடுவோம். அதுக்கான வழியத்தான் அவர் கண்டுபிடிச்சாரு. ஆனா, கடைசி வரை அவரோட ஆராய்ச்சி ப்ராக்டிக்கல்லா செட் ஆகல. அத நான் கைல எடுத்து முதல்ல ஒரு குழந்தைய மட்டும் உருவாக்கலாம்னு ஸ்டெப் எடுத்தப்போ யூனிவர்ஸ்சோட ப்ளஸ்சிங்னால அது சக்சஸ் ஆகிடுச்சு.”

“அப்டி என்ன ஆராய்ச்சி அது? என்ன பண்ணீங்க?” இதைக் கேட்பதற்குள் ஆயிரம் முறையாவது அகரனின் இதயம் தாறுமாறாகத் துடித்திருக்கும்.

“அது…”

புலரும்…
கருத்து திரி
https://pmtamilnovels.com/index.php?threads/பொழுது-புலரும்-நேரம்-கருத்து-திரி.141/
 
Last edited:
Status
Not open for further replies.
Top